மனிதன் மீது ஜின் மேலாடுமா?

0
298

மனிதன் மீது ஜின் மேலாடுமா?

1996 ஆம் ஆண்டு அல்ஜன்னத்தில் பீஜே அளித்த பதில்

தீனாவில் ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்து விட்டது. உடனே மதீனா யுனிவர்சிடியில் உள்ள ஆலிமை அழைக்க வந்தனர். முஸ்லிமான ஜின் அந்தப் பெண்ணைப் பிடித்துள்ளதை அவர் கண்டுபிடித்தார். நீ ஒரு முஸ்லிம். இன்னொரு முஸ்லிமுக்கு நோவினை செய்யலாமா? என்று அவர் கேட்டார். அதற்கு அவளைப் பிடித்திருந்த ஜின், “பாத்ரூமில் குளிக்கும் போது என் மேல் இவள் வெந்நீரை ஊற்றினாள்” என்று என்று பதிலளித்தது. ’நீ இருப்பது தெரியாமல் தானே அவள் வெந்நீரை ஊற்றினாள்’என்று அந்த ஆலிம் விளக்கினார். அதற்கு அந்த ஜின், “நபி (ஸல்) அவர்கள் பாத்ரூமில் ஓத வேண்டும் என்று கூறியதை அவள் ஓதியிருந்தால் நான் அங்கிருந்து வெளியேறி இருப்பேன்” என்றது. தெரியாமல் நடந்து விட்டது; நீ போய் விடு என்று அந்த ஆலிம் கூறியதும் ஜின் ஓடிவிட்டது. இந்தச் சம்பவத்தை உமர் அலி (இலங்கை) என்பவர் யாஸீன் விளக்கவுரை என்ற ஒலி நாடாவில் பேசி உள்ளார். இவ்வாறு நடக்க குர்ஆன் ஹதீஸ்படி சாத்தியம் உள்ளதா?

 ஹயாதுல்லாஹ், அல்கோபார்.

பதில்

பாத்ரூமுக்குச் செல்லும் போது கெட்ட ஷைத்தான்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். முஃமினான நல்ல ஜின்கள் பாத்ரூமில் இருக்க முடியாது என்பது இதிலிருந்து தெரிகின்றது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததை அவள் ஓதியிருந்தால் நான் ஓடியிருப்பேன் என்று முஃமினான ஜின் கூறியிருக்க முடியாது. சவூதி அரேபியாவின் பத்திரிகைகள் சிலவற்றில் இந்தக் கதை இடம் பெற்றிருந்தாலும், உமர் அலி என்ற மவ்லவி இதைக் கூறி இருந்தாலும் இது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதில் சந்தேகமில்லை.

ஜின்கள் என்றொரு படைப்பு உள்ளதாகக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளன. அதை நம்பியாக வேண்டும். ஆனால் ஒரு படைப்பு இன்னொரு படைப்புக்குள் நுழைந்து ஊடுறுவும் என்பதற்கோ, கூடுவிட்டுக் கூடு பாயும் என்பதற்கோ எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மாறாக இதை மறுக்கக் கூடிய வகையில் ஆதாரங்கள் உள்ளன.

"இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?'' என அவர்கள் கூறுகின்றனர். வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள். வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

திருக்குர்ஆன்  6:8,9

முதலில் இந்த வசனம் என்ன கூறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். “அவர் மீது மலக்கு இறக்கப்பட வேண்டும்” என்றால் அவருக்குப் பக்க பலமாக அவருக்குத் துணையாக மலக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது இதன் கருத்தாக இருக்க முடியாது.

அவருக்குள்ளேயே ஒரு மலக்கு அனுப்பப்பட்டு மனிதராகவும், அதே நேரத்தில் மலக்காகவும் அவர் இருக்க வேண்டும் என்பது அதன் பொருளாகும்.

மலக்குகள் என்ற படைப்பு இருப்பதை அந்த மக்கள் நம்பினார்கள். அவர்கள் கண்களால் காண முடியாதவர்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மலக்குகள் இருக்கத் தான் செய்தனர். எனவே அந்த மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருக்கும் அதே நேரத்தில் மலக்காகவும் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்த்தனர்.

ஒரு மலக்கு, “அவர் மீது” இறக்கப்பட்டு இரண்டறக் கலந்துவிட வேண்டும். சில சமயம் இவரிடமிருந்து மனிதப் பண்புகள் வெளிப்பட வேண்டும் என்பதைத் தான் அவர்கள் எதிர்பார்த்தனர்.

இதைத் தான் இறைவன் மறுக்கிறான். அவரை மலக்காகவே நாம் ஆக்கியிருந்தாலும் அவரையும் மனிதராகவே ஆக்கியிருப்போம் என்ற வாசகம் இதை உறுதிப்படுத்துகின்றது.

ஒவ்வொரு படைப்பும் தனித்தனியான தன்மைகளைக் கொண்டவை. ஒரு படைப்பு இன்னொரு படைப்புக்குள் ஊடுறுவ முடியாது. மனிதனை ஜின் பிடிக்கிறது என்றால் மனிதனாகவும், ஜின்னாகவும் அவன் மாறி விடுகிறான், அல்லது சில நேரம் மனிதனாகவும், சில நேரம் ஜின்னாகவும் ஆகிறான் என்ற கருத்து அதற்குள் அடங்கியுள்ளது.. அல்லாஹ்வின் படைப்பில் இத்தகைய குழப்பத்துக்கு இடமில்லை.

எனவே ஜின்கள் மனிதர்கள் மீது மேலாடுவதாக சொல்வது ஆதாரமற்ற நம்பிக்கையாகும்.

 

ஜின்கள் மனிதனுக்குள் மேலாடுமா?

கேள்வி

என்னுடைய உறவினர் ஒருவரை முஸ்லிம் ஜின் ஒன்று பிடித்துள்ளதாகக் கூறுகிறார். அவர் மற்றவர்களைப் பற்றி கூறும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மையாக உள்ளது.

ஜின்கள் மனிதன் மீது வரமுடியாது என்றால் இது எப்படி சாத்தியம்?

அலி

பதில்

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் "ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்டது; மனிதர்களை விட சக்தி வாய்ந்தது'' என்றெல்லாம் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் அந்த ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு உள்ளங்கள் இருப்பதாக ஆகின்றது.  அதிலும் இரவில் ஜின் உள்ளத்தைக் கொண்டு தொழுகின்றான், பகலில் தெரியாது என்று கூறுகிறான் என்றெல்லாம் கூறுவது இரண்டு உள்ளங்கள் அவனிடம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்.

ஆனால் இவ்வாறு இரண்டு உள்ளங்கள் யாருக்கும் இருக்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

திருக்குர்ஆன் 33:4

மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.  இதற்கு மாற்றமாக அந்த மனிதன் கூறுவதால் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம்.  மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர் இவ்வாறு நடிக்கலாம்.

அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.  திருமணம் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பவர்கள் அதை நேரடியாக வீட்டில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.  இது, ஹிஸ்டீரியா என்ற ஒருவகை மன நோயாகும்.

அந்நபர் மற்றவர்களைப் பற்றி தகவல்களைக் கூறுவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். ஆச்சரியப்படுவதற்கு இதுவெல்லாம் அபார சக்தி கிடையாது.  மறைமுகமான முறையில் தகவல்களை அறிந்துகொண்டு யார் வேண்டுமானாலும் இவ்வாறு நடித்து மற்றவர்களை ஏமாற்ற முடியும்.

ஜின்களின் சக்தியைப் பற்றி திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

"பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார். "உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது. "கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன்'' என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும், "நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்" (என்று சுலைமான் கூறினார்)

திருக்குர்ஆன் 27:38-40

கண் மூடித் திறப்பதற்குள் ஒரு நாட்டிற்குச் சென்று அந்த நாட்டு அரசியின் சிம்மாசனத்தைத் தூக்கி வரும் அளவுக்கு ஜின்களுக்கு ஆற்றல் இருந்ததாக அல்லாஹ் இந்த வசனங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.  இதை அபார சக்தி என்று கூறலாம்.

நீங்கள் கூறும் அந்த நபர் இது போன்ற அற்புதத்தைச் செய்து காட்டுவாரா? என்று கேட்டுப் பாருங்கள்.  தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜெயலலிதாவின் நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து, காட்டி அதை அபார சக்தி என்று கூறினால் ஒரு அர்த்தம் இருக்கும்.

அவரால் மற்றவர்களைப் பற்றிய விபரங்களைக் கூற முடியும் என்றால் அதிமான மக்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு பொருளை கையில் மறைத்துக்கொண்டு இது என்ன? என்று கேளுங்கள். அவர் பார்த்திராத யாரோ ஒருவரை அழைத்து வந்து அவரைப் பற்றிய முழு விபரங்களை துல்லியமாகக் கூறச் சொல்லுங்கள். அவரால் ஒருக்காலும் கூற முடியாது. அவரிடம் ஜின் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகி விடும்.

ஒவ்வொரு நாளும் மனிதன் பிறந்துகொண்டும் மரணித்துகொண்டும் இருக்கின்றான். மற்றவர்களைப் பற்றி விபரம் அவருக்குத் தெரியும் என்றால் நாளைக்கு யார் யாரெல்லாம் மரணிப்பார்கள். எங்கு மரணிப்பார்கள். எப்படி மரணிப்பார்கள் என்று கேளுங்கள்.

இதை விடுத்து பிறரை ஏமாற்றும் தந்திர வேலைகளைச் செய்து ஜின் ஒரு மனிதனுக்குள் ஊடுறுவி இருப்பதாகக் கூறுவது தெளிவான ஏமாற்று வேலை!  முறையாக விசாரித்தால் உண்மை வெளியாகும்.

மேலும் ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை என திருக்குர்ஆன் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது. எனவே மற்றவர்களைப் பற்றி ரகசியங்களை இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாராலும் கூற முடியாது. இதற்கு மாற்றமாக ஜின்களுக்கு இந்த சக்தி உண்டு என்று நம்புவது இணைவைப்பாகும். இந்த நம்பிக்கை நம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும்.

ஜின்கள் மகத்தான் ஆற்றல் உள்ள படைப்பாக இருந்தாலும் மறைவான விஷயங்களை அறிந்து கொள்வதில் மனிதர்களைப் போன்று பலவீனமானப் படைப்பாகும்.

மறைவான ஞானம் என்பது இறைவனுக்கு மட்டும் உரித்தான அம்சமாகும். இந்த அதிகாரத்தை இறைவன் மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் வழங்கவில்லை. இறைவனுடைய தன்மைகளில் ஒன்றான மறைவானவற்றை அறியும் ஆற்றல் ஜின்களுக்கு இருப்பதாக ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்தவராக ஆகிவிடுவார்.

"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

மறைவான ஞானம் தங்களுக்கு இல்லை என்று ஜின்கள் கூறியதை திருக்குர்ஆன் எடுத்துக்கூறுகிறது.

பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம் (என்று ஜின்கள் கூறின)

திருக்குர்ஆன் 72:10

ஸுலைமான் நபிக்குப் பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.  ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார். ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார்.

பிறகு கைத் தடியைக் கறையான்கள் அரித்த போது, அவரது உடல் கீழே விழுந்தது. அவர் விழுந்த பிறகு தான் ஸுலைமான்  இறந்து நீண்ட காலமாகிவிட்டது என்ற செய்தி ஜின்களுக்குத் தெரிகிறது.

தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கின்ற ஸுலைமான் நபி மரணித்துவிட்டதைக் கூட ஜின்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

திருக்குர்ஆன் 34:14

பகிர்

பதிலளி

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்
உங்கள் பெயர்