TNTJ கடனில் சிக்கியுள்ளது உண்மையா

TNTJ கடனில் சிக்கியுள்ளது உண்மையா

கேள்வி :

நம் ஜமாஅத் கடனில் சிக்கித் தவிக்கிறது என்று பொதுக்குழுவிலும் செயற்குழுவிலும் விளக்கம் தருகிறீர்கள். தலைமைக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்குமக்களிடம் பணம் திரட்டும் நிலையில் உள்ளதாகவும் பஞ்சப்பாட்டு பாடுகிறீர்கள். ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது அதற்கு மாற்றமாகத் தான் தென்படுகிறது.

சுவாமிமலையில் ஆதரவற்றோர் சிறுவர் இல்லம் சொந்த இடத்தில் கட்டப்பட்டு வருகின்றது. இதற்காக பல லட்சங்கள் செலவிடப்படுகின்றன.

அது போல் திருமங்கலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய ஆண்களுக்காக தனியாக தாவா சென்டர் கட்டப்படுகிறது.

அது போல் இஸ்லாத்தைத் தழுவும் பெண்களுக்கான தாவா சென்டருக்காக மதுரையில் கட்டட விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன.

முதியோர் இல்லக் கட்டடமும் விரிவாக்கம் செய்யப்படுகின்றது.

கடனில் மூழ்கியுள்ள ஜமாஅத் ஒரே நேரத்தில் இத்தனை பணிகளை எப்படிச் செய்ய முடியும்? மேலும் நாற்பது முதியவர்கள், நூறு சிறுவர்கள், ஐம்பது சிறுமியர், தாவா சென்டரில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சுமார் 60 நபர்கள் என 250 நபர்களுக்கு மாதம் தோறும் சுமார் ஏழு லட்சம் ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடுகிறேன்.

கடனில் தத்தளிப்பதாகச் சொல்லும் ஜமாஅத்துக்கு இது எப்படி சாத்தியமாகும்? இரண்டும் முரணாகத் தெரிகின்றதே? இப்படி மாற்று இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் கூறுவதில் நியாயம் உள்ளதால் இதைக் கேட்கிறேன்.

- ஹிப்பதுல்லாஹ், கரூர்

பதில் :

கேள்வி என்ற பெயரில் ஒரு கட்டுரையே எழுதி விட்டீர்கள். தேவையான கேள்வியைத் தான் கேட்டுள்ளீர்கள்.

ஜமாஅத் கடனில் இருக்கிறது என்பது முற்றிலும் உண்மை தான் . ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொண்டால் உங்களுக்குக் குழப்பம் வராது.

நம்முடைய ஜமாஅத்தைப் பொருத்தவரை குறிப்பிட்ட பணிக்காக என்று குறிப்பிடாமல் நன்கொடை என்று வழங்கினால் மட்டுமே அதை ஜமாஅத்தின் நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வோம்.

அனாதைகள், ஆதரவற்றோர், முதியோர், இஸ்லாத்தைத் தழுவியோர் என்று குறிப்பிட்டு வழங்கப்படுமானால் அதை ஜமாஅத்தின் நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்படுத்துவதில்லை. அந்தந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.

ஆதரவற்றோர் இல்லத்துக்காக மக்கள் வாரி வழங்கினால் அந்தப் பணத்தை அந்தப் பணிக்காகத் தான் செலவிட வேண்டும். எனவே ஆதரவற்றோர் இல்லத்தில் இடத்தையும் வசதிகளையும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதைப் பயன்படுத்துகிறோம்.

இது போல் ஒவ்வொரு பணிக்காகவும் மக்கள் தரக் கூடிய பணத்தை அந்தப் பணிகளுக்குச் செலவு செய்கிறோம்.

இவ்வளவு பெரிய இயக்கத்தை நிர்வகிக்க பெரும் பொருள் செலவு தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு ஏற்ப நிதிகள் வருவதில்லை. இதனால் நிர்வாகச் செலவுகளுக்காக அவ்வப்போது கடன் வாங்கும் நிலைமை ஏற்படுகிறது. அந்தக் கடனுக்காக அனாதைகள் பணத்தை எடுத்துக் கொள்ள மார்க்கத்தில் அனுமதி இல்லை.

எனவே இது போன்ற அறப்பணிகளுக்காக நன்கொடை வழங்குவோர் நிர்வாகச் செலவுகளுக்காகவும், நன்கொடைகள் அளித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.

வாடகை, மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், ஊழியர்களுக்கான ஊதியம், முழு நேரப் பிரச்சாரகர்களுக்கான ஊக்கத் தொகை, ஸ்டேஷனரி, பயணச்செலவு, தபால் செலவு என ஏராளமான செலவுகள் ஜமாஅத்துக்கு உள்ளன.

குறிப்பிட்ட பணிகளுக்காக நம்பி வழங்கிய தொகையை ந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்தாத காரணத்தால் கடன் அப்படியே நிற்கிறது. எனவே குறிப்பிட்ட பணிகளுக்காக நிதி அளிக்கும் சகோதரர்கள் ஜமாஅத் வளர்ச்சி நிதிக்காக கொஞ்சம் சேர்த்து அனுப்பினால் இந்த நிலை மாறும்.

Published on: 07.06.2012. 06:28 Views: 545


www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top