பிற மொழிகளிலும் தாவா செய்தால் என்ன
பிற மொழிகளிலும் தாவா செய்தால் என்ன
தமிழ் மக்களைத் தவிர மற்ற மொழி மக்களிடம் குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மொழி மக்களிடம் தவ்ஹீத் கொள்கை சென்றடையவில்லை. ஏன் இதற்கான முயற்சியில் தவ்ஹீத் ஜமாஅத் இறங்கவில்லை. தவ்ஹீத் புத்தகங்களை அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யும் முயற்சிகளில் இறங்கலாமே?
ஷமீம், பழைய வண்ணராப்பேட்டை
பதில் :
நமக்கு எது தெரியுமோ அதில் தான் நாம் ஈடுபட இயலும். இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் நாம் பிரச்சாரம் செய்வதாக இருந்தால் அந்த மொழிகள் நமக்குத் தெரிய வேண்டும். தெரிந்த மொழியாம் தமிழ்பேசும் மக்கள் வாழும் பல ஊர்களில் இன்னும் தவ்ஹீத் கொள்கை சென்றடையவில்லை. அதைs சிறப்பாக செய்ய இயலாத அளவுக்கு பணிச்சுமைகள் அதிகமாக உள்ளன.
இந்த நிலையில் வேறு மொழிகளில் பிரச்சாரத்தை முழு அளவுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. ஆனாலும் இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் பேசும் உருது மொழியில் சில உரைகளை நாம் மொழிமாற்றம் செய்து தயாரித்தோம். அதை உருது மொழி பேசும் மாநில மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்தியா முழுவதும் நமக்கு அடித்தளம் இருக்க வேண்டும்.
ஆனால் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் இருப்பதால் அங்கே நமக்கு அடித்தளம் உள்ளது. அது போன்ற சில ஊர்களில் மாத்திரம் தான் அந்த உரைகள் உருது பேசும் மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும் வளைகுடா நாடுகளில் உருது பேசும் சக தொழிலாளிகளுக்கு நம் கொள்கைச் சகோதரர்கள் வழியாக கணிசமான அளவில் இந்த வினியோகம் நடக்கின்றது. இந்த அளவுக்குத் தான் மற்ற மொழிகளில் நாம் பிரச்சாரம் செய்ய இயலும். நமக்குச் சக்தி இல்லாத விஷயத்தில் அல்லாஹ் நம்மைக் கேள்வி கேட்க மாட்டான். அல்லாஹ் நாடினால் எல்லா மாநிலங்களிலும் சத்தியத்தைச் சொல்லும் மக்களை உருவாக்குவான். அதற்காக துஆ செய்யுங்கள்.
Published on: June 11, 2012, 5:56 PM Views: 552

