உணர்வு பதில்கள் (17:18

பொது அமைதியைக் குலைக்கும் எந்த ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் இணையதள குற்றங்களும் குண்டர் சட்டத்தின் வரையறைக்குள் இணைக்கப்படும் என்றும் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் அறிவித்துள்ளாரே? இதனால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளதா?

மசூது, கடையநல்லூர்

 சட்டம் ஒழுங்கைக் காப்பதில் சமரசம் செய்யாதவர் என்ற பெயர் ஜெயலலிதாவுக்கு முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போதைய அவரது ஆட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து வகையான குற்றங்களும் கணக்கிலடங்காமல் அதிகரித்துள்ளன.

 கடந்த காலங்களில் இதே சட்டங்களை வைத்துத்தான் குற்றங்களை ஜெயலலிதா ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்திருந்தார். அதே சட்டங்களை வைத்து இப்போதும் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

 ஆனால் இருக்கும் சட்டங்களைப் பயன்படுத்த காவல்துறை தயாராக இல்லை. ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தினால் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதியாமல் சமரசம் பேசுவதற்கு காவல் துறை தேவையா?

 சமரசம் ஏற்படாதபோது அடித்தவன் மீதும் அடி வாங்கியவன் மீதும் சமமாக வழக்குப் போடும் அயோக்கியத்தனத்துக்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.

 இதைச் சரி செய்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து அப்பாவிகளுக்கு நியாயம் வழங்கினாலே குற்றங்கள் குறைந்துவிடும்.

 பல தடவை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் இனிமேல் ஒரு தடவை குற்றம் செய்தாலே போடும் வகையில் சட்டம் திருத்தப்படும் என்று அவர் கூறுகிறார். இந்த ஆலோசனையை அவருக்கு வழங்கிய புத்திசாலி(?) யார் என்று தெரியவில்லை.

 ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினர் மீது வரம்பு மீறும்போது இரு தரப்பினர் மீதும் குண்டர் சட்டம் போடப்படும் என்பதுதான் இதனால் ஏற்படும் விளைவு. அப்பாவிகளைக் குண்டர்களாக்குவதுதான் இதனால் ஏற்படும் ஒரே விளைவாகும்.

 எந்த சம்பவத்திலும் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமரசம் பேசக் கூடாது, பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதியக்கூடாது என்று தெளிவான உறுதியான உத்தரவு போட்டு அதை முறையாகக் கண்காணித்தாலே குற்றங்கள் குறைந்துவிடும்

 இருக்கின்ற சட்டங்களைப் பயன்படுத்தத் தவறிவிட்டு, மேலும் மேலும் சட்டங்களை இயற்றுவது அறிவுடையோருக்கு அழகல்ல.

 இணையதள குற்றங்கள் குறித்து பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை.

 150 கோடி முஸ்லிம்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்து வெளியிட்டவனை பாஜக கூட கண்டித்துவிட்டது. அம்மையார் இது வரை வாய் திறக்கவில்லை. யூடியூபை தடை செய்ய பல மாநில முதல்வர்கள் மத்திய அரசை வலியுறுத்தினார்கள். இவர் வாயே திறக்கவில்லை.

 இப்படிப்பட்ட உணர்வுகளை உடையவர் இந்தச் சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவார். எதிர்க் கட்சிகளை அழிக்கவும் இவரை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவவும்தான் பயன்படுத்துவார் என்பது இவர் எதிர்க்கட்சிகள் மீது தொடுத்து வரும் அடுக்கடுக்கான வழக்குகளில் இருந்து தெரிய வருகிறது.

டெல்லி மாணவி பேருந்தில் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதும் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பலவாறான போராட்டங்கள் நடக்கின்றன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 பர்வின் - துபை

 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் கடுமையாகத் தாக்கப்பட்டதும் கடும் கண்டனத்துக்கு உரியது என்பதில் சந்தேகம் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

 இந்தக் குற்றச் செயலை செய்தவர்களைத்தான் கண்டிக்கலாமே தவிர இதில் மத்திய மாநில அரசுகளையோ, காவல் துறையையோ கண்டிக்க எந்த நியாயமும் இல்லை.

 பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஏராளமான நிகழ்ச்சிகள் ஆதாரமாகவுள்ளன. ஆனால் இந்த நிகழ்ச்சியை அதுபோன்ற சம்பவமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.

 மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் அல்லது பட்டப்பகலில் இது போன்ற சம்பவம் நடந்தால் அரசாங்கத்தைக் குறை கூற முடியும்.

 நள்ளிரவு நேரத்தில் அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் சில சமூக விரோதிகளைத் தவிர பயணிகளே இல்லாத கண்ணாடிக்கதவுகளால் மூடப்பட்ட சொகுசுப் பேருந்தில் ஏறியுள்ளார். ஆண் நண்பருடன் நள்ளிரவில் ஊர் சுற்றும் பெண் என்றுதான் சமூக விரோதிகள் இந்த பாதகச் செயலைச் செய்துள்ளனர்.

 இதை காவல் துறை எப்படி தடுக்க முடியும்?

டெல்லி முதல்வர் இதை எப்படி அறிய முடியும்?

 மக்கள் நடமாட்டமில்லாத நேரத்தில் ஒவ்வொரு பேருந்திலும் இரண்டு காவலர்களை எந்த நாட்டிலும் எந்த மாநிலத்திலும் நியமிக்கமாட்டார்கள்.

 காவல் துறையினர் கடவுள் தன்மை உள்ளவர்களாக இருந்தால் ஏன் தடுக்கவில்லை என்று கேட்கலாம்.

 நேரம் கெட்ட நேரத்தில் ஒவ்வொருவரும் தானே போய் மாட்டிக்கொள்ளும்போது யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம்.

 ஆண் நண்பருடன் இரண்டாம் ஆட்டம் படம் பார்த்துவிட்டு வந்த மாணவி நாங்கள் இருவர் மட்டும் இந்த எண்ணுள்ள பேருந்தில் ஏறப்போகிறோம் என்று போலிசுக்கு தெரிவித்த உடனே போலீஸ் வராமல் இருந்தால்கூட அதைக் குற்றம் சொல்ல முடியாது. சாதரணமாக பேருந்தில் ஏறப் போகிறார்கள் என்பதற்காக எந்த போலிஸும் வராது. அப்படி இருக்கும்போது போலிஸுக்கே தெரியாத வகையில் இவர்கள் நேரம் கெட்ட நேரத்தில் பேருந்தில் ஏறியிருக்கும்போது இதற்கு அரசு எப்படி பொறுப்பாகும்?

 இதுபோன்ற சம்பவங்களின்போது காவல் துறை என்ன செய்திருக்க முடியும் என்று போராட்டம் செய்பவர்கள் விளக்குவார்களா?

 ஒருவன் தானே போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது போலத்தான் இந்த சம்பவத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்காமல் ஆண் நண்பருடன் சுற்றும் அளவுக்கு சுதந்திரம் வழங்கிய கல்லூரியையும் விடுதியையும் கண்டிக்கலாம்.

 நள்ளிரவில் ஆண் நண்பருடன் உல்லாசத்தில் ஈடுபடத் துணிந்த பெண்ணைக்கூட கண்டிக்கலாம். அவரது அசட்டுத் துணிச்சலை கண்டிக்கலாம்.

 இவற்றை எல்லாம் கண்டித்து நல்வழிப்படுத்தத் தவறினால் அறிவுக்குச் சம்பந்தமில்லாத வகையில் கூட்டம் கூட்டி டெல்லி முதல்வர்   வீட்டை முற்றுகையிட்டால் என்ன நடக்கும்?

 நாங்கள் இரவு ஒரு மணிக்கு எவனுடனும் ஊர் சுற்றுவோம்; எங்களைப் போலீஸ் பாதுகாக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையா?

 அரசைக் கண்டிப்பதாக இருந்தால் இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கு தடை விதிக்காமல் அனுமதித்ததைத் தான் குறை சொல்ல முடியும். இரவு பத்து மணிக்கு மேல் அல்லது 11 மணிக்கு மேல் சினிமா அரங்கம் செயல்படக் கூடாது என்று எந்த மாநிலத்திலும் சட்டம் இல்லை. இதைத் தடுத்து இருந்தால் மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்திலேயே இவர்கள் ஆட்டத்தை முடித்து உரிய நேரத்தில் சேர வேண்டிய இடத்துக்கு சென்றிருப்பார்கள்.

 நள்ளிரவு காட்சிக்கு அனுமதி இல்லை என்று சட்டம் போட்டால் அதற்கும் கொடி பிடித்து இவர்கள் உரிமைக் குரல்(?) எழுப்புவார்கள்!

 இது போன்ற கேடுகெட்ட அறிவு கெட்ட போராளிகளை நினைத்துத்தான் நமக்கு கவலையாகவுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டபிறகும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதுதான் விந்தையாக உள்ளது.

பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு ஆடைகள் முக்கிய காரணமாக உள்ளது என்பதை மறுக்கக் கூடியவர்கள் உடைதான் காரணம் என்றால் ஆறு வயது சிறுமி ஏன் பாலியல் வன்முறைக்கு ஆளாக வேண்டும் என்று எதிர்க் கேள்வி கேட்கின்றனர். குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நல்ல தொடுதல் எது; கெட்ட தொடுதல் எது என்று கற்பிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள். இது சரியா?

சபுரா, சார்ஜா

 சிந்தனைக் குறைபாடு காரணமாகவே இதுபோன்ற வாதங்களை முன் வைக்கிறார்கள். பெண்களின் ஆடைகள் காரணமாக பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது என்ற வாதம் பெரும்பான்மையாக அப்படி நடக்கிறது என்ற கருத்தில்தான் வைக்கப்படுகிறது. அது மட்டுமே ஒரே காரணம் என்ற அர்த்தத்தில் வைக்கப்படுவதில்லை. இது அனைவருக்கும் தெரிந்தாலும் வேண்டுமென்றே அறியாதது போல் நடித்துக் கொண்டு மேற்கண்ட வாதம் முன்வைக்கப்படுகிறது.

 பீடி, சிக்ரெட், புகையிலை பான்பராக் பயன்படுத்தினால் கேன்ஸர் வரும் என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள்.

 மேற்கண்டவைகளைப் பயன்படுத்தாதவர்களுக்கு ஏன் கேன்ஸர் வருகிறது?

மேற்கண்ட பழக்கம் உள்ள அனைவருக்கும் ஏன் வரவில்லை என்று வாதம் வைத்து தாராளமாக புகையிலைப் பொருளை பயன்படுத்துங்கள் என்று அறிவாளிகள் சொல்லமாட்டார்கள்.

 ஏடிஸ் என்ற கொசுவின் மூலம் டெங்கு காய்ச்சல் வருகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். டெங்கு காய்ச்சல் வந்த குழந்தையின் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஏன் டெங்கு வரவில்லை? அந்த வீட்டில் உள்ள கொசு மற்றவர்களையும் கடித்திருக்காதா? அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் ஏன் வரவில்லை? எனவே ஏடிஸ் கொசுவை தாராளமாக உற்பத்தி செய்யுங்கள் என்று மூளையுள்ள யாரும் வாதம் செய்யமாட்டார்கள்.

 இது போல் ஆயிரமாயிரம் விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளும்போது இந்த விஷயத்தில் மட்டும் ஏறுக்குமாறாக சிந்திக்கின்றனர்.

 ஒரு பெண் ஆண்களுக்கு வக்கிர எண்ணத்தைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்தால் ஆண்களுக்கு சலனம் ஏற்படுமா? ஏற்படாதா?

 தனிமை கிடைத்தால் அந்தப் பெண் சீரழிக்கப்படுவாளா? இல்லையா?

 உடற்கூறு நிபுணர்களும் இவ்வாறு ஏற்படும் என்கிறார்கள். நடை முறையிலும் இவ்வாறு நடப்பதை நாம் காண்கிறோம்.

 கல்வி அறிவு கொடுத்தால் மதவெறி ஒழியும் என்று கூறுகிறார்கள். கல்வி அறிவு உள்ளவர்களே மதவெறி இயக்கங்களை உருவாக்கி வழிநடத்துவதால் கல்வியால் மதவெறி ஒழியாது என்று வாதம் வைக்கலாமா?

 படிப்பறிவு இல்லாததே குற்றங்களுக்குக் காரணம் என்று கூறினால் குற்றங்கள் செய்யும் படித்தவர்களின் பட்டியலை வாசித்துக் காட்டி படிப்பே தேவையில்லை என்று வாதிட்டால் அது சரியாகுமா?

 பெண்களின் கவர்ச்சியான உடை ஆண்களை ஈர்க்கும் என்பது இயல்பானது. இவ்வாறு ஈர்க்கப்படும் ஆண்களில் அதிகமானவர்கள் சலனப்படுவதுடன் போய்க் கொண்டு இருப்பார்கள். ஆனால் சிலர் சலனத்துக்கு ஏற்ப காரியத்திலும் இறங்கி விடுவார்கள். அப்படி இறங்கினால் அந்தச் சம்பவத்துக்கு நிச்சயம் ஆடைதான் காரணம். இந்தக் கருத்தில் சொல்லப்படுவதைத் தான் முற்போக்காளர்கள் திசை திருப்புகிறார்கள்.

 இப்படி வாதிடுவோர் பெண்களை பலவாறாக ரசித்து இன்புறும் நோய்க்கு ஆளானவர்களாக இருக்க வேண்டும் அல்லது பெண்கள் பால் ஆர்வமில்லாத ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அல்லது எதையும் மேலோட்டமாக மட்டுமே பார்க்கும் அறிவிலிகளாக இருக்க வேண்டும்.

 சராசரி மனிதனுக்கு மேலாக காமவெறி தலைக்கேறிய மிருகங்களும் மனித வடிவில் நடமாடுகின்றனர்.

 அவர்களுக்கு சிறுமியாக இருந்தாலும் கிழவியாக இருந்தாலும் முழுமையாக ஆடை அணிந்தவராக இருந்தாலும் எல்லாம் ஒன்றுதான்.இத்தகையவர்களால் சிறுமிகள் சீரழிக்கப்படுவதை இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் ஒருவகை மனநோயாளிகள் என்பது கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

 சராசரி மனிதன் அழகான கவர்ச்சியான பெண்களால்தான் ஈர்க்கப்படுவான்.

 சராசரிக்கும் கீழே உள்ளவன் பிணத்துடன் கூட உறவு கொள்வான். இவனை அறிவுடையோர் ஆதாரமாகக் காட்டி பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி வாதிடமாட்டார்கள்.

 நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பதை சிறுமிகளுக்கு புரிய வைக்க முடியுமா என்பது ஒரு புறமிருக்கட்டும் . புரிய வைக்க முடியும் என்றாலும் அதனால் என்ன நன்மை? புரிந்து கொள்வதால் மட்டும் மனித மிருகங்களிடமிருந்து தப்பிக்க முடியுமா? சிறுமிகளின் விருப்பத்துடன் தான் சீரழிவுகள் நடக்கின்றதா? அல்லது கதற கதற சீரழிக்கப்படுகிறார்களா?

 சிறுமிகள் என்பது உடல் ரீதியாக பருவமடையாத சிறுமிகளையும் எடுத்துக் கொள்ளும். உடல் ரீதியாக பருவம் அடைந்து நாட்டின் சட்டப்படி மேஜராக ஆகாத 18 வயதுக்கு உட்பட்டவர்களையும் எடுத்துக் கொள்ளும்.

 முதல் வகை சிறுமிகளுக்கு பாலியல் சேட்டைகளால் துன்பம் ஏற்படுவதால் கெட்ட தொடுதல் என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும் மனித மிருகங்களிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

 பருவமடைந்த சிறுமிகள்(?) என்றால் கெட்ட தொடுதலை நல்ல தொடுதல் என்று நம்பித்தான் பெரும்பாலும் உடன்படுகிறார்கள். 15வயதுப் பெண் இவனோடுதான் வாழ்வேன் என்று அடம்பிடிக்கும் சம்பவங்களே இதற்குச் சான்றாகவுள்ளது.

 எனவே முற்போக்காளர்கள் என்பவர்கள் மேலோட்டமாக மட்டுமே சிந்திக்கிறார்கள். இவர்கள் அறிவுடையோர் அல்ல.

குஜராத்தில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது அம்மாநில மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறதா? 23 சதவிகிதம் முஸ்லிம்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படுவது உண்மையா?

அப்ரித், கடையநல்லூர்

 மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனநாயக நாட்டில் வெற்றி பெற முடியாது. இது விவாதத்துக்கு உரிய விஷயமல்ல. மக்களின் ஆதரவு பல வகைகளில் உள்ளன.

 தங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாக மக்கள் ஆதரிப்பது ஒருவகை. குஜராத் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பதை உணர்வில் தகுந்த ஆதாரங்களுடன் பல கட்டுரைகளில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்களும் குஜராத் தேர்தலுக்குப்பின் இதை தெளிவுபடுத்தியுள்ளார்.

 கோத்ரா ரயில் எரிப்புப் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி அம்மாநில ஹிந்துக்களை நம்ப வைத்து வெறியேற்றியதில் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். முஸ்லிம்களை புறக்கணிக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் தொடர்வதால் மதவெறியால் தூண்டப்பட்ட அம்மாநிலத்தில் உள்ள அதிகமான இந்துக்கள் இவர்தான் முஸ்லிம்களை நசுக்குவார், நம்மை பாதுகாப்பார் என்று நம்புகின்றனர்.

 தங்களின் முன்னேற்றம், மாநிலத்தின் வளர்ச்சியெல்லாம் அவர்களுக்கு முக்கியமில்லை. இதனால் அப்பாவியை என்கவுண்டரில் சுட்டு தள்ளி உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகி, அமைச்சர் பதவி இழந்த அமீத்ஷா என்ற மதவெறியனும் வெற்றி பெற்றுள்ளது இதை உறுதிப்படுத்துகிறது. அப்பாவியைத்தான் கொன்றான் என்று நிருபிக்கப்பட்டாலும் முஸ்லிமைக் கொன்றவன் நல்லவன் என அம்மாநிலத்தில் அதிகமான இந்துக்கள் நம்புகிறார்கள் என்றால் மதவெறி எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 மோடி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு என்னதான் அநீதி இழைக்கப்பட்டாலும் அவர்கள் எதிர்த்து எதுவும் பேச முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அந்நிய நாட்டில் வாழ்வது போன்ற நிலையில் தாங்கள் இருப்பதாக அம்மாநில முஸ்லிம்கள் உணர்கிறார்கள். இது அம்மாநிலத்தின் அதிகமான இந்துக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்துத்துவமாகி விட்ட அதிகமான ஊடகங்களும் இதில் மகிழ்ச்சி அடைந்து ஒரு மாயையை ஏற்படுத்தினார்கள்.

  இதுதான் அவரது வெற்றிக்கு காரணம். கடந்த தேர்தலை விட பா.ஜ.க.விற்கு இரண்டு சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன. காங்கிரஸ் முன்பை விட கூடுதல் சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது வெறியூட்டப்பட்ட மக்களில் கணிசமான மக்கள் மதவெறிக்கு அப்பால் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதை இது காட்டுகிறது.

 பெரும்பாலானவர்கள் மதவெறி ஊட்டப்பட்டவர்களாக இருக்கும் மாநிலத்தில் மதவெறியால் வெற்றி பெறுவது ஆச்சரியமானது அல்ல.

 23 சதவிகிதம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள் என்று எதை வைத்து பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு எந்த ஆதாரத்தையும் ஊடகங்கள் வெளியிடவில்லை.

 முஸ்லிம்களை வாக்குச்சாவடிக்கு வரவிடாமல் மிரட்டி அவர்களின் வாக்குகளை சங்பரிவார அதிகாரிகள் துணையுடன் இவர்களே போட்டதால் சில முஸ்லிம் பகுதிகளில் பாஜகவுக்கும் வாக்குகள் விழுந்திருக்கலாம்.

 அச்சத்திலும் பயத்திலும் அம்மாநில முஸ்லிம்கள் உறைந்து கிடப்பதால் அவர்கள் எதிர்த்து எதுவும் பேசுவதில்லை என்பதால், பேசினால் என்கவுண்டரில் கொன்று விடுவார்கள் என்பதாலும் அமைதி காக்கின்றனர். இதை மோடிக்கு ஆதரவு என்று ஊடகங்கள் திரித்து நாடகம் நடத்துகின்றன.

Published on: December 26, 2012, 11:54 AM Views: 578

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top