இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவ

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 அல்லது 9 சதவிகிதம் வளர்ச்சியடைந்த வேலையில் திடீர் சரிவுக்கு முக்கிய காரணம் என்ன?
ஜாஃபர் அலி, ஷார்ஜா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்ற டயலாக் நாட்டு மக்களை ஏமாற்றும் மோசடியில் ஒரு வகையாகும்.

இதனால் நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அயோக்கிய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து அடிக்கடி இந்த டயலாக்கை அடித்து வருகின்றனர்.

இந்த மோசடியை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு ஊரில் நூறு பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு நபருக்கும் ஆயிரம் ரூபாய் மாத வருமானம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது நூறு பேரின் மொத்த வருவாய் ஒரு லட்சம் ஆகும்.

ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டிய நூறு பேரில் 98 நபர்களில் வருமானம் அடுத்த வருடம் ஐநூறு ரூபாயாகக் குறைந்து விட்டது. ஆனால் அதில் இருவரின் வருமானம் தலா ஒரு லட்சமாக உயர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்போது மொத்த வருமானம் இரண்டு லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரம் ஆகிறது. அதாவது சென்ற ஆண்டு ஒரு லட்சமாக இருந்த வருமானம் ஒன்றரை மடங்கு அதிகமாகி விட்டது. எனவே பொருளாதாரத்தில் அந்த ஊர் வளர்ச்சி அடைந்து விட்டது என்றால் இது எப்படி இருக்கும்?

98 பேரின் வருமானம் 1000த்தில் இருந்து 500 ஆக ஆகிவிட்டது. அவர்களின் வாங்கும் சக்தி சரிபாதியாகக் குறைந்துவிட்டது. இரண்டே இரண்டு நபர்களின் வருமானம் மட்டும் அந்த ஊரில் உள்ள அத்தனைபேரின் வருமானத்தை விட இரு மடங்கு அதிகமாகிவிட்டது. இதைத்தான் பொருளாதார வளர்ச்சி என்கிறார்கள்.

நாம் ஊருக்குச் சொன்ன இந்தக் கதையைத் தான் இவர்கள் நாட்டுக்குச் சொல்கிறார்கள்.

இதனால் ஏழைகள் இருவகை பாதிப்புக்குள்ளாவார்கள். அவர்களின் வருவாய் பாதியாகக் குறைந்ததால் ஏற்படுகிற சிரமம் ஒரு வகை.

இரண்டே இரண்டு நபர்களிடம் தாறுமாறாகப் பணம் குவிந்துள்ளதால் அதை தங்கத்திலும், மனைகளிலும் அவர்கள் முதலீடு செய்வதால் ஏழைகள் இவற்றை வாங்க முடியாத அளவுக்கு விலையை ஏற்றி விடுகின்றனர். சிலரது பொருளாதாரம் தாறுமாறாக வளர்வதால் ஏழைகள் மேலும் மேலும் பாதிக்கப்படுக்கிறார்கள்.

ஒரு ஊரில் வாழும் ஒவ்வொருவரின் வருமானமும் 1000த்தில் இருந்து 1200 ஆக ஆனால் அல்லது அதில் சமமான மக்களின் வருவாய் இவ்வாறு உயர்ந்தால் அதைத் தான் பொருளாதார வளர்ச்சி என்று சொல்ல முடியும்.

இந்தியாவில் உள்ள அம்பானி போன்றவர்களின் சொத்துக்கள் ஒரு மாநில அரசுக்கு வரும் வருவாயை விட அதிகமாகி உள்ளதால் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து விட்டது என்று வாதிடுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை வருவாயின் அளவை வைத்து முடிவு செய்யாமல் தனி நபர்களின் வளர்ச்சியுடன் கணக்கிட்டால் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது என்பதே உண்மை

Published on: 04.12.2012. 23:02 Views: 551

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top