கலாம் என்றால் கலகமா?

கலாம் என்றால் கலகம் என்று  கருணாநிதி கூறியது சரியா? புனிதமான இஸ்லாமியப் பெயரைக் களங்கப்படுத்தி விட்டதாக சில முஸ்லிம் இயக்கங்கள் கருத்துக் கூறியுள்ளன. தவ்ஹீத் ஜமாஅத் இது குறித்து கருத்துக் கூறாதது ஏன்?
 ஹபீபுர்ரஹ்மான், திருமயம்
 

இதில் பல விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் அப்துல் கலாம் என்பது புனிதமான பெயர் அல்ல. அது ஷிர்க்கான பெயர். இவ்வாறு பெயர் வைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். அப்து என்றால் அடிமை என்று பொருள். இந்தச் சொல்லை அல்லாஹ்வின் பெயருடன் மட்டும்தான் சேர்த்துக் கூற வேண்டும். வேறு யாருடனும் எதனுடனும் சேர்க்கக் கூடாது. ஏனெனில் மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமை என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.

 கலாம் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று அல்ல. கலாம் என்றால் பேச்சு என்பது பொருள். சில மூடர்கள் அறிக்கை விட்டது போல் வேதம் என்றோ குர்ஆன் என்றோ இச்சொல்லுக்கு பொருள் இல்லை. கலாமுல்லாஹ் - அல்லாஹ்வின் பேச்சு என்று சொல்லும் போதுதான் அது வேதத்தைக் குறிக்கும். வெறும் கலாம் என்பது வேதத்தை குறிக்காது.

 சொல்லுக்கு அடிமை என்பதுதான் அப்துல் கலாம் என்பதன் பொருள். இப்படிப் பெயர் வைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். ஆனால் இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்த ஒரு மார்க்க அறிஞரின் பெயருடன் இதைச் சிலர் குழப்பிக் கொள்கின்றனர். அவரது பெயர் அபுல் கலாம். அப்துல் கலாம் அல்ல. அபுல் கலாம் என்றால் சொல்லின் தந்தை என்று பொருள். அதாவது சொல்லாற்றல் மிக்கவர் என்பது இதன் கருத்து. இது அனுமதிக்கப்பட்ட பெயர். ஆனால் அப்துல் கலாம் என்பது தடுக்கப்பட்ட பெயர். முன்னாள் ஜனாதிபதியின் பெயர் அப்துல் கலாம் என்பதாகும்.

 அடுத்து கலாம் என்ற வார்த்தை புனிதச் சொல் அல்ல என்றாலும் அது அரபுச் சொல். தமிழ்ச்சொல் அல்ல. எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் அந்த மொழியில் தான் அதற்குப் பொருள் செய்ய வேண்டும். ஒரு மொழியில் உள்ள சொல்லுக்கு இன்னொரு மொழியில் அர்த்தம் சொல்வது மடமையின் உச்சகட்டமாகும். கலாம் என்ற அரபுச் சொல்லுக்கு தமிழ் மொழியில் உள்ள கலகம் என்று அர்த்தம் கொள்வது விஷமத்தனமாகும்.

 கருணாநிதியிடம் இது போன்ற மடமைத்தனம் கணக்கிலடங்காமல் உள்ளன. வார்த்தை விளையாட்டு என்ற பெயரில் இது போல் உளறிக்கொட்டும் போது  அவர் பகுத்தறிவைப் பயன்படுத்த மாட்டார். தமிழுக்கு மூன்று எழுத்து. அண்ணாவுக்கு மூன்று எழுத்து என்று மூன்று எழுத்துப் பட்டியலை உதாரணமாகக் கூறலாம். தமிழுக்கு மூன்று எழுத்துப் போல் அண்ணாவுக்கும் மூன்று எழுத்து என்பதால் அதற்கு சிறப்பு இருப்பதாக கூறுவதும் அறியாமையாகும். திமிர், புறம், ஊழல், மோசடி, கயமை இன்னும் பல கெட்ட அர்த்தங்கள் கொண்ட சொற்களும் மூன்று எழுத்தில் உள்ளன. அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் பிடிக்காத ஹிந்திக்கும் மூன்று எழுத்துக்கள் தான் உள்ளன. எம்ஜிஆருக்கும் மூன்று எழுத்துத்தான். அதுபோல் மூன்று எழுத்துக்கு அதிகமான சொற்களிலும் குறைவான சொற்களிலும் நல்ல அர்த்தம் உள்ளவையும் கெட்ட அர்த்தம் உள்ளவையும் இருக்கின்றன. இதைக்கூட கவனிக்காமல் இன்னும் அதே போல் உளறிக் கொண்டு இருக்கிறார்.

 இந்த வகையில் அவர் உளறிக் கொட்டி இருக்கிறார். இது அவரது வாழ்வில் முதன் முதலில் நடப்பது அல்ல. இதுபோல் பகுத்தறிவுக்கு பொருந்தாத வகையில் வார்த்தை விளையாட்டு அவருக்கு வழக்கமான ஒன்றுதான். இதற்காக கண்டிப்பது என்றால் ஆயிரக்கணக்கான இது போன்ற பகுத்தறிவுக்கு சம்மந்தமில்லாத உளறல்களுக்கு ஆயிரக்கணக்கில் கண்டிக்க வேண்டும்.

 அடுத்து அப்துல் கலாம் என்பவர் முஸ்லிம் என்பதால் அவரை விமர்சனம செய்ததற்காக இப்படி சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். அப்துல் கலாம் என்பவர் ஒரு போதும் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டதில்லை. சாய்பாபா, சங்கராச்சாரியார் போன்ற பல சாமியார்களின் காலடியில் விழுந்து கிடந்தவர்தான் அப்துல் கலாம். அவர் சமகால சிக்கந்தர் பகத் ஆவார்.

 அத்வானியின் ரதயாத்திரைக்கு தேர் ஓட்டிச் சென்ற துரோகி சிக்கந்தர் பகத்துக்கும் கலாமுக்கும் கடுகளவும் வித்தியாசம் இல்லை. நரேந்திர மோடியின் நரவேட்டையைக் கூட கண்டிக்க துப்பில்லாதவரும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக் கூட மனமில்லாதவருமான இவரை முஸ்லிம் என்று அடையாளம் காட்டுவதையும் முஸ்லிமுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக இதைச் சித்தரிப்பதையும் சகிக்க முடியவில்லை. எல்லா சங்பரிவார இயக்கங்களும் இவரை முன் மொழிவது ஒன்றே இதற்குப் போதுமான ஆதாரமாகும்.


Published on: July 12, 2012, 6:11 PM Views: 546

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top