உணர்வு கேள்வி பதில்கள் 17-15

நாகூர் கோவில் சந்தனக்கூடு விழாவுக்கு நாகூர் ஆதின(?)த்திடம் அரசு சார்பில் 40 கிலோ சந்தனக் கட்டைகளை 3 இலட்சம் ரூபாய்க்கு மானியமாக வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளாரே? இது இஸ்லாமியர்களிடையே எப்படி பார்க்கப்படுகின்றது?
- கடையநல்லூர் மசூது


இது போன்ற அறிவிப்புக்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்டு இருந்தால் தமிழக முஸ்லிம்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும். ஆனால் தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் தர்கா வழிபாட்டில் இருந்து பெருமளவு விடுபட்டு விட்டனர். தர்காக்களின் அறங்காவலர்களாக இருப்பவர்களிலும் பலர் தவ்ஹீதின் பக்கம் திரும்பியுள்ளனர். அவர்களின் வாரிசுகளான இளைஞர்களிலும் அதிகமானோர் தங்கள் முன்னோர் செய்த இணைவைப்பைத் தவறு என்று விளங்கிவிட்டனர்.

நாகூர் தர்காவுக்கு வருபவர்களை நீங்கள் ஆய்வு செய்தால் அதிகமாக இந்துக்களும் வேளாங்கண்ணிக்கு வரும் கிறித்தவர்களும்தான் உள்ளனர்.

குறைவாக வரக்கூடிய முஸ்லிம்களிலும் கேரள மாநிலத்தவர்கள்தான் அதிகமாக உள்ளனர். எனவே முதல்வரின் இந்த விவேகமில்லாத அறிவிப்பு வீண் விரயமாகவும், இஸ்லாத்துக்கு தவறான வடிவம் கொடுக்க முயற்சிக்கும் செயலாகவும்தான் பார்க்கப்படுகின்றது.

தமிழகத்தில் உள்ள முஸ்லிம் இயக்கங்களில் ஒன்றிரண்டு இயக்கங்கள் தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் தர்கா வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதால் இதனால் ஜெயலலிதா எதிர்பார்க்கும் அரசியல் ஆதாயம் கிடைக்கப்போவதில்லை.

காங்கிரஸ் நிலக்கரி ஊழல் சம்பந்தமாக மழைக்காலக் கூட்டத்தொடர் அனைத்தையும் முடக்கியது பா.ஜ.க. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மீண்டும் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அவைகளையும் காங்கிரஸின் அந்நிய முதலீட்டு அனுமதியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முடக்கிக் கொண்டிருக்கின்றதே? மக்களின் வரிப்பணங்கள் வீணாகின்றதே? இந்த செயல்பாடுகள் நாட்டு நலன்களுக்கு உகந்ததா?
- கடையநல்லூர் மசூது


எல்லா ஊழல்களையும் அம்பலப்படுத்துவது பொதுவாக வரவேற்க வேண்டியதுதான். ஆனால் நமது நாட்டில் இதை வரவேற்க முடியவில்லை. காரணம் ஒரே ஒரு கட்சி கூட ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியாக இல்லை. சோசலிசம் கம்யூனிசம் பேசுவோரும் ஊழலுக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக சொல்லிக் கொள்ளும் ஹசாரே, கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைவரும் ஊழல்வாதிகள்தான். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய அளவுக்கு ஊழல் செய்ய வாய்ப்பும் அதிகாரமும் உள்ளதால் அவர்கள் அதிகம் ஊழல் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்களுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதால் குறைவாக ஊழல் செய்கிறார்கள்.

எனவே எந்தக் கட்சியும் ஊழல் பற்றி வாய் திறக்காமல் இருப்பதுதான் உத்தமம். பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியேயும் ஊழல் பற்றி எந்தக் கட்சி பேசினாலும் அதற்கான அருகதை இவர்களுக்கு இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் இதுபோன்ற கேள்விகள் உங்களுக்குத் தோன்றாது.

எகிப்தில் மீண்டும் போராட்டங்கள் தொடர்கிறதே? இது நியாயமான போராட்டமா? அல்லது அங்கு நடக்கும் இஸ்லாமிய ஆட்சியை [பெயரளவு என்றாலும்] அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வர திட்டமிடுகிறதா?
இல்யாஸ், லண்டன்

இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம்; சர்வாதிகார ஆட்சியை ஒழிக்கப் போகிறோம் என்று கூப்பாடு போட்டு வந்தனர் இக்வான்கள் எனும் அமைப்பினர். ஆனால் இவர்கள் பல ஆண்டுகளாக எத்தனை வன்முறை வெறியாட்டம் போட்டும் ஆட்சிக்கு வர இயலவில்லை. ஆனால் பொதுமக்கள் நடத்திய புரட்சியின் காரணமாக சர்வாதிகார ஆட்சி செய்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தி இக்வான்கள் கையில் ஆட்சி வந்தது.

ஆனால் ஆட்சி கைக்கு வந்த பின்னர் எல்லா அதிகாரமும் தனக்கே என்று சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளார் அதிபர் முர்சி.

இதில் நமக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஆட்சி பதவி என்பதைக் குறிக்கோளாக கொண்ட யாராக இருந்தாலும் அவர்கள் ஒருக்காலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முடியாது. சொல்லப்போனால் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் இஸ்லாத்தையே கை கழுவி விடுவார்கள் என்று நாம் பல வருடங்களாகச் சொல்லி வருகிறோம். நமது நாட்டில் இஸ்லாமிய ஆட்சி கோஷம் போட்டவர்களும் இதை நிரூபித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு இந்த நச்சுக் கருத்தை விதைத்த இக்வான்களும் இதை நிரூபித்து வருகின்றனர்.

நாம் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க கூடியவர்களாக மக்களை மாற்றப் பாடுபட வேண்டும். அவ்வாறு உருவான நன்மக்கள் கையில் ஆட்சியை அல்லாஹ் வழங்கினால் அதுதான் இஸ்லாமிய ஆட்சியாக இருக்கும்.

இஸ்லாத்திற்கு எதிரான படம் எடுத்ததற்காக படம் எடுத்தவர்களுக்கு எகிப்து - கெய்ரோ நீதி மன்றம் அளித்த மரண தண்டனை சரியா?
- இல்யாஸ், லண்டன்


பொதுவாக எந்த நாட்டு நீதிமன்றமாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ள சட்டத்தின்படியே தீர்ப்பு அளிப்பது வழக்கம். (நமது நாட்டில் மூன்று கிறுக்கன்கள் பாபர் மஸ்ஜித் பற்றி அளித்த தீர்ப்புபோல் சில விதி விலக்குகளும் உள்ளன)

எகிப்து நாட்டு சட்டப்படி புனிதர்களாக மதிக்கப்படுபவரின் மீது அவதூறு கூறி அதனால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படக் காரணமாக இருப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம் என்று சட்டம் இருப்பதால்தான் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதற்கும் இக்வான்கள் ஆட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப் போனால் எகிப்து மக்களை விட நீதித் துறையினர்தான் முர்சிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பைக் காட்டி வருகின்றார்கள்.

சட்டத்தையும், முஸ்லிம்களின் உணர்வையும் கருத்தில் கொண்டு அந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் எகிப்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கலகம் கொலையைவிடக் கொடியது என்ற (2:119) இறை வசனத்தின் அடிப்படையில் இதுபோன்ற சமூகவிரோதிகளுக்கு மரணதண்டனை தான் சரியான தீர்ப்பாகும்.
துருப்பிடிச்ச துப்பாக்கிக்கு எதிராக மூன்று மடையன்களை முற்றுகையிடும் போராட்டம் என்ன ஆனது?
- கடையநல்லூர் மசூது


இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 01.12.12 அன்று வெளியிட்ட அறிக்கையே உங்களின் கேள்விக்கான பதிலாகும்.
 
பத்திரிகை அறிக்கை

தீபாவளியன்று திரைக்கு வந்த துப்பாக்கி என்ற திரைப்படம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தவரையும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து தயாரிக்கப்பட்டிருந்ததை தாங்கள் அறிவீர்கள். முஸ்லிம்களின் எதிர்ப்புக்குப் பிறகு, அவர்களை ஏமாற்றுவதற்காக சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரும் அது கண்துடைப்பாகவே உள்ளது.

நீக்கிவிட்டு வெளியிட்ட படம் அதே கருத்தை கொஞ்சமும் குறையாமல் சொல்வதாக பல சகோதரர்கள் கொந்தளித்துப் போய் எங்களது அமைப்பைத் தொடர்பு கொண்டு தங்களது மனக்கொதிப்பை பதிவு செய்து வருகிறார்கள். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக இப்போதும் அந்தப் படம் சித்தரித்துள்ளதாகக் கூறி அந்தக் காட்சிகளையும் விளக்கினார்கள். 

எனவே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக திட்டமிட்டு சித்தரித்த நடிகர் விஜய், அதன் இயக்குனர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகிய மூவரும் எந்தப் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், அவர்களை முற்றுகையிட்டு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அவர்களைக் காணும் இடங்களில் எல்லாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் முற்றுகையிடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ
(பொதுச் செயலாளர்)

துப்பாக்கித் திரைப்படத்தில் ஆட்சேபமான காட்சிகளை நீக்கிவிட்டதாகக் கூறி, இஸ்லாமியத் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி பாராட்டியுள்ளார்களே? ஆனால் பெரும்பாலான காட்சிகள் அப்படியே படத்தில் உள்ளதே? இந்தச் சந்திப்பு எதனைக் காட்டுகின்றது?

கடையநல்லூர் மசூது


உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். தன்னலம் கருதாது உழைக்க வேண்டும். பதவிக்காகவும், புகழுக்காகவும் அலையக் கூடாது என்ற கொள்கை இல்லாமல் எத்தனை இயக்கங்கள் ஒன்று சேர்ந்தாலும் அதனால் சமுதாயத்துக்கு கேடுகள்தான் ஏற்படும்.

சமுதாயத்துக்கு எந்த நன்மையும் ஏற்படாது. முதல்வரை சந்திப்பது என்பதே பெரும் பாக்கியம் என்று கருதும்போது சமுதாயத்தை தீவிரவாதிகளாக சித்தரிப்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுவது எதிர்பார்த்த ஒன்றுதான்.

மீடியாக்களில் இவர்களைப் பற்றி ஒரு நாள் செய்தி வரும். ஆனால் இவர்களின் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இவர்களின் முடிவால் வேதனையிலும் விரக்தியிலும் உள்ளனர் என்பதைக் கூட இவர்கள் உணரவில்லை. இப்படித்தான் தங்கள் அடித்தளத்தை தாங்களே தகர்த்து வருகிறார்கள்.

Published on: December 17, 2012, 3:15 PM Views: 571

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top