ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?

அப்துர் ரஹ்மான், சையது அபுதாஹிர் மற்றும் பலர்...

ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகக் கருத்து சொல்பவர்களும், ஆதரவாகக் கருத்து சொல்பவர்களும் எல்லை மீறி உண்மைகளை மறைத்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க October 18, 2014, 1:20 PM

பாலஸ்தீனின் ஹமாஸ் இயக்கம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு என்ன ?

கேள்வி 

பாலஸ்தீனின் ஹமாஸ் இயக்கம் பற்றி, டிஎன் டி ஜே வின் நிலைபாடு என்ன? அவர்கள் செய்வது இஸ்லாத்தின் பார்வையில் சரியா?

ஜமீன், கடையநல்லூர்

பதில்

பாலஸ்தீனத்தில் நடக்கும் போராட்டங்களுக்கும் மற்ற முஸ்லிம் நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கும் முக்கியமான வித்தியாசமுள்ளது. 

இஸ்ரேல் என்ற நாடு முழுவதும் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமானது. பிரிட்டனும் அமெரிக்காவும் தங்களின் அதிகார பலத்தைப் பயன்படுத்தி உலகின் பல பகுதிகளில் சிதறிக்கிடந்த யூதர்களை பாலஸ்தீன் மண்ணில் குடியமர்த்திஇஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. 

இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. சில ஆண்டுகளாகத் தான்  இஸ்ரேல் நாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி பாலஸ்தீனர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறிய பகுதியையும் அவ்வப்போது ஆக்ரமிப்பு செய்து தனது எல்லையை நாளுக்கு நாள் சட்ட விரோதமாக இஸ்ரேல் அதிகமாக்கி வருகிறது.

ஒரு முஸ்லிம் தனது சொத்தைக் காப்பதற்காக போராடி உயிர் நீத்தால் அவர் உயிர் தியாகி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். 

பார்க்க : புகாரி 2480

இந்த வகையில் அந்நியர்களான இஸ்ரேலியர்கள் தங்கள் சொத்தை அபகரித்துள்ளார்கள் என்பதற்காக எதிர்த்துப் போராடும் உரிமை மார்க்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் கும்பலுடனும், ஜிஹாத் என்ற பெயரில் பள்ளிவாசல்களில் கூட குண்டு வைக்கும் பயங்கரவாதிகளுடனும் இவர்களை ஒப்பிட முடியாது. 

இவர்கள் தங்களுக்குச் சொந்தமான சொத்தை மீட்கவும், எஞ்சியதைக் தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகிறார்கள்.

அதே நேரத்தில் 8:60 வசனத்தில் அல்லாஹ் வழிகாட்டுவது போல் போர் செய்வதற்கு உரிய பலத்தை உரிய முறையில் திரட்டிக் கொண்டார்களா? என்பது தெரியவில்லை.

பாலஸ்தீனத்தில் உலக மீடியாக்கள் செய்திகளைத் திரட்டித் தருவதால் பாலஸ்தீனர்களுக்கு ஏற்படும் இழப்புகள் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இஸ்ரேலில் எல்லா மீடியாக்களும் வெளியேற்றப்பட்டு விட்டன. இஸ்ரேல் அரசு கொடுக்கும் தகவல் தவிர வேறு எதுவும் உலகுக்குத் தெரியவில்லை.

அதிகமான இழப்புகள் ஏற்பட்டாலும் அதை ஒப்புக் கொள்ளக் கூடாது என்பது தான் தம்மைப் பலசாலிகளாக காட்டிக் கொள்ளும் நாடுகளின் கொள்கையாக உள்ளது.

தங்களுக்குச் சேதம் ஏற்பட்டதை ஒப்புக் கொண்டால் இமேஜ் சரிந்து விடும். உள்நாட்டிலும் கொந்தளிப்பு ஏற்படும். ராணுவத்தின் மனவலிமை பாதிக்கப்படும் என்பத்ற்காக இந்த வழியை பலசாலிகளாக பொய்த்தோற்றம் காட்டும் நாடுகள் கடைப்பிடிக்கின்றன.

ஆப்கானிலும் ஈராக்கிலும் பல்லாயிரம் அமெரிக்க ராணுவத்தினருக்கு சமாதி கட்டப்பட்டாலும் அதை இன்று வரை அமெரிக்கா ஒப்புக் கொள்ளவில்லை. சில ஆயிரம் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை  பத்து ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அமெரிக்கா சொல்ல ஆரம்பித்து உள்ளது. 

ஈராக்கிலும், ஆப்கனிலும் மீண்டும் தலையிட அமெரிக்கா பயந்து நடுங்குவதற்கு வாங்கிய பலத்த அடிதான் காரணம்.

ஹமாஸ் இயக்கத்தினர் 1500 ராக்கெட் வீசினார்கள் ஆனால் இஸ்ரேலில் ஒருவர் கூட சாகவில்லை என்று ஆரம்ப பத்து நாட்களில் சொல்லி வந்தார்கள். கடுகளவு மூளையுள்ளவனும் இதை நம்ப மாட்டான். 

பின்னர் 53 ராணுவ வீரர்கள் கொல்லப்படதாக ஒப்புக் கொண்டு செய்திகள் வெளியிட்டனர். அதன் பின்னரும் அன்றாடம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக சொல்லிக் கொண்டாலும் 53 ஐ தாண்டாத அதிசயம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

20 ஆம் தேதி 53 என்றார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் அவர்கள் சொன்ன எண்ணிக்கையைக் கூட்டினால் 60 வீரர்கள் செத்துள்ளனர். 53ஐ சேர்த்து113 என்றாவது கூற வேண்டும். இஸ்ரேலும் இதுவரை 53 உடன் 60 ஐ கூட்டவில்லை.

முஸ்லிம் வெறுப்பின் காரணமாக இஸ்ரேலை ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்களுக்கும் கூட்டல் கணக்குத் தெரியவில்லை.

ஏற்கனவே 86 ஆயிரம் பேர் போரில் குதித்துள்ளதாக இஸ்ரேல் அரசு சொன்னது. அதுவும் போதாதென்று மேலும் 16 ஆயிரம் பேர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் முழு ராணுவ பலமே இதுதான். முழு ராணுவத்தையும் இறக்கி விட்டுள்ளது, அடி பலமாக விழுந்துள்ளது என்பதற்கு போதிய ஆதாரமாக உள்ளது.

ஆனாலும் இன்னும் கவனத்துடன் பொது மக்களை முற்றிலும் பாதுகாப்பான இடங்களுக்கு அணுப்புவதில் ஹமாஸ் இயக்கம் வெற்றி கண்டு இருந்தால் சேதம் இவ்வளவு இருக்காது.

நம்முடைய க்ணக்குப் படி குறைந்தது 500 இஸ்ரேல் ராணுவ வீரர்களாவது கொல்லப்பட்டு இருக்கலாம் என்றே கருத முடிகின்றது.

போர் முடிந்து அமைதி ஏற்பட்ட பின்னர் தான் உண்மை நிலவரம் தெரியும்.

இஸ்ரேலுக்கு அல்லாஹ் அழிவைத் தர வேண்டும் எல்லா முஸ்லிம்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்று ஆதரவு வைக்கிறோம்.

ஹமாஸ் இயக்கத்தின் மார்க்க ரீதியான கொள்கையில் நமக்கு உடன்பாடு இல்லை. தவறான கொள்கையில் உள்ளவர்களும், முஸ்லிமல்லாதவர்களும் தங்களின் உரிமைக்குப் போரிட்டால் நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காகவே நாம் ஆதரவுக்கரம் நீட்டுகிறோம்.  

August 3, 2014, 10:40 PM

இஸ்ரேல் தயாரிப்புகளை புறக்கணிப்பது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்யாதது ஏன் ?

கேள்வி

இஸ்ரேல் தயாரிக்கும்  பொருட்களை நாம் வாங்காமல் இருப்பது, இஸ்ரேலைப் பாதிக்குமா? ஆம் என்றால் இது குறித்து  தவ்ஹீத் ஜமாஅத் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை? இதை மும்பையில் ஒர் போராட்ட. யுக்தியாக கையிலெடுத்திருப்பதாக 29.07.14 அன்று The Hindu நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டது. Facebook இலும் இது பரவலாகப் பேசப்படுகிறது!

அஷ்ஃபாக் அஹமது
பண்டாரவாடை-614204

பதில்

நாம் அமெரிக்காவுக்கு எதிராக இது போன்ற நிலைபாட்டை பல முறை எடுத்துள்ளோம்.

இது போல் எடுத்த நிலைபாடுகளை அனைத்து முஸ்லிம்களும் அனைத்து இயக்கங்களும் கையில் எடுக்கவில்லை. 

இந்த நிலைபாட்டை ஏற்றுக் கொண்டவர்கள் கூட ஓரிரு மாதங்களில் மாறிவிடுகிறார்கள்.

குளிர் பானங்களில் மட்டும் சிலர் அமெரிக்கத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கிறார்கள். பிரிட்டன் தயாரிப்புகளைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் சோப்பு, பேஸ்ட் உள்ளிட்ட தொன்னுறு சதவிதம் அமெரிக்க பிரிட்டன் பொருட்களைத் தான் முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றனர்.

99 விழுக்காடு கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் தான் பயன்பாட்டில் உள்ளது. அது அமெரிக்க தயாரிப்பு தான். 

புறக்கணிப்பதாகச் சொல்லும் அறிவிப்பு எதிரிகளுக்கு கோடியில் ஒரு பாதிப்பைக் கூட ஏற்படுத்தவில்லை என்பது தெரியும் போது இன்னும் அதிகமாக முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

அமெரிக்க பொருட்களைப் புறக்கணிக்கும் கொள்கை வீரியமாக இருந்த நேரத்தில் அமெரிக்க அதிகாரிகளை அழைத்து பீஸ் எனும் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் தமுமுக தொண்டர்களை வாலண்டியர்களாக அனுப்பியதை நான் கண்டித்தது அந்த இயக்கத்தில் நான் வெளியேறும் நிலைக்குத் தூண்டிய ஆரம்ப நிகழ்ச்சியாக இருந்தது.

முஸ்லிம் லீக் தலைவரின் மகள் பாத்திமா முசப்பர் அமெரிக்க அதிகாரிகளை வைத்து இப்தார் நிகழ்ச்சி நடத்தினார். 

அதுவும் ஆப்கனில் முஸ்லிம்கள் மீது கொத்துக் குண்டுகளைப் போட்டு பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்த போது இந்த இரு நிகழ்ச்சிகளும் நடந்தன.

முஸ்லிம்கள் நடத்தும் மார்க்க மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அக்வாபீனா குடிபானமாக வைக்கப்பட்டது. கொஞ்சம் உணர்வு உள்ளவர்கள் லேபிளைக் கிழித்து விட்டு அதே தண்ணீரை வாங்கி வைத்தனர்.

இன்னும் இதுபோல் பல கசப்பான நிகழ்வுகள் உள்ளன.

எனவே தான்

  • சில நாட்கள் மட்டும்
  • சில பொருட்களை மட்டும்
  • சிலர் மட்டும் புறக்கணிக்கும் 

இந்தப் போராட்டம் வெற்றியடையவில்லை என்பதை அறிந்து கொண்டோம்.

எனவே இது போன்ற அறிவிப்புகள் செய்வதில் நமக்கு தயக்கம் உள்ளது.

ஆனால் இவ்வாறு புறக்கணிப்பவர்களையும் புறக்கணிக்க பிரச்சாரம் செய்வோரையும் நாம் குறை கூற மாட்டோம்.

August 3, 2014, 10:37 PM

சூனியக்காரனுக்கு விட்ட சவால் விளம்பரம் தேடுவதற்கு என்று கூறுகின்றார்களே ?

கேள்வி

சூனியக்காரனுக்கு விட்ட சவால் விளம்பரம் தேடுவதற்காக என்று சிலர் பேசுகிறார்களே?
சர்தார், மதுரை

பதில்

அது உண்மைதான். சூனியத்துக்கு எந்த ஆற்றலும் இல்லை என்ற கொள்கையை விளம்பரப்படுத்துவதற்குத் தான் இந்த சவால். சூனியத்துக்குச் சாவு மணி அடிக்கப்படும் என்பதற்காகவே இந்த விளம்பரம்.

எனக்கு விளம்பரம் தேடுவதற்காக என்ற கருத்தில் சொன்னால் அவர்கள் அவர்கள் வேற்று கிரகத்தில் இருந்து இப்போதுதான் வந்து இறங்கிய ஜீவன்களாக இருக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் மக்கள் என்னை நல்லவனாகவோ, கெட்டவனாகவோ அறிந்து வைத்துள்ளனர்.

முஸ்லிமல்லாத மக்களும், முக்கியப் பிரமுகர்களும் என்னை அறிந்து வைத்துள்ளனர். இந்த சவால் மூலம் என்னை இப்போது தான் அறிந்து கொள்வார்கள் என்ற அளவுக்கு இவர்களின் பொது அறிவு இருக்கிறது.

மேலும் விளம்பரம் தேடுவதற்காக தனியாக தலையில் முக்காடு போட்டு தனித் தோற்றத்துடன் தன்னைக் காட்டிக் கொண்டு மக்கள் தன்னை மதிக்க வேண்டும் என்று நடப்பவர்களை முதல்தர அயோக்கியர்க்ள் என்று நான் பிரச்சாரம் செய்கிறேன். மற்றவர்களைப் போல் இல்லாமல் தனி உடை தனி நடை என்று நடிக்கும் அனைவரும் அயோக்கியர்கள் தான் என்று கூறி வருகிறேன். 

நான் சாதாரண மக்களைப் போன்றவன் அல்ல. உங்களை விட மேலானவன் என்று காட்டிக் கொள்ளுபவன் விளம்பரம் தேடுபவனா? எல்லா மக்களையும் போல் தான் மதகுருமார்களும் நடக்க வேண்டும் என்று சொல்பவன் விளம்பரம் தேடுபவனா?

August 3, 2014, 10:35 PM

சூனியம் ஒரு காலத்தில் இருந்து இப்போது இல்லை என்று சிலர் கூறுகிறார்களே?

கேள்வி

சூனியம் ஒரு காலத்தில் இருந்து இப்போது இல்லை என்று சிலர் கூறுகிறார்களே? இது சரியா?

மசூது கடையநல்லூர்

பதில்

அவ்வாறு சொல்லும் சிலர் இதற்கு ஆதாரம் காட்டினார்களா? எனக்குப் பின் ஆயிரம் ஆண்டுகளுக்குச் சூனியம் இருக்கும். அதன் பின் இருக்காது என்று நபிகள் நாயகம் சொன்னார்களா? இது போன்ற ஆதாரம் உண்டா எனக் கேளுங்கள்.

எத்தனை ஆண்டுகள் வரை சூனியம் இருந்தது? எந்த ஆண்டு முதல் அது இல்லாமல் போனது? அதற்கான ஆதாரம் என்ன? எனக் கேளுங்கள்.

இப்படி ஆதாரம் கூறாமல் அவராக வாய்க்கு வந்தபடி விட்டு அடித்தால் அவரைக் கோமாளியாக கருதிக் கொள்ளுங்கள். வரும் ஆனால் வராது என்ற அடிப்படையில் கோமாளிகள் தான் பேசுவார்கள்.

August 3, 2014, 10:32 PM

சூனியம் என்ற பெயரில் நீங்கள் பந்தயம் கட்டியுள்ளது சரியா ?

கேள்வி

இஸ்லாத்தில் பந்தயம் சூதாட்டம் என்று கூறி தடுக்கப்பட்டுள்ள போது சூனியக்காரனுடன் பந்தயம் கட்டி ஐம்பது லட்சம் தருவதாகக் கூறலாமா? இது சூதாட்டம் இல்லையா?

திவான் ராஜா, கிருஷ்னகிரி

பதில்

சூதாட்டம் என்றால் என்ன என்பதை அறியாமல் இப்படியும் கேள்வி எழுப்புகிறார்கள். இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற தலைப்பில் நான் ஒரு மாதம் ஆற்றிய தொடர் உரையில் சூதாட்டம் என்றால் என்ன என்று விளக்கியுள்ளேன். அதை நூலாகவும் வெளியிட்டுள்ளோம். அதிலும் சூது என்றால் என்ன என்று விளக்கியுள்ளோம்.

இஸ்லாமியப் பொருளாதாரம் என்ற அந்த நூலில் சூது பற்றி நாம் விளக்கியுள்ளதோ இந்தக் கேள்விக்கு போதுமான பதிலாகும்.

திருக்குர்ஆனில் சூதாட்டத்தை அல்லாஹ் தடை செய்துள்ளான். சூதாட்டம் ஒரு தீயசெயல் என்பதை அதிகமான மக்கள் அறிந்து வைத்துள்ளனர். முஸ்லிமல்லாத மக்களும்கூட சூதாட்டம் ஒரு பாவச்செயல் என்று நம்புகின்றனர். ஆனால் சூதாட்டம் என்றால் என்ன என்பது குறித்து சரியான விளக்கம் அவர்களிடம் இல்லை.

தாயக்கட்டை, சீட்டாட்டம் ஆகியவைதான் சூதாட்டம் என்ற அளவில்தான் சூதாட்டம் பற்றி மக்களின் அறிவு அமைந்துள்ளது. குறிப்பிட்ட விளையாட்டுகள்தான் சூது என்று கருதுவது அறியாமையாகும்.

சூது என்றால் என்ன? 

சிலர் கூட்டு சேர்ந்து தலைக்கு இவ்வளவு என்று பணத்தைப் போட்டு குறிப்பிட்ட விளையாட்டில் யார் வெல்கிறார்களோ அவர்கள் அனைவரின் பணத்தையும் எடுத்துக் கொள்வதுதான் சூதாட்டமாகும்.

இந்த அம்சம் எந்த விளையாட்டில் இருந்தாலும் அது சூதாட்டத்தில் சேரும். 

உதாரணமாக பத்துப்பேர் தலைக்கு நூறு ரூபாய் கட்டி ஓட்டப்பந்தயம் நடத்துகின்றனர். அதில் ஜெயிப்பவர் அனைவரது பணத்தையும் எடுத்துக் கொண்டால் அது சூதாட்டத்தில் சேரும். 

பணம் வைக்காமல் சீட்டாடினால் அது வீணான காரியம் என்பதற்காக கூடாது என்று கூறலாமே தவிர அது சூதாட்டமாகாது. ஏனெனில் இங்கே எந்தப் பணப் பரிவர்த்தனையும் இல்லை. 

மற்றவர்கள் ஆடும் ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதற்காகப் பணம் கட்டினால் கூட அதுவும் சூதாட்டத்தில் சேரும்.

சூதாட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட விளையாட்டு அல்ல. 

எது சூதாட்டமாகும் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பரிசளிப்பது சூதாட்டத்தில் சேராது. குறிப்பிட்ட விளையாட்டில் வெற்றி பெற்றவருக்கு பத்தாயிரம் ரூபாய் தருவேன் என்று ஒருவர் அறிவிக்கிறார். விளையாடுபவர் இதில் எந்த முதலீடும் செய்யவில்லை. ஒருவருக்குப் பரிசு கொடுத்தால் போட்டியில் உள்ள மற்றவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை. போட்டியில் இல்லாத ஒருவர் தனது பணத்தைப் பரிசாக அளிப்பதால் இதில் பணத்தைப் போட்டு பணத்தை எடுத்தல் இல்லை. அப்படி இருந்தால் தான் அது சூதாட்டமாகும். 

எனவே பரிசுகள் பெறுவதும் வாங்குவதும் சூதாட்டமாகாது.

அது போல் தாயக்கட்டையை உருட்டி டைமன்ட் விழுந்தால் உன் பணம் எனக்கு. கிளாவர் விழுந்தால் என் பணம் உனக்கு என்ற அடிப்படையில் இருவரும் பணத்தை வைத்து வென்றவர் எடுத்துக் கொள்வதால் இதுவும் சூதாகும்.

ஒருவரின் பணத்தை நாம் எடுப்பது என்றால் வியாபாரத்தின் மூலம் எடுக்கலாம். அன்பளிப்பு என்ற வகையில் எடுக்கலாம். வாரிசு முறையில் எடுக்கலாம். உழைத்து ஊதியமாக எடுக்கலாம். ஆனால் ஒருவன் ஒரு விளையாட்டிலோ குலுக்கலிலோ வெல்வதால் அடுத்தவனின் பொருளை எடுப்பதில் ஒரு நியாயமும் இல்லை. இதில் தோற்றவன் தன்னுடைய பணத்தை எந்தப் பிரதிபலனையும் பெறாமல் இழப்பதால் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. 

இன்னொரு சூது இருக்கின்றது. 10 பொருட்களை வைத்திருப்பார்கள். வை ராஜா வை என்று மக்களை கூவி அழைப்பார்கள். வட்டமாக சுற்றக்கூடிய ஒன்றை வைத்திருப்பார்கள். அதில் 1 ல் நாம் வைப்போம். அது சுற்றி வந்து அந்த 1 ல் நின்றுவிட்டால் நமக்கு அந்த பொருள் கிடைக்கும். 7 ல் நின்றால் கிடைக்காது. இதுவும் சூதில் ஒரு வகை. 

இது போல் அதிர்ஷ்டத்தை வைத்து ஒருவர் பொருளை மற்றவர் அடைவதும், ஏதெனும் ஒரு துறையில் ஒருவருக்கு இருக்கும் திறமை அடிப்படையில் ஒருவர் பொருளை மற்றவர் அடைவதும் சூதாட்டத்தில் அடங்கும்.

இப்படி நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.

சூனியக்காரன் இருபத்தைந்து லட்சம் போட்டு நான் இருபத்தைந்து லட்சம் போட்டு நீஜெயித்தால் ஐம்பது லட்சம் உனக்கு; நான் ஜெயித்தால் எனக்கு என்று கூறினால் தான் அது சூதாட்டம். அவன் ஜெயித்தால் நான் ஐம்பது லட்சம் கொடுப்பேன் என்பது பரிசு என்பதில் சேரும். சூதாட்டத்தில் சேராது.

August 3, 2014, 10:31 PM

இறைவன் நாடினால் சூனியம் செய்வான் என்று கூறுவது கூற்றமா ?

கேள்வி

சூனியக்காரன் சுயமாக சூனியம் செய்வான் என்று நாங்கள் சொல்லவில்லை. அல்லாஹ் நாடினால் அவன் செய்வான் என்றுதான் சொல்கிறோம். இது குற்றமா? என்று கேட்கிறார்கள். அல்லாஹ் நாடினால் செய்வான் என்று சொல்வது எப்படி குற்றமாகும்?

பி. அன்வர் பாட்சா, பெரியமேடு

பதில்

அல்லாஹ் எதைச் செய்வான்? எதைச் செய்ய மாட்டான் என்று அல்லாஹ்வால் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டு விட்டது. 

அல்லாஹ் எதைச் செய்வான் என்று சொல்லப்பட்டுள்ளதோ அந்த விஷயத்தில் தான் அல்லாஹ் நாடினால் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். அல்லாஹ் எதைச் செய்யமாட்டான் என்று சொல்லப்பட்டுள்ளதோ அந்த விஷயங்களில் அல்லாஹ் நாடினால் என்று சேர்த்துச் சொன்னால் அதுவும் இறை மறுப்பாகும்.

அல்லாஹ் நாடினால் செத்து போவான் என்று சொல்லி விட்டு நான் செத்துப் போவான் என்றா சொன்னேன்? (நவூது பில்லாஹ்) அல்லாஹ் நாடினால் தான் என்று சேர்த்துச் சொன்னேன் என்று சொன்னால் அது சரியான நம்பிக்கை என்று கூறுவார்களா?

இந்த வாதத்தைப் பார்க்கும் போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

அல்லாஹ் நாடினால் சாப்பிடுவான் அல்லாஹ் நாடினால் தூங்குவான் என்று சொன்னால் இவர்கள் ஒப்புக் கொள்வார்களா? 

இதை அல்லாஹ் நாட மாட்டான் என்று தெளிவுபடுத்திய பின் அல்லாஹ் நாடினால் செய்வான் என்று ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா?

தன்னைப் போல் செயல்படும் தன்மையை அல்லாஹ் யாருக்கும் வழங்க மாட்டான் என்று நம்புவதுதான் ஈமான்.

எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

"சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.  ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.  அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.
திருக்குர்ஆன் 25:2

அல்லாஹ் நாடினால் சிலைகள் மூலம் காரியம் நடக்கும் என்று கூட இந்த அறிவீனர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

திருக்குர்ஆன் 16:71

அறிவற்ற மூடர்களே உங்களின் சின்ன அதிகாரத்தைக் கூட நீங்கள் இன்னொருவனுக்குக் கொடுக்காத போது மாபெரும் ஆற்றல் பெற்ற நான் என்னைப் போல் செயல்படும் அதிகாரத்தை எப்படி சூனியக்காரனுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுக்குச் சொல்வது போல் இந்த வசனம் அமைந்துள்ளது.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

August 3, 2014, 10:28 PM

50 லட்சத்தை உங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டியது தானே ஏன் தவ்ஹீத் ஜமாஅத் தர வேண்டும் ?

கேள்வி

சூனியக்காரனுடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சூனியக்காரன் சூனியம் செய்து உங்களைத் தற்கொலை செய்ய வைத்தால் தவ்ஹீத் ஜமாஅத் 50 லட்சம் ரூபாய் தரும் என்று கூறியுள்ளீர்கள். உங்கள் சொந்தப் பணத்தில் கொடுக்க வேண்டியது தானே என்று சிலர் கேட்கிறார்கள்.

முஹம்மது சரீப், கானத்தூர்

பதில்

சூனியக்காரனை அல்லாஹ்வாக்கி ஈமானை இழந்தவர்கள் இந்தக் கேள்வியின் மூலம் அதை மேலும் உறுதிப்படுத்துகிறார்கள். சூனியக்காரன் தனது சூனியத்தில் வென்று 50 லட்சம் வாங்கப் போகிறான் எனபதில் இவர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.

நடக்கவே நடக்காது என்ற விஷயத்தில் விடப்படும் அறைகூவலை எப்படி புரிந்து கொள்வது என்ற அறிவு இவர்களுக்கு இல்லை.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கிறது என்று கூறுவோருக்கு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மூலம் அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கச் சொல்கிறான்.

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 43:81

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருந்தால் நான் முதலில் வணங்குவேன் என்று கூறினால் அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருக்கக்கூடும் என்றும் அந்தப் பிள்ளையை நபிகள் நாயகம் வணங்குவார்கள் என்றும் மூடன் தான் புரிந்து கொள்வான்.

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இல்லை என்பதை அதிக அழுத்தத்துடன் சொல்வதற்காகவே இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று அறிவுடையோரும் அல்லாஹ்வை நம்பியவர்களும் புரிந்து கொள்வார்கள்.

சூனியக்காரன் வெல்லப்போவதும் இல்லை. நாம் 50 லட்சம் கொடுக்கப் போவதும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லவே இதைக் கூறுகிறோம். இதை ஒப்பந்த வீடியோவில் கூட தெளிவு படுத்திவிட்டோம்.

என் பணத்தையே கொடுப்பதாகச் சொன்னாலும் சூனியக்காரன் நம்பிக்கைப்படி நான் செத்துவிட்ட பின் என்னிடம் அவன் வாங்க முடியாது. அதற்காகத் தான் தவ்ஹீத் ஜமாஅத் தரும் என்று சொல்லப்பட்டது.

என் பணத்தையும் நான் கொடுக்கும் நிலை ஏற்படாது. ஜமாஅத்தின் பணத்தையும் கொடுக்கும் நிலை ஏற்படாது. சூனியக்காரன் ஒருக்காலும் வெல்ல மாட்டான் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

"உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.

திருக்குர்ஆன் 10:77

"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)

திருக்குர்ஆன் 20:69

அல்லாஹ்வின் கூற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள் சூனியக்காரன் வெல்ல மாட்டான் என்றுதான் நம்புவார்கள். அதை இன்னும் அழுத்தமாகச் சொல்வதற்குத் தான் ஐம்பது லட்சம் தருவதாகச் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வின் இந்தக் கூற்றில் நம்பிக்கை இல்லாமல் சூனியக்காரன் வெல்வான் என்று நம்பி காஃபிராகிப் போனவர்கள் தான் ஐம்பது லட்சம் யாருடைய பணம் என்று கேட்பார்கள். சூனியக்காரனை அல்லாஹ்வாக்கியே தீருவது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது இந்தக் கேள்வியில் இருந்து இன்னும் உறுதியாகிறது.

August 3, 2014, 10:21 PM

ஷரியத் கோர்ட்டுகள் சட்டப்படி செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஷரியத் கோர்ட்டுகள் சட்டப்படி செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

கலீல் ரஹ்மான், சேலம்

ஷரியத் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்ற தீர்ப்பை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் ஒரு தீர்ப்பை அளிக்கும்போது அதைச் செயல்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிய நபரைக் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.

நீதிமன்றத்தால் ஒரு விவாகரத்து வழக்கில் கணவன், மனைவிக்கு மாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிப்பதற்கும், ஜமாஅத்துகளில் விவாகரத்து வழங்கும்போது மனைவிக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. 

நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு மீறப்பட்டால் மீறியவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஜமாஅத்களில் வழங்கப்படும் தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்தால் மறுப்பவர் மீது எந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது.

இந்தக் கருத்தில்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் இத்தீர்ப்பை அளிக்காவிட்டாலும் முஸ்லிம்களுக்கு இது தெரிந்த செய்திதான்.

முஸ்லிம்களுக்கு, சில விஷயங்களில் தனியாக சட்டம் நமது நாட்டில் உள்ளது என்றாலும் அதை நடைமுறைப் படுத்தும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கோ ஷரியத் நீதிமன்றங்களுக்கோ இல்லை. இந்த அடிப்படையில்தான் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

”இந்த தீர்ப்பினால் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனெனில் இத்தீர்ப்புக்கு முன்னரும் இதே நிலைதான் இருந்தது. எனவே இத்தீர்ப்புக்கு பின்னர் புதிதாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.”

மேலும் முஸ்லிம் ஜமாஅத்துகளில் அளிக்கப்படும் மார்க்கத் தீர்ப்பை அல்லாஹ்விற்குப் பயந்து இருதரப்பும் ஏற்றுக்கொள்வதுதான் பெரும்பாலும் நடைமுறையாக உள்ளது. இருதரப்பும் மார்க்கத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும்போது நீதிமன்றங்கள் அதில் தானாக தலையிட முடியாது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் இந்த நிலைதான் நீடிக்கும்.

ஆயிரத்தில் ஒருவர் இத்தீர்ப்பை ஏற்காமல் கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு இருக்கிறது. அதே நிலைதான் இனியும் இருக்கும்.

ஜமாஅத்துகளில் அளிக்கப்படும் மார்க்கத் தீர்ப்பை ஒருவர் ஏற்க மறுத்தால் அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க எந்த ஜமாஅத்தும் முன்வர மாட்டார்கள்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட ஜமாஅத்தில் என்.ஓ.சி எனும் தடையில்லா சான்றிதல் வாங்கி வந்தால்தான் திருமணம் செய்து வைப்பார்கள். பெண் கொடுக்கவும் எடுக்கவும் மக்கள் முன்வருவதும் இதனடிப்படையில்தான்.

அல்லாஹ்வின் அச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தில் இணைந்து வாழ முடியாது என்பதால் ஜமாஅத் தீர்ப்புகளை ஒருபோதும் மீற மாட்டார்கள். இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் இந்த நிலைதான் நீடிக்கும்.

ஜமாஅத்தின் தீர்ப்பு செல்லாது என்று நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துவிட்டால் சம்மந்தப்பட்டவருக்கு முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளவர்கள் பெண் கொடுக்க எடுக்க முன்வர மாட்டார்கள். இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

பொதுவாக மக்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு  அஞ்சுகிறார்கள்.
எத்தனையோ கொடுக்கல் வாங்கள் பிரச்சனைகளை நீதிமன்றத்துக்கு வெளியே பேசி சமரசமாக்கிக் கொள்கின்றனர். அரசு வங்கிகள் கூட கடனாளிகளிடம் சமரச மையம் மூலமாகவே தீர்வு காண முயல்கிறது. நீதிமன்றம் சென்றாலே கால விரையமும் பண விரையமும்தான் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முஸ்லிம்கள் குவியப்போவதில்லை.

எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்களில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகள் அவர்கள் பதவியை அனுபவித்து முடித்த பின்னர்தான் தீர்ப்புகள் அளிக்கப்படும். இதனால் பைசா         பிரயோஜனம்  இல்லை.

ஒரு சொத்து யாருடையது என்ற வழக்கின் இறுதித் தீர்ப்பு வழக்குக் தொடுத்தவனின் பேரன் காலத்தில்தான் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

சிவில் விவகாரங்களில் நீதிமன்றத்தை நாடுவதில்லை என்ற கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இத்தீர்ப்புக்கு பின்னரும் முஸ்லிம்கள் ஷரியத் கவுன்சில் அல்லது ஜமாஅத் சமரசம் போன்ற வழிகளைத்தான் தேர்வு செய்வார்கள்.

எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் பைசா பிரயோஜனம் இல்லாத தீர்ப்பாகத்தான் நமக்குத் தெரிகிறது.
 

July 16, 2014, 7:40 PM

பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட்டில் மக்களுக்கு நன்மை விழையுமா?

பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட்டில் மக்களுக்கு நன்மை விழையுமா?

ஹக்கீம், விருகம்பாக்கம்

எந்த பட்ஜெட்டினாலும் மக்களுக்கு எந்த நன்மையும் விளைந்ததில்லை. எனவே பட்ஜெட் பற்றி நாம் பெரிய முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை.

ஆனால் பா.ஜ.க எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்ததோ அதற்கு மாற்றமாக அதன் எல்லா செயல்பாடுகளும் உள்ளன.

பாகிஸ்தான் பிரதமருடன் கை குலுக்கலாமா என்று சவடால் பேசிய மோடி, பாகிஸ்தான் பிரதமருக்கு விருந்து படைக்கிறார்.

இலங்கை மீனவர்கள் பிரச்சனையில் ராஜபக்சேவுடன் காங்கிரஸ் இணக்கமாக இருப்பதாகச் சொன்ன மோடி, ராஜபக்சேவுக்கும் பட்டுக் கம்பளம், விரிக்கிறார்.

பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை முன் போலவே இருக்கிறது. தமிழக மீனவர்கள் முன் போலவே கைது செய்யப்படுகிறார்கள்.

பட்ஜெட்டுக்கு முன்னால் ரயில் கட்டணத்தை உயர்த்தலாமா என்று காங்கிரஸ் ஆட்சியில், பிரதமருக்கு கடிதம் எழுதிய மோடி, அதே வேலையை வெட்கமில்லாமல் செய்கிறார். ஏற்ற வேண்டிய கட்டணத்தை ஏற்றிவிட்டு பட்ஜெட்டில் கட்டணத்தை ஏற்றவில்லையென்று நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி. 

விலை உயர்வை விளாசித் தள்ளிவிட்டு ரயில் கட்டணத்தையும் சரக்கு கட்டணத்தையும்  உயர்த்தி அதனால் விலைவாசி மேலும் உயர பாதை அமைத்துள்ளார்.

பெட்ரோல் விலை மட்டுமின்றி, கியாஸ் விலை உட்பட அனைத்தும் பழைய நடைமுறைப்படி நள்ளிரவில் உயர்த்தப்பட்டுக்கொண்டே வருகின்றன.

காங்கிரஸ், தனியாருக்கு தாரை வார்க்கிறது என்று சொன்னவர், அதைவிட அதிகமாக  அனைத்தையும் தனியாருக்கும் அந்நிய நாட்டவருக்கும் தாரை வார்க்கும் வகையில் பட்ஜெட் தாயாரித்துள்ளார்.

காங்கிரஸை விட பாஜக பட்ஜெட், மிகவும் மோசம் என்பதுதான் பொது மக்களின் கருத்தாக உள்ளது. 
 

July 16, 2014, 7:36 PM

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ,எஸ். போராளிகள் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு என்ன?

ஈராக்   மற்றும்    சிரியாவில் ஐ.எஸ்.ஐ,எஸ். போராளிகள் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு என்ன?
 

அப்துர் ரஹ்மான், கோவை 

வெளிநாடுகளில் உள்ள இயக்கங்கள் பற்றி முழுமையான, உண்மையான செய்திகள் நமக்கு கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் உள்ள இயக்கங்கள் என்றால் அவர்களின் கொள்கை, கோட்பாடு, கடந்த கால செயல்பாடு, நாணயம், நேர்மை ஆகியவை குறித்து முழுமையாக நாம் அறிய இயலும், உடனடியாக கருத்தும் சொல்ல முடியும்.

வெளிநாடுகளில் செயல்படும் இயக்கங்கள் குறித்து நமக்கு உண்மையான, முழுமையான அறிவு இல்லை. ஷியாக்களின் ஆதிக்கத்துக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு செயல்படுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று நமக்குக் தெரியவில்லை. ஈரானில் ஏற்பட்ட ஷியா புரட்சியை இஸ்லாமிய புரட்சி என்று பாராட்டும் இயக்கத்தினர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தையும் அதே அளவு ஆதரித்து கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இதன் மர்மம் நமக்குப் புரியவில்லை. 

சன்னி பிரிவு என்றால் மத்ஹபுகளைச் சார்ந்தவர்களா? தர்கா வழிபாடுகளில் நம்பிக்கை உள்ளவர்களா? இதை எதிர்க்கும் ஸலபு பிரிவினரா? இவர்கள் அனைவரும் சன்னி என்றுதான் தம்மைக் கூறிக் கொள்கின்றனர்.

மேலும் அப்பாவிகள் மீதும் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதும் அப்பாவிகளைக் கொள்வதும் ஜிஹாத் என்று கூறுபவர்களா? அல்லது போரில் மட்டுமே எதிரிகளைக் கொள்ளக் கூடியவர்களா என்பதெல்லாம் ஆதாரத்துடன் நமக்குத் தெரியவில்லை.

மேலும் அவர்களைப் பற்றி கருத்துக் கூறும் தேவை எதுவும் நம்மிடத்தில் ஏற்படவில்லை. இதை அறிந்து, நாம் அவர்களுடன் சேர்ந்து போருக்கு போகப்போவதில்லை.

எனவே இந்நிலைமை முழுமையாகத் தெளிவாகும் வரை இது பற்றி எதுவும் கூறுவதில்லை என்பதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் இப்போதைய நிலை.
 

July 16, 2014, 7:32 PM

இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் ஏன் மற்ற நாட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதில்லை?

கேள்வி-
இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கு குரல் கொடுக்கும் இஸ்லாமிய அமைப்புகள், பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு ஏன் கண்டனங்கள் தெரிவிக்கவில்லை?

-கடையநல்லூர் மசூது

பதில்: நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். அதை ஏன் கண்டிக்கவில்லை என்பது மேலோட்டமான கேள்வியாகும்.
அங்கே தாக்கும் முஸ்லிம்களும் தாக்கப்படும் முஸ்லிம்களும் ஆயுதபாணிகளாக இருந்துகொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர்.
இருவருமே கண்டனத்துக்கு உரியவர்கள்.

ஒருவர் மட்டும் வரம்பு மீறுபவராகவும், மற்றவர் பாதிக்கப்பட்டவராகவும் இருந்தால் வரம்புமீறியவர்களைக் க்ண்டித்து போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்பதற்காகத்தான் போராட்டம் நடத்துகின்றோம்.

நீங்கள் சுட்டிக் காட்டும் நாடுகளிலும் சுட்டிக்காட்டாத நாடுகளிலும் முஸ்லிம்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஆயுதம் தூக்கும்போது நாம் யாரையும் ஆதரிக்க முடியாது. யாரையும் பாதிக்கப்பட்டவர்களாகச் சொல்ல முடியாது.

எனக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு இறைமறுப்பாளராகிட வேண்டாம் என்று இறுதிப் பேருரையில் நபிகள் நாயகம் செய்த இறுதி எச்சரிக்கையை இவர்கள் மீறியவர்களாவர்.

முஸ்லிம்கள் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ஆயுதம் தூக்கி ஒருவரை ஒருவர் கொலை செய்வார்கள். கொல்பவனும், கொல்லப்படுபவனும் நரகம் செல்வான் என்ற நபிமொழிப்படி இவர்களில் யாருக்கு ஆதரவாகவும் நாம் போராட முடியாது.

தொலைந்துபோகட்டும் என்ற நிலைபாட்டுக்குத்தான்  நாம் வரமுடியும்.

இலங்கையில் நடந்த தாக்குதல் இதுபோன்றதல்ல.

சிறுபான்மை முஸ்லிம்கள் சட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தி அதன் எதிரொலியாக தாக்கப்படவில்லை. 

பெரும்பான்மை என்ற திமிர் காரணமாகவும் சிறுபான்மை மக்கள் எப்போதும் எங்களுக்கு அஞ்சி எங்கள் உயர்வையும், இரண்டாந்தர குடிமக்கள் என்பதையும் ஒப்புக் கொண்டு நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதற்காக ஒரு காரணமும் இல்லாமல் தாக்கப்பட்டனர்.

ஆண்கள் அனைவரும் பள்ளிவாசலில் தஞ்சம் அடைந்தபோது பூட்டிக் கிடந்த கடைகளைத் தகர்த்தனர். பெண்கள் மட்டுமே இருக்கும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போன்று எந்த நாட்டில் எந்த சமூகத்துக்கு நேர்ந்தாலும் நாம் கண்டிப்போம்.

June 21, 2014, 2:56 PM

தமிழர்களுக்காக போராடாதவர்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் போராடுவது நியாயமா ?

கேள்வி :- இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களில் பங்கேற்காத தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்? என்று பரவலாக கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

இலங்கையிலே தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட பொழுது அனைத்து இயக்கங்களும் போராடிய பொழுது தமிழ் நாடு தௌஹீத் ஜமா அத் மௌனமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு இஸ்லாமியர்கள் என்றவுடன் போராடுவது சரியா? 

பதில்:- இலங்கைப் பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பட்டங்களின் தவ்ஹீத் ஜமாஅத் பங்கேற்கவில்லை என்பது உண்மைதான். அதற்கான காரணங்களைக் கூறுவதற்கு முன்னால் இப்படி கேள்விகேட்பவர்களை நோக்கி நாமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அனைத்திலும் தவ்ஹீத் ஜமாஅத் தவிர மற்ற எல்லா முஸ்லிம் இயக்கஙகளும் பங்கேற்றனர். மேற்கண்டவாறு கேள்வி எழுப்பும் அனைவரும் இதை அறிவார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் தவிர எல்லா முஸ்லிம் இயக்கங்களும்  இவர்களுடன் இணைந்து போராடியிருக்கும் போது இப்போது முஸ்லிம்கள் தாக்கப்படும் போது - தமிழ் கூறும் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது - இவர்கள் ஏன் களமிறங்கி போராடவில்லை?  முஸ்லிம்களுக்கு என்ன கொடுமை நடந்தாலும் முஸ்லிம்கள் தான் அதை எதிர்த்துப் போராட வேண்டும். மற்றவர்களுக்காக முஸ்லிம்கள் என்னதான் ஆதரவு கொடுத்தாலும் முஸ்லிம்கள் பிரச்சனை என்றால்  இவர்கள் ஆத்ரவு கொடுக்கமாட்டார்கள் என்பது என்ன நியாயம்?

முஸ்லிம்கள் அழிக்கப்படுவதில் உள்ளூற சந்தோஷம் காணும் மனப்பான்மை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைத்து இயக்கத்தவரிடமும், அறிவுஜீவிகளிடமும் உள்ளது என்பது இப்போது ஐயத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகி விட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் இவர்களுடன் பங்கேற்கவில்லை என்பதற்காக மற்றவர்கள் இவர்களுடன் இணைந்தும், தனியாகவும் நடத்திய போராட்டங்களுக்கு இவர்கள் செய்த நன்றிக் கடன் என்ன?

நமக்காக முஸ்லிம்களின் இரத்தம் துடித்ததே அதுபோல முஸ்லிம்கள் தாக்கப்படும் போது அதையும் நாம் கண்டிக்க வேண்டும் என்று ஏன் இவர்களால் நினைக்க முடியவில்லை? 

தனியாக போராட்டம் நடத்தும் அளவுக்கு விசாலமான இதயம் இவர்களுக்கு இல்லாவிட்டாலும் இவர்களோடு இணைந்து இவர்களுக்காக போராடிய முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய போராட்டங்களில் கூட இவர்கள் பங்கேற்கவில்லையே அது ஏன்?

தங்களின் அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் இவர்களுடன் இணையாததைச் சுட்டிக் காட்டுகின்றனர். முஸ்லிம்கள் தாக்கப்படும் போது அதில் உள்ளூற சந்தோஷப்படுகின்றனர். இவர்களின் இந்தக் கயமத்தனத்தை இவர்களுக்குகாக குரல் கொடுத்த முஸ்லிம் இயக்கங்கள் இப்போதாவது உணர வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டத்தில் நியாயம் இல்லை என்று கூறி மற்ற இயக்கத்தினர் நடத்திய போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் அளவுக்கு இவர்களின் தமிழுணர்வு உள்ளது.

இப்படி கேள்வி கேட்டதற்கு முன்னால் இவர்கள் தங்களிடம் மேற்கண்ட கேள்வியைக் கேட்டுக் கொள்ளட்டும்.

இலங்கைத் தமிழர்களின் தாக்கப்படுகிறார்கள் என்பதற்காக நடத்தப்பட்ட சிங்கள வெறியாட்டத்தைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் தவ்ஹீத் ஜமாஅத் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கும் அனைவருக்கும் அதற்கான விடை தெரியும்.

தவ்ஹீத் ஜமாஅத் தக்க காரணங்களை விளக்கிக் கூறியதை இவர்கள் அறிவார்கள். ஆனாலும் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை எதிர்க்கக் கூடாது என்று இவர்களின் மனசாட்சி (?)  இவர்களுக்குக் கட்டளையிடுகிறது. அதை நியாயப்படுத்தவே தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொள்ளாத போது நாங்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேள்வியை முன் வைக்கின்றனர்.

இந்தப் பிரச்சனையில் இவர்களிடம் சேராமல் ஒதுங்கிக்கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கனவே சொன்ன காரணங்களை இதற்கான பதிலாக தருகிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பே  இந்தக் காரணங்களை நாம் உணர்வு இதழிலும் ஆன்லைன்பீஜே இணையதளத்திலும் விளக்கியுள்ளோம். அதை அப்படியே எடுத்துக் காட்டுவதே இதற்கு போதுமான பதிலாகும்.

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல்!

இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரபாகரன் மகனான பச்சிளம் சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனைப் படுகொலை செய்துள்ளார். இந்த சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் கொலை செய்த ராஜபக்சேவை சர்வேதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகளுக்கு ஆதாரவாக பச்சைத் தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது கண்டிக்கத்தக்கதுதான். அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதைவிட பன்மடங்கு படுகொலைகளை செய்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அறிவிஜீவிகளது கண்களுக்கு கொலைகாரர்களாக ஏன் தெரியவில்லை என்பதுதான் நமது கேள்வி.

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் காத்தான்குடி என்ற ஊரில் தொழுது கொண்டிருக்கும்போது பள்ளிவாசலுக்குள் புகுந்து படுகொலை செய்த விடுதலைப்புலிகளின் தீவிரவாதச் செயல் பச்சைத்தமிழர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

இவர்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா?

யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களை 24மணி நேர கெடு விதித்து, கையில் ஐநூறு ரூபாய் மட்டும் வைத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி விரட்டி அடித்தார்களே! இது இந்த அறிவிஜீவிகள் கண்களுக்குத் தெரியவில்லையா?

வாழ்நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைத்த சொத்து பத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டு கோடீஸ்வரர்களாக இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீட்டை விட்டு, ஊரைவிட்டு வெளியேறி ஒரே நாளில் ஓட்டாண்டியாக மாறி நடுத்தெருவுக்கு வந்தார்களே! இத்தகைய நிலைக்கு முஸ்லிம்களை ஆளாக்கிய விடுதலைப்புலிகளின் கோர முகம் இந்த மனிதநேயம் பேசும் மகான்(?)களுக்கு விளங்கவில்லையா?

காத்தான்குடியில் பச்சிளம் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் பள்ளிவாசலுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற விடுதலைப்புலிகளின் மிருகவெறியாட்டம் யாருக்கும் தெரியவில்லையா?

திரிகோணமலை என்ற மாவட்டத்தில் மூதூர் என்ற பகுதியில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப்புலிகள் கட்டவிழ்த்துவிட்ட கொலை வெறித் தாக்குதல்களால் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கின்னியா, முல்லிப்பட்டிணம், கந்தலாய் போன்ற அகதி முகாம்களில் தஞ்சமடைந்த வரலாறு விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்குத் தெரியாதா?

கடந்த 2003ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்போது ஜப்பான், நார்வே ஆகிய நாடுகளின் தலையீட்டினால் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஏற்பாடானது. அந்த சமாதனப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களையும் இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தையாக அதை அமைக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் குறைந்தபட்ச கோரிக்கையைக்கூட இந்த விடுதலைப்புலிகள் நிராகரித்தார்கள் என்ற வரலாறு இவர்களுக்குத் தெரியாதா?

அதே 2003 ஆம் ஆண்டு இலங்கையில் புலிகளின் தலைமையிடமான கிளிநொச்சியில் பிரபாகரன் மற்றும் ரவூஃப் ஹக்கீமுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டியது தவறு என்று விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்த வாக்குறுதி அளித்தார்களே!” அவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டு முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த விடுதலைப் புலிகளின் துரோக வரலாற்றை மறைக்க முடியுமா? (இது குறித்த தனி பெட்டிச் செய்தியை கீழே காண்க!)

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கெல்லாம் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இது போன்ற கொடுமைகளை இந்தியாவில் நிகழ்த்துபவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று விமர்சிக்கும் அறிவுஜீவிகள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தனி அளவுகோல் வைத்திருப்பது ஏன்? என்பதுதான் நமது கேள்வி.

இது குறித்து கடந்த 17 : 27 உணர்வு இதழில், “விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் களமிறங்காதது ஏன்?” என்ற தலைப்பில் சகோதரர் பீஜே அவர்கள் அளித்த விளக்கத்தை வெளியிட்டிருந்தோம்.

அந்தச் செய்திக்கு பதில் சொல்ல திராணியில்லாத விடுதலைப்புலி ஆதரவாளர்களும், தங்களை அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில அரைவேக்காடுகளும் நம்மை விமர்சித்து பல அவதூறு பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவதூறு பரப்பும் அவதூறு பேர்வழிகளுக்கும், விடுதலைப்புலி ஆதாரவாளர்களுக்கும் நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். ராஜபக்சேவை விட மகாக்கொடிய அயோக்கியர்கள்தான் விடுதலைப்புலிகள் என்பதையும், அவர்கள் செய்த அட்டூழியங்களும், படுகொலைகளும் கொஞ்சநஞ்சமல்ல என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க நாம் தயாராக உள்ளோம். இவர்களுக்கு உண்மையிலேயே துணிவும், திராணியும் இருக்குமேயானால் நம்மை விவாதக்களத்தில் நேருக்குநேர் சந்தித்து விடுதலைப்புலிகள் அப்பாவிகள் என்பதை நிரூபிக்கட்டும்.

நம்முடன் அவர்கள் விவாதிக்க வருவார்களேயானால், அவர்களது முகத்திரையைக் கிழித்து இவர்கள் முஸ்லிம்களை எப்படியெல்லாம் கருவறுத்தார்கள் என்பதையும், இவர்களது மிருக வெறியாட்டங்களையும் ஆதாரப்பூர்வமாக தோலுரித்துக்காட்ட நாம் தயாராக உள்ளோம் என்று இவர்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அவர்கள் தாங்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் நம்முடன் பகிரங்க விவாதத்திற்கு வரட்டும்.

இன்னும் சில பெயர்தாங்கி முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் லட்டர்பேடு இயக்கங்களும் ஓட்டுப்பொறுக்க வேண்டும் என்ற ஆசையில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்களையும் பகிரங்க விவாதத்திற்கு நாம் அழைக்கின்றோம்.

வாயடைத்துப்போன புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கம் :

இப்போது நாம் வைத்துள்ள இந்த வாதங்களை இதற்கு முன்பாக புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் அவர்களிடம் நமது மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் புள்ளிவிபரங்களுடன் ஏற்கனவே சுட்டிக்காட்டினார்.

திரைப்பட இயக்குநர் அமீர் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் புலிகளின் ஆதரவாளர் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் அவர்களை அழைத்துக் கொண்டு பீஜே அவர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது, பீஜே அவர்கள் புலிகள் செய்த அட்டூழியங்களையும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளையும் புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டார்.

"முத்தரப்பு பேச்சுவார்த்தையை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு, இதற்கான அறிவிப்பை புலிகளின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இதுதான் வடக்கு-கிழக்கு முஸ்லிம்களுக்கு புலிகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்'' என்று பீஜே சொல்ல, புலிகள் செய்த அயோக்கியத்தனங்களுக்கு முட்டுக்கொடுக்க முடியாத சிவாஜிலிங்கம் பீஜே வைத்த வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல் அதை ஆமோதித்தார்.

இதனை ஆமோதித்த சிவாஜிலிங்கம், இதைப் பற்றி புலிகளின் தலைமையிடம் தான் வலியுறுத்தப் போவதாகவும், தமிழ் முஸ்லிம் உறவை பலப்படுத்தப்போவதாகவும் உறுதி தந்துவிட்டு சென்றார். 2008ஆம் ஆண்டு சென்றவர்தான் அத்துடன் நமது பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை எனும்போது இவர்கள் எத்தகையவர்கள் என்பதும், இவர்களது உண்மை முகமும் நமக்கு விளங்குகின்றதா இல்லையா?

இப்படி காரணங்களை விளக்கி கூறித்தான் புலிகளுக்கு ஆதரவான எந்த போராட்டத்தில் இருந்தும் தவ்ஹீத் ஜமாஅத் விலகி நிற்கிறது.

இலங்கையில் நடந்தது அப்பாவி தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் அல்ல ஆயுதம் தாங்கி அரசை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் தான்
பொதுமக்களைக் கேடயமாக புலிகள் பயன்படுத்தியதாலே பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். புலிகள் அழிக்கப்பட்டதில் சிங்கள அரசையும் சிங்கள மக்களை விடவும் புலிகளின் அராஜகக் கொடுமைகளை அணுபவித்த தமிழர்கள் அதிகம் சந்தோசப்பட்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போய் புலிகள் அழிவுக்குப் பின் அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றார்களா? முன்னர் சுதந்திரமாக இருந்தார்களா? என்று கேட்டுப் பாருங்கள் உண்மை விளங்கும்.

புலிகள் அழிப்பை தமிழர்களில் அழிப்பாகச் சித்தரித்து இங்குள்ள தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர் என்பதால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த போராட்டங்களை சரிகாணவில்லை.

ஆயுதம் தாங்கி அரசுக்கு எதிராக யுத்தம் செய்தவர்களூக்கு எதிரான தாக்குதலும் எவ்வித ஆயுதத்தையும் எடுக்காமல் அமைதி வழியில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலும் ஒருக்காலும் சமமில்லை. 

இதற்காகத்தான் இங்குள்ள தமிழர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து இருக்க வேண்டும்.

புலிகளுக்குத் தான் இந்த மனநிலை என்றால் புலிகள் அழிப்பை தமிழர் அழிப்பாக சித்தரித்து தமிழர்களைத் தூண்டிவிட்ட இங்குள்ள புலிகளின் ஏஜெண்டுகளின் மனநிலையும் இது தான் என்பதை இப்போது முஸ்லிம் சமூகம் தெளிவாக உணர்ந்துகொண்டது.

June 21, 2014, 2:54 PM

இலங்கையில் ராஜபக்சேவிற்கு ஆதராவாக பிஜே பிரச்சாரம் செய்தாரா ?

கேள்வி 1 :- புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் இலங்கை சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ராகவன் என்பவர் தெரிவித்தார். அதில கலந்து கொண்ட தமுமுகவைச் சேர்ந்த தலைவர்  ஒருவர் சில தனி நபர்கள் செய்வது சமூதாயத்தின் நிலைபாடாக ஆகாது எனக் கூறி ராகவன் கூறிய தகவல் உண்மை என்பது போன்று சித்தரித்தார். இதன் உண்மை நிலை என்ன?

அஸ்லம், அதிரை

கேள்வி 2
18/06/14 அன்று புதிய தலைமுறை டிவியின்  நேர்படபேசு நிகழ்ச்சியில் பேசும் போது பாஜாகவின் ராகவன் பீஜே இலங்கைக்குச் சென்று ராஜபக்ஷேவுக்கு ஆதரவு திரட்டியதாகவும், இப்போது அவரை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் என்றும் கூறினார்.

இதை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜென்ராம் அவர்கள் மறுக்கவில்லை. அவருக்கு இது குறித்த உண்மை நிலவரம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமுமுக ஹாஜா கனி நன்றாக இது பற்றி தெரிந்து இருந்தும் ராகவனின் பொய்யை மறுக்கவில்லை. மறுக்காவிட்டாலும் பராவாயில்லை. ராகவனின் செய்தியை உண்மைப்படுத்தும் விதமாக பதிலளித்தார்.

எப்படி என்றால் "தலையில் தொப்பி போட்ட சில முஸ்லிம்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது எப்படி தனி நபர் சார்ந்ததோ அது போல் இதுவும் என்று விசமத்தனமாகக் கூறினார்.

ராஜபக்சேயையை தாங்கள் ஆதரித்து பிரசாரம் செய்தீர்கள் அது உங்கள் தனி நிலைபாடு என்று ராகவனின் சொல்லை உண்மைப்படுத்தும் விதமாக பேசுகிறார்.

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

முகமது பைசல்
மாவட்ட செயலாளர்,  நெல்லை மாவட்டம்

கேள்வி 3

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் ப.ஜ.க சார்பாக கலந்துகொண்ட ராகவன் என்பவர் பேசும்போது இலங்கை தேர்தலில் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பி.ஜே பிரச்சாரம் செய்து விட்டு இப்போது ஆர்பாட்டம் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டை உங்கள் மீது வைத்துள்ளாரே?

- கடையநல்லூர் மசூது

பதில்:- சந்திரிகா அவர்கள் இலங்கையில் பிரதமராக இருந்த போது 2005 ஆம் ஆண்டு நான் இலங்கை சென்றேன். அங்கே பல ஊர்களில் பிரச்சாரம் செய்தேன். கடைசியாக தலைநகர் கொளும்புவில் முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இலங்கை மக்களை மதம் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடத்துவதாக சமாதி வழிப்பாட்டுக்காரர்களும், தரீக்காவாதிகளும், தவ்ஹீத் போர்வையில் அரபு நாடுகளில் பணம் (பறிக்கும்) இயக்கங்களும் புகார்களுக்கு மேல் புகார்கள் அனுப்பி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்தனர். எனது விசாவையும் கேன்சல் செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். 

சந்திரிகா ஆட்சி அதன் பின் தொடர்ந்த போதும், அடுத்து வந்த தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின் ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டபோதும்,  இன்று வரையும் நான் இலங்கை செல்லவில்லை.

இலங்கைத் தேர்தலின் போது நான் இலங்கை செல்லவில்லை எனும் போது ராகவன் என்பவர் இலட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் மீடியாவில் இப்படி புளுகியதில் எனக்கு ஆச்சிரியம் இல்லை.

கூச்சம், வெட்கம் இல்லாமல் துணிந்து பொய் சொல்வது தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆரம்பப்  படியாகும். முஸ்லிம்கள் தொடர்பாக எந்த அளவுக்கும் பொய் சொல்லலாம் என்பதே ஆர்.எஸ்.எஸ் காரர்களின் கொள்கையாக உள்ளதால் இதில் வியப்படைய ஒன்றும் இல்லை.

நான் இலங்கை சென்றேனா இல்லையா? ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேனா என்ற விபரம் அவருக்குத் தெரியாமல் எவனோ புளுகியதை நம்பி இப்படி சொல்லி இருப்பார் என்று சமாதானம் அடைய முடியாது. எவனோ புளுகினாலும் கொஞ்சம் மூளை இருந்தாலே இது பொய் என்று அறிந்து கொள்ள முடியும். எந்த ஒரு நாடாக இருந்தாலும் மற்ற நாட்டுக்காரர்கள் தேர்தலில் வாக்களிப்பதையும், பிரச்சாரம் செய்வதையும் சட்டம் அனுமதிக்காது. இந்தியனாகிய நான் இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக எவனாவது இந்த ராகவனிடம் சொன்னாலும் பொது அறிவு இருந்தால் அதை அவர் நிராகரித்து இருக்க வேண்டும்.

மனமறிந்து தனது கொள்கைப்படி ராகவன் பொய் சொல்லி இருக்க வேண்டும். அல்லது எவனோ சொன்னதை நம்பி அதைக் கூறி இருந்தால் அவருக்கு பொது அறிவு இல்லை என்பது உறுதி.

ராகவனுக்குச் சொன்ன அதே இரண்டு தன்மைகளும் ராகவனை விட அதிகமாக தமுமுக ஹாஜா கனியிடம் உள்ளன.

இலங்கையில் இருந்து விசா கேன்சல் செய்யப்பட்டு இந்தியாவுக்கு நான் திருப்பி அனுப்பப்ட்ட விபரம் தமுமுக வினருக்குத் தெரியும். பி.ஜே இனிமேல் ஒருக்காலும் இலங்கை செல்ல முடியாது என்று தமுமுகவினர் பரவலாக பிரச்சாரம் செய்து வந்தனர். அப்படி இருக்கும் போது நான் இலங்கை செல்லவில்லை ராஜபக்சேவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்பது ராகவனை விட தமுமுக வினருக்கு (தெளிவாகத்) தெரியும்.

ஆனாலும் அதை மெய்ப்பிப்பது போன்று இவர்கள் நடக்கிறார்கள் என்றால் பொய்யுடன் அயோக்கியத்தனமும் செய்கிறார்கள் என்பது தெரிகிறது.

ஒரு நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டில் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியும் என்ற கேள்வியை இவர் கேட்டு இருந்தால் கொஞ்சமாவது இவருக்கு பொது அறிவு உள்ளது என்பதை மக்கள் நினைப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ் ஸை விட கூமுட்டைகளாக இருப்பவர்கள் தான் தமுமுகவினர் என்பதை அவர்களே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்.

அடுத்ததாக இன்னொரு விஷயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ராஜபக்சே இரண்டாம் முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது அவர் வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலை இருந்தது. ராணுவத் தளபதி பொன்சேகா அவரை எதிர்த்து போட்டியிடுவதால் ராஜபக்சே ஜெயிக்க மாட்டார் என்ற கருத்து நிலவியது.

அப்போது ராஜபக்சே கட்சியின் பிரமுகர்கள் சிலர் இலங்கையில் நமது ஜமாஅத்தை அனுகினார்கள். பிஜேயும், ராஜபக்சேவும் கலந்து கொள்ளக் கூடிய ஒரு நிகழ்ச்சிக்கு பிஜேவை அழைத்து வாருங்கள். அதன் மூலம் முஸ்லிம்களின் வாக்குகள் எங்களுக்குக் கூடுதலாக கிடைக்கும் என்று அனுகினார்கள்.

என்னிடம் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தினர் இதைக் கூறிய போது நிர்வாகக் குழுவைக் கூட்டி இதை ஏற்க இயலாது என்று தெரிவித்து விட்டோம்.

ஏதாவது பொது நிகழ்ச்சியில் நானும், ராஜபக்சேவும் கலந்து கொள்ளவேண்டும் என்றுதான் கோரினார்கள். அதையும் நாம் மறுத்து விட்டோம்.

தமுமுக வினர் ஒருக்காலும் திருந்த மாட்டார்கள் என்பதும் நமக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்குக் கூட சப்போட் பன்னக் கூடியவர்கள் என்பதும் மேலும் உறுதியாகின்றது என்பதை மட்டும் சமுதாயத்துக்கு சொல்லிக்கொள்கிறோம்.

June 21, 2014, 2:52 PM

நாளுக்கு நாள் காவிகளின் செயல் அதிகரித்துக்கொண்டே போகிறதே?

 

நாளுக்கு நாள் காவிகளின் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முதலில் செங்கோட்டை, மல்லிபட்டினம், வேலூர் தற்போது மேலப்பாளையம் என தொடர்ந்துகொண்டே போகின்றது. இதற்கு ஏழறை இலட்சம் ஏகத்துவப் படைகளைக் கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கை என்ன?

 

நீங்கள் எதை எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்? அவர்களை எதிர்த்து வன்முறை வழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இக்கேள்வியைக் கேட்டால், அது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை அல்ல.

நம்மில் சிலர் ஆயுதம் தூக்கினால் காவிகள் அதை வைத்து இன்னும் வளர்வார்கள். சிலரது செயல்களால் நம் சமுதாயம்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகும்.

இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் போது மக்கள் சக்தியை திரட்டி அரசின் மூலம் குற்றவாளிகளைத் தண்டிக்க எல்லா முயற்சியையும் தவ்ஹீத் ஜமாஅத் செய்யும். செய்தும் வருகிறது.

மேலும் ஒவ்வொரு வன்முறைச் சம்பவத்தின்போதும் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நியாயமான நடவடிக்கை எடுக்க, தவ்ஹீத் ஜமாஅத் முயற்சிக்கிறது. காவல்துறை நமக்கு ஏற்படும் எந்த இழப்புக்கும் நடவடிக்கை எடுக்காது என்ற அளவுக்கு நிலைமை மோசமானால், காவல் துறை முற்றிலுமாக காவிமயமாக மாறினால், அப்போதுதான் வேறு வழிகளைப் பற்றி சிந்திக்க முடியும்.

தமிழகத்தைப் பொருத்தவரை அந்த நிலை நிச்சயமாக இல்லை. உயிரைக் கொடுத்தால்தான் சமுதாயத்தின் உயிரையும் உடமையையும் பாதுகாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் நாங்கள் சட்ட வழியையும் ஜனநாயக வழியையும் கைவிட்டு விட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டு மாற்று வழியை தேர்ந்தெடுப்பதில் இந்த ஜமாஅத்துக்கு எந்த அச்சமும் இல்லை.

அந்த நிலை தமிழகத்தில் ஏற்படாது என்றுதான் நாம் நம்புகிறோம். ஓரிரு காவல்துறையினர் காவிச் சிந்தனையுடன் செயல்பட்டாலும் மேல் அதிகாரிகளிடம் முறையிட்டு அது சரி செய்யப்படுகிறது. இப்போது அவர்கள் வழியில் பதிலடி என்று இறங்குவது நன்மைக்கு பதிலாக கேடுகளைத்தான் எற்படுத்தும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

மேலும் சில வன்முறைச் சம்பவங்களுக்கு, நம் சமுதாயத்தில் அறிவை இழந்து வெறும் உணர்ச்சிக்கு இடம் கொடுத்தவர்களும் காரணமாக உள்ளனர். இவர்களும் அறிவைப் பயன்படுத்தி தூர நோக்குடன் நடந்து கொள்வதும் அவசியம் என்பதையும் பதிவு செய்கிறோம்.

June 11, 2014, 5:26 PM

பெற்றோர்கள் பிள்ளைகளின் பள்ளிக் கூடத்தை வருடா வருடம் மாற்றுவது சரியா

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியை வருடா வருடம் மாற்றுகிறார்களே,இவர்களுக்கு  தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

 

இதில் அறிவுரை கூற ஒன்றும் இல்லை. ஒரு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. தேவை, வசதி, தரம் உள்ளிட்ட பல காரணங்களால் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் மாற்றுவதுதான் புத்திசாலித்தனம்.

அதிக வருமானம் உள்ளவர் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பார். ஆனால் அந்த வருமானம் குறைந்தால் அதையே தொடர்ந்து கொடுக்க முடியாது. ஒரு பகுதியில் வேலை பார்ப்பவர் அல்லது தொழில் நடத்துபவர் வேறு பகுதிக்கு மாறினால் அப்போது பள்ளிக் கூடத்தையும் மாற்றுவது அறிவார்ந்த செயல்தான்.

குழந்தைகளாக இருக்கும் போது தன் பிள்ளைகளை ஒரு கல்விக் கூடத்தில் சேர்த்தவர் குழந்தைகள் வளரும் போது ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறதா என்பதையும் கூடுதலாகக் கவனிப்பார். எனவே நமது வசதி, பிள்ளைகளின் ஒழுக்கம் உள்ளிட்ட பல விஷயங்களையும் கவனத்தில் கோண்டு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு யாரும் அறிவுரை கூறத் தேவை இல்லை.

June 11, 2014, 5:23 PM

நம் நாட்டில் நதி நீர் இணைப்பு சாத்தியமா?

 

நம் நாட்டில் நதி நீர் இணைப்பு சாத்தியமா? இதனால் பல மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வாகுமா?

 

பெருமளவு பணத்தைக் கொட்டினால் நதிகளை இணைப்பது அறிவுப் பூர்வமாக சாத்தியம்தான். ஆனால் நமது நாட்டில் அதை நடைமுறை படுத்துவது சாத்தியமாகாது.

வளமான ஒரு நதியின் நீரை ஒரு பகுதி மக்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது நீர்வளம் குறைந்த நதியுடன் அதை இணைக்க முயன்றால் ஏற்கனவே வளமான நதியால் பயனடைந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பிரச்சனை எழுப்பப்படும். கலவரம் ஏற்படுத்தப்படும்.

இணைப்பதற்காக வாய்க்கால் தோண்டுவோர் அந்த வாய்க்காலில் போட்டு புதைக்கப்படும் அளவுக்கு நிலைமை ஏற்படும்.

புதிதாக இணைப்பது கிடக்கட்டும். தமிழகத்து காவிரி நீர் கர்நாடக ஆற்றுடன் இணைக்கப்பட்டுத் தான் உள்ளது. இதனால் காவிரித் தண்ணீர் நமக்கு கிடைக்க வேண்டிய அளவுக்கு கிடைக்கிறதா?

ஆங்காங்கே அணைகளை எழுப்பி தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்கிறார்கள். வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீரால் கர்நாடகம் மூழ்கிப் போய்விடும் என்றால் மட்டும்தான் நமக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

ஏற்கனவே இணைக்கப்ப்ட்டுள்ள நதிகளால் நன்மை கிடைக்கவில்லை. காரைக்குடி தண்ணீர் திருப்பத்தூர் மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்று போராட்டம் நடந்ததை நாம் மறந்து விட முடியாது. பாலாறு, முல்லைப் பெரியாறு, காவிரி என்று ஏற்கனவே இணைக்கப்பட்ட நதிகளால்கூட நன்மை இல்லை.

புதிதாக நதிகளை இணைப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குக் கொண்டுசெல்ல முயன்றால் இரத்த ஆறு ஓடும். தண்ணீர் விஷயத்தில் நமது மக்களின் பண்பாடு இப்படித்தான் இருக்கிறது.

மக்கள் உணர்வுகளைப் பற்றி படிக்காமல் மெத்தப் படித்த நிபுணர்கள் இதை அதனுடன் இணைக்கலாம் அதை இதனுடன் இணைக்கலாம் என்று காகிதத்தில் திட்டம் போடுவார்கள். அதை நம்பித்தான் பாஜக தேர்தல் பிரச்சாரத்தின்போது இதை வாக்குறுதியாகக் கொடுத்தது. ஒருக்காலும் அதை நம் நாட்டில் செயல்படுத்த முடியாது.

மேலும் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க முயற்சித்ததிலிருந்து கட்டி முடிக்கப்படும் வரை இதற்கு எதிர்ப்பு பெரிதாக இருக்கவில்லை. ஆனால் வேலை ஆரம்பமாகும் போது தான் அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்தினார்கள். இதுதான் இந்திய மக்களின் சுபாவம்.

நதிகளை இணைக்க வாய்க் கால்களை வெட்டி வரும்போது மக்கள் சும்மா இருப்பார்கள். இன்னும் ஒரு மாதத்தில் இரண்டும் இணைந்து விடும் என்ற நிலை இருக்கும்போது நமது தண்ணீர் அடுத்த மாநிலத்துக்குப் போய்விடும்; நமக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கொளுத்திப் போட்டு ஊத்தி மூடுவார்கள்.

கூடங்குளம் ஒரு கிராமப்பிரச்சனை. நதி நீர் பிரச்சனை என்பது ஒரு மாநிலப் பிரச்சனை. ஒரு மாநிலமே கொந்தளித்தால் எப்படி இணைக்க முடியும். செலவழித்த பணம் பாழாவதுதான் இதன் ஒரே பலனாக அமையும்.

June 11, 2014, 5:22 PM

இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்தினால் தவ்ஹீத் ஜமாஅத் என்னசெய்யும் ?

 

நாடளுமன்றத் தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த நிலையில் ஜெயலலிதா அரசு,  நமக்கு வாக்களித்தபடி ஆணையத்தின் அறிக்கை பெற்று இடஒதுக்கீடு அதிகரித்துத் தருமா?

ஒரு வேளை தாமதப்படுத்தினால் தவ்ஹீத் ஜமாஅத் என்னசெய்யும்.?

 

நாம் எடுக்கும் நிலையைப் பொருத்து அரசாங்கம் தனது வாக்குறுதியை மீற முடியாது. அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நம்பி முஸ்லிம்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பதால் அதைத் தக்க வைக்க ஆவண செய்வார்கள்.

சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதால் இடஒதுக்கீட்டை உயர்த்தித் தருவார்கள் என்று நாம் நம்பிக்கை வைக்கிறோம். அப்படி எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றால் பொதுக்குழுவைக் கூட்டி தவ்ஹீத் ஜமாஅத், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நல்ல முடிவு எடுக்கும், இன்ஷா அல்லாஹ்.

June 11, 2014, 5:20 PM

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பெற தவ்ஹீத் ஜமாஅத் போராடுமா ?

 

பெரிய கட்சிகள் எல்லாம் இப்போது விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைதான் சரியாக இருக்கும் என்று குரலெழுப்புகிற இந்த வேளையில் இதை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதற்காகப் போராடுமா?

விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்து தவஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதல் குரல் கொடுத்து வருகிறது. பெரிய கட்சிகள் எல்லாம் மண்ணைக் கவ்வினால்தான் இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நாம் காத்திருந்தோம். அதுபோல் இப்போது நடந்துள்ளது.

அதிமுக, பாஜக தவிர எல்லா கட்சிகளும் இதை முக்கியக் கோரிக்கையாக வைக்கும் நாள் தொலைவில் இல்லை.

அப்படி அனைவரும் கோரும்போது தேர்தல் கமிசன் தேர்தல் முறையை மாற்ற வாய்ப்புள்ளது.

தேர்தலில் போட்டியிடாத இயக்கத்தின் போராட்டத்தை தேர்தல் கமிசன் கண்டுகொள்ளாது. எனவே இதற்காக போராட்டம் நடத்துவது பயனற்றதாகும். அரசியல் கட்சிகளின் போராட்டத்தையும் கோரிக்கையையும்தான் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

June 11, 2014, 5:18 PM

உயிரை பழி வாங்கும் பொது தேர்வு தேவைதானா

 

வருடா வருடம் பல மாணவர்களின் உயிரைப் பழி வாங்கும் பத்தாவது மற்றும் பனிரெண்டாவது பொதுத் தேர்வு தேவைதானா?

வி.மி. ரியாஸ், ஆழ்வார் திருநகர், சென்னை

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விபரீதங்களைப் பொதுவானதாகக் கருதும் மனப் போக்கின் காரணமாக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

 விபத்துக்களில் சிலர் பலியாகும்போது, மனித உயிர்களைக் கொல்லும் வாகனங்கள் தேவையா? எல்லா வாகனங்களையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு நிகராக, உங்கள் கேள்வி அமைந்துள்ளது.

 தவறான சிகிச்சையால் ஒரு சிலர் மரணித்தால் மனித உயிர்களைப் பலிவாங்கும் மருத்துவமனைகள் தேவையா என்று கேட்பீர்களா? கணவன் மீதுள்ள கோபத்தால் ஒரு பெண் தற்கொலை செய்தால் மனித உயிர்களைப் பலிவாங்கும் திருமண வாழ்க்கை தேவையா என்று கேட்பீர்களா?

 இதுபோன்ற கேள்விகள், நமது சிந்தனைக் கூர்மையாவதைத் தடுக்கும். உள்ளதை உள்ளபடி பார்க்கும் சரியான பார்வையில் இருந்து நம்மைத் திசை திருப்பும்.

 மதுபானம் முற்றிலும் கேடாக இருப்பதால் அது தேவையா என்று கேட்கலாம். இதுபோல் முற்றிலும் கேடாகவும், அல்லது பெருமளவு கேடாகவும் உள்ள விஷயங்கள் பற்றித்தான் இப்படி கேள்வி எழுப்ப முடியும்.

 இலட்சக்கணக்கான மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். அவர்கள் அனைவருமோ, அவர்களில் பெரும்பாலானவர்களோ தற்கொலை செய்வதில்லை.

 பரீட்சையில் பல்லாயிரம் மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். அவர்கள் அனைவருமோ, அவர்களில் பெரும்பாலானவர்களோ தற்கொலை செய்வதில்லை.

 ஏழெட்டுப் பேர் தற்கொலை செய்கிறார்கள் என்றால் அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டும். பரீட்சையே கூடாது என்றால் குலுக்கல் முறையில் வேலை கொடுக்க முடியுமா? அடிமுட்டாளுக்கு உயர்கல்வியைக் கொடுக்க முடியுமா?

 இதுபோல் தற்கொலை நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நாம் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம்.

அதைக் கீழே தருகிறோம்.

அதிக மதிப்பெண் போதை

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் போதுமான முஸ்லிம்கள் தேறவில்லையே? இந்தப் பின்னடைவுக்குக் காரணமென்ன? இதை எப்படிச் சரி செய்வது?

இதில் பின்னடைவு ஏதும் இல்லை. சரி செய்வதற்கும் ஒன்றுமில்லை. முதல் மூன்று இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று வெறியூட்டப்படுவதே கண்டிக்கத்தக்கதாகும். பிஞ்சுப் பருவத்திற்கென்று சில ஆசைகளும் தேவைகளும் உள்ளன.

 உடலை வலுவாக வைத்திருக்கும் விளையாட்டுக்கள், நண்பர்களுடன் பொழுதுபோக்குதல், போதுமான தூக்கம், தேவையான ஓய்வு, குறித்த நேரத்தில் சாப்பாடு என்று அனைத்தையும் வழக்கம்போல் செய்துகொண்டு படிக்கவும் வேண்டும். ஆடல், பாடல், சினிமா போன்ற பயனற்றவைகளைத் தவிர்க்கலாமே தவிர எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருக்கப் பழக்கப்படுத்தக் கூடாது.

 பிள்ளைப் பருவத்தின் சந் தோஷங்களைக் கெடுத்து முதல் மதிப்பெண்தான் லட்சியம் என்று போதிக்கப்படுவதாலும், அனைவரும் இதை ஊக்குவிப்பதாலும், மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால், இதை அவமானமாகக் கருதி தற்கொலையும் செய்கிறார்கள்.

 அதிக மதிப்பெண் எடுக்காவிட்டால் நடப்பதே வேறு என்று சில பெற்றோர்கள் எச்சரித்து பயம் காட்டுவதாலும், மதிப்பெண் குறைவாகப் பெறும்போது, தற்கொலை செய்ய மாணவர்கள் தூண்டப்படுகின்றனர். இந்த மனநிலை மாறவேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு இதுபோல் வெறியேற்ற வேண்டிய அவசியம் இல்லை.

 படிப்பில் ஆர்வமூட்டி அவனது நினைவாற்றலுக்கு ஏற்ப எடுக்கும் மதிப்பெண்களை பெற்றோரும் பொருந்திக் கொள்ள வேண்டும்.  பெற்றோர் பொருந்திக் கொள்வார்கள் என்பதை அந்த மாணவனுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

 அதிக மதிப்பெண் குறித்த இன்னும் சில உண்மைகளையும் நாம் சுட்டிக்காட்டக் கடமைப் பட்டுள்ளோம். அதில் மறைந்துள்ள மர்மங்களை அறிந்து கொண்டால் அதிக மதிப்பெண் என்ற வெறி பிடித்து அலைவது ஒழிந்துவிடும்.

 நமது நாட்டில் உள்ள கல்வி முறையில் திறமைக்கோ, சிந்திக்கும் திறனுக்கோ மதிப்பெண்கள் போடுவதில்லை. மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதற்குத் தான் மதிப்பெண்கள் போடப்படுகின்றன. புரியாமல் மனப்பாடம் செய்திருந்தால் கூட அதை எழுதினால் மதிப்பெண் கிடைத்துவிடும்.

 அதன் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சமாளிக்க இந்த மனப்பாடமும் அதனால் கிடைத்த மதிப்பெண்களும் உதவாது.

 மொழியறிவும், சிந்திக்கும் திறனும் உடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி எஸ்.எஸ்.எல்.சி.யில் பெயில் ஆனவர்தான்.

 கடந்த 20 ஆண்டுகளாக 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றவர்களின் பட்டியலைத் திரட்டிப் பாருங்கள். அவர்கள் அனைவருமே நாட்டில் சிறந்த விஞ்ஞானியாக, சிறந்த மருத்துவராக, சிறந்த எஞ்சீனியராக சிறந்த பேராசிரியராக இருக்கிறார்களா? ஓரிருவர் அப்படி இருப்பார்களே தவிர, மற்றவர்களால் பிரகாசிக்க இயலவில்லை என்பதை அறியலாம்.

 அதே நேரத்தில் முதல் நிலையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்களிடம் நீங்கள் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவரா என்று விசாரித்துப் பாருங்கள். அவர்களில் அதிகமானவர்கள் சராசரியான மதிப்பெண் பெற்றவராகவே இருப்பார்கள்.

 எனவே மதிப்பெண்களுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது மட்டுமே திறமைக்கும், அறிவுக்கும் ஒரே அடையாளம் அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 மனப் பாடத்திற்காகத்தான் மதிப் பெண்கள் கிடைக்கின்றன என்பது கூட முழுமையான உண்மை அல்ல. அது ஓரளவுக்குத்தான் உண்மை.

 100 கேள்விகளிலிருந்து 10 கேள்விகள் கேட்கப்படும் என்பதற்காக 100கேள்விகளுக்கான விடைகளையும் மாணவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள்.

 அதில் ஒரு மாணவன் 95 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்து விட்டான். ஆனால் கேட்கப்பட்ட பத்து கேள்விகளில் எட்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்ததாகவும், இரண்டு கேள்விகள் அவன் மனப்பாடம் செய்யாத ஐந்து கேள்விகளில் இருந்து கேட்கப்பட்டால் அவனுக்கு 80 சதவிகித மதிப்பெண்தான் கிடைக்கும்.

 இன்னொரு மாணவனோ 70 கேள்விகளுக்கான விடைகளை மனப்பாடம் செய்தான். கேட்ட கேள்விகள் அனைத்தும் அந்த 70க்குள் அடங்கியிருந்தால் அவன் 100சதவிகித மதிப்பெண் பெறுவான்.

 அதாவது 95 சதவிகிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 80 மதிப்பெண்களும், 70சதகிவிதம் மனப்பாடம் செய்தவனுக்கு 100 மதிப்பெண்ணும் கிடைத்து விடுகிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் சில நேரங்களில் இந்தத் தரத்திலும் இருப்பார்கள்.

 இதில் திறமை மட்டுமின்றி, மனப்பாடத் திறனும் கவனிக்கப் படாமல் விடப்படுகிறது. நாம் மனப்பாடம் செய்ததில் கேள்விகள் அமைவதைப் பொருத்துத்தான் இது முடிவு செய்யப்படுகிறது.

 அதாவது வாய்ப்புக்கள்தான் இதைத் தீர்மானிக்கின்றன. தினசரி வகுப்புகளிலும், டெஸ்டுகளிலும் முதலிடத்தில் வந்த மாணவர்கள் சிலரது மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் இதுபோன்ற தேர்வுகளில் முந்திவிடும் அவலத்திற்கும் இதுதான் காரணம்.

 இதுபோக மதிப்பெண்கள் போடக் கூடியவர்களின் குணநலன்களும் இதைத் தீர்மானிக்கின்றன. நன்றாகத் தேர்வு எழுதியவனின் விடைத்தாள் கஞ்சத்தனம் செய்யும் ஆசிரியரின் கைக்குக் கிடைத்தால், அவனுக்கு கிடைக்க வேண்டியதை விடக் குறைவான மதிப்பெண்ணே கிடைத்திருக்கும். சுமாராக எழுதியவனின் விடைத் தாள் தாராள சிந்தனை கொண்ட வர்களிடம் போனால், அவன் எதிர்பார்த்ததைவிட கூடுதல் மதிப்பெண்ணுடன் முதலாமவனை இவன் முந்திவிடுகிறான்.

 விடைத்தாள்களை யார் திருத்துகிறார்கள் என்பதும் இதைத் தீர்மானிக்கிறது. எனவே திறமைக்கும் மனப்பாடத்திற்குமான அடையாளமாக மதிப்பெண்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசித்து நேரத்தை வீணாக்க விரும்பாத ஆசிரியர்கள் அதிக வரிகளுக்கு அதிக மதிப்பெண்களும், குறைந்த வரிகளுக்கு குறைந்த மதிப்பெண்களும் போட்டு கடமையை நிறைவேற்றுவதும் உண்டு.

 முன்னாள் முதல்வரின் கைங்கரியத்தால், கண்பார்வை குறைந்த, ஊணமானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் நியமிக்கப்படுகின்றனர். கண்ணுக்கு அருகில் வைத்தால்கூட எழுத்தைச் சரியாக வாசிக்கத் தெரியாதவர்கள், தேர்வுத்தாளைத் திருத்தினால், அவரது மனநிலையைப் பொருத்து, கீழே உள்ளவன் மேலே வருவான். மேலே வரவேண்டியவன் கீழே போய்விடுவான். இப்படியும் மதிப்பெண்கள் போடப்படுகின்றன.

 இது தவிர சில தனியார் பள்ளிகள் தங்கள் பெயரைத் தக்க வைப்பதற்காக, கேள்வித்தாளுடன் விடைகளையும் கொடுத்து, எழுத ஆசிரியர்கள் துணைசெய்வதும், மேற்பார்வையாளர்களுக்குப் பெருந்தொகை கொடுத்து சரிக்கட்டுவதும் நடப்பது உண்டு.

 எப்போதுமே நாமக்கல் மாவட்டத்தினரைச் சேர்ந்தவர்களே முதல் இடங்களைப் பிடித்து வருகின்றனர். இது ஏன் என்று ஆய்வு செய்தபோது நாமக்கல்லில் இந்த மோசடி நடப்பதைக் கண்டறிந்தனர்.

 இந்த ஆண்டு சிறப்பு பறக்கும்படை அமைத்து மாணவர்கள் காப்பி அடிக்க பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் உடந்தையாக இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்து பள்ளிக்கூட அனுமதியையும் ரத்து செய்தன.

 சில பள்ளிகள் அப்படியும் தப்பித்து விட்டன. முதல் இடங்களைப் பிடிக்கும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க சில பெற்றோர்கள் தயாராக இருக்கின்றனர்.

 எனவே கோடி கோடியாகக் கொள்ளையடிக்க உதவும் என்பதால், ஆசிரியர்களே தில்லுமுல்லு செய்து சராசரி மாணவனை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கிறார்கள்.

 இவ்வளவும் சில நேரங்களில் முதல் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கின்றன.

 மனப்பாடம் செய்தால் நிச்சயம் சிறந்த மதிப்பெண் என்பதற்கே உத்தரவாதம் இல்லை எனும்போது, இடம் பெறும் கேள்விகளும், திருத்தக்கூடிய ஆசிரியர்களும், தேர்வு கண்காணிப்பாளர்களும் தான் இதைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்டால் மதிப்பெண்ணுக்காக அளவற்ற தியாகங்களைச் செய்ய மாட்டார்கள்.

 மாணவர்கள் உண்ணாமலும், உறங்காமலும், சிறுபிள்ளைத் தனங்கள் செய்யாமலும் எந்திரத் தன்மையுடன் வளர்க்கப்படுவதை நாம் ஊக்குவிக்கக் கூடாது. எல்லாக் கடமைகளையும் செய்துகொண்டு உயர் கல்வி கற்பதற்கான மதிப்பெண்களை எடுக்கும் அளவுக்கு பாடுபடுங்கள் என்று ஆர்வம் ஊட்டுவதே போதுமானது.

 முதல் 10 இடம் என்பதெல்லாம் லட்சியம் இல்லை. எல்லா உயர் கல்வி இடங்களும் முதல் 10 இடத்திற்கு வந்தவர்களைக் கொண்டு நிரப்பப்படாது. இதை அனைவரும் உணர்வது நல்லது.

May 27, 2014, 1:51 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top