அதிமுகவின் ஓராண்டு சாதனை என்ன?

அதிமுகவின் ஓராண்டு சாதனை என்ன?

கேள்வி :

நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று ஜெயலலிதா அரசைச் சில ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. அப்படி ஜெயலலிதா என்னதான் இந்த ஓராண்டில் சாதித்து இருக்கிறார். விரிவாக விளக்கம் தரவும்.

உ.முஹம்மது அபுதாஹிர், கம்பம்

பதில் :

வாக்களித்த மக்கள் ஜெயலலிதாவிடம் அதிகம் எதிர்பார்த்தார்கள்.  அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஓராண்டு ஆட்சி அமையவில்லை என்பது தான் உண்மை.

இலவச அரிசி (சாரி! விலையில்லா அரிசி) ஒரு சாதனையாகச் சொல்கிறார்கள். முந்தையை ஆட்சியில் ஒரு கிலோ அரசி ஒரு ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டது. ஒரு கிலோ அரிசி 30 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் மாதாமாதம் வழங்கப்படும் 20 கிலோ அரிசிக்கு 600 ரூபாய்கள் ஆகின்றது. கருணாநிதி ஆட்சியில் 600 ரூபாய் பெறுமானமான அரிசியை 20 ரூபாய்க்கு தந்தார். அதாவது 580 ரூபாய் அரசுப் பணத்தில் இருந்து மக்களுக்கு கிடைத்தது. அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து விட்டுச் சென்றார். ஜெயலலிதா அந்த20 ரூபாயைத் தான் தள்ளுபடி செய்தார்.

முந்தைய ஆட்சியில் 580 ரூபாய் பெற்ற மக்கள் இவரது விலையில்லா அரிசி திட்டத்தால் மாதம் 20 ரூபாய் மிச்சம் பிடிக்கிறார்கள். இது என்ன சாதனை?

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அரிசி மனிதர்கள் சாப்பிடும் தரத்தில் இருந்தது. ஆனால் இந்த விலையில்லா அரிசியை மனிதர்கள் சாப்பிட முடியாது என்பதால் கள்ள மார்கெட்டில் கால்நடைத் தீவனம் தயாரிக்க ஆறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தான் நூறாண்டுச் சாதனையா?

திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்பட அறிவு ஜீவிகளுக்கு  பாரதூரமான காரணங்கள் இருந்தாலும் பாமர மக்களுக்கு இருந்த காரணம் கடுமையான மின்வெட்டு தான். ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் மின்சாரத் தட்டுப்பாடு  இல்லாமல் மாற்றிக் காட்டுவேன் என்றார். ஒரு வருடம் கடந்த  நிலையில் மின்வெட்டின் நேரம்  மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை.

தொழிற்சாலைகளுக்கு  மின்சார விடுமுறை அளித்தது நூறாண்டுச் சாதனையா? தொழிற்சாலைகளை  முடக்கி தொழிலாளர்கள் வயிற்றில்  அடித்தது ஒரு சாதனையா?

சட்டம் ஒழுங்கு  சீர்கெட்டு விட்டது என்று  தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா முழங்கினார். ஜெயித்து வந்த உடன் சமூக விரோதிகள் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள்  என்று பெருமை பாராட்டினார். ஆனால் கருணாநிதியின் கடைசி  வருடத்தில் நடந்த குற்றச்  செயல்களை விட ஜெயலலிதாவின்  இந்த ஒரு வருடத்தில் குற்றச்  செயல்கள் அதிகரித்து உள்ளது என்பது தான் உண்மை.

பல வங்கிக்  கொள்ளைகள், பல நகைக்கடை கொள்ளைகள், பல படுகொலைகள் இன்னும் துப்பு துலங்கவே இல்லை.

இதையெல்லாம் சாதனை என்று இவர்கள்  கணக்குப் போட்டால் மக்கள் தங்கள் மனதில் வேறு கணக்குப் போடுவார்கள். பொதுத் தேர்தல்களில் மட்டும்  தான் அதைக் காட்டும் அளவுக்கு மக்கள் புத்திசாலிகள்.

கருணாநிதி தொலைக் காட்சிப் பெட்டி கொடுத்தார். இலவச வீடுகளும், இலவச நிலங்களும் சிலருக்குக் கொடுத்தார். ஜெயலலிதாவும் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் என்று  அறிவித்து அங்கொன்றும்  இங்கொன்றுமாகக் கொடுத்து வருகிறார். இதில் இவர் பெருமை பேசிட ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

மருத்துவக் காப்பீடு, 108 ஆம்புலன்ஸ் ஆகிய சேவைகளில்  சிறு மாற்றம் செய்துள்ளார். எல்லாம் முந்தைய ஆட்சியின்  தொடர் நடவடிக்கைகள் தான்.

பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணம்  உயர்வு என வாக்களித்த மக்களுக்கு மை அழிவதற்குள் அவர் அளித்த நன்றிக்கடனும் நூறாண்டு சாதனை தான் போலும்.

சட்டமன்றத்தில்  குரல் கொடுக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் வாய் திறக்க முடியவில்லை என்று திமுக  ஆட்சியின் சட்டமன்ற நடவடிக்கைகள் பற்றி விமர்சனம் செய்தார். அது உண்மை தான். ஆனால்  அதிமுக சட்டமன்ற நடவடிக்கைள்  ஆயிரம் மடங்கு மோசமாக உள்ளது எப்படி சாதனையாகும்?

பதவியேற்பு விழாவின் போது அவர் காட்டிய எளிமை  மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு எளிமையின் உச்சகட்டமாக  இருந்தது. ஆனால் ஒன்றுமில்லாத ஓராண்டுச் சாதனைக்கு வைக்கப்படும் பேனர்களும், கட் அவுட்களும் பத்திரிகைகளில் தினந்தோறும்  கொடுக்கப்படும் முழுப்பக்க கலர் விளம்பரங்களும் செம்மொழி காட்சிகளை மிஞ்சும் வகையில் இருக்கிறதே? இது சாதனையா? வேதனையா?

எல்லாவற்றுக்கும்  மேலாக முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகமாக்கித் தருவேன் என்று இவர் அளித்த  உறுதி மொழியை நம்பி அதிகமான  முஸ்லிம்கள் இவருக்கு வாக்களித்தனர். ஒரு வருடம் ஆகியும் இது  பற்றி வாய் திறக்கவில்லையே?

சீனாவுக்குப் புனித யாத்திரை போவதற்கு மானியம் அளித்து  கொடுக்காத வாக்குறுதியை நிறைவேற்றும் ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் வேதனை புரியவில்லையே? அவர்கள் ஏமாற்றப்பட்டதாக  புலம்புவது கேட்கவில்லையே?

மக்கள் அதிகம் ஏமாந்துள்ளனர்  என்பது தான் நமக்குத் தெரிந்த  உண்மை.

ஆனால் மமகட்சி தலைவரிடம்  இக்கேள்வியைக் கேட்டால் தானே புயல் சாதனை உள்ளிட்ட பல சாதனைகளைப் பட்டியல் போடுவார். நமக்கு அந்த அளவுக்கு திறமை  போதாது.
உணர்வு 16:40

Published on: June 7, 2012, 4:19 PM Views: 539

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top