அத்தியாயம் - 28 : "அல்கஸாமா' சத்தியம்

 அத்தியாயம் - 28 : "அல்கஸாமா' சத்தியம், வன்முறையாளர்களுக்கெதிரான நடவடிக்கை, பழிக்குப்பழி வாங்குதல் மற்றும் இழப்பீடுகள்1

பாடம் : 1

"அல்கஸாமா' சத்தியம்2

3439 சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு கைபர் சென்ற டைந்தனர். அங்கு ஓரிடத்தில் தனித் தனியா கப் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) அவர்கள் கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் அவருடைய (சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்ட வரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

(அம்மூவரில்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார் கள். அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் தம்முடன் வந்த (வயதில் பெயரி)வர்களை முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேசப்போனார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெரியவர்களைப் பேசவிடு'' என்று சொன்னார்கள். உடனே அப்துர் ரஹ்மான் அமைதியாகிவிட்டார். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவ்விருவருடனும் பேசி னார்கள்.

அப்போது அவர்கள் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்துல்லாஹ் பின் சஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் "உங்கள் (உயிரிழந்த) தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை' அல்லது "உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை' எடுத்துக்கொள்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், "(கொலை நடந்த இடத்தில்) நாங்கள் இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் யூதர் களில் ஐம்பது பேர் (தாங்கள் அப்துல்லாஹ் வைக் கொல்லவில்லை என்று) சத்தியம் செய்து, உங்களிடம் தாம் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கட்டும்'' என்று கூறினார் கள். அதற்கு அவர்கள், "நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) ஏற்க முடியும்?'' என்று கேட்டார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.3

3440 சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் கைபர் பகுதியை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த ஒரு பேரீச்சந் தோட்டத்தில் தனித் தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்போது அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். யூதர்கள்மீது (அவர்கள்தாம் கொன்றிருப்பார்கள் என) சந்தேகம் ஏற்பட்டது.

ஆகவே, அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அவருடைய தந்தையின் சகோதரரின் புதல்வர்களான ஹுவய்யிஸா (ரலி) மற்றும் முஹய்யிஸா (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தம் சகோதரர் (கொலை) தொடர்பாக அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) பேசினார்கள். அம்மூவரில் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "பெரியவர்களைப் பேசவிடு' அல்லது "வயதில் பெரியவர் முதலில் பேசட்டும்' என்று கூறினார்கள்.

அவர்கள் இருவரும் (கொல்லப்பட்ட) தம் உறவினர் தொடர்பாகப் பேசியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஐம்பது பேர் யூதர்களில் (கொலை செய்த) மனிதருக்கெதிராகச் சத்தியம் செய்ய வேண்டும். அதையடுத்துக் கொலையாளியின் கழுத்தில் கயிற்றை மாட்டி அவன் ஒப்படைக்கப்படுவான்'' என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், "சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத நாங்கள் எப்படிச் சத்தியம் செய்ய முடியும்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், யூதர் களில் ஐம்பது பேர் (நாங்கள் அப்துல்லாஹ் வைக் கொல்லவில்லை எனச்) சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களி டம் நிரூபிக்கட்டும்'' என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நிராகரிக்கும் சமுதாயத் தார் ஆயிற்றே? (அவர்களுடைய சத்தியங் களை நாம் எப்படி ஏற்க முடியும்?)'' என்று கேட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

பின்னர் ஒரு நாள் நான் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களது ஒட்டகத் தொழுவத்திற்குச் சென்றேன். (நபி (ஸல்) அவர்கள் ஈட்டுத் தொகையாக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்று தனது காலால் என்னை உதைத்துவிட்டது.

அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இவ்வாறு(தான் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.) அல்லது இதைப் போன்று கூறினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்'' என இடம்பெற்றுள்ளது. "ஒட்டகம் என்னை உதைத்து விட்டது'' எனும் குறிப்பு அதில் இல்லை.

- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3441 புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அன்சாரிகள் என்றும் பின்னர் பனூ ஹாரிஸா குலத்தார் என்றும் அறியப்பட்டவர்களான அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள். கைபர், அன்று சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பகுதியாயிருந்தது. யூதர்களே அங்கு வசித்துவந்தார்கள். (அங்கு சென்றதும்) அவர்கள் இருவரும் தம் தேவைக்காகத் தனித் தனியே பிரிந்துசென்றனர்.

அப்போது அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு (அத்தோட் டத்திலுள்ள) ஒரு தண்ணீர் தொட்டியில் கிடப்பதைக் கண்டார்கள். உடனே முஹய் யிஸா (ரலி) அவர்கள் அவரை (எடுத்து) அடக்கம் செய்துவிட்டு, மதீனாவை நோக்கி வந்தார்கள். கொல்லப்பட்டவரின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர் களும் (உறவினர்களான) முஹய்யிஸா (ரலி) மற்றும் ஹுவய்யிஸா (ரலி) ஆகியோரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அப்துல்லாஹ் (ரலி) அவர்களது நிலை குறித்தும் அவர் கொல்லப்பட்டுக் கிடந்த இடத்தைப் பற்றியும் தெரிவித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்துல்லாஹ்வை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என்று) உங்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் "உங்கள் கொலையாளி யிடமிருந்து (இழப்பீடு) பெறும் உரிமையை' அல்லது "உங்கள் தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை' எடுத்துக்கொள்கிறீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! சம்பவம் நடந்த இடத்தில் நாங்கள் இருக்கவுமில்லை; சம்பவத்தைப் பார்க்கவும் இல்லையே!'' என்று கேட்டார்கள்.

"அப்படியானால், யூதர்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிப்பார்கள்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியத்தை எப்படி நாங்கள் ஏற்க முடியும்?'' என்று கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ்வின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

3442 மேற்கண்ட ஹதீஸ் புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "அன்சாரிகளில் பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) எனக் கூறப்படும் ஒரு மனிதரும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் எனக் கூறப்படும் அவருடைய தந்தையின் சகோதரர் ஒருவரும் (கைபர் பகுதியை நோக்கிச்) சென்றார்கள்'' என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்று, "ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே கொல்லப்பட்டவருக் கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார் கள்'' என்பதுவரை இடம்பெற்றுள்ளது.

 யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு கூடுதலாக) இடம்பெற்றுள்ளது:

சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உயிரீட்டுத் தொகையாக வழங் கப்பட்ட அந்த ஒட்டகங்களில் ஒன்று ஒட்டகத் தொழுவத்தில் வைத்து என்னை உதைத்து விட்டது.

3443 சஹ்ல் பின் அபீஹஸ்மா அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்(கள் அன்சாரி)களில் சிலர் கைபர் பகுதியை நோக்கிச் சென்றபோது, அங்கு அவர்கள் தனித் தனியாகப் பிரிந்துவிட்டார் கள். இந்நிலையில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில், "அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கொலையுண்டவரின் உயிரிழப்பை வீணாக்க விரும்பாமல், தாமே நூறு தர்ம ஒட்டகங்களை உயிரீட்டுத் தொகையாக வழங்கினார்கள்'' என்று இடம்பெற்றுள்ளது.

3444 சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் பெரியவர்கள் சிலரிடமிருந்து (கேட்டுக்) கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா (ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சம் பழங்கள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள். பின்னர் முஹய்யிஸா (ரலி) அவர்கள் வந்து தெரிவித்தார்கள்: அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு "நீர் நிலையில்' அல்லது "குழியில்' கிடந்தார். பிறகு யூதர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள்தாம் அவரைக் கொலை செய்தீர்கள்'' என்று நான் கூறினேன். யூதர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் கொல்லவில்லை'' என்று கூறினர்.

பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்கள் தம் குலத்தாரை நோக்கி வந்து அவர்களிடமும் அதைப் பற்றித் தெரிவித்தார்கள். பின்னர் அவரும் அவரைவிட வயதில் மூத்தவரான அவருடைய சகோதரர் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் மற்றும் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் (நபியவர்களிடம்) வந்தார்கள். அப்போது கைபரில் அப்துல்லாஹ் வுடன் இருந்த முஹய்யிஸா (ரலி) அவர்கள் (அவர்கள் இருவரையும் முந்திக்கொண்டு) பேச ஆரம்பித்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹய்யிஸா (ரலி) அவர்களிடம், "வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு'' என்று கூறினார்கள். எனவே, (முதலில்) ஹுவய்யிஸா (ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு முஹய்யிஸா பேசினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் ஐம்பது பேர் சத்தியம் செய்வதன் மூலம் யூதர்களே கொலை செய்தார்கள் என்பது நிரூபணமானால்,) ஒன்று அவர்கள் (கொல்லப்பட்ட) உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கட்டும்! அல்லது (நம்முடன் நடந்த சமாதான உடன்படிக்கையை முறித்துக்கொண்டு) அவர்கள் போர்ப் பிரகடனம் செய்யட்டும்!'' என்று கூறினார்கள்.

பிறகு இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு யூதர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவரைக் கொலை செய்யவில்லை'' எனப் பதில் எழுதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா (ரலி), முஹய்யிஸா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அகியோரிடம், "(அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களை யூதர்கள்தாம் கொலை செய்தார்கள் என்று) சத்தியம் செய்து, நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்து பழிவாங்கிக்கொள்ளும்) உரிமையை பெற்றுக்கொள்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மூவரும் "இல்லை' என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படி யானால் உங்கள் குற்றச்சாட்டுக்கு (மறுப்புத் தெரிவித்து) யூதர்கள் சத்தியம் செய்வர்'' என்றார்கள். அதற்கு அவர்கள் மூவரும், "அவர்கள் முஸ்லிம்கள் இல்லையே (யூதர்கள் பொய் சத்தியம் செய்வதற்குக்கூட தயங்கமாட்டார்கள்)'' என்று கூறினர்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை கொடுத்துவிட்டார்கள். அவருடைய குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை அனுப்பினார்கள். அவை அவர்களது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.

சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த ஒட்டகங்களில் சிவப்பு ஒட்டகம் ஒன்று தனது காலால் என்னை உதைத்து விட்டது.

3445 அன்சாரீ நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்தில் இருந்துவந்த "அல்கஸாமா' சத்திய முறையை நீடிக்கச் செய்தார்கள்.

இதை நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3446 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அன்சாரிகளில் சிலர் "யூதர்கள் தங்களில் ஒருவரைக் கொலை செய்துவிட்டதாக' குற்றம் சாட்டியபோது இவ்வாறே (சத்தியம் செய்யுமாறு) தீர்ப்பளித்தார்கள்'' எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 2

வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்கும் உரிய (தண்டனைச்) சட்டம்.4

3447 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"உரைனா' குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு வந்(து தங்கியிருந்)தபோது, அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் தர்ம ஒட்ட கங்களிடம் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்தி (நிவாரணமடைந்து) கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் செய்து குணமடைந்தனர். பிறகு (நபியவர்களின்) ஒட்டக மேய்ப்பாளர் களைத் தாக்கிக் கொலை செய்தனர்; இஸ்லாத்திலிருந்து வெளியேறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த ஒட்டக மந்தையை ஓட்டிச் சென்றுவிட்டனர்.

இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, உடனே அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களைப் பிடித்துவர) ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் பிடித்துக் கொண்டுவரப்பட்டதும் (பல கொடுஞ் செயல்கள் புரிந்த) அவர்களது (இடக்) கையையும் (வலக்) காலையும் துண்டித்தார்கள்; அவர்களது கண்களில் சூடிட்டார்கள்; பிறகு சாகும்வரை அவர்களை "ஹர்ரா'ப் பகுதியில் போட்டுவிட்டார்கள்.5

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3448 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"உக்ல்' குலத்தைச் சேர்ந்த எட்டுப்பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதிமொழி அளித்(து மதீனாவில் தங்கி யிருந்)தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்ப நிலை ஒத்துக்கொள்ளாமல் அவர்க ளது உடல் நோய் கண்டது. எனவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றி முறையிட்டனர். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம் ஒட்டக மேய்ப்பருடன் ஒட்டகங்களிருக்கும் இடத் திற்குச் சென்று, அவற்றின் பாலையும் சிறு நீரையும் பயன்படுத்தி (நிவாரணம் பெற்று)க் கொள்கிறீர்களா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் "சரி' என்று கூறி, புறப் பட்டுச் சென்று ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நிவாரணம் பெற்றனர். பிறகு அந்த ஒட்டக மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டனர்.

இவ்விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, உடனே அவர் களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் பிடிக்கப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். அப்போது அவர்களின் கை கால்களைத் துண்டித்து, அவர்களின் கண்களில் சூடிடுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் சாகும்வரை ("ஹர்ரா'ப் பகுதியில்) வெயிலில் போடப்பட்டனர்.6

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அஸ்ஸப்பாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கால்நடைகளை அவர்கள் ஓட்டிச் சென்று விட்டனர்; அவர்களின் கண்களுக்குச் சூடிடப்பட்டது'' என இடம்பெற்றுள்ளது.

3449 மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "உக்ல் மற்றும் உரைனா குலத் தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளவில்லை. (அவர்கள் உடல் நலிவுற்ற னர்.) எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பால் ஒட்டகங்களிடம் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்து மாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்'' என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல் கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பில் "அவர்களின் கண் களுக்குச் சூடு போடப்பட்டு, அவர்கள் "ஹர்ரா'ப் பகுதியில் போடப்பட்டனர். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டும் வழங்கப் படவில்லை'' என்று இடம்பெற்றுள்ளது.7

3450 அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் மக்களிடம், "அல்கஸாமா சத்தியம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், "அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நம்மிடம் இன்னின்னவாறு கூறினார்கள்'' என்றார்கள். நான், என்னிடமும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று கூறிவிட்டு "உரைனா' குலத்தார் பற்றிய ஹதீஸை (மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்று) அறிவித்தேன்.

நான் அந்த ஹதீஸை அறிவித்து முடித்ததும் அன்பஸா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ் தூயவன்!'' என (வியப்புடன்) கூறினார்கள். நான், "அன்பஸா அவர்களே! என்மீது சந்தேகப் படுகிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை; இவ்வாறுதான் எம்மிடமும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்'' என்று கூறிவிட்டு, "சிரியாவாசிகளே! "இவர்' (அபூ கிலாபா) அல்லது "இவரைப் போன்றவர்' உங்களிடையே இருக்கும்வரை நீங்கள் நன்மையில் நீடிப்பீர்கள்'' என்று கூறினார்கள்.8

- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "உக்ல் குலத்தாரில் எட்டுப் பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் வந்தார்கள்'' என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் "அவர்க(ளது காயத்திலி ருந்து வழிந்த இரத்தத்தை நிறுத்துவதற்காகக் கை, கால் நரம்புக)ளுக்குச் சூடிடவில்லை'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

3451 அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

"உரைனா' குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்று உறுதிமொழியும் அளித்தனர். அப்போது மதீனாவில் நுரை யீரல் சவ்வு அழற்சி நோய் ஏற்பட்டிருந்தது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பில், "அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் சுமார் இருபது அன்சாரீ இளைஞர்கள் இருந்தனர். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உரைனா' கூட்டத்தாரைப் பிடித்து வர அனுப்பினார்கள். அவர்களுடன் காலடித் தடங்களை அறியும் தடய நிபுணர் ஒருவரையும் அனுப்பினார்கள்'' என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உரைனா குலத்தாரில் ஒரு குழுவினர்' என்று இடம்பெற்றுள்ளது. சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உக்ல் மற்றும் உரைனா குலத்தாரில் சிலர்' என்று காணப்படுகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

3452 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அந்த ஒட்டக மேய்ப்பர்களின் கண் களில் அவர்கள் சூடிட்டதால்தான் அவர் களுடைய கண்களில் நபி (ஸல்) அவர்கள் சூடிடச் செய்தார்கள்.

பாடம் : 3

கல் போன்ற கனரகப் பொருட்களா லும் கூராயுதங்களாலும் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு என்ப தற்கான ஆதாரமும் பெண்ணைக் கொன்றதற்காக ஆண் கொல்லப்படு வதும்.9

3453 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதனொருவன் ஒரு சிறுமியை, அவளது வெள்ளி நகைக்காகக் கல் எறிந்து கொன்றுவிட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?'' என்று கேட்டார்கள். அவள் "இல்லை' என்று தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?'' என்று கேட்டார்கள். அவள் அப்போதும் "இல்லை' என்று தலையாட்டினாள்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக அவளிடம், "இன்ன மனிதரா உன்னைத் தாக்கி னார்?'' என்று (ஒரு மனிதரது பெயரைக் குறிப் பிட்டுக்) கேட்டபோது அவள் "ஆம்' என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை (அழைத்து வந்து விசாரித்து, அவன் ஒப்புக்கொண்டதும்) இரு கற்களுக்கிடையே வைத்து அவ(னது தலையி)னை (நசுக்கி)க் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள்.10

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரு கற் களுக்கிடையே அவனது தலையை வைத்து நசுக்கிக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்'' என்று இடம்பெற்றுள்ளது.

3454 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒருவன் அன்சாரிகளில் ஒரு சிறுமியை, அவள் அணிந்திருந்த நகைக் காகக் கொலை செய்து, அவளை ஒரு பாழடைந்த கிணற்றில் போட்டு, அவளது தலையைக் கல்லால் நசுக்கினான். அவன் பிடிக்கப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டான். சாகும்வரை அவனைக் கல்லால் அடிக்குமாறு (மரண தண்டனை விதித்து) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவன் கல்லால் எறிந்து கொல்லப்பட்டான்.

- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3455 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு சிறுமி இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்ட நிலையில் கிடந்தாள். மக்கள் அவளிடம், "உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்ன மனிதனா? இன்ன மனிதனா?'' என்று கேட்டார்கள். யூதன் ஒருவனின் பெயரை அவர்கள் கூறியதும், அச்சிறுமி ("ஆம் அவன் தான்' என்று) தலையால் சைகை செய்தாள். அந்த யூதன் பிடிக்கப்பட்டு (விசாரிக்கப் பட்டதில்), குற்றத்தை ஒப்புக்கொண்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனது தலையில் கல்லைப் போட்டு நசுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

பாடம் : 4

ஒரு மனிதன், தனது உயிரையோ உறுப்பையோ தாக்க வந்தவனிட மிருந்து தற்காத்துக்கொள்வதற்காக அவனைப் பிடித்துத் தள்ளியதில் அவனது உயிருக்கோ உறுப்புக்கோ சேதம் ஏற்பட்டால், (பிடித்துத் தள்ளிய) அந்த மனிதன் அதற்குப் பொறுப்பாளி அல்லன்.

3456 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யஅலா பின் முன்யா (அல்லது யஅலா பின் உமய்யா - ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அவர்களில் ஒருவர் இன்னொருவரைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தமது கையை அவரது வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும்வரை கடிபட்டவன் தனது கையை அப்படியே வைத்துக்கொண்டிருப்பானா? "பல்லிழந்த) இவருக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது'' என்று கூறினார்கள்.11

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கடித்தவரின் முன்பற்கள் இரண்டு விழுந்துவிட்டன'' என்று இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் வாயிலாக இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3457 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் முன்கையைக் கடித்தார். அந்த மனிதர் தமது கையை இழுக்க, (கடித்த) அவரது முன்பல் ஒன்று விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது, அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்கள். "நீ அவரது இறைச்சியை உண்ணப் பார்த்தாய் (அதனால் அவர் கையை இழுத்தார். எனவே, உனது பல்லுக்கு இழப் பீடு இல்லை)'' என்று கூறினார்கள்.

3458 ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யஅலா பின் உமய்யா (ரலி) அவர்களு டைய ஊழியர் ஒருவரின் முன்கையை ஒரு மனிதர் கடித்துவிட்டார். ஊழியர் தனது கையை இழுக்க, (கடித்த) அந்த மனிதரது முன்பல் ஒன்று (கழன்று) விழுந்துவிட்டது. இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, அவ்வழக்கை நபியவர்கள் தள்ளுபடி செய்தார்கள். மேலும், "கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று அவரது கரத்தை நீ கடிக்கப் பார்த்தாய். (எனவே, உனக்கு இழப்பீடு இல்லை)'' என்று கூறினார்கள்.

3459 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அவர் தமது கையை இழுக்க, (கடித்த) அவருடைய "முன்பல் ஒன்று' அல்லது "முன்பற்கள்' விழுந்துவிட்டன. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உதவியை நாடினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று நீ கடித்துக் கொண்டிருக்கும்வரை அவர் தமது கையை உனது வாய்க்குள் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடச் சொல்கிறாயா? நீ உனது கையை அவர் கடித்து முடிக்கும்வரை அவரது வாய்க்குள் விட்டுவை. பிறகு இழுத்துப் பார் (தெரியும்)'' என்று சொன்னார்கள்.

3460 யஅலா பின் முன்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தபோது, (கடிபட்ட) அவர் தமது கையை இழுக்க, அவரது (அதாவது -கடித்த வரது) முன்பற்கள் இரண்டு விழுந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள் (இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என) அவரது வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள். மேலும் "நீ அவரை, கடா ஒட்டகம் கடிப்ப தைப் போன்று கடிக்கப் பார்த்தாய்'' என்றும் கூறினார்கள்.

3461 யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டேன். - என்னைப் பொறுத்தவரை என் செயல்களிலேயே அந்த அறப்போர்தான் என்னிடம் மிகவும் வலு வானதாகும் -என்னிடம் கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதருடன் சண்டையிட்டார். அவ்விருவரில் ஒருவர் மற்றொரு வரின் கையைக் கடித்துவிட்டார்.

(யஅலா (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும் அவர்களுடைய புதல்வர் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் "கடித்தவர் யார் என்று என்னிடம் அறிவித்தார்கள் (நான்தான் மறந்துவிட்டேன்)' என்று அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)

கடிபட்டவர் கடித்தவரின் வாயிலிருந்து தமது கையை இழுத்தார். அப்போது அவருடைய முன்பற்களில் இரண்டில் ஒன்று கழன்று (விழுந்து)விட்டது. பிறகு இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது முன்பல்லுக்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்.12

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 5

பற்கள் போன்றவற்றில் பழிக்குப்பழி உண்டு என்பதற்கான ஆதாரம்

3462 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை(த் தாக்கி)க் காயப்படுத்திவிட்டார் கள். இதையொட்டி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த) நபி (ஸல்) அவர்கள், "பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க) பழிக்குப்பழி (வாங்கிக்கொள்க)'' என்று கூறினார்கள்.

அப்போது உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா, அல்லாஹ்வின் மீதாணை யாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது'' என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின் வேத(ச் சட்ட)மாகும்'' என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள், "அப்படி நடக்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது'' என்று கூறினார்கள். அப்படியே பேச்சு தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின், அதை அல்லாஹ் உண்மையாக்கிவிடுகின்றான்'' என்று கூறினார்கள்.13

பாடம் : 6

ஒரு முஸ்லிமுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான காரணங்கள்

3463 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை.

அவை: 1. திருமணமானவன் விபசாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. "ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமது மார்க்கத்தைக் கை விட்ட (தேச துரோகமும் மார்க்க விரோதமும் செய்த)வன்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.14

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3464 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (ஆற்றிய உரையில் பின்வருமாறு) கூறினார்கள்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஓரிறை)வன் மீதாணையாக! "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவர்களில்) மூன்று பேரைத் தவிர: 1. "ஜமாஅத்' எனும் கூட்டமைப்பைவிட்டு வெளியேறி இஸ்லாத்தைக் கைவிட்டவன். 2. திருமணமாகியும் விபசாரம் செய்தவன். 3. ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக கொல்லப்பட வேண்டியவன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இந்த ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ' எனும் (பிரமாண) வாசகம் இடம்பெறவில்லை.

பாடம் : 7

கொலையை ஆரம்பித்துவைத்தவர் மீதுள்ள குற்றம்

3465 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகில்) அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களுடைய முதலாவது மகனுக்கு ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தாம் கொலையை ஆரம்பித்துவைத்த முதல் மனிதர் ஆவார்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், ஜரீர் பின் அப்தில் ஹமீத் மற்றும் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "ஏனெனில், அவர்தாம் கொலையை ஆரம்பித்துவைத்தவர்'' என்று இடம் பெற்றுள்ளது. "முதல் மனிதர்' எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

பாடம் : 8

மறுமையில் வழங்கப்படும் கொலைக் கான தண்டனையும், மறுமை நாளில் மனிதர்களிடையே முதலாவதாக அளிக்கப்படும் தீர்ப்பு கொலை தொடர் பானதாகவே இருக்கும் என்பதும்.

3466 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதன் முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகவே இருக்கும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், சிலரது அறிவிப்பில் ("தீர்ப்பு வழங்கப்படும்' என்பதைக் குறிக்க) "யுக்ளா' எனும் சொல்லும், வேறுசிலரது அறிவிப்பில் "யுஹ்கமு' எனும் சொல்லும் இடம்பெற்றுள் ளது.

பாடம் : 9

மனிதர்களின் உயிர், சுய மரியாதை, செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

3467 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், "வானங்களும் பூமி யும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற் றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல் ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியவையா கும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையேயுள்ள "முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்'' என்று சொன்னார்கள்.17

பிறகு "இது எந்த மாதம்?'' என்று கேட் டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனு டைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டு வார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது துல்ஹஜ் இல்லையா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்றோம்.

பிறகு "இது எந்த நகரம்?' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "அல்லாஹ்வும் அவனு டைய தூதருமே நன்கறிவர்'' என்று கூறினோம். அப்போதும் அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது "அல்பல்தா' (மக்காவின் பெயர்களில் ஒன்று) அல்லவா?'' என்று கேட்க, நாங்கள் "ஆம்' என்றோம். மேலும் "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளல்லவா?'' என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!'' என்றோம்.

பிறகு "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்க ளின் மானமும் உங்களுக்குப் புனிதமான வையாகும். (அவற்றுக்கு ஊறு விளைவிப்ப தற்கு உங்களுக்கு அனுமதியில்லை.) நீங்கள் மறுமையில் உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பின் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் "நிராகரிப்பாளர்களாய்' அல்லது "வழிகெட்டவர்களாய்' நீங்கள் மாறிவிடாதீர்கள்.

இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்குச் சொன்னவரைவிட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவரா யிருக்கலாம்'' என்று கூறினார்கள். பிறகு "நான் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?'' என்று கேட்டார்கள்.18

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3468 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நஹ்ருடைய) அந்நாளில் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது "இது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக இருந்துவிட்டு,) "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளல்லவா?'' என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!'' என்றோம்.

மேலும் "இது எந்த மாதம்?'' என்று கேட் டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனு டைய தூதருமே நன்கறிவர்'' என்று சொன் னோம். அவர்கள் "இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம், அல்லாஹ்வின் தூதரே!'' என்றோம்.

மேலும், "இது எந்த நகரம்?'' என்று கேட் டார்கள். நாங்கள், "அல்லாஹ்வும் அவனு டைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அதற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார் களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு (மௌனமாக இருந்துவிட்டு), "இது "அல் பல்தா' (புனித நகரம் மக்கா) அல்லவா?'' என்று கேட்க, நாங்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!' என்று விடையளித்தோம்.

அப்போது அவர்கள், "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும். (இதை) இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.

பிறகு கறுப்பு கலந்த இரு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் திரும்பி, அவற்றை அறுத்தார்கள். மேலும், ஆட்டிறைச்சியில் சிறிதளவு எடுத்து எங்களிடையே பங்கிட்டார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் "(நஹ்ருடைய) நாள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந் தார்கள். ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்'' என்று ஹதீஸ் ஆரம்ப மாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

3469 மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது "இது எந்த நாள்?' என்று கேட்டார்கள்...'' என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அவற்றில் "உங்கள் மானம்' என்பதும் "பிறகு இரு செம்மறியாட்டு கடாக் களின் பக்கம் திரும்பினார்கள்'' என்பதும் அதற்குப் பின்னுள்ள குறிப்புகளும் இடம் பெறவில்லை.

அவற்றில் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களின் புனிதமிக்க இந்த மாதத் தில் இந்த நாள் எந்த அளவுக்குப் புனித மானதோ அதைப் போன்றே (உங்கள் உயிர் களும் உடைமைகளும்) நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள்வரை உங்க ளுக்குப் புனிதமானவையாகும்'' என்று கூறி விட்டு "நான் (இறைச்செய்திகளை உங்களி டம்) சேர்த்துவிட்டேனா?'' என்று கேட்டார் கள். நாங்கள் "ஆம்' என்றோம். அவர்கள் "இறைவா! நீயே இதற்குச் சாட்சியாக இரு'' என்று கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.

பாடம் : 10

கொலையாளி கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்வதும், கொலையாளியைப் பழி வாங்குவதற்குக் கொலையுண்டவனின் பொறுப்பாளிக்கு வாய்ப்புத் தருவதும் செல் லும். ஆனால், கொலையாளியை மன்னிக்குமாறு கோருவது விரும்பத் தக்கதாகும்.

3470 வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் மற்றொரு மனிதரைத் தோல் வாரினால் (கழுத்தில் போட்டு) இழுத்துக்கொண்டு வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! இவர் என் சகோதரனைக் கொலை செய்துவிட்டார்'' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), "நீ அவரைக் கொலை செய்தாயா?'' என்று கேட்டார்கள். (அப் போது அவரை இழுத்துக்கொண்டு வந்தவர், இவர் கொலையை ஒப்புக்கொள்ளாவிட்டால் இவருக்கெதிரான ஆதாரத்தை நான் நிலைநிறுத்துவேன்'' என்றும் கூறினார்). அதற்கு அந்த மனிதர், "ஆம், நான் அவரைக் கொலை செய்தேன்'' என்று (ஒப்புதல் வாக்கு மூலம்) சென்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எப்படி (இக்கொலையை) நீ செய்தாய்?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த மனிதர், "நானும் அவரும் ஒரு மரத்தில் (தடியால் அடித்து) இலை உதிர்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னை ஏசினார். எனக்குக் கோபம் ஏற்பட்டது. உடனே நான் (என் கையிலிருந்த) கோடரியால் அவரது உச்சந் தலையில் அடித்துவிட்டேன். அவர் இறந்துவிட்டார். (திட்டமிட்டு இந்தக் கொலையை நான் செய்யவில்லை)'' என்று சொன் னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு இழப்பீடு வழங்க உம்மிடம் ஏதேனும் (பொருள்) உண்டா?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "என்னிடம் எனது போர்வையையும் எனது கோடரியையும் தவிர வேறொன்றுமில்லை'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய கூட்டத்தார் உனக்காக (இழப்பீடு) திரட்டித் தருவார்கள் என்று நீ கருதுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் என் கூட்டத்தாரிடம் அந்த அளவுக்கு மதிப்புடையவன் அல்லன்'' என்று சொன்னார். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது (கழுத்தில் கிடந்த) தோல் வாரை, அ(வரை இழுத்துவ)ந்த மனிதரிடம் தூக்கிப் போட்டு, "உம்முடைய ஆளைப் பிடித்துக்கொள்க'' என்று சொன்னார்கள். உடனே அந்த மனிதர் அவரை (இழுத்து)க்கொண்டு சென்றார். அவர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை அவர் கொன்றுவிட்டால், அவரும் இவரைப் போன்றவரே ஆவார்'' என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் "இவரை அவர் கொன்று விட்டால் அவரும் இவரைப் போன்ற வரே ஆவார்' என்று கூறியதாக எனக்குச் செய்தி எட்டியதே! உங்களது கட்டளைப்படிதானே நான் இவரை பிடித்துச்சென்றேன்'' என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் உமது பாவத்துடனும் (கொல்லப்பட்ட) உன் உறவினரின் பாவத்துடனும் திரும்புவதை நீர் விரும்புகிறீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! ஆம். அது அவ்வாறே ஆகட்டும்'' என்று கூறிவிட்டு, அவரது (கழுத்தில் கிடந்த) தோல் வாரைத் தூக்கியெறிந்து, அவரை அவரது வழியி லேயே செல்ல விட்டுவிட்டார்.19

3471 வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டார். அவர் மற்றொரு மனிதரைக் கொலை செய் திருந்தார். அப்போது கொலையுண்டவரின் பொறுப்பாளர் கொலையாளியைப் பழிக்குப் பழி வாங்கிக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். அவரும் அக்கொலையாளியின் கழுத்தில் ஒரு தோல் வாரைப் போட்டு இழுத்துக்கொண்டு சென்றார்.

அவர் திரும்பிச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொலையாளியும் கொலையுண்டவரும் நரகவாசிகள் ஆவர்'' என்று சொன்னார்கள். (அதைச் செவியுற்ற) ஒரு மனிதர் (கொலையுண்டவரின்) பொறுப்பாளரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தெரிவித்தார். எனவே, அவர் அக்கொலையாளியை (மன்னித்து) விட்டுவிட்டார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயீல் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இந்த ஹதீஸை ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் (தவறுதலாகக் கொலை செய்த) அவரை மன்னித்துவிடுமாறு (கொலையுண்டவரின்) பொறுப்பாளரிடம் கேட்டார்கள். அவர் மறுத்துவிட்டார். (எனவேதான், அவ்வாறு கூறினார்கள்)'' என்று சயீத் பின் அம்ர் பின் அஷ்வஉ (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்'' என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 11

சிசுக் கொலைக்கான இழப்பீடும், தவ றுதலாக நடந்த கொலையிலும் திட்ட மிட்ட கொலையைப் போன்ற கொலை யிலும் வழங்க வேண்டிய இழப்பீடு குற்றவாளியின் தந்தைவழி உறவினர் மீதே கடமையாகும் என்பதும்.20

3472 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது கல்லை எறிய, அப்பெண்ணின் (வயிற்றில் பட்டு வயிற்றிலிருந்த) சிசு இறந்து பிறந்தது. இந்த வழக்கில் உயிரீட்டுத் தொகையாக ஓர் ஆண் அடிமையை அல்லது ஒரு பெண் அடிமையைத் தர வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.21

3473 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"பனூ லஹ்யான்' (ஹுதைல்) குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் சிசு (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். பின்னர், இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பளிக் கப்பட்ட அ(ந்தக் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டாள். ஆகவே, (அவள் சார்பாக) அவளுடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபா) இழப்பீடு வழங்க வேண்டு மென்றும், அவளது சொத்து அவளுடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரிய தென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

3474 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்திமீது கல் எறிந்து, அவளையும் அவளுடைய வயிற்றி லிருந்த சிசுவையும் கொன்றுவிட்டாள். இதையொட்டி மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக ஓர் ஆண் அடிமை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்க வேண்டும் என்றும், (கொல்லப் பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை கொலை செய்த பெண்ணின் தந்தைவழி உறவினர்கள்மீது கடமையாகுமென்றும் தீர்ப்பளித்தார்கள். அவளது சொத்து அவளுடைய குழந்தைகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உரியதென்றும் கூறினார்கள்.

அப்போது (குற்றம் புரிந்த அப்பெண்ணின் கணவர்) ஹமல் பின் அந்நாபிஃகா அல்ஹுதலீ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! உண்ணவோ பருகவோ மொழியவோ அழவோ இயலாத ஒரு சிசுவிற்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப் பட வேண்டுமல்லவா?'' என்று கேட்டார்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரெல்லாம் குறிகாரர்களின் குடும்பத்தில் ஒருவர் தாம்'' என்று சொன்னார்கள். (குற்றவாளிக்குச் சாதகமாகச் சாதுரியமான முறையில்) அவர் எதுகை மோனையோடு பேசியதால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் குறித்து அவ்வாறு கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்ட னர்'' என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பில், "அவளது சொத்து அவளுடைய குழந்தைகளுக்கும் அவர்களு டன் இருப்பவர்களுக்கும் உரியது என்று கூறி னார்கள்'' எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும், "அப்போது ஒருவர் எப்படி நாங்கள் இழப்பீடு வழங்க முடியும்?'' என்று கேட்டார் என்றே (பொதுவாக) இடம்பெற்றுள்ளது. "ஹமல் பின் மாலிக் பின் அந் நாபிஃகா அல் ஹுதலீ என்பவர் கேட்டார்'' என அவரது பெயரை அறிவிப்பாளர் குறிப்பிடவில்லை.

3475 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் கர்ப்பிணியாயிருந்த தன் சகக்கிழத்தியைக் கூடாரக் குச்சியால் தாக்கிக் கொன்றுவிட்டாள். அவர்களில் ஒருத்தி "பனூ லிஹ்யான்' கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொல்லப்பட்டவளுக்குரிய இழப்பீட்டைக் கொன்றவரின் தந்தைவழி உறவினர்கள் வழங்க வேண்டும்; அவளது வயிற்றிலிருந்த சிசுவைக் கொன்றதற்காக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்'' என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.

அப்போது கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்களில் ஒருவர், "உண்ணவோ பருகவோ அழவோ இயலாத சிசுவிற்காக நாங்கள் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?'' என்று கூறினார். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிராமப்புற அரபியரின் எதுகைமோனையைப் போன்ற எதுகை மோனையா?'' என்று (கடிந்து) கூறினார்கள். மேலும், இழப்பீட்டை அவர்கள்தாம் வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

3476 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் தன் சகக்கிழத்தியைக் கூடாரக் குச்சியால் தாக்கிக் கொன்றுவிட்டாள். இது தொடர்பான வழக்கிற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்துவரப்பட் டார்கள். கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்கள் கொல்லப்பட்டவளுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டுமென்றும், கொல்லப்பட்டவள் கர்ப்பிணியாக இருந்த படியால் கொல்லப்பட்ட அவளது சிசுவிற் காக ஓர் அடிமையை வழங்க வேண்டுமென் றும் தீர்ப்பளித்தார்கள்.

அப்போது கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்கள் சிலர், "உண்ணவோ பருகவோ வீறிட்டழவோ இயலாத சிசுவிற் காக நாங்கள் இழப்பீடு செலுத்த வேண்டுமா? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிராமப்புற அரபியரின் எதுகைமோனை யைப் போன்ற எதுகைமோனையா?'' என்று (கடிந்து) பேசினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "அவள் வயிற்றிலிருந்த சிசுவை விழுகட்டியாக்கி (வீழ்த்தி)விட்டாள். இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசெல்லப்பட்டபோது, ஓர் அடிமையை இழப்பீடாக வழங்க வேண்டும்; இழப்பீட்டிற்கான பொறுப்பைக் கொலை செய்த பெண்ணின் காப்பாளர்கள் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்'' என்று இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட அந்தப் பெண்ணிற்கான இழப்பீடு குறித்த குறிப்பு இல்லை.

3477 மிஸ்வர் பின் அல்மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப் பிரசவம் (கருச் சிதைவு) ஏற்படவைத்தால், (அதற்குரிய இழப்பீடு) என்ன என்பது தொடர்பாக (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்களிடம் கருத்துக் கேட்டார்கள். அப்போது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை அந்த சிசுவிற்காக (இழப்பீடாக) வழங்குமாறு தீர்ப் பளித்தபோது நான் அங்கு இருந்தேன்'' என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், "(நீங்கள் கூறிய) இதற்கு உம்முடன் சாட்சியம் அளிக்கும் ஒருவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்றார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (முஃகீரா (ரலி) அவர்கள் கூறியது உண்மையென) அதற்குச் சாட்சியம் அளித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

May 27, 2010, 9:20 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top