அத்தியாயம் - 26 : நேர்த்திக்கடன்

 அத்தியாயம் - 26 : நேர்த்திக்கடன்1

பாடம் : 1

நேர்த்திக்கடனை நிறைவேற்றுமாறு வந்துள்ள கட்டளை

3367 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் உபாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள், தம் தாயார் நேர்ந்துகொண்டு விட்டு, அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துபோய்விட்ட நேர்த்திக்கடன் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் சார்பாக நீங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்'' என்றார்கள்.2

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 2

நேர்த்திக்கடன் செய்வதற்கு வந்துள்ள தடையும் அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது என்பதும்.

3368 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார் கள். மேலும் "நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)'' என்று சொன்னார்கள்.3

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

3369 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்த வும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவுதான்).4

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3370 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார் கள். மேலும், "அது (விதியில் இல்லாத) எந்த நன்மையையும் கொண்டுவந்துவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது'' என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3371 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நேர்த்திக்கடன் செய்யாதீர்கள். ஏனெனில், நேர்த்திக்கடன் விதியிலுள்ள எதையும் தடுத்துவிடாது. அதன் மூலம் கஞ்சனிடமி ருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக்கொண ரப்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3372 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், "அது விதியில் எதையும் மாற்றிவிடாது. அதன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது'' என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3373 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இறைவன் விதியாக்காத எதையும் நேர்த்திக் கடன் அவனுக்குக் கொண்டுவந்து சேர்க்காது. மாறாக, விதியை ஒத்ததாகவே நேர்த்திக் கடன் அமையும். அதன் மூலம் கஞ்சனிட மிருந்து அவன் வெளிக்கொணர விரும்பாதது வெளிக்கொணரப்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 3

இறைவனுக்கு மாறு செய்வதிலும் உடைமையில்லாத ஒன்றிலும் நேர்ந்து கொண்டால் அதை நிறைவேற்றக் கூடாது.5

3374 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸகீஃப் குலத்தார், பனூ உகைல் குலத்தாருக்கு நட்புக் குலத்தினராய் இருந்தனர். இந்நிலையில் ஸகீஃப் குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவரை சிறைபிடித்துச் சென்றனர். (பதிலுக்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் பனூ உகைல் குலத்தாரில் ஒருவரை சிறைபிடித்து வந்தனர். அவருடன் "அல்அள்பா' எனும் ஒட்டகத்தையும் பிடித்துக்கொண்டு வந்தனர். அந்தக் கைதி கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர், "முஹம்மதே!' என்று அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "(என்ன விஷயம்) உமக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "ஏன் என்னை (சிறை) பிடித்தீர்கள்? ஹாஜிகளை முந்திச் செல்லும் ("அள்பா') ஒட்டகத்தையும் ஏன் பிடித்தீர் கள்?'' என்று கேட்டார். (அவருக்கு மதிப்புக் கொடுத்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய நட்புக் குலத்தார் "ஸகீஃப்' செய்த குற்றத்திற்காகவே உன்னைச் சிறைபிடித்தேன்'' என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றார்கள்.

பிறகு (மீண்டும்) அவர் "முஹம்மதே! முஹம்மதே!' என்று அழைத்தார். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்கமும் கருணையும் உடையவராக விளங்கினார்கள். எனவே, அவரிடம் திரும்பிவந்து, "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். அவர், "நான் ஒரு முஸ்லிம்'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவர் உண்மையிலேயே முஸ்லிமாகவில்லை என்பதை அறிந்து) "நீ (சிறை பிடிக்கப்படுவதற்கு முன்) சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் இருந்தபோது, இதை நீ சொல்லியிருந்தால் முழு வெற்றி பெற்றிருப்பாய் (சிறைபிடிக்கப்பட்டி ருக்கமாட்டாய்)'' என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

(மறுபடியும்) அவர், "முஹம்மதே! முஹம்மதே!' என்று அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். அவர் "நான் பசியுடன் இருக்கிறேன். எனக்கு உணவளியுங்கள். தாகத்துடன் இருக்கிறேன். தண்ணீர் புகட்டுங்கள்'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது உன் (அடிப்படைத்) தேவை. (இதை நாம் நிறைவேற்றுவோம்)'' என்று பதிலளித்தார்கள். பின்னர் அந்தக் கைதி, (சிறைபிடிக்கப்பட்ட) அந்த இரு (முஸ்லிம்) மனிதர்களுக்குப் பகரமாக விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் அன்சாரிகளில் ஒரு பெண்மணி (எதிரிகளால்) சிறைபிடிக்கப்பட்டார். அந்த "அள்பா' எனும் ஒட்டகம் (எதிரிகளால்) ஓட்டிச்செல்லப்பட்டது. (எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்ட) அந்தப் பெண் கட்டிவைக்கப்பட்டிருந்தார். அந்த எதிரிகள் (இரவில்) தம் கால்நடைகளைத் தம் வீடு களுக்கு முன்னால் ஓய்வெடுக்க விட்டிருப்பார்கள். ஓர் இரவில் அந்தப் பெண் கட்டை அவிழ்த்துக்கொண்டு, (அங்கிருந்த) ஒட்டகங்களிடம் (அவற்றில் ஒன்றில் ஏறித் தப்பிக்க) வந்தார். ஒவ்வோர் ஒட்டகத்தை அவர் நெருங்கும்போதும் அது கத்தியது. உடனே அதை விட்டு விடுவார். இறுதியில் "அள்பா' எனும் அந்த ஒட்டகத்திடம் அவர் வந்தபோது, அது கத்தவில்லை. அவர் "ஒடுங்கி நடக்கும் ஒட்டகம்'' என்று கூறிக்கொண்டார். அதன் முதுகின் ஓரப் பகுதியில் அமர்ந்து அதை விரட்டினார். அது நடக்கலாயிற்று. எதிரிகளுக்கு (அவர் தப்பிச் செல்லும்) விவரம் தெரியவே, அவர்கள் அவரைத் தேடினர். ஆனால், அவர்களிடமிருந்து அவர் தப்பிவிட்டார்.

அப்போது அந்தப் பெண்மணி "என்னை அல்லாஹ் இந்த ஒட்டகத்தின் மூலம் காப்பாற்றிவிட்டால், இதை அல்லாஹ்வுக் காக அறுத்துப் பலியிடுவேன்'' என்று நேர்ந்துகொண்டார். (அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகம் என்பது அவருக்குத் தெரியாது.) அவர் மதீனா வந்து சேர்ந்தபோது, அதை (அடையாளம்) கண்டுகொண்ட மக்கள், "அள்பா; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகம் (கிடைத்துவிட்டது)'' என்று கூறினர்.

அப்போது அப்பெண்மணி "இதன் மூலம் அல்லாஹ் என்னை (எதிரிகளிடமிருந்து) காப்பாற்றினால், இதை நான் அறுத்துப் பலியிடுவேன் என நேர்ந்துள்ளேன்'' என்று தெரிவித்தார். ஆகவே, மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அது குறித்துத் தெரிவித் தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தூயவன்! அவள் காட்டிய நன்றிக் கடன் மிக மோசமானது. இதன் மூலம் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினால், இதையே நான் அறுத்துப் பலியிடுவேன் என்று நேர்ந்துள்ளார். (ஆனால்,) பாவச் செயலிலும் தனக்கு உடைமையில்லாத ஒன்றிலும் ஓர் அடியார் நேர்ந்துகொண்டால் அதை நிறைவேற்றுதல் கிடையாது'' என்று கூறினார்கள்.6

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் அஸ்ஸஅதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் நேர்த்திக்கடன் கிடையாது'' என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அள்பா எனும் ஒட்டகம் பனூ உகைல் குலத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமாக இருந்தது. ஹஜ் யாத்ரீகர்களை முந்திச் செல்லும் ஒட்டகமா கவும் அது இருந்தது'' என்று காணப்படு கிறது. மேலும் அதில், "நல்ல அனுபவ முள்ள பணிந்து செல்லும் ஒட்டகத்திடம் அப்பெண்மணி வந்தார்'' என்றும் இடம்பெற் றுள்ளது. அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அது பயிற்சி அளிக்கப்பட்ட ஒட்டகமாகும்'' என்று காணப்படுகிறது.

பாடம் : 4

கஅபாவரை நடைப்பயணம் செல்வ தாக நேர்ந்துகொண்ட ஒருவர்.

3375 அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக் கிடையே தொங்கியபடி நடந்துவந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். மக்கள், "இவர் (கஅபாவரை) நடந்துசெல்வதாக நேர்ந்திருக்கிறார்'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்துகொள்வது அல்லாஹ்வுக்கு அநாவசியமானது'' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு பணித்தார்கள்.7

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3376 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக்கிடையே சாய்ந்தபடி நடந்துவருவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்புதல்வர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர் (கஅபாவிற்கு நடைப்பயணம் மேற்கொள்வதாக) நேர்த்திக் கடன் செய்துள்ளார்'' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "பெரியவரே, வாகனத்தில் ஏறிச் செல்வீராக! (தம்மைத் தாமே வேதனை செய்துகொள்ளும்) நீரோ உமது நேர்த்திக் கடனோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை'' என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3377 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் சகோதரி காலணி அணியாமல் இறையில்லம் கஅபாவிற்கு நடைப்பயணம் மேற்கொள்வதாக நேர்ந்துகொண்டார். இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் விளக்கம் கேட்குமாறு என்னைப் பணித்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு, வாகனத்தில் ஏறிச் செல்லட்டும்!'' என்றார்கள்.8

3378 மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் "காலணி அணியாமல்' எனும் குறிப்பு இல்லை. "(உக்பா (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும்) அபுல்கைர் (ரஹ்) அவர்கள் உக்பா (ரலி) அவர்களைவிட்டுப் பிரியாதவராக இருந்தார்'' எனும் தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 5

நேர்ச்சை (முறிவு)க்கான பரிகாரம்

3379 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்.9

இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

May 27, 2010, 9:16 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top