பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்

 பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்

கணவனுடனோ அல்லது மஹ்ரமான உறவினர் துணையுடனோ இல்லாமல் பெண்கள் பயணம் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எது?

இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

காரணம் இது குறித்த அறிவிப்புக்கள் முரண்பட்டதாக உள்ளன.

حدثنا إسحاق بن إبراهيم الحنظلي قال قلت لأبي أسامة حدثكم عبيد الله عن نافع عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال لا تسافر المرأة ثلاثة أيام إلا مع ذي محرم

1086, 1087

1086 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1087 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

புஹாரி 1086, 1087

இந்த அறிவிப்பின் படி யாருடைய துணையும் இல்லாமல் பெண்கள் மூன்று நாட்கள் தனியாகப் பயணம் செய்யலாம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

 حدثنا أبو الوليد حدثنا شعبة عن عبد الملك سمعت قزعة مولى زياد قال سمعت أبا سعيد الخدري رضي الله عنه يحدث بأربع عن النبي صلى الله عليه وسلم فأعجبنني وآنقنني قال لا تسافر المرأة يومين إلا معها زوجها أو ذو محرم ولا صوم في يومين الفطر والأضحى ولا صلاة بعد صلاتين بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب ولا تشد الرحال إلا إلى ثلاثة مساجد مسجد الحرام ومسجد الأقصى ومسجدي

1864, 1996,

1864 அபூசயீத் (ரலி) கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) கணவனோ மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினரோ இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், சுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளிவாசல் (மஸ்ஜிதந் நபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!

அபூசயீத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரெண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கஸஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

புஹாரி 1864, 1996

இந்த ஹதீஸ்கள் இரண்டு நாட்களுக்கு மேல் ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றன. இரண்டு நாட்களுக்குக் குறைவாக பயணம் செய்வதாக இருந்தால் ஒரு பெண் தனியாக யாருடைய துணையும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

حدثنا آدم قال حدثنا ابن أبي ذئب قال حدثنا سعيد المقبري عن أبيه عن أبي هريرة رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة يوم وليلة ليس معها حرمة تابعه يحيى بن أبي كثير وسهيل ومالك عن المقبري عن أبي هريرة رضي الله عنه

1088

1088 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

ஒரு நாள் மட்டும் தான் ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யலாம்; அதற்கு மேல் பயணம் செய்யக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

மேற்கண்ட் மூன்று ஹதீஸ்களும் ஒன்றுக்கொன்று நேர் முரணான கருத்தைக் கூறுகிறது..

இம்மூன்றில் ஒவ்வொன்றும் மற்ற இரண்டு ஹதீஸ்களை மறுக்கும் வகையில் உள்ளன.

இது போல் முரண்பாடாக செய்திகள் கிடைக்கும் போது அவற்றை எவ்வாறு அணுகுவது?

இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களுக்கு மத்தியில் முரண்பாடு காணப்பட்டால் எல்லா ஹதீஸ்களும் சமமான தரத்தில் உள்ளவையா என்று பார்க்க வேண்டும். அவற்றில் ஒரு ஹதீஸ் மிக உயர்ந்த தரத்திலும் மற்றவை குறைந்த தரத்திலும் இருந்தால் தரம் குறைந்ததை விட்டுவிட்டு தரம் உயர்ந்ததை எடுத்துக் கொள்ள வேண்டும். இது முதலாவது அணுகுமுறை.

இந்த ஹதீஸைப் பொருத்தவரை மூன்று ஹதீஸ்களும் நம்பகத் தன்மையில் சமமாக உள்ளதால் எந்த ஒன்றுக்கும் முன்னுரிமை அளிக்க முடியாது.

இப்படிச் செய்ய வழி இல்லாவிட்டால் ஒரு ஹதீஸ் ஆரம்ப காலத்திலும் இஓனொரு ஹதீஸ் பிற்காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்,. இதற்கு ஆதாரம் கிடைத்தால் முன்னர் சொன்னதை விட்டு விட்டு பின்னர் சொன்னதை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னர் சொன்னதை பின்னர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மாற்றிவிட்டனர் என்று முடிவு செய்தால் முரண்பாடு இல்லாமல் முடிவு காண முடியும்.

ஆனால் மேற்கண்ட மூன்று ஹதீஸ்களில் எது முதலில் சொல்லப்பட்டது? எது பின்னர் சொல்லப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அந்த முடிவுக்கும் வர முடியாது.

இந்த இரண்டு வழிகளும் இல்லாவிட்டால் மூன்று ஹதீஸ்களையும் இணைத்து மூன்றுக்கும் இணக்கமான ஒரு கருத்துக்கு வர வேண்டும். இந்த ஹதீஸ்களீல் அப்படி இணைத்து பொதுக்கருத்துக்கு வருவதற்கு இடமில்லாமல் உள்ளது.

இதில் உள்ள முரண்பாடு நீங்குவதற்கு வழி இல்லாவிட்டால் வஹியில் முரண்பாடு இருக்காது என்ற அடிப்படையில் இதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று கருதி முன்றையும் விட்டு விட வேண்டும்

இப்போது பெண்கள் ஒரு நாள் பயணம் செய்யலாம் என்பதற்கும், இரண்டு நாட்கள் பயணம் செய்யலாம் என்பதற்கும், மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்பத்ற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்ற முடிவ்வுக்கு வந்து வேறு ஆதாரங்களைத் தேடவேண்டும்.

அவ்வாறு தேடும் போது கிடைத்த ஒரு ஹதீஸை நாம் முன்னர் ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தோம்.

12484 -‏ حَدَّثَنَا الْحُسَيْنُ بن إِسْحَاقَ التُّسْتَرِيُّ , حَدَّثَنَا يُوسُفُ بن مُحَمَّدِ بن سَابِقٍ , حَدَّثَنَا أَبُو مَالِكٍ الْجَنْبِيُّ , عَنْ جُوَيْبِرٍ , عَنِ الضَّحَّاكِ , عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لا تُسَافِرِ الْمَرْأَةُ ثَلاثَ أَمْيَالٍ إِلا مَعَ زَوْجٍ أَوْ مَعَ ذِي مَحْرَمٍ, فَقِيلَ لابْنِ عَبَّاسٍ: النَّاسُ يَقُولُونُ ثَلاثَةُ أَيَّامِ , قَالَ: إِنَّمَا هُوَ وَهْمٌ مِنْهُمْ. (الطبراني )

இது தான் அந்த ஹதீஸ்.

ஒரு பெண் கணவன் துணை அல்லது மஹ்ரமான ஆண் துணை இல்லாமல் மூன்று மைல் தூரம் பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் கூறினார். மூன்று நாட்கள் என்று மக்கல் கூறுகிறார்களே என்று இப்னு அப்பாஸ் அவர்களிடம் கேட்ட போது அது ஊகம் என்று பதிலளீத்தார்கள்.

ஆதாரம் தபரானி

மேற்கணட் ஹதீஸின் அடிப்படையில் மூன்று மைல் தூரத்துக்கு மேல் பெண்கள் தனியாகப் பயணம் செய்யக் கூடாது என்று முன்னர் நம்து உரையிலும் குறிப்பிட்டோம்.

ஆனால் மேற்கணட் செய்தியில் ஜுவைபிர் என்ற பலவீனமான அறிவிப்பாள்ர் இடம் பெறுவதை நாம் கவனிக்கத் தவறி விட்டோம். எனவே இதை ஆதாரமாகக் கொள்ளக கூடாது. அப்படியானால் இது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே நாம் மேலும் தேடிப் பார்த்த போது ஆதாரப்பூரவமான் மற்றொரு ஹதீஸ் இந்தப் பிரச்சனையில் தெளிவான முடிவு எடுக்க உதவும் வகையில் அமைந்துள்ளது.

அந்த ஹதீஸ் இது தான்

صحيح ابن خزيمة - (ج 4 / ص 135)

 2526 - حدثنا يوسف بن موسى حدثنا جرير عن سفيان و حدثنا أبو بشر الواسطي حدثنا خالد عن سهيل عن سعيد بن أبي سعيد عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : لا تسافر امرأة بريدا إلا و معها ذو محرم و قال يوسف : إلا و معها ذو محرم

 قال أبو بكر : البريد إثنا عشر ميلا بالهاشمي

 قال الأعظمي : إسناده صحيح

 أخرجه أبو داود (2/140 ، رقم 1724) ، والحاكم (1/609 ، رقم 1615) وقال : صحيح على شرط مسلم . والبيهقى (3/139 ، رقم 5195)

  எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் துணை இல்லாமல் ஒரு பரீத் அதாவது 12 மைல்- தூரத்துக்கு பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா

நூல்: இப்னு குஸைமா, பைஹகீ, அபூதாவூத், ஹாகிம்,

 மூன்று மைல் எனக் கூறும் ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் 12 மைல் எனக் கூறும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக உள்ளது.

இதன் அடிப்படையில் பெண்கள் 12 மைல் தொலைவு உள்ள தூரத்துக்கு தனியாகப் பயணம் செய்ய அனுமதி உள்ளது. அதற்கு மேல் தனியாகப் பயணம் செய்ய அனுமதி இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

மேலும் ஒரு நாள், அல்லது இரண்டு நாட்கள், அல்லது மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்ற கருத்தும் ஏற்புடையதாக இல்லை. இந்தக் கால கட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு உள்ளது. இஸ்லாம் எதற்காக தனித்து பயணம் செய்வதைத் தடுக்கிறதோ அதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. 12 மைல் என்பது குறைந்த தூரமாக உள்ளதால் இது ஏற்புடையதாக்வும் உள்ளது.

முன்னர் நமது ஜும்மா உரையில் மூன்று மைல்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் எனக் கூறியதை நாம் மாற்றிக் கொண்டோம் என்பதை அல்லாஹ்வுக்கு அஞ்சி சுட்டிக் காட்டுகிறோம்.

06.05.2010. 00:29

சர்ச்சையாக்கப் படும் புர்கா

சர்ச்சையாக்கப் படும் புர்கா

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய பிரான்ஸ் அரசு தடை விதிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும், உடலை மறைக்கவும் ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு உரிமை உள்ளது. பிரான்ஸிலும் இந்த உரிமை உண்டு. மக்களுக்கு உரிமை வழங்கப்படாத சர்வாதிகார நாடுகளில் தான் இது சாத்தியமாகும்.

முகம் மற்றும் முன் கை தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது.

பெண்கள் முகத்திரை அணிந்து கொண்டு தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்வதைத் தடை செய்யப்போவதாகத் தான் பிரான்ஸ் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

முகத்திரை போட்டுக் கொள்வது மத அடையாளம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளதில் இருந்து இஸ்லாத்தில் இது இல்லை என்ற கருத்தைத் தான் கூறியுள்ளார். முகத்திரை போட்டுக் கொண்டு தமது அடையாளங்களை மறைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளதில் இருந்து இதை அறியலாம்.

முகம் முன்கைகள் தவிர மற்ற உறுப்புக்களை மறைத்துக் கொள்ள அனுமதி இல்லை என்று அவர் கூறினால் அதற்கான ஆதாரம் வைத்திருப்பவர்கள் தெரிவிக்கலாம். அப்படி அவர் கூறியிருந்தால் அது இஸ்லாத்தின் மீதான தாக்குதல் என்று எடுத்துக் கொண்டு களமிறங்கிப் போராடியாக வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் இதை எதிர்க்காமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் முகத்திரை போட்டுக் கொள்ளுமாறு இஸ்லாம் பெண்களுக்குக் கட்டளையிடவில்லை.

இஸ்லாம் கூறாமல் மக்ககளாக உருவாக்கிக் கொண்ட இந்தப் பழக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்துக்கு அதிகமதிகம் கேடுகள் ஏற்படுவதை பெரு நகரங்களில் வசிப்பவர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம்.

பொதுவாக தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற காரணத்துக்காகவே மனிதன் ஒழுக்கமாக வாழ்கிறான். (இறையச்சத்துடன் உள்ளவர்கள் விதிவிலக்கு)

தான் யார் என்று தெரியாவிட்டால் எந்தத் தவறு செய்வதற்கும் அது துணிவை அளித்து விடுகிறது. இது தான் எதார்த்தமான உண்மை. சொந்த ஊரில் நல்லவனாக இருப்பவன் தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத ஊரில் தவறுகள் செய்வதற்கும் அல்லது தவறுகள் செய்வதற்காக வெளியூர் செல்வதற்கும் இதுவே காரணம்.

ஒரு பெண் முகத்தை மறைத்துக் கொண்டால் அவள் யாரோடும் ஊர் சுற்றலாம். கணவனுடன் செல்கிறாள் என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நினைக்க இது வழி வகுத்துள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவிகளில் பலர் இப்படி முகம் மறைத்து செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல.

முஸ்லிமல்லாத பெண்களும் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். கிழக்குக் கடற்கரை சாலையில் முகத்திரை போட்டு கண்ட படி சுற்றும் இளவட்டங்களில் சரிபாதிப் பேர் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

அது போல் வேசித் தொழில் செய்யும் முஸ்லிமல்லாத பெண்களும் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக முகத்திரை அணிந்து ஆண்களுக்கு வலை வீசுவதை நாம் காணலாம்.

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட முகத்திரை அணிந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதை நாம் காண முடிகிறது.

முகத்தை பெண்கள் மறைக்க வேண்டும் என்ற தவறான கொள்கை உடைய சிலர் தான் இதை எதிர்க்கிறார்களே தவிர பிரான்ஸின் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இதை எதிர்க்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் முகம் கை தவிர முழு உடலையும் ஏன் மறைக்க வேண்டும் என்பதை அறிய ஹிஜாப் என்ற கட்டுரையை வாசிக்கவும்.

11.01.2010. 13:24

ஹிஜாப் ஏன்?

ஹிஜாப் ஏன்?

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

'ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

'ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித் தனம்

ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு

இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

11.01.2010. 13:20




கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
4502968
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
56 நபர்கள்

புது வரவுகள்

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):