அல்லாஹ் போட்ட அணு குண்டு

நீங்கள் அல் ஜன்னத் பத்திரிகை ஆசிரியராக இருக்கும் போது,  அணு குண்டும் ஏவுகணையும் என்ற தலைப்பில் அளித்த அல்குர்ஆன் விரிவுரையை அல்லாஹ் போட்ட அணு குண்டு என்ற மகுடத்தில், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வெளியீடான அழைப்பு இதழில்,  மீள் பிரசுரம் செய்தோம். இது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இலங்கையில் வெளிவரும் தேசிய நாளேடு ஒன்று இதை மீள் பிரசுரம் செய்தது. மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட  இவ்விரிவுரையைப் பாராட்டி வாசகர்பகுதிக்கு எழுதியிருந்தனர்.

  பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ம் நாள் சங்பரிவாரக் கும்பல்களால் தகர்க்கப்பட்ட போது, இதே 105வது அத்தியாயத்திற்கு நீங்கள் “அபாபீல் பறவைகள் எங்கே போயின?” என்ற தலைப்பில் விளக்கம் அளித்திருந்தீர்கள்.

இதை ஆன்லைனில் வெளியிட்டால் நேயர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அனுப்பி வைக்கின்றேன்.

எம்.ஏ.ஹஃபீழ் ஸலஃபி, இலங்கை.

அல்லாஹ் போட்ட அணு குண்டு

பீ. ஜைனுல் ஆப்தீன்

திருமறைக் குர்ஆனில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களைத் தேர்வு செய்து, இப்பகுதியில் விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளோம்

 அந்த வகையில், தற்போது உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் அணு குண்டு பற்றிய இஸ்லாமியப் பார்வை என்ன?  என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.  ஈராக்கில் அணுவாயுதம் இருப்பதாக நாடகமாடி, அந்நாட்டை அமெரிக்கா அநியாயமாக ஆக்கிரமித்தது.  அங்கு நிகழ்த்தப்பட்ட அக்கிரமத்தின் ரணங்கள் ஆறு முன்னரே ஈரானில் அணுசக்தி உள்ளதாக இப்போது அந்நாட்டைக் குறிவைத்துள்ளது

 இரசாயண ஆயுதப் போர்வைக்குள் ஒவ்வொரு முஸ்லிம் நாடும் குறிவைக்கப்பட்டு வரும் இவ்வேளை, அணு சக்தி பற்றி குர்ஆன் கூறுவது என்னவென்பதை,  அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் எளிய நடையில் 105வது அத்தியாயத்திற்கு, சமகால இஸ்லாமிய அறிஞர; பீ. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் விளக்குகின்றார்கள்.  அவ்விளக்கத்தை காலத்தின் தேவை கருதி வெளியிடுகின்றோம். ஆசிரியர்- அழைப்பு

'யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு ஆக்கினான் என்பதை நீர்சிந்திக்கவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் முறியடிக்கவில்லையா?  அபாபீல் பறவைகளை அவர்கள் மீது அவன் அனுப்பவில்லையா?  அப்பறவைகள் சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன.  அதனால் அவன், அவர்களை மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று ஆக்கினான்.””       

(சூறா அல்ஃபீல் : 1-5)

 இந்த அத்தியாயத்தை ஆய்வு செய்வதற்கு முன், இந்த அத்தியாயம் கூறுகின்ற வரலாறு என்னவென்பதைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

புனித மக்கா நகரில் இப்ராஹீம் நபி (ஆப்ரஹாம் தீர்க்கதரிசி)யால்  கட்டப்பட்ட ஆலயம் உள்ளது. அது கஅபா எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆலயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே புனிதத் தலமாக அரபு சமுதாயத்தால் கருதப்பட்டு வந்தது.  அரபுகள் கூட்டம் கூட்டமாக இந்த ஆலயம் வந்து வழிபட்டு வந்தனர்.

 எமன் நாட்டைச் சேர்ந்த அப்ரஹா என்ற மன்னன், இதனால் பொறாமை கொண்டு, கஅபாவுக்குப் போட்டியாக, தனது நாட்டில் அன்றைய தலைநகராக இருந்த ‘சன்ஆ’ எனும் நகரில் ஓர்ஆலயத்தை எழுப்பினான்.  அதன் புனிதம் குறித்துப் பரவலாகப் பிரசாரம் செய்தான்.

 ஆனாலும், இவனது பிரசாரம் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. கஅபாவை நோக்கிச் செல்லும் கூட்டம் குறையவில்லை.

 கஅபா ஆலயம் இருக்கும் வரை தனது நாட்டை நோக்கி மக்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மன்னன், கஅபாவை இடித்துத் தரைமட்டமாக்கிட யானைப்படையைத் திரட்டிக் கொண்டு, மக்காவை முற்றுகையிட்டான்.

ஆனால், அவனால் கஅபா ஆலயத்தை இடிக்க முடியவில்லை. இறைவனால் அனுப்பப்பட்ட ‘அபாபீல்’ எனும் பறவைகள் கற்களால் தாக்கி, அவனையும் அவனது படையினரையும் அழித்தன.

    இது தான், அந்த அத்தியாயத்தில் கூறப்படும் வரலாற்றுச் சம்பவம். இந்த நிகழ்ச்சி நடந்த ஆண்டில் தான், நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தார்கள்

இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி இறைவன் தனது ஆலயத்தை - உலகில் ஒரே இறைவனை வணங்குவதற்காக, முதலில் எழுப்பப்பட்ட ஆலயத்தை அற்புதமான முறையில் காப்பாற்றியதைத் தான் இந்த அத்தியாயம் குறிப்பிடுகிறது.

இறைவனின் வல்லமையையும் அவனது ஆற்றலையும் விளங்கி, இறை நம்பிக்கையை வலுப்படுத்துவதும், இத்தகைய ஆற்றலுடைய இறைவன், நபிகள் நாயகத்தையும் அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயத்தையும் காப்பாற்றி, அவர்களுக்கு வெற்றியளிப்பான் என்று நம்பிக்கையூட்டுவதும் தான் இந்த அத்தியாயம் அருளப்பட்டதன் பிரதான நோக்கம்.

 இந்த அத்தியாயத்தைக் கேட்ட அன்றைய மக்கள், இப்படித் தான் இதைப் புரிந்து கொண்டனர். ஆனாலும், உலகம் உள்ளளவும் தோன்றக் கூடிய மக்களுக்கு, இன்னும் பல படிப்பினைகளும் இந்த அத்தியாயத்தில் அடங்கியுள்ளதை நாம் மறுக்க முடியாது.

இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, இந்தச் சம்பவத்தை நூறு சதவிகிதம் நம்புவார்கள். ஆனாலும், இறை நம்பிக்கையற்றவர்களின் பார்வையில் இது நம்ப முடியாத நிகழ்ச்சி, கட்டுக்கதை என்று தான் இதைக் கருதுவார்கள்.

 நம்புவதற்குச் சிரமமான, அல்லது நம்ப முடியாத கட்டுக் கதைகளைக் கூறுவோர்கேட்பவர்கள் அப்படியே நம்ப வேண்டும் என்பற்காக 'இதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது! கண்ணை மூடிக் கொண்டு நம்புங்கள்” என்று தான் கூறுவது வழக்கம்.

ஆனால், இந்த அத்தியாயத்தில் இறை நம்பிக்கையற்றவர்களால் நம்ப முடியாத ஒரு நிகழ்ச்சி கூறப்பட்டாலும், இதன் துவக்கத்திலேயே 'நீர் சிந்திக்கவில்லையா?” என்று கூறப்படுகிறது.

ஆம்’! சிந்திக்காது நம்புங்கள் என்று கூற வேண்டிய இடத்தில், சிந்திக்குமாறு தூண்டுகிறது இந்த அத்தியாயம்.

 அப்படியானால், இந்த அத்தியாயத்தில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

 எதைச் சிந்திப்பது? யானைப் படையினரை உமது இறைவன் என்ன செய்தான் என்பதைச் சிந்திக்கவில்லையா? என்று கூறாமல் எப்படி ஆக்கினான் என்பதைச் சிந்திக்கவில்லையா?  என்று இந்த அத்தியாயம் கூறுகிறது.

 என்ன நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் எப்படி நடந்தது? என்பதைச் சிந்திப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.

என்ன நடந்தது? என்பதைச் சிந்தித்தால், நடந்த சம்பவத்தைப் பூரணமாக அறிந்துகொள்க என்பது பொருள்.

எப்படி நடந்தது? எவ்வாறு அவர்கள் அழிக்கப்பட்டார்கள்? என்பதைச் சிந்திக்கச் சொல்கிறான்  இறைவன்.

 இது எப்படி நடந்தது?  இவர்களை அழிக்க எத்தகைய சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைச் சிந்தியுங்கள் என்கிறான் இறைவன்.  அதனால் தான் ‘கைஃப ஃபஅல’ (எப்படி அழித்தான்) என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.

எப்படி அழித்தான் என்பதைச் சிந்திக்கச் சொல்வதன் பயன் என்ன?  எப்படி நடந்தது என்பதை ஆராயுமாறு ஒருவரிடம் நாம் கூறினால், அதை அவர்கண்டுபிடித்து, அது போல் செய்ய முடியும் என்ற நிலையில் தான் 'எப்படி நடந்தது எனச் சிந்தித்துப் பார்” என்று நாம் கூறுவோம்.

இதுபோன்ற வார்த்தைப் பிரயோகமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எறியப்பட்ட கல்லை முதலில் எடுத்துக் கொள்வோம். 'சூடேற்றப்பட்ட கல்” என்று பரவலாக தமிழாக்கம் செய்யப்பட்டு வந்தாலும் அந்தப் பொருளே நமது ஆய்வுக்குப் போதுமானதாக இருந்தாலும், அந்தப் பொருள் சரியானதன்று.

ஹிஜாரதின் சிஜ்ஜீல்’ எனக் கூறினால், சூடேற்றப்பட்ட கல் எனும் தமிழாக்கம் சரியானதாக இருக்கலாம்.  'ஹிஜாரதின் மின் சிஜ்ஜீல்” என்று இறைவன் கூறுகிறான்.  இந்த ‘மின்’ என்ற வார;த்தை மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

கா(த்)தமுன் மின் தஹபின்’ என்றால், தங்கம் எனும் மூலத்தாலான மோதிரம் என்று பொருள்.  ஒரு மூலத்தாலான என்ற கருத்து ‘மின்’ என்ற சொல்லில் அடங்கியுள்ளது.

ஹிஜாரதுன்’ என்றால், ‘கல்’ என்பது பொருள்.  ‘மின் சிஜ்ஜீல்’ என்றால், ‘சிஜ்ஜீல் எனும் மூலத்திலான’ என்பது பொருள்.

ஹிஜாரதுன் மின் சிஜ்ஜீல்” என்றால், 'சிஜ்ஜீல் எனும் மூலத்தினாலான கல்” என்பது ஆகும்.

அதாவது, கல் என்றால் வீதியில் கிடக்கும் சாதாரண கல் என்று நினைத்து விட வேண்டாம். மிக மிகக் கடுமையான வெப்பத்தைக் கொண்ட, 'சிஜ்ஜீல்” எனும் மூலத்திலான கல் என்று இறைவன் கூறுகிறான். 'சிஜ்ஜீல்” என்பதன் பொருள் மிகவும் வெப்பமானது என்பது பொருளாகும்.

அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை அடிப்படையில் கல் வகை தான். ஆனாலும், கடுமையான வெப்பத்தைக் கொண்டது.  வெப்பத்தின் அளவைக் கொண்டு மதிப்பிடக் கூடியது.  ‘15 கிலோ டொன் வெப்ப முடையது’ என்று தான் அதன் சக்தியைக் குறித்துக் குறிப்பிடுகின்றனர;.

மண்ணில் மறைந்து கிடக்கின்ற, மிகவும் கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடிய, ஒரு மூலப் பொருளால் உருவாக்கப்பட்ட கல் என்று இந்த வசனம் கூறுகிறது.

வெறும் அற்புதம் என்ற வகையில் மாத்திரம் நடத்தப்பட்டதென்றால், அந்தக் கல்லுக்குரிய சக்தியை இறைவன் குறிப்பிட வேண்டியதில்லை.  இன்னும் சொல்வதானால், சாதாரண கல்லால் அழிப்பது தான் அற்புதமாகும். சக்தி மிக்க கல்லால் அழிப்பதில் பெரிய அற்புதம் இல்லை.

கல்லின் மூலத்தையும் அதன் தன்மையையும் இறைவன் கூறியிருப்பதிலிருந்தும், அதைச் சிந்தித்துப் பார்க்குமாறு கூறியிருப்பதிலிருந்தும் அற்புதமாக நடந்த சம்பவமாக நினைத்து விட வேண்டாம் என்று மறைமுகமாக உணர்த்தப் படுகிறது.

அதாவது, உலகில் மண் இனத்தைச் சேர்ந்த மூலப்பொருள் ஒன்று உண்டு. அது, கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியது.  அதில், சிறிய அளவு கூட பெரும் படையை அழிக்க வல்லது. அதைச் சிந்தித்துக் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் என்பது தான் இதிலிருந்து நாம் பெறவேண்டிய பாடம்.

இது மட்டுமன்றி, அந்தக் கற்களால் தாக்கப்பட்டவர்கள் அழிந்த விதம், இன்னும் நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

அந்தக் கல் பட்டதும் மூர்ச்சையுற்றார்கள்!, அல்லது அதிர்ச்சியில் பிணமானார்கள் என்றெல்லாம் இறைவன் கூறாமல், மென்று உமிழப்பட்ட வைக்கோல் போலானார்கள்” என்கிறான்.

அதாவது இந்தக் கல்லால் தாக்கப்பட்டவர்கள், வெடித்துச் சிதறித் தூழாகி விட்டனர்என்கிறான். எவரது உடலும் முழு உடலாக இருக்கவில்லை.

அணு சக்தியைப் பயன்படுத்தினால் அதன் மூலம் ஏற்படும் அழிவு எப்படி இருக்குமோ, அதை நம் கண் முன்னே கொண்டு வருகிறான் இறைவன்.

பெரும் படையைத் திரட்டி வந்தவர்கள் மீது போடப்பட்ட அந்த அணுகுண்டு, அளவில் மிகவும் குறைவானதாகும். ஒரு பறவையின் வாயில் குறிபார்த்து வீசுவதற்கு ஏற்ற வகையில், அதிக பட்சமாக பத்து கிராம் எடையைத் தான் வைக்க முடியும். நூறு பறவைகள் வந்திருந்தால் கூட, அவை சுமந்து வந்த கற்களின் மொத்த எடை ஒரு கிலோ தான்.  ஒரு கிலோவால் ஒரு படையை அழிக்க முடியுமா?  அணுகுண்டால் முடியும்.

அது மட்டுமன்றி, இந்தக் கற்களை பறவைகள் சுமந்து வந்து போட்டன என்கிறான் இறைவன்.

சூடேற்றடப்பட்ட கல்லை - படையினரையே அழிக்க வல்ல கல்லை - பறவைகள் வாயில் சுமக்கும் போது, அந்தச் சூட்டினால் கருகவில்லையே! இது ஏன்

இதுவும், சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.  சிலபேர் கூறுவது போல், அந்தக் கல் பழுக்கச் சூடு படுத்தப்பட்டிருந்தது என்று பொருள் கொண்டால், படையினர்அழிவதற்கு முன், பறைவகள் அழிந்து போயிருக்க வேண்டும்!

இந்தச் சூடு என்பது, வீசி வெடிக்கப்படும் போது தான் வெளிப்படுமே தவிர, வெடிக்காமல் சுமக்கும் போது வெளிப்படாது. எந்த வெடி குண்டையும் நாம் சுமந்தால், நம்மை அது சுடுவதில்லை.  வெடிக்கச் செய்தால், அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் நம்மையே அழித்துவிடும்.

இதிலிருந்து, அந்த வெப்பமான மூலப் பொருளின் தன்மை என்ன என்பதையும் இறைவன் கூறுகிறான்.

அது மாத்திரமன்றி, இத்தகைய வெடிகுண்டுகளை நாம் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை; இருந்த இடத்திலிருந்தே ஏவி, இன்னொரு இலக்கைத் தாக்க முடியும் என்பதையும், அதாவது ஏவுகணையைப் பற்றியும் இங்கே குறிப்பிடுகிறான்.

உலகில் உள்ள எந்தப் பறவையையும் அபாபீல் என்று கூறுவதில்லை. இது, இறைவனே சூட்டிய பெயர்.அவை, இந்தப் பணிக்காக மாத்திரம் அனுப்பிய பறவைகள்

நாட்டு மக்களுக்குத் தெரியாத பறவையைப் பற்றிக் கூறுகிறான். அது, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட உயிருள்ள பறவையாக இருக்கலாம் என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை.

இதையும் சிந்திக்க வேண்டுமல்லவா? தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளைத் தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை.  இருந்த இடத்திலிருந்தே பொருத்தலாம். அவை அபாபீல் பறவையைப் போல், பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழித்து விடும் என்பதை விளங்கலாம்.

ஏவுகணை குறித்து வேறு வசனங்கள் உள்ளன.  என்றாலும், அணுகுண்டு சக்தி குறித்து விளங்கிட இதுவே போதுமானதாகும்.

இன்றைய அரபுகள் இந்த வசனத்தை ஆய்வு செய்திருந்தால், அல்லது இனியாவது ஆய்வு செய்தால், அந்தப் பகுதியில் ‘சிஜ்ஜீல்’ எனும் மூலப் பொருளைக் கண்டெடுத்திருக்க முடியும். ஏனோ இதிலெல்லாம் அவர்களுக்கு அக்கறையில்லை.

08.02.2010. 17:58

மனிதன் சுமந்த அமானிதம் எது?

மனிதன் சுமந்த அமானிதம் எது?

அல்குர்ஆன் 33:72 வசனத்தில் அமானிதம் என்ற பதத்துக்கு பகுத்தறிவு என்று தமிழகத்து தவ்ஹீது உலமாக்கள் விளக்கமளிக்கின்றார்கள். கண்களுக்குப் புலப்படாத ஒன்றை ஒரு பொருளாகக் கொள்ள முடியாது. மேலும் அமானிதம் என்ற பதம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டிய ஒரு பொருளாகவே கருத வேண்டியுள்ளது. எனவே இந்த அமானிதம் என்பது திருக்குர்ஆனைத் தான் குறிக்கும் என்று எண்ணுகின்றேன். மேலும் அல்குர்ஆன் 59:21 வசனத்தில் இந்தக் குர்ஆனை மலைகள் மீது இறக்கி வைத்திருந்தால் அது பஞ்சு பஞ்சாகப் பறந்திருக்கும் என்று கூறுகின்றான். இந்த இரு வசனங்களையும் இணைத்துப் பார்த்தால் இரண்டுமே அருள் மறைக் குர்ஆனைத் தான் குறிப்பிடுகின்றன என்று ஏன் கூறக் கூடாது?

ஹெச்.எம். ஹனீபா, இலங்கை

வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அறியாதவனாகவும், அநீதி இழைப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)

இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அமானிதம் என்பது என்ன என்பது குர்ஆனில் ஏனைய இடங்களிலோ அல்லது நபிமொழிகளிலோ சுட்டிக் காட்டப்படவில்லை.எனவே பொதுவாக மனிதர்களுக்கும் ஏனைய அனைத்துப் படைப்பினங்களுக்கும் உள்ள வித்தியாசம் பகுத்தறிவு தான். எனவே இதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது என்று நாம் கூறி வருகின்றோம்.

இதை மறுப்பதற்கு நீங்கள் கூறும் காரணங்கள்

1. கண்ணுக்குப் புலப்படாத ஒன்றை இது குறிப்பிடவில்லை.

2.அமானிதம் என்றால் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் பகுத்தறிவு என்று பொருள் கொண்டால் பொருந்தாது என்று கூறுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிடும் திருக்குர்ஆன் என்ற பொருள் கொண்டாலும் இந்த இரண்டு காரணங்களும் பொருந்தாது என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்.

திருக்குர்ஆன் என்பது கண்ணுக்குப் புலப்படும் பொருளாக அருளப்படவில்லை. ஓசை வடிவத்திலானது தான். நம்முடைய வசதிக்காக அதை அச்சிட்டு பொருள் வடிவத்தில் ஆக்கிக் கொண்டோம். திருக்குர்ஆன் வசனங்கள் என்பதும் கண்ணுக்குப் புலப்படாத ஓசை வடிவிலானது தான்.

அமானிதம் என்றால் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறினால் மறுமையில் திருக்குர்ஆனை நாம் திருப்பி ஒப்படைக்கப் போவதில்லை. அதன் போதனைகளின் அடிப்படையில் நடந்தது பற்றித் தான் அல்லாஹ் விசாரிப்பான். அதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றால் அதே விளக்கம் பகுத்தறிவு என்பதற்கும் பொருந்தும்.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.(அல்குர்ஆன் 59:21)

இந்த வசனத்தையும், மேற்கண்ட வசனத்தையும் இணைத்து அமானிதம் என்பது திருக்குர்ஆன் தான் என்ற முடிவுக்கு வரலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இந்த வசனத்தில் நடக்காத ஒன்றை உதாரணமாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.இறக்கியிருந்தால்'' என்று அல்லாஹ் கூறுவது அவ்வாறு இறக்கவில்லை என்பதையே காட்டுகின்றது.

ஆனால் 33:52 வசனத்தில் அந்த அமானிதத்தை சுமக்குமாறு வானங்கள், பூமி, மலைகள் போன்றவற்றுக்கு நாம் முன் வைத்தோம்.ஆனால் அவை மறுத்து விட்டன. மனிதன் சுமந்து கொண்டான் என்று படைப்பின் போது நடந்த நிகழ்வுகளாகக் கூறப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வசனத்தில் மனிதன் சுமந்து கொண்டான்'' என்பது ஒட்டு மொத்த மனித இனத்தையும் குறிப்பதாகும். ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தாலாவது திருக்குர்ஆனைக் குறிக்கின்றது எனலாம்.ஆனால் திருக்குர்ஆன் என்பது நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு மட்டும் உரிய வேதம்! எனவே இந்த வசனத்தில் கூறப்படும் அமானிதம் என்பது திருக்குர்ஆனைக் குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை.

19.01.2010. 15:37

உறுதி வந்து விட்டால் வணங்க வேண்டாமா?

உறுதி வந்து விட்டால் வணங்க வேண்டாமா?

உறுதி வரும் வரை (யகீன்) என்றால் என்ன?

பி. ஜைனுல் ஆப்தீன்

திருக்குர்ஆன் விளக்கம்

ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை நேயர்கள் பயன் பெறுவதற்காக வெளியிடப்படுகிறது

உமக்கு உறுதி வரும் வரை இறைவனை வணங்குவீராக!

(திருக்குர்ஆன் 15:99)

உலகில் உள்ள ஆன்மீக நெறிகளில் இஸ்லாம் தலை றந்த ஆன்மீக நெறியாகத் திகழ்கிறது!

ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் நடப்பதை அடியோடு தடை ய்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றெல்லாம் நாம் பெருமிதம் கொள்கிறோம். முஸ்லிமல்லாத அன்பர்களும் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர்.

ஆயினும் முஸ்லிம் சமுதாயத்திலும் போலி ஆன்மீகவாதிகள் உருவானர்கள். அவர்களின் போலி ஆன்மீகக் கொள்கைக்கு குர்ஆனிலும், நபிவழியிலும் ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும் திருக்குர்ஆனின் சில வசனங்களைத் தங்கள் விருப்பம் போல் வளைத்து அதை ஆதாரமாகக் காட்டினார்கள். மார்க்கம் அறியாத மக்களை ஏமாற்றலானார்கள்.

போலி ஆன்மீகவாதிகள் தமக்குச் சாதகமாக வளைத்துக் காட்டும் வசனங்களில் மேலே கூறப்பட்ட வசனமும் ஒன்றாகும்.

ஆன்மீகக் குருமார்கள் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் போலிகள் இஸ்லாத்தின் ஏராளமான கட்டளைகளைக் கடைப் பிடிக்கமாட்டார்கள். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைக் கூட நிறைவேற்ற மாட்டார்கள்.

ஆடல், பாடல் கேளிக்கைகளில் கூட மூழ்குவார்கள்! அந்நியப் பெண்ணிடம் தனித்திருப்பார்கள்!

ஏன் இப்படி நடக்கிறீர்கள் என்று கேட்டால் சட்டதிட்டங்கள் எல்லாம் சாதாரணமானவர்களுக்குத் தான். நாங்கள் ஆன்மீகத்தில் கரை கண்டு விட்டதால் எங்களுக்கு எந்தச் சட்ட திட்டங்களும் இல்லை என்று கூறுவார்கள்.

உறுதி வரும் வரை இறைவனை வணங்க வேண்டும் என்று தான் அல்லாஹ் கூறுகிறான். உறுதி வராத சாதாரண மக்கள் மீது தான் வணக்க வழிபாடுகள் கடமையாகும். எங்களுக்கு உறுதி வந்து விட்டதால் நாங்கள் இறைவனை வணங்க வேண்டியதில்லை எனக் கூறுவார்கள். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள்.

உறுதி வரும் வரை இறைவனை வணங்கு என்று குர்ஆனில் கூறப்பட்டடுள்ளதால் போலிகளின் வாதத்தை உண்மையென்று நம்பிப் பலரும் ஏமாந்து போகின்றனர்.

எனவே இந்த வசனம் கூறுவது என்ன? என்பதை விரிவாகவே நாம் ஆராய்வோம்.

உறுதி என்று தமிழாக்கம் செய்யப்பட்ட இடத்தில் யகீன் என்ற மூலச்சொல் இடம்பெற்றுள்ளது. உறுதி, உறுதியான நிகழ்வு ஆகிய இரண்டு அர்த்தங்கள் இச்சொல்லுக்கு இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

உறுதி என்றால் மனிதனின் சிந்தனையில் ஏற்படும் நம்பிக்கை.

உறுதியான நிகழ்வு என்றால் சந்தேகத்திற்கிடமில்லாத காரியத்தைக் குறிக்கும்.

ஒரு கல்லை எடுத்து மேலே நாம் வீசுகிறோம். அது கீழே வந்து விழுவது சந்தேகத்திற்கிடமில்லாத நிகழ்வு. அது கீழே விழுவதற்கு முன்பே கீழே விழும்என்று நாம் அடித்துக் கூற முடியும். இந்த நிகழ்வு உறுதியானது என்ற கருத்தில் இதை யகீன் (உறுதியான நிகழ்வு) எனலாம்.

கல்லை மேலே வீசாமலே ஒரு கல்லை மேலே வீசினால் கீழே விழும் என்று நம்புகிறோம். பொதுவாக நாம் நம்புவதை இது குறிக்கிறது. இதையும் யகீன் (உறுதியான நிகழ்வு) எனக் கூறலாம்.

இந்த வசனத்திற்கு எவ்வாறு பொருள் கொள்வது?

உனது உள்ளத்தில் - சிந்தனையில் - உறுதி வரும் வரை என்று பொருள் கொள்வதா?

அல்லது உறுதியான ஒரு காரியம் உம்மிடம் வரும் வரை என்று பொருள் கொள்வதா? என்பதை முடிவு செய்து விட்டால் தெளிவு கிடைத்து விடும்.

அதற்கு முன் மற்றொரு விசயத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

யகீன் (உறுதியான காரியம்) என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டால் உறுதியான காரியங்கள் பல இருந்தாலும் மரணத்தையே அரபுகள் கருத்தில் கொள்வார்கள்.

ஏனெனில், உலகிலேயே மிகவும் உறுதியான ஒரே விசயம் மரணம் மட்டுமே.

ஒவ்வொரு மனிதனும் மரணிப்பான் என்பதை நம்பாத ஒரே ஒரு மனிதன் கூட உலகில் கிடையாது. அனைத்து மக்களும் உறுதியான காரியமாக நம்புவது மரணத்தை மட்டுமே. எனவே உறுதி என்ற பொருளைத் தவிர்த்து உறுதியான காரியம் என்று பொருள் கொண்டால் அதன் கருத்து மரணம் தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உமக்கு உறுதி(யான நம்பிக்கை) வரும் வரை என்று பொருள் கொள்ள முடியாது.

உமக்கு உறுதி(யான நிகழ்வு-மரணம்) வரும் வரை என்று தான் இங்கே பொருள் கொள்ள வேண்டும்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம் என்னவென்றால் யகீன் என்ற சொல்லுடன் வருகை என்ற சொல்லோ அல்லது வருகையிலிருந்து பிறந்த சொல்லோ இணையுமானால் அப்போது உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளக் கூடாது. உறுதியான நிகழ்வு - உறுதியான காரியம் - (அதாவது மரணம்) என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

யகீன் வந்தது

யகீன் வரும்

யகீன் வருமானால்

யகீனின் வருகை

என்றெல்லாம் யகீன் என்ற சொல்லுடன் வருகை அல்லது அதிலிருந்து பிறந்த சொற்கள் சேர்ந்தால் மரணம் என்றே பொருள்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் உமக்கு யகீன் வரும் வரை என்று கூறப்பட்டுள்ளது. வருகையுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளதால் உறுதியான நம்பிக்கை என்று பொருள் கொள்ளவே முடியாது.

உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை வருவது வரை என்று கூற வேண்டுமானால் யகீன் என்ற சொல்லை வினைச் சொல்லாக மாற்றிக் கூற வேண்டும்.

அதாவது ஹத்தா தஸ்தைகின எனக் கூறினால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை எனப் பொருள். யகீன் என்பது தஸ்தைகின என்று வினைச் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது.

யகீன் உம்மிடம் வரும் வரை என்று (ஹத்தா யஃதியகல் யகீன்) கூறப்பட்டால் உறுதியான நம்பிக்கை உமக்கு வரும் வரை என்ற அர்த்தம் செய்யவே முடியாது. உறுதியாக நிகழ வேண்டிய ஒரு காரியம் உம்மை வந்து அடையும் வரை என்று தான் பொருள் கொள்ள முடியும்.

அரை குறையான மொழியறிவை வைத்துக் கொண்டு தான் இவ்வசனத்திற்கு இலக்கணப்படி செய்யத் தகாத அர்த்தம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதற்குச் சான்றாக திருக்குர்ஆனில் இடம்பெற்ற இது போன்ற மற்றொரு வசனத்தை நாம் எடுத்துக் காட்டலாம்.

திருக்குர்ஆனின் 74வது அத்தியாயத்தின் இறுதியில் நரகவாசிகளுடன் நல்லடியார்கள் உரையாடும் காட்சியை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

நீங்கள் ஏன் நரகத்துக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு நரகவாசிகள் விடையளிக்கும் போது:

நாங்கள் தொழுகையாளிகளாக இருந்ததில்லை.

ஏழைகளுக்கு நாங்கள் உணவளிக்கவில்லை.

வீணர்களுடன் மூழ்கிக் கிடந்தோம்.

நியாயத் தீர்ப்பு நாளை நம்பாமல் இருந்தோம.

என்றெல்லாம் காரணங்களை நரகவாசிகள் அடுக்குவார்கள். எது வரை இவ்வாறு நடந்து கொண்டோம் எனக் கூறும் போது:

எங்களுக்கு யகீன் வரும் வரை என்றும் அவர்கள் கூறுவார்கள். (74:47)

15:99 வசனத்தில் இடம் பெற்ற அதே யகீன் என்ற சொல் வருகையிலிருந்து பிறந்த வரும் வரை என்ற சொல்லுடன் இணைந்து இங்கே இடம் பெற்றுள்ளது. 15:99வது வசனத்திற்கு போலி ஆன்மீகவாதிகள் எவ்வாறு பொருள் செய்தார்களோ அது போல் இங்கேயும் அவர்கள் பொருள் செய்து காட்ட வேண்டும்.

அதாவது எங்களுக்கு உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம்.

எங்களுக்கு உறுதி வரும் வரை நியாயத் தீர்ப்பு நாளை மறுத்து வந்தோம் என்று தான் இவர்களது வாதத்தின்படி பொருள் கொள்ள வேண்டும்.

உறுதி வரும் வரை தொழாமல் இருந்தோம். உறுதி வந்தவுடன் தொழுது விட்டோம் என்ற கருத்து அதனுள் அடங்கியுள்ளது.

உறுதி வந்த பின்னர் தொழுதார்கள் என்றால் ஏன் நரகத்தில் தள்ளப்பட வேண்டும்?

உறுதி வந்த பின் ஏழைகளுக்கு உணவளித்தவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள்?

அவர்கள் சுவர்க்கத்திற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் இவர்களது அறியாமை அம்பலமாகின்றது.

மரணம் என்று இங்கே பொருள் செய்து பாருங்கள்!

எங்களுக்கு மரணம் வரும் வரை ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை என்று பொருள் கொண்டால் அவர்கள் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்குரிய பொருத்தமான விடையாக அமைந்து விடுகிறது.

உறுதி வரும் வரை என்று பொருள் கொண்டால் ஏன் நரகத்திற்குச் சென்றார்கள் என்ற கேள்விக்கு விடையாக அது அமையாது.

எங்களுக்கு யகீன் (உறுதியான நிகழ்வு என்னும் மரணம்) வரும் வரை என்று பொருள் கொள்ளும் நிலைக்கு அவர்கள் இப்போது தள்ளப்படுவார்கள்.

15:99 வசனத்திற்கும் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். அது தான் இலக்கண விதியாகும்.

எனவே உறுதியான நிகழ்வு என்னும் மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்க வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் பொருளாகும்.

மனிதர்களிலேயே அதிகமான உறுதியைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். உறுதி வரும் வரை தான் வணங்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா வணக்கத்தையும் விட்டிருப்பார்கள்.

எனக்கு உறுதி வந்து விட்டதால் நான் வணங்க மாட்டேன். வணங்கத் தேவையில்லை. நீஙகள் மட்டும் வணங்குங்கள் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணப் படுக்கை வரை இறைவனை வணங்கிக் கொண்டே இருந்தார்கள்.

மற்றவர்களுக்கு எதைத் தடை செய்தார்களோ அதை முதலில் தவிர்த்துக் கொள்பவர்களாகக் கடைசி வரை அவர்கள் இருந்தார்கள். மற்றவர்களை விட அதிகம் வணங்குபவர்களாக அவர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை இவ்வசனத்தின் பொருளை நமக்கு மேலும் தெளிவாக விளக்கி விடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அடுத்து உறுதியான நம்பிக்கையைப் பெற்றவர்கள் நபித்தோழர்கள். இந்தப் போலி ஆன்மீகவாதிகளை விட பல கோடி மடங்கு உறுதியை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களின் ஒருவர் கூட எனக்கு உறுதி வந்து விட்டதால் இனி மேல் வணங்க மாட்டேன் எனக் கூறவில்லை. மரணிக்கும் வரை அவர்கள் வணங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.

இதன் காரணமாகவும், போலி ஆன்மீகவாதிகள் செய்த அர்த்தம் தவறானது என்பது உறுதியாகிறது.

ஆன்மீகம் என்பது மேலும் மேலும் மனிதனின் நிலையை உயர்த்த வேண்டும். மேலும் மேலும் மனிதனைக் பக்குவப்படுத்த வேண்டும். ஆனால், இந்தப் போலி ஆன்மீகவாதிகள் கொடுக்கும் விளக்கம் மனிதனை மேலிருந்து கீழே இறங்குவதாக அமைந்துள்ளது.

அதாவது உறுதி வரும் வரை தொழுவார்களாம்! உறுதி வந்து விட்டால் கஞ்சா அடிப்பார்களாம்! ஆட்டம் போடுவார்களாம்! ஒரு பொறுக்கியின் நடவடிக்கைக்கு ஒப்ப நடப்பார்களாம்!

மனிதனைப் பாதாளப் படுகுழியில் தள்ளுகின்ற இப்படி ஒரு வழியை இஸ்லாம் கூறுமா என்பதைச் சிந்தித்தால் இவர்கள் எந்த அளவுக்குக் கேடுகெட்டவர்கள் என்பதை அறியலாம்.

உறுதியான காரியமாக இருக்கக் கூடிய மரணம் உங்களுக்கு வரும் வரை வணங்கிக் கொண்டே இருங்கள் என்பது தான் இவ்வசனத்தின் பொருளே தவிர போலி ஆன்மீக வாதிகள் கூறுவது போல் பொருள் கொள்ள முடியாது என்பதில் எள் முனையளவு கூட சந்தேகமில்லை.!

18.01.2010. 10:28

இறைவன் கூறும் ஸலவாத்

இறைவன் கூறும் ஸலவாத்!

பி. ஜைனுல் ஆப்தீன்

திருக்குர்ஆன் விளக்கம்

இது ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை. நேயர்கள் பயன் பெறுவதற்காக இங்கே வெளியிடுகிறோம்.

இந்த நபியின் மீது அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! அவர் மீது நீங்கள் ஸலவாத்தும் நல்ல முறையில் ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)

இது முஸ்லிம்கள் அதிக அளவில் செவியுறும் வசனங்களில் ஒன்றாகும். இவ்வசனத்தைத் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் பலர் தவறான பொருள் செய்து அதன் அடிப்படையில் விளக்கம் கூறி வருவதை நாம் காண்கிறோம்..

இவ்வசனத்தில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன.

1-இந்த நபியின் மீது அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் ஸலவாத் கூறுகின்றனர்.

2-நீங்கள் அவர் மீது ஸலவாத் கூறுங்கள்.

இதில் இரண்டாவது வாக்கியத்துக்கு அனைவரும் சரியாகவே பொருள் கொள்கின்றனர். ஆனால், முதல் வாக்கியத்துக்கு மேற்கண்டவாறு பொருள் கொள்வது தவறாகும்.

இது எப்படி தவறான மொழிபெயர்ப்பாக உள்ளது என்பதை அறிவதற்கு முன் ஸலவாத் கூறுவது என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இவ்வசனம் அருளப்பட்ட பின் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்ற சந்தேகம் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உங்கள் மீது நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று விளக்கம் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் சொற்களைக் கற்றுக் கொடுத்தனர்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.

ஸலாவத் எவ்வாறு கூறுவது என நபித் தோழர்கள் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள் என்ற செய்தி புகாரி (3369, 4798, 6357, 6358, 6360) ஆகிய எண்களுடைய ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த மேற்கண்ட ஸலவாத்தின் பொருளை அறிந்து கொண்டால் ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளும் தெரிய வரும்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!. நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

இறைவா! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பரகத் புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக! நீ புகழுக்குரியவன், மகத்துவமிக்கவன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட ஸலவாத்தின் தமிழாக்கம் இது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் நாம் வேண்டுவது தான் ஸலவாத் கூறுதல் எனப்படும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மற்ற சமுதாயத்தினர் தங்கள் நபிமார்களை வணக்கத்திற்குரியவர்களாகவும், பிரார்த்தனை செய்யப்படுவோராகவும் ஆக்கி விட்டனர். முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவ்வாறு ஆக்கி விடக் கூடாது என்பதற்கான கேடயமே ஸலவாத் கூறுதல்.

நபிகள் நாயகத்திடம் நமது தேவைகளைக் கேட்காமல் அவர்களுக்காக நாம் தான் இறைவனிடம் கேட்கிறோம். இதிலிருந்து இறந்தவருக்காக நாம் தான் பிரார்த்தனை செய்ய வேண்டுமே தவிர இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது என்ற கருத்தும் பெறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த - தொழுகையில் நாம் ஓதி வருகின்ற - ஸலவாத் மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்கும் போது, நாமாக ஓதி வரும் ஸலவாத்தின் பொருளைக் கவனித்தாலும் இந்த உண்மையை உணரலாம்.

அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று சிலர் கூறுவார்கள். இறைவா! அவர்கள் மீது அருளும், பாக்கியமும் பொழிவாயாக என்பது இதன் பொருள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வேறு சிலர் கூறுவார்கள். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்து ஈடேற்றமளிப்பானாக என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனையே ஸலவாத் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதை விரிவாக விளக்குவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஸலவாத் கூறுதல் என்பதன் பொருளை விளங்காமல் நபிகள் நாயகத்திடம் நாம் எதையோ வேண்டுவதாகச் சிலர் நினைக்கின்றனர். சாதாரண மக்கள் இவ்வாறு நினைப்பதையாவது மன்னித்து விடலாம். மிகச் சில மவ்லவிமார்களும், இப்படி விளங்கி வைத்திருப்பது நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது.

நபிகள் நாயகத்திடம் எதையும் கேட்கக் கூடாது. அவர்களுக்காக நாம் தான் கேட்க வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கிய ஸலவாத்தை இதற்கு நேர் எதிராக விளங்கியுள்ளனர்.

இனி முன்னர் குறிப்பிட்ட விசயத்திற்கு வருவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது எவ்வாறு தவறு என்பதைக் காண்போம்.

நபிகள் நாயகத்திற்காக இறைவனிடம் வேண்டுவதே ஸலவாத் என்பதை விளங்கியுள்ளோம். இதனடிப்படையில் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் நபிகள் நாயகத்திற்காக அல்லாஹ் இறைவனிடம் அருளை வேண்டுகிறான் என்ற கருத்து வருகிறது.

அதாவது நாம் கூறுவது போலவே அல்லாஹ்வும் ஸலவாத் கூறுகிறான் என்றால்- அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹி என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால்- இத்தகைய விபரீத அர்த்தம் வரும்.

இறைவா! நீ அருள் புரிவாயாக என்று அல்லாஹ் எப்படிக் கூறுவான்?

அப்படி அல்லாஹ் கூறினால் அல்லாஹ்வுக்கு மேல் ஒரு அல்லாஹ் இருக்கிறானா?

அந்த அல்லாஹ்விடம் இந்த அல்லாஹ் இவ்வாறு வேண்டுகிறானா?

என்றெல்லாம் பல கேள்விகள் இதில் எழும். அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று பொருள் கொள்வது அப்பட்டமான இணை கற்பித்தலாகவே அமையும்.

அப்படியானால் இதன் சரியான பொருள் என்ன?

ஸலவாத் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.

1. பிறருக்காக அருள் வேண்டுதல்.

2. பிறருக்கு அருள் புரிதல்.

என்பதே அந்த இரண்டு அர்த்தங்கள்.

இச்சொல்லை மனிதர்கள், வானவர்கள், ஜின்கள் உள்ளிட்டவர்களுடன் தொடர்புபடுத்தும் போது, அருள் வேண்டினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதே சொல்லை அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லும் போது, அருளை வேண்டினான் என்ற பொருளைக் கொள்ளாமல் அருள் புரிகிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது நமது புதிய கண்டுபிடிப்பு அல்ல. அரபுக் கல்லூரிகளில் அல்ஃபியா போன்ற இலக்கண நூல்களிலேயே இந்த விபரம் கூறப்பட்டு உலமாக்கள் அறிந்து வைத்திருக்கிற சிறிய விசயம் தான். ஆனாலும், சில உலமாக்கள் தாம் அறிந்ததற்கு மாறாக அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று விபரீதம் புரியாமல் மேடைகளிலேயே பேசி விடுகின்றனர்.

இவ்வசனத்திற்கு முழுமையாகப் பொருள் கொள்வதென்றால் கீழ்கண்டவாறு தான் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக அருளை வேண்டுங்கள்! நல்ல முறையில் அவருக்காக ஸலாம் கூறுங்கள்.

இப்படித் தான் இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திருந்தால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பது போன்ற விபரீதமான சொற்கள் வழக்கத்தில் வந்திருக்காது.

நாம் கூறியதை மேலும் வலுப்படுத்திட இதே அத்தியாயத்தின் 43வது வசனத்தையும் உதாரணமாகக் குறிப்படலாம்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவனும், அவனது வானவர்களும் உங்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் அன்புமிக்கவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33:43)

இவ்வசனத்தைக் கவனியுங்கள்! 56வது வசனத்தில் நபிகள் நாயகத்தின் மீது அல்லாஹ் ஸலவாத் கூறுவதாகக் குறிப்பிட்டது போல் அனைத்து நம்பிக்கையாளர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத் கூறுவதாக இவ்வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பயன்படுத்திய அதே சொல்லை இவ்வசனத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் இறைவன் இங்கே பயன்படுத்தியுள்ளான்.

அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்று இந்த வசனத்திற்கு பொருள் கொள்ளாமல் அல்லாஹ் அருள் புரிகிறான் என்று சரியாக பொருள் செய்யும் உலமாக்கள், அது போன்று அமைந்த 56வது வசனத்திற்கு மட்டும் ஏறுக்கு மாறாகப் பொருள் செய்வதிலிருந்து அவர்கள் அறிந்து கொண்டே தான் தவறான கருத்தைத் தருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

33:43 வசனத்திற்குச் சரியான பொருள் கீழ்கண்டவாறு தான் அமைய வேண்டும்.

இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக அவன் தான் உங்களுக்கு அருள் புரிகிறான். அவனது வானவர்கள் உங்களுக்காக அவனது அருளை வேண்டுகிறார்கள். நம்பிக்கை கொண்டோரிடம் அவன் அன்புமிக்கவனாக இருக்கிறான்.

இவ்வசனத்திற்குப் பொருள் கொள்வது போலவே 33:56 வசனத்திற்கும் பொருள் கொண்டால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

பெரும்பாலான உலமாக்கள் சரியான முறையில் இதை விளக்கினாலும் மிகச் சிலர் தவறான பொருள் கொடுப்பதை எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்தும் கடமை தங்களுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

18.01.2010. 09:23

லைலத்துல் கத்ர் இரவில்

லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

தொடர்ந்து படிக்க 12.08.2009. 05:04




கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
6208347
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
79 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):