விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் தி

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான பந்தனை ஏன்?

கேள்வி: இஸ்லாமிய முறைப்படி ஒரு மனிதன் தன் மனைவியை மூன்றாவது தடவையாக விவாகரத்து செய்து விட்டால் மீண்டும் அவளைத் திருமணம் செய்ய முடியாது; அவ்வாறு திருமணம் செய்ய வேண்டுமென்றால், அந்தப் பெண் வேறொருவனைத் திருமணம் முடித்து, அவன் அந்தப் பெண்ணுடன் தாம்பத்திய உறவு கொண்டு அவளை விவாகரத்து செய்த பின்பு தான் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்று முஸ்லிமல்லாத நண்பர் என்னிடம் கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். அதற்கு மாற்றுமத நண்பர், இது மிகவும் கேவலமான செயலாகவும், பெரிய அநியாயமாகவும் இருக்கிறதே என்று கேட்டார். விளக்கம் தரவும்...

பி.. ரஃபீக், நெல்லிக்குப்பம்

பதில்: தனது மனைவியை இன்னொருவன் மணந்து அவனும் விவாகரத்துச் செய்த பிறகு தான் தன்னால் மணந்து கொள்ள முடியும் என்பது அவருக்கு மட்டுமல்ல. பெரும்பாலான ஆண்களுக்கு கேவலமாகத் தான் தோன்றும்.

மூன்றாவது தடவையாக மனைவியை விவாகரத்துச் செய்து விட்டால் அவளுடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு பறிபோய் விடும் அல்லது கேவலமான நிலைக்கு ஆளாகித் தான் மணக்க வேண்டும் என்பதை மனிதன் உணரும் போது மூன்றாவது தடவையாக விவாகரத்துச் செய்யத் துணிய மாட்டான்.

அவசர கோலத்தில் இரண்டு தடவை விவாகரத்துச் செய்து விட்டு சாதாரணமாகச் சேர்ந்து கொண்டது போல் இனிமேல் நடந்து விடக் கூடாது என்று உணர்ந்து தொடர்ந்து வாழ்க்கை நடத்துவான். அவர்களின் திருமண உறவு இதனால் நீடிக்கும்.

மூன்றாவது தடவையாக விவாகரத்துச் செய்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தான் இந்தக் கேவலத்தைச் சுட்டிக் காட்டி இறைவன் எச்சரிக்கிறான். இதனால் நன்மையே ஏற்படுகிறது.

'நீ இந்தத் தப்பு செய்தால் செருப்பால் அடிப்பேன்' என்று ஒருவரிடம் கூறுகிறோம்.
செருப்பால் அடிபடுவது கேவலம் என்று மட்டும் பார்க்கக் கூடாது. செருப்பு அடிக்குப் பயந்து அந்தத் தவறை அவன் செய்யாமல் இருப்பான் என்பதையும் பார்க்க வேண்டும்.

இது போன்ற எச்சரிக்கை தான் இந்தச் சட்டம்.
ஒவ்வொருவரும் மூன்றாவது தடவையாக மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு இன்னொருவனுக்கு அவளை மணமுடித்துக் கொடுத்து அவன் விவாகரத்துச் செய்த பின் அவளை மணந்து கொள்ளுங்கள் என்று கட்டளை யிடப்படவில்லை.

மாறாக இந்த நிலை ஏற்படும் என்பதற்கு அஞ்சி மனைவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்பதே இந்தச் சட்டத்தின் உள்ளர்த்தம்.

 

எந்த இடத்தில் தட்டினால் ஆண்களுக்கு நன்றாக உறைக்குமோ அந்த இடத்தில் அல்லாஹ் தட்டியிருக்கிறான்.

 

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்துவீடியோமாற்றுமதகேள்வி பதில்மனைவிவிவாகரத்துதிருமணம்

Published on: January 28, 2011, 8:41 AM Views: 2806

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top