சகோதரி மகளை திருமணம் செய்தவர் இஸ்லாத

சகோதரி மகளை திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா?

இந்து மதத்தைச் சார்ந்த சகோதரர் ஒருவர் குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைய ஆர்வப்படுகிறார். அவர் தனது சகோதரியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இஸ்லாத்தில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்வது கூடாது. எனவே இஸ்லாத்திற்கு வர விரும்பும் இவர் என்ன செய்ய வேண்டும்?

ரஷீத்

பதில்

சகோதரியின் மகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சட்டம் தெரியாமல் யாரேனும் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் சட்டத்தை அறிந்த பிறகு அவ்விருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்துவிட வேண்டும் என்பதே மார்க்கச் சட்டம்.

வேறு கொள்கையில் இருப்பவர் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் இந்தச் சட்டத்தை செயல்படுத்தி விட்டுத் தான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை.

வேறு கொள்கையில் இருக்கும் ஒருவர் இஸ்லாத்தில் இணைய நினைத்தால் அவர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள் என்று மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டு இதை வெளிப்படையாக மொழிய வேண்டும்.

இதை அவர் செய்துவிட்டால் அவர் முஸ்லிமாகி விடுவார். அவர் இஸ்லாத்தில் இணைவதற்கு நாம் கூறிய இந்த விஷயத்தைத் தவிர்த்து வேறு எந்த நிபந்தனையும் இல்லை.

புதிதாக இஸ்லாத்திற்கு வருபவர்கள் இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக புரிந்திருக்க மாட்டார்கள். உறுதியான நம்பிக்கையை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இந்நிலையில் இருப்பவரிடம் இஸ்லாத்தில் கூடாத எல்லா விஷயங்களையும் விட்டுவிட்டுத் தான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று கூறினால் இது பெரும் சுமையாக அவருக்குத் தோன்றலாம். இதன் காரணத்தால் அவர் இஸ்லாத்தில் இணைவதைக் கைவிட நினைக்கலாம்.

இந்நிலை ஏற்படாமல் இருக்க அவருக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்து அவர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு சிறிது காலம் மார்க்க உபதேசங்களைக் கேட்பார். மார்க்கத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்ட பின் தானாகவே அவர் இஸ்லாமியச் சட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கி விடுவார். இஸ்லாத்தில் அவருக்குப் பிடிப்பு ஏற்பட்ட பின் அவர் தன்னுடைய சகோதிரியின் மகளை விவாகரத்துச் செய்ய வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தலாம்.

எனவே தான் ஒருவர் இஸ்லாத்தில் இணைவைதற்கு கலிமாவை மனப்பூர்வமாக மொழிவதைத் தவிர்த்து வேறு எதையும் இஸ்லாம் நிபந்தனையாக்கவில்லை.

முஸ்லிமாகப் பிறந்த பலர் இஸ்லாம் தடுத்துள்ள பல காரியங்களைச் செய்து கொண்டு முஸ்லிம்களாக நீடிக்கிறார்கள். அது போல் இஸ்லாத்தில் இணைபவரிடம் சில தீமைகள் இருக்கலாம். குடிப்பழக்கம், வட்டி, விபச்சாரம் போன்ற தீமைகள் அவர்களிடம் காணப்பட்டாலும் அவற்றை எல்லாம் விட்ட பிறகு தான் இஸ்லாத்தில் சேர வேண்டும் என்று மார்க்கமும் சொல்லவில்லை. நாமும் சொல்லக் கூடாது.

இஸ்லாத்தில் இணைவதன் மூலம் அவர் நிரந்தர நரகத்திற்குச் செல்லாமல் தன்னைக் காத்துக் கொள்வார். நாளடைவில் இஸ்லாமிய அறிவுரைகள் அவரிடம் உள்ள தீய செயல்களை ஒவ்வொன்றாக விட வைத்து விடும், இன்ஷா அல்லாஹ்
மேலும் பார்க்க
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/114-manamutika-thakathavarkali-manamutithal/வீடியோமாற்று மத கேள்விகள்சகோதரி மகள்திருமணம்இஸ்லாம்

Published on: August 25, 2011, 1:27 AM Views: 3745

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top