முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொ�

முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா

அபூ ஸமீஹா

தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கும் அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை.

குறிப்பிட்ட வகையினருக்கு மட்டும் தடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை; குறிப்பிட்ட வகையில் பயன்படுத்த தடுக்கப்பட்டு மற்ற வகைகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவை இரண்டாவது வகை. முழுமையாகத் தடை செய்யப்படாமல் ஒரு அளவுக்குத் தடை செய்யப்பட்ட இந்த வகை பொருட்களை முஸ்லிமுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் விற்கலாம். அன்பளிப்புச் செய்யலாம்.

பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை ஆண்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே தடை உள்ளது.

இது போன்று பொதுவாகத் தடை செய்யப்படாமல் குறிப்பிட்ட சாராருக்கும் மட்டும் தடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதி உள்ளது. 

உமர் (ரலி) அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலை பேச முற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே!' என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீள அங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பி உள்ளீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இதை நீங்கள் விற்று விடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 948

தடுக்கப்பட்ட பட்டாடையை விற்று பயன்படுத்திக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن نافع عن عبد الله بن عمر أن عمر بن الخطاب رأى حلة سيراء عند باب المسجد فقال يا رسول الله لو اشتريت هذه فلبستها يوم الجمعة وللوفد إذا قدموا عليك فقال رسول الله صلى الله عليه وسلم إنما يلبس هذه من لا خلاق له في الآخرة ثم جاءت رسول الله صلى الله عليه وسلم منها حلل فأعطى عمر بن الخطاب رضي الله عنه منها حلة فقال عمر يا رسول الله كسوتنيها وقد قلت في حلة عطارد ما قلت قال رسول الله صلى الله عليه وسلم إني لم أكسكها لتلبسها فكساها عمر بن الخطاب رضي الله عنه أخا له بمكة مشركا

886 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் நுழைவாயிலருகே கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளலாமே! என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) இதை அணிவார் என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடுபோட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர் களே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை! (அதன் மூலம் வேறு ஏதேனும் வகையில் நீங்கள் பயன்பெற்றுக்கொள்ளவே நான் வழங்கினேன்) என்று கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்துவிட்டார்கள்.

நூல் : புகாரி 886, 2612

அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கொடுத்த அனுமதியில் அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பட்டாடையை முஸ்லிம் அல்லாத தனது சகோதரருக்கு உமர் ரலி அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளனர்.

அது போல் செத்த ஆடு உண்பதற்கு மட்டும் தான் தடுக்கப்பட்டுள்ளது. வேறு வகையில் பயன்படுத்த அனுமதி உள்ளது.

மைமூனா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண் ஒருவருக்கு ஓர் ஆடு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அது இறந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து சென்ற போது, 'அதனுடைய தோலை எடுத்து, அதைப் பதப்படுத்தி அதிலிருந்து நீங்கள் பயன் பெற்றிருக்கலாமே?' என்று கேட்டார்கள். அதற்கு, 'அது செத்தது' என்று (தோழர்கள்) பதிலளித்தனர். 'அதைச் சாப்பிடுவது தான் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1492, முஸ்லிம் 542

அன்பளிப்பு பற்றி மேலும் அறிய

http://onlinepj.com/bayan-video/jumma_bayan/07052010-/

 

http://onlinepj.com/bayan-video/jumma_bayan/14052010-/

 வீடியோமாற்று மத கேள்விகள்முஸ்லிமல்லாதோர்தங்க மோதிரம்விற்பனைஅன்பளிப்பு

Published on: December 26, 2011, 7:48 AM Views: 1585

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top