மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆ

மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?

கேள்வி: மாற்று மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! ஆதலால் எங்களை நண்பர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ள மாட்டீர்களா? என்று மாற்று மத நண்பர் கேட்கிறார்.

.கே. அப்துல் சலாம், நாகர்கோவில்

திருக்குர்ஆனின் 3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23 ஆகிய வசனங்களில் நீங்கள் சுட்டிக் காட்டுகின்ற கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.

இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணுகின்றனர். இவ்வாறு எண்ணுவது தவறாகும்.

திருக்குர்ஆனின் வசனங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அருளப்பட்டவை. சில வசனங்களைச் சரியாக புரிந்து கொள்ள அது அருளப்பட்ட சந்தர்ப்பத்தையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந் தார்கள்.

எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

திருக்குர்ஆனிலேயே இது பற்றி விளக்கமும் உள்ளது.

இஸ்லாத்தைக் கேப் பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!

(பார்க்க திருக்குர்ஆன் 5:57)

உங்களுக்குப் பகைவர்களாக இருப்போரையும், கைகளாலும் நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்!

(பார்க்க திருக்குர்ஆன் 60:2)

உங்கள் பகைவர்களாகவும் இருந்து கொண்டு, உங்களையும், நபிகள் நாயகத்தையும் ஊரை விட்டே விரட்டியடித்தவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!

(பார்க்க திருக்குர்ஆன் 60:1)

மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும், உங்களையும் நபிகள் நாயகத்தையும் விரட்டியடித்தவர்களையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! அவ்வாறு நடக்காத முஸ்மல்லாதவர்களுடன் நட்புப் பாராட்டுவது மட்டுமின்றி அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள்!

(பார்க்க திருக்குர்ஆன் 60:8-9)

வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டி, உள்ளுக்குள் உங்களை ஒழிக்கத் திட்டமிடுவோரை நண்பர் களாக்காதீர்கள்!
(பார்க்க திருக்குர்ஆன் 3:118)

அன்றைய கிறித்தவ சமுதாயத்தினர் முஸ்ம்களிடம் நெருக்க மான அன்பு கொண்டவர்கள்

(பார்க்க திருக்குர்ஆன் 5:82)

ஒரு சமுதாயம் உங்களுக்குச் செய்த தீமை காரணமாக அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள்!

(பார்க்க திருக்குர்ஆன் 5:2, 5:8)

உடன்படிக்கை செய்து முறையாக நடப்போரிடம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்!

(பார்க்க திருக்குர்ஆன் 9:4)

முஸ்மல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6 வசனம் கூறுகிறது.

பெற்றோர்கள் முஸ்ம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு திருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இவ்வசனங்களையும் சேர்த்துக் கவனித்தால் முஸ்மல்லாதவர்களில் போர்ப் பிரகடனம் செய்யாத மக்களுடன் நன்றாகப் பழகவே இஸ்லாம் கட்டளையிடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்மல்லாதவர்கள் பலர் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தனர்.

(நூல்: புகாரி 1356)

நபிகள் நாயகமே தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர். (நூல்: புகாரி 2916, 2068) யூதப் பெண்ணின் விருந்தை ஏற்றனர்.

(நூல்: புகாரி 2617)

யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர்.

(நூல்: புகாரி - 2412, 2417)

இவர்களெல்லாம் போர்ப் பிரகடனம் செய்யாது முஸ்லிம்களுடன் பழகியவர்கள்.

இன்னும் சொல்லப்போனால் நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூட, வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர். அதனால் தான் இஸ்லாம் அந்த மக்களை வென்றெடுத்தது. போர்ச் சூழ்நிலையில் எந்த ஒரு நாடும் எடுக்கக் கூடிய அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இடப்பட்ட கட்டளை தான் மேற்கண்ட வசனங்கள்.
பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து


வீடியோமாற்றுமதகேள்வி பதில்மாற்று மதத்தவர்உற்ற நண்பர்இனவெறி

Published on: January 26, 2011, 7:59 PM Views: 2973

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top