அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச்

 

அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?

அல்லாஹ்விற்கு 99 அழகிய பெயர்கள் உள்ளன. பலரும் அந்த பெயர்களை தன்னுடைய பெயர்களாக வைப்பதை விரும்புவார்கள். அப்படி வைக்கும் போது அந்த பெயருக்கு முன்னால் அப்துல்(அல்லது அதற்க்கு நிகராக வேறு எதாவது இருந்தாலும்) என்று சேர்த்து கொள்ள வேண்டும். ஆனால், நடைமுறையில் அழைக்கும் போது, வெரும் 'ரஹ்மான்', 'ரஹீம்', 'ஜப்பார்', 'மாலிக்', 'கரீம்', என்று அழைக்கிறார்கள். இப்படி அழைப்பது சரியா?

ரஃபீக் நாகர்கோவில்

அல்லாஹ்வின் பெயர்களை அல்லாஹ்வுக்குப் ப்யன்படுத்தும் போது எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோமா அந்தப் பொருளில் பயன்ப்டுத்தினால் அது குற்றமாகும். மனிதர்களுக்குரிய விதத்தில் பொருள் கொண்டால் அது தவறாகாது.

இது குறித்து திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் விரிவாக விள்க்கியுள்ளதையே இதற்கு பதிலாகத் தருகிறோம். அது வருமாறு

"ரஹீம்' என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது "ரஹீம்' என்ற அடைமொழியை அல்குர்ஆன் 9:128வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான்.

ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதால் அல்லாஹ்வைப் போலவே அவர்களும் நிகரற்ற அன்புடையவர்கள் தாம் என்று சில அறிவீனர்கள் எண்ணுகின்றனர்.

"ரஹீம்' என்ற சொல்லுக்கு நிகரற்ற அன்புடையவன் என்று பொருளிருப்பதைப் போல் "இரக்க குணம் உள்ளவர்' என்ற பொருளும் உண்டு. அல்லாஹ்வுக்கு அதைப் பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு "நிகரற்ற அன்புடையவன்' என்ற பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது இறைவனின் அந்தஸ்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக இரக்க குணம் கொண்டவர் என்ற பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட இத்தகையோர் உணர்வதில்லை.

"ரஹீம்' என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று இவர்கள் எண்ணிக் கொண்டதே இவர்களின் தவறான விளக்கத்துக்குக் காரணமாகும்.

ரஹீம் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும், நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் அறியவில்லை.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே (ரஹீம்களாகவும்) இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் 48:29)

இவ்வசனத்தில் நபித்தோழர்களை ரஹீம்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377, 7448

மனிதர்கள் அனைவரும் ரஹீம்களாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியுள்ளார்கள்.

நபித்தோழர்களும், மனிதர்கள் அனைவரும் நிகரற்ற அன்புடையவர்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதினார்கள். முடிவில் ரஹீம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் இவர்கள் ஆக்கிவிட்டார்கள்.

பொதுவாக அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்குச் சில வரையறைகள் உள்ளன. அவற்றை விளங்காத காரணத்தினாலேயே இப்படியெல்லாம் கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. செவியுறுபவன் என்பது இதன் பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் செவியுறுபவன் என்று தான் பொருள்.

எனவே அல்லாஹ்வும், மனிதனும் ஒன்று தான் எனக் கூறக் கூடாது. வார்த்தையை மட்டும் பார்க்காமல் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களது தகுதியையும் கவனத்தில் கொண்டு தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அல்லாஹ்வை "ஸமீவுன்' என்று குறிப்பிடும் போது அவனது தகுதிக்கேற்ப அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கேட்பவன், எந்த நேரத்திலும் கேட்பவன், சுருங்கச் சொன்னால் "அனைத்தையும் செவியுறுபவன்' என்று கூறலாம்.

மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது "அனைத்தையும் செவியுறுபவன்' என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட மனிதனால் கேட்க முடியாது.

இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை விளங்காதது தான் குழப்பத்திற்குக் காரணமாகும்.

ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2வசனத்தில் காணலாம்.

ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35ஆகிய வசனங்களில் காணலாம்.

ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14வசனத்தில் காணலாம்.

ஃகபீர் என்ற தனது பண்பை 25:59வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.

ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23ஆகிய வசனங்களில் காணலாம்.

அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28ஆகிய வசனங்களில் காணலாம்.

"அலீ' என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) மாற்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபியிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

09.03.2010. 23:20

குழந்தைகளுக்கு தங்க நகை

ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பது சரி. சிறிய குழந்தைகளுக்கு ஏன் அணியக் கூடாது?

ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை.

أخبرنا يعقوب بن إبراهيم قال حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا حماد بن سلمة عن حماد عن إبراهيم عن الأسود عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال رفع القلم عن ثلاث عن النائم حتى يستيقظ وعن الصغير حتى يكبر وعن المجنون حتى يعقل أو يفيق

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கின்ற வரை

2. சிறுவன் பெரியவராகும் வரை

3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

சிறுவர்கள் இரு வகைப்படுவார்கள். எதையுமே புரிந்து கொள்ளாத தத்தி தவழும் பருவத்தில் உள்ளவர்கள் ஒருவகை. இவர்கள் நிர்வாணமாக இருந்தால் கூட அது தவறாகாது. இத்தகைய பருவத்தில் உள்ளவர்களுக்கு தடை செய்யப்பட்ட தங்க நகை அணிவித்தல் தவறாகாது.

ஆனால் புரிந்து கொள்ளும் பருவத்தை அடைந்து விட்டால் அவர்களுக்கு சட்ட திட்டங்களையும் கடமைகளையும் புரியவைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.

حدثنا آدم حدثنا شعبة حدثنا محمد بن زياد قال سمعت أبا هريرة رضي الله عنه قال أخذ الحسن بن علي رضي الله عنهما تمرة من تمر الصدقة فجعلها في فيه فقال النبي صلى الله عليه وسلم كخ كخ ليطرحها ثم قال أما شعرت أنا لا نأكل الصدقة

ஜகாத் பேரீச்சம் பழத்தை தமது பேரர் எடுத்து சாப்பிட்டதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் துப்பிவிடச் சொன்னார்கள். முஹம்மதின் குடும்பத்துக்கு இது ஹலால் இல்லை என்று தெளிவுபடுத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1491, 1485, 3072

حدثنا علي بن عبد الله أخبرنا سفيان قال الوليد بن كثير أخبرني أنه سمع وهب بن كيسان أنه سمع عمر بن أبي سلمة يقول كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك فما زالت تلك طعمتي بعد

அது போல் விபரம் தெரிந்த சிறுவரான அபூ ஸலாமாவின் மகன் உமர் சாப்பிடும் போது உணவுத் தட்டின் நாலாபுறங்களிலும் கைகளை அலைய விட்ட போது சிறுவரே! அல்லாஹ்வின் பெயர் கூறு! உன் அருகில் உள்ளதை உண் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்

நூல் : புகாரி   5376, 5377, 5378

12.08.2009. 11:43

அகீகா கொடுப்பது சுன்னத்தா?

அகீகா கொடுப்பது சுன்னத்தா? கொடுக்காவிட்டால் தண்டனை கிடைக்குமா? ஏழாவது நாள் கொடுக்காவிட்டால் மற்ற நாட்களில் கொடுக்கலாமா? குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா? ஏழாவது நாள் குழந்தையின் தலை மிகவும் மிருதுவாக இருக்கும் நிலையில் மொட்டை அடிப்பது சாத்தியமா?

أخبرنا عمرو بن علي ومحمد بن عبد الأعلى قالا حدثنا يزيد وهو ابن زريع عن سعيد أنبأنا قتادة عن الحسن عن سمرة بن جندب عن رسول الله صلى الله عليه وسلم قال كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى

'ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி(

நூல்: நஸயீ 4149

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.

அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. 14, 21 ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன. எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பது தான் சுன்னத்தாகும். மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை.

குழந்தை பிறந்த ஊரில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை.

அகீகா கட்டாயக் கடமை, கொடுக்கா விட்டால் தண்டனை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலை கற்றுத் தந்தால் அதை இயன்ற வரை நாம் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

சக்தி இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது அதை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும் என்று எந்த வணக்கத்தையும் மார்க்கம் கட்டளையிடவில்லை.

حدثنا إسماعيل حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال دعوني ما تركتكم إنما هلك من كان قبلكم بسؤالهم واختلافهم على أنبيائهم فإذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم

'ஒன்றைச் செய்ய வேண்டாமென நான் உங்களுக்குத் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்..

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7288

'எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்' (அல்குர்ஆன் 2:286) என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

எனவே அகீகாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருள் வசதி இல்லாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நிறைவேற்ற இயலாவிட்டாலோ குற்றமில்லை.

ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு மெல்லியதாக இருக்கும் என்பது இந்தக் காலத்தில் மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏழு நாள் குழந்தையின் மண்டை ஓடு அவ்வாறு தான் இருந்திருக்கும். எனவே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றை நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் செய்யுமாறு கூறியிருக்க மாட்டார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் இந்த ஹதீஸை நமது சகோதரர்கள் நடைமுறைப் படுத்தியே வருகின்றார்கள். இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எனினும் தங்களின் குழந்தைக்கு அவ்வாறு ஏற்படும் என்று நீங்கள் கருதினால் அல்லது இந்தக் கட்டத்தில் முடியை மழிக்க வேண்டாம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினால் மேற்கண்ட புகாரி 7288வது ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 2:286 வசனத்தின் அடிப்படையில் இந்த சுன்னத்தை நிறைவேற்றாமல் இருப்பது குற்றமில்லை.

12.08.2009. 04:01

ஹாகிம் என்று பெயர் சூட்டலாமா?

 கேள்வி

அஸ்ஸலாமு அழைக்கும். ஆண் குழந்தைக்கு ஹாகிம் என்று பெயர் சூட்டலாமா? அல்லது அப்துல் ஹாகிம் என்று தான் சூட்ட வேண்டுமா? விளக்கவும்.

அப்துல் ஹாகிம்

பதில் :

வஅலைக்குமுஸ்ஸலாம்.

ஹாகிம் என்றால் நீதி வழங்குபவன் அதாவது நீதிபதி என்பது இதன் பொருளாகும். நீதிவழங்கும் அதிகாரத்தை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியிருப்பதால் இந்தப் பெயரை மனிதர்களுக்கு சூட்டுவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை.

இவ்வுலகில் தீர்ப்பு வழங்கும் மனிதரைக் குறிக்க நபி (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள்.

7352حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ الْمَكِّيُّ حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.

இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (7352)

இந்த செய்தியில் நீதிபதி என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் ஹாகிம் என்ற வார்த்தையை நபியவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். ஹாகிம் என்பவர் சரியாகவும் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது. தவறாகவும் தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது என்பதை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திவிட்டார்கள். இறைத்தன்மை எதுவும் இப்பெயரில் இல்லை என்பதால் இதை ஆண் குழந்தைக்கு பெயராக சூட்டுவது தவறல்ல.

ஹாகிம் என்பது இறைவனுக்குரிய பெயராக திருக்குர்ஆனிலோ நபிமொழிகளிலோ நாம் அறிந்தவரை பயன்படுத்தப்படவில்லை. எனவே அப்துல் ஹாகிம் என்று பெயர் வைக்காமல் ஹாகிம் என்று மட்டுமே பெயர் சூட்டிக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஹகம் என்ற பெயரை சூட்டவேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஹகம் என்றால் யாருடைய தீர்ப்பு மறுக்கப்படக்கூடாதோ அப்படிப்பட்டவருக்கு சொல்லப்படும். அதாவது தவறில்லாத தீர்ப்பு வழங்குபவர் என்பது இதன் பொருள். இப்பெயரில் இறைத்தன்மை இருப்பதால் இதை சூட்டக்கூடாது என நபியவர்கள் தடுத்தார்கள்.

4304حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ نَافِعٍ عَنْ يَزِيدَ يَعْنِي ابْنَ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ هَانِئٍ أَنَّهُ لَمَّا وَفَدَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ قَوْمِهِ سَمِعَهُمْ يَكْنُونَهُ بِأَبِي الْحَكَمِ فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ اللَّهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ فَلِمَ تُكْنَى أَبَا الْحَكَمِ فَقَالَ إِنَّ قَوْمِي إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَتَوْنِي فَحَكَمْتُ بَيْنَهُمْ فَرَضِيَ كِلَا الْفَرِيقَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْسَنَ هَذَا فَمَا لَكَ مِنْ الْوَلَدِ قَالَ لِي شُرَيْحٌ وَمُسْلِمٌ وَعَبْدُ اللَّهِ قَالَ فَمَنْ أَكْبَرُهُمْ قُلْتُ شُرَيْحٌ قَالَ فَأَنْتَ أَبُو شُرَيْحٍ قَالَ أَبُو دَاوُد شُرَيْحٌ هَذَا هُوَ الَّذِي كَسَرَ السِّلْسِلَةَ وَهُوَ مِمَّنْ دَخَلَ تُسْتَرَ قَالَ أَبُو دَاوُد وَبَلَغَنِي أَنَّ شُرَيْحًا كَسَرَ بَابَ تُسْتَرَ وَذَلِك أَنْهُ دَخَلَ مِنْ سِرْبٍ رواه أبو داود

ஹானிஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் எனது கூட்டத்தாருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் என்ற குறிப்புப் பெயரால் அழைப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். எனவே என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அல்லாஹ்வே ஹகம் (தவறில்லாமல் தீர்ப்பளிப்பவன்) ஆவான். (தவறிழைக்காமல்) தீர்ப்பளிப்பது அவனிடமே உள்ளது. அவ்வாறிருக்க நீ என் அபுல் ஹகம் (தவறிழைக்காமல் தீர்ப்பளிப்பவனின் தந்தை) என குறிப்புப் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றாய்? எனக் கேட்டார்கள். அதற்கு நான் எனது கூட்டத்தினர் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக்கொண்டால் என்னிடம் வருவர். அவர்களுக்கிடையே நான் தீர்ப்பு வழங்குவேன். இருபிரிவினரும் (அத்திர்ப்பை) பொறுந்திக்கொள்வர் (எனவே இவ்வாறு எனக்கு இவர்கள் பெயர் வைத்தனர்) என்று கூறினார். இவ்வாறு தீர்ப்பு வழங்குவது எவ்வளவு அழகாக உள்ளது? என்று கூறிவிட்டு உனக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ் முஸ்லிம் மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் என்றேன். இவர்களில் மூத்தவர் யார்? என்று கேட்டார்கள். நான் ஷுரைஹ் என்றேன். அதற்கு அவர்கள் (இனிமேல்) நீ அபூ ஷுரைஹ் (ஷுரைஹ்வுடைய தந்தை என்பதே உனது குறிப்புப் பெயர்) என்று கூறினார்கள்.

அபூதாவுத் (4304)

06.08.2010. 10:17

அகீகா கொடுப்பது எப்படி

கேள்வி

குழந்தை பிறந்தால் தலை முடி கலையும் போது அதன் எடைக்கு நிகராக தங்கம் கொடுக்க வேண்டுமா? காது குத்துவது தவறா? அகீகா குழந்தை பிறந்து 14,21 ஆகிய நாட்களில் கொடுக்கலாமா?

டாக்டர்  ஜஸீம் அபுபக்கர்

பதில் காது மூக்கு குத்துதல் தொடர்பாக நமது இணையதளத்தில் முன்னரே வெளியிடப் பட்ட பதிலைக் காண்க.

கட்டுரை வடிவில்

ஆடியோ வடிவில்.

ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?

அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.

السنن الكبرى للبيهقي  كتاب الضحايا

 جماع أبواب العقيقة  باب ما جاء في وقت العقيقة وحلق الرأس والتسمية

 وأخبرنا أبو الفتح هلال بن محمد بن جعفر الحفار ببغداد , أنبأ الحسين بن يحيى بن عياش القطان ، ثنا الحسن بن محمد بن الصباح ، ثنا عبد الوهاب بن عطاء ، عن إسماعيل بن مسلم ، عن قتادة ، عن عبد الله بن بريدة ، عن أبيه ، عن النبي صلى الله عليه وسلم قال : ' العقيقة تذبح لسبع , ولأربع عشرة , ولإحدى وعشرين ' *

அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)

இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸாயீ இவர் பலவினமானவர் என்று இமாம் அபூ ஸுர்ஆ இமாம் இப்னு ஹஜர் இமாம் அஹ்மது பின் ஹம்பள் இமாம் யஹ்யா பின் முயீன் இமாம் அபூஹாதிம் மற்றும் பலர் கூறியுள்ளனர். எனவே இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெற்றோர்கள் தனக்கு அகீகாக் கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை. 

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தை செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்தப் பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தப் பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்த புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்ய வேண்டுமா?

பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹசன்) தலையை மளித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல் : திர்மிதி (1439)

இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேக் கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.

 மேலும் இக்கருத்தில் ஹாகிம் இமாம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூ­ல் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.

04.08.2010. 15:33




கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
6180878
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
74 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):