ஏகத்துவம்_மார்ச்_2017

தலையங்கம்

எல்லை மீறும் இஸ்ரேலுக்கு இறைவனின் எச்சரிக்கை!

ஃபலஸ்தீனத்தில் உள்ள மேற்குக் கரையில் யூதர்கள் 4000 குடியிருப்புகளை அமைத்துள்ளனர். இஸ்ரேல் அமைத்திருக்கும் குடியிருப்புப் பகுதிகள், ஃபலஸ்தீன மக்களின் தனியார்களுக்குச் சொந்தமான நிலங்களாகும். ஆக்கிரமிக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் எவ்விதமான குடியமர்த்தும் பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு சபை இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டது.

அது மட்டுமல்லாமல், அண்மையில் அகில உலக அளவிலான ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் உலக நாடுகளிலிருந்து 70க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. இந்த மாநாடு இஸ்ரேலின் குடியமர்த்தும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையில், பலஸ்தீன், இஸ்ரேல் ஆகிய  இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

உலகச் சட்டங்களையும், சமாதானப் பேச்சுக் களையும் இஸ்ரேல் எப்போது மதித்தது? எப்படி மதிக்கும்? ஐ.நா.வின் இந்த சமாதான வேண்டுகோள் தீர்மானத்தின் மை கூட உலர்ந்திருக்காது. அதற்குள் மேற்குக் கரையில் அமைக்கப்பட்ட அந்த 4000 குடியிருப்புகளில் அதன் உரிமையாளர்களின் பெயர் தெரியாத பட்சத்தில் அவற்றை சட்டப்பூர்வமாக சொந்தமாக்கிக் கொள்வது என்றும், உரிமையாளர் பெயர் தெரிந்தால் அவர்களுக்குப் பணமாக அல்லது வேறு விதமாக ஈடு கொடுப்பது என்றும் இஸ்ரேலிய நாடாளு மன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அபகரிக்கும் அநியாயத்தில் இஸ்ரேல் இறங்கியிருக்கின்றது.

ஐ.நா. சபை போன்ற உலக நிறுவனங்களின் சமாதான நடவடிக்கைகளை இஸ்ரேல் அப்பட்டமாகக் காற்றில் பறக்க விடுவதையே இது காட்டுகின்றது. கிழக்கு ஜெருஸலம் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு இஸ்ரேலின் சட்டத்தின் வரம்பு அந்தப் பகுதியில் தலைகாட்டுவது இது தான் முதல் தடவையாகும்.

இஸ்ரேலின் ஆதிக்கப் போக்கை அந்நாட்டின் அட்டர்னி ஜெனரலாலேயே ஜீரணிக்க முடிக்கவில்லை. இந்தச் சட்டம் தொடர்பான வழக்கு  இஸ்ரேலிய உயர் நீதிமன்றத்திற்கு வரும் போது இது அநியாயமானதும் அனைத்துலக சட்டத்திற்கு எதிரானதும் என்பதால் அதற்கு ஆதரவாக தான் வாதாடப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அது நீதிமன்றத்தால் உறுதியாக நிராகரிக்கப்பட உள்ளது. அந்நாட்டு உயர் நீதிமன்றத்தாலேயே அது மறுக்கப்படக்கூடிய சட்டமாக இருந்தாலும் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாஹூ தனது ஆக்கரமிப்புப் படலத்தை நிறுத்துதாகத் தெரியவில்லை. மேலும் அதிகமான நிலங்களை அபகரிக்கும் முடிவில் உள்ளார். காரணம், இந்த ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு  இஸ்ரேல் மேற்குக் கரையை ஆக்கிரமித்ததிலிருந்து பலஸ்தீன்  பகுதிகளில் ஆறு லட்சம் யூதர்களைக் கொண்ட 140 குடியிருப்புகளைக் கட்டியிருக்கின்றது. 

இந்த அக்கிரமத்திற்கும், அநியாயத்திற்கும் எதிராக உலக அளவிலான  கண்டனங்கள் கடுமையாக இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்தன. அந்தக் கண்டனங்களை அங்கு மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை; அவற்றை சட்டை செய்யவுமில்லை. அந்தக் கண்டனங்கள் எருமை மாட்டின் மீது பெய்த மழை போன்று ஆகிவிட்டன.

ஆக்கிரமிப்பைக் கொள்கையாகக் கொண்டு செயல்படுகின்ற அணியினருக்கு அடுத்து அடுத்து வருகின்ற ஆட்சியாளர்கள் ஆதரவாகவே இருந்து வந்துள்ளனர். அதிலும் இப்போதைய பிரதமர் நெதன்யாஹூ வலது சாரியின் தயவில் கூட்டணி ஆட்சி நடத்துகின்றார். அதனால் ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்களைக் காட்டிலும் அதிகமாகவே அபகரிப்பு வேலையில் இறங்கியிருக்கின்றார். கடந்த மாதத்தில் மேற்குக் கரையில் 2500 குடியிருப்புகளுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு நெதன்யாஹூ அரசாங்கம் இதுவரையிலும் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவருடைய கூட்டணியில் உள்ள வலதுசாரியினரோ, இஸ்ரேல் சாம்ராஜ்யத்தை  மேற்குக் கரை வரைக்கும்  - அதாவது பைபிள் குறிப்பிடுகின்ற பெயர்களின் படி யூதேயா, சாமேரியா வரைக்கும் - விரிவாக்கம் செய்து கொண்டிருக்கின்றோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கின்றது

அமெரிக்காவில் முஸ்லிம் விரோதியும்  காட்டுமிராண்டியுமான  டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அது இஸ்ரேலுக்கு ஒரு முரட்டுத் துணிச்சலைக் கொடுத்துள்ளது. ஜெருஸலம் என்பது சர்ச்சைக்குரிய பகுதியாகும். டெல்அவிவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருஸலத்திற்கு மாற்றப் போவதாக இந்த பைத்தியக்காரன் டிரம்ப் அறிவித்திருக்கின்றான். அத்துடன், “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் யூத குடியேற்றத்திற்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது  ஒபாமா அரசாங்கம் ஏன் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கவில்லை?” என்றும்  இந்த மனிதகுல விரோதி டிரம்ப், ஒபாமாவை கடுமையாகச் சாடினான்.

அநியாயக்கார இஸ்ரேல் தான் ஆக்கிரமித்த  மேற்குக் கரையில்   708 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளது. பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாகத்  திகழும் இஸ்ரேல் இதை பயங்கரவாத தடுப்பு சுவர் என்று வர்ணித்துக் கொள்கின்றது. ஆனால் உண்மையில் அது  இஸ்ரேலின்  இரத்ததில் ஊறிப் போன இனவாதச் சுவராகும். தன்னைப் பிற சமூகத்துடன் இணைத்து கலக்காமல் தடுத்துக் கொள்கின்ற தடுப்புச் சுவராகும்.  அந்தத் தடுப்புச் சுவரையும் பயங்கரவாத அமெரிக்காவின் குடியரசுக் கட்சி தந்த கொடிய தலைவன் டிரம்ப் பாராட்டியிருக்கின்றான். 

நெதன்யாஹூவை நோக்கி உலக நாடுகளிலிருந்து என்ன தான் கண்டனக் கணைகள் வந்தாலும்  அவற்றை உதறித் தள்ளி விட்டு,  கூட்டணி ஆட்சியின்  நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து  ஆக்கிரமிப்பு வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றான். அந்தப் பாதகன் காத்துக் கொண்டிருப்பது  அமெரிக்கக் காதகனின் பச்சைக் கொடிக்காகத் தான். கொடி அசைப்புக்கு அவனும்  ஆயத்தமாகவே இருக்கின்றான். அவன் கொடியசைத்து விட்டால் பாதிப்புக்குள்ளாவது உலக அமைதியும்  அதன் நீதியும் தான்!

இவர்களின் செயல்பாடுகள்  உலகப் பொது வேதம் உன்னதக் குர்ஆன் கூறுகின்ற அடிப்படையில் அப்படியே அமைந்திருக்கின்றன.

“அவர்கள் (இஸ்ரவேலர்கள்) போர் (எனும்) தீயை மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்து விடுகின்றான். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்”

அல்குர்ஆன் 5:64

இந்த வசனம் இஸ்ரேலின் போர்த் தீயை மூட்டுகின்ற பயங்கரவாத குணத்தையும் அவர்கள் தான் இந்தப் பூமியில் குழப்பம் விளைவிக்கின்ற குள்ள நரிக் கூட்டம் என்பதையும்  படம் பிடித்துக் காட்டுகின்றது.

“அவர்கள் (யூதர்கள்) தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களை சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம்.”

அல்குர்ஆன் 5:13

சர்வ சாதாரணமாக இவர்கள் ஒப்பந்தத்தை மீறக் கூடியவர்கள். அவ்வப்போது பச்சோந்திகளாக மாறக்கூடிவர்கள்; இதன் காரணமாக அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள்  என்று இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. 

அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன் 5:62)

உலகத்தில் வரம்பு மீறுவதில் இவர்களை         விஞ்சியவர்களும், மிஞ்சியவர்களும் வேறு யாருமில்லை என்று இந்த வசனம் விளக்குகின்றது. இந்த யூதர்களுக்கு உலகில் எத்தனையோ தண்டனைகளை அல்லாஹ் அளித்திருக்கின்றான். கடந்த நூற்றாண்டில் ஹிட்லர் அவர்களைக் கருவறுத்தான். அப்படியிருந்தும் அவர்கள் பாடமோ, படிப்பினையோ பெறவில்லை. 

இப்போது இவர்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பலஸ்தீனில் அத்துமீறி உள்ளே நுழைந்து அவர்களது நிலங்களையும் அவ்வப்போது அபகரித்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராக அநீதியிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் வாக்கு இன்னும் எஞ்சியிருக்கின்றது. அப்போது இவர்களும் இவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் கொடியவன் டிரம்ப் போன்றவர்களும் தப்பிக்க முடியாது என்று எச்சரித்து வைக்கின்றோம்.  அந்த இறை வாக்கு இது தான்.

உங்கள் இறைவன், உங்களுக்கு அருள் புரிவான். நீங்கள் மீண்டும் (பழைய நிலைக்கு) திரும்பினால் நாமும் திரும்புவோம். (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைச் சிறைச்சாலையாக ஆக்கியுள்ளோம்.

(அல்குர்ஆன் 17:8)

அல்லாஹ்  முன்பு இவர்களைப் பிடித்து கடுமையாகத் தண்டித்ததைக் குறிப்பிட்டு விட்டு, அது மாதிரி நாம் பிடிப்போம் என்று எச்சரிக்கை விடுக்கின்றான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊழலற்ற அரசியலுக்கு  ஒரு முன்னோடி

எம்.எஸ்.ஜீனத் நிஸா, B.I.Sc.

கடையநல்லூர்

பணம் பத்தும் செய்யும்,  பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய அரசியல் தலைவர்கள் முதல் படிப்பறிவில்லாத பாமரர்கள் வரை இருக்கின்றனர்.

வேலியே பயிரை மேயும் கதையாக, மக்களின் பாதுகாவலர்களாக விளங்க வேண்டியவர்களே அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அபாயம் இன்றைய சூழலில் ஏற்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் முதல் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் அடிமட்ட ஊழியர்கள் வரை ஊழலும், இலஞ்சமும் அவர்களை விட்டபாடில்லை. மக்களின் உயிருக்கும். உடைமைக்கும் பாதுகாவலர்களாக விளங்கும் காவல் துறையினர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. இதன் உச்சகட்டம் என்னவெனில் இலஞ்ச ஒழிப்பு துறையினரே இலஞ்சம் வாங்கும் அவலநிலை.

இதற்காகப் போர்க்கொடி தூக்கினால், ‘யார் தான் ஊழல் செய்யவில்லை. ஊழலில்லாத அரசியலா? ஊழலில்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்வதற்கு நன்றாக இருக்கும்; ஆனால் செயல்படுத்த இயலாது’ என்று இன்றைய அரசியல்வாதிகள் வசனம் பேசுகின்றனர்.

இந்த இடத்தில் அமர்ந்து பாருங்கள் என்றும், ஊழலில்லாத அரசியல்வாதி ஒருவரைக் காட்டுங்கள் என்றும் கூறி, தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு குற்றம் புரியும் தலைவர்களின் பட்டியலை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஊழலற்ற அரசியலுக்கு முன்னோடியாக எந்த அரசியல்வாதியையும் தற்போது காணமுடிவதில்லை. ஊழலை ஒழிப்போம் என்று கூறுபவர்களின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுமளவிற்கு ஊழலில் இந்தியா மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

ஒவ்வொருவரும் பிறரது ஊழலைக் காரணம் காட்டி அரசியல் செய்வதையே காண்கின்றோம். தன்னிடத்திலும் அந்தத் தவறை வைத்துக் கொண்டே பிறரை விமர்சனம் செய்வது தான் ஆச்சரியத்திலும் மிகப்பெரும் ஆச்சரியமாக இருக்கின்றது. ஊழலற்ற அரசியலை உருவாக்க ஒருவராலும் முடியாது என்று சித்தாந்தம் பேசுபவர்களுக்கு எதிராக ஊழலில்லா அரசை உருவாக்கிய உத்தமத் தலைவர் தான் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

அவர்கள் உண்டும் சுகிக்கவில்லை உடுத்தியும் மகிழவில்லை

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறக்கும் வரை உணவு மேசையில் (அமர்ந்து) உணவருந்தியதில்லை. இறக்கும் வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் சாப்பிட்டதில்லை.

நூல்: புகாரி 6450

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாராகிய நாங்கள் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்ற வைக்காமலேயே ஒரு மாத காலம்கூட எங்களுக்குக் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் (வெறும்) பேரீச்சம் பழமும் நீரும்தான் (எங்கள் உணவாகும்); (எப்போதாவது) சிறிது இறைச்சி எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் தவிர.

நூல்: புகாரி 6458

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வே! (பசித்திருக்கும்) முஹம்மதின் குடும்பத்தாருக்கு உணவு வழங்குவாயாக!’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

நூல்: புகாரி 6460

சொத்தும் சேர்க்கவில்லை சொகுசாகவும் வாழவில்லை

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி (ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி (ஸல்) அவர்கள் “என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 6470

உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்று விட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “நான் தொழுதுகொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன்’’  என விளக்கினார்கள்.

நூல்: புகாரி 1221

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; ‘சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, ‘‘என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டுவிட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய் யனாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2821

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாட்கள் கழிவதுகூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர.

நூல்: புகாரி 6445

வறுமையிலும் வாரி வழங்கிய மாமனிதர்

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவச் செலவுகள் உட்பட அனைத்தும் மக்கள் வரிப்பணமாகிய அரசு கருவூலத்திலிருந்து கோடி கோடியாக அரசியல்வாதிகளுக்கு செலவழிக்கப்படுகின்றது. இது தவிர இலஞ்சம் மற்றும் ஊழலின் மூலமும் அவர்கள் சொத்துக்களை சேர்த்துக் கொண்டனர்.

மக்களின் நலன் காக்கத் தவறி தன்னலனையும், தன் குடும்பத்தினரின் நலனையும் மட்டுமே கவனத்தில் கொண்டு மக்களிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியையும் மறந்த சுயநலவாதிகளாகவும், பச்சோந்திகளாகவுமே இன்றுள்ள அரசியல்வாதிகள் உள்ளனர். விதை விதைக்காமல் அவர்கள் அறுவடையை மட்டுமே செய்கின்றனர். இதில் படிக்காத முட்டாள்களும், படித்த பட்டதாரி அரசியல்வாதிகளும் அடங்குவர். இப்படிப்பட்ட அரசியல் தலைமை நாட்டு மக்களுக்குக் கிடைத்த சாபக்கேடு. அவர்கள் போடும் சட்ட திட்டங்களெல்லாம் சாமானிய மக்களின் மீது அடக்குமுறையாகவும், அவர்களின் அடிவயிற்றில் அடிக்கக் கூடியவையாகவுமே உள்ளன.

மக்களால் நான் மக்களுக்காகவே நான், ஊழலை ஒழிக்கவே மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறுவதற்கு இப்போதுள்ள அரசியல்வாதிகளில் எவருக்கும் அருகதை கிடையாது. அனைவருமே பசுத்தோல் போர்த்திய புலிகளாகவும், மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்ற அட்டைப் பூச்சிகளாகவுமே உள்ளனர்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகளிலிருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு மேற்கண்ட வரலாற்றுக் குறிப்புகளே போதுமான சான்றாகும்.

கேட்டவருக்கெல்லாம் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வாரி வழங்கிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்காகவோ தமது குடும்பத்திற்காகவோ அதிலிருந்து எந்த ஒன்றையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கு கீழ்க்கண்ட ஹதீஸ்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியவர்களின் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சீ...சீ... கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?’’ என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 1939

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் என் வீட்டாரிடம் திரும்பிச்செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது தர்மப் பொருளாக இருக்குமோ என்று நான் அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.

நூல்: முஸ்லிம் 1940

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவியாரான) ஃபாத்திமா   அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபியவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிருக்கின்றார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது.

உடனே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள்  விஷயத்தைச் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்று விட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், “(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்’’ என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களுடைய பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள்). பின்னர், ‘‘நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள்  படுக்கைக்குச் செல்லும் போது, ‘அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ்- புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், ‘சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 3113

அது மட்டுமின்றி உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும், ஒரு அரசாங்கத்திலும் தமது வழித்தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றும் பிரகடனம் செய்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 6727

மேலும் நபிகளாரின் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துக்களையும் நபி (ஸல்) அவர்கள் பொது உடைமையாக்கினார்கள் என்பது நபிகளாரின் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்தும் தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (‘நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்யமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அந்தச் சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அந்தச் சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்’’ என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறினார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாத காலம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) இறந்த போது, அவர்களின் கணவர் அலீ (ரலி) அவர்கள், (இறப்பதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள்.

நூல்: புகாரி 4240

அல்லாஹ்வின் தூதர் மட்டுமல்ல! அவர்கள் உருவாக்கிய நபித்தோழர்கள் கூட மிகவும் நேர்மையாக மக்களிடம் நடந்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்க்கண்ட செய்திகள் சிறந்த உதாரணங்களாகும்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!’’ என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்! என்றேன்.  அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள்.  அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இது போல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக! என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 2296

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு,  ‘‘ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்’’ எனக் கூறினேன்.

ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘‘முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 1472

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் தான் மரணித்தார்கள்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முப்பது ‘ஸாவு’ வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் தான் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

நூல்: புகாரி 4467

மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் பட்டியல்

அல்லாஹ்வின் தூதருடைய துணைவியார் ஜுவைரிய்யா பின்த்து ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தின் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கிவிட்டிருந்த ஒரு  நிலத்தையும் தவிர. 

நூல்: புகாரி 2739

நபிகளாரின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (வீட்டு) நிலைப் பேழையிலிருந்த சிறிது வாற்கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

நூல்: புகாரி 6451

உண்மையான அரசியல் தலைவர்கள் யாரெனில் மக்கள் அவர்களை நேசிப்பார்கள். அவர்களுக்காக மனதாரப் பிரார்த்திப்பார்கள்.

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள். அவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள் அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3779

எனவே உத்தம நபியின் உண்மை அரசியலே ஊழலற்ற அரசியலுக்கு வழிவகுக்கும்.

பொய்யும்  மெய்யும்

எம்.எஸ். சுலைமான்

சமூக ஊடகங்கள் என்று சொல்லப்படும் வாட்சப், பேஸ்புக் போன்றவைகளில் இஸ்லாத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் பலர் பலவிதமான கதைகளையும் கப்ஸாக்களையும் பரப்பி வருவதைப் பார்க்கிறோம்.

யார் எதை வலைத்தளங்களில் பதிவிட்டாலும் அது உண்மையா? பொய்யா என்று கூடப் பார்க்காமல் உடனே அதை அடுத்தவர்களுக்கு அனுப்பி விடுகின்றார்கள்.

அதிகமான சகோதரர்கள் தனக்கு வந்த செய்தியைப் படித்துப் பார்ப்பது கூட இல்லை. தனக்கு வருகின்ற செய்திகளைச் சிறிதும் சிந்திக்காமல், அடுத்தவருக்கு அனுப்புவது இஸ்லாத்தின் கட்டாயக் கடமை என்பது போல் எண்ணிச் சிலர் செயல்படுகின்றனர்.

பொதுவாக எந்தச் செய்தியாக இருந்தாலும் அது சரியா? தவறா என்று சரி பார்த்த பின்னர், அது சரியா இருந்தால் தான் அடுத்தவருக்கு அனுப்ப வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 49:6

கேட்டதையெல்லாம் (ஆராயாமல்) அறிவிப்பது ஒரு மனிதன் பொய்யன் என்பதற்குப் போதிய சான்றாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 6

எந்தச் செய்தியாக இருந்தாலும் கேட்டவற்றை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அப்படியே பரப்புபவன் பொய்யன் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

உலகச் செய்திகளைப் பரப்பும் போதே இவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம், மார்க்க விஷயத்தைப் பரப்பும் போது எவ்வளவு கவனமாக இருக்கச் சொல்லும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஹதீஸ் என்ற பெயரில் யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே பரப்பி விடுகிறோம். அது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? அல்லது பலவீனமான ஹதீஸா என்பதைப் பார்ப்பதில்லை.

இதை விடக் கொடுமை, சிலர் கதைகளையெல்லாம் ஹதீஸ் என்று பரப்புகிறார்கள். அதையும் ஹதீஸ் என்று நினைத்து அடுத்தவர்களுக்கு நாம் அனுப்பி விடுகிறோம்.

நாம் மிகப் பெரிய நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு பெரும் தவறைச் செய்து கொண்டிருக்கிறோம்.

பிற மதத்தவர்கள்தான் பொய்களைச் சொல்லியே தங்கள் மதத்தை வளர்ப்பார்கள். இஸ்லாத்திற்கு அப்படி ஒரு நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

இத்தனை ஆண்டுகாலமாக உலகில் இஸ்லாம் வளர்கின்றது என்றால் உண்மையை மட்டும் சொல்லித் தான். பொய்களையும், கப்ஸாக்களையும் சொல்லியிருந்தால் இந்த மார்க்கம் என்றைக்கோ அழிந்து போயிருக்கும்.

இந்தப் பொய்ச் செய்திகளின் வரிசையில் சமீபத்தில் வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு செய்தியைப் பார்ப்போம்.

சிரிக்கக் கூடாத இடங்கள்:

1. தொழுகை

2. மஸ்ஜித்

3. கப்ருக்கு அருகில்

4. மய்யித்தின் அருகில்

5. பாங்கு சொல்லும் போது...

6. குர்ஆன் ஓதும் போது...

7. பயான் செய்யும் போது..

இந்த ஏழு இடங்களில் சிரிப்பவர்களை அல்லாஹ் அவர்களது உருவத்தை மாற்றி மறுமையில் தண்டிப்பான்.

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இப்படி ஒரு செய்தியைப் பரப்புகின்றனர்.

இந்தச் செய்தியை புகாரியிலோ, முஸ்லிமிலோ எடுத்துக் காட்ட முடியுமா? புகாரி, முஸ்லிம் என்று சொன்னால் மக்கள் உடனே நம்பி ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்ற எண்ணத்தில் துணிந்து இந்தப் பொய்யைப் பரப்புகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 106, 107, 1291

நபி மீது பொய் சொல்லிப் பரப்பும் இந்தச் செயல், இவ்வாறு பரப்புபவர்களை நரகத்தில் தள்ளி விடும் என்று இந்த ஹதீஸ் கடுமையாக எச்சரிக்கின்றது.

நபியவர்கள் சொல்லாததைச் சொன்னதாக, பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதைப் போலவே, நபியவர்கள் சொன்ன ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பொய்யான ஹதீஸை இணைத்துப் பரப்புவதையும் நாம் காண முடிகின்றது.

இதனால் எது பலவீனம்? எது சரியான ஹதீஸ் என்று மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் குழம்பி விடுகின்றார்கள்.

இப்னு ஹிப்பானில் இடம் பெறும் செய்தி

நபிகள் நாயகத்தின் மிக நெருங்கிய நண்பர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு மிகுந்த வயிற்றுப் பசி. ஏதாவது உணவு இருக்கிறதா என மனைவியிடம் கேட்கிறார்கள். தண்ணீரைத் தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி! ‘‘சரி உமருடைய வீட்டிற்கு சென்று வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்.

பாதி வழியில் உமர் (ரலி) எதிரே வருகிறார்கள். என்னவென்று கேட்கிறார் அபூபக்கர் சித்தீக் (ரலி). ‘‘வீட்டில் தண்ணீரைத் தவிர உண்பதற்கு எதுவும் இல்லை. எனவே தான் உங்களைப் பார்க்க வருகிறேன்’’ என்கிறார்கள். உமர் ரலி, ‘‘சரி! என் வீட்டிலும் இதே நிலைதான்; அதனால் தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என கூறிவிட்டு இருவரும் நபிகளைச் சென்று பார்க்கலாம்’’ என நபிகளாரின் வீட்டிற்குச் செல்கின்றனர்.

எதிரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள். அருமைத் தோழர்களின் நிலை அறிந்து வேதனையுடன் தனது வீட்டின் நிலையும் இதுதான் என்று சொல்லி, என்ன செய்வது எங்கே செல்லலாம் என யோசித்து கொண்டிருக்கும்போது அபூ அய்யூப் அல் அன்ஸாரியின் வீட்டிற்குச் செல்லலாம் என முடிவு செய்து மூவரும் செல்கின்றனர்

இவர்கள் மூவரும் வருவதைப் பார்த்த நபித்தோழர் அபூ அய்யூப் அல் அன்ஸாரி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று தனது இல்லத்தில் அமரவைத்து அவர்களுக்கு பேரீத்தம் பழங்களைக் கொடுத்துப் பரிமாறுகிறார்கள்.

கொஞ்சம் பேரீத்தம் பழங்களைத் தின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரியிடம், ‘‘அபூ அய்யூப் அவர்களே! நான் இவற்றில் இருந்து கொஞ்சம் பேரீத்தம் பழங்களை எடுத்துக் கொள்ளலாமா?’’ என கேட்கிறார்கள்.

அதை கேட்ட நபித்தோழர் அபூ அய்யூப் (ரலி) அவர்கள், ‘‘என்ன யா ரசூலுல்லாஹ்! இப்படிக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்’’ என்கிறார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘இல்லை எனக்குச் சிறிதளவு போதும், என் அருமை மகள் ஃபாத்திமா கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவே இல்லை’’ என கூறுகிறார்கள்.

இதை கேட்ட உடனே அபூ அய்யூப் அல் அன்ஸாரி அவர்கள், தமது பணியாளர் ஒருவரிடம் அண்ணல் நபிகளின் வீட்டிற்கு பேரீத்தம்பழங்களை கொடுத்து அனுப்புகிறார்கள்.

ஹதீஸ் எண் - 5328

இந்தச் செய்தியை உண்மை என நம்பி பரப்புகின்றனர். இப்படி ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும் இது ஆதாரப்பூர்வமானது அல்ல.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் கைஸான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டவர். எனவே இவர் அறிவிக்கும் இந்த ஹதீஸ் பலவீனமானது.

இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் இதனுடைய கருத்தும் சரியானதாக இல்லை.

“என் அருமை மகள் பாத்திமா கடந்த மூன்று நாட்களாக சாப்பிடவே இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அபூ அய்யூப் அல் அன்சாரி அவர்கள் தமது பணியாளரிடம் ஃபாத்திமாவின் வீட்டுக்குப் பழங்களைக் கொடுத்தனுப்பினார் என்று இந்தச் செய்தி கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் எப்போதும் வறுமை தான் நிறைந்து இருந்த்து.

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மூன்று நாட்கள் அல்ல! சில ஹதீஸ்களில் மூன்று மாதங்கள் கூட அடுப்பெரிக்காமல் இருந்தனர் என்று சரியான ஹதீஸ் கூறுகின்றது.

இப்படிப்பட்ட நிலையிலும் நபி (ஸல்) அவர்கள் யாரிடமாவது கையேந்தி இருப்பார்களா? தன் வறுமையைப் பற்றி மற்ற தோழர்களிடம் பேசியாவது இருப்பார்களா?

தன்மானம் காத்த உத்தம நபியை இந்தச் செய்தி, தன் மகளுக்காக யாசகம் கேட்டது போன்ற தோற்றத்தைத் தந்து மாநபியைக் கொச்சைப்படுத்துகின்றது.

நபியின் பெருமையைப் பேசுகிறோம் என்ற பெயரில் நபியவர்கள் மீது சேற்றை வாரி இறைத்திருக்கின்றார்கள். நபியின் தன்மானத்தின் மீதே கல்லெறிந்திருக்கிறார்கள் இந்தக் கயவர்கள்.

இதைத் தான் ஹதீஸ் என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தன் மகளுக்காக மட்டும் நபியவர்கள் கருணை காட்டினார்கள் என்றால், தம்முடைய அன்பு மனைவிமார்களுக்கு எதைக் கொடுத்தார்கள்? அவர்களும் பசியோடும் பட்டினியோடும் தானே இருந்தார்கள்?

தன் மகள் ஃபாத்திமா மூன்று நாட்கள் சாப்பிடவில்லை என்று சொல்லி அவர்களுக்கு பேரீத்தம்பழம் கொடுக்க நபியவர்கள் ஏற்பாடு செய்தார்கள் என இந்த ஹதீஸ் கூறுகின்றது.

அப்படியானால் நபியவர்களின் குடும்பத்தில் ஃபாத்திமாவைத் தவிர மற்ற அனைவரும் நன்கு புசித்துக் கொண்டிருந்தார்களா?

நபியவர்களின் குடும்பத்தில் அனைவரும் பட்டினியாகத் தான் இருந்தார்கள் என்றால் பாத்திமாவிற்கு மட்டும் உணவு கொடுக்க ஏற்பாடு செய்தது அநியாயம் இல்லையா?

ஒரு காலத்திலும் நபியவர்கள் இப்படிப்பட்ட பாரபட்சத்தைச் செய்யவே மாட்டார்கள்.

மேற்கூறப்பட்ட பலவீனமான ஹதீஸில் தான் இந்தக் கதைகளும் கப்ஸாக்களும் உள்ளன.

ஆனால் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் இதுபோன்ற கதைகள் இல்லை.

முஸ்லிமில் இடம்பெறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இதோ:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஒரு பகல்’ அல்லது ‘ஓர் இரவு’ வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?’’ என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!’’ என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள் ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் தான். உங்கள் இருவரையும் வெளியே வரச் செய்ததே என்னையும் வெளியே வரச் செய்தது’’ என்று கூறி விட்டு, “எழுங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?’’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்’’ என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை’’ என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும், கனிந்த பழங்களும், செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்’’ என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4143

இதுதான் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். இது போன்ற ஆதாரப்பூர்வமான செய்திகளை மட்டும் பரப்பி நன்மைகளை அடைவோம்.

குடும்பவியல்   தொடர்: 37

பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நிர்வாகத் தலைமைப் பொறுப்பும், பொருளாதாரப் பொறுப்பும் ஆண்களையே சார்ந்துள்ளது என்பதை இதுவரை குடும்பவியலில் பார்ததுள்ளோம்.

அடுத்ததாக இஸ்லாமியக் குடும்பவியலில் பெண்களின் முக்கிய பொறுப்புக்கள் குறித்து பார்க்க வேண்டும். பெண்கள் வீட்டில் எப்படியிருக்க வேண்டும்? வீட்டில் பொறுப்புக்கள் என்ன? வெளியில் எப்படி இருக்க வேண்டும்? அதேபோன்று மாமனார் மாமியாருக்கு வேலை பார்ப்பதைப் பாரமாக நினைப்பது சரியா? என்பன போன்ற பல விஷயங்களை இந்தத் தலைப்பின் கீழ் பார்க்கப் போகிறோம்.

பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லுதல்

பெண்கள் வெளியிடங்களில் மக்கள் பார்வையற்ற இடங்களுக்குச் சென்று தங்களது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவது, பகலில் இயற்கைத் தேவையை நிறைவேற்றாமல், இருட்டுகிற வரை காத்திருந்து இரவில் தங்களது தேவைகளை நிறைவேற்றுவார்கள். இதுபோன்ற காரியங்கள் இன்றைக்கும் பல கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஆண்களும் இதுபோன்று நடக்கிறார்கள். ஆண்கள் பகலிலும் கூட இதுபோன்ற காரியங்களை நிறைவேற்றுவார்கள்.

இப்படி நபியவர்கள் காலத்தில் வீட்டிற்குள் கழிவறை வசதிகள் இல்லாத காரணத்தினால் பெண்கள் தங்களது இயற்கைத் தேவையை நிறைவேற்ற மக்கள் வசிக்காத, மக்களின் கண்களுக்குத் தெரியாத நிலையில் செல்வார்கள்.

பெண்களும் இப்படி வெளியே சென்று இயற்கைத் தேவைகளை நிறைவேற்றியதாக புகாரி 146, 147, 4795, 5237, 6240 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.

ஓட்டுப் போடுவது, பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கடை வீதிக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்ற அவசியமான விஷயங்களுக்காகப் பெண்கள் வெளியே செல்வதைக் குறைசொல்ல முடியாது.

அதே போன்று நபியவர்கள் தங்களது மனைவிமார்களை போர்க்களங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். பாத்திமா (ரலி), உம்மு ஹராம் (ரலி), உம்மு அத்திய்யா (ரலி), மற்றும் நபியவர்களின் மனைவிமார்கள் போருக்குச் சென்று, காயம்பட்ட வீரர்களுக்கு மருந்து போடுவது, காயம்பட்டவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது, இறந்தவர்களை அப்புறப்படுத்துவது போன்ற வேலைகளை போர்க்களங்களில் செய்துள்ளார்கள் என்று ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது.

பார்க்க: புகாரி 324, 980, 1652

தேவையில்லாத விஷயங்களுக்காகப் பெண்கள் வெளியில் சென்றால் கணவர்கள் மனைவிமார்களைத் தடுக்கலாம். உதாரணத்திற்கு ஒருவரது மனைவி தினமும் பக்கத்து வீட்டுக்குச் சென்று புறம் பேசுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது பக்கத்து வீடாக இருந்தாலும் மனைவி செல்வதைக் கணவர் கண்டிக்கத்தான் வேண்டும். புறம் பேசுவது அடிப்படைத் தேவை இல்லை.

வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

தேவைகளுக்காகப் பெண்கள் வெளியில் சென்றாலும் மார்க்கம் போதிக்கிற ஒழுங்கு முறைகளைப் பேணித்தான் செல்ல முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் பற்றி நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆடையணிந்தும் நிர்வாணமாக இருக்கும் பெண்களைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதைப் பல வகையில் இன்று பார்க்கிறோம். இருப்பினும் இதை மூன்றாகப் பிரித்து விளங்கலாம்.

மெல்லிய ஆடைகள், அதாவது உடல் முழுவதும் மறைத்து இருந்தாலும் காட்சியாக்கப்படும் நிலையில் உள்ள ஆடைகள், அரைகுறையாக மறைப்பது, அதாவது முன் கை, முகம், கால் பாதம் தவிர மறைய வேண்டிய மற்ற பகுதிகளில் சிலதை மறைத்து சிலதை வெளியில் தெரிகிற மாதிரி அணிகின்ற சேலை, குட்டைப் பாவாடை போன்ற ஆடைகள், இறுக்கமான ஆடைகளை அணிவது, அதாவது உடல் முழுவதும் கணத்த துணியால் மூடினாலும் இறுக்கமாக இருக்கும் பட்சத்தில் உடல் உறுப்புக்கள் தெரியும் அளவில் அணியப்படுகிற ஆடைகள். இவைகள் அனைத்தும் அந்நிய ஆண்களை ஈர்க்க்கும் தடைசெய்யப்பட்ட ஆடை முறைகளாகும்.

அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் நடை பிறரை ஈர்க்கின்ற வகையில் இருக்கவே கூடாது. பிறரை ஈர்க்கும் வகையில் சாய்ந்து நெழிந்து நடப்பது தவறானது. அதனைத் தமிழில் தளுக்கி, மினுக்கி நடப்பது என்பார்கள். இதுபோன்ற நிலையில் பெண்கள் வெளியில் செல்வது கூடாது. இவற்றையெல்லாம் நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர்) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.

(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை (முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5487

அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் பேச்சுக்கள் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போன்று இருக்க வேண்டும். பேச்சில் ஒரு மிரட்டல் தொணி இருக்க வேண்டும். கொஞ்சல், குழைவுத் தன்மை இருக்கவே கூடாது. பேச்சில் இழுவை இருக்கக் கூடாது. ஒரு பெண்ணின் பேச்சை பிற அந்நிய ஆண்கள் வெறுக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரசிக்கத்தக்க வகையில் இல்லாதிருக்க வேண்டும்.

நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

(அல்குர்ஆன் 33:32)

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

அனைத்து வகை விளைச்சலிலும் பத்தில் ஒரு பங்கு ஜகாத்?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

அனைத்து வகை விளைச்சலிலும் பத்தில் ஒன்று?

பூமி தரும் விளைச்சல் குறைவாகவோ, அதிகமாகவோ, மழை நீரில் விளைந்ததாகவோ, நாம் தண்ணீர் பாய்ச்சியதாகவோ எப்படி இருந்தாலும் அவற்றில் பத்தில் ஒரு பங்கை ஜகாத்தாக வழங்க வேண்டும் என்று அபூஹனிபா கூறியதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

அபூஹனிபா பெயரில் ஒன்றைச் சொன்னால் அதைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அவர் அப்படிச் சொன்னாரா இல்லையா என்றெல்லாம் ஆய்வு செய்யத் தேவையுமில்லை.

ஆனால் அபூஹனிபாவைத் தாங்கிப் பிடிக்கிறேன் பேர்வழி என நபிகள் நாயகத்தின் மீது இல்லாததை எல்லாம் அள்ளிவிட்டால்?

ஆம்! அபூஹனிபாவின் இந்தக் கருத்திற்கு நபிகள் நாயகம் கூற்றில் ஆதாரம் உள்ளதாம்.

இதோ அவர் சொல்வதை பாருங்கள்

الهداية شرح البداية - (1 / 109)

ولأبي حنيفة رحمه الله قوله عليه الصلاة والسلام ما أخرجت الأرض ففيه العشر

பூமி தரும் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் உண்டு என்ற நபிகள் நாயகம் கூற்று அபூஹனிபாவுக்கு ஆதாரமாக உள்ளது.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 109

இவர் குறிப்பிட்ட வாசகத்தில் எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகம் அழகாக, தெளிவாகப் பிரித்து சொன்ன வேறு நபிமொழியை இவர் தன் கருத்திற்குத் தோதுவாக வாசகங்களை வளைத்துச் சொல்கிறார்.

அபூஹனிபாவின் பெயரில் சொல்லப்பட்ட உளறலுக்கு, இல்லாத நபிமொழியை (?) ஆதாரம் என்கிறார்.

நபிகள் நாயகம் விளைச்சலை இரண்டாக வகைப்படுத்தி, தானாக விளைபவற்றில் பத்தில் ஒன்று என்றும், நீர் பாய்ச்சி விளைபவற்றில் இருபதில் ஒன்று எனவும் பிரித்துச் சொன்னதாகவே நபிமொழி கூறுகின்றது.

‘மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1483

இதற்கு மாற்றமாக பொத்தாம் பொதுவாக எல்லா விளைச்சலுக்கும் பத்தில் ஒரு பங்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் அதை நபியின் பெயரில் முஸ்லிம்களிடம் திணிக்க முற்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

வாயில் வந்ததைச் சொல்வேன் என்ற நிலைப்பாட்டை எடுத்த பிறகு, அதை வேறு யார் பெயரிலாவது சொல்லி விட்டு போகட்டும்.

தன் மீது எதையும் பொய்யாகச் சொல்லி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் எச்சரித்திருக்க அதைக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இப்படி நபி மீது அள்ளிவிட அவசியம் என்ன?

இதையும் ஒரு கூட்டம் ஆமோதித்துக் கொண்டும் வாய் பொத்திக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு நபிகள் நாயகத்தின் மீதான நேசத்தை விட தங்கள் மத்ஹபு இமாம்களின் மீதான பாசமே வானளாவிய அளவில் மேலாங்கி இருக்கின்றது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தவாஃபுல் குதூம்

கிரான் மற்றும் இஃப்ராத் முறையில் ஹஜ் செய்வோர் மக்கா வந்ததும் தவாஃப் செய்ய வேண்டும். இதற்கு தவாஃபுல் குதூம் என்று சொல்லப்படும்.

தவாஃபுல் குதூம் பற்றி ஹிதாயாவில் பேசப்படும் போது நபிகள் நாயகம் சொல்லாததைச் சொன்னதாக ஓர் அபாண்டமான செய்தி அள்ளி வீசப்படுகிறது. 

وقال مالك رحمه الله إنه واجب لقوله عليه الصلاة والسلام من أتى البيت فليحيه بالطواف

யார் கஃபாவுக்குள்ளே வருகிறாரோ அவர் தவாஃபின் மூலம் அதற்கு வாழ்த்துச் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மாலிக் இமாம் அவர்கள் தவாஃபுல் குதூம் கடமை என்று கூறுகிறார்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 141

இது தான் அந்த அபாண்டமான செய்தி.

கஃபாவுக்குள்ளே வருபவர் தஃவாபின் மூலம் வாழ்த்துச் சொல்லட்டும் என்று நபி சொன்னதாகப் புழுகியுள்ளனர். இப்படி ஒரு செய்தி எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை. அறவே ஆதாரமில்லாத அடிப்படையற்ற செய்தியாகும். இதுபோன்ற எண்ணற்ற பொய்ச் செய்திகளை நபி மீது அள்ளி வீச எப்படித்தான் மனம் வருகிறதோ! அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

முதலில் இது, பிறகு அது...

ஹஜ் தொடர்பான சட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டிருக்கும் வேளையில் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளில் செய்ய வேண்டியது பற்றி நபியின் பெயரால் ஒரு செய்தியைப் பதிவிடுகிறார். 

الهداية شرح البداية - (1 / 147)

روى عن رسول الله عليه الصلاة والسلام أنه قال إن أول نسكنا في يومنا هذا أن نرمي ثم نذبح ثم نحلق

இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் முதலாவது கல்லெறிவதாகும். பிறகு அறுத்துப் பலியிடுவதாகும். அதன் பிறகே தலையை மழிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 147

ஹஜ்ஜின் வணக்கங்களை நிறைவேற்றிடும் போது இந்த வரிசை முறையில் தான் செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் கூறியதாக ஹிதாயா நூலாசிரியர் பதிவிடுகிறார். ஆனால் அப்படி ஒரு செய்தி ஹதீஸ் நூல்கள் எவற்றிலும் இல்லை. நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள் என்பதற்குப் பலவீனமான செய்தி கூட கிடையாது. இந்த வரிசைப்படி நபிகள் செய்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டதாக ஹதீஸ் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜில்) மினாவிற்குச் சென்ற போது, (முதலில்) ஜம்ர(த்துல் அகபா)விற்குச் சென்று கற்களை எறிந்தார்கள். பின்னர் மினாவிலிருந்த தமது கூடாரத்திற்கு வந்து அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் வலப் பக்கத்தையும் பின்னர் இடப் பக்கத்தையும் காட்டி, ‘எடு’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 2510

நாம் என்ன கேட்கிறோம். ஹதீஸ்களில் என்ன இருக்கின்றதோ அதை அப்படியே சொல்வதில் இவருக்கு என்ன பிரச்சனை?

முதலில் கல்லெறிந்து, பலி கொடுத்து, பிறகு தலை மழித்துள்ளார்கள் என்று நபியின் செயலாக உள்ளதை, முதலில் கல்லெறிய வேண்டும், பிறகு பலி கொடுக்க வேண்டும், அதன் பிறகே தலையை மழிக்க வேண்டும் என்று நபியின் சொல்லாக ஏன் மாற்றிப் பதிவிட வேண்டும்?

இப்படி ஒன்றிரண்டு அல்ல! பலநூறு செய்திகளை நபி சொல்லாதவற்றை நபியின் சொல்லாக இணைக்கும் கொடுமையை அரங்கேற்றுகிறார்.

இதன் மூலம் ஹிதாயா நூலாசிரியர் அலட்சியத்தின் மொத்த வடிவமாகப் பரிணமிக்கின்றார்.

கிரான் என்பது சலுகையே என்று ஹதீஸ் உண்டா?

பல தலைப்புக்களிலும் உள் நுழைந்து தங்கள் கைச்சரக்குகளை ஹதீஸ்களாக அள்ளி வீசிய மத்ஹபினர் ஹஜ் கிரான் பற்றியும் ஒரு அவதூறை நபி மீது வாரியிறைத்துள்ளனர்.

அதற்கு முன் கிரான் என்றால் என்ன என்பதை அறிவோம்.

கிரான் என்றால் சேர்த்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டிய இடத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டும் போது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன் என்று கூறி இஹ்ராம் கட்டினால் இதுவே கிரான் ஆகும்.

ஒரு இஹ்ராமில் உம்ராவையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான் (உம்ராவையும், ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்தல்) எனப்படுகின்றது.

இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? குர்ஆன், ஹதீஸை மட்டும் படிக்கும் போது எந்தப் பிரச்சனையுமில்லை தான். ஆனால் மத்ஹபு என்ற பெயரில் மனிதர்களின் கருத்துக்கள் நுழையும் போது பிரச்சனை தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.

இப்போது மத்ஹபினர் அள்ளி வீசிய பொய்ச் செய்தி என்ன என்பதைப் பார்ப்போம்.

الهداية شرح البداية - (1 / 153)

 وللشافعي رحمه الله قوله عليه الصلاة والسلام القران رخصة

கிரான் என்பது சலுகையே என்று நபி கூறியுள்ளார்கள். இது ஷாபி இமாமுக்கு ஆதாரமாகும்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 153

ஷாபி இமாமின் கருத்திற்கு வலுசேர்க்க இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாக சரடு விடுகிறார்.

கிரான் பற்றி நபி கூறியதாக ஹிதாயாவில் குறிப்பிடும் இப்படியொரு செய்தி அறவே கிடையாது. எந்த இமாமும் இப்படி ஒரு செய்தி இருப்பதாகத் தங்கள் நூல்களில் பதிவு செய்யவில்லை.

இதில் இந்த ஹதீஸ் (?) ஷாபி இமாமுக்கு ஆதாரமாம்.

இல்லாத ஹதீஸ் ஷாபி இமாமுக்கு எப்படி ஆதாரமாக அமையும் என்கிற விந்தையை மத்ஹபினர்கள் தான் விளக்க வேண்டும்.

பலிப்பிராணி

பலிப்பிராணி பற்றிய பாடத்தில் இருப்பதிலேயே ஆடு தான் குறைந்த பட்ச பலிப்பிராணி என்ற கருத்தைப் பதிவிட்டு விட்டு, வழக்கம் போல நபியின் பெயரைப் பயன்படுத்தி புதுச் செய்தியை உருவாக்கி, பரப்பிச் செல்கிறார் நூலாசிரியர்.

الهداية شرح البداية - (1 / 185)

أنه عليه الصلاة والسلام سئل عن الهدي فقال أدناه شاة

நபி (ஸல்) அவர்கள் பலிப்பிராணி பற்றி வினவப்பட்டார்கள். அப்போது நபியவர்கள் ஆடு தான் குறைந்த பட்ச பலிப்பிராணி என்று பதிலளித்தார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 185

இந்தக் கதை பதாயிஉ ஸனாயிஃ என்ற மற்றுமொரு ஹனபி மத்ஹப் நூலிலும் வார்த்தை மாறாமல் இடம் பெற்றுள்ளது.

பார்க்க: பாகம் 5 பக்கம் 287

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் தான் செய்து விட்டு டைட்டில் கார்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்துகிறார்.

நபி இப்படி கேட்கப்பட்டார்கள்; அதற்கு நபி இப்படி பதிலளித்தார்கள் என நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக் கற்பனை செய்து அதை ஹதீஸ் என மக்களிடையே பரப்புவது எந்த வகையான செயல்?

இவர் குறிப்பிடும்படியான செய்தி எந்த ஹதீஸ் நூலிலும் இல்லாத நிலையில் நபி இப்படிக் கூறியதாகக் கதை கட்டுகிறார்.

எந்த அறிஞர்களுக்கும் கிடைத்திராத இந்தச் செய்தி இவருக்கு மட்டும் கிடைத்த மர்மம் என்ன? எப்படிக் கண்டுணர்ந்தார்? மத்ஹபை ஆதரிப்போரே மர்மத்தை விலக்க வேண்டும்.

நீ மறுமையை நம்பினால்...

உடன் பிறந்த சகோதரிகள் இருவரை சமகாலத்தில் திருமணம் செய்ய கூடாது எனும் இஸ்லாமியச் சட்டம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

ஹிதாயாவில் இச்சட்டம் சொல்லப்படும் போது அதற்குரிய ஆதாரமாக குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுகிறார்.

இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது).

அல்குர்ஆன் 4:23

இதில் மறுப்பேதும் சொல்ல ஒன்றுமில்லை. சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதைச் சுற்றிவளைத்து என்றில்லாமல் நேரடியாகவே இவ்வசனம் சொல்லிவிடுகிறது.

அவ்வப்போது குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் குறிப்பிடும் மத்ஹபின் போக்கு மெய்சிலிர்க்க செய்கின்றது.

அடுத்து ஹதீஸ்? என்று ஒன்றை ஆதாரமாகக் காட்டுகிறார். இந்த ஹதீஸ்தான் எங்கே உள்ளது என்று கேட்கிறோம்.

الهداية شرح البداية - (1 / 191)

ولقوله عليه الصلاة والسلام من كان يؤمن بالله واليوم الآخر فلا يجمعن ماءه في رحم أختين

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் தமது இந்திரியத்தை இரு சகோதரிகளின் கருவறையில் ஒன்றிணைத்திட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 191

சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யலாகாது என்பதை அல்லாஹ்வின் தூதர் இவ்வளவு கடுமையுடன் எச்சரித்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

நபியின் பெயரால் மக்களை எச்சரித்திடும் போது அதற்குரிய ஆதாரத்தைக் குறிப்பிட வேண்டாமா? அதுவும் புதிது புதிதான, யாரும் கேட்டிராத செய்திகளை ரிலீஸ் செய்யும் போது அது எங்கே, எந்த நூலில் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் கடமை இவர்களுக்கில்லையா?

உண்மை என்னவென்றால் சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்வது குறித்து நபி கூறியதாக இவர் குறிப்பிடும் செய்தி எந்த ஹதீஸ் நூலிலும் இல்லை.

இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட வஹிச் செய்தியல்ல இது! முழுக்க முழுக்க நூலாசிரியரின் கற்பனையில் கருவாகி, நூலில் பிரசவமான  கள்ளக் குழந்தையே இது என்பதை உரத்துச் சொல்கிறோம்.

பெண்கள் பகுதி

மூடப்பழக்கங்கள் முற்றுப் பெறட்டும்

முஸ்லிம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!

ஆஃப்ரின்

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்

இவ்வுலகத்தில் அக்காலம் தொட்டு இக்காலம் வரையிலும் பல்வேறு மதங்கள் தோன்றியுள்ளன. மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது மதம் தான் சிறந்தது என புகழ்மாலை சூட்டுகின்றனர். ஆனால் மக்கள் அனைவருக்கும் உகந்த ஓர் உன்னதமான மார்க்கம் இருக்குமென்று சொன்னால், அது ஓரிறைக் கொள்கையை போதிக்கக்கூடிய, இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான்.

இயற்கையோடு இசைந்த இம்மார்க்கத்தில் சொல்லப்பட்ட போதனைகள் அனைத்தும் மக்களுக்கு எளிமையைப் போதிக்கக் கூடியதாகவும் மனிதநேயத்தைக் கற்றுத்தரக் கூடியதாகவும் இருக்கிறது. இதை இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் சிறந்த ஆசிரியராகவும், ஆன்மீக குருவாகவும் இருந்து நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

மனிதன் தன் இறைவனுக்காகச் செய்ய வேண்டியவை பற்றியும், தனக்காகச் செய்ய வேண்டியவை பற்றியும், உறவினர்கள், அண்டை வீட்டார், சக மனிதர்கள் என அப்போதனைகளின் தொடர் நீண்டு கொண்டே செல்கின்றது. ஆனால் இதற்குச் செயல் வடிவம் கொடுக்கக் கடமைப்பட்ட இஸ்லாமியர்களோ கடமைகளைக் கண்டு கொள்ளாதவர்களாகவும் போதனையைப் புறக்கணிப்பவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக பெண்களே இதில் முதலிடம் பிடித்துள்ளனர். ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பெண்களிடமும் கூட பல அலட்சியங்கள் காணப்படுகின்றன. அவர்களின் அறியாமையையும், அலட்சியத்தையும் நாம் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே செல்கிறது.

முதலாவதாக இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் பெண்களின் அலட்சியத்தை காண்போம்.

ஈமானில்...

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை, முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.        

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 8

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை, எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது ‘‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை” என கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது தொல்லை தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

இஸ்லாத்தின் முதல் தூணாகவும், ஈமானில் உயர்ந்த கிளையாகவும் இருப்பது ஏகத்துவம் தான். ஷஹாதத் வாசகங்களை ஒருவர் மொழிவதால் மட்டும் அவர் ஏகத்துவவாதி என்று கருதப்படமாட்டார். மாறாக இறைவனுக்குரிய பண்பை மற்ற மனிதர்களுக்கோ, பொருளுக்கோ, உயிரினத்திற்கோ கொடுக்காமல் இருக்க வேண்டும்.

மக்களுக்கு மத்தியில் ஏகத்துவ விதை தூவப்பட்டு அது அசைக்க முடியாத மரமாக உருவெடுத்த இக்காலத்தில் பெரும்பான்மை பெண்கள் அறியாமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர். எனினும் அந்தப் பழமையிலிருந்து  அவர்களை முற்றிலுமாகப் பிரித்தெடுக்க முடியவில்லை. ஏனெனில் இணை வைப்பு என்றால் சிலை வணக்கமும் தர்ஹா வழிபாடும் தான் என்று எண்ணி வைத்துள்ளனர். இந்த அறியாமையினால் தங்களது அன்றாட வாழ்க்கையில் அவர்கள் செய்யும்  பல்வேறு காரியங்களில் இணைவைப்பின் அம்சங்களே நிறைந்துள்ளன.

ஷஹாதத் வாசகங்களை முன் மொழிவதில் நம் பெண்கள் எவ்விதக் குறைபாடும் வைக்கவில்லை. ஆனால் அந்த ஈமானை உளப்பூர்வமாக ஏற்று அதை முழுமைப் படுத்துவதிலும் அதனை உறுதிப்படுத்துவதிலும் தான் தடுமாறுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பாதங்களுக்குக் கீழ் போட்டுப் புதைத்த மடமைக் காரியங்கள் இன்றளவும் நம்மவர்களிடம் குடிகொண்டிருக்கின்றன.

சகுனம்

பெண்களை ஆட்கொண்டிருக்கும்  விஷயங்களில் முக்கியமானது சகுனம் பார்ப்பது தான். அறியாமை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டாலும் சகுனம் பார்ப்பதில் கல்வி அறிஞர்கள், பாமரர்கள் என எவரும் விதிவிலக்கு பெறுவதில்லை.

1. வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் நினைத்த காரியம் தடைபட்டு விடும்.

2. வெற்றுக்குடம் இருக்கும் போதும், விதவைப் பெண்கள், அந்தஸ்தில் தாழ்ந்தவர்கள் முன்னிலையிலும் வெளியே செல்வதை துற்சகுனமாகக் கருதுவது.

3. பல்லி கத்தினால் நல்லது, அது மேலே விழுந்துவிட்டால் சாவு விழும் என்ற நம்பிக்கை.

4. வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தாளி வருவார்கள்.

5. ஒரு வீட்டிற்கு முன் சாக்குருவி கத்தினால் அங்கே மரணம் நிகழப்போகிறது.

6. கை அரித்தால் வீட்டிற்குப் பணம் வரும்.

7. வலது கண் துடித்தால் நல்லதும், இடது கண் துடித்தால் கெட்டதும் நடக்கும் என்ற நம்பிக்கை.

8. மஃரிப் நேரத்தில்  தண்ணீர் உட்பட நம் வீட்டிலுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் எவருக்கும் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது அவ்வாறு செய்தால் நம் வீட்டிலுள்ள அபிவிருத்தி நம்மை விட்டு போய் விடும் என்ற நம்பிக்கை.

இது போன்ற எண்ணிலடங்கா மடமைகள் நம் தாய்மார்களின் மனதில் அசைக்க முடியாதவாறு அச்சாரமிட்டு அமர்ந்திருக்கின்றன. சகுனம் பார்ப்பதின் காரணிகள் வேண்டுமானால் இடத்திற்கு இடம் மாறுபடலாமே தவிர பெண்களின் மனநிலையில் எவ்வித மாறுதல்களும் ஏற்படவில்லை.

சிறிய, பெறிய எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், எதற்கெடுத்தாலும் சகுனம் பார்ப்பதைக் கைவிடுவதில்லை நம் சகோதரிகள். ஆனால் இஸ்லாம்  இதை முற்றிலுமாகத் தகர்த்தெறிகிறது.

இதோ நம் தூய மார்க்கம் சொல்வதைக் கேளுங்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்று நோய் கிடையாது, பறவை சகுனம் கிடையாது. ஸபர் (பீடை) என்பது கிடையாது.   ஆந்தையால் சகுனம் பார்ப்பது கிடையாது.

நூல்: முஸ்லிம் 4465

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. ஆந்தை பற்றிய (மூட) நம்பிக்கையும் இல்லை. நட்சத்திர இயக்கத்தால் தான் மழை பொழிகிறது என்பதும் (உண்மை) இல்லை. ஸபர் (பீடை) என்பதும் கிடையாது.

நூல்: முஸ்லிம் 4469

நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது

காலங்களோடும், நேரங்களோடும் தான் மனிதனின் வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க காலத்தை நல்லது கெட்டது என தரம் பிரிப்பது வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. திருமணம், தொழில் துவங்குதல், புது வீட்டிற்குச் செல்லுதல் என மார்க்கம் அனுமதித்த காரியங்களிலும் மற்றும் பூப்பெய்தல், பெயர் சூட்டுதல், குழந்தைப்பேறுக்கு அனுப்புதல் போன்ற மார்க்கம் அனுமதிக்காத காரியங்களைத் துவங்கும் முன்பாக நல்ல நேரம், கெட்ட நேரம் பார்க்கும் வழக்கம் பெரும்பான்மையானோரிடம் இருக்கிறது.

உலகில் நிகழக்கூடிய காரியங்கள் அனைத்தும் ஆட்களைப் பொறுத்தே அமைகின்றன நாட்களைப் பொறுத்து அல்ல. காலம் என்பது மனிதன் நாட்களை கணக்கிட்டு கொள்வதற்கான ஒரு வழிகாட்டி தான். வெற்றி தோல்வியை, இன்ப துன்பத்தைத் தீர்மானிக்கும் இலக்கு அல்ல. இதை உணராமல் நம்மவர்கள் காலத்தைக் குறைகூறுகின்றனர். இதன் மூலம் இறைவனையே நோவினை செய்கின்றனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். காலத்தின் கை சேதமே என்று அவன் கூறுகின்றான். ஆகவே உங்களில் ஒருவர் காலத்தின் கை சேதமே என்று கூற வேண்டாம். ஏனெனில் நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன்.

 நூல்: முஸ்லிம் 4521

ஒரு நாளில் குழந்தை பிறக்கிறது என்றால் அதே நாளில் அதன் தாய் மரணிக்கிறாள். இப்படி இறப்பும் பிறப்பும் ஒரே நேரத்தில் சங்கமிக்கும் அந்நாளை நாம் நல்ல நாள் என்று குறிப்பிடுவோமா? அல்லது கெட்ட நாள் என்று குறிப்பிடுவோமா? நாட்கள் நன்மை, தீமையைத் தீர்மானிக்காது என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரமாக இருக்கிறது.

இந்த நாளினால், இந்தப் பொருளினால் தான் நல்லது நடக்கும் என்று ஒருவர் நம்பினால் அவர் இறை நம்பிக்கையாளர் இல்லை என ஏந்தல் நபி எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு சுபுஹ் தொழுகை தொழுவித்தார்கள் அன்றிரவு மழை பெய்திருந்தது தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்கள் இறைவன் என்ன கூறுகிறான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என நாங்கள் கூறினோம்.

என்னை விசுவாசிக்கக் கூடியவர்கள், என்னை நிராகரிக்கக் கூடியவர்கள் என என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். ‘அல்லாஹ்வின் கருணையினாலும், அவனது அருட்கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்கள் ஆவர். ‘இந்த நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது’ எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை விசுவாசிக்கக் கூடியவர்கள் ஆவர் (என்று இறைவன் கூறுவதாக நபியவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித்

நூல்: புஹாரி 846

நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட வியாபாரங்கள், திருமணங்களில் பலவும் தோல்வியிலும், மனக்கசப்பிலும் முடிவடைவதையும், மக்களால் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் அமோக வரவேற்பை பெறுவதையும் நாம் பார்க்கலாம். இதற்கு அன்னை ஆயிஷாவின் வாழ்க்கை ஓர் முன்மாதிரியாகவுள்ளது.

அறியாமைக் காலத்தில் ஷவ்வால் மாதம் பீடை மாதமாகவும், துர்க்குறியாகவும் கருதப்பட்டது. அம்மாதத்தில் மக்கள் எவ்வித நற்காரியமும் செய்ய மாட்டார்கள். மேலும் அம்மாதத்தில் திருமணம் செய்தால் நிலைக்காது என்றும் நம்பி இருந்தனர். இந்த அறியாமையை அழிப்பதற்க்காகவே நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் ஆயிஷாவைத் திருமணம் செய்தார்கள் அனைவரும் மெச்சும் அளவிற்கு வாழ்ந்தார்கள். இதைப் பற்றி அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார்கள்.

ஆயிஷா (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்: ஷவ்வால் மாத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னை விட நெருக்கத்திற்குரியவர் யார்?  

நூல் : முஸ்லிம் 2782

மனிதனின் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் இறை சித்தாந்தத்தின் அடிப்படையில் தான். இதில் காலத்திற்கும், சகுனங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. இவ்வாறு நம்புவது தான் இறை நம்பிக்கையாகும். இதைப் போன்ற இன்னும் ஏராளமான மடமைகள் நமது பெண்களிடம் இன்றளவும் காணப்படுகிறது. ஆனால் நம் இஸ்லாம் மார்க்கமோ மூடநம்பிக்கைகள், சமூகத்தீமைகள், அனாச்சாரங்கள் என்று எதையும் விடாமல் அனைத்தையும் அழித்து ஒழிக்கின்ற சமூகநலன் காக்கும் சுமூக மார்க்கமாகவும் தலைசிறந்த கோட்பாடாகவும் திகழ்கிறது.

எந்தவொரு பிரச்சனைக்கும், சிக்கலுக்கும் நிறைவான, நிலையான தீர்வை இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வழங்குகிறது. தனிமனிதனும் சமூகமும் சீரும் சிறப்பும் பெற்று எக்காலத்திலும் நலமுடன் வாழ இதன் வழிகாட்டுதல் தான் உகந்தவை  எல்லா வகையிலும் மேன்மை மிக்கவை. இத்தகைய சிறப்புமிக்க மார்க்கத்தில் வாழக்கூடிய நாம் அறியாமைக்குத் தாழிட்டுவிட்டு அறிவிற்கு வேலை கொடுப்போம், இஸ்லாமியர்களாகவே வாழ்ந்து இஸ்லாமியர்களாகவே மரணிப்போம்.

ஜன் சேவா எனும் வட்டிக் கடை

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் ‘‘ஜன் சேவா” எனும் பெயரில் வட்டியில்லா வங்கி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் சட்டதிட்டங்கள் உண்மையில் மார்க்க அடிப்படையில் சரியானதுதானா? அந்த வங்கியில் பங்குதாரராக இணையலாமா? அதில் கடன் பெறுவது கூடுமா? எனப் பலர் நம்மை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகின்றனர்.

இவர்கள் வட்டி இல்லா வங்கி முறையை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக அந்தச் சகோதரர்கள் நமக்கு அனுப்பித் தந்த வங்கியின் சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரங்களை நாம் ஆய்வு செய்தோம்.

அது போன்று இந்த வங்கியின் நிர்வாகிகளாக உள்ளவர்களின் விளக்கமும் நம்முடைய கவனத்திற்கு வந்தது.

அவர்கள் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து இஸ்லாமிய அடிப்படையில் மிகப்பெரும் பாவமான வட்டியை இவர்கள் வட்டி என்று சொல்லாமல் வேறு பெயர்களில் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதை நாம் மிகத் தெளிவாக அறிய முடிகிறது.

விபச்சாரத்தை திருமணம் என்று சொல்வதினாலோ, கள்ளை பால் என்று பெயர் சூட்டிக் குடிப்பதினாலோ அது ஹலாலாகி விடாது.

அது போன்று இந்த ஜன்சேவா சங்கத்தினர் கடனாகக் கொடுத்துவிட்டு அதற்கு பெறும் வட்டியை இலாபம் என்ற பெயரில் பெறுகின்றனர்.

இவர்கள் வட்டியில்லா வங்கி என்ற பெயரில் தங்களை நம்பி வரும் இஸ்லாமியர்களை எவ்வாறு மிகப்பெரும் பாவத்தில் தள்ளுகின்றனர் என்பதையும், மோசடியாக மக்களின் பணத்தை எப்படிச் சுரண்டுகிறார்கள் என்பதையும் விரிவாகக் காண்போம்.

கொடுத்த கடனுக்கு வட்டி வாங்கும்      ஜன் சேவா கடன் சங்கம்

கடனாகக் கொடுத்தால் கடன் தொகையை மட்டும் தான் திரும்பப் பெறவேண்டும். அதிகமான தொகையைப் பெற்றால் அது ஹராமான வட்டியாகும்.

ஆனால் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தினர் அவர்களுடைய வங்கியில் கடன் கேட்டு வருபவர்களுக்கு கொடுக்கும் கடன் அளவிற்கு தங்க நகைகளையோ, அல்லது வாகனத்தையோ, அடைமானமாகப் பெற்றுக் கொண்டுதான் கடன் வழங்குகின்றனர்.

கடனாகக் கொடுத்து விட்டு, கொடுத்த கடனிற்கு முதலீடு எனப் பெயர் சூட்டிவிடுகின்றர். கடன் வாங்கியர் அசல் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அதனால் கிடைத்த இலாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தையும் இந்த வங்கிக்குச் செலுத்த வேண்டும்.

கடனாகக் கொடுத்து விட்டு அசலையும் கட்ட வேண்டும். லாபம் என்ற பெயரிலும் கட்ட வேண்டும் என்கின்றனர்.

அசலையும் பெற்றுக் கொண்டு லாபம் என்ற பெயரில் பெறக்கூடிய தொகை தெளிவான வட்டியாகும்.

ஜன்சேவா சங்கத்தினர் கடன் தொகையை விட அதிகப் பெறுமானமுள்ள அடைமானத்தைப் பெற்றுக் கொண்டு கடன் கொடுத்துவிட்டு அதனை முதலீடு என்கின்றனர்.

கொடுத்த கடனிற்கு வட்டியாகப் பெறும் தொகையை இலாபம் என்கின்றனர்.

இவர்கள் கடன் தொகைக்கு முதலீடு என்று பெயரிட்டு இஸ்லாமிய மக்களை ஏமாற்றும் மிகப் பெரும் மோசடியைச் செய்கின்றனர்.

காயல்பட்டிணத்தில் இந்த ஜன்சேவா சங்கத்தினர் வெளியிட்டுள்ள பிரசுரத்தில் இடம்பெற்றுள்ள வாசகத்தை அப்படியே தருகின்றோம்.

முதலீடு கடன் வழங்கும் முறை

சிறு தொழில் / வியாபாரம் ஆகியற்றுக்கு மட்டுமே முதலீடு கடன்கள் வழங்கப்படுகிறது.

லாப நஷ்ட வியாபார முறையில் மட்டும்தான் கடன்கள் கொடுக்கப்படும்.

கடன் வாங்குபவரின் தகுதி முழு ஆய்வு செய்யப்பட்டு,  லாப நஷ்ட பங்கீடு முறை, முதலீடு கடன் அடைக்கும் கால அவகாசம், இரு தரப்பினராலும் முழு சம்மதத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே வியாபாரம் அமுலாக்கப்படுகிறது.

முழு கடன்  தொகைக்கு ஏற்ப தங்க நகைகள் / வாகனம் அடைமானமாகப் பெற்ற பின்னரே கடன் வழங்கப்படுகிறது.

மாதந்தோறும் முதலீடு மற்றும் லாப தொகையை திரும்பச் செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் பழு குறைக்கப்பட்டு எளிதில் முழுத் தொகையையும் பலர் அடைத்து விட்டனர்.

முழு கடன் தொகைக்கு ஏற்ப தங்க நகைகள் / வாகனம் அடமானமாகப் பெறப்படுவதினால் நஷ்டம் ஏற்படவில்லை.

மேற்கண்ட வாசகங்கள் காயல்பட்டிணத்தில் ஜன்சேவா சங்கத்தினர் வெளியிட்ட பிரசுரத்தில் உள்ள வாசகங்களாகும்.

இவர்கள் வட்டியில்லா ஹலால் வங்கி என்ற பெயரில் எப்படி அப்பாவி இஸ்லாமியர்களை ஏமாற்றுகின்றனர் என்பதை அவர்கள் வெளியிட்ட பிரசுரத்தில் இருந்தே விளங்கிக் கொள்ளலாம்.

கடன் கொடுத்தவர் தன்னை முதலீட்டாளர் என்று சொல்லிக் கொள்ளலாமா?

ஒரே தொகை கடனாகவும், அதே நேரத்தில் முதலீடாகவும் எப்படி ஆகும்.?

கடன் என்று சொன்னால் அந்த இலக்கணப்படி இருக்க வேண்டும்.

முதலீடு என்றால் அந்த இலக்கணப்படி இருக்க வேண்டும்.

இவர்கள் மாதம் மாதம் வட்டியை லாபம் என்ற பெயரில் பெறும் போது அதற்கு முதலீடு என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் கடன் வாங்கியவர் தொழிலில் திவாலாகி விட்டால் சரிபாதியாக பொறுப்பு ஏற்காமல் அவரது அடைமானப் பொருளில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது கடன் என்று மட்டும் வாதிடுகிறார்கள்.

இதைப் பின்வரும் வாசகங்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.

முழு கடன் தொகைக்கு ஏற்ப தங்க நகைகள் / வாகனம் அடமானமாகப் பெறப்படுவதினால் நஷ்டம் ஏற்படவில்லை.

அதாவது அடைமானம் பெறுவதால் வங்கியின் பங்குதாரர்களுக்கு நட்டம் ஏற்படாது என்று குறிப்பிடுகின்றனர். நட்டம் ஏற்பட்டால் முதலீடு என்பதில் இருந்து நழுவி கடன் எனக் கூறி அடைமானப் பொருளை எடுத்துக் கொள்வோம் என்பதுதான் இதன் பொருள்.

யூதர்கள் இப்படித்தான் தமக்குச் சாதகமாக மார்க்கத்தை வளைத்தனர். லாபமான பாதியை ஏற்று மீதியை மறுத்தனர்.

பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத்தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

திருக்குர்ஆன் 2:85

வட்டி வாங்கும் போது மட்டும் முதலீடு எனப் பெயர் சூட்டிக் கொள்கின்றனர். நட்டம் ஏற்படும் போது கடன் எனப் பெயர் சூட்டி கடன் வாங்கியவன் தலையில் கட்டி விடுகின்றனர். இது அப்படியே யூதர்கள் கடைப்பிடித்த வழிமுறையாகவே உள்ளது.

கடன் கொடுத்தால் அடைமானம் பெற்றுக் கொள்வது நியாயமானது. ஆனால் முதலீட்டிற்கு அடமானம் பெற்றுக் கொள்ளலாமா?

முதலீடு என்றால் கொடுத்தவரும், வாங்கியவரும் முதலீட்டாளர்கள் ஆகிறார்கள். அப்படியானால் ஒருவரிடம் மட்டும் மற்றவர் அடைமானம் பெறுவது என்ன நியாயம்?

ஒரு குறிப்பிட்ட வியாபாரத்தில் ஒருவர் 50 சதவிகிதம் தன்னுடைய பணத்தை முதலீடு செய்கிறார். மீதி 50 சதவிகிதம் ஜன்சேவா வங்கியில் கடனாகப் பெற்று முதலீடு செய்கிறார். இப்போது ஜன் சேவா வங்கி தன்னுடைய முதலீட்டுக் கடனிற்கு அவரிடமிருந்து அதற்கு நிகரான நகையையோ, வாகனத்தையோ அடமானமாகப் பெற்றுக் கொள்கிறது.

அது போன்று கடன் வாங்கியவர் தன்னுடைய முதலீட்டிற்கு ஜன் சேவா வங்கியிடமிருந்து அடைமானத்தைக் கேட்டால் கொடுப்பார்களா?

கடன் தொகைக்கு லாப நஷ்டம் என்பது உண்டா?

கடன் கொடுத்த தொகைக்கு இலாபம் பெறுவது தெளிவான வட்டியல்லவா?

கடன் பெற்றவர் திவாலாகி விட்டால் அவருடைய அடைமானத்திலிருந்து தன்னுடைய முழுத் தொகையையும் ஜன் சேவா வங்கி எடுத்துக் கொள்கிறது. இப்படி இருக்கும் போது அதனை முதலீடு என்று எப்படிச் சொல்ல முடியும்?

திவாலாகும் போது கடன் வாங்கியவர் மட்டும் அதற்கு பொறுப்பு; கடன் கொடுத்த ஜன்சேவா வங்கி பொறுப்பு அல்ல. அவர்களுக்கு நட்டத்தில் பங்கு இல்லை என்பது பச்சை வட்டியாகும்.

இது போன்ற இன்னும் பல கேள்விகள் இவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரத்திலிருந்து எழுகின்றன.

ஜன்சேவா என்பது வட்டியில்லா ஹலால் வங்கி என்று அவர்கள் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அது மிகப் பயங்கரமான வட்டிக் கம்பெனி என்பதே குர்ஆன் சுன்னா ஆதாரங்களின் அடிப்படையிலான உண்மையாகும்.

ஒருவருக்கு நாம் கடன் கொடுத்தால் அந்தப் பணத்தை அவருக்கு முழு உரிமையாக்க வேண்டும். கடன் கொடுத்தவருக்கு அதில் உரிமை இருக்கக் கூடாது. உரிமை கொண்டாடினால் கடன் கொடுக்கவில்லை என்பதே அதன் பொருளாகும்.

கடனாகக் கொடுத்த காசை விட அதிகப் படியான பணத்தை கடன் பெற்றவரிடமிருந்து எதிர்பார்த்தால் அது இஸ்லாம் தடுத்த ஹராமான வட்டிக் காசாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வட்டி என்பதே கடனில்தான்

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: முஸ்லிம் (3254)

கடனாகக் கொடுத்துவிட்டு கடனைத் திருப்பிக் கேட்கும் போது கொடுத்ததை விட அதிகப்படியாகக் கேட்டுப் பெற்றால் அது மிகத் தெளிவான வட்டியாகும்.

அது போன்று இந்த வங்கியில் கடனாகப் பெற்று இலாபம் என்ற பெயரில் வாங்கிய கடனிற்கு அதிகப்படியான தொகையைச் செலுத்துபவர்கள் வட்டித் தொகையையே செலுத்துகின்றனர்.

எனவே இது போன்ற பாவமான காரியங்களிலிருந்து இறையச்சமுடையவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

திருக்குர்ஆன் 2:278,279

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 2:275

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ‘’இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்’’ என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3258)

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்...

சபீர் அலீ M.I.Sc.

ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா? அல்லது லுஹர் தொழுகையைத் தொழ வேண்டுமா? என்பதில் மக்களுக்கு மத்தியில் ஒரு குழப்பம் இருப்பதைக் காண முடிகிறது.

இதுபோன்ற நிலையை அடையும் போது பெரும்பான்மையான மக்கள், இரண்டு ரக்அத்கள் மட்டும் எழுந்து தொழுகின்றனர். ஒரு சிலர் லுஹர் தொழுகையை எழுந்து தொழுகின்றனர்.

இவ்விரண்டு முறைகளில் எது சரியான முறை என்பதையே இக்கட்டுரையில் காணவிருக்கின்றோம்.

ஜும்ஆத் தொழுகையின் கடைசி ரக்அத்தை ஒருவர் தவறவிட்டால் அவர் எழுந்து நான்கு ரக்அத்கள் லுஹர் தொழ வேண்டும் என்று நேரடி வாசகத்தைக் கொண்ட செய்திகள் இருக்கின்றன.

அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

எனவே அதை ஆதாரமாகக் கொண்டு நாம் முடிவு செய்ய முடியாது.

அதே சமயம், இந்தக் கருத்தை வேறு சில செய்திகளின் அடிப்படையில் நிறுவ முடிகிறது.

السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي (3/ 203)

5947- أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِى إِسْحَاقَ الْمُزَكِّى أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ فَقَدْ أَدْرَكَهَا إِلاَّ أَنَّهُ يَقْضِى مَا فَاتَهُ.

1608- حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ بْنِ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ ، حَدَّثَنَا يَعِيشُ بْنُ الْجَهْمِ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ (ح) وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَالِحٍ ، حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ ، عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ فَقَدْ أَدْرَكَهَا وَلْيُضِفْ إِلَيْهَا أُخْرَى

وَقَالَ ابْنُ نُمَيْرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ أَدْرَكَ مِنَ الْجُمُعَةِ رَكْعَةً فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى

أَخْبَرَنَا قُتَيْبَةُ وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ وَاللَّفْظُ لَهُ عَنْ سُفْيَانَ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ رَكْعَةً فَقَدْ أَدْرَكَ رواه النسائي

“யார் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்து விட்டார். எனினும், (தவறிப்போன ஒரு ரக்அத்தை) அவர் நிறைவேற்ற வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி நஸாயீ, தாரகுத்னீ, பைஹகீ உள்ளிட்ட ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்ட்டுள்ள ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

ஜும்ஆ தொழுகையின் கடைசி ரக்அத்தை அடைந்து விட்டால் ஜும்ஆ தொழுகையை அடைந்து விடலாம். தவறவிட்ட ஒரு ரக்அத்தை மட்டும் எழுந்து பூர்த்தி செய்தால் போதுமானது என்று மேற்கண்ட செய்தி கூறுகிறது.

“யார் ஜம்ஆ தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் ஜும்ஆவை அடைந்துவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தே ஒரு ரக்அத்தை அடையாதவர் ஜும்ஆவை தவறவிட்டுவிட்டார் என்ற கருத்தை விளங்க முடிகிறது.

அதனால், ஜும்ஆ எனும் சிறப்புத் தொழுகை கிடைக்கப் பெறாதவர் லுஹரையே நிறைவேற்றிவிட வேண்டும்.

ரக்அத்தின் எல்லை

ஜும்ஆவின் ஒரு ரக்அத் கிடைத்தால் அவருக்கு ஜும்ஆ கிடைத்துவிடும் என்பது தெளிவு.

தொழுகையில் எது வரை இணைந்தால் ஒரு ரக்அத்தை அடைந்து கொள்ளலாம்?

தொழுகையில் ருகூஃவிலிருந்து இமாம் நிமிர்வதற்கு முன்பு இணைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்துவிடலாம்.

இக்கருத்தில் பலவீனமான நபிமொழிகள் இருந்தாலும் பின்வரும் நபிமொழி ஆதாரப்பூர்வமானதாகும்.

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ الْأَعْلَمِ وَهُوَ زِيَادٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ رواه البخاري

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்துகொண்டிருந்த போது நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 783

இந்தச் செய்தியில் ருகூவை அடைந்தால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம் என்பதற்கான ஆதாரம் அடங்கியுள்ளது. எப்படி?

நபிகள் நாயகம் (ஸல்)  அவரகள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது ருகூஃவில் இருக்கிறார்கள். அப்போது, அபூ பக்ரா(ரலி) அவர்கள் வேகமாக வந்து ஸஃப்பில் இணைவதற்கு முன்பாகவே ருகூஃவு  செய்துவிட்டு பின்பு ஸஃப்பில் வந்து இணைந்திருக்கிறார்.

ருகூஃவில் இணைந்துவிட்டால் ரக்அத் கிடைத்துவிடும் என்பதால் தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிகிறது.

நபி (ஸல்) அவர்களும், அவர் வேகமாக ஓடி வந்ததைத் தான் இவ்வாறு இனிமேல் செய்யாதே என்று சொல்கின்றார்கள்.

மேலும், ருகூஃவில் இணைந்த அவருக்கு ரக்அத் தவறியிருக்குமேயானால் எழுந்து தொழ நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருப்பார்கள். அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தும் நபி இதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்கள் என்பதும் தெரிகிறது.

“அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக!’’ என்று அவருக்கு அல்லாஹ்வின் தூதர் கூறியதிலிருந்து அவர் ரக்அத்தை அடைவதற்காக வேகமாக வருகிற ஆர்வத்தைப் பற்றித்தான் இந்தச் செய்தி பேசுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

ருகூவை அடைந்தால் அந்த ரக்அத் நமக்குக் கிடைத்துவிடும் என்பது இந்தச் செய்தியிலிருந்து தெளிவாகிறது.

எனவே, ஜும்ஆத் தொழுகையின் கடைசி ரக்அத்தின் ருகூஃவில் இணைந்து விட்டால் ஜும்ஆ கிடைத்துவிடும். இமாம் ருகூஃவிலிருந்து நிமிர்ந்ததற்குப் பிறகு இணைந்தால் அவர் ஜும்ஆ கிடைக்கப் பெறாதவராவார். அவர் லுஹரையே தொழ வேண்டும்.

ஜும்ஆவில் பங்கெடுப்பதில் அலட்சியமாகவும், தாமதமாகவும் வரும்போதுதான் இதுபோன்று ஜும்ஆவை தவறவிடுகிற நிலை ஏற்படுகிறது.

ஜும்ஆவில் அலட்சியமாக இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி ‘’மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்’’ என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.

நூல் : முஸ்லிம் 1570

நபிகள் நாயகத்தின் இந்த எச்சரிக்கையையும் மனதில் கொண்டு முஸ்லிம்கள் செயல்பட வேண்டும்.

இணை கற்பித்தல்    தொடர் - 47

நபிமார்கள் கப்ரில்  தொழுகிறார்களா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நபிமார்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர்.

நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் அறிவிக்கப்படும் செய்திகளில் மூஸா நபி தொடர்பான செய்தியைத் தவிர மற்ற அனைத்தும் தவறான அறிவிப்புகளாகும்.

மூஸா நபி அவர்கள் கப்ரில் தொழுததைப் பார்த்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் மட்டுமே ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அமைந்துள்ளது.

மிஃராஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியை கப்ரில் தொழுவதாகவும் பார்த்தார்கள். மறுவினாடி பைத்துல் முகத்தஸிலும் பார்த்தார்கள். அதற்கு அடுத்த வினாடி விண்ணுலகிலும் பார்த்தார்கள்.

எனவே இது எடுத்துக்காட்டுவதில் அடங்கும். எடுத்துக் காட்டுதல் என்றால் என்ன என்று பின்னர் விளக்கப்பட்டுள்ளது.

மெய்யாகவே மூஸா நபி கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இறந்தவர்கள் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பதற்கோ, இவ்வுலக மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்கிறார்கள் என்பதற்கோ ஆதாரமாகாது. கப்ரில் அவர்கள் தொழுகிறார்கள் என்பதற்கு மட்டுமே அது ஆதாரமாகும்.

மற்ற ஹதீஸ்களைப் பார்ப்போம்.

ஹதீஸ்: 1

நபிமார்கள் நாற்பது நாட்களுக்கு மேல் தங்கள் கப்ருகளில் விட்டு வைக்கப்பட மாட்டார்கள். எனினும் அல்லாஹ்வின் சூர் ஊதப்படும் வரை தொழுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: ஹயாதுல் அன்பியா

ஹதீஸ்: 2

நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: ஹயாதுல் அன்பியா, பஸ்ஸார், ஃபவாயித்

இது போல் இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல.

பலமான அறிவிப்பாளர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் இது சமாதி வழிபாட்டுக்காரர்களுக்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.

ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் உயிருடன் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் இவை தருகின்றன. அவர்கள் சூர் ஊதப்படும் வரை அதாவது உலகம் அழிக்கப்படும் வரை தொழுது கொண்டே இருப்பார்கள் என்றால் அவர்களுக்கும், இவ்வுலகுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தான் பொருள்.

தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களை அழைப்பதும் கூடாது. அந்த அழைப்புக்கு அவர்கள் பதில் சொல்வதும் கூடாது. எனவே அவர்கள் இவ்வுலகிற்கு வர மாட்டார்கள் என்பது உறுதியாகிறது.

மேலும் இதை ஆதாரப்பூர்வமான செய்தி என்று எடுத்துக் கொண்டால் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இந்த நிலை கூட இல்லை என்பது தெரிகிறது.

மிஃராஜின் போது இறந்தவர்களைப் பார்த்தது எப்படி?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட நபிமார்கள் உயிருடன் தான் உள்ளனர் என்று வாதிடுகின்றனர்.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். மரணித்து விட்ட நபிமார்கள் மட்டுமின்றி இதர நல்லடியார்களும், கெட்டவர்களும் கூட ஆன்மாக்களின் உலகில் உயிருடன் உள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை.

அவர்களால் இவ்வுலகுக்கு வரமுடியுமா? இவ்வுலகில் தொடர்பு கொள்ள முடியுமா என்பது தான் பிரச்சனை.

மிஃராஜில் பல நபிமார்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது தீய கொள்கையுடையவர்களுக்கு ஆதாரமாக ஆகாது. இவ்வுலகை விட்டு வேறு உலகத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அழைத்துச் சென்றதாலேயே அவர்களால் பல நபிமார்களைக் காண முடிந்தது. நபிகள் நாயகத்துக்குப் பின்னர் எந்த முஸ்லிமும் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட மாட்டார். எனவே அவர் எந்த நபியையும் காண மாட்டார் என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது.

அடுத்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் விண்ணுலகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தவை அனைத்தும் அல்லாஹ்வால் எடுத்துக் காட்டப்பட்டவையாகும்.

நேரடிச் சந்திப்புக்கும், எடுத்துக் காட்டப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நமது வீட்டில் நம்மோடு வசிக்கும் உறவினரை நாம் கனவில் காண்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைக் கனவில் நாம் காண்பதால் அவர் நம்மைக் கண்டார் என்று ஆகாது. காலையில் எழுந்து அவரை நாம் சந்தித்தால் உங்கள் கனவில் நான் நேற்று வந்தேனே என்று அவர் கூற மாட்டார். உங்களைக் கனவில் நான் கண்டேன் என்று நாம் கூறினால் தான் அவருக்கே அது தெரியும். ஏனெனில் கனவில் அவர் நமக்கு எடுத்துக் காட்டப்பட்டாரே தவிர  அவரையே நாம் சந்திக்கவில்லை.

மிஃராஜ் என்பது கனவல்ல என்றாலும் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டவை அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டவை தான் என்பதை மிஃராஜ் சம்மந்தமான ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.

சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தல்!

நல்லோர்கள் சொர்க்கத்தில் இருப்பதையும், தீயோர்கள் நரகத்தில் இருப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்று மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 3241

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்து கொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!’’ என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “இவர் யார்?’’ எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும், இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர், வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்; இடப் பக்கம் (நரகவாசிகளைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்’’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் அபூதர் (ரலி)

நூல்: புகாரி 349

இந்த இரு ஹதீஸ்களும் சொல்வது என்ன? மனிதர்கள் சொர்க்கத்துக்குச் செல்வதும், நரகத்துக்குச் செல்வதும் இனிமேல் நடக்கக் கூடியவை. மரணித்தவர்கள் இதுவரை சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ செல்லவில்லை. நியாயத் தீர்ப்பு நாளுக்குப் பிறகு தான் இது நடக்கும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் சிலரையும், நரகத்தில் சிலரையும் பார்த்ததாக முதல் ஹதீஸ் கூறுகிறது.

யாருமே சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இன்னும் செல்லாத போது எப்படி அவர்களை சொர்க்கத்திலோ, நரகத்திலோ பார்த்திருக்க முடியும்? இனிமேல் நடக்க உள்ளதை அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்பதுதான் இதன் பொருளாக இருக்க முடியும். நேரடியாகவே பார்த்தார்கள் என்று பொருள் வைத்தால் நியாயத் தீர்ப்பு நாளில்தான் இதற்கான தீர்ப்பு அளிக்கப்படும் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களையும், நபிமொழிகளையும் மறுக்கும் நிலை ஏற்படும்.

இரண்டாம் ஹதீஸில் சொர்க்கத்தில் உள்ளவர்களைத் தமது வலப்பக்கமும், நரகத்தில் உள்ளவர்களைத் தமது இடப்பக்கமும் ஆதம் நபி பார்த்தார்கள் என்று கூறப்படுகிறது. அதில் மறுமை நாள் வரும் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரும் உள்ளடங்குவர். நாமும் அடங்குவோம். நபிகள் நாயகம் மிஃராஜ் சென்ற போது நாம் தான் பிறக்கவே இல்லையே? பிறகு எப்படி நம்மைக் கண்டார்கள்?

இவை யாவும் இறைவனது வல்லமையால் நபிகளாருக்கு எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்ச்சி தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

இனிமேல் படைக்கவுள்ளதை எடுத்துக் காட்டுவது இறைவனின் வழிமுறைகளில் ஒன்றாகும் என்பதைப் பின் வரும் வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். “நான் உங்கள் இறைவன் அல்லவா?’’ (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்‘’ என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்‘’ என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?’’ என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

திருக்குர்ஆன் 7:172

மறுமை நாள் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் எடுத்துக் காட்டியதாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் அனைவரையும் ஆதம் நபி பார்த்தார்கள் என்றால் நேரடியாகப் பார்த்தார்கள் என்ற பொருளில் அல்ல. இறைவன் எடுத்துக் காட்டிய விதத்தில் பார்த்தார்கள் என்பதாகும்.

இது போலவே மிஃராஜிலும் நபிகள் நாயகம் அவர்களுக்குப் பல காட்சிகளை அல்லாஹ் எடுத்துக் காட்டினான்.

எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிரத்தியேகமான முறையில் எடுத்துக் காட்டினான். கடந்த காலத்தில் மரணித்தவர்களையும் எடுத்துக் காட்டினான். எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை அல்லாஹ் எடுத்துக் காட்டியதால் அவர்கள் பிறந்து உயிருடன் உள்ளார்கள் என்று கருதுவது எந்த அளவு அபத்தமோ, மரணித்தவர்கள் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று கருதுவதும் அதே அளவு அபத்தமாகும்.

மிஃராஜில் காட்டப்பட்டவை அனைத்தும் எடுத்துக் காட்டுதல் தான் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களும் உள்ளன.

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்’’ என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருந்ததில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1149

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் பிலாலைப் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் பிலால் பூமியில் தான் அந்த நேரத்தில் இருந்தார். அவர் சொர்க்கத்தில் நடந்து சென்றது மெய்யான காட்சி என்றால் அது பிலால் அவர்களுக்குத் தான் முதலில் தெரிந்திருக்கும். அல்லாஹ்வின் தூதர் சொன்ன பிறகுதான் அவருக்கே தெரிந்தது என்றால் அவர் சொர்க்கத்தில் நடந்து செல்லவில்லை. இனிமேல் அவர் சொர்க்கம் செல்வார் என்பதைச் சொல்வதற்காக அவர் நடந்து செல்வது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ளான் என்பதைத் தவிர இதற்கு வேறு விளக்கம் கிடையாது.

“நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, ‘யார் அவர்?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), ‘இவர் பிலால்’ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், ‘இது யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், (வானவர்), ‘இது உமருடையது’ என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)’’ என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்’’ என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 3679

பிலால் (ரலி) அவர்களும், ருமைஸா அவர்களும் உலகில் உயிருடன் இருக்கும் போது அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் இருப்பதாகக் காட்டினான்.

நடக்காத ஒன்றை எடுத்துக் காட்டுவதாக இது அமைந்துள்ளது போல், மரணித்தவர்களை உயிருடன் உள்ளவர்களைப் போல் அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்றே பொருள் கொள்ள  வேண்டும்.

ஒருவரையே பல இடங்களில் பார்த்ததாக வருவதும் இது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வுதான் என்பதை மேலும் தெளிவாக்குகிறது.

மூஸா நபியை முதலில் கப்ரில் பார்த்தார்கள் என்று முஸ்லிம் 4736 கூறுகின்றது.

கப்ரில் தொழும் நிலையில் மூஸா நபியைப் பார்த்தது போலவே வானத்திலும் மூஸா நபியைச் சந்தித்தார்கள்.

(பார்க்க: புகாரி 349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர்.

(முஸ்லிம் 3410)

நேரடியாகப் பார்ப்பதாக இருந்தால் ஒருவரை ஒரு இடத்தில் தான் பார்க்க இயலும். ஒருவரை ஒரே நேரத்தில் பல இடங்களில் பார்த்ததாக வருவதிலிருந்து இது இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட காட்சி என்பதை அறியலாம்.

உலகம் அழிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு நாளில் தீர்ப்பும் வழங்கப்பட்ட பின்னரே நல்லோர்கள் சொர்க்கத்திற்கும், தீயோர்கள் நரகத்திற்கும் செல்வார்கள்.

அதுவரை நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் சொர்க்கம் செல்ல இயலாது.

பிர்அவ்ன், அபூஜஹ்ல்களாகவே இருந்தாலும் நரகத்திற்குச் செல்ல முடியாது. ஆன்மாக்களின் உலகில் தான் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில் பல தண்டனைகளை அனுபவிக்கும் நபர்களைப் பார்த்ததாக மிஃராஜ் பற்றிய ஹதீஸ்களில் வருகிறது.

விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும், மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரயீலே! இவர்கள் யார்?’’ என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்’’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல்: அபூதாவூத் 4255

உலகம் இனிமேல் தான் அழிக்கப்படும்.  அதன் பின்னர் அனைவரும் எழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். அதன் பிறகே நரகவாசிகள் நரகிற்குச் சென்று தண்டனையை அனுபவிப்பார்கள். அதற்குள் இந்தத் தண்டனைகளைப் பெறுபவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிப் பார்த்தார்கள்? நரகத்தின் தண்டனை எவ்வாறு இருக்கும் என்று எடுத்துக் காட்டுவதுதான் இதன் கருத்தாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4736

மூஸா நபி அவர்களை பைத்துல் முகத்தஸிலும், விண்ணுலகிலும் பார்த்தது போல் மண்ணறையில் தொழுது கொண்டு இருந்ததையும் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் மூஸா நபியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துள்ளதால் இவ்வாறு எடுத்துக் காட்டப்பட்டது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகம் பேசாதீர் (?)

எம்.ஐ. சுலைமான்

سنن الترمذى - مكنز - (9 / 254)

2593 - حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ أَبِى ثَلْجٍ الْبَغْدَادِىُّ صَاحِبُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ حَدَّثَنَا عَلِىُّ بْنُ حَفْصٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَاطِبٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تُكْثِرُوا الْكَلاَمَ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ فَإِنَّ كَثْرَةَ الْكَلاَمِ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ قَسْوَةٌ لِلْقَلْبِ وَإِنَّ أَبْعَدَ النَّاسِ مِنَ اللَّهِ الْقَلْبُ الْقَاسِى யு.

அல்லாஹ்வை திக்ரு செய்வதைத் தவிர்த்து அதிகமாகப் பேசாதீர்கள். இறை நினைவு அல்லாத அதிகமான வார்த்தைகள் உள்ளத்தை இறுகச் செய்துவிடும். அல்லாஹ்விடத்தில் மிகவும் தூரமானவர்கள் இறுகிய உள்ளம் உடையவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: திர்மிதீ (2593)

இதே செய்தி பைஹகீ அவர்களின் ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

شعب الإيمان - (7 / 28)

4600 - وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى الصَّيْدَلَانِيُّ، نا إِبْرَاهِيمُ بْنُ أَبِي طَالِبٍ، نا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ شَقِيقٍ، نا عَلِيُّ بْنُ حَفْصٍ الْمَدَايِنِيُّ، نا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ حَاطِبٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ لَا تُكْثِرُوا الْكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، فَإِنَّ كَثْرَةَ الْكَلَامِ بِغَيْرِ ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ قَسْوَةُ الْقَلْبِ، وَإِنَّ أَبَعْدَ النَّاسِ مِنَ اللهِ الْقَلْبُ الْقَاسِي،

இந்த இரண்டு செய்திகளிலும் இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் என்பவர் இடம்பெறுகிறார்.

இவர் யார்? இவரின் நம்பகத்தன்மை என்ன என்ற விவரங்கள் இல்லை. நபிமொழியில் இடம்பெறும் அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர் என்பது உறுதியானால்தான் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாக அமையும். அதில் ஒருவரின் நிலையோ அல்லது பலரின் நிலையோ தெரியவில்லை என்றால் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாக அமையாது.

تهذيب التهذيب ـ محقق - 1 / 116

236 - ت (الترمذي) ابراهيم بن عبدالله بن الحارث بن حاطب الجمحيஞ்  وقال ابن القطان لا يعرف حاله.

இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் என்பவரின் நிலை அறியப்படவில்லை என்று இப்னுல் கத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,பாகம்: 1, பக்கம்: 116

இந்த அறிவிப்பாளரை இப்னுஹிப்பான் அவர்கள் மட்டும் அஸ்ஸிக்காத் (நம்பகமானவர்கள்) என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

இப்னுஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டால் அவரின் நற்சான்றிதழை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் அவர் நம்பகமானவர் என்பதற்கு புதிய ஒரு இலக்கணத்தை வைத்துள்ளார்.

الثقات ج: 1 ص: 13

فكل من ذكرته في كتابي هذا إذا تعرى خبره عن الخصال الخمس التي ذكرتها فهو عدل يجوز الاحتجاج بخبره لأن العدل من لم يفرف منه الجرح ضد التعديل فمن لم يعلم يجرح فهو عدل إذا لم يبين ضده إذ لم يكلف الناس من الناس معرفة ما غاب عنهم وإنما كلفوا الحكم بالظاهر من الأشياء غير المغيب عنهم جعلنا الله ممن أسبل عليه جلاليب الستر في الدنيا واتصل ذلك بالعفو عن جناياته

நம்பகமானவர் என்றால் அவரின் நம்பகத் தன்மைக்கு எதிராக எந்தக் கருத்தும் வந்திருக்கக் கூடாது. (நம்பகமானவர் என்பதற்கு) எதிராக கருத்து வராதவரை அவர் நம்பகமானவராவார்.

நூல்: அஸ்ஸிகாத், பாகம்: 1, பக்கம்: 13

நம்பகமானவர் என்று யாரும் சொல்லா விட்டாலும் அவரைப் பற்றி மோசமானவர் என்று கருத்து வராத வரை அவர் நம்பகமானவராவார் என்று இப்னு ஹிப்பான் அவர்களே தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த விதி யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது. ஹதீஸ்கலை அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. யார் என்றே அறியப்படாதவர்கள் கூட இப்னுஹிப்பான் அவர்களின் பார்வையில் நம்பகமானவராவார். இந்த விதியைப் பற்றி விமர்சனம் செய்யும் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

لسان الميزان ج: 1 ص: 14

 قلت وهذا الذي ذهب اليه بن حبان من ان الرجل إذا انتفت جهالة عينه كان على العدالة الى ان يتبن جرحه مذهب عجيب والجمهور على خلافه وهذا هو مساك بن حبان في كتاب الثقات الذي الفه فإنه يذكر خلقا من نص عليهم أبو حاتم وغيره على انهم مجهولون وكان عند بن حبان ان جهالة العين ترتفع برواية واحد مشهور وهو مذهب شيخه بن خزيمة ولكن جهالة حاله باقية عند غيره

இந்த விதி ஆச்சரியமான ஒன்றாகும். இவரின் கருத்துக்கு மாற்றமாகவே பெரும்பான்மை அறிஞர்கள் உள்ளனர். இந்த விதியைத்தான் அஸ்ஸிகாத் என்ற நூலில் கடைபிடித்துள்ளார். இந்நூலில் அவர் குறிப்பிட்ட பெருந்தொகையினரை அபூஹாத்திம் அவர்கள், இவர்கள் எல்லாம் யாரென்றே அறியப்படாதவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 1, பக்கம்: 14

எனவே இப்னுஹிப்பான் அவர்கள் நம்பகமானவர் பட்டியலில் குறிப்பிட்டிருந்தாலும் அவரை வேறு யாரும் நம்பகமானவர் என்று கூறாததாலும் இப்னுல் கத்தான் அவர்கள் இவர் நிலை அறியப்படவில்லை என்று சொன்னதாலும், இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் என்பவர் யாரென அறியப்படாதவராகிறார். எனவே இவர் அறிவிக்கும் செய்தி பலவீனமானது என்பது உறுதியாகிறது.

மேலும் இந்தச் செய்தி அல்லாஹ்வை திக்ரு செய்வதைத் தவிர மற்ற பேச்சுகள் அதிகம் இருக்கக்கூடாது என்று குறிப்பிடுகிறது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திக்ரைத் தவிர மற்ற ஏனைய பேச்சுகள் அதிகம் பேசப்பட்டுள்ளது என்பதற்கு நிறைய சான்றுகளை நாம் பார்க்க முடிகிறது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (2 / 132)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا سِمَاكٌ ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى - وَاللَّفْظُ لَهُ - قَالَ أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لاَ يَقُومُ مِنْ مُصَلاَّهُ الَّذِى يُصَلِّى فِيهِ الصُّبْحَ أَوِ الْغَدَاةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِى أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ.

சிமாக் பின் ஹர்ப் அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்று கூறினார்.

நூல்: முஸ்லிம் (1188)

பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சுமார் 45 நிமிடங்கள் இருக்கும் அதுவரை நபிகளார் முன்னிலையில் நபித்தோழர்கள் உலக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நபிகளார் அதைக் கேட்டுப் புன்னகைத்து அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.

இதைப் போன்று பஜ்ர் தொழுகையின் சுன்னத் தொழுத பின்னர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (2 / 70)

1161- حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ ، حَدَّثَنَا سُفْيَانُ ، قَالَ : حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى سُنَّةَ الْفَجْرِ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً ، حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلاَةِ.

ஆயிஷா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப் பார்கள். இல்லாவிடில் (ஃபஜ்ர்) தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக் கொள்வார்கள்.

நூல்: புகாரி (1161)

மனிதனின் பேச்சுகள் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் மார்க்கம் தடைசெய்யாததாக இருந்தால் பேசுவதில் குற்றம் இல்லை.

ஒருவர் தினமும் பத்து மணிநேரம் வியாபாரம் செய்கிறார் என்றால் அவர் வியாபரம் தொடர்பான பேச்சுக்களையே பேச வேண்டிவரும். அவ்வாறு பேசுவதால் அவரின் உள்ளம் இறுகிப் போகாது. யாபாரத்தில் பொய், ஏமாற்றுதல் செய்தால் அதற்கு அவர் குற்றம் பிடிக்கப்படுவார்.

எனவே மார்க்கம் தடைசெய்த வார்த்தைகள் பேசாமல் மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டு பேசினால் குற்றம் வராது.

துரோகிகளுக்கு எதிராக துஆச் செய்வோம்

எம். ஷம்சுல்லுஹா

இருபதாம் நூற்றாண்டு போலவே இருபத்தோறாம் நூற்றாண்டும் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றே தோன்றுகின்றது. இனவெறி பிடித்த ஹிட்லர், ஃபாசிச வெறி பிடித்த முசோலினி, பயங்கரவாதி ஸ்டாலின் போன்றவர்கள் இருபதாம் நூற்றாண்டில் கடுமையாகப் பேசப்பட்டவர்கள், காலச் சக்கரம் வீசியெறிந்த கசப்புமிக்க தலைவர்கள் அவர்கள்.

அந்த வரிசையில் இடம் பெற்றவர் சீனாவை ஆண்ட மாவோவும்! ‘முன்னோக்கித் தாவுதல்’ என்ற பெயரில் சீனாவில் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அதில் ஒன்று தான் சீனத்து சிட்டுக் குருவிகளை சுட்டுக் கொல்வது அல்லது சீரழிப்பது என்ற திட்டம்.

குருவிகளைக் கொல்வதில் என்ன புரட்சி வேண்டிக் கிடக்கின்றது? என்று கேட்கலாம். தானிய வித்துக்களைக் கொறித்துத் தள்ளியதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகினராம். விவசாயிகளின் தானியங்கள் கொறிக்கப்பட்டால் அது உணவு தட்டுப்பாட்டிற்கும் வழி வகுத்து விடும் என்று  அவர் தப்புக் கணக்கு போட்டு பார்த்துள்ளார். அதற்கு விடிவும் விடையும் கீச்சென்று குரலெழுப்பி கூட்டை விட்டு புறப்படுகின்ற குருவிகளை நாட்டை விட்டு  அழிப்பது தான் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

அதனால் ஆட்சியாளர் மாவோவிடமிருந்து பறக்கின்ற குருவிகளின்  உயிர்களைப் பறிக்கின்ற உத்தரவு பிறந்தது. அதிகார வர்க்கத்திடம் அந்த உத்தரவு இறக்கை கட்டிப் பறந்தது. அதற்கு ஜால்ரா போட்டு சிங்கி அடிக்கின்ற சில்லறைக் கூட்டம் இது பொருளாதாரத்தை அப்படியே புரட்டி போடுகின்ற புரட்சித் திட்டம். புதுமைத் திட்டம் இது காலத்துக்கேற்ற கட்டாயத் திட்டம் என்றெல்லாம் மாவோவின் உச்சந்தலை குளிரப் புகழ்ந்து தள்ளியது.

ஆம்! அவரைப் புதைகுழியில் தள்ளியது. விளைவு என்ன? சீனாவின் சர்வ வல்லமைக்கு முன்னால் பரிதாபத்திற்குரிய சின்னஞ்சிறு சிட்டுக் குருவி கூட்டம் என்ன சாகசம் செய்து விடமுடியும்? எதிர்த்து நிற்க முடியாத அந்த இளஞ்சிட்டுகள் தானியங்கள் கொறித்த பாவத்திற்காக கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டன. இதனால் மரக்கிளைகளில் மருந்துக்குக் கூட ஒரு குருவி இல்லாமல் மாய்ந்து போய்விட்டன. சிட்டுக் குருவிக்கு இழைக்கப்பட்ட இந்த அநியாயத்திற்கு எதிராக யாரும் குரல் கொடுக்க முன் வரவில்லை.

மாவோவின் மடத்தனம்; மாய்ந்தது மனித இனம் 

சிட்டுக் குருவிக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு எதிராக இறைவனே தன் சித்து வேலைகளை ஆரம்பித்தான். அது என்ன?

இயற்கையின் சமன்பாட்டைக் காப்பதற்கு  இறைவன், உணவுச் சங்கிலி என்ற ஒரு வளையத்தைப் போட்டு வைத்திருக்கின்றான். வயல் வெளியில் உள்ள புழுப் பூச்சுக்களை சாப்பிடுவதற்குத் தவளை!  தவளையைச் சாப்பிடுவதற்குப் பாம்பு! பாம்பைச் சாப்பிடுவதற்குப் பருந்து மற்றும் காகங்கள் என்ற சங்கிலியைப் போட்டு வைத்திருக்கின்றான். இந்தச் சங்கிலியின் ஒரு கன்னி அழிந்து விட்டால், அறுந்து விட்டால் போதும்! இயற்கையின் சமன்பாடு சீர்குலைந்து சின்னாபின்னமாக சிதறிப் போய்விடும். அப்படிப்பட்ட ஒரு சீரழிவையும், பேரழிவையும் சீனா சந்தித்தது.

வயல்வெளிகளின் பயிர்களைக் கடித்து குதறுவதில் முதலிடம் வகிப்பது வெட்டுக் கிளிகள். இந்த வெட்டுக்கிளிகளை விழுங்குகின்ற வேலையை சிட்டு குருவிக் கூட்டம் தான் செய்து கொண்டிருந்தன. சிட்டுக் குருவிகள் புரட்சியாளர் சீரிய சிந்தனையால் அழிந்து போனதால் பயிர்களை வெட்டுக்கிளிகள் அழித்துத் தள்ளின. சிட்டுக் குருவிகளை சுட்டுத் தள்ளிய மாவோவிற்கு வெட்டுக் கிளிகளை அழித்துத் தள்ள முடியவில்லை. அதனால் விளைச்சல் பாதித்தது. சீனா பஞ்சத்தின் பிடியில் சிக்கியது. புரட்சி என்பது வறட்சியாக மாறியது பஞ்சம், பசி, பட்டினி என்று அத்தனையும் சீனாவில் தலைவிரித்தாடியது.

மூன்று ஆண்டுகளில் 45 மில்லியன் மக்கள் சாவின் அகோரப் பசிக்குப் பலியானர்கள். முன்னோக்கித் தாவுதற்குப் பதிலாக, பின்னோக்கி சாவுவதற்குப் பாய்ந்தது. அந்த அளவுக்கு அந்தப் பாதிப்பின் பரிமாணம் பல மடங்காக இருந்தது. வரலாறு மீண்டும் திரும்பும் என்பது போல் இப்படிப்பட்ட பேர்வழிகள் தலை தூக்கி, தாண்டவமாடிய போன நூற்றாண்டு அப்படியே மீண்டும்  திரும்பியிருக்கின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது.

இந்தியாவில் மோடி... இவர் புரட்சி செய்கின்றேன் என்ற பெயரில் உயர் மதிப்புள்ள  1000, 500 நோட்டுகளை ஒரு நொடிப் பொழுதில் செல்லாது அறிவித்து நாட்டை ஸ்தம்பிக்க வைத்தார். ஸ்திரமான பொருளாதாரத்திற்கு இது ஓர் அஸ்திரவாரம் என்ற தனக்குரிய உச்ச ஸ்தாயில் இதை மெச்சிக் கொண்டார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கருப்புப் பணத்திற்கு எதிராக இதுவரை  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மோடி எடுத்த நடவடிக்கை தான்  துணிகரமான நடவடிக்கை என்று ஜால்ரா கம்பெனிகள் ஜோராக ஜால்ரா தட்டின. வாங்கிய பணத்தைத் திரும்ப வழங்குவதற்கு வக்கில்லாத வங்கிகளாகின.  புரட்டுக்காரர்கள் இதையும் புரட்சி என்று புகழ்ந்து தள்ளினர்.

வாடிக்கையாளர்கள் தாங்கள் போட்ட பணத்தை எடுப்பதற்கு வரிசையில் நின்று  தங்கள் உயிர்களைப் பறி கொடுத்தது உலக வரலாற்றில் இது தான் முதல் தடவை என்று சொல்லுமளவுக்கு மோடி மாவோவைப் போன்று இந்தியாவைப்  பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் தள்ளி விட்டு சென்ற நூற்றாண்டை திரும்பிப் பார்க்க வைத்து வரலாற்றை திருப்பிக் கொண்டு வந்திருக்கின்றார்.

தகர்க்கப் பட்ட தடுப்புச் சுவர்

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனியிலிருந்து மக்கள் பெருமளவுக்கு மேற்கு ஜெர்மனிக்குத் தப்பி ஓடினர். இதனால் கிழக்கு ஜெர்மனி இதனைத் தடுக்கும் பொருட்டு, 1961ல் மேற்கு பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் எழுப்பியது. இதனை, ‘பெர்லின் சுவர்’ என்றழைத்தனர்.

பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த இந்தச் சுவரின் நீளம் 43.1 கி.மீ., கான்கிரீட்டால் கட்டப்பட்ட இந்தச் சுவரின் உயரம் 4 மீட்டராகும். இதே போன்று மேற்கு பெர்லின் நகரை முற்றிலுமாகத் தடை செய்த கிழக்கு ஜெர்மனியின் எல்லை சுவர் 111.9 கி.மீ. ஆகும். இந்தச் சுவரின் மேல் முள் கம்பிகள் போடப்பட்டன. எல்லையோரத்தில் 302 கண்காணிப்புக் கோபுரங்கள் எழுப்பப்பட்டன. பாதுகாப்புப் பணியில் 14,000 எல்லை வீரர்கள் மற்றும் 601 ரோந்து வாகனங்களும் இருந்தன.

ரொனால்டு ரீகனும் டொனால்டு டிரம்பும்

1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி இரு நாட்டுக்கும் இடையிலிருந்த இந்தச் சுவர் இரு நாட்டு மக்களால் இடித்து தகர்க்கப்பட்டது. 30 ஆண்டுகள் சொந்த பந்தங்களைப் பிரிந்த மக்கள், மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதும் போன நூற்றாண்டு! அது தகர்க்கப்பட்டு, வெட்டப்பட்ட சகோதரத்துவம் மீண்டும் ஒட்டப்பட்டது. பிரிக்கப்பட்ட இரத்தப் பந்தம் மீண்டும் பற்ற வைக்கப்பட்டது.

அப்போது 1987ல் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ரொனாலடு ரீகன் சோவியத் அதிபர் கோர்பசவிடம் இந்தச் சுவரை இடித்து இரு நாடுகளிடம் இணைய வேண்டும் என்று  வலியுறுத்தினார். அவரது முயற்சி இரு நாடுகள் இணைவதற்கு வழி வகுத்தது. இது போன நூற்றாண்டு.

ஆனால் இந்த  நூற்றாண்டில்  ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாத்திரத்தில் அமெரிக்கா வுக்கும் மெக்ஸிக்கோவுமிடையில் தடுப்பு சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்தார்.

வட அமெரிக்கா கண்டத்தின் வடக்குப் பகுதியில் கனடாவும் யு.எஸ்ஸும் இவற்றின் தெற்குப் பகுதியில் (அமெரிக்கா கண்டத்தில்) உள்ள நாடுகளை லத்தீன் அமெரிக்கா என்று குறிப்பிடுவார்கள். மெக்ஸிக்கோ இங்கு அமைந்திருக்கும்  நாடாகும்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையே தடுப்பு வேலிகள் ஏற்கனவே இருக்கின்றன. அத்துடன் சென்சார், புகைப்படக் கருவிகளும் பொருத்தப் பட்டுள்ளன. இப்போது 930 கிலோ மீட்டர் நீளத்துக்கு 10 அடி சுவர் எழுப்ப வேண்டும் என்று டிரம்ப் கூறுகின்றார். இதற்கு காரணம் மெக்ஸிக்கோவிலிருந்து மக்கள், குறிப்பாக குற்றப் பின்னணி உள்ளவர்கள் பொய்யான ஆவணங்களைக் கொண்டு அமெரிக்காவிற்குள் நுழைகின்றார்களாம்! அதைத் தடுப்பதற்குத் தான் பல இலட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்தச் சுவர். இப்படி விசித்திரமான திட்டத்தை அறிவித்து டிரம்ப், மோடிக்கு உடன் பிறவா சகோதரராகி சென்ற நூற்றாண்டின் வரலாற்றைத் திருப்பிக் கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட கொடிய ஆட்சியாளர்களை நாம் இந்த நூற்றாண்டில் சந்தித்திருக்கின்றோம்.

மோடி, டிரம்ப் ஓர் ஒற்றுமை

உலகில் உள்ள  அனைவரையும் கடந்த கால கொடுங்கோல் ஆட்சியாளர்ளை நம் மனக் கண்கள் முன்னால் கொண்டு வந்த இவ்விருவர்களுக்கு மத்தியில் முட்டாள் தனத்திலும் மூடத்தனத்திலும் சரியான ஒற்றுமை உள்ளது.

இந்தியாவில் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும்  இந்துத்துவா சக்திகள் கொம்பு சீவி விடப்பட்டிருக்கின்றனர். அதன் விளைவாக உ.பி யில் அக்லாக்  என்பவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒரு பொய்யான காரணம் கூறி அவரை அவரது குடும்பப் பெண்கள் முன்னிலையில் அடித்துக் கொலை செய்கின்றார்கள். ஏன் என்று கேட்பதற்கு நாதியில்லை. அவரது கொலைக்கு இது வரைக்கும் நீதியும் கிடைக்கவில்லை. மனித உயிரை விட மாட்டுயிரைப் புனிதமாக்கும் கொடுமையை வேறெந்த நாட்டிலும் நாம் காணமுடியாது. முஸ்லிம்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று தெரிந்து மாடு சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. இதன் மூலம் இந்துத்துவா சக்திகள் முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் முடக்கி முடமாக்கியுள்ளனர்.

வாழ்வாதரத்தில் கை வைத்த இந்தத் தீய சக்திகள் நம்முடைய உயிருக்கும் மேலான மார்க்கச் சட்டத்திலும் கை வைக்கத் துடிக்கின்றார்கள். அதற்கு ஓர் எடுத்துக் காட்டு அண்மையில் உ.பி யில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வெளியான தேர்தல் அறிக்கையாகும். குஜராத் கொலைகாரன் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டான். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் முத்தலாக் விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அந்தத்  தேர்தல் அறிக்கை தெரிவிக்கின்றது. இதன் மூலம்  நம்முடைய மார்க்கச் சட்டத்திலும் கை வைக்க காத்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவில் மோடியின் உடன் பிறவா அண்ணன் டிரம்ப் வெற்றி பெற்றதும் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் கொம்பு சீவி விடப்பட்டன. அதன் விளைவாக முஸ்லிம்களின் பள்ளிவாசல் அடித்து நொறுக்கப்படுகின்றது. இது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்களில் தங்கள் நாட்டவரைக் குடியமர்த்தும் அக்கிரமமான ஆக்கிரமிப்பு வேலையை அரங்கேற்றி வருகின்றது.

ட்ரம்பின் தலைமை உலமகா பயங்கரவாதிகளான யூதர்களுக்கு இப்படி ஒரு   வீரியத்தைக் கொடுத்திருக்கின்றது. மோடி ஆட்சிக்கு வந்ததும் எப்படி இந்துத்துவா சக்திகளுக்கு வீரியம் ஏற்பட்டிருக்கின்றதோ அதுபோல் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் விரோதிகளுக்கும் முஸ்லிம்களின் பரம விரோதியான யூதர்களுக்கும் வீரியம் ஏற்பட்டிருக்கின்றது. சிரியா, சோமாலியா, லிபியா, இராக், ஈரான், சூடான், யமன் ஆகிய  7 முஸ்லிம் நாடுகளிலிருந்து வருவோருக்கு  விசா அனுமதி கிடையாது என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்து தனது முஸ்லிம் விரோதப் போக்கை பகிரங்கப்படுத்தியிருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களாகிய  நம்முடைய கடமை என்ன? இந்தியாவில் மோடி ஆட்சிக்கு எதிராக நாம் துஆச் செய்ய வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்கள் ஏற்கனவே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் நாம் பிஜேபியினால் நேரடி பாதிப்பைச் சந்திக்கவில்லை அதனால் அதன் பாதிப்பு நமக்குத் தெரியவில்லை. நமக்கு தான் பாதிப்பில்லையே என்று நாம் அலட்சியமாக இருந்து விடக் கூடாது.

ஒளிரட்டும் உ.பி! ஒழியட்டும் பிஜேபி!

இப்போது தமிழகத்தில் வாலாட்ட கொள்ளைப் புற வாசல் வழியாக நுழைவதற்குரிய அத்தனை வேலைகளையும் ஜெயலலிதா இறந்த பிறகு பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இப்போது  உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கின்றது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பிஜேபி படுதோல்வியை தழுவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். காரணம் ஆட்சியைக் கொடுப்பதும் அதை எடுப்பதும் அல்லாஹ்வின் கையில் இருக்கின்ற அதிகாரமாகும்.

“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன்  3:26

 எனவே படைத்த  இறைவனிடம்  இந்தக் கொடியவனின் ஆட்சி உ.பியில் வந்து விடக்கூடாது என்று பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். உ.பி தான்  2014 தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் பிஜெபிக்கு அதிகமான இடங்களை அள்ளிக் கொடுத்தது. அதனால் தான் அது மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. எனவே, அங்கு அதற்கு அடி விழ வேண்டும். மற்ற 4  மாநிலங்களிலும் பிஜேபி  வெற்றி பெற்றால் அது ஒரு பெரிய பாதிப்பை  ஏற்படுத்தாது என்றாலும் உபியில் வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கு இந்திய அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் பிஜேபி முத்தலாக் விஷயத்தில் தலையிடுவோம்; ராமர் கோயில் கட்டுவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தான்.

அதுபோல் உலக அளவில் டிரம்பின் ஆட்சிக்கு எதிராகவும் நாம் துஆச் செய்ய வேண்டும். டிரம்பின் ஆட்சியால் உலகெங்கிலும் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். அதிலும் மிக குறிப்பாக பலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு இன்னல்களையும், இடைஞ்சல்களையும் அனுபவித்து வருகின்றார்கள். அந்த மக்களுக்காகவும் நாம் துஆச் செய்ய வேண்டும்.

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

அல்குர்ஆன் 2:265

என்ற இந்த துஆ எல்லாவிதமான சோதனைகளுக்கும் உரிய ஒரு பொது துஆவாகும். அல்லாஹ் கூறுகின்ற இந்த துஆவை நமக்கும் நமது சமுதாயத்தின் மக்களுக்காகவும் கேட்போமாக!

உலக அளவில் பாதிக்கப்பட்டு அல்லல் படுகின்ற இராக், சிரியா போன்ற நாட்டு மக்களுக்காக குறிப்பாக நீண்ட நெடுங்காலமாக இன்னலுக்குள்ளாகின்ற பலஸ்தீன மக்களுக்காகவும் இந்தியாவில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோமாக!

தன் முன்னிலையில் இல்லாத முஸ்லிம் சகோதரருக்காக இன்னொரு முஸ்லிமான அடியார் துஆச் செய்கின்ற போது அவருக்காக ஒரு மலக்கு உனக்கு அது போல் ஆகட்டும் என்ற துஆச் செய்கின்றார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி).

நூல்: முஸ்லிம் 4912

இந்த துஆ உண்மையில் அங்கீகரிக்கப்படக் கூடிய ஒரு துஆவாகும் அதனால் இதை நாம் மனதில் கொண்டு பாதிக்கப்பட்டிருகின்ற அந்த மக்களுக்காக துஆச் செய்வோமாக! அல்லாஹ்வின் நல்முடிவை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போமாக!

தவ்ஹீத் ஜமாஅத்  நபிகளாரை இழிவுபடுத்தியதா?

எம்.எஸ். செய்யது இப்ராஹிம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சொல்லப்படும் அவதூறுகளில் முக்கியமானது நாம் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்திப் பிரச்சாரம் செய்கிறோம் என்ற அவதூறாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, மூடநம்பிக்கையில் இருந்த மக்களை நபிவழியின் பக்கமும், இறைவனின் அருளால் நேர்வழியின் பக்கமும் நாம் அழைத்துப் பிரச்சாரம் செய்து அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளோம்.

சினிமா கூத்தாடிகளை தங்களது ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வழிகேட்டின் பக்கம் சென்றவர்களெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் தனது இந்தப் பிரச்சாரத்தால் நபிகளாரை தங்களது ஹீரோவாக ஏற்று அவர்களைத் தங்களது வாழ்வின் வழிகாட்டியாகப் பின்பற்றி நடக்கும் இளைஞர் படையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில்தான் நபிகளாரை நாம் இழிவு படுத்திவிட்டதாக ஒரு அபாண்டத்தை நம்மீது நமது எதிரிகள் வீசுகின்றார்கள்.

அவதூறின் பின்னணி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களது மனைவியின் மீதும் பல்வேறு இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை ஆதாரப்பூர்வமான செய்தி என்ற பெயரில் பதிவு செய்து வைத்துள்ளார்கள். அந்தச் செய்திகள் திருக்குர்ஆனுக்கு முரணாகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இன்னபிற போதனைகளுக்கு மாற்றமாகவும் இருப்பதால் அதுபோன்ற செய்திகளை பொய்யானவை என்று நாம் மறுக்கின்றோம்; இதனால் தான் நம்மீது இந்த அவதூறு சொல்லப்படுகின்றது.

இதைத்தான் நபிகளாரை நாம் இழிவுபடுத்துவதாக ஏகத்துவ எதிரிகள் பொய் பரப்பி வருகின்றனர்.

உதாரணத்திற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் செய்தியை நாம் எடுத்துக் கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியை நாம் பொய் என்று கூறுகின்றோம்.

அது திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது மட்டுமல்லாமல், நபிகளார் குறித்து மக்கத்து காஃபிர்கள் என்ன குற்றச்சாட்டை, எந்த அவதூறைச் சொன்னார்களோ அந்த அவதூறை உண்மைப்படுத்தும் விதத்தில் அந்தச் செய்தி அமைந்துள்ளது என்றும் நாம் கூறுகின்றோம்.

நபிகளாரை மனநோயாளி என்று மக்கத்து காஃபிர்கள் அவதூறு பரப்பினார்கள். அவர்களது அந்த அவதூறை உண்மைப்படுத்தும் விதத்தில்தான் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.

இது குறித்து புகாரியில் இடம் பெறும் செய்திகளின் தொகுப்பை முதலில் பாருங்கள்; அதை வாசித்தாலே நபிகளாரின் கண்ணியம் எந்த அளவிற்குக் குலைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

முதல் செய்தி:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப் பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.

இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார்.

ஒருவர் மற்றொருவரிடம்

 مَا وَجَعُ الرَّجُلِ

இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.

 (இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.

நூல்: புகாரி - 3268

மேற்கண்ட செய்தி நபிகளாரை எந்த அளவிற்கு இழிவுபடுத்துகின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அதாவது ஒரு செயலைச் செய்திருக்க மாட்டார்கள்; ஆனால் அந்த செயலைச் செய்து கொண்டே இருப்பது போல அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது என இந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரு செயலைச் செய்யாமல் இருக்கும் நிலையில், அந்தச் செயலை, தான் செய்து கொண்டே இருப்பது போல அவர் நினைத்தால் அதற்குப் பெயர் என்ன?

ஒருவர் சாப்பிடவில்லை; அவர் முன்னிலையில் சாப்பிடுவதற்காக எதுவும் வைக்கப்படவில்லை; இந்நிலையில் வெறும் தட்டை மட்டும் எடுத்து கையில் வைத்துக் கொண்டு உணவுகளை அள்ளி அள்ளி வாயில் வைப்பது போல திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருக்கின்றார். இவரை நாம் என்ன சொல்வோம்? இவருக்கு மனநோய் முற்றிவிட்டது என்று சொல்வோமா இல்லையா?

இது போன்ற வேலையைத்தான் நபிகளார் செய்து கொண்டிருந்தார்கள் என்று அந்தச் செய்தி சொல்கின்றது.

இதை ஓர் இறைநம்பிக்கையாளன் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இதுதான் நமது கேள்வி.

அதனால் தான் இந்தச் செய்தியை நாம் பொய் என்று சொல்கின்றோம்.

இதைத்தான் நாம் நபிகளாரை இழிவுபடுத்துவதாக பொய்யர் கூட்டம் பரப்பி வருகின்றது.

இதுமட்டுமல்ல, இது குறித்து வரும் வெவ்வேறு அறிவிப்புகளின் வாசகங்களை நாம் வாசித்தால் இதன் பாரதூரத்தை நாம் இன்னும் விரிவாக விளங்கிக் கொள்ளலாம்.

முதல் செய்தி :

எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டுக் கொண்டு இருந்தது

நூல்: புகாரி 3268

இரண்டாவது செய்தி:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டவர்களாக ஆனார்கள்

நூல்: புகாரி 5763

மூன்றாவது செய்தி:

தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்

நூல்: புகாரி 5765

நான்காவது செய்தி:

இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது

நூல்: புகாரி   5766

ஐந்தாவது செய்தி:

அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்து விட்டதாகப் பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.

நூல்: புகாரி  6063

ஆறாவது செய்தி:

இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது

நூல்: புகாரி 6391

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்தது

நூல்: அஹ்மத் (23211)

நபிகளாருக்கு லபீத் பின் அஹ்சம் என்ற ஒரு யூதன் வைத்த சூனியத்தின் காரணமாக 6 மாத கால அளவிற்கு அவர்கள் தான்  எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருக்கும் நிலையிலேயே அந்தச் செயலை, செய்து கொண்டு இருப்பது போல பிரம்மையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் தனது மனைவிமார்களிடத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளாத நிலையிலேயே தான் அவர்களுடன் உடலுறவு கொண்டு இருப்பது போல அவர்களுக்கு பிரம்மை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்ற பாரதூரமான அவதூறை அல்லாஹ்வின் தூதர் மீது சொல்வது நபிகளாரை இழிவுபடுத்துவதா? அல்லது அப்படி நடக்கவே இல்லை; இது பொய்; நபிகளாருக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்படவே இல்லை என்று சொல்வது நபிகளாரை இழிவுபடுத்துவதா என்பதை நம் மீது அவதூறு பரப்புவோர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

உதாரணத்திற்கு,

இஸ்மாயில் என்பவர் சிறந்த பேச்சளராக இருக்கும் நிலையில் நல்ல நபர் என்று அறியப்பட்ட நிலையில், தான் வேலை பார்க்கும் கடையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்றுவிட்டார் என்று குற்றச்சாட்டு சொல்லப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். நாம் அதை ஆய்வு செய்கின்றோம்; இஸ்மாயில் என்ற அந்த நபர் மீது சொல்லப்பட்ட அந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது என்பதை நாம் விளங்கிக் கொள்கின்றோம்.

இப்போது இஸ்மாயில் அவர்கள் இந்தச் செயலைச் செய்யவே இல்லை என்று நாம் சொல்கின்றோம்.

இப்போது இஸ்மாயில் அவர்களைக் கண்ணியப்படுத்துவது யார்?

இழிவுபடுத்துவது யார்? என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இஸ்மாயில் அவர்கள் இந்த திருட்டுச் செயலை செய்யவே இல்லை என்று சொல்வது அவரைக் கண்ணியப்படுத்துவது ஆகும். அதே நேரத்தில் குறிப்பிடப்பட்ட அந்தத் திருட்டுச் செயலை அவர் 6 மாத காலமாக மட்டும் தான் செய்தார் என்று சொல்வது அவரை இழிவுபடுத்துவதாக ஆகும்.

இதுபோன்றுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்வது அவர்களை இழிவுபடுத்துவதாக ஆகும். அவ்வாறு நபிகளாருக்கு நடக்கவே இல்லை; ஏனெனில் நபிக்கு எவ்வித பைத்தியமும் இல்லை; பைத்தியத்தின் சிறு தாக்கம் கூட அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை என்று அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளதன் அடிப்படையில் புகாரியில் வரும் இந்தச் செய்தி பொய் என்று சொல்வது தானே அவர்களை கண்ணியப்படுத்துவது ஆகும்.

இப்போது சொல்லுங்கள். தவ்ஹீத் ஜமாஅத் நபிகளாரை இழிவுபடுத்துகின்றதா? இல்லையே!

நபிகளாரை அல்லாஹ் எவ்வாறு திருக்குர்ஆனில் கண்ணியப்படுத்தியுள்ளானோ அந்த அடிப்படையில் கண்ணியப்படுத்தும் நம்மைப் பார்த்துத்தான் இவர்கள் இந்த அவதூறை அள்ளிவீசுகின்றார்கள்.

‘‘நபிகளாரை மனநோயாளி என்று நாங்கள் சொன்னோமா?’’

இது நமது எதிர்க் கொள்கையில் இருக்கக் கூடியவர்கள் நம்மைப் பார்த்து எழுப்பும் கேள்வி.

‘‘நாங்கள் நபிகளாரை மனநோயாளி என்று சொல்லவே இல்லை; நீங்கள் தான் அவ்வாறு சொல்கின்றீர்கள்’’ என்பது அவர்களது அடுத்த கேள்வி.

இது பொய்யான வாதமாகும்.

ஒருவரை மனநோயாளி என்று வெளிப்படையாகச் சொன்னால் தான் அவர் மீது அந்தக் குற்றச்சாட்டு சொல்வதாக அர்த்தம் இல்லை; மனநோயாளிக்குரிய வேலைகளை அவர் செய்வதாகச் சொன்னாலே அந்தக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்துவதாகத்தான் அர்த்தம்.

உதாரணத்திற்கு ஒருவர் மீது கீழ்க்கண்டவாறு குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது, ஒருவரது வீட்டில் நள்ளிரவில் நுழைந்து அவரது வீட்டில் உள்ள பீரோவில் 1 லட்சம் ரூபாயை எடுத்துவிட்டுச் சென்றுள்ளார் என்று சொல்லப்படுகின்றது என வைத்துக் கொள்வோம், இவரை நாம் என்ன சொல்வோம்? திருடன் திருடிவிட்டானா என நாம் கேட்போம்.

இப்போது நம்மிடம் இந்தச் செய்தியைச் சொன்ன நபர் கேள்வி எழுப்புகின்றார். நான் அவரைத் திருடன் என்று சொன்னேனா? வீட்டில் நுழைந்து யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்ததாகத் தானே சொன்னேன்; திருடியதாகச் சொல்லவில்லையே என்று சொன்னால் அதை எப்படி நாம் எடுத்துக் கொள்வோமோ அதுபோலத்தான் இதுவும்.

ஒரு மனநோயாளிக்குரிய அனைத்து அடையாளங்களும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் இருந்ததாகச் சொல்லிவிட்டு நாங்கள் நபிகளாரை மனநோயாளி என்று சொல்லவில்லை என்று சொல்வது இதுபோலத்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக, (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

திருக்குர்ஆன் 68:2-6

அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

திருக்குர்ஆன் 7:184

‘‘நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் ‘உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை’ என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்’’ எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:46

‘‘சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள்’’ என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

திருக்குர்ஆன் 17:47

மேற்கண்ட வசனத்தில் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாக சொல்பவர்கள் அநியாயக் காரர்கள் என அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.

மேலும் நபிக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்றும் அல்லாஹ் எச்சரிக்கை விடுக்கின்றான்.

இந்த திருக்குர்ஆன் வசனங்களை மறுத்துவிட்டு நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர்கள் புத்தி பேதலித்தவர்களாக ஆகியிருந்தார்கள் என்றும் நாம் சொல்வோமேயானால் அதுதான் நபிகளாரை இழிவுபடுத்துவதாக ஆகும். அத்தகைய அநியாயக்காரர்களாக நாம் மாறிவிடக்கூடாது.

அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வின் ஒப்பந்தம்

இரண்டாம் ஆண்டு மாணவிகள்

அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி

இருவேறு எதிர்பார்ப்புகளுடைய நாடுகளையோ அல்லது மாநிலங்களையோ அல்லது மனிதர்களையோ இணைப்பதற்கு ஒப்பந்தங்கள் அவசியமாகின்றன.

பெரும்பாலான ஒப்பந்தங்கள் மனித வளத்தைச் சீரழிப்பதற்காகவே அரங்கேறுகின்றன. வீணான ஒப்பந்தங்களைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டும் நம்மில் பலர், படைத்த இறைவனிடம் செய்து கொடுத்த ஒப்பந்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

படைத்த இறைவனிடம் நாம் என்ன ஒப்பந்தத்தை எடுத்துள்ளோம் என்பதை அறிய அனைவருமே கடமைப்பட்டுள்ளோம்.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். ‘‘நான் உங்கள் இறைவன் அல்லவா?’’ (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோ’’ என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்’’ என்றோ, ‘‘இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?’’ என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

அல்குர்ஆன் 7:172, 173

ஆதமுடைய சந்ததிகளாகிய நாம் இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்பே மேற்கூறிய ஒப்பந்தத்தை ஏற்று அதைச் செயல்படுத்துவதாக வல்லோன் அல்லாஹ்விடம் உறுதி அளித்துள்ளோம்.

விலைக்கு வாங்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.

அல்குர்ஆன் 9 111

இவ்வுலக வாழ்க்கையை ஒப்பந்தம் என்ற அடிப்படையில் நம்மிடம் விலைக்கு வாங்கிய இறைவன் அதற்குரிய கூலியாக, பகரமாக சொர்க்கத்தை நமக்கு வாக்களித்துள்ளான்.

பொதுவாக வியாபாரத்தின் போது ஒரு பொருளை வாங்கினால் அதற்கு ஈடான தொகையையோ, பொருளையோ கொடுப்பது வியாபார நியதி. ஆனால் அல்லாஹ்விடம் நாம் செய்யும் வியாபாரத்தில் நாம் போடும் உழைப்பை விட அதிகமாக நம்மால் ஈடுகட்டவே முடியாத லாபத்தை, அதாவது சொர்க்கத்தை அல்லாஹ் நமக்குப் பரிசளிக்கின்றான்.

நம்மில் எத்தனை பேர் இந்த ஒப்பந்தத்தை நினைவில் நிறுத்தி ஒழுங்காக நிறைவேற்றுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி இறைவனிடம் வழங்கிய இந்த அற்புத ஒப்பந்தத்தை நிறைவேற்றாதவர்களை அல்லாஹ் பார்க்காமல், பேசாமல் பாவங்களிலிருந்து தூய்மையாக்காமல் மறுமையில் இழிவுபடுத்துவதாக இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.

அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 3:77

புதுப்பித்து முறிக்கப்படும் ஒப்பந்தங்கள்

மனிதர்கள் அடிக்கடி அல்லாஹ்விடம் பல ஒப்பந்தங்களைச் செய்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் அந்த ஒப்பந்தங்களை முறித்து விடுகிறார்கள்.

இறைவனிடம் செய்யும் ஒப்பந்தங்களில் அலட்சியம் கூடாது என்று அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

அல்குர்ஆன் 16:91

ஒரு சிலர் ரமலான் மாதம் வந்து விட்டால், ‘‘யா அல்லாஹ்! இனி இன்னின்ன பெரும்பாவங்களைச் செய்ய மாட்டேன்’’ என்று ஒப்பந்தம் செய்து விட்டு ரமலான் முடிந்த கையோடு அதை மீறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இன்னும் சிலரோ இன்னாருக்கு அல்லாஹ் பொருளாதாரத்தை வழங்கியதைப் போன்று எனக்கும் வழங்கினால் நான் இன்னின்னவாறு தர்மம் செய்வேன் என்று உறுதிமொழி எடுப்பார்கள்.

அல்லாஹ் அவருக்குப் பொருளாதார வசதியை ஏற்படுத்தி சோதித்தால் கஞ்சத்தனம் கொண்டு கருமிகளாக மாறிவிடுகின்றார்கள்.

இத்தகைய இழிகுணம் கொண்டோருக்கு இறைவனின் கண்டனம் என்னவென்று பாருங்கள்.

“அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால் தர்மம் செய்வோம்; நல்லோர்களாக ஆவோம்’’ என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்தோரும் அவர்களில் உள்ளனர். அல்லாஹ் தனது அருளை அவர்களுக்கு வழங்கியபோது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அலட்சியம் செய்து புறக்கணித்தனர். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான்.

அல்குர்ஆன் 9:75,76,77

“என் இறைவனது அருளின் கருவூலங்களுக்கு நீங்கள் உரிமையாளர்களாக இருந்திருந்தால் செலவிட அஞ்சி உங்களிடமே வைத்துக் கொண்டிருப்பீர்கள்! மனிதன் கஞ்சனாகவே இருக்கிறான்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 17:100

ஒப்பந்தத்தை உண்மைப்படுத்திய நபித்தோழர்

நபித்தோழர்களில் ஒருவர் நபியவர்களிடம் தன் வாழ்நாள் முழுவதும் பொய் சொல்ல மாட்டேன் என்று ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தை உண்மைப்படுத்தும் விதமாக அவர் மரணிக்கும் வரை நடந்து கொண்டார் என்று வரலாறு கூறுகிறது.

அவர் வேறு யாருமல்ல. கஅப் பின் மாலிக் (ரலி) ஆவார்.

‘‘கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக்கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேசமாட்டேன்’’ என்று கூறினேன்.

ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து இன்றுவரை உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்ததைப் போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதிமொழியை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து இந்த நாள்வரை நான் பொய்யை நினைத்துப்பார்த்ததுகூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் நாட்களிலும் அல்லாஹ் என்னை (பொய் சொல்ல விடாமல்) பாதுகாப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நூல்: முஸ்லிம் 5346

ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க       ஒவ்வொரு நாளும் வாய்ப்பு

மனிதன் என்ற அடிப்படையில் நாம் செய்கின்ற ஒப்பந்தத்தை சில சமயங்களில் முறிக்க நேரிடலாம். ஆனால் எந்தப் பாவத்தைச் செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தோமோ அதே பாவத்தை மீண்டும் வாழ்வில் தொடராமல் இருக்கும் வண்ணம் அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் வகையில் ஒரு அற்புதமான பிரார்த்தனையை நம்முடைய தூதர் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

இந்த துஆவை ஒருவர் பகலில் ஓதிவிட்டு அப்படியே மரணித்தால் அவர் சொர்க்கவாசியாவார். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்துவிட்டால் அவரும் சொர்க்கவாசி என்று நபிகள் நாயகம் சான்றளித்துள்ளார்கள்.

இது தான் அந்த பிரார்த்தனை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’’

என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை  வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.

யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்ககவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்.

இதை ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6306

ஒவ்வொரு நாளும் தவறாது மேற்கண்ட துஆவை நாம் ஓதி வந்தால் அல்லாஹ்விடம் நாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பை அல்லாஹ் நமக்கு நல்குவான்.

அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான்.

அல்குர்ஆன் 3:76

March 13, 2017, 4:06 PM

ஏகத்துவம் பிப்ரவரி 2017

தலையங்கம்

வறட்சியை நீக்குபவன் வல்ல அல்லாஹ்வே!

தமிழகத்தில் இவ்வாண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி அது தீவிரமடையவில்லை. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள 89 அணைகளும், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், வீராணம் உட்பட 14 ஆயிரம் ஏரிகளும், 30 லட்சம் கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்ன.

தற்போது தமிழகத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் 194 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் வெறும் 24 டிஎம்சி மட்டுமே உள்ளது. இந்த நீரைக் கொண்டு தமிழகத்தில் 2 மாதம் கூட குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. இதனால், இப்போது முதலே பெரும்பாலான பகுதிகளில் 3 முதல் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வாரியத்திற்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்துள்ளது.

இது வெறும் செய்தி அல்ல! தமிழகம் சந்திக்கப் போகின்ற பயங்கர பஞ்சத்தைப் பற்றிய எச்சரிக்கை மணியாகும். வரப் போகும் வறட்சியை அறிவிக்கின்ற அபாயச் சங்காகும். தமிழகம் தற்போது மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது. இரண்டு புயலைத் தவிர, பெரிதாக எந்த மழையும் பெய்யவில்லை.

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் இயல்பை விட 62 சதவிகித மழை குறைவாகப் பெய்துள்ளது. இது கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான மழை அளவாகும். இதற்கு முன்னர் கடந்த 1876ஆம் ஆண்டு 63 சதவிகிதம் பொய்த்துப் போனது தான் இதுவரையில் குறைந்த மழை அளவாக இருந்தது.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இயல்பான அளவை விட 50 சதவிகிதத்திற்கும் குறைவான மழைதான் பெய்து உள்ளது. கடலூர், புதுச்சேரி, நாமக்கல்லில் 19 சதவிகித மழையே பெய்துள்ளது.

தமிழகத்தில்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேரள மாநிலம் இந்த ஆண்டு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத மிகக்குறைந்த மழை அளவைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் 34 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழையில் 61 சதவிகிதமும் குறைவான மழையைப் பெற்றுள்ளது. கேரளாவில் வழக்கமாக, இந்த காலங்களில் அணைகளில் 90 சதவிகிதம் நீர் இருப்பு இருக்கும். ஆனால் தற்போது 47 சதவிகிதம்தான் உள்ளது.

கர்நாடகத்தின் நிலைமையும் மிகவும் மோசமாகத்தான் உள்ளது. தொடந்து மூன்றாவது வருடமாக வறட்சியைச் சந்தித்து வருகிறது கர்நாடகம். அங்கு உள்ள 175 தாலுகாக்களில் 139 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை 20 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழை 62 சதவிகிதமும் குறைவாகப் பெய்துள்ளது.

தென் மாநிலங்களில் மழை அளவு குறைவால் தமிழகத்தின் அரிசித் தேவையில் மூன்றில் ஒரு பகுதியைத் தந்து வந்த காவிரிப் பாசனப் பகுதியில் சுமார் 12 லட்சம் விவசாய நிலங்கள் பயிர் செய்யப்படாமல் தரிசாகக் கிடக்கின்றன. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பருவ மழை பொய்த்துப் போனதால் தமிழகமும், கர்நாடகமும்  காவிரிப் பிரச்சனையில் போர் மழையைச் சந்திக்க நேர்ந்தது.  பல உயிர்கள் பலியாயின. பலகோடி ரூபாய் பொருளாதாரம் பாழாயின. இவ்விரு மாநிலங்களும் அதன் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

கேரளாவில் ரப்பர், தென்னை, காப்பி போன்ற நீண்டகாலப் பயிர்கள் கூட கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதே நிலை தான் கர்நாடகத்திலும்.

வறண்ட தமிழக அணைகள்

மேற்கு மாவட்டங்களில் பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகள் வேகமான வறண்டு வருகின்றன. மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர், பெரியார், வைகை, சிறுவாணி உள்ளிட்ட அணைகளில் 13 சதவிகித அளவு தண்ணீர்தான் உள்ளது.

சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது மேட்டூர் அணை. சுமார் 127 குடிநீர்த் திட்டங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,050 மில்லியன் கனஅடி தண்ணீர் இந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நீர் அளவைக் கொண்டு இன்னும் இரண்டு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும். விரைவில் கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், குடிநீர்த் தேவை அதிகரிக்கும் என்பதால், இரண்டு மாதம் என்பதுகூட குறைய வாய்ப்புள்ளது.

அதேபோல கோயம்புத்தூருக்குக் குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலும் இன்னும் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீர்தான் உள்ளது. இதனால் கோவையில் குடம் நீர் பத்துக்கு விற்கின்றது.

தூத்துக்குடியில் குடிநீருக்காக குடங்களைத் தூக்கிக் கொண்டு அலைகின்ற தாய்க்குலத்தைப் பார்க்கின்ற போது கண்கள் குளமாகின்றன.

தென் மாவட்ட அணைகள் பாபநாசம், மணிமுத்தாறு, வைகை ஆகிய மூன்று அணைகளிலும் போதிய அளவுக்கு நீர் இல்லை. வைகையில் 4 சதவிகித தண்ணீர் தான் இருப்பில் உள்ளது. இது 10 நாள் குடிநீர்த் தேவைக்குதான் போதுமானதாக இருக்கும். தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் கடுமையான நீர்த் தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டிவரும். முல்லைப் பெரியாரில் உள்ள நீரை வைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும்.

தமிழகத்தின் ஜீவநதி என்று வர்ணிக்கப்படும் தாமிரபரணி நீரைக் கொண்டு உள்ள பாபநாசம் அணையில் இருந்து இன்னும் 40 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தைச் சந்திக்க உள்ளனர்.

வட மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் சாத்தனூர் அணையில் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் உள்ளது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் சுமார் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீரே இருப்பு உள்ளது.

குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி...

தமிழகம் முழுவதும் உள்ள அணைகளில் தற்போது உள்ள தண்ணீரின் மொத்த அளவின்படி பார்த்தால், சரியாக இன்னும் ஒரு மாதத்தில் மழை பெய்து, தமிழகத்தைக் காப்பாற்றா விட்டால், மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை தமிழகம் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு அணை மொத்தமாக வறண்டு விடும் என்பதால் தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை, தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் இந்தாண்டு மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர்ப் பஞ்சம் இன்னும் இரண்டு மாதத்தில் வர வாய்ப்புள்ளது. எனவே, இப்பிரச்னையை ஓரளவு சமாளிக்க 900 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் எடுக்கலாம் என அறிக்கை அளித்துள்ளோம். பொதுமக்களிடம் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் கூறியுள்ளோம். மேலும், இப்போதிருந்தே குடிநீர் விநியோகிப்பதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என்றார். பஞ்சத்திற்கு ஆழ்குழாய் தோண்டுவது மட்டும் தீர்வாகாது. ஏற்கனவே, பல இடங்களில்  500, 600 அடிகளை தாண்டி போர் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். போதிய நீர் வராமல் புகை தான் வந்துக் கொண்டிருக்கின்றது.  காரணம், நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருப்பது மழை தான்.

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

அல்குர்ஆன் 23:18

இந்த வசனம் நீரை பூமியில் நாமே தங்க வைத்திருக்கின்றோம். என்று கூறுகின்றது. 

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

அல்குர்ஆன் 15:22

மழை நீர் தான் பூமியில் சேமித்து வைக்கப்படுகின்றது என்று அல்லாஹ் கூறுகின்றான்

அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் 39:21

வான் மழை தான் பூமியில் ஊற்றாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றது என்று கூறுகின்றான். எனவே ஏற்கனவே, மழை பெய்து நிலத்தில் நீர் சேகரமாகியும், சேமிப்பாகியும் இருந்தால் தான் ஆழ்குழாய் மூலம் நீரை பெற முடியும். இல்லையென்றால், பூமியிலிருந்து பொங்கி வழியும் நீருக்குப் பதிலாகப் பொசுங்கி வரும் புகையைத் தான் பார்க்க முடியும். அதனால் இதற்குத் தீர்வு மழை தானே தவிர ஆழ்குழாய் கிணறுகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எல்லாம் இயற்கை! இயற்கை! இவ்வையகத்தை இயக்குகின்ற இறை சக்தி எதுவும் கிடையாது என்று எகத்தளமாகப் பகுத்தறிவு வாதம் என்ற பெயரில் பைத்தியம் வாதம் பேசுகின்ற அறிவிலிகளை நோக்கி,  ‘தண்ணீர் பஞ்சத்தில் தகித்துக் கொண்டிருக்கின்ற தமிழகத்தை நோக்கி, தவிக்கின்ற வாய்க்குத் தண்ணீர் தரப்  போவது இயற்கையா? அல்லது எல்லாம் வல்ல ஏகனும் தனி நாயகனுமான அல்லாஹ்வா?’ என்ற கேள்வியை திருமறைக் குர்ஆன் முன்வைக்கின்றது.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?

அல்குர்ஆன் 56:68-70

அரிசி விளைவிக்கின்ற தஞ்சை போன்ற வளம் நிறைந்த  விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாகக் காட்சியளிக்கின்றனவே அந்த நிலங்களை வளங்கொழிக்கச் செய்வது இயற்கையா? அல்லது  தன்னிகரற்ற தனி நாயன் நானா? என்று அடுத்தக் கேள்விக் கணையையும் அல்குர்ஆன் வசனங்கள் தொடுக்கின்றன.

நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். “நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்‘’ என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்

அல்குர்ஆன் 56:63-67

1878-ல் தமிழகம் அப்போதைய ஆங்கில ஆட்சியர் கீழ் இருந்த போது சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்டது. அந்த சென்னை மாகாணத்தில் இது போன்று பருவ மழை பொய்த்த போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தில் மைசூர், பம்பாய், ஹைதராபாத் ஆகிய மாநிலங்களையும் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி என்று  கணக்கிடப்படுகின்றது. இதிலிருந்து அதன் கடுமையான  பாதிப்பை நாம் விளங்கிக் கொள்ளலாம். அந்த பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மக்கள் இலங்கை, பர்மா, ஃபிஜி, மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்த வம்சாவளியினர் இன்றும் அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பஞ்சம் தமிழகத்தைப் பிடிக்கவில்லை. கடந்த 1967 முதல் 1975 வரை தமிழகத்தில் விவசாயம் பாதித்ததால் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான உணவான அரிசி கிடைக்கவில்லை. பட்டினியின் பிடியில் தவித்த மக்கள் மரவள்ளிக் கிழங்கு, சோளம் ஆகியவற்றைச் சாப்பிட்டுக் காலம் தள்ளினர். ரேஷனில் கூட சோள மாவு கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் 1977லிருந்து 1989 வரை பருவ மழை பெய்து நிலைமை சீரானது. இதற்குப் பிந்தைய ஆண்டுகளும் பெரிய பாதிப்புக்குள்ளாகவில்லை. ஆனால், 2016ஆம் ஆண்டு போதிய மழையின்றி  தமிழகம் 1878 பஞ்சத்தைப் போன்ற நிலையைச் சந்தித்து விடுமோ என்ற பயம் மக்களை ஆட்கொண்டு விட்டது.

இதிலிருந்து விடுபடுவதற்கு வழி என்ன?  வரலாறு காணாத வறட்சியை விட்டும் காக்கின்ற வான்மழை தான். வான் மழையைப் பெறுவதற்கு மக்கள் கொடும்பாவி எரித்தல், ஒப்பாரி வைத்தல், பெண்களை நிர்வாணமாக ஓட விடுதல், கழுதைக்கும், கழுதைக்கும் கல்யாணம் முடித்தல் போன்ற மூடப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த மூடப் பழக்க வழக்கங்கள் பிற மத சமுதாயங்களில் நடக்கின்றன என்றால்,  முஸ்லிம்கள் மழை பைத்து என்ற பெயரில் அரபி, தமிழ் கலந்த பாடல் ஒன்றை மழை வேண்டி வீதிகளில் ஓதி வலம் வருகின்ற மூடப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மழை என்பது அல்லாஹ்வின் தனி ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது. தனி அதிகாரத்தைக் கொண்டது. அந்த வல்ல அல்லாஹ் தான் இந்த வறட்சியைப் போக்கவும், வாழ்வாதாரமான மழையைத் தரவும் வளத்தை வழங்கவும், ஆற்றல் பெற்றவன், அதிகாரம் படைத்தவன்.

அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.

அல்குர்ஆன் 42:28

படைத்தவனின் இந்த அருளை வேண்டி அவனிடமே நாம் பிரார்த்திக்க வேண்டும். வறட்சியை நீக்கும் ஆற்றல் அந்த வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது. அவனிடம் நாம் மன்றாடிக் கேட்பது மட்டும் இந்தச் சோதனையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாகும்.

இறைவனின் அருள் மழையை வேண்டுவதற்கு மார்க்கம் காட்டிய வழிமுறைகள் எவை என தனித் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி வறட்சி நீங்க வல்ல அல்லாஹ்விடம் முறையிடுவோமாக!

அழைப்புப் பணியே அழகிய பணி

எம்.எஸ்.ஜீனத் நிஸா,

கடையநல்லூர்

நம் நாட்டில் பாமரர்களின் எண்ணிக்கை குறைந்து கல்வியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது உலகக் கல்வியில் மட்டும் தானே தவிர மார்க்க்க் கல்வியைப் பொறுத்த வரை அது ஆரம்பித்த இடத்திலேயே தான் இருக்கின்றது. மார்க்க அறிவில்லாத பாமரர்களின் எண்ணிக்கை அதிகரித்து மார்க்கமறிந்த அறிஞர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணுமளவிற்குக் குறைந்து கொண்டே வருகின்றது. இதனை நபியவர்களும் மறுமையின் அடையாளம் என்று குறிப்பிடுகிறார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட,  அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.

நூல்: புகாரி 100

இவ்வாறு ஒரு நிலை உருவாவதற்கு மனிதனின் மார்க்கப் பற்றின்மையும் இவ்வுலகத்தின் மீது மனிதன் கொண்ட பேராசையும் தான் காரணமாகும். மார்க்கக் கல்வி பயில்வதால் கிடைக்கும் நன்மைகளை விடவும் உலகக் கல்வி பயில்வதால் கிடைக்கும் பலன்கள் இவ்வுலகிலே அதிகம். இதனால் மக்களிடம் மார்க்கக் கல்வி மதிப்பிழந்துள்ளது.

பொருளாதார ரீதியாகவும் கௌரவ ரீதியாகவும் ஒரு மனிதனுக்குப் பெருமளவில் உதவி செய்வது இவ்வுலகக் கல்வியே என்று எண்ணும் ஒருவன் மார்க்கக் கல்வியைப் புறந்தள்ளி மறுமை வெற்றியை அலட்சியப்படுத்தி, இம்மையையும் இவ்வுலகக் கல்வியையும் தேர்வுசெய்கின்றான். இன்னும் படிப்பறிவே இல்லாமல், பொறுப்பற்று சுற்றித் திரியும் ஒருவனே மார்க்கக் கல்வி பயில வேண்டும் என்ற ஒரு வரையறையையும் இந்த சமுதாயம் உருவாக்கியுள்ளது.

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வி அவசியமானது. அதுவே நிலையான வெற்றி என்பதைச் சிந்திக்க மறந்துவிட்டு உலகக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மார்க்கக் கல்வி பயில்வதால் மனிதனின் இறையச்சம் உயரவே செய்கின்றது என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.

அல்குர்ஆன் 35:28

இந்நிலை தொடர்ந்தால் முட்டாள்களிடம் தீர்ப்புக் கேட்கும் நிலை உருவாகிவிடும். இதைத்தான் மேலே நாம் குறிப்பிட்ட ஹதீஸில் நபிகளார் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரம் என்பது சிலருக்கு மட்டுமே கடமை, நம் மீது எந்தக் கடமையும் இல்லை என எண்ணி ஒவ்வொருவருமே அலட்சியப்படுத்தினோம் என்றால் எந்த அறியாமைக் காலத்தில் இருந்து நாம் மீண்டு வந்துள்ளோமோ அதே அறியாமைக் காலத்திற்கே மீண்டும் நாம் செல்லும் நிலை ஏற்படும். நாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி அதன் மூலம் ஒருவர் நேர்வழி பெற்றால் அது நமக்குப் பன்மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரும்.

‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்’’ என்று  நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல்: முஸ்லிம் 4780

வேண்டாம் முகஸ்துதி  

தன்னைச் சிறந்த பேச்சாளர் என்று பாராட்ட வேண்டும் என்ற நோக்கம், அழைப்பாளர்களிடம் இருக்கக் கூடாத மோசமான பண்பாகும்.

இதன் தாக்கம் எந்தளவிற்கு இருக்கின்றது என்றால் ஒரு இடத்தில் தனக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லையென்றால் இனி அப்பகுதிகளில் அவர்கள் பயான் பேசுவதை விரும்புவதில்லை. அதைத் தவிர்க்கவே பார்க்கின்றனர். அதே சமயம் தனக்கு வரவேற்பு கிடைக்கின்ற பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கின்றோம். இந்நிலையை மார்க்கப் பிரச்சாரம் செய்வோர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மக்களிடம் ஆதாயத்தையோ, பாராட்டையோ எதிர்பார்த்துச் செய்யாமல் இறைவனுக்காக, மறுமையில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்காக மட்டுமே மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இம்மையில் பாராட்டப்படுவதற்காகச் செய்கின்ற செயல்கள் இம்மையோடு நின்றுவிடுகின்றன. மறுமையில் எவ்விதப் பயனையும் அவை அளிப்பதில்லை. மாறாக நரகத்தையே பரிசாக வழங்குகின்றன.

அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்.

மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும் போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்’’ என்று பதிலளிப்பார். இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, ‘மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்’’ என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) ‘அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; ‘குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வந்தர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?’’ என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்’’ என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் ‘இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)’’ என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

நூல்: முஸ்லிம் 3865

பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக மார்க்கப் பிரச்சாரம் செய்தவருக்கு நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நரகம் கூலியாகக் கிடைக்கின்றது என்பதை உணர்ந்து இந்த விஷயத்தில் நாம் கவனமாகச் செயல்பட வேண்டும்.

மேலும் பயான் பேசி முடிந்ததற்குப் பிறகு சிலர் நீங்கள் சிறப்பான முறையில் உரையாற்றியதாகக் கூறுவார்கள். அச்சமயத்தில் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அந்தப் பெருமையை இறைவனுக்கு உரித்தாக்கி விட வேண்டும். இதன் மூலம் நாம் பெருமை கொள்வதிலிருந்து தவிர்ந்திருக்கலாம்.

ஒவ்வொரு பேச்சாளரும் நாம் கற்றதன் அடிப்படையிலும் பிறருக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையிலும் நமது வாழ்நாளில் செயல் படுகிறோமா என்பதை ஒவ்வொரு நாளும் நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.     

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். 

அல்குர்ஆன் 3:135

சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம்

         தொடர் - 7

தேளிடம் கடி வாங்கத் தயாரா?  சவாலும், சறுக்கலும்!

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்

தேளிடம் கடி வாங்கத் தயாரா?

இப்படியொரு கேள்வியை ஸலஃபுகளும், சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிகொள்வோரும் தவ்ஹீத் ஜமாஅத்தினரைப் பார்த்து எழுப்பி வருகின்றார்கள்.

கேள்வியின் பின்னணி:

இந்தக் கேள்விக்கான பின்னணி அஜ்வா பேரீச்சம்பழம் குறித்து வரக்கூடிய செய்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது என்ன செய்தி என்பதைப் பார்த்துவிட்டு, ஸலஃபுகளும், போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரும் எழுப்பும் தேள் கடி பற்றிய கேள்விக்கான பதிலைக் காண்போம்.

அஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா?

புகாரி என்ற ஹதீஸ் நூலில் கீழ்க்கண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தினந்தோறும் காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரக) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5445

புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியை நாம் திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய பொய்யான செய்தி என்று கூறுகின்றோம்.

இது நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியே அல்ல; இந்தச் செய்தியை நபிகளார் பெயரால் யாரோ இட்டுக்கட்டிக் கூறியுள்ளார்கள் என்றும் கூறுகின்றோம்.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

அல்குர்ஆன் 4:87

அல்லாஹ்வைவிட அழகிய முறையில் உண்மை பேசக்கூடியவன் யார் என்று அல்லாஹ் கேள்வி எழுப்புகின்றான்.

அஜ்வா ரகப் பேரீச்சம்பழத்தை ஒருவர் காலையில் சாப்பிட்டுவிட்டால் அந்த நாள் முழுவதும் அவருக்கு எந்த விஷமும் பாதிப்பை ஏற்படுத்தாது; அவருக்கு சூனியத்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படுத்த முடியாது என நபிகளார் சொல்லியதாக இந்த செய்தி கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம் பழங்களை யார் சாப்பிடுகின்றாரோ அவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5768

மேற்கண்ட செய்தியில் இன்னும் ஒருபடி மேலே போய் தெளிவாக மற்றுமொரு செய்தியும் கூடுதலாக அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது யார் ஒரு நாள் காலையில் ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகின்றாரோ அவருக்கு அன்று இரவு வரைக்கும் எந்த விஷமோ அல்லது சூனியமோ பாதிப்பை ஏற்படுத்தாது என்று நபிகளார் சொன்னதாக சொல்லப்பட்டுள்ளது.

இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்; அஜ்வா பேரீச்சம்பழங்கள் இன்றும் கடைகளில் கிடைக்கின்றன. அந்தப் பேரீச்சம்பழத்தை உண்டுவிட்டு விஷத்தைக் குடித்தால் அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்; அப்போதுதான் நபிகளார் சொன்ன இந்தச் செய்தி உண்மையாகும்; ஆனால் அந்தச் செய்தியை யாரும் இதுவரை நம்பவில்லை; அது பொய் என்று உணர்ந்தே வைத்துள்ளார்கள்; அதனால்தான் ஸலஃபுகளாக இருக்கட்டும்; இந்தச் செய்தியை உண்மையென்று நம்பும் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினராக இருக்கட்டும். அவர்களில் யாரும் காலையில் ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு விஷத்தைக் குடித்து இந்த செய்தியை உண்மையென்று நிரூபிக்க முன்வருவதில்லை.

அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் இந்தச் செய்தியை நபிகளார் சொல்லியுள்ளார்கள் என்று யார் உறுதியாக நம்புகின்றார்களோ அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஏழு அஜ்வா பேரீச்சம்பழத்தை காலையில் உண்டு விட்டு, உடனே விஷத்தைக் குடித்து உயிரோடு வாழ்ந்து காட்டி நிரூபிக்க வேண்டும். இதுபோல செய்ய யாரும் முன்வந்ததில்லை; அப்படியானால் அவர்களும் இந்தச் செய்தியை பொய்யென்று தங்களது செயலளவில் மறுத்து வருகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆக அல்லாஹ்வைவிட உண்மை பேசக்கூடியவன் யார் என்ற இறைவசனத்திற்கு இந்தச் செய்தி முற்றிலும் முரண்பாடாக உள்ளதை நாம் அறியலாம்.

மேலும், தன் பெயரில் இதுபோன்ற பொய்யான செய்திகள் வந்தால் அதை நிராகரித்துவிட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என் பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1

ஆக மேற்கண்ட செய்திகளின் அடிப்படையிலும் அஜ்வா பேரீச்சம்பழம் விஷத்தை முறித்துவிடும் என்று சொல்வது பொய்யான செய்திதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் சூனியத்திற்கு ஆற்றல் இல்லை; அதனால் எவ்வித பாதிப்பையும் யாருக்கும் எவராலும் ஏற்படுத்த முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு;

மேலும் சூனியத்திற்கு ஆற்றல் உண்டு என யார் நம்புகின்றாரோ அவர் சுவனம் செல்ல முடியாது என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள். (பார்க்க: அஹ்மது 26212)

சூனியத்தால் யாரும் எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்த முடியாது; அவ்வாறு நம்புபவருக்கு சொர்க்கத்தில் இடமில்லை என நபிகளார் தெளிவுபடுத்திச் சென்றுள்ள நிலையில், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற ரீதியில் சொல்லப்பட்டுள்ள இந்தச் செய்தி பொய்யானதுதான் என்பதும், இதை நபிகளார் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதும் மேலும் உறுதியாகின்றது.

அஜ்வா பேரீச்சம்பழத்தை காலையில் உண்டால் அன்று இரவு வரை சூனியமும், விஷமும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற இந்தச் செய்தியை யார் உண்மையென்று நம்புகின்றாரோ அவர் அஜ்வா பேரீச்சம்பழத்தையும் உண்டு, விஷத்தையும் குடித்து உயிர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாம் அறைகூவல் விடுத்து வருகின்றோம்.

இதற்கு இதுவரை ஸலஃபுக் கும்பலோ அல்லது போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரோ பதிலளிக்கவில்லை.

மாறாக, தேளைப் பிடித்து உங்களைக் கடிக்க விடுகின்றோம் என்று எதிர்க் கேள்விதான் எழுப்பி வருகின்றனர்.

தேள் கடி சவாலும் அறியாமையும்

தேளைக் கடிக்க விடுகின்றோம் என்று அவர்கள் சொல்லக் காரணம் கீழ்க்கண்ட செய்தி தான்:

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின தலைவனை (தேள்) கொட்டி விட்டது. ‘‘உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?’’ என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் ‘‘நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்’’ என்றார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் ‘அல்ஹம்து’ சூராவை ஓதி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். ‘‘நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்’’ என்று சில நபித்தோழர்கள் கூறிவிட்டு பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். ‘‘அல்ஹம்து’ சூரா ஓதிப் பார்க்கத்தக்கது என்று எப்படி உனக்குத் தெரியும்?’’ என்று கேட்டுவிட்டு, ‘‘எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்!’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 2276

மேற்கண்ட செய்தியில் தேள் கடித்த ஒருவருக்கு அல்ஹம்து சூராவை வைத்து ஓதிப்பார்த்தவுடன் அவருக்குக் குணமாகியுள்ளது. அந்த ஹதீஸின் அடிப்படையில் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது ஒரு தேளைப் போட்டு கடிக்க விடுகின்றோம்; தேள் கடித்தவுடன் அல்ஹம்து சூராவை ஓதி அந்த விஷத்தை முறிப்பீர்களா? இந்த சவாலுக்குத் தயாரா என்பது தான் நம்மை நோக்கி எழுப்பப்படும் கேள்வி.

சவாலும் சறுக்கலும்

இது அறியாமையால் எழுப்பப்பட்டுள்ள கேள்வி என்பதை நாம் சற்று சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

இது சவால் அல்ல; அவர்களது அறியாமையால் விளைந்த சறுக்கல்.

இதற்கும், அஜ்வா பேரீச்சம்பழம் குறித்த கட்டுக் கதைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட செய்தியில் தேள் கடிக்கு அல்ஹம்து சூராவைக் கொண்டு ஓதிப்பார்த்தால் ஷிஃபா (நலம்) கிடைக்கும் என்று நபிகளார் சொல்லியுள்ளார்கள் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.

இது ஒரு பிரார்த்தனை தான். பிரார்த்தனை என்பதைப் பொறுத்த வரை, அல்லாஹ் நாடினால் அதை ஏற்றுக் கொள்வான்; நாடினால் அதை நிராகரிக்கவும் செய்வான்; அது அவனது அதிகாரத்தில் உள்ளது.

அல்லது நாம் கேட்கும் பிரார்த்தனைக்குப் பதிலாக நமக்கு வரும் ஏதேனும் ஒரு துன்பத்தை அல்லாஹ் இல்லாமல் ஆக்குவான்; அல்லது மறுமை சேமிப்பாக ஆக்குவான் என்று நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள். கீழ்க்கண்ட செய்தியிலிருந்து அதை நாம் அறிந்து கொள்ளலாம்.

‘‘பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் ‘‘அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே!’’ என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘‘அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: அஹ்மத் 10709

அல்ஹம்து சூராவை ஓதினால் தேள் கடி குணமாகும் என்ற செய்தியை அறிவித்த அதே அபூ ஸயீத் அல்குத்ரி அவர்கள் தான் அல்லாஹ் நமது பிரார்த்தனையை அங்கீகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து நபிகளார் சொல்லிக்காட்டிய செய்தியையும் அறிவிக்கின்றார்கள்.

இதை விளங்காமல் ஸலஃபுக் கும்பலும், போலி சுன்னத் வல் ஜமாஅத்தார்களும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைக்கப்பார்க்கின்றார்கள்.

மேலும்,

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)

நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்

தேள் கடிக்கு துஆ செய்த விஷயத்தில் சவால் விடும் அறிவாளிகள் மேற்கண்ட ஹதீஸ் குறித்தும் சவால் விடலாம் நீங்கள் கைகளை விரித்து துஆ செய்யுங்கள்; அதில் ஏதேனும் விழுகின்றதா என்று பார்ப்போம் என்று சவால் விட்டால் அதற்கு என்ன பதிலோ அதுதான் தேள் கடி குறித்து கேள்வி எழுப்பக்கூடியவர்களுக்குமான பதில்.

நாம் செய்யும் துஆக்களை அல்லாஹ் பல வழிகளில் அங்கீகரிக்கின்றான் என நம்பும் ஒரு இறை நம்பிக்கையாளன் இதுபோன்ற கேள்வி எழுப்ப மாட்டான் என்பது தான் அடிப்படையான விஷயம் என்பதை இது குறித்து கேள்வி எழுப்புவோர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மெட்டீரியலும், பிரார்த்தனையும் ஒன்றா?

இன்னுமொரு முக்கியமான விஷயத்தையும் இதில் எதிர்தரப்பினர் சிந்திக்கத் தவறிவிட்டார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் எந்த செய்தியைச் சொல்லியிருந்தாலும் அதை அப்படியே நம்ப மாட்டீர்களா? அதை ஆய்வு செய்து உண்மை என்று நிரூபித்த பிறகுதான் நம்புவீர்களா என்றும் நம்மிடம் இது குறித்து விதண்டாவாத கேள்வியை எழுப்புகின்றனர் எதிர்த்தரப்பினர்.

நம்பிக்கை விஷயத்தில் நாம் எதையும் ஆய்வு செய்து தான் நம்புவோம் என்று இதுவரை சொன்னதில்லை.

சொர்க்கம், நரகம், மண்ணறை வாழ்க்கை, மறுமை என்று மறைவான விஷயத்தில் நாம் எதையும் ஆய்வு செய்து, அதை நிரூபித்துக் காட்டினால் தான் நம்புவோம் என்று சொன்னதில்லை. அவை அனைத்துமே நம்பிக்கை தொடர்புடையவை.

மாறாக மெட்டீரியலாக இருக்கும் ஒரு விஷயத்தில் நபிகளார் சொன்னதாக ஒரு செய்தி வந்தால் அதை ஆய்வு செய்ய வழி இருக்கும் போது அதை ஆய்வு செய்துதான் நம்ப வேண்டும்.

உதாரணத்திற்கு,

‘விலங்குகளுக்குப் பகுத்தறிவு உள்ளது; மனிதன் குடும்ப வாழ்க்கை நடத்துவது போல அவை தங்களுக்கு மத்தியில் குடும்ப வாழ்க்கை நடத்தி கணவன் - மனைவி - பிள்ளை பேரன் - பேத்தி - குடும்பம் - குட்டிகள் என வாழ்ந்து வருகின்றன’ என நபிகளார் சொன்னதாக ஒருவர் சொல்கின்றார் என வைத்துக் கொள்வோம். அது பொய் என்று நாம் உடனே சொல்வோம்; ஏனென்றால் அதுபோன்ற ஒரு நடைமுறை இல்லை என்பதை நாம் உணர்ந்து வைத்துள்ளோம். இது உண்மையென்றால் விலங்குகளுக்கு மத்தியில் அவ்வாறு குடும்ப வாழ்க்கை நடத்தப்படுகின்றது என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் நம்புகின்றோம் என நாம் சவால் விடுவோம்.

இது சோதித்து அறியக்கூடியது; அதனால் அந்த சவாலை விடுக்கின்றோம்; அதுபோலத்தான் இந்த அஜ்வா பேரீச்சம்பழம் குறித்து நபிகளார் சொல்வதாக வரும் செய்தி.

அஜ்வா பேரீச்சம்பழத்தில் விஷ முறிவு ஏற்படுத்தும் தன்மை உள்ளதாக இந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது; அப்படியானால் அதை ஆய்வு செய்து ஆய்வகத்தில் கொடுத்து சோதனை நடத்தி அதில் விஷ முறிவுத்தன்மை உள்ளதை நிரூபிக்க வேண்டுமா இல்லையா?

அதைத்தான் நாம் கேட்கின்றோம்.

ஆனால் தேள் கடி தொடர்பான விஷயத்தில் அவ்வாறு சொல்லப் படவில்லை. அது ஒரு பிரார்த்தனை! அல்ஹம்து சூராவை எடுத்துக் கொண்டு போய் ஆய்வகத்தில் கொடுத்து சோதித்து அதில் என்னென்ன கலந்துள்ளது என்பதை சோதித்து அறிய  முடியாது. இந்த அடிப்படையான விஷயத்தை விளங்காமல் தான் இவர்கள் இந்தக் கேள்வியை அறியாமையால் எழுப்பி வருகின்றார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆக இது நமது எதிர்த்தரப்பினரின் சவால் அல்ல; அறியாமையால் அவர்களுக்கு வந்த சறுக்கல் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே!

எம். ஷம்சுல்லுஹா

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மழை வேண்டிப் பிரார்த்தித்தல் தொடர்பாக மூன்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன,

மக்கா நிகழ்வு

நபி (ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரம் செய்த போது மக்கா குரைஷிகள் சத்தியத்தை ஏற்க மறுத்தனர். அப்போது, ‘யூசுஃப் (அலை) காலத்தில் பஞ்சத்தை ஏற்படுத்தி மக்களை  ஏழாண்டுகள் பிடித்தது போன்று இவர்களையும் ஏழாண்டுகள்  பிடிப்பாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

அதன் விளைவாக மக்காவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவர்கள் பசியால் தோல்களையும் செத்தவற்றையும் பிணங்களையும் புசிக்க நேர்ந்தது. இந்த நேரத்தில் (குறைஷிகளின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! நீங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உறவுகளைப் பேணவேண்டும் என்றும் கட்டளையிடுகின்றீர்கள். உங்கள் சமுதாயத்தார் அழிந்துவிட்டனர். (பஞ்சம் விலக) அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்’’ என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்காக மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள்.

பார்க்க புகாரி: 1007,4821

ஜும்ஆ தொழுகையில் மழை வேண்டிப் பிரார்த்தனை

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மேடைக்கு எதிர் திசையிலிருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் வந்தார். அவர் நின்றுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச் செய்வான்’’ என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டம் எதையும் நாங்கள் காணவில்லை; தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) சல்உ மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்டவடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு சிதறியது. பிறகு மழை பொழிந்தது.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் தடைபட்டு விட்டது. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!’’ என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மலைகள் ஓடைகள் விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

நூல்: புகாரி 1013

திடலுக்குச் சென்று தொழுது பிரார்த்தித்தல்

அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆசிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். பிரார்த்தனை புரிந்துகொண்டிருந்த போது தமது மேல் துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளின் மீது) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.

நூல்: புகாரி 1005

முந்திய இரண்டு நிகழ்வுகள் துஆ மூலம் மழை வேண்டியதையும் மூன்றாவது நிகழ்வு திடலுக்குப் போய் தொழுகை மூலம் மழை வேண்டியதையும் விளக்குகின்றது. நாம் இவற்றின் அடிப்படையில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மழை வேண்டி பிரார்த்திப்போமாக!

(குறிப்பு: மழைத் தொழுகையின் முறை, அதில் இடம்பெற வேண்டிய பிரார்த்தனைகள், ஜும்ஆவில் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் ஆகியன குறித்து கடந்த ஏகத்துவம் - ஜனவரி 2017 இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

இறைவன் விதிக்கும் நிபந்தனைகள்

பொதுவாக மழையை அளிப்பதற்கும், அருள்வதற்கும் இறை நம்பிக்கை, இறையச்சம், பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற நிபந்தனைகளை விதிக்கின்றான். 

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

திருக்குர்ஆன் 7:96

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்.

திருக்குர்ஆன் 71:10

நாம் இறை நம்பிக்கையாளர்கள் என்றாலும் நம்மிடம் இறையச்சத்திற்கு மாற்றமான செயல்பாடுகள் அதிகம் இருக்கின்றன. நாம் அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். அவனிடத்தில் பாவமன்னிப்பும் அதிகமதிகம் தேடிக் கொள்ள வேண்டும்

வல்ல இறைவனிடம் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்வோமாக! பஞ்சம் தீரப் பரிகாரம் வேண்டுவோமாக! மழை பெறுவதற்கு பிழை பொறுக்கத் தேடுவோமாக!

உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது?

எம்.ஐ. சுலைமான்

பிரமிப்பூட்டும் இந்த உலகத்தை இறைவன் எப்படிப் படைத்தான்? எத்தனை நாட்களில் படைத்தான் என்பதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

அல்குர்ஆன் 21:30

வானம் பூமி இரண்டும் இணைந்திருந்து பின்னர் அவற்றை இறைவன் பிரித்தெடுத்துள்ளான்.

அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்களை அல்லாஹ் உருவாக்கியுள்ளான்.

பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்.

அல்குர்ஆன் 41:11

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரேயொரு சிறிய பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும், இன்னபிற கோள்களாகவும், துணைக் கோள்களாகவும், கோடானுகோடி விண்மீன்களாகவும் உருவாயின என்ற கருத்தை திருக்குர்ஆன் தருகிறது.

இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது.

எத்தனை நாட்களில் படைத்தான்?

இவ்வுலகம் முழுவதையும் இறைவன் எத்தனை நாட்களில் படைத்தான்? என்ற கேள்விக்கும் திருக்குர்ஆனில் பதில் சொல்லப்பட்டுள்ளது.

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.

அல்குர்ஆன் 25:59

இந்தக் கருத்து திருக்குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

வானங்கள், பூமி மற்றும் அதற்கு இடைப்பட்ட பொருட்களை அல்லாஹ் மொத்தம் ஆறு நாட்களில் படைத்திருக்கின்றான். இதை விரிவாகவும் சுருக்கமாகவும் திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்?

அல்குர்ஆன் 41:9

நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

அல்குர்ஆன் 41:10

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.

அல்குர்ஆன் 41:12

வானம் பூமியைப் படைக்க ஆறு நாட்கள் என்று பொதுவாக  சொல்லப்படுவதன் பொருள் :

வானத்தைப் படைக்க இரண்டு நாட்கள்,

பூமியைப் படைக்க இரண்டு நாட்கள்,

பூமிக்குள் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்,

ஆக ஆறு நாட்கள் என்பது இதன் பொருள் என்று திருக்குர்ஆன் தெளிவாக விளக்கியுள்ளது.

அதே நேரத்தில் சில நபிமொழிகளில் இந்த கருத்துக்கு மாற்றமாக செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவை எவை? என்பதையும் அதன் தரத்தையும் பார்ப்போம்.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (8 / 127)

7231 - حَدَّثَنِى سُرَيْجُ بْنُ يُونُسَ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِى إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بِيَدِى فَقَالَ « خَلَقَ اللَّهُ عَزَّ وَجَلَّ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الاِثْنَيْنِ وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاَثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِى آخِرِ الْخَلْقِ وَفِى آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ யு.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை) படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (5379)

இதே செய்தி இப்னுஹுஸைமா (1736), முஸ்னத் அபீயஃலா (6132), அஹ்மத் (7991), பைஹகீ (17705), முஸ்னத் பஸ்ஸார் (8228), நஸாயீ (10943), தப்ரானீ-அவ்ஸத் (3232) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழை - பூமி

ஞாயிறு - மலைகள்

திங்கள் - மரங்கள்

செவ்வாய் - துன்பம்

புதன் - ஒளி

வியாழன் - உயிரினம்

வெள்ளிக்கிழமை - ஆதம்

உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் உருவாக ஏழு நாட்கள் ஆனதாக இந்த செய்தி கூறுகிறது.

மொத்த உலகத்தை அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக திருக்குர்ஆன் சொல்கிறது. ஆனால் இந்தச் செய்தி ஏழு கிழைமைகளையும் குறிப்பிட்டு ஏழு நாட்கள் என்ற கருத்தைத் தருகிறது.

மேலும் பூமி மற்றும் பூமியில் உள்ள பொருட்களை உருவாக்க நான்கு நாட்கள் ஆனது என்று திருக்குர்ஆன் (41:10) கூறுகிறது. ஆனால் இந்தச் செய்தியில் மூன்று நாட்கள் என்று சொல்லப்படுகிறது. சனிக்கிழமை பூமியையும் ஞாயிறு அன்று மலைகளையும் திங்கள் அன்று மரங்களையும் படைத்ததாக (மொத்தம் மூன்று நாட்கள் என்று) சொல்லப்பட்டுள்ளது.

துன்பத்தை செவ்வாய்க் கிமையில் படைத்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்பத்தை எந்தக் கிழமையில் படைத்தான் என்று சொல்லப்படவில்லை. அதை ஒருநாள் என்று சேர்த்தால் எட்டுநாட்கள் ஆகிவிடும்.

இந்தச் செய்தி திருக்குர்ஆனின் கருத்து முரணாக இருப்பதால் இது பலவீனமான செய்தி என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு இதன் விமர்சனத்தைப் பதிவு செய்கிறார்கள்.

هَذَا حَدِيثٌ قَدْأَخْرَجَهُ مُسْلِمٌ فِي كِتَابِهِ ، عَنْ سُرَيْجِ بْنِ يُونُسَ ، وَغَيْرِهِ ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ. وَزَعَمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ أَنَّهُ غَيْرُ مَحْفُوظٍ لِمُخَالَفَتِهِ مَا عَلَيْهِ أَهْلُ التَّفْسِيرِ وَأَهْلُ التَّوَارِيخِ.

இந்தச் செய்தியை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது (ஸஹீஹ் முஸ்லிம்) நூலில் (5379) பதிவு செய்துள்ளார்கள். சில கல்வியாளர்கள் இந்தச் செய்தி சரியானதல்ல என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்கள், வரலாற்று ஆசிரியர்களுடைய கருத்துக்கு முரணாக அமைந்திருக்கிறது.

முஸ்லிமில் உள்ள ஹதீஸ் தொடர்பாக இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டு பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இதே கருத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

النكت على مقدمة ابن الصلاح - (2 / 269)

وكذا ضعفه البيهقي وغيره من الحفاظ وقالوا هو خلاف ظاهر القرآن من أن الله خلق السموات والأرض في ستة أيام والحديث أخرجه مسلم في صحيحه من جهة ابن جريج عن إسماعيل به

இதைப் போன்று பைஹகீ மற்றும் அவரல்லாத ஹதீஸ்கலை நிபுணர்களும் இதை (ஏற்றுக் கொள்ள முடியாத) பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள். (அதற்கு காரணமாக) அல்லாஹ் வானங்கள், பூமியை ஆறு நாட்களின் படைத்தான் என்ற திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள்.

நூல் : அந்நுகத், பாகம்: 2, பக்கம்: 269

المنار المنيف - (1 / 85)

وهو كما قالوا لأن الله أخبر أنه خلق السماوات والأرض وما بينهما   في ستة أيام وهذا الحديث يقتضي أن مدة التخليق سبعة أيام والله تعالى أعلم

அல்லாஹ் வானங்கள், பூமியையும் அதற்கு இடைப்பட்டவைகளையும் ஆறு நாட்களில் படைத்துள்ளான் என்று அல்லாஹ் தஆலா (திருக்குர்ஆனில்) கூறுகின்றான். ஆனால் அந்தச் செய்தி படைப்பின் மொத்த காலம் ஏழுநாட்கள் என்று சொல்கிறது. (எனவே இந்த செய்தி தவறானது என்று) அறிஞர்கள் சொல்கின்றனர்.

நூல் அல்மனாருல் முனீஃப்,பாகம் 1, பக்கம் 85

இந்தச் செய்தி நபிகளார் கூறியது கிடையாது. இது கஅபுல் அஹ்பார் அவர்களின் சொந்தக் கருத்து என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

التاريخ الكبير - 1 / 413

1317 - ايوب بن خالد بن ابى ايوب الانصاري عن ابيه عن جده ابى ايوب ان النبي صلى الله عليه وسلم قال له إذا اكننت  الخطيئة قم توضأ فأحسن  وضوءك ثم صل ما كتب الله لك، قاله لى يحيى بن سليمان عن ابن وهب اخبرني حيوة عن الوليد بن ابى الوليد ان ايوب حدثه، وروى اسمعيل بن امية عن ايوب بن خالد الانصاري  عن عبد الله بن رافع عن ابى هريرة عن النبي صلى الله عليه وسلمقال خلق الله التربة  يوم السبت، وقال بعضهم عن ابى هريرة عن كعب وهو أصح.

(இந்த செய்தி) அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக நபிகளார் கூறியதாக இடம்பெற்றுள்ளது. சிலர் இது கஅபுல் அஹ்பார் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது. (நபிகளார் கூறியதாக இல்லை) கஅபுல் அஹ்பார் கூற்று என்பதே சரியானது என்று குறிப்பிடுகிறார்கள்.

நூல்: அத்தாரிகுல் கபீர்,பாகம்: 1, பக்கம்: 413

இக்கருத்தை இப்னு கஸீர் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

تفسير ابن كثير / دار طيبة - (6 / 359)

وقد علَّله البخاري في كتابالتاريخ الكبيرفقال: “وقال بعضهم: أبو هريرة عن كعب الأحبار وهو أصح، (6) وكذا علَّله غير واحد من الحفاظ، والله أعلم.

இந்தச் செய்தியை புகாரி அவர்கள் அத்தாரிக்குல் கபீர் என்ற நூலில் குறையுடையது என்று குறிப்பிட்டுள்ளார்கள். சிலர் இது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் கூறியதாக இடம்பெற்றுள்ளது. (நபிகளார் கூறியதாக இல்லை) இதுவே சரியானது என்று (புகாரி) குறிப்பிடுகிறார்கள். அறிஞர்களில் ஒன்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இந்தச் செய்தியை குறையுடையது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்,

பாகம்: 6,பக்கம்: 359

உலகம் ஏழு கிழமைகளில் படைக்கப்பட்டது என்று வரும் செய்தி திருக்குர்ஆனின் செய்திகளுக்கு மாற்றமாக அமைந்துள்ளதால் இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாகும்.

வான்மறையும்  வான்மழையும்

எம். ஷம்சுல்லுஹா

மழை என்பது படைத்த இறைவனின் தனிப் பெரும் ஆற்றலாகும். அதிலும் இந்தியாவில் பொழிகின்ற பருவ மழை உண்மையில் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் ஆற்றலைப் பறை சாற்றுகின்ற அற்புதமாகும்.

தென்மேற்குப் பருவ மழை பெய்வதற்கு பூமியின் தென் அரைக் கோளத்தில் புறப்படுகின்ற காற்று வடக்கு நோக்கி வீசுகின்றது.

இந்தக் காற்று பூமியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசை திருப்பப்படுகின்றது. அவ்வாறு திசை திருப்பப்பட்ட காற்று அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஆகிய மூன்று கடல்களின் ஈரப்பதத்தை சுமந்து கொண்டு கருவுற்ற காற்றாக வருகின்றது.

மராட்டியத்திலிருந்து கன்னியாகுமரி வரை 1600 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு 900 மீட்டர்கள் உயரத்திற்கு நெடிதுயர்ந்து நிற்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுத்து திருப்பப்படுகின்றது. அவ்வாறு தடுக்கப்பட்ட காற்று தான் மேல் நோக்கி எழுந்து தமிழ்நாடு, கிழக்குக் கடற்கரை பகுதிகளைத் தவிர உள்ள இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் மழையைப் பொழிவிக்கின்றது. இந்த மழைப் பொழிவு ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலத்தில் நிகழ்கின்றது. இது தான் தென்மேற்குப் பருவ மழை என்றழைக்கப்படுகின்றது.

அது போல் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில்  வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகின்ற காற்று பூமி சுழற்சி காரணமாக வடகிழக்காக திசை திருப்பப்படுகின்றது. அவ்வாறு திசை திருப்பப்பட்ட காற்று இமயமலையால் தடுக்கப்பட்டு மேல் நோக்கி எழுந்து  தமிழ்நாடு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் மழையைப் பொழிவிக்கின்றது. இது தான் வடகிழக்குப் பருவ மழை என்றழைக்கப்படுகின்றது.

இத்தகைய தீவிரமான பருவ மழைக் காற்று உலகில் வேறு எங்கும் தென்படாதவை. இந்தியத் துணைக் கண்டம், இலங்கை மற்றும் தெற்காசியா ஆகிய இடங்களில் மட்டுமே வீசுகின்றன. இயந்திரப் பயன்பாடு கண்டுபிடிக்கப்படாத காலத்தில் உந்தித் தள்ளுகின்ற இந்தப் பருவ காலக் காற்றுகளை பயன்படுத்தித் தான் அரபியர்கள் பாய்மரக் கப்பல்களில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர்.  பருவ காலத்திற்கு அரபியில் மவ்சிம் என்பதாகும். பின்னால் அது ஆங்கிலத்தில் விஷீஸீsஷீஷீஸீ மான்சூன் என்று மறுவியதற்குப் பின்னணியும் பின்புலமும் இது தான்.

இந்தியத் துணைக் கண்டத்தில் பெய்கின்ற இந்த மழைக்கு காற்று, மலைகள், கடல், பூமியின் சுழற்சி, பூமியின் சாய்வான அச்சு ஆகியவை காரணிகளாக அமைந்திருக்கின்றன. இவற்றை அல்லாஹ்வின் கீழ்க்கண்ட வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் அவனது வசனங்களை இந்தக் காரணிகளும் உண்மைப்படுத்துகின்றன.

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

அல்குர்ஆன் 15:22

அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.

அல்குர்ஆன் 77:27

இந்த வசனம் முளை என்ற குறிப்பிடுவது மலையைத் தான். இந்த மலைகள் முளைகளாக மட்டுமல்லாமல், மழையை சேமித்து ஆறாகப் பகிர்கின்ற வேலைகளைச் செய்வதுடன் அவை காற்றுகளைத் தடுத்தும் மழையைத் தருகின்றன. இந்தியாவில் இந்த அற்புதம் மிக அற்புதமாக நடைபெறுகின்றது. அல்லாஹ்வின் இந்த சொற்பதம் தெளிவாக உணர்த்துகின்றது.

நம்பிக்கை கொள்வோருக்கு வானங்களிலும், பூமியிலும் பல சான்றுகள் உள்ளன. உங்களைப் படைத்திருப்பதிலும், ஏனைய உயிரினத்தைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானிலிருந்து அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் (அதற்கு) உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 45:3-5

நமக்குக் கிடைக்கின்ற மழையில் இத்துணை காரணிகள் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்று இந்த வசனங்கள் பின்னி எடுத்து விட்டன. அல்குர்ஆன் மின்னிக் கொண்டிருக்கின்ற உண்மை வேதம் என்பதையும் உலகிற்கு உரத்து உரைத்து விட்டன. ஒரு மழை பொழிய வேண்டுமென்றால் அல்லாஹ்வின் இத்தனை ஆற்றல்கள் அடங்கியிருக்கின்றன எனும் போது, அவனிடம் மழையை வேண்டாமல் கழுதைத் திருமணம் போன்ற மூடப் பழக்கங்கள் மழையைக் கொண்டு வருமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முன்காலத்தில் அரபு வணிகர்கள் பாய்மரக் கலங்களில் ஏறி தென்மேற்குப் பருவக்காற்றின் உதவியுடன் இந்தியாவின் மேற்குக் கரைகளில் வந்து இறங்குவார்கள். வடகிழக்குப் பருவக்காற்றின் உதவியுடன் சொந்த நாட்டுக்குத் திரும்புவார்கள். இதன் காரணமாகவே பருவக்காற்றுகளுக்கு ‘வணிகக் காற்றுகள்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது.

உலகிலேயே உயரமான மலைத்தெடரான இமயமலை, மியான்மரில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை 2 ஆயிரம் கிலோமீட்டர் வரை பரந்து விரிந்திருக்கிறது. இதன் பெரும் பகுதி தெற்காசிய நாடுகளில்தான் உள்ளது. கங்கை, பிரம்மபுத்திரா, இன்டஸ், சல்வீன், மேகாங், யாங்டெஸ், ஹுவாங் ஹோ ஆகிய ஏழு நதிகள் இன்னும் வற்றாத நதிகளாக ஓடிக் கொண்டிருக்கக் காரணம் இந்த மலைத் தொடர்தான். இந்த மலையில் 33 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் படர்ந்திருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால்தான் இந்த நதிகளுக்குத் தண்ணீர் கிடைக்கிறது.

இந்த பனிப் பாறைகள் எப்படி உருவாகின்றன? பருவ காலங்களில் மேகங்கள் பொழிகின்ற பனிப் பொழிவினால் தான் பனிப் பாறைகள் உருவாகின்றன.  இவற்றைத் தான் மலைகள் வாங்கி சேமித்து வைத்து நமக்கு ஆறுகளாக உருகி ஓடச் செய்கின்றன.

இதைத் தான் மேலே இடம்பெற்றுள்ள 77:27 வசனம், உயர்ந்த முளைகளை நிறுவி, இனிமையான நீரை உங்களுக்குப் புகட்டுகிறோம் என்று கூறி, திருக்குர்ஆன் ஓர் அற்புத வேதம் என்பதை மெய்ப்பிக்கின்றது.

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.

அல்குர்ஆன் 24:43

இவ்வசனத்தில் ‘வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது’ என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.

பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

இம்மேகங்களின் பிரம்மாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை.

மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக்கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகின்றது.

இந்தப் பனிக்கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றன. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம்.

இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக்கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின்காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக்கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.

இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத்தான் மேலே தந்திருக்கிறோம்.

இதில் கூறப்பட்டுள்ள செய்திகளான, மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக்கட்டிகள் செங்குத்தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம். குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.

இணை கற்பித்தல் தொடர் - 46

தர்ஹா ஜியாரத் செய்யலாமா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இணை வைப்பின் கேந்திரங்களாக தர்ஹாக்கள் திகழ்ந்து வருவதையும், அவற்றை இஸ்லாமிய மார்க்கம் எப்படியெல்லாம் தடை செய்துள்ளது என்பதையும் கடந்த இதழ்களில் கண்டோம்.

சமாதி வழிபாட்டையும் தர்ஹாக்களையும் ஆதரிப்போர், அதை நியாயப்படுத்த சில வறட்டு வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

தர்ஹாக்களுக்குப் போவது  ஜியாரத் அல்ல!

பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் அதிகப்படுத்திக் கொள்வதற்குப் பெயர் தான் ஸியாரத் என்பது.

மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவாக அனுமதித்தவற்றைப் பொதுவாகவும், குறிப்பாக அனுமதித்தவற்றைக் குறிப்பாகவும் நாம் புரிந்து கொள்ள  வேண்டும். கப்ரு ஜியாரத்தைப் பொறுத்தவரை அது பொதுவாக அனுமதிக்கப் படவில்லை. மரணத்தை நினைவுபடுத்தும் என்ற காரணத்துடன் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுவான அடக்கத்தலங்கள் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. ஆனால் தர்ஹாக்கள் மரணத்தை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக மரணத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தான் உள்ளன.

எனவே தர்காக்களுக்குப் போவது ஸியாரத் ஆகாது.

“புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்’’ என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். “அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் ‘இல்லை’ என்றார். “இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது ‘இல்லை’ என்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.

ஜியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்?

மரணத்தை நினைவுபடுத்தவே ஜியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத் தலங்களில்...

பிரம்மாண்டமான கட்டிடம்

கப்ரின் மேல் பூசுதல்

மனதை மயக்கும் நறுமணம்

கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள்

ஆண்களும் பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு

ஆடல், பாடல், கச்சேரிகள்

இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.

தரைமட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள சமாதிகளை உடைக்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். (இது பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.)

இவ்வளவு தீமைகள் நடக்கும் இடத்துக்குப் போனால் மறுமை பயம் அதிகமாகாது.

மார்க்கம் தடை செய்த பல அம்சங்களைக் கொண்ட இடமாக தர்ஹாக்கள் விளங்குவதால் அங்கு செல்வது ஹராமாகும்.

எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணம் தர்ஹாக்களில் இல்லை.

விழுந்து கும்பிடுவது

கையேந்திப் பிரார்த்திப்பது

கப்ரைச் சுற்றி கட்டடங்களை எழுப்புவது

பாத்திஹா என்று மக்களை ஏமாற்றுதல்

தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல்

விபூதி, சாம்பல் கொடுத்தல்

மார்க்கம் தடை செய்த கட்டடம்

இறந்தவருக்காக நேர்ச்சை செய்வது

கப்ரை முத்தமிடுவது

அங்கே விளக்கேற்றுவது

கப்ர் மீது சந்தனம் தெளிப்பது, பூ போடுவது

ஆகியன உள்ளிட்ட ஏராளமான தீமைகளை தர்ஹாக்கள் உள்ளடக்கியுள்ளன.

தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 70

அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தக் காரணங்களாலும் தர்ஹாக்களுக்கு ஜியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது அடக்கத்தலங்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.

மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான அடக்கத்தலம் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்ஹாக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் இடத்திற்குச் செல்லக்கூடாது என குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

அல்லாஹ்வின் பல கட்டளைகள் கேலி செய்யப்படும் கேந்திரமாக தர்ஹா அமைந்துள்ளதால் அந்தத் தீமைகளைத் தடுப்பதற்காகவே தவிர வேறு நோக்கத்தில் அங்கே செல்வதற்கு அனுமதி இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அகீதா விஷயங்கள் ஆய்வுக்கு அப்பாற்பட்டதா?

சுஜா அலி, மதுரை

உலகில் உள்ள பல மதங்களில் கொள்கையை தெளிவாகக் கூறுவதில் இஸ்லாம் தனித்து விளங்குகிறது. தெளிவாகக் கூறும் கொள்கையை ஆய்வு செய்யும் உரிமையை வழங்குவதன் மூலம் மேலும் தனித்து விளங்குகிறது.

இஸ்லாத்தின் அடிப்படையாக விளங்குகின்ற கடவுள் கொள்கையைக் கூறுவதில் உள்ள தெளிவு, ஆய்வு செய்பவர்களை உடனடியாக ஈர்க்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் எந்த ஒரு பொருளையும் ஆய்வு செய்து அறிவதே மனிதர்களுடைய இயல்பு.

கடைகளில் சென்று சிறு பொருட்களை வாங்கினாலும் கூட அதனுடைய தரம் என்ன? எடை என்ன? நிறம் என்ன? விலையை எப்படித் தருவது என்பது போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்துதான் அவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு மாற்றமாக ஆய்வின்றி எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஏற்படும் தோல்வியை நம்மால் உணர முடிகிறது.

இதுபோன்ற உலக நடைமுறைகளுக்கே ஆய்வு தேவைப்படும்போது இஸ்லாத்தின் கொள்கை விஷயத்திலும் மனிதர்களுக்கு அந்த உரிமையை வழங்கினால் தான் இக்கொள்கையை நன்கு உணர்ந்து ஏற்றுக் கொள்வார்கள் என்பதால் இதில் ஆய்வு செய்யும் உரிமையை மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்.

ஏகத்துவக் கொள்கையை ஆய்வும் செய்யும் உரிமை!

இறைத்தன்மை பற்றி ஆய்வு செய்த இப்ராஹீம் நபி

ஏகத்துவக் கொள்கையை உரக்கச் சொன்ன நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதைப் பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் எந்தளவிற்கு ஆய்வு செய்து ஏற்றார்கள் என்பதையும் கூறுகிறான்.

இப்ராஹீம் உறுதியான நம்பிக்கையாளராக ஆவதற்கு அவருக்கு வானங்கள் மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.

இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்தித்தைக் கண்டு ‘‘இதுவே என் இறைவன்’’ எனக் கூறினார். அது மறைந்த போது ‘‘மறைபவற்றை நான் விரும்பமாட்டேன்’’ என்றார்.

சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்’’ என்றார். அது மறைந்தபோது “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகிவிடுவேன்’’ என்றார்.

சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்! இதுவே மிகப்பெரியது’’ என்றார். அது மறைந்தபோது “என் சமுதாயமே! நீங்கள் இணைகற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொண்டவன்’’ எனக்கூறினார்.

‘‘வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தை திருப்பிவிட்டேன். நான் இணைகற்பித்தவனல்லன்’’ (எனவும் கூறினார்).

அல்குர்ஆன் 6:75-79

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையாளராக ஆவதற்காக சான்றுகளை அல்லாஹ் எடுத்துக்காட்டிய போது அவற்றை  ஆய்வு செய்கிறார்கள். முதலில் நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். அது மறைந்த பிறகு சந்திரனைப் பார்க்கிறார்கள். அதுவும் மறைந்த பிறகு சூரியனைப் பார்க்கிறார்கள். அதுவும் மறைந்த பிறகு “நான் இணை கற்பித்தவனில்லை. அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவன்’’என்று கூறுகிறார்கள்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ வாசகத்தைப் பிரதிபலிப்பதில் அழகிய எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக ஆய்வு செய்யும்போது அதை அல்லாஹ் அங்கீகரிக்கிறான். கொள்கையை ஆய்வு செய்யாமல் அவரிடம் விவாதித்த மக்கள் தான் தவறான கொள்கையில் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். எனவே ஆய்வு செய்வதற்கு அபரிமிதமான உரிமைகளையும், வழிகளையும் மார்க்கம் வழங்கியிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

தூதுத்துவக் கொள்கையை ஆய்வு செய்யும் உரிமை!

ஏகத்துவக் கொள்கையை மட்டுமின்றி தூதுத்துவக் கொள்கையையும் ஆய்வு செய்யும் உரிமையினை இஸ்லாம் வழங்குகிறது. ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும்போது முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைநிராகரிப்பாளர்கள் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்தனர்.

அதற்குப் பதிலளிக்கும் போது, ‘இத்தூதரை நன்றாக ஆய்வு செய்யுங்கள்’ என இறைவன் கூறுகிறான். ஏனெனில் அவ்வாறு ஆய்வு செய்யும்போது நபி (ஸல்) அவர்களிடம் தவறு கண்டுவிட்டால் தூதுத்துவக் கொள்கையை எளிதில் தோற்கடித்துவிடலாம். அவ்வாறிருந்தும் ஆய்வு செய்யும் உரிமையை அல்லாஹ் வழங்குகிறான்.

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத்தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:2-4

நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் ‘‘உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை. கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை” என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன் எனக்கூறுவீராக!

அல்குர்ஆன் 34:46

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதன் கருத்தாகிய ஏகத்துவம் மற்றும் தூதுத்துவத்தை ஆய்வு செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. மேலும் இந்த ஆய்வை மார்க்கம் வரவேற்கிறது என்பதை இந்த ஆதாரங்களின் மூலம் அறியமுடிகிறது.

அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்ய ஆர்வமூட்டுதல்!

குர்ஆனை ஆய்வு செய்யவேண்டும்

இறைத்தூதர்களுக்கு இறக்கப்பட்ட பல்வேறு வேதங்களில் குர்ஆனை மட்டும் தான் இறுதிநாள் வரை பாதுகாப்பேன் என்று அல்லாஹ் உத்திரவாதம் அளிக்கிறான்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப்  பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்கமாட்டார்கள்.

அல்குர்ஆன் 29:49

குர்ஆனில் எந்த சந்தேகமும் இல்லை

(இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘‘இதை இவர் இட்டுக்கட்டிவிட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை (முஹம்மதே) நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.

அல்குர்ஆன் 32:2,3

ஒரு வேதம் ஆட்சேபணைக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமென்றால் பிரமாண்டமான பாதுகாப்பும் சந்தேகத்திற்கிடமில்லாத பரிசுத்த தன்மையும் தேவை. இந்த இரண்டையுமே குர்ஆனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான். அப்படியிருந்தும் குர்ஆனின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்கும் இஸ்லாத்தை ஏற்பவர்களுடைய கொள்கை உறுதி அதிகரிப்பதற்கும் குர்ஆனை ஆய்வு செய்யுமாறு அல்லாஹ் அறைகூவல் விடுக்கிறான்.

அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பாரகள்.

அல்குர்ஆன் 4:82

ஆய்வாளர்களுக்கு ஓர் அறைகூவல்

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தை கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள் (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரிபொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2:23,24

தன்னை ஆய்வுசெய்து விடக்கூடாது என குர்ஆன் அஞ்சினால் இத்தகைய பகிரங்க அறைகூவலை விடுத்திருக்காது. மாறாக இந்த அறைகூவலின் மூலம் தன்னை ஆய்வு செய்பவர்களிடம், தானே வெற்றி பெறுவதற்கு அதிகம் தகுதியான வேதம் என்பதை நிரூபிக்கிறது.

விரும்பிக் கொடுத்தால் வரதட்சணை ஆகாதா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாம் கூறும் குடும்பவியலில், குடும்பத்தின் எல்லா செலவீனங்களும் ஆண்களின் மீதே சுமத்தப்படுகிறது என்பதையும் திருமண ஒப்பந்தத்திற்கு முன்னால் பெண்களுக்கு மஹ்ர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து நாம் எதையும் வாங்கக் கூடாது என்பதையும் கடந்த இதழில் கண்டோம்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய கால சூழ்நிலையில் சிலர் வரதட்சணையை நேரடியாகக் கேட்டுப் பெறாமல் அன்பளிப்பு என்ற பெயரில் மறைமுகமாக வாங்குவதற்கு முயற்சிப்பதைப் பார்க்கிறோம். மாப்பிள்ளை வீட்டார் எதையும் கேட்பதில்லை. பெண் வீட்டார் தானாகவே தருவதாக தனக்குள் ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு வரதட்சணையை நியாயப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. 

இப்படிப் பெண் வீட்டார் மனப்பூர்வமாக விரும்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். ஆனால் உண்மையில் மனப்பூர்வமாகக் கொடுக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இன்று திருமணத்தை முன்னிறுத்தி பெண் வீட்டார் கொடுப்பதெல்லாம் மனப்பூர்வமாகக் கொடுப்ப தாகக் கூறவே முடியாது. ஏனெனில் உண்மையில் இது லஞ்சம் கொடுப்பதைப் போன்றே உள்ளது.

லஞ்சத்தை நம்மில் பலர் கொடுப்பதற்குக் காரணம், அவர்களது காரியம் இலகுவாக நடக்க வேண்டும் என்பதற்குத்தான். தமது தேவை நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் லஞ்சம் வாங்குபவனோ மக்கள் விரும்பித்தானே தருகிறார்கள் என்று கூறுகிறான். ஆனாலும் விரும்பி லஞ்சத்தைக் கொடுத்தாலும் லஞ்சம் தவறுதான்.

அதேபோன்று திருமணத்தை முன்னிறுத்தி மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் வீட்டார் கொடுக்கவில்லையெனில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை ஒழுங்காக நடத்த மாட்டார்கள்; மற்ற மருமகளுடன் ஒப்பிட்டுக் காட்டி நமது மகளைக் குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்; மாமியார் வீட்டில் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும், கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில்தான் ஒருவர் தனது சக்திக்கு மீறி அன்பளிப்பு செய்கிறான். மேற்சொன்ன சூழ்நிலை சமூகத்தில் இல்லையெனில் நிச்சயம் யாரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு எதையும் அன்பளிப்பாகக் கொடுக்கவே மாட்டார்கள். ஆக இஸ்லாத்தில் அன்பளிப்பு என்பது, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்பளிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். இப்படித்தான் அன்பளிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நபியவர்களின் உபதேசம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூஅசத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’’ என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், “நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, ‘இது உமக்குரியது; இது எனக்குரியது’ என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தமது கழுத்தில் சுமந்தபடிதான் மறுமைநாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக  இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக் கொண்டிருக்கும்’’ என்று சொன்னார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “நான் எடுத்துரைத்துவிட்டேனா?’’ என்று மும்முறை கூறினார்கள்.

நூல்: புகாரி 7174

இதே செய்தி புகாரியில் 2597, 6636, 6979 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்திகளிலெல்லாம் அன்பளிப்பு தவறாகக் கொடுக்கப்படக் கூடாது என்ற நுணுக்கத்தைப் போதிக்கிறது.

எனவே திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு பெண் வீட்டாரிடமிருந்து பெறப்படும் அன்பளிப்புகள் வரதட்சணை தான் என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இது அன்பளிப்பு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், சிலரது குடும்ப வாழ்க்கை திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடிந்த சில தினங்களிலோ மணமுறிவு ஏற்பட்டுவிடுகிறது. அப்போது பெண் வீட்டார் கொடுத்த அன்பளிப்பபைத் திரும்பவும் கேட்பார்கள். இது அன்பளிப்பாக அவர்கள் தரவில்லை என்பதற்கு இதுவே ஆதாரமாகும். அன்பளிப்பின் அடிப்படை இலக்கணமே, எந்தவித எதிர்பார்ப்புமின்றி, பதிலுக்குப் பதில் என்ற முறையில் இல்லாமல் கொடுப்பதேயாகும். இந்த அடிப்படையெல்லாம் திருமணத்தில் கிடையாது. எனவே திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்காமல் பெண் வீட்டார் கொடுப்பதுவும் வரதட்சணைதான்.

நபியவர்கள் மேற்கண்ட செய்தியில் அப்படித் தான் கேட்டார்கள். அன்பளிப்பு வழங்கப்பட்ட அதிகாரி அவரது தந்தை வீட்டிலும், தாய் வீட்டிலும் இருந்தால் இந்த அன்பளிப்பு கிடைத்திருக்குமா? என்று கேட்டதைப் போன்று நாமும் பெண் வீட்டில் கேட்டுப் பார்த்தால் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அப்படியெனில் மாப்பிள்ளை வீட்டாருக்கு அதில் எந்த அன்பளிப்பும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

எனவே திருமண ஒப்பந்தத்தை ஒட்டி எதுவும் செய்யக் கூடாது. பின்னால் நம் வீட்டில் ஒருவராக நமது மருமகன் ஆனபிறகு அவர்கள் வீட்டில் நம் பெண் ஒரு குடும்ப உறுப்பினராகிய பிறகு அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல்கள் சகஜம்தான். அதில் குறைகூற வாய்ப்பில்லை. 

எனவே திருமணத்தின் போது (முன்போ பின்போ) பெண் வீட்டாரிடமிருந்து பெறப்படுபவை, மாப்பிள்ளை வீட்டார் அன்பளிப்பு என்ற பெயரில் பெற்றாலும், அதில் நம் பெண்ணின் வாழ்க்கை தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நம் பெண் மாமியார் வீட்டில் கொடுமைப் படுத்தப்படக் கூடாது என்பதற்காகவும் சமூகத்தில் எல்லோரைப் போன்று நாமும் முறையைச் செய்துவிடுவோம் என்ற அடிப்படையில்தான் தரப்படுகிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்ளலாம். மேற்கண்ட நபியவர்களின் செயல்பாட்டிலிருந்து கேட்காமலே தந்தாலும் வேண்டாம் என்று மறுத்துவிட வேண்டும். கொடுத்துவிட்டாலும் மறுத்துவிட வேண்டும்.

இன்னும் சிலர் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, செல்வமிக்க வீட்டில் பெண் தேடுவார்கள். கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணைப் பார்த்து மணம் முடிப்பதைப் பார்க்கிறோம். ஏனெனில் இதுவெல்லாம் பிற்காலத்தில் நமக்குத் தான் வரவேண்டும் என்று நினைத்து மணம் முடிப்பார்கள். நாம் கேட்காமலே கிலோ கணக்கில் நகையைப் போட்டு அனுப்புவார்கள் என்று நினைத்து மணம் முடிப்பார்கள். இப்படி உள்ளூர ஆசை வைத்துக் கொண்டு வெளியில் நல்லவர்களைப் போன்று நடிப்பவர்களும் நபியவர்களால் கண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆதாரங்கள் வாயிலாக தெரிகிறது.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)’’ என்றார்கள்.

நூல்: புகாரி 1473, 7173, 7164

மேலும் பெண்கள் நான்கு நோக்கத்திற்காக திருமணம் முடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும் இதற்கு ஆதாராமாகக் கொள்ளலாம். அதிலும் மார்க்கப் பற்று என்ற நோக்கமே வெற்றி கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டால், மார்க்கப்பற்று குறைவாக உள்ள பணக்காரப் பெண்ணை விட மார்க்கப்பற்று அதிகம் உள்ள ஏழைப் பெண்களைத் தேர்வு செய்வார்கள்.

(பார்க்க : புகாரி 5090)

இதுபோக பெண்களிடம் இருந்து வாங்குவது அநீதி என்பதை விளங்க வேண்டும். கொடுப்பதற்குத் தகுதி ஆண்களிடமும் பெறுவதற்குத் தகுதி பெண்களிடமும் தான் இருக்கிறது. இதைப்பற்றியும் குர்ஆன் பேசுகிறது. அப்படியெனில் நாம் தவறான முறையில் செல்வத்தைப் பெறவே கூடாது.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்!

(அல்குர்ஆன் 2:188)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.  அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2449

இப்படிப் பெண் வீட்டார் பல இடங்களில் பிச்சை எடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கும் போது வெளிப்படையில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் மனம் புழுங்கிக் கொண்டு, சாபமிட்டுக் கொண்டும் இறைவனிடம் எதிராகப் பிரார்த்தனை செய்து கொண்டும்தான் கொடுப்பார்கள். நிச்சயம் இதுபோன்ற பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ்விடம் அதிகம் மரியாதை உண்டு என்பதைப் புரிந்து மாப்பிள்ளை வீட்டார் நடந்து கொள்ள வேண்டும்.

எனவே பெண்களிடமிருந்து வெளிப்படை யாகவும் வரதட்சணை வாங்கக் கூடாது. மறைமுகமாகவும் வாங்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்ப வாழ்வில் பெண்ணுக்கும் சேர்த்து ஆண்கள் தான் பொருளாதாரப் பொறுப்பை சுமக்க வேண்டும் என்பதில் இவையும் அடங்கும் என்பதைப் புரிந்து நடக்க வேண்டும்.

இலகுவை விரும்பிய எளிய தூதர்

சபீர் அலீ M.I.Sc.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதை எட்டியதும் இறைவனிடமிருந்து முதல் தூது வந்தது. அன்று தனி மனிதராக தனது தூதுப் பணியைத் தொடர்ந்தார்கள்.

ஏராளமான அடக்குமுறைகள், கஷ்டம், இன்னல்களை வாழ்க்கையில் சந்தித்துவிட்டு தனது அறுபத்தி மூன்றாவது வயதில் மரணத்தை எய்தினார்கள்.

அப்போது, அவர்கள் இறைவனிடமிருந்து பெற்ற ஓரிறைக் கொள்கையில் பெரும் மக்கள் சக்தியே சங்கமித்திருந்தது.

இன்றளவும், கோடிக்கணக்கான மக்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது கொள்கையையும் உயிருக்கும் மேலாக நேசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மதங்களைக் கடந்து அனைத்து சாராராலும் போற்றப்படும் முதன்மைத் தலைவராகவும் நபி (ஸல்) அவர்கள் தான் திகழ்கின்றார்கள்.

நாற்பது வயதைத் தாண்டிய, ஒரு மனிதரால் 23 ஆண்டு காலம் என்ற மிகக் குறுகிய கால கட்டத்தில் எவ்வாறு இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்ட முடிந்தது என்று உலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் தனது அயராத பிரச்சாரப் பணியால் மாத்திரம் மக்களை வென்றெடுக்கவில்லை. அவர்களது அழகான பண்பாலும் தான் வென்றெடுத்தார்கள்.

ஒரு கூட்டம் ஓரிறைக் கொள்கையினால் கவரப்பட்டார்களென்றால் இன்னொரு சாரார் இவர்களது நற்குணத்தால் கவரப்பட்டார்கள்

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

அல்குர்ஆன் 68:4

இறைவனால் நற்சான்று வழங்கப்பட்ட நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகளில் ஒன்றுதான், அவர்கள் அனைத்து காரியங்களிலும் இலகுவானதையே தேர்ந்தெடுப்பவர்களாக இருப்பது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே தேர்ந்தெடுப்பார்கள். (தேர்ந்தெடுக்கப்பட்ட) அக்காரியம் பாவமாக இல்லாதிருக்கும் பட்சத்தில். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் விலகி நிற்பார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.

நூல்: புகாரி 3560

ஆயிஷா (ரலி) அறிவிக்கும் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்களின் இரண்டு குணத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

1. நபி (ஸல்) அவர்கள் தாம் சந்திக்கின்ற அனைத்து காரியங்களிலும் பாவமல்லாத இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள்.

2. தனக்காக யாரையும் தண்டிக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் சட்டம் மீறப்படுகின்ற போது அல்லாஹ்விற்காக மட்டும் தண்டிப்பார்கள்.

இவ்விரு தன்மைகளுக்குமே நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையின் ஏராளமான நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

மேலும், நபி (ஸல்) தனது அனைத்து வணக்க வழிபாடுகளிலும் சிரமத்தை தேடிக்கொள்ளவில்லை. எளிமையையே கடைபிடித்தார்கள்.

அனஸ்  பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே?’’ நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், “(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்’’ என்றார். இன்னொருவர், “நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்’’ என்று கூறினார். மூன்றாம் நபர் “நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்’’ என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5063

இவ்வாறு, நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் சந்தித்த அத்துணை விஷயங்களிலும், வணக்க வழிபாடுகளிலும் பாவமல்லாத இலகுவையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

மார்க்கமும் நமக்கு லேசானதாகவே வழங்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 39

மார்க்கம் எளிதானதுதான். மக்கள் சிரமங்களை ஏற்படுத்திக் கொண்டால் தான் மார்க்கம் அவர்களுக்கு சிரமமாகக் காட்சியளிக்கும் என்ற தனது சொல்லின் அடிப்படையிலேயே தனது வாழ்க்கையிலும் எளிதைத் தேர்ந்தெடுத்து கஷ்டத்தைப் புறக்கணிப்பவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு மக்களுக்கு மார்க்கத்தை எளிதாக எடுத்து சொல்லி அவர்களை மார்க்கத்தில் சங்கமிக்கச் செய்ய வேண்டிய மார்க்க அறிஞர்களே(?) மார்க்கத்தைக் கடினமாக்கி வைத்திருக்கின்றார்கள்.

மணமகன்தான் மஹர் கொடுக்க வேண்டும், வலீமா கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் எளிய சட்டத்தை சொல்லியிருக்க, மணமகளிடமிருந்து வரதட்சணையையும், வலீமாவையும் பெற வேண்டும் என்று கடினத்தைப் புகுத்தி, திருமண வழிமுறையை கஷ்டமாக்கியிருக்கிறார்கள்.

மேலும், நோன்பு நோற்றவர் எச்சிலை விழுங்கக் கூடாது; பல் துலக்க கூடாது என்பன போன்ற மார்க்கத்தில் இல்லாத சட்டங்களை இயற்றி நோன்பைக் கடினமாக்கியிருக்கின்றார்கள்.

இன்னும், பயணம் செய்பவர் தொழுகையை சுருக்கித் தொழுது கொள்ளலாம் என்று மார்க்கம் சலுகை தருகிறது. ஆனால் பயணி தொழ வைத்தால் அவரைப் பின்பற்றித் தொழுதவர்கள் திரும்பத் தொழ வேண்டும் என்று மார்க்கத்தில் இல்லாத சட்டம் இயற்றி கஷ்டமாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு மார்க்கத்தில் இல்லாத ஏராளமான சட்டங்களை இயற்றி மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பவர்களாக இன்றைய மார்க்க அறிஞர்கள் (?) இருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு மக்களுக்கு எளிதை நாடுகின்ற குணம் படைத்தவர்களாக இருந்தார்களோ அதுபோன்று மக்களுக்கு மார்க்கத்தில் உள்ள பாவமல்லாத, இலகுவான சட்டத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை வென்றெடுக்க வேண்டும்.

இந்தோனேஷியாவில் இஸ்லாமிய ஷரீஆ?

நியூயார்க் டைம்ஸின் குரூரப் பார்வை

ஷரீஅத் சட்டம் காலத்தின் ஒவ்வாமை, அது ஒரு கருப்பு சிந்தனை,  அது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று மேற்கத்தியம் பூதாகரமாக உருவாக்கிய  கருத்தாக்கம் கண்மூடித்தனமாக  உலகில் உலவிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தோனேஷியாவின் மாகாணங்களில் ஒன்றான ‘பாண்டா அச்சே’ அதை புஸ்வானமாக்கி ஒரு புரட்சி படைத்துக் கொண்டிருப்பதை ஒரு பத்திரிக்கைச் செய்தி நமக்கு புலப்படுத்துகின்றது.

ஷரீஅத் சட்டம் பற்றிய அந்நாட்டு மக்களின் புரிதலில் நமக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும்  உலகில் எந்த ஒரு பாகத்திலும் இஸ்லாமியச் சட்டம் தலை தூக்கி விடக்கூடாது என்பதில் மேற்கத்திய உலகம் எந்த அளவு குறியாக இருக்கின்றது என்பதை அடையாளங்காட்டி அம்பலப்படுத்துவதற்காக இந்த ஆக்கம் இங்கு தரப்படுகின்றது.

நியூயார்க் டைம்ஸில் வெளியான இந்தக்  கட்டுரை இந்து ஆங்கில நாளேட்டில் 14.01.2017 அன்று மறுபதிப்பு செய்யப்பட்டது. அதற்கு அவர்கள் வைத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா?

“கினீவீபீ ஷிலீணீக்ஷீவீணீt மீஜ்ஜீமீக்ஷீவீனீமீஸீt, மிஸீபீஷீஸீமீsவீணீ’s sமீநீuறீணீக்ஷீ யீணீநீமீ sறீவீஜீs - ஷரீஅத் சட்ட சோதனைக்கு மத்தியில் இந்தோனேஷியாவின் மதச்சார்பின்மை முகம் சிதைகிறது”

எந்த அளவுக்கு இவர்கள் ஷரீஅத் சட்டத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ளார்கள் என்பதை இந்தத் தலைப்பே நமக்கு உணர்த்துகின்றது. அந்தக் கட்டுரை இதோ:

கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் தேனீர் விடுதியில் ஒரு மாலை நேரத்தில் ஒலிபெருக்கியில் அலறுகின்ற இசைப் பாடல்கள் செவிப் பறைகளைக் கிழித்துக் கொண்டிருந்தன. இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த நவ நாகரீகமான கருப்புக் கண்ணாடிகள் போட்ட வாலிபக் கூட்டம் வெளியே அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் தங்கள் கைகளில் உள்ள கோப்பைகளிலிருந்து தேனீரை உறிஞ்சிக் கொண்டும் மறு பக்கம் சிகரெட் ஊதிக் கொண்டும் கால்களை ஆட்டியவாறு காதுகளில் விழுகின்ற  தேனிசை மழையில் நனைந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கட்டத்தில் அருகில் உள்ள ஒரு பள்ளியில் மக்ரிப் தொழுகைக்கான பாங்கோசை ஒலித்தது தான் தாமதம்; பணிப் பெண் இசை பாடல்களை நிறுத்தி, அனைவரையும் ஒரு நொடிப் பொழுதில்  உள்ளே அமரச் செய்து கதவுகளை கீழிறக்கி விடுதியை உடனடியாக மூடிவிட்டாள். பாங்கு சப்தம் கேட்டபின் பள்ளிக்கு தொழுகைக்கு வராமல் பணிகளில் முடங்கிக் கிடக்கக் கூடாது என்பதற்காகத் தான்.

சுமத்ரா முனையில் சுடர்மிகு சூரியன்

இவ்வளவும் நடப்பது எங்கே? இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் முனையில் அமைந்திருக்கும்  பாண்டே அச்சே என்றே மாகாணத்தில் தான்! உலகத்திலேயே முஸ்லிம்கள் அதிக அளவில் வாழ்கின்ற நாடு இந்தோனேஷியாவாகும். 17,508  தீவுகளின் தொகுப்பாக அமைந்த அந்நாட்டில் 34 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 5 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றவை. அத்தகைய சிறப்பு அந்தஸ்தையும் தகுதியையும் பெற்ற மாநிலம் தான் பாண்டே அச்சே!  மதச்சார்பின்மையை அரசியல் சாசனமாகக் கொண்ட இந்தினேஷியாவில் அச்சே மாநிலம் மட்டும் 2001ல் இஸ்லாமிய ஷரீஅத்தை அரசியல் சாசனமாக ஐஸ்வரித்துக் கொண்டது. இம்மாநிலம் பிரிவினை வாதச் சிந்தனையில் உள்ள மாநிலம் என்பதால் அதை மட்டுப்படுத்தவே இந்த சிறப்புச் சலுகை என்ற வாதமும் வைக்கப்படுகின்றது.

தடை விதிக்கப்பட்ட தகாத காரியங்கள்

அச்சே மாநிலத்தில் மனித குலத்தை அழித்து நாசமாக்குகின்ற ஆல்கஹால் (மது) தடை செய்யப்பட்டுள்ளது. விபச்சாரம் முதல் கொண்டு ஓரினச் சேர்க்கை, மது விற்பனை வரையிலான குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு பொது இடத்தில் சாட்டையடி கொடுக்கப்படுகின்றது. ஷரீஆ காவல் துறை அல்லும் பகலும் ரோந்து வந்து கொண்டு ஹோட்டல் விடுதி முதல் கடற்கரை வரை அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு  ஆபாசச் செயல்கள் அரங்கேறாமல்  கண்காணித்து வருகின்றது. ஒரு பதினைந்து ஆண்டு காலமாக இந்தோனேஷியா பழமைவாத சிந்தனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு கால கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் பார்க்கப்பட்ட வந்த அச்சே இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் பார்க்கப்படுகின்றது. எதற்கு? ஷரீஅத் சட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதற்காகத் தான்!  இது மதசார்பின்மையிலிருந்து இந்தோனேஷியாவைத் தடம் புரள வைத்து விடுமோ என்று மதச்சார்பின்மைவாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கின்றது.

அச்சே எப்போதெல்லாம் ஒரு ஷரீஅத் சட்ட ஆணையைப் பிறப்பிக்கின்றதோ அப்போதெல்லாம் மற்ற  மாநிலங்கெல்லாம் தாமும் அது போன்ற ஷரீஅத் சட்ட ஆணைகளைப் பிறப்பிக்கலாமே என்று  ஆர்வமும் ஆசையும் கொள்கின்றன என்றளவுக்கு அதன் செயல்பாடு உள்ளது என்று இந்தோனேஷியாவின் பெண்களுக்கு எதிரான வன்முறை கண்காணிப்பு ஆணையத்தின் முன்னாள் ஆணையர்  ஆண்டி எண்ட்ரியாணி கூறுகின்றார். ஷரீஅத் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சில சட்டங்களை திரும்ப பெற வேண்டும். காரணம் அவை இந்தோனேஷியாவின் அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ளன என்றும் அவர் கூறுகின்றார்.

மாநிலங்களும் மாவட்டங்களும் தங்களுக்கு அவசியமான சட்டங்களை தாங்களே இயற்றிக் கொள்ளலாம் என்று 1999ல் மத்திய அரசு அவற்றிற்கு முக்கியமான அதிகாரங்களை வழங்கியது. அன்றிலிருந்து இது வரை நாடு முழுவதும் 442க்கும் மேற்பட்ட ஷரீஅத் அடிப்படையிலான  ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அண்மைக் கால ஆய்வு குறிப்பிடுகின்றது.

பழமை சிந்தனையை (இஸ்லாமிய ஷரீஅத் சட்ட அமைப்பை) தழுவிக் கொள்கின்ற புதுப் புது பகுதிகளில் உள்ள பிரதிநிதிக் குழுக்கள், அச்சே மாநிலத்தை நோக்கி வந்து அங்கு இஸ்லாமியச் சட்டம் எப்படி அமல்படுத்தப்படுகின்றது என்று பார்க்க வருகின்றனர்.  பாண்டா அச்சேவை நோக்கி பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு குழுக்கள் படை எடுத்து வருவது உள்ளூர் அதிகாரிகளுக்குப் பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது.

‘ஷரீஅத் சூழ்நிலையை எப்படி எளிதாக்கி தகவமைத்திருக்கின்றோம் என்று அக்குழுக்கள் இங்கு வந்து  ஆசுவாசமாகப் பார்க்கின்றனர். நாங்கள்  அவர்களிடம் ஷரீஅத் போதனைகளுக்கு எப்படி சட்ட வடிவு, வரைவாக்கம் கொடுப்பது என்று விரிவாக விளக்கிக் கூறுகின்றோம்’ என அச்சே அரசாங்கத்தின் ஷரீஅத் சட்டத்துறை தலைவர் சியாரிசல் அப்பாஸ் தெரிவிக்கின்றார்.   

கடுமையான விமர்சனக் கணைகளுக்குள்ளான சவூதி ஷரீஅத்தை விட்டும் இங்குள்ள ஷரீஅத் சட்டம் சற்று வித்தியாசமானது; வேறுபட்டது.   இது மாற்று சிந்தனைக் கருத்துகளையும் அரவணைக்கக் கூடியது. அத்துடன், இது, பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கலாம் என்ற கண்ணோட்டத்தையும் கொண்ட ஒரு மிதமான ஷரீஅத் சட்டம் என்று மிதவாதி என கருதப்படக்கூடிய  சியாரிசல் அப்பாஸ்  கூறுகின்றார்.

இதற்கேற்ப, மாநிலத்தின் தலைநகரான பாண்டா அச்சேவின் மாநகராட்சியின் மேயராக இருப்பவரும் ஒரு பெண் தான். இவர் தான் முதல் மேயரும் ஆவார். அவர் பெயர் இல்லிசா ஸஆதுத்தீன் டிஜமால். இவர் முற்போக்குத் தலைவியாகச் செயல்படுவார் என்று தான் இவருக்கு  நாங்கள் வாக்களித்தோம். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, அச்சேவின் பழமைவாத ஒழுக்க மாண்புகளை செயல்படுத்துவதில் பெரும் ஈடுபாடும் பேரார்வமும் கொண்ட பெண்மணியாக இருக்கின்றார் என்று   பெண்ணுரிமைப் போராளிகள்  அங்கலாய்த்துக் கொள்கின்றார்கள்.

முக்காடு அணிந்த முஸ்லிம் பெண்கள்

கடந்த ஆண்டு ஃபிப்ரவரியில் திருமதி இல்லிசா கருப்புத் தலை முக்காடு அணிந்து கொண்டு அழகுப் போட்டி நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் நுழைந்து விட்டார். அழகிகளை கேமராக்களை வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தன.  அரங்கில் நுழைந்த அவர், அழகிகளை நோக்கி, நீங்கள் ஏன் ஜில்பாப் (தலை முக்காடு) அணியக் கூடாது? என்று  ஒருத்தியைப் பார்த்து கேட்டார். ஷரீஆ காவல் துறை அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசு கோப்பைகளை கோணிப் பைக்குள் வாரி போட்டு கொண்டு சென்றனர். அழகிகளை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர்.

இந்தோனேஷியாவிலிருந்து தனி நாடு கோரி  ஒரு பத்தாண்டுகள் பாண்டா அச்சா மாநிலம் போராட்டம் நடத்தியது. தனி நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு  பரிசாக  அளித்தது தான் ஷரீஆ சட்ட ஆட்சி. ஷரீஅத் சட்ட ஆட்சி அமுலுக்கு வந்ததிலிருந்து தனி நாட்டுக் கோரிக்கை 2005ல் முடிவுக்கு வந்தது. அச்சே மக்களிடம் தனி நாட்டுக் கோரிக்கைக்கான போர் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறாத வடுக்களாக இருந்து வருகின்றன.

அத்துடன், இந்தோனேஷியாவில் 2004ல் 230000 பேர்களை பலி கொண்ட சுனாமி ஆழி பேரலையும் அவர்களிடம் ஆறாத, அழியாத வடுக்களாகவே இருந்து வருகின்றன. இன்று அச்சே இந்தோனேஷியாவில் மிகவும் வறுமையான மாநிலமாகும்.

வரும் ஃபிப்ரவரியில் அச்சே மாநில மக்கள் தேர்தலைச் சந்திக்க உள்ளனர். மேயருக்கு அல்லது ஆளுநர் பதவிக்கு போட்டியிடக் கூடிய எந்த வேட்பாளரும் ஷரீஅத்தின் சட்டத்தின் இறையாண்மையை, அதன் மேலாண்மையை எதிர்த்து களங்காணப் போவதில்லை.

அரசாங்கம் கொஞ்சம் கூடுதலாகத் தான் போகின்றது என்று எண்ணி ஒரு பெருங்கூட்டம் உள்ளுக்குள்  நொந்து கொண்டிருந்தாலும் ஷரீஅத் சட்டத்தை எதிர்த்து இனி வாதம் பண்ணுவது சாத்தியமே இல்லை என்று அச்சேவின் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் இர்வான் ஜான் தெரிவிக்கின்றார். அவர்களுக்கு எந்தத் துணிச்சலும் கிடையாது என்று ஷரீஅத் சட்ட விமர்சகர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார். மத விவகாரங்கள் குறித்து பேசினால் ஒன்று  நீ நீக்கப்படுவாய் அல்லது உண்மையான அச்சே நாட்டுக்காரன் அல்லன் என்று முத்திரை குத்தப்படுவாய். அனைவரும் நயவஞ்சகர்களே என்று அவர் குறிப்பிட்டார்.

உண்மையை மறைக்காத உத்தமத் தூதர்

எம்.முஹம்மது சலீம், M.I.Sc.

மங்கலம்

மார்க்கத்தின் அடிப்படையை அறியாத மக்கள் பல்வேறு வகையான பாவங்களிலும் குற்றங்களிலும் வீழ்ந்து கிடக்கிறார்கள். மற்றொரு பக்கம், மார்க்கத்தை அறிந்துள்ள மக்கள் பலரும், அதன்படி வாழாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். இப்படி, உண்மையை ஒதுக்கித் தள்ளும் தீய குணம் முஃமின்களிடம் இருக்கக் கூடாது. சத்தியத்திற்கு ஏற்ப சீரிய முறையில் வாழ்வைத் திருத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் மறுமையில் கவலையின்றி இருக்க முடியும்.

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(திருக்குர்ஆன் 3:135)

நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

(திருக்குர்ஆன் 6:48)

இவ்வசனங்களை விளக்கும் வகையில் நபிகளாரின் வாழ்வும், வாக்கும் இருந்தது. மார்க்க விசயமாக இருப்பினும், தமது விவகாரமாக இருப்பினும் எப்போதும் உண்மையின் உறைவிடமாக திகழ்ந்தார்கள், நபி(ஸல்) அவர்கள்.

ஆகவே தான், அல்லாஹ் தம்மைக் கண்டிக்கும் வசனங்களையும் கொஞ்சமும் மறைக்காமல் திரிக்காமல் மக்கள் மன்றத்தில் முன்வைத்தார்கள்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம்.

(திருக்குர்ஆன் 3:128)

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

(திருக்குர்ஆன் 28:56)

நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?

(திருக்குர் ஆன் 66:1)

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?

(திருக்குர்ஆன் 80:1-3)

எதையும் உள்ளது உள்ளபடி சொல்லும் நற்குண செம்மலாக நபிகளார் இருந்தார்கள் என்பதற்கு இவை மட்டுமல்ல, மேலும் நிறைய சான்றுகள் உள்ளன.

பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, “இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்’’ என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை’’ என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, “அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்க மாட்டேன்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ்(ரலி)

நூல்: முஸ்லிம் (4711)

மற்றொரு அறிவிப்பில் (முஸ்லிம் 4712), “நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே’’ என்று சொன்னதாக உள்ளது.

மற்றொரு அறிவிப்பில் (முஸ்லிம் 4713), நபி (ஸல்) அவர்கள், “உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்’’ என்று சொன்னதாக உள்ளது.

மகசூல்  குறைந்தது பற்றி மக்கள் முறையிடும் போது, தம்மை குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்று நபிகளார் தயங்கவில்லை. தமக்கு எல்லாம் தெரியும் என்று வாதிடவும் இல்லை. தூதுத்துவத்தைப் பின்பற்றும் முறை பற்றியும் தமது இயல்பு நிலை பற்றியும் பகிரங்கமாக விளக்குகிறார்கள்.

ஆனால், இன்றும் சிலர் தங்களுக்கு அசாதரண ஆற்றல் இருப்பதாக சுற்றித் திரிகிறார்கள். பார்வை பட்டால் பேய் ஓடிவிடும்; கை பட்டால் நோய் குணமாகி விடும்; போகும் இடம் பணம் கொட்டும் என்றெல்லாம் கதை விடுகிறார்கள். தாயத்து தகடு போன்றவை மூலமாக எதிர்காலத்தையே மாற்றிவிடுவதாக நடிக்கிறார்கள்.

இப்படி ஆன்மீகத்தின் பெயரால் ஊரை ஏமாற்றும் ஆசாமிகளைப் பார்க்கும்போது, நபிகளார் மனிதருள் மாணிக்கம் என்பதை என்றும் மறுக்க இயலாது.

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள். -(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகையின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.- (தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்களிடம், “இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)’’ என்றனர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, “ஓர் விஷயம்! தொழுகையில் ஏதேனும் மாற்றங்ககள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, “உங்களில் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி (401)

சிலர் பொதுமக்கள் மத்தியில் தங்களைத் தனித்துவம் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். குறைகள், தவறுகள் ஏதுமில்லா மகான்களாகப் படம் காட்டுகிறார்கள். இந்த வியாதி காரணமாக, தாங்கள் மக்களுக்குத் தெரிவித்த மார்க்க தீர்ப்புகள், கருத்துகள் தவறானவை என்று தெரிந்தும் அதற்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அல்லது பெயர் கெட்டுவிடக் கூடாதென மௌனமாகி விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் நபிகளாரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?’’ என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்’’ என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.

இன்னொரு அறிவிப்பில், “அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்பேன்’’ என்று கூறியதாக உள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (2088), (2089)

பிறமதக் கலாச்சாரம் பற்றி தூதர் அவர்கள் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஆஷூரா நோன்பு பற்றி தோழர் ஒருவருக்கு சந்தேகம் எழுகிறது. அதிலுள்ள நியாயத்தை நபிகளார் ஏற்றுக் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் அனுமதிப்படி அந்த நோன்பின் சட்டத்தை மாற்றுகிறார்கள்.

இன்று நிலைமை என்ன? நபிகளாரின் காலத்திலேயே மார்க்கம் முழுமையான பிறகும், அதில் இல்லாத காரியங்களை பல முஸ்லிம்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் குர்ஆன் ஹதீஸை சுட்டிக் காட்டினால் செவியேற்க மறுக்கிறார்கள். அறிந்தாலும் பொய்யான காரணங்களைக் கற்பித்துக் கொண்டு ஷிர்க்கிலும் பித்அத்திலும் ஆட்டம் போடுகிறார்கள்.

ஒருவர் முஸ்லிமோ, காஃபிரோ, எவராக இருந்தாலும் அவருடைய கருத்து சரியாக இருக்கும் போது அதனை அங்கீகரிப்பதே சரியானது. அதுவே சத்தியத் தூதரின் வழிமுறையாக இருந்தது.

ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘நீங்கள் இணைக் கடவுள்களை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் இணை கற்பிக்கின்றீர்கள். (அதாவது) நீங்கள் அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்து (என்று இறைநாட்டத்திற்கு சமமாக மனித நாட்டத்தை இணைத்துக்) கூறுகின்றீர்கள். இன்னும் கஅபாவின் மீது சத்தியமாக என்றும் கூறுகின்றீர்கள்’’ என்று கூறினார். உடனே நபியவர்கள் (ஸஹாபாக்களாகிய) அவர்களுக்கு, சத்தியம் செய்யும் போது கஅபாவின் இரட்சகன் மீது சத்தியமாக என்று கூறவேண்டும் என்றும், அல்லாஹ் நாடினான், பிறகு நீங்கள் நாடியது நடந்தது என்ற கூறவேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: குதைலா (ரலி)

நூல்கள்: நஸயீ (3713), அஹ்மத் (25845)

இவ்வாறு தூதர் வாழ்வில் சம்பவங்களை நிகழ்த்தி மார்க்கத்தை அணுகும் முறையை அல்லாஹ் நமக்கு புரிய வைக்கிறான். ஆகவே, ஆளைப் பார்த்து செய்தியை முடிவு செய்துவிட முடியாது. நல்ல நபரிடமும் தவறான கருத்து இருக்கும். கெட்ட மனிதனிடமும் சரியான தகவல் கிடைக்கும். எதிலும் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு ஏற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

ரமளானுடைய ஃபித்ரா பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தது. இரவில் திருடன் ஒருவன் வந்து அதிலிருந்து எடுக்கிறான். அவர் அவனை பிடிக்கும் போது, இனிமேல் வர மாட்டேன் என்று கெஞ்சியதால் விட்டுவிடுகிறார்கள். இரவு சம்பவத்தை நபிகளாரிடம் தெரிவிக்கிறார்கள். திருடன் மீண்டும் வருகிறான். முதல் நாள் போலவே இரண்டு நாட்கள் கழிகிறது. இது குறித்து அந்த நபித்தோழரே விவரித்துள்ளார்கள்.

மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான்.  அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன் (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்!’’ என்று கூறினேன். 

அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!’’ என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?’’ என்று கேட்டேன்.  “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான்.  அவனை நான் விட்டுவிட்டேன்.  விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?’’ என்று கேட்டார்கள்.  “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்! என்றேன்.  “அந்த வார்த்தைகள் என்ன?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும்  உம்மிடம் உண்மையைத்தான் சொல்லி இருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள்.  “தெரியாது!’’ என்றேன்.  “அவன்தான் ஷைத்தான் (திருடன்)!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புஹாரி (2311)

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் நபிகளாரின் நடவடிக்கையைக் கவனியுங்கள். அவை நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான். உண்மை எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதனை மறைக்க கூடாது. எந்தவொரு பாகுபாடும் பாராமல், அதற்கேற்ப நம்மை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். இத்தகு நல்ல புரிதலை வல்ல இறைவன் நமக்கு வழங்குவானாக!

தற்கொலை செய்ய முயன்றார்களா நபிகள் நாயகம்?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

பொய் பிரச்சாரத்தால் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தத் துடியாய் துடிக்கும் கள்ளக் கிறித்தவக் கூட்டமும், தங்களின் இழிசெயலால் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் சமாதி வழிபாட்டுக் கும்பலும் நபிகள் நாயகம் தற்காலைக்கு முயன்றார்கள் என்ற செய்தியைப் பரவலாக பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களின் இப்பரப்புரைக்கும் பழிப்புரைக்கும் பலமான அஸ்திவாரமாக அமைந்திருப்பது புகாரியில் உள்ள பின்வரும் நீண்ட செய்தியாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது.

பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது.

(அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘ஓதும்’ என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்று அவருக்கு பதிலளித்தார்கள்.

(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:)

அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு ‘ஓதும்’ என்றார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே’ என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து, பின்னர் என்னை விட்டு விட்டு, ‘ஓதும்’ என்றார். அப்போதும், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு ‘படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதும்..’ என்று தொடங்கும் (96வது அத்தியாயத்தின்) வசனங்களை ‘மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்’ என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.

(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, ‘எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. அப்போது, ‘கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா(ரலி) அவர்கள், ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள்.  அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்’ என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவரின் புதல்வர் ‘வரக்கா’விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர்.

‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் ‘என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் ‘அவர்தாம் நபி மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று கூறினார்.

இதைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் ‘ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்’ என்று பதிலளித்தார்.

அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார்.

(இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தோன்றி, ‘முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்’ என்று கூறுவார்கள். இதைக் கேட்கும் போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6982

நபிகளாருக்கு வஹீ வரத் துவங்கி பின் தடைபட்டுப் போனதால் மனமுடைந்து மலை உச்சிக்குச் சென்று தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்றும் ஒவ்வொரு முறை அவ்வாறு எண்ணமேற்பட்டு முயற்சிக்கும் போதெல்லாம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நீங்கள் இறைத்தூதர் தான் என ஆறுதல் கூறிய பிறகே நபிகளார் ஆறுதலடைவார்கள் எனவும் இச்செய்தி கூறுகிறது.

தற்கொலை செய்யும் தப்பெண்ணம் நபிக்குப் பலமுறை ஏற்பட்டிருக்கிறது என்றும் இச்சம்பவம் எடுத்துரைக்கின்றது.

இச்செய்தி தான் மேற்கண்ட இருசாராருக்குமான அஸ்திவாராமாகும்.

வெறும் வாயை மென்று கொண்டிருந்த கிறித்தவக் கூட்டம் இதை அவல் என்றெண்ணி நன்றாக அரைத்துக் கொண்டிருக்கிறது.

இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்கிறீர்களா?

பாருங்கள்! முஹம்மது உண்மையிலேயே இறைத்தூதர் என்றால் இப்படி மனச்சோர்வடைந்து தற்கொலை செய்ய எண்ணியிருப்பாரா?

முஹம்மத் தற்கொலை செய்யுமளவு சென்றார் எனில் அவரைத் தொடர்பு கொண்ட - தூண்டிய ஆவி பரிசுத்த ஆவியாக இருக்க முடியுமா?

மெய்யான கடவுள் தான் அவரை தொடர்பு கொண்டார் எனில் இத்தகைய குழப்பத்திற்கு அவர் ஏன் செல்ல வேண்டும்?

எனவே முஹம்மது ஓர் பொய்த்தூதர் என்று விஷமப் பிரச்சாரத்தை செய்கிறார்கள்.

இதற்குப் பதிலளிக்கத் துப்பு கெட்ட கப்ரு முட்டிக் கூட்டமோ தாங்கள் அவ்லியாக்களாகத் தேர்வு செய்த சில பைத்தியக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக, ‘நபியே தற்கொலை செய்ய முயற்சித்தவர் தான்’ (நஊது பில்லாஹ்) என்ற ரேஞ்சுக்கு இந்தச் செய்தியை வைத்து சிலாகித்து சிறப்பாக  சிறப்புரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சாராருக்குமே இஸ்லாம் குறித்த அறிவோ நபிமொழிகளை அணுகும் ஆய்வுத் திறமோ எதுவுமில்லை.

உண்மையில் நபிகளார் தற்கொலை செய்யத் துணிந்தார்களா? இக்குறைமதி கொண்டோர் குறிப்பிடும் செய்தியின் தரம் என்ன என்பதை அலசுவோம்.

யார் சொன்னது?

இச்செய்தியினை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆயிஷாவிடமிருந்து உர்வா - உர்வாவிடமிருந்து ஸூஹ்ரி என்பார் அறிவிக்கிறார்.

இறைச்செய்தி வரும் முன் ஹிரா குகையில் நபிகளார் தங்கியிருந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ஓதுவீராக என்று கூறிய  விபரங்கள் முதல், நபி அச்சமடைந்ததால் அன்னாரின் துணைவி கதீஜா அவர்கள் தம் உறவுக்காரர் வரகாவிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றை கூறியது - அதற்கு  வரகா அளித்த பதில் என நபிகள் நாயகத்திற்கு வஹீ வரத்துவங்கிய புதிதில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒவ்வொன்றாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இச்செய்தி துவங்குகிறது.

வஹீ தடை பட்டதால் நபியவர்கள் கவலை கொண்டார்கள் என்பதை ஆயிஷா (ரலி) கூறியதாகச் சொல்லப்படும் தொடர்ச்சியில் தான் பிரச்சனைக்குரிய வாசகம் வருகிறது.

‘‘நமக்குக் கிடைத்த தகவலின்படி’’ எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள்.

இந்த வாசகம் தான் நபி தற்கொலை செய்ய முயன்றார்கள் என்பதற்கான ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.

இது தான் நன்றாக ஆராயப்பட வேண்டும்.

நமக்குக் கிடைத்த தகவலின் படி என்று கூறி நபி தற்கொலை செய்ய எண்ணினார்கள் என்று கூறப்படுகிறது என்றால் இத்தகவல் யாருக்குக் கிடைத்தது?  யார் மூலம் கிடைத்தது?

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தத் தகவல் கிடைத்திருந்தால் வேறு நபித்தோழர் மூலம் கிடைத்திருக்கலாம் என்று கருதலாம்.

ஆயிஷா அல்லாத - அச்செய்தியில் இடம் பெறும் வேறு அறிவிப்பாளர்களுக்கு இந்தத் தகவல் கிடைத்திருந்தால் அவர்கள் இந்தத் தகவலை யாரிடமிருந்து, எப்படிப் பெற்றார்கள் என்பதைச் சொல்ல வேண்டும். நபி தொடர்புடைய செய்தியினை அவர்கள் கூறுவதால் அவர்களின் வரலாறும் ஆராயப்பட்டு அவர்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.  அதன் பிறகே அது நம்பகமான செய்தி என்ற தரத்தை அடையும்.

நமக்குக் கிடைத்த தகவலின் படி... என்ற வாசகம் யார் சொன்னது?

இச்செய்தியினை துவக்கத்திலிருந்து நன்றாகக் கவனித்து வந்தால் அது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய வார்த்தை அல்ல என்பதையும் ஆயிஷாவுக்குப் பிந்தைய நபர் கூறிய வார்த்தையே என்பதையும் அறியலாம்.

ஹிரா குகையில் தங்கியதிலிருந்து நபி தொடர்புடைய பல செய்திகளை ஆயிஷா (ரலி) குறிப்பிட்டு வருகிறார்கள்.

இந்நிகழ்வுகள் எதிலும் ஆயிஷா அவர்கள் நபியுடன் உடனிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெளிவாகக் குறிப்பிடுவதானால் இந்நிகழ்வு ஆயிஷா அவர்கள் பிறப்பதற்கு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பே நடைபெற்ற நிகழ்வாகும். ஆக அனைத்தையுமே ஆயிஷா (ரலி) பிற நபித்தோழரிடமிருந்து கேட்டறிந்த தகவல்களைத் தான் எடுத்துக் கூறுகிறார்கள்.

அப்படியிருக்க, நீண்ட சம்பவத்தின் துவக்கத்திலிருந்து எங்கேயும் எனக்கு கிடைத்த தகவலின் படி என்பதைக் கூறாமல் தற்கொலை விவகாரத்தின் போது மாத்திரம் இந்த வாசகம் வருகிறது என்றால் நிச்சயம் இது ஆயிஷா அவர்களின் வார்த்தையல்ல என்பதை சம்பவத்தின் போக்கே காட்டிக் கொடுத்து விடுகிறது.

முழுச் சம்பவத்தையும் ஆயிஷா தான் அறிவிக்கின்றார்கள். அதில் பல தகவல்களைக் கூறுகிறார்கள். எல்லாமே அவர்களுக்குப் பிற நபித்தோழர்கள் மூலம் கிடைத்த தகவல்கள் தாம். எதிலும் அவர்கள் உடனிருக்கவில்லை. அப்படியிருக்க நபி தற்கொலை செய்ய எண்ணினார்கள் என்ற தகவல் வரும் போது மட்டும் ‘எனக்கு கிடைத்த தகவலின் படி’ என்று சொல்வதாக இருந்தால் கண்டிப்பாக இதை ஆயிஷா பயன்படுத்தவில்லை. ஆயிஷாவுக்குப் பிந்தைய அறிவிப்பாளர்களில் - அறிஞர்களில் ஒருவரே இதைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு.

இப்படி சம்பவத்தின் போக்கை நன்றாக உற்று நோக்கி இந்த வாசகத்தை அதே சம்பவத்தில் இடம்பெறும் ஸூஹ்ரி என்பவரே கூறுகிறார் என்று அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

அறிஞர் இப்னு ஹஜர் மற்றும் கிர்மானீ ஆகியோர் இதை குறிப்பிடுகின்றனர்.

فتح الباري - ابن حجر (12/ 359)

ثم ان القائل فيما بلغنا هو الزهري ومعنى الكلام أن في جملة ما وصل إلينا من خبر رسول الله صلى الله عليه و سلم في هذه القصة وهو من بلاغات الزهري وليس موصولا وقال الكرماني هذا هو الظاهر

‘நமக்கு கிடைத்த தகவலின் படி’ என்று சொன்னவர் ஸுஹ்ரி ஆவார். இச்சம்பவத்தோடு நபி தொடர்பாக நம்மை வந்தடைந்த தகவல்களில் இதுவும் ஒன்று என்பது இதன் கருத்தாகும். இது ஸூஹ்ரிக்கு கிடைத்த தகவலாகும். அது முழு அறிவிப்பாளர் தொடருடன் அமையவில்லை

இதுவே வெளிப்படையான கருத்து  என கிர்மானி கூறுகிறார்.

பத்ஹூல் பாரி, பாகம் 12, பக்கம் 359

எனக்குக் கிடைத்த தகவலின் படி நபி தற்கொலை செய்ய முனைந்தார்கள் எனும் வாசகத்தை சம்பவத்தில் தொடர்புடைய ஸுஹ்ரியோ அல்லது வேறு யாருமோ கூறியிருக்கிறார்கள் எனும்போது இக்கருத்து முழு அறிவிப்பாளர் தொடருடன் அமையப்பெற்ற செய்தியாக இல்லை என்றாகி விடுகிறது.

ஸூஹ்ரி தாபியி ஆவார். அவர் நபிக்கு வஹி வந்த துவக்க காலத்தில் நடைபெற்ற சம்பவத்தைச் சொல்வாரேயானால் இதை அவர் யாரிடமிருந்து அறிந்து கொண்டார் என்கிற நபர்கள் விபரம் இங்கு குறிப்பிடப்படவில்லை. நபித்தோழர் அல்லாதவரிடமிருந்தும் இந்தத் தகவல் அவருக்குக் கிடைத்திருக்கலாம். அவர் யார்? அவரது நம்பகத்தன்மை என்ன உள்ளிட்ட விபரங்கள் இச்செய்தியில் இல்லை.

எனவே நீண்ட செய்தியில் உள்ள இச்சிறுபகுதி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகக் கருதப்படும்.

இதனடிப்படையில் நபிகளார் தற்கொலைக்கு முயன்றார்கள் எனும் புகாரியில் உள்ள நீண்ட செய்தியின் இந்தப் பகுதி அறிவிப்பாளர் அடிப்படையில் நிராகரிக்கப்பட வேண்டிய பலவீனமான செய்தியாகிறது.

குர்ஆனுக்கு எதிரானது

நபிகள் நாயகம் தற்கொலைக்கு முயன்றார்கள் எனும் இந்தச் செய்தியின் கருத்தும் குர்ஆனுக்கு எதிரானதாகவே உள்ளது.

நபிகள் நாயகம் வஹி நின்று போனதால் தற்கொலைக்கு முயன்றார்கள் என்றால் கடுமையான மன பாதிப்பு நபிக்கு ஏற்பட்டுள்ளது என்றாகிறது.  மேலும் ஒவ்வொரு முறை தற்கொலை செய்ய முயற்சிக்கும் போது ஜிப்ரீல் அலை வந்து நீர் தூதர் தாம் என்று கூறிய பிறகே ஆறுதல் அடைவார்கள் என்றால் இது நபிகள் நாயகம் இறைத்தூதில் கடுமையான சந்தேகத்தில் இருந்தார்கள் என்ற கருத்தையும் தருகிறது. இவ்விரண்டுமே திருக்குர்ஆன் கூறும் போதனைகளுக்கு தெளிவாகவே எதிரானதாகும்.

நபிகள் நாயகம் தமக்கு இறைவனின் புறத்திலிருந்து செய்தி வருகிறது என்பதை மக்களிடம் எடுத்துரைத்த போது நபியை பைத்தியக்காரர் என்றே மக்கள் விமர்சித்தனர்.

அதை இறைவன் வன்மையாகக் கண்டித்து நபிக்கு எந்தப் பைத்தியமும் இல்லை - அவர் பைத்தியக்காரரும் அல்ல என்கிறான்.

{وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ (22) وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ (23) وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ} [التكوير: 22 - 24]

உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.

திருக்குர்ஆன் 81:22

எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.

திருக்குர்ஆன் 52:29

அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

திருக்குர்ஆன் 7:184

நபிக்கு எந்தப் பைத்தியமும் ஏற்படவில்லை என்று அல்லாஹ் மறுத்துள்ளதோடு அத்தகைய நிலை நபிக்கு எப்போதும் ஏற்படவில்லை என்ற மறுப்பையும் அல்லாஹ் இதில் உள்ளடக்கியுள்ளான்.

வஹிக்கு முன்பு பைத்தியக்காரராக நபி இருந்தால் அதுவும் நபித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதே.

மனச்சிதைவு ஏற்பட்டுப் பலமுறை தற்கொலை முயற்சி மேற்கொண்ட ஒருவர் அந்தக் கால கட்டத்திலேயே தனக்கு இறைவனின் புறத்திலிருந்து செய்தி வருகிறது என்று கூறினால் மக்கள் எப்படி அவரை இறைத்தூதராக அங்கீகரிப்பார்கள்? இச்செயல் நபித்துவத்தை கடுமையாகப் பாதிக்கும் செயலாகும்.

எனவே எந்நிலையிலும் நபி மனச்சிதைவு உள்ளவராக இருக்கவில்லை என்பதையே மேற்கண்ட வசனம் குறிக்கின்றது.

அல்லாஹ் இவ்வாறு கூறியிருக்க நபிகள் நாயகம் தற்கொலை செய்ய முயன்றார்கள் என்றால் அது நபி கடும் மனப்பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள் என்று ஆகி விடும்.

பல தடவை தற்கொலைக்கு முயற்சி செய்த ஒருவரை நிச்சயம் மனப்பாதிப்பு உள்ளவராகவே கருத இயலும்.

நபியை பைத்தியக்காரர் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் பைத்தியக்காரச் செயலை நபி செய்தார்கள் என்று நம்புவதும். குற்றத்தில் இரண்டும் சமமே.

இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது உண்மையானால் அதன் பிறகு எதிரிகள் நபியைப் பைத்தியக்காரர் என்று விமர்சித்தது உண்மை என்றாகி விடும். எனவே இந்தச் செய்தி அறிவிப்பு குறைபாடு இருப்பதுடன் மிக முக்கியமாக குர்ஆனுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது.

சரியான அறிவிப்பாளர் தொடருடன் இது அமையப் பெற்றிருந்தால் கூட குர்ஆனுக்கு முரண்படும் இத்தன்மையே இதை பலவீனமாக்கப் போதுமானதாகும்.

குர்ஆனுக்கு முரணான இதுபோன்ற செய்திகளை வைத்துக் கொண்டு இஸ்லாத்தைக் களங்கப்படுத்த முடியாது.

நபிகள் நாயகம் தொடர்புடைய செய்தியை எப்படி அணுகுவது என்ற அடிப்படை அறிவு இல்லாமலேயே இஸ்லாம் பற்றி விமர்சிக்கப் புறப்பட்ட கிறித்தவக் கூட்டத்திற்கு நாம் என்ன சொல்கிறோம் எனில் நபிமொழியை அணுகும் ஆய்வுத்திறனை வளர்த்துக் கொண்டு அதன்பின் இஸ்லாத்தை விமர்சனம் செய்ய முன்வாருங்கள் என்ற அழைப்பை விடுக்கிறோம்.

புகாரியின் நிலை என்ன?

இது தொடர்பாக முஸ்லிம்களுக்கு அறிவுறுத்த வேண்டிய விஷயமும் இதில் அடங்கியுள்ளது.

முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் புகாரியில் ஒரு செய்தி பதிவாகி விட்டால் அவ்வளவு தான்; அதற்கு மேல் வாய் திறக்க கூடாது என்ற வழிகேடான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

நாங்களும் தவ்ஹீத் தான் என்று எக்காளமிடும் ஸலபுக் கும்பலோ அதற்கு ஒத்து ஊதி, ஆமாமாம் புகாரியில் பலவீனமா? என்று எகத்தாளம் பேசி வருகின்றனர்.

புனிதத்தில் குர்ஆனுக்கு நிகராக புகாரி நூலை மதிப்பிடும் இவர்களின் எண்ணக் கோட்டையை இந்தச் செய்தி சுக்கு நூறாக நொறுக்கி, தகர்த்து விடுகிறது.

ஏனெனில் நபி தற்கொலைக்கு முயன்றதாக உள்ள இச்செய்தி புகாரியிலேயே உள்ளது.

எல்லாவற்றையும் நம்பித்தான் பதிவு செய்துள்ளார் எனில் நபி தற்கொலை செய்ய பல முறை முயன்றார்கள் என்பது தான் இமாம் புகாரியின் நிலைப்பாடா? புகாரி பதிவு செய்து விட்டார் என்பதால் உலக முஸ்லிம்கள் அனைவரும் நபி தற்கொலை செய்யத் துணிந்தார்கள் என்பதை அவசியம் நம்ப வேண்டுமா?

இமாம் புகாரியை மனிதனாகப் பார்க்காமல் அவரிடத்தில் எந்தத் தவறும் வராது என்ற அளவில் அவரை இறைவனுக்கு இணையாக்கும் இஸ்லாமியர்கள் இதன் மூலம் புகாரி இமாமும் தவறிழைப்பவரே - பலவீனமானதை சரியானது என தவறாக மதிப்பிடுபவரே என்பதை உணர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.

இந்தச் செய்தியை இமாம் புகாரி, தாபியியின் அல்லது தனது சொந்தக் கூற்றாகப் பதிவு செய்யாமல் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றோடு இணைத்து சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்தியின் தோரணையில் சொன்னது ஏற்க முடியாத தவறாகும்.

அதனால் அவர் பெரிய அறிஞர் அல்ல என்றாகி விடாது. அவர் மிகப் பெரும் அறிஞர் தான் என்றாலும், நம்மை போன்ற மனிதர் என்ற அடிப்படையில் தவறிழைப்பவர் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது.

குறிப்பு: இதைப் படித்ததும், என்னது? இமாம் புகாரி தவறிழைத்து விட்டாரா? என்று பொங்கியெழுந்து, இல்லையில்லை இமாம் புகாரி இதை கொண்டு வந்ததன் ஹிக்மத் - நுணுக்கம் என்ன தெரியுமா? என்று பயான் பண்ணும் ஸலபுக் கும்பலைப் பார்த்தால் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நேர்வழி வேண்டிப் பிரார்த்திப்பது நமது பொறுப்பாகும்.

பலவீனமான செய்தி

புகாரி அல்லாத மற்ற நூல்களிலும் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. அவைகளின் தரத்தையும் அறிந்து கொள்வோம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்பதாக இதே கருத்தில் அமைந்த வேறொரு செய்தி தப்காதுல் குப்ரா எனும் நூலில் உள்ளது.

الطبقات الكبرى كاملا 230 (1/ 196)

469- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ : حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مُوسَى عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ أَبِي غَطَفَانَ بْنِ طَرِيفٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا نَزَلَ عَلَيْهِ الْوَحْيُ بِحِرَاءٍ مَكَثَ أَيَّامًا لاَ يَرَى جِبْرِيلَ فَحَزِنَ حُزْنًا شَدِيدًا حَتَّى كَانَ يَغْدُو إِلَى ثَبِيرٍ مَرَّةً ، وَإِلَى حِرَاءٍ مَرَّةً يُرِيدُ أَنْ يُلْقِيَ نَفْسَهُ مِنْهُ ، فَبَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَلِكَ عَامِدًا لِبَعْضِ تِلْكَ الْجِبَالِ إِلَى أَنْ سَمِعَ صَوْتًا مِنَ السَّمَاءِ ، فَوَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِقًا لِلصَّوْتِ ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ ، فَإِذَا جِبْرِيلُ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ مُتَرَبِّعًا عَلَيْهِ يَقُولُ : يَا مُحَمَّدُ ، أَنْتَ رَسُولُ اللَّهِ حَقًّا ، وَأَنَا جِبْرِيلُ قَالَ : فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَقَرَّ اللَّهُ عَيْنَهُ ، وَرَبَطَ جَأْشَهُ ثُمَّ تَتَابَعَ الْوَحْيُ بَعْدُ وَحَمِيَ.

நபிகளாருக்கு வஹீ வந்த போது சில நாட்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரவில்லை. எனவே கடும் கவலை கொண்டு தற்கொலை செய்யும் நோக்கில் ஒரு முறை ஸபீர் என்ற மலைக்கும், மற்றொரு முறை ஹிராவுக்கும் சென்றார்கள். இம்மலைகளை நாடிச் சென்று வந்த நிலையில் வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டு திடுக்கம் அடைந்து நின்றுவிட்டார்கள். பிறகு தம் தலையை உயர்த்திப் பார்த்தால் அங்கே ஜிப்ரீல் அலை வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள இருக்கையில் உள்ளடக்கி இருந்தவாறே, ‘முஹம்மதே உண்மையிலேயே நீர் அல்லாஹ்வின் தூதர் தாம், நான் தான் ஜிப்ரீல்’ என்று கூறினார்கள். அதன் பிறகு நபியின் கண்களை அல்லாஹ் குளிர்ச்சிப்படுத்தி உள்ளத்தை இணைத்த நிலையில் திரும்பிச் சென்றார்கள். அதன் பிறகு வஹீ தொடர்ந்து எழுச்சியுடன் வரலாயிற்று.

ஹதீஸ் எண் 469

தப்காதுல் குப்ரா பாகம் 1 பக்கம் 196

இந்தச் செய்தி முற்றிலும் நிரகாரிக்கத்தக்க பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

இதில் இடம் பெறும்  முஹம்மத் பின் உமர் அல்வாகிதீ என்பவர் பல அறிஞர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானவர் ஆவார்.

இமாம் அஹ்மத் இவரை பொய்யர் என்றும் இமாம் நஸாயி, புகாரி ஆகியோர் வாகிதீ ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

பார்க்க: அல்காமில், பாகம் 7, பக் 481

தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 9, பக்  324

எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் என்பதில் சந்தேகமில்லை.

இதே செய்தி இப்னு ஹிப்பானில் ஆயிஷா (ரலி) அறிவிப்பாக வருகிறது.

அதில் இப்னுல் முதவக்கில் என்பார் இடம் பெறுகிறார். இவரும் அறிஞர்களால் குறை சொல்லப்பட்டவரே.

ميزان الاعتدال (3/ 560)

7580 - محمد بن أبي السري العسقلاني.

هو ابن المتوكل.

له مناكير

இவரிடம் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என தஹபீ விமர்சித்துள்ளார்.

மீஸானுல் இஃதிதால், பாகம் 3, பக்கம் 560

المغني في الضعفاء (2/ 628)

5938 - د / محمد بن المتوكل بن أبي السري العسقلاني صدوق قال أبو حاتم لين

இமாம் அபூஹாதம் அவர்களும் இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்

அல்முக்னி, பாகம் 2, பக்கம் 628

அதிகம் தவறிழைப்பவர் என்று இப்னு அதீ விமர்சித்துள்ளார்.

தத்கிரதுல் ஹூஃப்பாழ், பாகம் 2, பக்கம்  46

இத்துடன் இப்னு ஹிப்பானின் இந்த அறிவிப்பிலும் துவக்கத்தில் நாம் விளக்கிய எனக்குக் கிடைத்த தகவலின் படி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

எனவே இந்தச் செய்தியும் ஆதாரமாகக் கொள்ள இயலாத பலவீனமான செய்தி என்பது தெளிவாகிறது.

தப்ரீ அவர்களின் அறிவிப்பு

நபியவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற கருத்திலமைந்த மற்றொரு செய்தி தாரீகு தப்ரீ, பாகம் 2, பக்கம் 298லும் பதிவாகியுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பாகப் பதிவாகியுள்ள இச்செய்தியில் நுஃமான் பின் ராஷித் என்பார் இடம்பெறுகிறார்.

இவரை அறிஞர்கள் பலரும் பலவீனப் படுத்தியுள்ளனர்.

யஹ்யா அல்கத்தான் இவரை முற்றிலும் பலவீனமானவர் என்றும் இமாம் அஹ்மத் இவரை ஹதீஸ் துறையில் குழப்பமானவர் என்றும்

இப்னு மயீன் பலவீனமானவர் என்றும் இவருடைய செய்திகளில் அதிகம் சந்தேகம் உள்ளது என இமாம் புகாரி அவர்களும், அதிகம் தவறிழைப்பவர் பலவீனமானவர் என நஸாயியும் விமர்சித்துள்ளனர்.

பார்க்க: தஹ்தீபுல் கமால்,

பாகம் 29, பக்கம் 447

எனவே இது குறித்து எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. அனைத்தும் பலவீன மானவையாகவே உள்ளன.

நபிகள் நாயகம் மனப்பிறழ்ச்சி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்கள் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்ற குர்ஆனுக்கு எதிரான செய்தியாகும்.

இனிமேலும் இதை நபியின் மீது பரப்புவோர் எவரோ அவரே மனப்பிறழ்ச்சி கொண்டோராகக் கருதப்படுவார்  என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

March 13, 2017, 3:41 PM

ஏகத்துவம் ஜனவரி 2017

தலையங்கம் இணையை விரும்பாத ஏகாதிபத்திய தலைமை!

ஜெயலலிதா மரணம் சொல்கின்ற சிந்தனைகள்!

இந்தியாவில் முக்கியத் தலைவர்கள் இறந்து விட்டால் அந்தச் சாவு, அந்தத்  தலைவர்களை மட்டும் காவு கொள்வதில்லை. கூடவே குடிமக்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினரையும் காவு கொண்டு  விடுகின்றது. குடிமக்களில் ஒரு கூட்டத்தையே கூட்டிப் போய் விடுகின்றது. இது இந்தியாவின் தலையெழுத்து.

தொடர்ந்து படிக்க January 12, 2017, 11:18 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top