36-விலைகோள் உரிமை

 

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அத்தியாம் : 36

36-விலைகோள் உரிமை

(இருவருக்குச் சொந்தமான சொத்தில், தமது பங்கை ஒருவர் விற்க நாடினால் அவர் தமது பங்காளிக்கு முன்னுரிமை கொடுத்தல்)

பாடம் : 1

பங்கிடப்படாத வரைதான் விலைகோள் உரிமை உள்ளது; எல்லைகள் வகுக்கப்பட்டுவிட்டால் விலைகோள் உரிமை கிடையாது.

2257 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டுவிட்டால் பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலையில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விதித்தார்கள்.

பாடம் : 2

பிறருக்கு விற்பதற்கு முன், பங்காளிக்கு அறிவிக்க வேண்டும்.

விற்பதற்கு முன் பங்காளி அனுமதி கொடுத்து விட்டால் (அவருக்கு) விலைகோள் உரிமை இல்லை! என்று ஹகம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

தமது பங்காளியின் சொத்து பிறருக்கு விற்கப்படுவதை ஒருவர் அறிந்திருந்து அதை ஆட்சேபிக்காதிருந்தால் அவருக்கு விலைகோள் உரிமை இல்லை! என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2258 அம்ர் பின் ரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிஉ (ரலி) அவர்கள் வந்து, சஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக! எனக் கூறினார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்! என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், சஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்! என்றார்கள். அப்போது சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தர மாட்டேன்! என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிஉ (ரலி) அவர்கள், ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்!! என்று கூறிவிட்டு சஅதுக்கே விற்றார்.

பாடம் : 3

அண்டை வீட்டாரில் நெருக்கமானவர் யார்?

2259 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி ளஸல்ன அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு என்றார்கள்.

November 2, 2009, 8:29 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top