94-எதிர்பார்ப்பு

 

அத்தியாயம் : 94

94-எதிர்பார்ப்பு1

பாடம் : 1

எதிர்பார்ப்பு குறித்து வந்துள்ளவையும், (இறைவழியில்) உயிர்த் தியாகம் செய்வதை எதிர்பார்ப்பதும்.

7226 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிடுவதைப் பலரும் விரும்ப மாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடம் வாகன வசதி கிடையாது. இந்நிலை மட்டும் இல்லாதி ருப்பின், நான் (எந்தப் போரிலும்) கலந்து கொள்ளாமல் பின்தங்கியிருக்கமாட்டேன். (ஒன்றுவிடாமல் அனைத்திலும் கலந்து கொண்டிருப்பேன்.) நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

7227 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டுப், பிறகு கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்தச் சொற்களை மும்முறை கூறினார்கள் என்பதற்கு நான் அல்லாஹ்வை முன்வைத்து சாட்சியம் கூறுகிறேன்.

பாடம் : 2

நன்மையை எதிர்பார்த்தல்

உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும்... என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.3

7228 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் உஹுத் மலை அளவிற்குத் தங்கம் இருந்தாலும், அதிலிருந்து ஒரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்து அதைப் பெற்றுக்கொள்பவரை நான் அடையும் நிலையில் மூன்று நாட்கள் கழிவதைக்கூட நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்ப தற்காக நான் (அதிலிருந்து) எடுத்துவைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 3

பின்னால் நான் அறிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால்... என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.4

7229 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் பின்னால் அறிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால் (என்னுடன்) குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருக்க மாட்டேன்; மேலும், மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதே நானும் (இஹ்ராமிலிருந்து) விடுபட்டிருப்பேன்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

7230 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விடைபெறும்' ஹஜ்ஜின்போது) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) தல்பியா' சொன்னோம். துல்ஹஜ் மாதம் நான்காம் நாள் நாங்கள் மக்கா வந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி (தவாஃபும் சஃயும் செய்து)விட்டு, தம்முடன் குர்பானிப் பிராணி கொண்டு வந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அந்த ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி, இஹ்ராமி லிருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு உத்தர விட்டார்கள். நபி (ஸல்) அவர்களையும் தல்ஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரிடமும் குர்பானிப் பிராணி இருக்க வில்லை. அலீ (ரலி) அவர்கள் குர்பானிப் பிராணியுடன் யமன் நாட்டிலிருந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்-உம்ரா ஆகிய இரண்டில்) எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக நானும் இஹ்ராம் கட்டினேன் என அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் (சிலர்), தாம்பத்திய உறவு கொண்ட கையோடு நாங்கள் மினா'விற்குச் செல்ல வேண்டுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹஜ் பருவத்தில் உம்ரா செய்யலாம் என) நான் இப்போது அறிந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் (பலியிட) குர்பானிப் பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் என்னுடன் குர்பானிப் பிராணியை கொண்டு வந்திருக்காவிடில் இஹ்ராமிலிருந்து நான் விடுபட்டிருப்பேன் என்று கூறினார்கள்.

(இதையடுத்து) ஜம்ரத்துல் அகபாவில் நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்து கொண்டி ருக்கையில் அவர்களை சுராக்கா பின் மா-க் (ரலி) அவர்கள் சந்தித்து, அல்லாஹ்வின் தூதரே! இ(வ்வாறு ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்வ)து, எங்களுக்கு மட்டும் உரியதா? (எல்லாத் தலைமுறையினருக்கும் பொதுவானதா) என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இல்லை! எல்லாக் காலத்து (மக்களு)க்கும் உரியது என்று பதிலளித்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாயோடு மக்காவிற்கு நபி (ஸல்) அவர்களுடன் வந்திருந்தார்கள். ஹஜ்ஜுக் கிரியைகள் அனைத்தையும் செய்யலாம்; ஆனால் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரை இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது; தொழக் கூடாது என்று ஆயிஷாவுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நபியவர் களும் மக்களும் பத்ஹா' எனும் இடத்தில் தங்கிய போது ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எல்லாரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிச் செல்ல நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிச் செல்வதா? என்று (மனக் குறையுடன்) கேட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை(த் தம் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களுடன் தன்யீம்' என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (அங்கு சென்று உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொண்டு) துல்ஹஜ் மாதத்தில் ஹஜ் நாட்கள் கழிந்த பின் ஓர் உம்ராவை நிறைவேற்றினார்கள்.5

பாடம் : 4

நபி (ஸல்) அவர்கள் இன்னின்னவாறு இருக்கக் கூடாதா? என்று (ஆதங்கப்பட்டுச்) சொன்னது.6

7231 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்த புதிதில்) ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒருநாள்), என்னை இரவில் காவல் காப்பதற்கு என் தோழர்களில் ஏற்ற ஒருவர் வேண்டுமே? என்று கூறினார்கள், அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள் யார் அங்கே? என்று கேட்டார்கள். வந்தவர், நான்தான் சஅத், அல்லாஹ்வின் தூதரே! தங்களைக் காவல் காப்பதற்காக வந்தேன் என்று கூறினார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், நாங்கள் அவர்களின் குறட்டைச் சப்தத்தை கேட்குமள விற்கு (நிம்மதியாக) உறங்கினார்கள்.7

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

பிலால் (ரலி) அவர்கள் (மதீனாவில் காய்ச்சல் கண்டு நிவாரணமடைந்த போது),

இத்கிர்' (நறுமணப்) புல்லும்

ஜலீல்' (கூரைப்) புல்லும்

என்னைச் சூழ்ந்திருக்க ...

(மக்காவின்) பள்ளத்தாக்கில்

ஓர் இராப் பொழுதையேனும்

நான் கழிப்பேனா?

என்ற கவிதையைக் கூறினார்கள். அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8

பாடம் : 5

குர்ஆனையும் கல்வியறிவையும் பெறுவதற்கு ஆசைப்படுவது.

7232அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படலாகாது: 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் அறிவை வழங்கினான். அவர் அதைக் காலையும் மாலையும் ஓதிவருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், இவருக்குக் கொடுக்கப் பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப் பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று (ஆதங்கத் துடன்) சொல்கிறார்.

2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர் இவருக்குக் கொடுக்கப் பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப் பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று (ஆதங் கத்துடன்) சொல்கிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9

....ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை குதைபா (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 6

விரும்பத்தகாத எதிர்பார்ப்பு

அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசைகொள்ளாதீர்கள். ஆண்களுக்கு, அவர்கள் தேடியவற்றில் உரிய பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் தேடியவற்றில் உரிய பங்குண்டு. எனவே, அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (4:32)

7233 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறப்பை (எதிர்பார்த்து) ஆசைப்படா தீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றிருக்காவிட்டால் (இறப்பின் மீது) ஆசை கொண்டிருப்பேன்.

இதை நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

7234 கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்றுவ-க்கு சிகிச்சை பெறுவதற் காகத் தமது வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தி ருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன் என்று சொன்னார்கள்.10

7235 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; (அவர் உயிர்வாழ்வதன் மூலம் நன்மையை) அவர் அதிகமாக்கிக்கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

பாடம் : 7

அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழியடைந்திருக்கமாட்டோம் என்று ஒருவர் சொல்வது.

7236 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது எங்களுடன் நபி (ஸல்) அவர்களும் மண்ணைச் சுமந்து எடுத்துவந்தார்கள். அவர்கள் (சுமந்துவந்த) மண் அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்திருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், (இறைவா!) நீ இல்லாவிட்டால்

நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்.

நாங்கள் தர்மம் செய்யதிருக்கவுமாட்டோம்;

தொழுதிருக்கவுமாட்டோம்.

ஆகவே, எங்கள் மீது அமைதியை இறக்கியருள் வாயாக!

இவர்கள்' அல்லது (குறைஷித்) தலைவர்கள்' எங்கள் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள்.

இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்

அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்

என்று (இறுதி வரியைக்) குரலை உயர்த்தி (பாடல் நடையில்) கூறினார்கள்.12

பாடம் : 8

எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது விரும்பத் தக்கதன்று.

இது தொடர்பாக நபி (ஸல்) அவர் களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹதீஸ் அறிவித்துள்ளார்கள்.13

7237 உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் எழுத்தராகப் பணிபுரிந்தவரும் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையுமான அபுந் நள்ர் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்க ளுக்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். நான் அதை (அவர்களுக்கு)ப் படித்துக் காட்டினேன். அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போர் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். என்று சொன்னார்கள் என்றிருந்தது.14

பாடம் : 9

(இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந் திருக்கும் என்பதைச் சுட்டும்) லவ்' எனும் (வியங்கோள் இடைச்) சொல்லைப் பயன் படுத்துவது எந்த அளவிற்குச் செல்லும்?15

அல்லாஹ் கூறுகின்றான்: உங்களைத் தடுக்கும் அளவிற்கு எனக்கு பலம் இருந்தி ருக்குமானால் (தடுத்திருப்பேன்) என்று (நபி) லூத் கூறினார். (11:80)

7238 காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்') செய்த ஒரு தம்பதியரைக் பற்றிக் குறிப்பிட்டார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள், நான் சாட்சி இல்லாமலேயே ஒரு பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை அளிப்ப வனாயிருந்தால் (இவளுக்கு அளித்தி ருப்பேன்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இல்லை; அவள் வெளிப்படை யாகவே தவறு செய்துவந்தவள் என்று கூறினார்கள்.16

7239அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை (எப்போதும் தொழும் நேரத்தைவிட)த் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, தொழுகைக்கு வாருங்கள், அல்லாஹ்வின் தூதரே! பெண்களும் குழந்தைகளும் உறங்கி விட்டார்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது தலையில் நீர் சொட்டிக் கொண்டிருக்க வெளியே வந்து, என் சமுதாயத்தாருக்கு' அல்லது மக்களுக்கு'ச் சிரமம் ஏற்படும்

என்று நான் கருதியிராவிட்டால், (இஷா) தொழுகையை இந்த (இருள் கப்பிய) நேரத்தில்தான் தொழவேண்டும் என்று அவர்களுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன் என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இந்த (இஷா)த் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! பெண்களும் குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள் என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள் தமது விலாவிலிருந்து வழியும் தண்ணீரைத் துடைத்தபடி, என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (இஷாத் தொழுகைக்கு) இது தான்  சரியான நேரம் (என்று சொல்லியிருப்பேன்) என்று சொன்னார்கள்.17

அதாஉ (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக அம்ர் பின் தீனார்(ரஹ்) அவர்களின் அறிவிப்பு ஒன்றும் உள்ளது. அதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இடம்பெறவில்லை.

இதே ஹதீஸ் சிற்சில வாசக மாற்றங்க ளுடன் வேறு சில அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

7240 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

7241 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ரமளான்) மாதக் கடைசியில் தொடர்நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) மக்கள் சிலரும் தொடர் நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது அவர்கள், எனக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாட்கள்) நீட்டிக்கப்பட்டாலும் என்னால் தொடர் நோன்பு நோற்க முடியும். அப்போது (என்னைப் பார்த்து தொடர்நோன்பு

நோற்று, வணக்க வழிபாடுகளில்) மிதமிஞ்சி ஈடுபடுபவர்கள் தங்களது போக்கைக் கைவிட வேண்டியது வரும். நான், உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கும் நிலையில் நான் உள்ளேன் என்று சொன்னார்கள்.18

இதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிட மிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

7242 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்க வேண்டாம் என்று தடை விதித்தார்கள். மக்கள், நீங்கள்

தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் யார் என்னைப்போல் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கின்ற நிலையில் நான் உள்ளேன் என்று பதிலளித்தார்கள். மக்கள் (தொடர் நோன்பைக்) கைவிட மறுத்த போது அவர் களுடன் சேர்ந்து ஒரு நாளும் அதன் பிறகு ஒரு நாளும் நபியவர்கள் தொடர்நோன்பு நோற்றார்கள். அதற்குள் (அடுத்த) மாதப் பிறையைக் கண்டார்கள். அப்போது பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால், உங்களை இன்னும் (தொடர் நோன்பை) அதிகமாக்க வைத்திருப்பேன் என்று -அவர்களைக் கண்டிப்பவர்களைப் போன்று- சொன்னார்கள்.19

7243 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம், (புனித கஅபாவை ஒட்டியுள்ள ஹத்தீம் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, இது கஅபாவில் சேர்ந்ததா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். நான், அப்படியானால் கஅபாவுடன் இதை அவர்கள் இணைக்காததற்குக் காரணமென்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், உன் (குறைஷி) சமூகத்தாருக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டி ருந்தது என்று பதிலளித்தார்கள். நான், கஅபாவின் வாயிலை உயரமாக வைத்திருப்ப தின் காரணம் என்ன? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்பியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தாம் விரும்பாதவர்களை (உள்ளே நுழைய விடாமல்) தடுத்துவிடுவதற்காகவும்தான் உன் சமூகத்தார் இவ்வாறு செய்தார்கள். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் மனத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியுடன் சேர்ந்தாற்போன்று ஆக்கியி ருப்பேன் என்று சொன்னார்கள்.20

7244 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத் தைத் துறந்து செல்வது) மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன். மக்கள் ஒரு பள்ளத்தாக்கிலும் அன்சாரிகள் வேறொரு பள்ளத்தாக்கிலும்' அல்லது மலைக் கணவாயிலும்' நடந்து சென்றால் நான் அன்சாரிகளின் பள்ளத்தாக்கு' அல்லது கணவாயில்'தான் நடந்துசெல்வேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21

7245 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹிஜ்ரத் மட்டும் நடந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்தி ருப்பேன். மக்கள் ஒரு பள்ளத்தாக்கில்' அல்லது கணவாயில்' நடந்து சென்றால் நான் அன்சாரிகளின் பள்ளத்தாக்கிலும் கணவாயி லும்தான் நடந்துசெல்வேன்.

இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

November 7, 2009, 9:45 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top