91-கனவுக்கு விளக்கமளித்தல்

 

அத்தியாயம் : 91

91-கனவுக்கு விளக்கமளித்தல்1

பாடம் : 1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அருளப்பெற்ற இறைஅறிவிப்பு (வஹீ) உண்மைக் கனவாவே இருந்தது.

6982 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறைஅறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாட்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாட்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாட்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய (வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும் வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், ஓதுவீராக' என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று அவருக்கு பதிலளித்தார்கள்.

ளஅப்போது நடந்த சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:ன

அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்று சொன்னார். அப்போதும் நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு, ஓதுவீராக என்றார். அப்போதும், நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக... என்று தொடங்கும் (96ஆவது அத்தியாயத்தின்) வசனங்களை மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான் என்பது வரை (96:1-5) ஓதினார்.

ளதொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:ன

பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டகன் றது. அப்போது, கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா (ரலி) அவர்கள், அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி செய்கிறீர்கள் என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பாரின் புதல்வர் வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும்

ஆவர்.

வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவ ராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள் என்று சொன்னார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம் என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி (ஸல்) அவர் களிடம் (நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உம்முடைய சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே! என்று கூறினார்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்? என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக்கொள்ளப் படாமல் இருந்ததில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன் என்று பதிலளித்தார்.

அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேதஅறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவ-ன்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, அல்லாஹ்வின் தூதர்தாம் என்று கூறுவார்கள். இதைக் கேட்கும் போது நபி (ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். அவர்களது உள்ளம் அமைதி யாகிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்துவிடுவார்கள். வேதஅறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும் போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போலவே கூறுவார்கள்.2

ளஇந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள ஃபலகுஸ் ஹுப்ஹ்' (அதிகாலைப் பொழுதின் விடியல்) என்பதைப் போன்றே குர்ஆனில் 6:96ஆவது வசனத்தில் இடம் பெற்றுள்ளன ஃபா-குல் இஸ்பாஹ்' (என்பதி லுள்ள இஸ்பாஹ்') எனும் சொல்லுக்குப் பகலில் சூரிய வெளிச்சம்; இரவில் நிலா வெளிச்சம்' என்று பொருளாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 2

நல்லோரின் கனவு

அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை நனவாக்கிவிட்டான்; அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சமற்றவர்களாகவும் தலையை மழித்துக் கொண்டவர்களாகவும் (அல்லது) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். (அப்போது எவருக்கும்) நீங்கள் பயப்படமாட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான். (அதன் பின்னர்) இதையன்றி நெருக்கமானதொரு வெற்றியையும் (உங்களுக்கு) அமைத்துக் கொடுத்தான். (48:27)

6983 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மை யான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.3

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 3

கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது.

6984 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ் விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.

இதை அபூகத்தாதா அல்அன்சாரி

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4

 

6985 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ் விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற் காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ் விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 4

நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.

6986 நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ் விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தமது இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில், அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

6987 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஓன்றாகும்.5

இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6988 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அனஸ் (ரலி) அவர்களிட மிருந்தும் வந்துள்ளது.

6989 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 5

நற்செய்தி(கூறும் கனவு)கள்

6990 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியி ருக்கவில்லை என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன? என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் நல்ல (உண்மை யான) கனவு என்று விடையளித்தார்கள்.

 

 

பாடம் : 6

(இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கண்ட கனவு.

அல்லாஹ் கூறுகின்றான்:

யூசுஃப் தம் தந்தையாரிடம், என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங் களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம்பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன் என்று கூறிய பொழுது, என் அருமை மகனே! உனது கனவைப் பற்றி உன் சகோதரர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு (எதிராக) சதி செய்வார்கள்; ஏனெனில், (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக் கின்றான்.

இவ்வாறே உம் இறைவன் உம்மைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உமக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உம்மீதும், யஅகூபின் சந்ததியார் மீதும் முழுமையாகச் சொரிவான். இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீதும் தன் அருளை அவன் முழுமையாகச் சொரிந்ததைப் போன்று. நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையோனுமாய் இருக்கின் றான். (12:4-6)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லாரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), என் தந்தையே! இது தான் முன்பு நான் கண்ட கனவின் விளக்க மாகும்; அதை என் இறைவன் மெய்ப்பித்தான். மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டாக்கிவிட்ட பின்னர் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுணுக்கமாகச் செய்கின்றவன்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன் என்று கூறினார்.

என் இறைவா! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங் களையும் எனக்குக் கற்றுத்தந்தாய். வானங் களையும் பூமியையும் படைத்தவனே! இம்மை யிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று அவர் பிராத்தித்தார்.) (12:100, 101)

(அபூஅப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகின்றேன்:)

(12:101ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ஃபாத்திர்' (படைத்தவன்) எனும் சொல்லும் அல்பதீஉ, அல்முப்திஉ, அல்பாரிஉ, அல்கா-க் ஆகிய சொற்களும் ஒரே பொருள் கொண்டவை ஆகும். (மேலும், 12:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பத்வு' எனும் சொல்லுக்குக் கிராமம்' என்று பொருள்.

பாடம் : 7

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு.

அல்லாஹ் கூறுகின்றான்:

பின்னர் இஸ்மாயீல் (தம் தந்தை) இப்ராஹீமுடன் நடக்கும் பருவத்தை அடைந்த போது, என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் ப-யிடுவதாகக் கனவு கண்டேன். இதைப் பற்றி உமது கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! என்று இப்ராஹீம் கூறினார். அதற்கு இஸ்மாயீல், என்னருமைத் தந்தையே! உங்களுக்கு இடப்பெற்ற கட்டளையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார். ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் இணங்கி, (இப்ராஹீம்) இஸ்மாயீலைப் ப-யிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை அழைத்து, இப்ராஹீம்! உறுதியாகவே நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே நற்பலன் அளிக்கிறோம். என்று கூறினோம். (37:102-105)

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(37:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸ்லமா' என்பதற்கு (இப்ராஹீம் இஸ்மாயில் ஆகிய) இருவரும் இறைவனின் கட்டளைக்கு இணங்கினர்' என்று பொருள். மேலும், வ தல்லஹு' என்பதற்கு, இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலை (அறுத்துப் ப-யிட) முகங் குப்புறக் கிடத்தினார்கள்' என்று பொருள்.

பாடம் : 8

பலர் காணும் கனவு ஒத்திருப்பது

6991 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபித்தோழர்களில்) சிலருக்கு லைலத்துல் கத்ர்' (எனும் மகத்துவமிக்க) இரவு (ரமளான் மாதத்தில்) கடைசி ஏழுநாட்களில் இருப்ப தாகக் கனவில் காட்டப்பட்டது. இன்னும் சிலருக்கு அது (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் இருப்பதாகக் கனவில் காட்டப் பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அதைக் கடைசி ஏழு நாட்களில் தேடிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.6

 

 

பாடம் : 9

சிறைக் கைதிகள், குழப்பவாதிகள் மற்றும் இணைவைப்போர் காணும் கனவு.

அல்லாஹ் கூறுகின்றான்:

(நம் தூதர்) யூசுஃபுடன் இரு இளைஞர் களும் சிறைக்குள் நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவர், நான் திராட்சை மது பிழிவதாக ஒரு கனவு கண்டேன் என்று கூறினார். மற்றவர், நான் என் தலைமீது ரொட்டியைச் சுமப்ப தாகவும், அதிலிருந்து பறவைகள் தின்று கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன் என்று கூறினார். (பின் இருவரும் யூசுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீ ராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமிக்க) நல்ல மனிதர்களில் ஒருவராகக் காண்கிறோம் (என்று கூறினார்கள்).

அதற்கு அவர் கூறினார்: (இங்கு) உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்பே உங்களது கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்துவிடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்ப வர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டுவிட்டேன். நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதன்று. இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.

என்னுடைய சிறைத் தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் சிறந்தவையா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா? அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டி ருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை. அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. (ஆட்சி செலுத்தும்) அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளை யிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும். ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வ தில்லை.

என்னுடைய சிறைத் தோழர்களே! (உங்கள் கனவுகளுக்கான விளக்கம் இது தான் :) உங்களில் ஒருவர் தம் எசமானுக்கு (எகிப்து அரசனுக்கு மறுபடியும்) திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும். நீங்கள் எந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டீர் களோ அந்த விஷயம் தீர்மானிக்கப்பட்டு விட்டது. அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று யூசுஃப் கருதினாரோ அவரிடம், என்னைப் பற்றி உம் எசமானிடம் (எகிப்து அரசனிடம்) கூறுவீராக! என்று சொன்னார். ஆனால், (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எசமானிடம் (யூசுஃபைப் பற்றிக்) கூறவிடாமல் ஷைத்தான் அவரை மறதியிலாழ்த்திவிட்டான். ஆகவே, யூசுஃப் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.

(இந்நிலையில் ஒருநாள் எகிப்து) அரசன், நான் (கனவில்) ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டி ருப்பதையும், ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் கண்டேன். பிரதானிகளே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறக்கூடியவர் களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினார்.

(இவை) குழப்பமான கனவுகளாகும். இத்தகைய கனவுகளுக்கான விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்கள் அல்லர் என்று அவர்கள் கூறினார்கள்.

அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலை யடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூசுஃபை) நினைவு கூர்ந்து இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன்; என்னை (யூசுஃபிடம்) அனுப்பி வையுங்கள் என்று சொன்னார். (சிறையில் யூசுஃபைக் கண்ட) அவர், யூசுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெ-ந்த பசுக்கள் தின்று கொண்டி ருப்பதையும் பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்த கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எங்களுக்கு அறிவிப்பீராக. மக்கள் அறிந்துகொள்வதற்காக அவர்களிடம் நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது (என்று கூறினார்).

அதற்கு யூசுஃப் கூறினார்: நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (அமோக மாக) விவசாயம் செய்வீர்கள். பிறகு நீங்கள் அறுவடை செய்வதில் நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத் தவிர, மீதியை அதற்குரிய கதிர்களிலேயே விட்டுவையுங்கள். பின்னர் அதற்கப்பால் கடினமான ஏழு (பஞ்ச) ஆண்டுகள் வரும். அந்தப் பஞ்சமான ஆண்டு களுக்காக நீங்கள் முன்பே பத்திரப்படுத்தி வைத்துள்ளதில் சொற்பமானதைத் தவிர மற்றதை அந்தப் பஞ்ச ஆண்டுகள் தின்றுவிடும்.

பின்னர் அதற்கப்பால் ஓராண்டு வரும். அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழி(ந்து உட் கொண்டு சுகமாக வாழ்)வார்கள்.

(இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட் டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று அரசர் கூறினார். (அவருடைய) தூதர் யூசுஃபிடம் வந்த போது அவர், நீர் உம் எசமானிடம் திரும்பிச் சென்று, தம் கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன? என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் என்று கூறினார். (12:36-50)

(12:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இத்தகர' எனும் சொல் ஃதகர்த்து (நினைவுகூர்ந்தேன்) எனும் சொல்லின் இஃப்தஅல்' வாய்பாட்டில் அமைந்ததாகும். உம்மத்' எனும் சொல்லுக்கு பல்லாண்டு' என்று பொருள். இதே சொல் மற்றோர் ஓதும் முறையில் அமஹ்' என்றும் ஓதப்பட்டுள்ளது. (இதன்படி) இதற்கு மறதி' என்று பொருள் வரும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்: (12:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஉஸிரூன்' என்பதற்கு ஒ-வம், திராட்சை முத-யவற்றின் ரசத்தை அவர்கள் பிழிந்து கொண்டு (சுகவாழ்வில்) இருப்பார்கள் என்றுபொருள். (12:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஹ்ஸினூன்' எனும் சொல்லுக்குப் பத்திரப்படுத்தி பாதுகாத்துவைப்பார்கள்' என்று பொருள்.

6992 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் (சிறையில்) கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போன்றே) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக் கொண் டிருப்பேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7

பாடம் : 10

கனவில் நபி (ஸல்) அவர்களைக் காண்பது

6993 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான்.8

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

நபி (ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் ளநபி (ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்ன என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.9

6994 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான்.10 மேலும், இறை நம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

6995 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ் விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ் விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தர மாட்டான்.

இதை அபூகத்தத்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

6996 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார்.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இது மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

6997 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்க மாட்டான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 11

இரவில் காணும் கனவு12

இது குறித்து சமுரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.13

6998 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு (ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட) சொற்களின் திறவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. (எதிரிகளுக்கு என்னைப் பற்றி (மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நான் உறங்கிக் கொண்டிருக்கை யில் (கனவில்) பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசென்று (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்.14

6999அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மா நிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மா நிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள் வரை நீண்டுள்ள முடிகளில் நீ பார்த்தவற்றிலேயே மிக அழகான தலை முடி அவருக்கு இருந்தது; அந்த முடியை அவர் (படிய) வாரிவிட்டிருந்தார்; அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரு மனிதர்கள் மீது' அல்லது இரு மனிதர்களின் தோள்கள் மீது' சாய்ந்தபடி அவர் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். அப்போது நான், இவர் யார்? என்று கேட்டேன். அதற்கு, (இவர்தாம்) மர்யமின் குமாரர் மஸீஹ் (ஈசா) என்று பதிலளிக்கப் பட்டது. அப்போது நான் நிறைய சுருள்முடி கொண்ட வலக் கண் குருடான ஒரு மனிதனையும் பார்த்தேன். அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. அப்போது நான், யார் இவர்? என்று கேட்டேன். அதற்கு இவன் தான் தஜ்ஜால் எனும் மஸீஹ் என்று பதிலளிக்கப்பட்டது.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15

7000 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், இன்றிரவு எனக்குக் கனவு ஒன்று காட்டப்பட்டது... என்று கூறினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் முழு ஹதீஸையும் அறிவிக்கிறார்.16

இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஓர் அறிவிப்பில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக வந்துள்ளது.

மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் முதலில் இந்த ஹதீஸை ளநபி (ஸல்) அவர்கள் கூறியதாகன அறிவிக்காமல் இருந்தார்கள்; பின்புதான் அறிவிக்கலானார்கள்.

பாடம் : 12

பகலில் காணும் கனவு

இப்னு சீரின் (ரஹ்) அவர்கள், பகலில் காணும் கனவும் இரவில் காணும் கனவைப் போன்றது தான்  என்று கூறினார்கள்.17

இதை இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

7001 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள குபா'வுக்குச் சென்றால் தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்கு பேன் பார்த்து விடலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

7002 தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக்

கட-ன் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களாக' அல்லது மன்னர்களைப் போன்று' இருந்தார்கள் என்று கூறினார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தமது தலையைக் கீழே வைத்து (உறங்கி)விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், ஏன் சிரிகிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப் பட்டார்கள் என்று முன்புபோலவே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான், அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர் களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் (கடல் பயணம் செய்து அறப் போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள் என்று கூறினார்கள். ளநபி (ஸல்) அவர்கள் கூறியபடியேன உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர் களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற் கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்ட போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட் டார்கள்.18

பாடம் : 13

பெண்கள் காணும் கனவு19

7003 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நாடு துறந்து மதீனா வந்தடைந்த) முஹாஜிர்களுக்காக (அவர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதை முடிவு செய்ய) அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அப்போது உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். (அதன்படி) அவரை நாங்கள் எங்கள் வீட்டில் தங்கவைத்தோம். பிறகு அவர் நோயுற்று அந்த நோயிலேயே இறந்தும் போனார். அவரது உடல் குளிப்பாட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிடப் பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது நான் (உஸ்மான் அவர்களை நோக்கி), சாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் பொழியட்டும். அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன் என்று கூறினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள் ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டார்கள். அதற்கு நான், என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறாயின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்து வான்? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் இறந்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணை யாக! இவருக்கு நான் நன்மையையே எதிர்பார்க்கிறேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பது எனக்குத் தெரியாது என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று ஒரு போதும் கூறுவதேயில்லை.20

7004 மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மேற்கண்ட ஹதீஸில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்:

மேலும் இவரிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதும் எனக்குத் தெரியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இதைக் கேட்ட) நான் மிகவும் கவலைப் பட்டவாறே உறங்கிவிட்டேன். அப்போது (கனவில்) உஸ்மான் அவர்களுக்காக ஓர் ஆறு ஓடிக் கொண்டிருக்கக் கண்டேன். ஆகவே இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது அது அவரது நற்செயல் என்று (விளக்கம்) கூறினார்கள்.21

பாடம் : 14

கெட்ட (பொய்க்) கனவு ஷைத்தானிடமி ருந்து வருவதாகும்.

ஆகவே, ஒருவர் அத்தகைய கனவைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் துப்பிவிட்டு (அதன் தீய விளைவிலிருந்து) அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்.

7005 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ் விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் எவரேனும் தாம் விரும்பாத தீய கனவு கண்டால் உடனே அவர் தமது இடப் பக்கத்தில் துப்பட்டும். ஷைத்தா னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பும் கோரட்டும். அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட இயலாது.

இதை நபித்தோழர்களில் ஒருவரும் நபி (ஸல்) அவர்களின் குதிரைப் படை வீரர்களில் ஒருவருமான அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22

பாடம் : 15

கனவில் பாலைக் கண்டால்...?23

7006 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தினேன். இறுதியில் அது எனது நகக்கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன் என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்? என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், அறிவு' என்று பதிலளித்தார்கள்.24

பாடம் : 16

உறுப்புகள், அல்லது நகக்கண்கள் வழியாகப் பால் வழிந்தோடுவதைப் போன்று கனவு கண்டால்...?

7007 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தீருமளவுக்கு) அருந்தினேன். இறுதியில், அது என் உறுப்புகள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன் என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களைச் சுற்றிக் குழுமியிருந்த மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்? என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், அறிவு' என்று பதிலளித்தார்கள்

பாடம் : 17

கனவில் சட்டையைக் காண்பது

7008 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை), நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களு டைய) மார்பை எட்டக் கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டாத வையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் (தரையில்) இழுத்துக் கொண்டே செல்லும் அளவிற்கு (முழுநீளச்) சட்டையொன்றை அணிந்தவராக என்னைக் கடந்துசென்றார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், (இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், (அந்தச் சட்டைகள்) அவர்களு டைய மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும் என்று (விளக்கம் காண்பதாக) பதிலளித்தார்கள்.25

பாடம் : 18

கனவில் சட்டையை (தரையில்) இழுத்துச் செல்வதைப் போன்று காண்பது.

7009 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர் களுடைய) மார்பை எட்டக்கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் (தரையில்) இழுத்துக் கொண்டே செல்லும் அளவிற்கு (நீளமான) சட்டை யொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப் பட்டார் என்று சொன்னார்கள். மக்கள், (இதற்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், (அந்தச் சட்டைகள்) அவர்களுடைய மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும் என்று (விளக்கம் காண்பதாக) பதிலளித்தார்கள்.

பாடம் : 19

கனவில் பச்சை நிறம் மற்றும் பசுமையான பூங்காவைக் காண்பது.

7010 கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மதீனா பள்ளிவாசலில்) ஓர் அவையில் அமர்ந்திருந்தேன். அதில் சஅத் பின் மா-க் (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் (எங்களைக்) கடந்து சென்றார்கள். (அன்னாரைக் கண்ட) மக்கள், இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் என்று கூறினர். இதைக் கேட்ட நான் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களிடம் (தங்களைக் குறித்து) மக்கள் இப்படி இப்படிக் கூறினர் என்று சொன்னேன்.

(அதற்கு) அப்துல்லாஹ் பின் சலாம்

(ரலி) அவர்கள், அல்லாஹ் தூயவன். தமக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து அவர்கள் கூறுவது முறையல்ல. ளமக்கள் இவ்வாறு பேசிக்கொள் வதற்குக் காரணம், நபி (ஸல்) அவர்களது காலத்தில்ன நான் கண்ட கனவுதான். (அதில்) பசுமையான பூங்கா ஒன்றில் தூண் நடப்பட்டு இருந்தது. அத்தூணின் மேற்பகுதியில் பிடியொன்று காணப்பட்டது. அதன் கீழ் பகுதியில் சிறிய பணியாள் ஒருவர் இருந்தார். அப்போது (என்னிடம்) இதில் ஏறுங்கள் என்று சொல்லப்பட்டது. உடனே நான் (அதில்) ஏறி அந்தப் பிடியைப் பற்றினேன். பிறகு நான் இக்கனவு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் விவரித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் (பின் சலாம்), (இறைநம்பிக்கை எனும்) பலமான பிடியைப் பற்றியவராக இறப்பார் என்று சொன்னார்கள்.26

பாடம் : 20

கனவில் ஒரு பெண்ணை (முக்காட்டை) விலக்கிப் பார்ப்பது

7011 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்துகொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒரு மனிதர் (உடைய தோற்றித்திலிருந்த வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் இவர் உங்கள் (வருங்கால) மனைவி என்றார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமி ருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்கு வான் என்று சொல்லிக் கொண்டேன்.27

பாடம் : 21

கனவில் பட்டுத் துணியைக் காண்பது

7012 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: உன்னை நான் மணமுடிப்பதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவரிடம், (அந்தத் துணியை) விலக்குங்கள் என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்விடமி ருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்கு வான் என்று சொல்லிக் கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்து கொண்டி ருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் (இத்துணியை) நீக்குங்கள் என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ் விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான் என்று சொல்லிக் கொண்டேன்.28

பாடம் : 22

கனவில் சாவிகள் கையில் இருப்பதாகக் காண்பது29

7013 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நான் (நேற்றிரவு) உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங் களுடைய திறவுகோல்கள் என்னிடம் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப் பட்டன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள்' (ஜவாமிஉல் கலிம்) என்பதற்கு விளக்கமாவது: நபி (ஸல்) அவர்களது காலத்திற்கு முன்னால் ஏடுகளில் (நீளமான வார்த்தைகளால்) எழுதப்பட்டு வந்த பெரும் பெரும் கருத்துகளை(யும் தத்துவங்களையும்) ஓரிரு வார்த்தைகளில் ஒருங்கிணைத்து (இரத்தினச் சுருக்கமாக)ப் பேசுகின்ற ஆற்றலை நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான்-என எனக்குச் செய்தி எட்டியது.

பாடம் : 23

கனவில் பிடி, வளையம் ஆகியவற்றைப் பற்றுவதாகக் காண்பது

7014 அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பூங்காவொன்றில் இருப்பதைப் போன்று (கனவு) கண்டேன். அந்தப் பூங்காவின் நடுவே (இரும்புத்) தூண் இருந்தது. அந்தத் தூணின் மேற்பகுதியில் பிடி ஒன்றும் இருந்தது. அப்போது என்னிடம் இதில் ஏறுங்கள் என்று சொல்லப்பட்டது. நான் என்னால் இயலாதே என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையை (பின்னாலிருந்து) உயர்த்திவிட்டார். உடனே நான் (அதில்) ஏறி (அதன் மேற்பகுதியிலிருந்த) பிடியைப் பலமாகப் பற்றிக் கொண்டேன். நான் அதைப் பற்றிய நிலையில் இருக்கும்போதே (உறக்கத்திலிருந்து) விழித்துவிட்டேன். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்து நான் விவரித்த போது, அந்தப் பூங்கா இஸ்லாம் எனும் பூங்காவாகும். அந்தத் தூண் இஸ்லாம் என்னும் (பலமான) தூணாகும். அந்தப் பிடி (இறைநம்பிக்கையெனும்) பலமான பிடி யாகும். (ஆக,) நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்தைப் பலமாகப் பற்றியவராகவே இருப்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் (அந்தக் கனவிற்கான விளக்கத்தைக்) கூறினார்கள்.31

இந்த ஹதீஸ் இரு வழிகளில் வந்துள்ளது.

பாடம் : 24

கனவில் தலையணைக்குக் கீழே பெரிய கூடாரத்தின் தூண் இருப்பதைப் போன்று காண்பது.32

பாடம் : 25

கனவில் கெட்டியான பட்டைக் காண்பதும், சொர்க்கத்தில் நுழைவதைப் போன்று காண்பதும்.

7015 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களது காலத்தில்ன நான் கண்ட கனவில், எனது கையில் ஒரு பட்டுத் துணி இருப்பதைப் போன்றும், அதை நான் சொர்க்கத்தில் ஓரிடத்தில் எறியும்போதெல்லாம் அது என்னை அந்த இடத்திற்குத் தூக்கிக் கொண்டு பறந்ததைப் போன்றும் பார்த்தேன். இது குறித்து நான் (என் சகோதரி) ஹஃப்ஸா விடம் எடுத்துரைத்தேன்.

7016 அது குறித்து ஹஃப்ஸா, நபி (ஸல்) அவர்களிடம் விவரித்த போது நபி (ஸல்) அவர்கள், உன் சகோதரர் நல்ல மனிதர்' அல்லது அப்துல்லாஹ் நல்ல மனிதர்' என்று கூறினார்கள்.33

பாடம் : 26

கனவில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பது34

7017 அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

(மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும் போது இறை நம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. இறைநம்பிக்கையாளர் காணும் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். நபித்துவத்தில் அடங்கிய எந்த அம்சமும் பொய்யாகாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்தச் சமுதாயத்தார் காணும் கனவுகள் (எல்லாம்) உண்மை என்றே கூறுகின்றேன். கனவுகள் மூன்று வகைப்படும் என்று கூறப்படுவதுண்டு: 1. மன பிரமை (விழிப்பு நிலைக் கனவுகள்) 2. ஷைத்தானின் அச்சுறுத் தல் 3. அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி. ஆகவே, தாம் விரும்பாத கனவொன்றை எவரேனும் கண்டால் அதைப் பற்றி எவரிடமும் விவரிக்க வேண்டாம். மாறாக, எழுந்து அவர் (இறைவனைத்) தொழட்டும்.

தொடர்ந்து முஹம்மது பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

கழுத்தில் மாட்டப்படும் விலங்கைக் கனவில் காண்பது வெறுக்கப்பட்டுவந்தது. (ஏனெனில், அது நரகவாசிகளின் அடையாள மாகும்.) ஆனால், (கால்) விலங்கைக் காண்பது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. அது மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும் என்று (விளக்கம்) கூறப்பட்டது.

மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதன் அறிவிப்பாளர்களில் சிலர் (இப்னு சீரீன் அறிவித்த) மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் ஹதீஸுடன் சேர்த்துவிட்டுள்ளனர். ஆனாலும், அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (இங்கு ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ள) அறிவிப்பே தெளிவானதாகும்.

யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (கால்) விலங்கு குறித்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் கூறியது என்றே நான் கருதுகிறேன்.

அபூஅப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகின்றேன்:

கழுத்தில் பூட்டப்படும் விலங்குகளுக்கே அஃக்லால்' எனப்படும்.

பாடம் : 27

கனவில் நீரோட்டத்தைக் காண்பது36

7018 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் உறுதிமொழிப் பிரமாணம் அளித்திருந்த அன்சாரிப் பெண்களில் ஒருவரான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நாடு துறந்து மதீனா வந்தடைந்த) முஹாஜிர்கள் (யார் எவருடைய வீட்டில்) தங்குவ(து என்பதை முடிவு செய்வ)தற்காக அன்சாரிகள் சீட்டுக்குலுக்கிப்போட்ட போது உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் எங்கள் பொறுப்பில் வந்தார்கள். அப்பால் அவர் நோய்வாய்ப்பட்டார். அவருக்குச் சிகிச்சை அளித்தோம். இறுதியில் அவர் இறந்துபோனார். பிறகு நாங்கள் அவரை (நீராட்டி) அவரது ஆடையிலேயே கஃபனிட்டோம். இந்த நேரத்தில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், (உஸ்மானை நோக்கி) சாயிபின் தந்தையே! உம்மீது இறையருள் பொழியட்டும்; அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன் என்று சொன்னேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், (அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது) உனக் கெப்படித் தெரியும்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் மீதாணையாக! (இது பற்றி) எனக்குத் தெரியாது என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், (உஸ்மான் பின் மழ்ஊன்) இறந்துவிட்டார். அல்லாஹ் விடமிருந்து அவருக்கு நான் நன்மையையே எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீதாணை யாக! நான் அல்லாஹ்வின் தூதராயிருந்தும் என்னிடம் (மறுமையில்) எவ்வாறு நடந்து கொள்ளப்படும் என்பதோ, உங்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளப்படும் என்பதோ எனக்கே தெரியாது என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூறுவதேயில்லை.

பிறகு உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்குரிய நீரூற்று ஒன்று ஓடுவதை நான் (கனவில்) கண்டேன். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிச் சொன்ன போது நபி (ஸல்) அவர்கள் அது (வாழ்நாளில் அவர் புரிந்த) நற்செயல். அது (இன்று) அவருக்காக(ப் பெருக்கெடுத்து) ஓடுகிறது என்று சொன்னார்கள்.37

பாடம் : 28

கனவில் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதைப் போன்றும் தாகம் தீர மக்கள் அதை அருந்துவதைப் போன்றும் காண்பது.

இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிட மிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.38

7019 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரும் உமரும் வந்தார்கள். (நான் நீர் இறைத்து முடித்த பின்) அபூபக்ர் அவர்கள் வாளியை எடுத்து ஒரு வாளி நீரை' அல்லது இரு வாளிகள் நீரை' இறைத்தார்கள். அவர் இறைத்த போது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு அபூபக்ர் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக்கொள்ள, அது அவரது கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய புத்திசா-யான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு அவர் நீர் இறைத்தார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.39

பாடம் : 29

கனவில் கிணற்றிலிருந்து சோர்வுடன் ஓரிரு வாளிகள் நீர் இறைப்பதைப் போன்று காண்பது.

7020 அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் (ஆட்சிக் காலம்) தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவு குறித்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒரு கிணற்றைச் சுற்றி) மக்கள் திரள்வதை நான் (கனவில்) கண்டேன். அப்போது அபூபக்ர் அவர்கள் எழுந்து ஒரு வாளி நீரை' அல்லது இரு வாளிகள் நீரை' இறைத்தார்கள். அவர் இறைத்த போது சற்று சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பு அளிப்பானாக! பிறகு உமர் பின் அல்கத்தாப் எழுந்தார். (அந்த வாளியை அபூபக்ர் அவர்களின் கையிலிருந்து எடுத்துக் கொண்டார். அவரது கையில்) அது பெரியதொரு வாளியாக மாறியது. மனிதர் களில் அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய (அபூர்வத் தலைவர்) ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தாகம் தீரத் தாங்களும் நீரருந்தி தங்கள் ஒட்டகங்களுக்கும் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு அவர் நீர் இறைத்தார்.

7021 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டி ருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூகுஹாஃபா அவர்களின் புதல்வர் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அந்தக் கிணற்றிலிருந்து ஒரு வாளி நீரை' அல்லது இரு வாளிகள் நீரை' இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்த போது சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு அது மிகப்பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் புதல்வர் உமர் எடுத்துக் கொண்டார் உமர் இறைத்ததைப் போன்று இறைக்கின்ற (வ-மை மிக்க) ஒரு புத்திசா-யான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்த தில்லை. மக்கள் (தாகம் தீரத் தாங்களும் நீரருந்தி, தம் ஒட்டகங்களுக்கும் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு அவர் நீர் இறைத்தார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40

பாடம் : 30

கனவில் ஓய்வெடுப்பதைப் போன்று காண்பது

7022 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) ஒரு நீர்த் தடாகத்தின் அருகில் இருந்து கொண்டு மக்களுக்கு நான் நீர் புகட்டிக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் அவர்கள் என்னிடம் வந்து

எனக்கு ஓய்வளிப்பதற்காக என் கரத்திலிருந்த அந்த வாளியை வாங்கி இரண்டு வாளிகள் தண்ணீர் இறைத்தார்.41 அவர் இறைத்த போது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு கத்தாபின் புதல்வர் (உமர்) வந்தார். அவர் அபூபக்ர் அவர்களிடமிருந்து (அந்த வாளியை) எடுத்துக் கொண்டு மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி தங்கள் ஒட்டகங்களுக்கும் புகட்டிவிட்டுத்) திரும்பிச் செல்லும் வரை இறைத்துக் கொண்டேயிருந்தார். அப்போதும் தடாகத்தில் நீர் பொங்கிக் கொண்டிருந்தது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 31

கனவில் அரண்மனையைக் காண்பது

7023 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கு ஓர் அரண்மனைக்கு அருகில் ஒரு பெண் அங்கசுத்தி (உளூ) செய்து கொண்டிருந்தாள். நான், இந்த அரண்மனை யாருக்குரியது? என்று (வான வர்களிடம்) கேட்டேன். அவர்கள், உமர் பின் கத்தாபிற்குரியது என்று பதிலளித்தனர். அப்போது (அதனுள் நுழைந்து பார்க்க நினைத்தேன். ஆனால்) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, அதனுள் நுழையாமல் திரும்பி வந்து விட்டேன் என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள்.42

7024 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் (கனவில்) சொர்க்கத்திற்குள் நுழைந்து தங்கத்தாலான ஓர் அரண்மனையைக் கண்டேன். அப்போது நான் இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று (வானவர்களிடம்) கேட்டேன். அதற்கு அவர்கள், குறைஷியரி லுள்ள (உமர் பின் அல்கத்தாப் எனும்) ஒரு மனிதருக்குரியது' என்று பதிலளித்தார்கள். கத்தாபின் புதல்வரே! உமது ரோஷத்தைக் குறித்து நான் அறிந்துவைத்திருந்ததே அதற்குள் நுழையவிடாமல் என்னைத் தடுத்து விட்டது என்றார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள்.43

பாடம் : 32

கனவில் அங்கசுத்தி (உளூ) செய்வதைப் போன்று காண்பது44

7025 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், நான் தூங்கிக் கொண்டி ருந்த சமயம் (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கு அரண்மனையொன்றின் அருகில் ஒரு பெண் அங்கசுத்தி (உளூ) செய்து கொண்டிருந்தாள். நான், (வானவர் களிடம்) இந்த அரண்மனை யாருக்குரியது? என்றேன். அதற்கவர்கள், உமருக்குரியது என்று சொன்னார்கள். அப்போது (அதனுள் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வரவே (அதனுள் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன் என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் (ஆனந்தத்தால்) அழுதுவிட்டு அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்! என்றார்கள்.

பாடம் : 33

கனவில் (புனித) கஅபாவைச் சுற்றுவதைப் போன்று காண்பது45

7026 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருநாள்) நான் தூங்கிக் கொண்டி ருக்கையில் (கனவில்) நான் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருக்கக் கண்டேன். அப்போது மாநிறமான தலைமுடி படிந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதர் தமது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க இரு மனிதர்களுக்கிடையே (சாய்ந்தவராக கஅபாவைச் சுற்றிக் கொண்டு) இருந்தார். அப்போது நான், இவர் யார்? என்று கேட்டேன். மர்யமின் மைந்தர் (ஈசா) என பதிலளித்தனர். பிறகு நான் திரும்பிப் பார்த்த படியே சென்றபோது, அங்கு சிவப்பான, உடல் பருமனான, சுருட்டைத் தலை முடியுள்ள வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், இவன் யார்? என்று கேட்டேன். இவன்தான் தஜ்ஜால் என்று பதிலளித்தனர். (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு மிகவும் ஒப்பானவன் இப்னு கத்தன்தான். இப்னு கத்தன் குஸாஆ குலத்தின் பனுல் முஸ்த-க் குடும்பத்திலுள்ள ஒரு மனிதன் ஆவான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.46

பாடம் : 34

(ஒருவர் தாம் அருந்திய பா-ன்) மீதியைப் பிறருக்கு வழங்குவதைப் போன்று கனவு கண்டால்...?

7027 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) பால்கோப்பை ஒன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்த அது (என் நகத்தின் ஊடே வெளியேறி) ஓடக் கண்டேன். பிறகு மீதியை உமருக்குக் கொடுத்தேன்.

(அப்போது) மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்? என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், அறிவு' என்று பதிலளித்தார்கள்.47

பாடம் : 35

கனவில் அச்சம் அகன்று பாதுகாப்பு உணர்வு ஏற்படுதல்48

7028 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அல்லாஹ் நாடிய(விளக்கத்)தைக் (கனவுக்குக்) கூறுவார்கள். நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் இளம் வயது வா-பனாய் இருந்த சமயம் பள்ளிவாசலே என் வீடாய் இருந்தது. (அங்குதான் உறங்குவேன்.) அப்போது நான் மனத்துக்குள்ளே உனக்கு ஏதேனும் நன்மை நடப்பதாயிருந்தால் இவர்களைப் போன்று நீயும் (கனவு) கண்டிருப்பாய் என்று சொல்லிக்கொள் வதுண்டு. ஒரு (நாள்) இரவு நான் உறங்கப் போன போது, அல்லாஹ்வே! என் விஷயத்தில் நீ ஏதேனும் நன்மையை அறிந்திருந்தால் எனக்கும் கனவைக் காட்டு என்று பிரார்த்தித் தேன். நான் அவ்வாறே (உறக்கத்தில்) இருந்த போது (கனவில்) இரு வானவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் ஒவ்வொரு வருடைய கையிலும் முனை வளைந்த இரும்புத் தடி ஒன்று இருந்தது. அவர்கள் இருவரும் என்னை நரகத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் அவர்கள் இருவரிடையே இருந்து கொண்டு அல்லாஹ்விடம், அல்லாஹ்வே! நரகத்தைவிட்டு உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று இறைஞ்சிக் கொண்டி ருந்தேன்.

பிறகு தமது கையில் இரும்புத் தடி இருக்க இன்னொரு வானவர் என்னைச் சந்திக்கக் கண்டேன். அவர் (என்னிடம்) இனி ஒரு போதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்; நீங்கள் அதிகமாகத் தொழுதால் நீங்கள் நல்ல மனிதர்தாம் என்று சொன்னார். அப்போது அந்த வானவர்கள் (இருவரும்) என்னை நரகத்தின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தினர். கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டி ருந்தது. கிணற்றின் இரு பக்கவாட்டிலுமுள்ள கல் தூண்களைப் போன்று தூண்கள் அதற்கும் இருந்தன. ஒவ்வோர் இரண்டு தூண்களுக்கும் இடையே ஒரு வானவர் இருந்தார். அவருடைய கையில் முனை வளைந்த ஓர் இரும்புத் தடி இருந்தது. அந்த நரகத்தில் சங்கி-களால் பிணைக்கப்பட்டு தலை கீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த பல மனிதர்களை நான் கண்டேன். அதில் (எனக்கு அறிமுகமான) குறைஷியர் சிலரை நான் கண்டு கொண்டேன். பிறகு அவ்வானவர்கள் (சொர்க்கவாசிகளின் வழித்தடமான) வலப் பக்கத்தில் என்னைக் கொண்டுசென்றார்கள்.

7029 (தொடர்ந்து) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (நான் உறங்கி எழுந்ததும்) இதை ளஎன் சகோதரியும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமானன ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் நல்ல மனிதர்தாம்(; இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால்) என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இதைக் கேட்ட பின் இப்னு உமர்

(ரலி) அவர்கள் (இரவில்) அதிகமாகத் தொழுது கொண்டேயிருந்தார்கள்.49

பாடம் : 36

கனவில் வலப் பக்கமாகக் கொண்டு செல்லப்படுவதைப் போன்று காண்பது.

7030 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நான் மணமாகாத இளைஞனாக இருந்தேன். அப்போது நான் பள்ளிவாசலில்தான் இரவில் தங்குவேன். (நபித்தோழர்களில்) யாரேனும் கனவு கண்டால் (காலையில்) அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். (ஒரு நாள்) நான், அல்லாஹ்வே! உன்னிடம் எனக்கு நன்மை ஏதேனும் இருக்குமானால் எனக்கு ஒரு கனவைக் காட்டுவாயாக! அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு விளக்கம் கூற வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டு உறங்கினேன். அப்போது (கனவில்) என்னிடம் இருவானவர்கள் வந்து அவர்களி ருவரும் என்னை அழைத்துக் கொண்டு போவதைக் கண்டேன். அப்போது அவர்கள் இருவரையும் மற்றொரு வானவர் சந்தித்தார். அப்போது அவர் என்னிடம், இனி எப்போதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள். நீங்கள் நல்ல மனிதர் என்றார். பிறகு அவர்கள் இருவரும் என்னை நரகத்தை நோக்கி அழைத்துச் சென்றனர். கிணற்றின் சுற்றுச்சுவர் போன்று அதற்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட் டிருந்தது. அப்போது அதில் மனிதர்கள் பலர் இருந்தனர். அவர்களில் எனக்குத் தெரிந்த சிலரும் இருந்தார்கள். பிறகு அவர்கள் இருவரும் (சொர்க்கவாசிகளின் வழித்தடமான) வலப் பக்கத்திற்கு என்னைக் கொண்டு போனார்கள். விடிந்ததும் அதை நான் ளஎன் சகோதரியும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமானன ஹஃப்ஸா (ரலி) அவர் களிடம் சொன்னேன்.

7031 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ந பி (ஸல்) அவர்களிடம் அதை விவரித்த போது அவர்கள், அப்துல்லாஹ் (இப்னு உமர்) நல்ல மனிதர்தாம்; இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்) என்று சொன்னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இதைக் கேட்ட பின் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் அதிகமாகத் தொழக்கூடியவராயிருந்தார்கள்.50

பாடம் : 37

உறக்கத்தில் கோப்பையைக் காண்பது51

7032 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்தினேன். பின்னர் அதன் மீதியை கத்தாபின் புதல்வர் உமருக்குக் கொடுத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், அல்லாஹ்வின் தூதரே! பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்? என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் அறிவு' என்று பதிலளித்தார்கள்.52

பாடம் : 38

(பறக்காத) ஒன்று பறப்பதைப் போன்று கனவு கண்டால்...?

7033 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த அவர்களது கனவைப் பற்றி நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.

7034 அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக என்னிடம் கூறப் பட்டது: நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என் கைகளில் தங்கத்தாலான இரு காப்புகள் வைக்கப்பட்டன. நான் அவ் விரண்டையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக் கப்பட்டதுடன் அவற்றை வெறுக்கவும் செய்தேன். உடனே (அவற்றை ஊதிவிட) எனக்கு அனுமதியளிக்கப்பட்டது. நான் அவ்விரண்டையும் ஊத, அவை பறந்து போய்விட்டன. அவ்விரண்டும் (இனி வரவிருக்கும்) இரு பெரும் பொய்யர்களைக் குறிப்பதாக அதற்கு விளக்கமும் கண்டேன்.

அறிவிப்பாளர் உபைத்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

அவ்விருவரில் ஒருவன் யமன் நாட்டில் ஃபைரோஸ் என்பவரால் கொல்லப்பட்ட (அஸ்வத்) அல்அன்ஸீ' ஆவான்; மற்றொருவன் முசைலிமா ஆவான்.53

பாடம் : 39

(கனவில்) காளைமாடு அறுக்கப்படுவதாகக் கண்டால்...?

7035 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்கா நகரைத் துறந்து அங்கிருந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி யமாமாகவோ அல்லது ஹஜராகவோ இருக்கும் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால், (நான் கண்ட) அந்த நகரம் யஸ்ரிப் -மதீனா ஆகிவிட்டது. மேலும், அந்தக் கனவில் சில காளை மாடுகளைப் பார்த்தேன். (அவை அறுக்கப்பட்டன.) உஹுதுப் போர் நாளில் (கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த அந்தஸ்து (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையைவிட அவர்களுக்குச்) சிறந்ததாகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுதுப் பேரின் போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவை யாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நமது வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54

பாடம் : 40

கனவில் (வாயால்) ஊதுவதைப் போன்று காண்பது

7036 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் (மறுமை அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55

7037 மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் என்னிடம் கொண்டுவரப்பட்டன. அப்போது என் கைகளில் தங்கத்தாலான இரு காப்புகள் வைக்கப்பட்டன. அவ்விரண்டும் எனக்கு சுமையாக அமைந்ததுடன் மனவேதனையும் அளித்தன. அப்போது அவற்றை ஊதிவிடு மாறு (இறைவனின் தரப்பிலிருந்து) எனக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே நான் ஊத, அவையிரண்டும் பறந்து போய்விட்டன. அவ்விரண்டு (காப்புகளு)ம் நான் இருக்கும் போதே தோன்றியுள்ள ஸன்ஆவாசியும் யமாமாவாசியுமான இரு பெரும் பொய்யர் களைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்.56

பாடம் : 41

கனவில் ஒரு பொருளை ஒரு மூலையிலிருந்து மாற்றி மற்றோரிடத்தில் வைப்பதைப் போன்று கண்டால்...?

7038 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப் பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து மஹ்யஆ' எனுமிடத் திற்குச் சென்று தங்குவதைப் போன்று (கனவு) கண்டேன். மதீனா நகரின் பெரு நோய்கள் மஹ்யஆவுக்கு இடம்பெயரச் செய்யப்பட்டு விட்டதென்று அதற்கு நான் விளக்கம் கண்டேன். -மஹ்யஆ' என்பது (மதீனாவுக்கு வடக்கே இருந்த) அல்ஜுஹ்ஃபா' எனும் இடமாகும்.57

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.58

 

பாடம் : 42

(கனவில்) கறுப்பு நிறப் பெண்ணைக் காண்பது

7039 மதீனாவைப் பற்றித் தாம் கண்ட கனவு குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப் பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து மஹ்யஆ' சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம்பெயரச் செய்யப்பட்டு விட்டது என்று அதற்கு நான் விளக்கம் கண்டேன். -மஹ்யஆ'வே அல் ஜுஹ்ஃபா' எனுமிடமாகும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 43

(கனவில்) தலைவிரி கோலத்தில் பெண்ணைக் காண்பது

7040 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப் பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து மஹ்யஆ' சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம்பெயரச் செய்யப்பட்டு விட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். மஹ்யஆ' என்பது அல்ஜுஹ்ஃபா' எனும் இடமாகும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 44

கனவில் வாளை அசைப்பதைப் போன்று கண்டால்...?

7041 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கனவில் (என்) வாள் ஒன்றை அசைக்க அதன் முனை முறிந்துவிட்டதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின் போது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்ததைவிட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் மீண்டும் ஒன்று திரண்டதையும் குறித்தது.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.59

பாடம் : 45

கனவு குறித்து பொய்யுரைப்பது60

7042 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் காணாத கனவைக் கண்ட தாக வ-ந்து சொல்வாரானால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒரு போதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்' யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். எவர் (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறாரோ, அவர் அதற்கு

உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில் எவர் தமது கனவு குறித்து பொய் சொல்கின் றாரோ... என்று வந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில் எவர் உருவப்படம் வரைகிறாரோ... (காணாத) கனவைக் கண்டதாகச் சொல்கிறரோ... (மக்களின் பேச்சுகளை) செவிதாழ்த்திக் கேட்கிறாரோ... என்று வந்துள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், எவர் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ... எவர் (தாம் காணாத) கனவைக் கண்டதாகச் சொல்கிறாரோ... எவர் (உயிரினத்தின்) உருவப் படம் வரைகிறாரோ... என்று வந்துள்ளது.

7043 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமது கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 46

தாம் விரும்பாத ஒன்றை (கனவில்) ஒருவர் கண்டால் (யாரிடமும்) அதை அவர் தெரிவிக்க வேண்டாம். அதைக் குறித்து (எவரிடமும்) பேசவும் வேண்டாம்.

7044 அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் அபூகத்தாதா (ரலி) அர்கள் (இவ்வாறு) கூற நான் கேட்டேன்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் நபி (ஸல்) அவர்கள், நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன்றைக் கண்டால் தமது நேசத்துக் குரியவரைத் தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்த கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தமது இடப் பக்கத்தில்) மூன்று தடவை துப்பட்டும். அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒரு போதும் ஏற்படுத்திட முடியாது என்று கூறியதைக் கேட்டேன்.61

7045 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால் அது அல்லாஹ் விடமிருந்து வந்தது (என அறிந்து), அதற்காக அல்லாஹ்வை அவர் போற்றட்டும்! அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும்! அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும்; அதைப்பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.62

பாடம் : 47

கனவுக்கு விளக்கம் அளித்த முதல் நபர் தவறாக விளக்கம் சொன்னாலும் அது தான்  விளக்கம் என்பதை ஏற்க முடியாது.63

7046 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, (அல்லாஹ்வின் தூதரே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக் கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர் களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச்சேர்ந்தது. அப்போது (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்று விடக் கண்டேன். பிறகு மற்றொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக் கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (மூன்றாவ தாக) இன்னொரு மனிதரும் அதைப் பற்றிக் கொண்டு அதனுடன் மேலே சென்று விட்டார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது என்று சொன்னார்.

அப்போது (அங்கிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்துவருகின்ற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப் படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பண மாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள் என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்கள். நபி

(ஸல்) அவர்கள் (இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவ தில்லை) என்றார்கள்64

பாடம் : 48

அதிகாலைத் தொழுகைக்குப் பின் கனவுக்கு விளக்கமளித்தல்65

7047 சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா? என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.) ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, நடங்கள் என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரது தலைமாட்டில் ஒரு பாறாங்கல்லை வைத்துக் கொண்டு மற்றொரு மனிதர் நின்று கொண்டிருந்தார். அவர் அந்தக் கல்லைப் படுத்திருக்கும் மனிதரின் தலையில் போட, அது அவரது தலையை நசுக்கிவிடுகிறது. பின்னர் அந்தக் கல் அடித்தவரை நோக்கி உருண்டு வர, அவர் பின்தொடர்ந்து சென்று கல்லை எடுத்துக் கொள்கிறார். மறுபடியும் அவர் வந்து சேர்வதற்குள் படுத்திருந்தவரின் தலை முன்பிருந்ததைப் போன்றே நல்ல நிலைக்கு மாறிவிடுகிறது. அப்பால் மீண்டும் வந்து முதல் தடவை செய்ததைப் போன்றே அவர் மீண்டும் செய்கிறார்.

நான் அவர்கள் இருவரிடமும், அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்? என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் செல்லுங்கள், செல்லுங்கள் என்று கூறினர்.

அப்படியே நாங்கள் சென்று, மல்லாந்து படுத்திருந்த ஒரு மனிதரை அடைந்தோம். அவரது தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரது முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரது மூக்குத் துவாரத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். -அல்லது பிளந்தார்.- பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்? என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள் என்றனர்.

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப் பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும் போது அவர்கள் ஓலமிடுகின்றார்கள்.

நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான) வரிடம், இவர்கள் யார்? என்று கேட்டேன். அவர்கள், செல்லுங்கள், செல்லுங்கள் என்று என்னிடம் கூறினர்.

அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒரு மனிதர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தமது வாயைத் திறக்கின்றான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகின்றான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தனது வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக் கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், இவ்விருவரும் யார்? என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள் என்று கூறினார்கள்.

நாங்கள் அப்படியே நடந்து ஒரு அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகின்ற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், இவர் யார்? என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள் என்று கூறினர்.

அப்படியே நாங்கள் நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்ததால் அவரது தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒரு போதும் கண்டிராத அளவிற்கு ஏராள மான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்? என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள் எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒரு போதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், அதில் ஏறுங்கள் என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காணுகின்றவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகின்ற வற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர் கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள் என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. ஆகவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்து விட்டு) தங்களிடமிருந்து அந்த அசூசை நீங்கிவிட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பிவந்தனர்.

அவ்விருவரும் என்னிடம், இது (-இந்த நகரம்)தான் அத்ன்' எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விட மாகும் என்றனர். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்த போது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், இது உங்கள் இருப்பிடம் என்றனர். நான் அவர்களிடம், உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்துகொள் கிறேன் என்றேன். அவ்விருவரும், இப்போது முடியாது. நீங்கள் (மறுமையில்) அதில் நுழையத்தான் போகிறீர்கள் என்றனர்.

நான் அவ்விருவரிடமும், நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன? என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், (நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்:

கல்லால் தலை நசுக்கப்பட்டுக் கொண்டி ருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம்செய்து) எடுத்துக் கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தனது முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தமது வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக் கொண்டும் (கரையை நெருங்கும் போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றிவந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மா-க் ஆவார்.

அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர்.

இதை நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, முஸ்லிம்களில் சிலர், அல்லாஹ்வின் தூதரே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?) என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம் என்று பதிலளித்தார்கள்.66

(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விரு வரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறுபாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்துவிட்டவர்களாவர்; (பின்னர்) அவர் களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் (என்று கூறினர்).

November 7, 2009, 9:29 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top