88-இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர்

 அத்தியாயம் : 88

88-இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர் மற்றும் சத்தியத்தின் விரோதிகளை மன மாற்றம் காணச்செய்வதும் அவர்களுடன் போரிடுவதும்.1

பாடம் : 1

அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அடையும் பாவமும், இம்மையிலும் மறுமை யிலும் அவனுக்குரிய தண்டனையும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நிச்சயமாக (இறைவனுக்கு) இணை வைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும். (31:13)2

அல்லாஹ் கூறுகின்றான்:

நீர் (இறைவனுக்கு) இணைவைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டவாளர்களில் ஒருவராகிவிடுவீர். (39:65)

6918 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திட வில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர் எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித் தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் எங்களில் யார்தாம்

தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்க வில்லை? என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்குப் பொருள் அதுவன்று. (அது இணைவைப்பையே குறிக்கிறது.) நிச்சயமாக இணைவைப்பதே மிகப் பெரும் அநியாயமாகும் என்று (அறிஞர்) லுக்மான் கூறியதை(க் குர்ஆனில் 31:13ஆவது வசனத்தில்) நீங்கள் செவியுற வில்லையா?3

6919 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, அல்லது பொய் பேசுவது' ஆகியன பெரும்பாவங்களி லேயே மிகப் பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பொய் சாட்சி' என்பதை நபி (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

(இதைக் கண்ட) நாங்கள் அவர்கள் நிறுத்திக்கொள்ளலாமே! என்று கூறினோம்.4

இந்த ஹதீஸ் இரு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

6920அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! பெரும் பாவங்கள் எவை? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இறைவனுக்கு இணை கற்பிப்பது என்றார்கள். அவர், பிறகு எது? என்றார். நபி (ஸல்) அவர்கள், பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது என்றார்கள். அவர், பிறகு எது? எனக் கேட்க நபி (ஸல்) அவர்கள், பொய்ச் சத்தியம் என்றார்கள். நான், பொய்ச் சத்தியம் என்றால் என்ன? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது என்றார்கள்.5

 

6921 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த) வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படு வோமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், எவர் இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக் கப்பட மாட்டார். எவர் இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறாரோ அவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார் என்று கூறினார்கள்.

 

பாடம் : 2

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஆண், இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பெண் இருவரது சட்டமும் (ஒன்றா? வேறா? என்பது குறித்தும்) அவர்களை மனமாற்றம் காணச் செய்வது(குறித்து)ம்.

இப்னு உமர் (ரலி), ஸுஹ்ரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய பெண்ணுக் கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறினர்.6

அல்லாஹ் கூறுகின்றான்:

(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, இந்தத் தூதர் உண்மையானவர்தாம் என்று சாட்சியமும் அளித்த பிறகும், தெளிவான சான்றுகள் தம்மிடம் வந்துவிட்ட பிறகும் மறுத்துவிட்ட மக்களை அல்லாஹ் எப்படி நேர்வழியில் செலுத்துவான்? அல்லாஹ் (இத்தகைய) அக்கிரமக்கார சமூகத்தாரை நேரான வழியில் செலுத்த மாட்டான். இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மனிதர்களின் சாபமும் உண்டு என்பதே இவர்களுக்குரிய கூலியாகும். இ(ந்தச் சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவர். இவ்வேதனை அவர்களுக்குக் குறைக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்பட  மாட்டாது. ஆயினும், இதற்குப் பிறகு யார் பாவமன்னிப்புக் கோரி, தம்மைச் சீர்திருத்திக் கொண்டார்களோ, அத்தகையவர்களை நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக வும், (அவர்களுக்கு) மிக்க அருள் புரிபவனாகவும் இருக்கின்றான். நிச்சயமாக யார் இறைநம்பிக்கை கொண்ட பின் மறுத்துவிட்டு, அப்பால் (இறக்கும்வரை) இறைமறுப்பை அதிகமாக்கிக் கொண்டே சென்றனரோ, அவர்களின் (உதட்டளவிலான) பாவ மன்னிப்புக் கோரிக்கை ஒரு போதும் ஏற்கப்பட  மாட்டாது. இவர்கள்தாம் வழிகேடர்கள். (3:86-90)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் வேதம் வழங்கப்பட்டவர்களில் எந்தப் பிரிவி னருக்காவது வழிபட்டுவிடுவீர்களாயின், நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை அவர்கள் நிராகரிப்பவர்களாகத் திருப்பிவிடு வார்கள். (3:100)

நிச்சயமாக யார் இறைநம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் இறைநம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் அந்த நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களை (நேர்) வழியில் செலுத்துபவனாகவும் இல்லை. (4:137)

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தமது மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை;) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தைக் கொண்டு வருவான்; அவர்களை அவன் நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள்; அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; இறைமறுப்பாளர் களிடம் கடுமையாக இருப்பார்கள். (5:54)

எவர் இறைநம்பிக்கை கொண்ட பிறகு கட்டாயத்திற்குள்ளாகி, தமது உள்ளம் இறை நம்பிக்கையில் (சலனமின்றி) அமைதியுடன் இருக்கும் நிலையில் இறைமறுப்பை வெளி யிடுகிறாரோ அவரைத் தவிர (அதாவது அவர் மீது குற்றமில்லை). ஆனால், யார் மன நிறைவுடன் இறைமறுப்பை ஏற்கிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) மறுக்கும் கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான். இத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் ஆகிய வற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தாம் (தம் இறுதி முடிவு பற்றி) அலட்சியமாயிருப்பவர்கள். சந்தேக மின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைவார்கள். (16:106-109)

அவர்களுக்கு (மட்டும்) சக்தி இருந்தால், உங்களை உங்களது மார்க்கத்திலிருந்து திருப்பும்வரை உங்களுடன் அவர்கள் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். (அப்படி) உங்களில் எவரேனும் தமது மார்க்கத்திலிருந்து திரும்பி இறைமறுப்பாள ரான நிலையில் இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துபோகும். இவர்கள் நரகவாசிகள்தாம். அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (2:217)

6922 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டுவரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து(விடுமாறு உத்தர)விட் டார்கள்.7 இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நானாக இருந்திருந்தால் அவர் களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில்,

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்' என்று கூறினார்கள். மாறாக, நபி (ஸல்) அவர்கள், எவர் தமது மார்க்கத்தை மாற்றிக்கொள் கிறாரோ அவருக்கு மரணதண்டனை அளியுங்கள்' என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்தி ருப்பேன் என்று சொன்னார்கள்.8

6923அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு முறை நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப் பக்கத்திலும் இன்னொருவர் என் இடப் பக்கத்திலும் இருந்தனர். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் ளநபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறுன கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூமூசாவே' அல்லது அப்துல்லாஹ் பின் கைஸே!' என்றார்கள். நான், சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தமது மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவு மில்லை; இவர்கள் பதவி கேட்பார்கள்

என்று எனக்குத் தெரியவும் செய்யாது என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர் களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டி ருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்கள், எவர் பதவியை விரும்பு கிறாரோ அவருக்கு நாம் பதவி கொடுப்ப தில்லை' அல்லது ஒரு போதும் கொடுக்க மாட்டோம்'. ஆகவே, அபூமூசாவே' அல்லது அப்துல்லாஹ்பின் கைஸே' நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள் என்று சொன்னார்கள்.

ளஅவ்வாறே அபூமூசா (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.ன பிறகு அபூமூசா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களிடம் சென்றபோது (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூமூசா (ரலி) அவர்கள் எடுத்துவைத்து வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்) என்று சொன்னார்கள். அப்போது அபூமூசா (ரலி) அவர்களின் அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, இவர் யார்? என்று முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள் இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டுவெளியேறி) யூதராகி விட்டார் என்றார்கள். ளமீண்டும் அபூமூசா (ரலி) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்ன அமருங்கள் என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், இல்லை. அல்லாஹ் வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரணதண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்) என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரண தண்டனையளிக்கும்படி (அபூமூசா -ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.

பிறகு அவர்கள் இருவரும் இரவில் நின்று வணங்குவது குறித்து பேசிக் கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர் ளமுஆத்

(ரலி) அவர்கள்ன நான் (இரவில் சிறிது நேரம்) நின்று வணங்குகிறேன். (சிறிது நேரம்) உறங்குகிறேன். நின்று வணங்குவதற்கு நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார்கள்.9

பாடம் : 3

மார்க்கத்தின் கட்டாயக் கடமைகளை ஏற்க மறுப்போருக்கு மரண தண்டனை வழங்குவதும், அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்கள் என்று தீர்மானிப்பதும்10

6924 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து, அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபுகளில் சிலர் இறைமறுப்பாளர்களாய் மாறினர்.11 ளஅவர்கள் மீது போர் தொடுக்கப்போவதாக அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.ன அப்போது உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் அவர்களே! மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வணக்கத்திற்குரியவர் அல்லாஹு வைத் தவிர வேறெவறுமில்லை என்று மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எவர் வணக்கத்திற்குரியவர் அல்லாஹுவைத் தவிர வேறெவருமில்லை எனக் கூறுகின்றாரோ அவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தன் உயிருக்கும் செல்வத்திற்கும் பாதுகாப்புப் பெறுவார். அவருடைய (அந்தரங்க எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்குரிய) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறியுள்ளார்களே? என்று கேட்டார்கள்.

6925 அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகைக் கும் ஸகாத்திற்கும் இடையே பாகுபாடு காட்டுபவர்களுடன் நான் நிச்சயம் போரிடுவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ் வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (ஸகாத்தாக) வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை மக்கள் என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன் என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் கொடுக்க மறுத்தவர்கள் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்)படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அது தான்  சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்து கொண்டேன் என்று கூறினார்கள்12

பாடம் : 4

இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் பிற மதத்தாரோ மற்றவர்களோ நபி (ஸல்) அவர்களை ஏசும் வகையில் அஸ்ஸாமு அலைக்கும்' (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்பதைப் போன்ற வார்த்தைகளை சாடைமாடையாகக் கூறினால்...?13

6926 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூதன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது,

அஸ்ஸாமு அலைக்க' (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வ அலைக்க' (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), அவன் என்ன சொல்கிறான் என்று உஙகளுக்குத் தெரியுமா? என்று கேட்டுவிட்டு, அவன் அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான் என்றார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் (அதற்கு பதிலாக) நீங்கள் வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிடுங்கள் என்றார்கள்.

6927 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒரு குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டு அஸ்ஸாமு அலைக்க' (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சாபமிட்டு முகமன்) கூறினர். உடனே நான் வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் ஏற்படட்டும்) என்று பதில் (முகமன்) சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங் களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகின்றான் என்று கூறினார்கள். நான் அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், நான்தான் வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று (திருப்பிக்) கேட்டார்கள்.14

6928 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு யூதர்கள் சலாம் (முகமன்) சொன்னால் ஸாமுன் அலைக்க (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்கு பதில் சலாமாக) அலைக்க (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று நீங்கள் சொல்லிவிடுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 5

6929 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத் துக் கொண்டிருப்பதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட்டார்கள். அப்போது அவர் தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர் களாயிருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.15

பாடம் : 6

காரிஜிய்யா மற்றும் முல்ஹிதீன் ஆகியோருக் கெதிரான ஆதாரங்களை நிலைநாட்டிய பின் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது.16

அல்லாஹ் கூறுகின்றான்:

எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்தாத வரை அவர்களை அவன் வழிதவறச் செய்வதில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிந்தவன். (9:115)

இப்னு உமர் (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்களை அல்லாஹ்வின் படைப்பு களிலேயே மிகவும் தீயவர்கள் என்று கருதி வந்தார்கள். மேலும், இறைமறுப்பாளர்கள் தொடர்பாக அருளப்பெற்ற இறைவசனங் களை இறைநம்பிக்கையாளர்கள் மீது திணிக்கும் அளவுக்கு இவர்கள் சென்று விட்டார்கள் என்றும் சொன்னார்கள்.

6930 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, நபி அவர்கள் மீது புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள (போர் போன்ற) ஒரு விவகாரம் தொடர்பாக நான் உங்களிடம் பேசினால், போர் என்பது சூழ்ச்சி தான் (என்பதை நினைவில் கொள்ளுங்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் குறைந்த வயதுடைய இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப் பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். வேட்டைப் பிராணியி(ன் உட-)லிருந்து (வேடன் எய்த) அம்பு (அதன் மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களுடைய இறை நம்பிக்கை அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் உயிரோடுவிடாதீர்கள். ஏனெனில், அவர்களை அழிப்பது, அதைச் செய்தவர்களுக்கு மறுமைநாளில் நற்பலனாக அமையும்.17

6931 அபூசலமா (ரஹ்) மற்றும் அதாஉ பின் யசார் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று ஹரூரிய்யாக் கூட்டத்தார் (காரிஜிய்யாக்கள்) பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியேற்றுள்ளீர்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் ஹரூரிய்யாக்கள் என்றால் யாரென்று எனக்குத் தெரியாது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டுள்ளேன் என்றார்கள்:

இந்தச் சமுதாயத்திற்கிடையே ஒரு கூட்டத்தார் கிளம்புவர். -(சமுதாயத்திற் கிடையே என்று கூறினார்களே தவிர,) இந்தச் சமுதாயத்திலிருந்து என்று கூறவில்லை- அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையை அற்பமான தாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களது வழிபாடு கலை கட்டியிருக்கும்.) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது தொண்டையை' அல்லது தொண்டைக் குழியை'த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் தைக்கின்ற) அம்பு (உட-ன் மறுபுறம் வெளிப்பட்டு) சென்றுவிடுவதைப் போன்று இந்த மார்க்கத்தைவிட்டு அவர்கள் வெளியேறிவிடுவார்கள். அம்பெய்தவர் அந்த அம்பை; அதன் முனையை; அதன் (முனையைப் பொருத்தப் பயன்படும்) நாணைப் பார்ப்பார். அவர் (இவ்வாறு) சந்தேகப்பட்டு நாண் பொருத்தப்படும் இடம்வரை, அவற்றில் இரத்தம் ஏதேனும் பட்டுள்ளதா? என்று பார்ப்பார். (ஆனால், எந்த அடையாளமும் இராது.)18

6932 முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் பாட்டனார்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்கள் (காரிஜிய்யாக்கள்') குறித்துக் கூறிய போது, (வில்லில் இருந்து புறப்பட்ட) அம்பு வேட்டைப் பிராணியின் உடலில் இருந்து வெளியேறுவதைப் போன்று இவர்கள் இஸ்லாத்தை விட்டும் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்று விடுவார்கள்' என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 7

(இதயங்களிடையே) நெருக்கத்தை ஏற்படுத்தவும் தம்மைவிட்டு மக்கள் விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் காரிஜிய்யாக்களைக்கூட ஒருவர் கொல்லாமல் விட்டுவிடுவது.

6933 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளஅலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து அனுப்பியிருந்த தங்கக் கட்டியைன நபி (ஸல்) அவர்கள் (மக்களில் சிலருக்குப்) பங்கிட்டுக் கொண்டிருந்த போது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் தில் குவைஸிரா' என்பவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உனக்குக் கேடுதான். (இறைத்தூதராகிய) நானே நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்ளப் போகிறார்கள்? என்று கேட்டார்கள். (அப்போது அங்கிருந்த) உமர் (ரலி) அவர்கள், என்னை விடுங்கள்; இவர் கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இவரை விட்டுவிடுங்கள். இவருக்குத் தோழர்கள் சிலர் உள்ளனர். அவர் களுடைய தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும் அவர்களுடைய நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவை

யாகக் கருதுவீர்கள். வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உட-ன் மறுபுறம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கின்றதா? என்று) அம்பின் இறகு கூர்ந்து பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் முனை பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் நாண் பார்க்கப் படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப் படும். அதிலும் எதுவும் காணப்படாது. அம்பானது, சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்திக் கொண்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவரது இரு கரங்களில்' அல்லது இரு மார்பகங்களில்' ஒன்று பெண்ணின் கொங்கை போன்று' அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்று' இருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படு வார்கள் என்று சொன்னார்கள்.

நான் இந்த நபிமொழியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாரை (நஹ்ரவான் எனுமிடத்தில்) அலீ (ரலி) அவர்கள் கொன்றார்கள். அப்போது நானும் அலீ (ரலி) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதன் ளஅலீ (ரலி) அவர்கள் முன்னிலையில்ன கொண்டுவரப்பட்டான். நபி (ஸல்) அவர்கள் அறிவித்த வர்ணனையின்படியே அவன் இருந்தான். அவன் விஷயத்தில்தான் 9:58 ஆவது இறைவசனம் அருளப்பெற்றது என்றும் உறுதி கூறுகிறேன்.19

6934 யுசைர் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி (ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தமது கையை நீட்டிய வாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உட-ன் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.

பாடம் : 8

ஒரே வாதத்தை முன்வைத்து இரு குழுவினர் தம்மிடையே போரிட்டுக்கொள்ளாத வரை (உலக) முடிவுநாள் வராது எனும் நபிமொழி

6935 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரே வாதத்தை முன்வைக்கும் இரு குழுவினர் தம்மிடையே போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவுநாள் வராது.20

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.21

 

பாடம் : 9

(தமது செயலுக்குத்) தகுந்த விளக்கம் அளிப்போர் குறித்து வந்துள்ளவை.22

6936 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் அல்ஃபுர்கான்' எனும் (குர்ஆன்) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை நான் செவியுற்றேன். அவரது ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்ட போது, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்கு களில் அதை அவர் ஓதிக் கொண்டிருந்தார். உடனே தொழுகையில்வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை காத்திருந்தேன். (அவர் தொழுது முடித்த) பிறகு அவரது மேல்துண்டை அல்லது எனது மேல்துண்டைக்' கழுத்தில் போட்டுப் பிடித்து, இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்? என்று கேட்டேன். அவர் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் எனக்கு ஓதிக் காண்பித்தார்கள் என்று பதிலளித்தார். நீர் பொய்சொல்லிவிட்டீர். அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் ஓதிய இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வேறு விதமாக) எனக்கு ஓதிக் காட்டினார்கள் என்றேன்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துக் கொண்டு சென்று அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு ஓதிக்காட்டாத பல (வட்டார) மொழி வழக்குகளில் அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். தாங்கள் எனக்கு அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை (வேறு விதமாக)ச் சொல்லிக்கொடுத்தீர்கள் என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமரே! இவரை விடுங்கள் என்று கூறிவிட்டு, ஹிஷாமே! நீங்கள் ஓதுங்கள்! என்றார்கள். அவர் என்னிடம் ஓதியதைப் போன்றே நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர்

(ஸல்) அவர்கள் இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது என்று கூறினார்கள். பிறகு (என்னை நோக்கி) உமரே! நீங்கள் ஓதுங்கள் என்று சொன்னார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. திண்ணமாக இந்தக் குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறன்றது. ஆகவே, உங்களுக்கு அதில் எது சுலபமானதோ அதை ஓதிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.23

6937 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திட வில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு எனும் (6:82ஆவது) இறை வசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் எங்களில் யார்தாம் தமக்குத்தாமே அநீதியிழைக்காதவர்? என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கின்ற அர்த்தமில்லை. லுக்மான் அவர்கள் தம் புதல்வருக்குக் கூறியதைப் போன்றே இங்கு பொருள்கொள்ள வேண்டும். என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! நிச்சயமாக! இணை கற்பிப்பது தான்  மிகப்பெரும் அநீதியாகும் என்று அவர் கூறினார். (31:13)24

6938 இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனது இல்லத்தில் தொழுமிடம் அமைத்துக் கொடுப்பதற்காக) என்னிடம் (நண்)பகலில் வந்தார்கள். (அப்பகுதி மக்களில் கணிசமா னோர் அங்கு குழுமிவிட்டனர்.) அப்போது ஒரு மனிதர், மா-க் பின் துக்ஷுன் எங்கே? (அவர் மட்டும் நபியவர்களைச் சந்திக்க வரவில்லையே!) என்று கேட்டார். அதற்கு எங்களில் ஒருவர், மா-க் பின் துக்ஷுன் ஒரு முனாஃபிக் (நயவஞ்சகர்); அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (அதனால்தான் அவர் நபியைக் காண இங்கு வரவில்லை) என்று கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்துக்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறுவதை நீங்கள் செவியேற்கவில்லையா? என்று கேட்டார்கள். அந்த மனிதர், ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், மறுமை நாளில் எந்த அடியார் லாயிலாஹ இல்லல்லாஹ்' எனும் (ஏகத்துவ) வாக்கியத்துடன் செல்கிறாரோ அவர் மீது இறைவன் நரகத்தை தடை செய்யாதிருப்ப தில்லை என்று சொன்னார்கள்.25

6939 சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ளஉஸ்மான் லி(ரலி) அவர்களுடைய ஆதரவாளர்களில் ஒருவரானன அபூஅப்திர் ரஹ்மான் அவர்கள் ளஅலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரானன ஹிப்பான் பின் அதிய்யா அவர்களிடம் சர்ச்சையிட்டுக் கொண்டு, உங்கள் தோழர் அலீ அவர்களுக்கு இரத்தம் சிந்தச்செய்யும் துணிவைக் கொடுத்தது எது? என்று நான் உறுதிபட அறிவேன் என்று கூறினார்கள். ஹிப்பான் அவர்கள், தந்தையற்றுப் போவாய்! (அலீ அவர்களுக்குத் துணிவைத் தந்த) அந்த விஷயம் எது? என்று கேட்டார்கள். அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள், அது ஒரு சம்பவம். அதனை அலீ (ரலி) அவர்களே கூற நான் கேட்டுள்ளேன் என்று சொன்னார்கள். ஹிப்பான் அவர்கள், என்ன சம்பவம் அது? என்று கேட்க, (பின்வருமாறு) அபூஅப்திர் ரஹ்மான் அவர்கள் கூறினார்கள்:

ளஅலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:ன

குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களையும் அபூமர்ஸத் (ரலி) அவர்களையும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் ரவ்ளத்து ஹாஜ்' எனும் இடம் வரை செல்லுங்கள். -இவ்வாறு ஹாஜ்' என்றே அபூஅவானா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூசலமா கூறுகிறார்கள். (மற்ற அறிவிப்புகளில் ரவ்ளத்து காக்' என வந்துள்ளது)- அங்கு ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (மக்காவிலிருக்கும்) இணை வைப்பாளர்களுக்கு எழுதிய (நமது இரகசிய திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்றிருக்கும். அதை (அவளிடமிருந்து கைப்பற்றி) என்னிடம் கொண்டுவாருங்கள் என்று கூறி அனுப்பினார்கள். உடனே நாங்கள் எங்கள் குதிரைகளின் மீதேறிச் சென்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட அந்த இடத்தில் தனது ஒட்டகம் ஒன்றின் மீது அவள் செல்வதைக் கண்டோம். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றிகொள்வதற்காக) மக்காவாசிகளை நோக்கிப் புறப்படவிருப்பது தொடர்பாக ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (அக்கடிதத்தில்) மக்காவாசிகளுக்கு எழுதியிருந்தார். நாங்கள் (அவளிடம்), உன்னிடம் உள்ள அந்தக் கடிதம் எங்கே? என்று கேட்டோம். அவள், என்னிடம் கடிதம் எதுவுமில்லை என்று சொன்னாள். உடனே நாங்கள் அவள் அமர்ந் திருந்த அந்த ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அவளிருந்த சிவிகைக்குள் (கடிதத்தைத்) தேடினோம். (அதில்) எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என் சகாக்கள் இருவரும் இவளிடம் எந்தக் கடிதத்தையும் நம்மால் காணமுடியவில்லையே என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று திட்டவட்டமாக நாம் அறிந்துள்ளோம் என்று கூறிவிட்டு, சத்தியம் செய்வதற்கு தகுதிபெற்ற (இறை)வன் மீது ஆணையிட்டு, ஒன்று நீயாக அதை வெளியே எடுக்க வேண்டும். அல்லது நான் உன்னை (சோதனையிடுவதற்காக உனது ஆடையைக்) கழற்ற வேண்டியிருக்கும் என்று சொன்னேன். இதைக் கேட்ட அவள் தனது இடுப்பை நோக்கி(த் தனது கையை)க் கொண்டு சென்றாள். அவள் (இடுப்பில்) ஒரு துணி கட்டியிருந்தாள். (அதற்குள்ளேயிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்தை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தோம். ளபிறகு அதை நான் நபி (ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.ன

அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன் என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாத்திபே! ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று கேட்டார்கள். ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்ளாமலிருக்க எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? (நான் இறைநம்பிக்கையைக் கைவிட்டுவிடவில்லை.) மாறாக, மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் ஏதேனும் செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் (அங்குள்ள பலவீனமான) என் உறவினர் களையும் என் செல்வங்களையும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன்; தங்களுடைய (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களுயை குடும்பத்தாரையும் செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் அங்கு உள்ளனர் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், இவர் உண்மை பேசினார். இவர் குறித்து நல்லதையே சொல்லுங்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதரே! இவர் அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் இல்லையா? உங்களுக்கு என்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். சொர்க்கத்தை உங்களுக்கு நான் உறுதியாக்கிவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரில் மூழ்கின. அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னார்கள்.26

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: (அந்த இடத்தின் பெயர்) ரவ்ளத்து காக்' என்பதே சரியான தகவலாகும்.

ஆயினும், ரவ்ளத்து ஹாஜ்' என்றே அபூஅவானா கூறுகிறார். இது திரிபாகும். இது ஓர் இடத்தின் பெயராகும். ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்கள் காக்' என்றே குறிப்பிடுகிறார்கள்.

May 27, 2010, 8:47 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top