75-நோயாளிகள்

 

அத்தியாயம் : 75

75-நோயாளிகள்1

பாடம் : 1

நோய் (பாவங்களுக்கு) ஒரு பரிகாரம் என்பது குறித்து வந்துள்ளவை.

அல்லாஹ் கூறுகின்றான்:

ஒரு தீமையைப் புரிகின்றவர் அதற்குரிய தண்டனை வழங்கப்பெறுவார். (4:123)2

5640 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை.

இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5641,5642 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

5643 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.3

இதை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

5644 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின் போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறு தான்). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும் போது அதை (ஒரேடியாக) உடைத்து(சாய்த்து)விடுகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5645 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின் றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.4

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 2

கடுமையான நோய்

5646 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.

இந்த ஹதீஸ் இரு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

5647 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டி ருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (அல்லாஹ்வின் தூதரே!), தங்களுக்கு இதனால் இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை என்று கூறினார்கள்.

பாடம் : 3

மக்களிலேயே கடுமையான (சத்திய) சோதனைக்குள்ளானோர் இறைத்தூதர்கள் ஆவர். அடுத்து (அவர்களைப் போன்ற) சிறந்தவர்கள். பிறகு (அவர்களைப் போன்ற) சிறந்தவர்கள்.5

5648 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக் கிறீர்களே! என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ஆம்; உங்களில் இரு மனிதர்கள் காய்ச்சலால் அடைகின்ற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகின்றேன் என்று சொன்னார்கள்.

நான், (இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை என்று கூறினார்கள்.

பாடம் : 4

நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரிப்பது அவசியமாகும்.6

5649 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியி டமிருந்து) விடுவியுங்கள்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7

5650 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைக் (கடை பிடிக்கும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங் களைத் தடை செய்தார்கள்: (ஆண்கள்) தங்க மோதிரம், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்தப் பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும், பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, மென்பட்டுத் திண்டு (மீஸரா) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென் றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள். ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்லும் படியும் நோயாளியை நலம் விசாரிக்கும் படியும் சலாமைப் பரப்பும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.8

பாடம் : 5

மயக்கமுற்றவரை நலம் விசாரிப்பது9

5651 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டி ருந்தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளு) செய்துவிட்டு அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அங்கே (என் முன்னே) நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தின் விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. இறுதியில் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான இறை வசனம் இறங்கிற்று.10

பாடம் : 6

வ-ப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்குரிய சிறப்பு.

5652 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், சொர்க்கவாசியான ஒரு பெண் மணியை உங்களுக்குக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான், ஆம்; (காட்டுங்கள்) என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வ-ப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப் படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வ-ப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக் காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

.... அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர்தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.11

பாடம் : 7

கண்பார்வை இழந்தவருக்குரிய சிறப்பு

5653 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானே யானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.

(அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்' என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும்.

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 8

பெண்கள், (நோயுற்ற) ஆண்களை நலம் விசாரிப்பது.

உம்முத் தர்தா (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சேர்ந்த அன்சாரி களில் ஒருவரை (அவர் நோய்வாய்ப்பட் டிருந்த போது) நலம் விசாரிக்கச் சென்றார்கள்.

5654 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்த போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பிலால் (ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே எப்படியிருக்கிறீர்கள்? என்று (நலம்) விசாரித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் காணும் போது (பின்வரும் கவிதையைக்) கூறுவார்கள்:

காலை

வாழ்த்துக் கூறப்பெற்ற

நிலையில்

ஒவ்வொரு மனிதனும்

தம் குடும்பத்தாரோடு

காலைப் பொழுதை அடைகிறான்...........

(ஆனால்,)

மரணம்-அவன் செருப்பு வாரைவிட

மிக அருகில் இருக்கிறது (என்பது

அவனுக்குத் தெரிவதில்லை).

பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் விட்டதும்,

இத்கிர்' (நறுமணப்) புல்லும்

ஜலீல்' கூரைப் புல்லும்

என்னைச் சூழ்ந்திருக்க...........

(மக்காவின்) பள்ளத்தாக்கில்

ஒரு இராப் பொழுதையேனும்

நான் கழிப்பேனா.......... ?

மிஜன்னா' எனும்

(மக்காவின் இனிப்புச் சுனை) நீரை

ஒரு நாள் ஒரு பொழுதாவது

நான் பருகுவேனா........... ?

(மக்கா நகரின்)

ஷாமா, தஃபீல் மலைகள்

(இனி எப்போதேனும்)

எனக்குத் தென்படுமா........... ?

என்று (கவிதை) கூறுவார்கள்.

உடனே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்கள் இருவரு டைய நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல், அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இறைவா! மேலும் இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! அதன் (அளவைகளான) ஸாஉ', முத்(து)' ஆகியவற்றில் (-எங்கள் உணவில்) எங்களுக்கு நீ சுபிட்சத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை ஜுஹ்ஃபா' எனுமிடத்தில் (குடி) அமர்த்திவிடுவாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள்.12

பாடம் : 9

குழந்தைகளை நலம் விசாரித்தல்

5655 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் புதல்வியார் (ஸைனப்-ரலி) அவர்கள் தம்முடைய மகள் (அல்லது மகன்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், எனவே, அங்கு வந்து சேர வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் நானும் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களும் இருந்தோம். -உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இருந்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.-உடனே நபி (ஸல்) அவர்கள் தம் புதல்விக்கு சலாம் (முகமன்) சொல்லி அனுப்பியதோடு, அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, நன்மையை எதிர்பார்ப்பாயாக; பொறுமையைக் கைக்கொள்வாயாக எனக் கூறியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாக வரவேண்டுமென மீண்டும்) கூறியனுப்பினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர் களுடன் எழுந்தோம்.

(தம் புதல்வியின் வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களின் மடியில் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த குழந்தை கிடத்தப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களின் இரு கண்களும் நீர் சொரிந்தன. உடனே அவர்களிடம் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என்ன இது? (அழுகிறீர்களே!) என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். அல்லாஹ் தன் அடியார் களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான் என்று சொன்னார்கள்.13

பாடம் : 10

கிராமவாசிகளை நலம் விசாரித்தல்

5656 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்.-நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அந்த நோயாளியிடம், கவலைப் பட வேண்டாம். இறைவன் நாடினால், (இது உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும் என்று கூறுவார்கள்.- ளதமது அந்த வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம் கூறிய போதுன அந்தக் கிராமவாசி, நான் தூய்மை பெற்று

விடுவேன் என்றா சொன்னீர்கள்! (சாத்தியம்) கிடையாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகித் தகிக்கின்ற காய்ச்சலாகும். இது அவரை மண்ணறைகளைச் சந்திக்கவைக்கும் என்று சொன்னார். அப்போது நபி ஸல்) அவர்கள், அப்படியென்றால் ஆம் (அவ்வாறே நடக்கும்) என்று கூறினார்கள்.14

பாடம் : 11

இறைவனுக்கு இணைவைப்போரை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரித்தல்.

5657 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களின் அடிமையொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்துவந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்ற நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள் என்று சொன்னார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.15

முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தம் பெரிய தந்தை) அபூதா-ப் அவர்களுக்கு மரண வேதனை வந்த போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள்.16

பாடம் : 12

நோயாளி ஒருவரை நலம் விசாரிக்க வந்த இடத்தில் தொழுகை நேரம் வந்துவிட, வந்தவர்களுக்கு நோயாளி கூட்டுத் தொழுகை நடத்துவது.

5658 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சிலபேர் வந்தனர். (அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே) நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடியே அவர்களுக்குத் தொழுவித்தார்கள். மக்களோ நின்றபடி தொழலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் உட்காருங்கள்' என்று மக்களுக்கு சைகை செய்தார்கள். தொழுகை முடிந்த போது, (தொழுகையை முன்நின்று நடத்தும்) இமாம் பின்பற்றப்பட வேண்டியவராவார். ஆகவே, அவர் (தொழுகையில்) குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ' செய்)யுங்கள். அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள் என்று சொன்னார்கள்.

ஹுமைதி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கடைசியாகத் தொழுத போது மக்கள் அவர்கள் பின்னால் நின்று கொண்டு தொழ, அவர்கள் மட்டும் உட்கார்ந்து தொழு(வித்)தார்கள்.17

பாடம் : 13

நோயாளி மீது (ஆறுதலுக்காகக்) கை வைப்பது.

5659 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மக்காவில் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். நான், அல்லாஹ்வின் நபியே! நான் செல்வத்தை விட்டுச் செல்கிறேன். (ஆனால்,) ஒரேயொரு மகளைத்தான் நான் (என் வாரிசாக) விட்டுச் செல்கிறேன். ஆகவே, என் செல்வத்தில் இரண்டிலொரு பங்கை (தானம் செய்யும்படி) மரணம் சாசனம் செய்துவிட்டு (வாரிசான என் மகளுக்கு) மூன்றிலொரு பங்கை மட்டும் விட்டுச் செல்லட்டுமா? என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், வேண்டாம் என்று சொன்னார்கள். நான், பாதியை மரண சாசனம் செய்துவிட்டுப் பாதியை (என் மகளுக்கு) விட்டுச் செல்லட்டுமா? என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், வேண்டாம் என்று சொன்னார்கள். நான், அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு (தானம் செய்யும்படி) மரண சாசனம் செய்து விட்டு இரண்டிலொருப் பங்கை அவளுக்காக விட்டுச் செல்லட்டுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம்தான் என்று சொன்னார்கள்.18

பிறகு தமது கையை என் நெற்றியின் மீது வைத்துப் பிறகு அதை என் வயிற்றின் மீதும் என் முகத்தின் மீதும் தடவினார்கள். பின்னர், இறைவா! சஅதுக்குக் குணமளிப் பாயாக. அவருடைய ஹிஜ்ரத்தை முழுமைப் படுத்துவாயாக என்று பிரார்த்தித்தார்கள். அவர்களது (கரத்தின்) குளிர்ச்சியை என்

ஈரலில் இப்போதும் கூட நான் உணர்வதைப் போன்று இருக்கிறது.

5660 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டி ருந்த போது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே! என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன் என்று சொன்னார்கள்.

நான், (இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்? என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம்' என்று கூறிவிட்டுப் பிறகு, ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை என்று சொன்னார்கள்.19

பாடம் : 14

(உடல் நலம் விசாரிக்கும் போது) நோயாளி யிடம் சொல்ல வேண்டியதும் (அதற்கு) அவர் அளிக்க வேண்டிய பதிலும்.

5661 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று அவர் களை(ப் பரிவோடு) தொட்டேன். அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண் டிருந்தார்கள். அப்போது நான், தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண் டிருக்கிறீர்களே! (இந்தத் துன்பத்தின் காரணமாக) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் உண்டுதானே! எனக் கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ஆம். ஒரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் (அதற்கு ஈடாக), மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய தவறுகள் அவரை விட்டு உதிராமல் இருப்பதில்லை என்று சொன்னார்கள்.20

5662 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த கிராமவாசி) ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும் என்று சொன்னார்கள். அதற்கு அந்த மனிதர், (நான் தூய்மை பெற்றுவிடுவேனா? இது நடக்கப் போவது) இல்லை. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகித் தகிக்கின்ற காய்ச்சல் ஆகும். இது அ(ம்முதிய)வரை மண்ணறைகளைச் சந்திக்கவைக்கும் வரை (ஓயாது) என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், ஆம் (நீர் நினைத்தது போன்றே நடக்கும்) என்று கூறினார்கள்.21

பாடம் : 15

பயணம் செய்தபடியும், நடந்து சென்ற படியும், மற்றவரின் பின்னால் வாகனத்தில் அமர்ந்தபடியும் நோயாளியை உடல் நலம் விசாரித்தல்.

5663 உஸாமா பின ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதன் மீது ஃபதக்' நகர் முரட்டுத் துணி விரித்து, அதன் மீது அமர்ந்து தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக் கொண்டு (நோய்வாய்ப்பட்டிருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது.- அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார்.-அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்ளும் முன் இது நடந்தது.-அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கிகளான இணை வைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு வகுப்பாரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா

(ரலி) அவர்களும் இருந்தார்கள்.

(எங்கள்) வாகனப் பிராணியி(ன் காலடி யி)லிருந்து கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்த போது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் பின் உபை தமது மேல் துண்டால் தமது மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, எங்கள் மீது புழுதி கிளப்பாதீர் என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் சலாம் (முகமன்) கூறினார்கள். (தமது வாகனத்தை) நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை ளநபி (ஸல்) அவர்களை நோக்கின மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மை யாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள் என்றார்.

(அங்கிருந்த) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், ஆம். அல்லாஹ் வின் தூதரே! அதை நம் அவைகளுக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம் என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணை வைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரை யொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்று விட்டனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், மௌனமாகும் வரை மக்களை அமைதிப் படுத்திக் கொண்டேயிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, சஅதே! அபூ ஹுபாப் -அப்துல்லாஹ் பின் உபை- சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? (அவர் இன்னின்னவாறு சொன்னார்) என்றார்கள்.

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு அல்லாஹ் வழங்கிய(மார்க்கத்)தை வழங்கிவிட்டான். (தாங்கள் மதீனா வருவதற்கு முன்பு) இந்நகர வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தார்கள். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு அளித்த சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ப்பதவியான)து மறுக்கப்பட்ட போது அதைக் கண்டு அவர் ஆத்திரமடைந் துள்ளார். இதுவே தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம் என்று சொன்னார்கள்.22

5664 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நான் நேயுற்றிருந்த போது) என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் கோவேறு கழுதையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை; குதிரையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. (மாறாக, நடந்தே வந்தார்கள்.)

 

பாடம் : 16

நோயாளி நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன் என்றோ என் தலை(வலி)யே என்றோ எனக்கு நோய் அதிகரித்துவிட்டது என்றோ கூறலாம்.

(இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு (நோயினால்) துன்பம் நேர்ந்திருக் கிறது. (இறைவா! அதை அகற்றிடுவாயாக!) நீ கருணையாளர்களிலெல்லாம் அதிகக் கருணையாளன் ஆவாய் (21:83).

5665 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்த சமயம் ஹுதைபிய்யாவில்) நான் (சமையல்) பாத்திரத்தின் கீழிருந்து தீ மூட்டிக் கொண் டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது, (கஅபே!) உங்கள் தலையிலுள்ள பேன்கள் உங்களுக்குத் தெந்தரவு தருகின்றனவா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் நாவிதரை அழைத்தார்கள். நாவிதர் எனது தலை முடியை மழித்தார்.

பிறகு என்னை (இஹ்ராமுடைய நிலையில் தலை மழித்துக் கொண்டதற்காக)ப் பரிகாரம் செய்யும்படி நபியவர்கள் கட்டளையிட் டார்கள்.23

5666 காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை கடுமையான தலைவ-யினால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், என் தலை(வ-)யே! என்று சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (-இறப்பு-) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த் திப்பேன் என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்துவிடுவீர்கள்) என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு) இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) என் தலை(வ-)யே!' என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனால்தான் உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநிதியாகச் செயல்படும்படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டுவிடவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான்; இறைநம்பிக்கை யாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவேதான் அறிவிக்கவில்லை) என்று சொன்னார்கள்.

5667 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர் களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அப்போது நான், தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படு கிறீர்களே! என்றேன். நபி (ஸல்) அவர்கள், ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்) என்றார்கள். நான் (இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா? என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் , ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை என்றார்கள்.24

5668 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறயிதாவது:

விடைபெறும்' ஹஜ்ஜின் போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

அப்போது நான், (இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக  மாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் செய்து விடட்டுமா? என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், வேண்டாம் என்று கூறினார்கள்.

நான் (எனது செல்வத்தில்) பாதியை (யாவது தானம் செய்யட்டுமா)? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் (அப்போதும்) வேண்டாம் என்று சொன்னார்கள்.

நான் மூன்றிலொரு பங்கை(யாவது தானம் செய்துவிடட்டுமா)? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், (மூன்றிலொரு பங்கா?) மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர் களாக விட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிடச் சிறந்ததாகும். நீங்கள் இறைவனின் திருப்தி கருதிச் செய்யும் (தான தர்மம், குடும்பச்) செலவு எதுவாயினும் அதற்காக உங்களுக்கு நற்பலன் அளிக்கப் படாமல் இருப்பதில்லை. அது நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே (அதற்கும் நற்பலன் உண்டு) என்று சொன்னார்கள்.25

பாடம் : 17

என்னிடமிருந்து எழுந்திருத்துவிடுங்கள்' என்று நோயாளி சொல்வது.

5669 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் உட்பட மக்கள் பலரும் இருக்க, நபியவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் (ஒரு போதும்) வழி தவறமாட்டீர்கள் என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது (அவர்களை எழுதித் தருமாறு தொந்தரவு செய்யாதீர்கள்). உங்களிடம்தான் குர்ஆன் இருக்கிறதே. (நபியவர்களுக்கு அருளப்பெற்ற அந்த) இறை வேதமே நமக்குப் போதும் என்று சொன்னார்கள்.

உடனே அங்கு வீட்டிலிருந்தோர் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், (நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டுவந்து கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவறி(ச் சென்றி)டமாட்டீர்கள் என்று சொன்னார்கள். வேறு சிலர் உமர் (ரலி) அவர்கள் கூறியதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அருகில் மக்களின் கூச்சலும் சச்சரவும் மிகுந்த போது, (என்னிடமிருந்து) எழுந்திருத்துவிடுங்கள் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் .ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்ச-ட்டுக் கொண்டதனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் (எழுதித் தர நினைத்த) மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டது தான்  சோதனையிலும் பெரும் சோதனையாகும் என்று கூறிவந்தார்கள்.26

பாடம் : 18

(நலம்பெற) பிரார்த்தனை செய்யும்படி நோயுற்றக் குழந்தையை (நல்லவர்களிடம்) கொண்டு செல்வது.

5670 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நான் குழந்தையாயிருந்த போது) என்னை என் தாயாரின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று, அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தலையை வருடிக்கொடுத்து என் சுபிட்சத்திற் காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீலிருந்து

நான் சிறிது பருகினேன். அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் நான் நின்று கொண்டு அவர்களுடைய இரு தோள்களுக்கிடையில் இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப் படுகின்ற பித்தாûனைப் போன்றிருந்தது.27

பாடம் : 19

நோயாளி மரணத்தை விரும்புவது (கூடாது).

5671 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந் தால், இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக! என்று கேட்கட்டும்.

இதை அனஸ் பின் மா-க் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

5672 கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கப்பாப் பின் அரத் (ரலி) அவர் களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வ-க்கு சிகிச்சை பெறுவதற் காகத் தமது வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: முன்சென்று விட்ட எம் தோழர்கள் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலகம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாத நிலையில் (சிரமத்துடன் வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைப் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு(ச் செல்வத்தை)ப் பெற்றுள்ளோம். நபி (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். (அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்.)

மற்றொரு முறை நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது தமது (வீட்டுச்) சுவரைக் கட்டிக் கொண்டி ருந்த அவர்கள் ஒரு முஸ்லிம், தாம் செய்கின்ற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; (தேவைக்கு அதிகமாக வீடுகட்ட) இந்த மண்ணில் அவர் செய்கின்ற செலவைத் தவிர என்று சொன்னார்கள்.

5673 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒரு போதும் நுழைவிக்காது(; மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணை யாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்) என்று கூறினார்கள்.28

மக்கள், தங்களையுமா (தங்களின் நற் செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (ஆம்) என்னையும்

தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர என்று கூறிவிட்டு, எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும் என்று கூறினார்கள்.

5674 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்குக் கருணை புரிவாயாக. மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள் வாயாக என்று பிரார்த்திப்பதை நான் செவியுற்றேன்.29

பாடம் : 20

உடல் நலம் விசாரிக்கச் சென்றவர் நோயாளிக்காகப் பிராத்திப்பது.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க வந்து), இறைவா! சஅதுக்கு (நோயிலிருந்து) குணமளிப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.30

5675 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்' அல்லது நோயாளி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால்' அவர்கள், அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன் என்று பிரார்த்திப்பார்கள்.

ளபொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.ன

மற்றோர் அறிவிப்பில், நோயாளி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால் என்றும், இன்னோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் சென்றால் என்றும் இடம்பெற்றுள்ளது.

பாடம் : 21

நோயாளியை உடல் நலம் விசாரிக்கச் செல்பவர் (அங்கு) உளூ (அங்கசுத்தி) செய்வது.

5676 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நான் நோய்வாய்ப் பட்டிருந்த போது என்னிடம் வந்து அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். பின்னர் (அங்கசுத்தி செய்த நீரை) என் மீது ஊற்றினார்கள்' அல்லது இவர் மேல் (இந்த நீரை) ஊற்றுங்கள் என்று சொன்னார்கள்'. (அவ்வாறு ஊற்றிய) உடன் நான் மயக்கத்

திலிருந்து தெளிந்தேன். அப்போது நான், அல்லாஹ்வின் துதரே! நேரடி ஆண் வாரிசுகள் அல்லாதவர்கள்தாம் எனக்கு வாரிசாகிறார்கள். (இந்நிலையில்) சொத்துப் பங்கீடு எவ்வாறு அமையும்? என்று கேட்டேன். அப்போது தான்  பாகப் பிரிவினைச் சட்டம் குறித்த வசனம் அருளப்பெற்றது.31

பாடம் : 22

கொள்ளை நோய் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை நீக்கும்படி பிரார்த்தனை செய்வது.

5677 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவுக்கு) வந்த போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பிலால் (ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்? என்று (நலம்) விசாரித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் காணும் போது (பின்வரும் கவிதையைக்) கூறுவார்கள்:

காலை

வாழ்த்துக் கூறப்பெற்ற

நிலையில்

ஒவ்வொரு மனிதனும்

தம் குடும்பத்தாரோடு

காலைப் பொழுதை அடைகிறான்...........

(ஆனால்,)

மரணம்-அவன் செருப்பு வாரைவிட

மிக அருகில் இருக்கிறது (என்பது-

அவனுக்குத் தெரிவதில்லை).

பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் விட்டதும் வேதனைக் குரல் எழுப்பி,

இத்கிர்' (நறுமணப்) புல்லும்

ஜலீல்' கூரைப் புல்லும்

என்னைச் சூழ்ந்திருக்க...........

(மக்காவின்) பள்ளத்தாக்கில்

ஒரு இராப் பொழுதையேனும்

நான் கழிப்பேனா.......... ?

மிஜன்னா' எனும்

(மக்காவின் இனிப்புச் சுனை) நீரை

ஒரு நாள் ஒரு பொழுதாவது

நான் பருகுவேனா........... ?

(மக்கா நகரின்)

ஷாமா, தஃபீல் மலைகள்

(இனி எப்போதேனும்)

எனக்குத் தென்படுமா........... ?

என்று (கவிதை) கூறுவார்கள்.

உடனே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அவர்கள் இருவருடைய நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல், அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும், இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்கு வாயாக! இதன் (அளவைகளான) ஸாஉ', முத்(து) ஆகியவற்றில் (-எங்கள் உணவில்) எங்களுக்கு நீ சுபிட்சத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை இடம் பெயரச் செய்து அதை ஜுஹ்ஃபா' எனுமிடத்தில் (குடி) அமர்த்திவிடுவாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள்.32

November 6, 2009, 9:35 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top