35-ஸலம் (முன்பணம் பெறுதல்)

அளவிலா அருளாளன் நிகரிலாஅன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அத்தியாயம் : 35

35-ஸலம் (முன்பணம் பெறுதல்)

(பொருளைப் பிறகு பெற்றுக் கொள்வதாகக் கூறி விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுவது.)

பாடம் : 1

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கூற வேண்டும்.

2239 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்துவந்தனர். நபி (ஸல்) அவர்கள், ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள்.

ஒரு வருடம், இரண்டு வருடங்களில் என்றோ, இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்களில் என்றோ தமக்கு அறிவிக்கப்பட்டதாக அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) (ஐயப்பாட்டுடன்) அவிக்கிறார்கள்.

பாடம் : 2

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் கூற வேண்டும்.

2240 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்கள் இரண்டு, மூன்று வருடங்களில் பேரீச்சம் பழத்தைப் பெற்றுக் கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்துவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக (மட்டுமே) கொடுக்கட்டும்! என்றார்கள்.

2241 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்த போது, (ஸலம் பற்றி குறிப்பிடுகையில்), அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளில்தான் அது அனுமதிக்கப்படும்! என்றார்கள்.

2242 & 2243 இப்னு அபில் முஜாலித் (ரலி) கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் த்தா (ரலி) அவர்களும் அபூபுர்தா (ரலி) அவர்களும் ஸலம் வியத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்று நான் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர்(ரலி) ஆகியோரின் காலத்திலும் கோதுமை, வாற்கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சம்பழம் ஆகியவற்றிற்காக முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார்கள். பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள்.

பாடம் : 3

தோட்டம் துரவு மற்றும் விவசாய நிலம் இல்லாதவர்களிடம் விளைபொருட்களுக்காக முன்பணம் கொடுத்தல்.

2244 & 2245 முஹம்மத் பின் அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் த்தாத் (ரலி) அவர்களும், அபூபுர்தா(ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் அனுப்பி, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித் தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா? என்று கேள்! என்றனர். (அவ்வாறே நான் கேட்ட போது) அப்துல்லாஹ் பின் அபீ அஃவ்பா (ரலி) அவர்கள், கோதுமை, வாற்கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றிற்காக அளவும் தவணையும் குறிப்பிட்டு, ஷாம் வாசிகளான நபீத் எனும் குலத்தாரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்து வந்தோம்!என்றார். தோட்டம் துரவும் விவசாய நிலமும் யாரிடம் இருகிறதோ! அவரிடமா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் நாங்கள் அதுபற்றி விசாரிக்க மாட்டோம்! என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடம் அனுப்ப, அவர்களிடம் சென்று நான் கேட்ட போது, நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபித் தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்துவந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) அவர்களுக்குத் தோட்டம் துரவு அல்லது விவசாய நிலம் இருக்கின்றதா என்று நாங்கள் கேட்க மாட்டோம்! என்று கூறினார்கள்.

2246 அபுல் புக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் முன்பும் அதை எடை போடுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், (மரத்திலுள்ளதை) எவ்வாறு எடைபோடுவது? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அவர்களுக்கு அருகிலிருந்த மற்றொரு மனிதர் எடை போடுவதன் கருத்து (அதன் எடை இவ்வளவு இருக்கும் என்று) மதிப்பிடுவதாகும்! என்றார்.

பாடம் : 4

பேரீச்சம் பழத்தில் ஸலம்.

2247&2248 அபுல் புக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பேரீச்சம் பழத்தில் ஸலம் வியாபாரம் செய்வது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், மரத்திலுள்ள கனிகளைப் பக்குவமடையாத வரை விற்பது தடை செய்யப்பட்டள்ளது; மேலும், (தங்கத்திற்கு) வெள்ளியைக் கடனாக (பிறகு தருவதாக) விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது! என்றார்கள். பேரீச்சம் பழத்தில ஸலம் வியாபாரம் செய்வது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான்கேட்டேன். மரத்திலுள்ள கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையாத வரையிலும், எடைபோடப்படாத வரையிலும் அவற்றை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

2249&2250 அபுல் புக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பேரீச்சம் பழத்தில் ஸலம் வியாபாரம் செய்வது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், மரத்திலுள்ள கனிகள் பக்குவமடையா வரை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்! மேலும், (தங்கத்திற்கு) வெள்ளியைக் கடனாக விற்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்! என்றார்கள்.

பேரீச்சம் பழத்தில் ஸலம் வியாபாரம் செய்வது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். மரத்தின் கனிகள் உண்ணும் பக்குவத்தை அடையும் முன்பும் எடை போடப்படும் முன்பும் விற்கவேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்! என்றார்கள். அப்போது ஒரு மனிதர் மரத்திலுள்ளதை எவ்வாறு எடைபோடுவது? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அருகிலிருந்த மற்றொரு மனிதர், எடைபோடுவதன் கருத்து (இவ்வளவு எடை இருக்கும் என்று) மதிப்பிடுவதாகும்! என்றார்.

பாடம் : 5

ஸலமிற்குப் பிணைப் பொருளைத் தருதல்.

2251 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் உணவுப் பொருளை (குறிப்பிட்ட காலத்திற்குப்) பிறகு பெற்றுக் கொள்வதாக வாங்கினார்கள்; (அதற்கான பிணைப்பொருளாக) தமது இரும்புக் கவசத்தை அந்த யூதரிடம் அடைமானம் வைத்தார்கள்.

பாடம் : 6

ஸலமில் அடைமானம் வைத்தல்.

2252 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடம் குறிப்பிட்ட தவணையில் (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) உண்பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரும்புக் கவசத்தை அடைமானமாகப் பெற்றார்.

பாடம் : 7

ஸலமில் தவணை குறிப்பிடுதல்.

இப்னு அப்பாஸ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அஸ்வத் (ரஹ்), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் இவ்வாறு (முதலில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பொருளைத் தருவதாகக் கூறி விற்பதற்கே ஸலம் என்று சொல்லப்படும் என்று)தான் கூறுகின்றனர்.

விலையும் தவணையும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு முன்பணம் கொடுப்பது தவறில்லை! பலன் உறுதிப்படுத்தப்பட்ட பயிர்களில் மட்டுமே இவ்வாறு செய்யலாம்! என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2253 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது, மக்கள் இரண்டு மூன்று வருடங்களில் கனிகளைப் பெற்றுக் கொள்வதாக முன்பணம் கொடுத்துவந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், அளவும் தவணையும் குறிப்பிடப்பட்ட கனிகளுக்காக முன்பணம் கொடுங்கள்! என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அளவில் எடையும் குறிப்பிடப்பட்ட கனிகளுக்காக என்றுள்ளது.

2254 & 2255 முஹம்மத் பின் அபில் முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னை அபூர்புதா (ரலி), அப்துல்லாஹ் பின் த்தாத் (ரலி) ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடமும் அப்துல்லாஹ் பின் அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடமும் அனுப்பினார்கள். அவ்விருவரிடமும் ஸலம் பற்றி நான் கேட்டேன். அவ்விருவரும், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சென்று), போர் செய்து (அதில் கிடைக்கும்) படைக்ககலன்களை (-கனீமத் ) பெறுவோம்; அப்போது எங்களிடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த நபீத் எனும் குலத்தார் வருவார்கள். குறிப்பிட்ட தவணையில் (தந்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன்) உலர்ந்த திராட்சை, கோதுமை, வாற்கோதுமை ஆகியவற்றிற்காக அவர்களிடம் முன்பணம் கொடுப்போம்! என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களிடம் தோட்டம் துரவு (அல்லது விவசாய நிலம்) எதுவும் இருந்ததா, இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும், நாங்கள் இது பற்றி அவர்களிடம் கேட்டதில்லை! என்றனர்.

பாடம் : 8

ஒட்டகத்தின் (வயிற்றிலுள்ள) குட்டி ஈன்றெடுக்கும் குட்டியை வாங்க முன்பணம் கொடுத்தல்.

2256 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த ஒட்டகம் குட்டிபோட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்; அல்லது விற்றுவிடுகிறேன்! என்ற அடிப்படையில், அன்றைய மக்கள் வியாபாரம் செய்துவந்தனர்; அதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

01.11.2009. 21:52

34-வியாபாரம்5

34-வியாபாரம்

பாடம் : 101

இறந்துபோன மிருகத்தின் பதப்படுத்தப்படா தோல்கள்.

2221 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது, இதன் தோலை நீங்கள் பயன்படுத்தக்கூடாதா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், இது செத்த ஆடாயிற்றே! என்றனர். அதற்கு அதை உண்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 102

பன்றிகளைக் கொல்வது.

நபி (ஸல்) அவர்கள் பன்றி வியாபரத்தை (ஹராமாக்கித்-) தடைசெய்தார்கள்.

2222 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (-ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 103

செத்தவற்றின் கொழுப்பை உருக்கக் கூடாது; அவற்றின் (இறைச்சியிலிருந்து வடியும்) திரவக் கொழுப்பை விற்கக் கூடாது.

இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2223 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி) அவர்கள், அவரை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக (-சபிப்பானாக)! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக ஆக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அவர்களை அல்லாஹ் அழிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா? எனக் கேட்டார்கள்.

2224 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 104

உயிரில்லாதவற்றின் உருவங்களை விற்பதும் விற்கத்தகாத உருவங்களும்.

2225 சயீத் பின் அபில் ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்த போது ஒரு மனிதர் வந்து, இப்னு அப்பாஸ் அவர்களே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன் எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். யாரேனும் ஒரு உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவன் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமக்குக்கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்து தான் தீரவேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளை வரைவீராக! என்றார்கள்.

பாடம் : 105

மதுபான வியாபரம் (மதுபானம் விற்பதோ வாங்குவதோ) ஹராம்- தடைசெய்யப்பட்டதாகும்.

மதுபான வியாபாரத்தை (மது விற்பதையும், வாங்குவதையும்) நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2226 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து) இறுதி வசனம் வரை இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, மதுபான வியாபாரம் தடைசெய்யப்பட்டு விட்டது! என்றார்கள்.

பாடம் : 106

சுதந்திரமானவரைப் பிடித்து விற்பது குற்றமாகும்.

2227 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒருகூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 107

யூதர்களை மதீனாவிலிருந்து வெளியேற்றிய போது அவர்களின் நிலத்தை விற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டது.

இது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக ஒரு (நபிமொழி) அறிவிப்பு உள்ளது.

பாடம் : 108

உயிரினத்திற்கு பதிலாக உயிரினத்தையும் அடிமைக்கு பதிலாக அடிமையையும் கடனாக (பிறகு தருவதாக) விற்பது.

ஒட்டகத்தின் சொந்தக்காரர் தமது சொந்தப் பொறுப்பில் ரபதா எனுமிடத்தில் அதைத் தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இப்னு உமர் (ரலி) அவர்கள் நான்கு ஒட்டகங்களைக் கொடுத்து பயணம் செய்வதற்கேற்ற ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள்.

சில நேரங்களில் ஓர் ஓட்டகம் இரண்டு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக இருக்கலாம்! என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் இரண்டு ஒட்டகங்களுக்குப் பகரமாக ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். அப்போது, ஓர் ஒட்டகத்தை மட்டும் கொடுத்து விட்டு, மற்றொன்றை அல்லாஹ் நாடினால் தாமதமின்றி நாளை உம்மிடம் தருகிறேன்! என்று கூறினார்கள்.

இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகம் இரண்டு ஆட்டிற்கு ஓர் ஆடு என்று கடனாக வாங்கினாலும் உயிரினத்தில் வட்டி என்பதில்லை! என்று சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகத்தைக் கடனாக வாங்குவதும் ஒரு திர்ஹத்துக்கு ஒரு திர்ஹத்தைக் கடனாக வாங்குவதும் தவறில்லை! என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2228 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரில் பிடிக்கப்பட்ட) கைதிகளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒருவராவார். அவர்கள் (முதலில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் ஒரு பங்காகக்) கிடைத்தார்கள். பின்பு நபி (ஸல்) (அவர்கள் தமது பங்காக ஸபிய்யாவ தேர்ந்தெடுத்துக் கொள்ள) நபியவர்களுக்கு உரியவராய் ஆகிவிட்டார்கள்.

பாடம் : 109

அடிமைகளை விற்பது.

2229 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும் போது, அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர்; அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் புணர்ச்சி இடைமுறிப்பு (உடலுறவின் போது பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியே விட்டுவிடும் செயல்-அஸ்ல்) செய்யலாமா? என்று கேட்டேன். அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச்செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும் புணர்ச்சி இடைமுறிப்பு செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை! என்று கூறினார்கள்.

பாடம் : 110

என் மரணத்திற்குப் பின், நீ விடுதலையடைந்து விடுவாய்! என்று உரிமையாளரால் பின்விடுதலையளிக்கப்பட்ட (முதப்பர்-) அடிமையை விற்பது.

2230 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 எனது மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்! என்று உரிமையாளரால் வாக்களிப்பட்ட (பின்விடுதலையளிக்கப்பட்ட-) அடிமையை நபி (ஸல்) அவர்கள் விற்றார்கள்.

2231 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

எனது மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்! என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி (ஸல்) அவர்கள் விற்றார்கள்!

2232 & 2233 ஸைத் பின் காலித் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், விபசாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபசாரம் செய்தால் மீண்டும் அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மூன்றாவது தடவை... அல்லது நான்காவது தடவை விபசாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்றுவிடுங்கள்! என்று பதிலளித்தார்கள்.

2234 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபசாரம் செய்து, அது நிரூபணமானால் தண்டனையாக அவளுக்குக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை கூற வேண்டாம்! மீண்டும் விபசாரம் செய்தால் தண்டனையாகக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை சொல்ல வேண்டாம்! பிறகு மூன்றாம் முறை விபசாரம் செய்து, அது நிரூபணமானால் முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை விற்றுவிடுங்கள்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 111

ஒருவருக்கு அடிமைப்பெண் கிடைத்தால் அவளது கருப்பையில் குழந்தை இல்லை என்பதை உறுதி செய்வதற்கு முன் அவளுடன் பயணம் செய்யலாமா?

அவளைக் கட்டியணைப்பதும் முத்தமிடுவதும் தவறில்லை! என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பிறரால் உடலுறவு கொள்ளப்பட்ட அடிமைப் பெண் அன்பளிப்பாகக் கிடைத்தாலோ, அல்லது விற்கப்பட்டாலோ, அல்லது விடுதலை செய்யப்பட்டாலோ (புதிய எஜமானன்) அவளது கருப்பையில் கரு இல்லையென்பதை ஒரு மாதவிடாய் மூலம் உறுதி செய்து கொள்ளட்டும்! கன்னிப் பெண்ணுக்கு இது அவசியம் இல்லை! என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவர் பிறரால் கர்ப்பமான தமது அடிமைப் பெண்ணை உடலுறவைத் தவிர மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்! மேலும் அவர்கள் (இறை நம்பிக்கையாளர்கள் எத்தகையவர்கள் எனில்) தங்கள் மனைவியரிடமோ, தங்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களிடமோ தவிர வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்! என இறைவன் கூறுகின்றான் (23:6) என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

2235 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்து, அல்லாஹ் (கமூஸ்) கோட்டையை அவர்களுக்குத் திறந்து விட்ட போது, ஸஃபிய்யா பின்த் ஹுயை என்பவரின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப்பெண்ணாக இருந்த அவருடைய கணவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்லத்தில்) தமது பங்காகப் பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். சத்துர் ரவ்ஹா எனுமிடத்தை நாங்கள் அடைந்த போது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருடன் தாம்பத்தியஉறவைத் தொடங்கினார்கள். பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) ஹைஸ் எனப்படும் ஓர் உணவைத் தயாரித்து சிறிய தோல்விரிப்பில் வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) உம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அறிவியும்! என்றார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்தாக அது அமைந்தது! பிறகு நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல், ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களைச் சுற்றி திரை அமைத்தார்கள். பிறகு ஒட்டகத்தின் அருகில் அவர்கள் அமர்ந்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முழங்கால் மீது தமது காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள்.

பாடம் : 112

செத்தவற்றையும் உருவச் சிலைகளையும் விற்பது.

2236 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்! என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், கூடாது! அது ஹராம்! எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 113

நாய் விற்ற காசு.

2237 அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற காசையும் விபசாரியின் கூலியையும் சோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்.

2238 அவன் பின் அபீஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள்) குருதிஉறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரது தொழிற் கருவிகளை உடைக்கும்படி உத்தரவிட்டார்கள்; அவ்வாறே,அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான்அவர்களிடம் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடைசெய்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்! என்று பதிலளித்தார்கள்.

 

01.11.2009. 21:50

34-வியாபாரம்4

34-வியாபாரம்

பாடம் : 76

வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை விற்பது.

2174 மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நூறு தீனார்களை (திர்ஹமாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் என்னை அழைத்தார்கள். அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு ஃகாபாவிலிருந்து நமது கருவூலக் காப்பாளர் வரும் வரை சில்லறை தர முடியாது! என்றார்கள். இதை உமர் (ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! கோதுமைக்கு கோதுமையைமாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும் ; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! என்று கூறியுள்ளார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

பாடம் : 77

தங்கத்திற்குத் தங்கத்தை விற்பது

2175 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 78

வெள்ளிக்கு வெள்ளியை விற்பது.

2176 சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) சம்பந்தப்பட்ட முந்தைய ஹதீஸ் போன்று அபூசயீத் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் அபூசயீத் (ரலி) அவர்களை இப்னு உமர் (ரலி) அவர்கள் சந்தித்து, நீங்கள் நபி (ஸல்) அவர்கள் வழியாக என்ன அறிவித்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூசயீத் (ரலி), நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

2177 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்கிவிடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 79

தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தைக் கடனுக்கு விற்றல்.

2178 & 2179 அபூஸாலிஹ் அஸ்ஸய்யாத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தங்க நாணயத்திற்கு(-தீனாருக்கு)த் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு (-திர்ஹத்திற்கு) வெள்ளி நாணயத்தையும் விற்கலாம்! என அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுவதில்லையே எனக் கேட்டேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் இதை நபி (ஸல்) அவர்கள் வழியாகச் செவியுற்றீர்களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவ்வாறு நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி நன்கறிந்தவர் என்றாலும், கடனில் தவிர வேறெதிலும் வட்டி ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உசாமா (ரலி) என்னிடம் கூறினார் என்று விடையளித்தார்கள் எனப் பதிலளித்தார்கள்.

பாடம் : 80

தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்றல்.

2180 & 2181 அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதிலளித்தனர். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக்காட்டி, இவர் என்னைவிடச் சிறந்தவர் என்றனர்.

பாடம் : 81

தங்கத்திற்கு வெள்ளியை ரொக்கத்திற்கு விற்றல்.

2182 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்கு சரியாகத் தவிர விற்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். தங்கத்திற்கு வெள்ளியை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் வெள்ளிக்குத் தங்கத்தை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் அனுமதித்தார்கள்.

பாடம் : 82

முஸாபனா எனும் வியாபாரம்.

மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு விற்பதும் அராயா எனும் வியாபாரமும் முஸாபனா எனப்படும்.

நபி (ஸல்) அவர்கள் முஸாபனா, முஹாகலா (பயிர் முற்றுவதற்கு முன்பே விற்பனை செய்தல்) ஆகிய வியாபாரங்களைத் தடை செய்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2183 & 2184 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த(கொய்யப்பட்ட) கனிகளுக்காக மரத்திலுள்ள கனிகளையும் விற்க வேண்டாம்!

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளுக்கு உலர்ந்த அல்லது செங்காயான பேரீச்சங் கனிகளை விற்பதற்கு அராயாவில் (மட்டும்) அனுமதித்தார்கள்; அராயா அல்லாதவற்றில் அனுமதிக்கவில்லை! என ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2185 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடைசெய்தார்கள்! முஸாபனா என்பது மரத்திலுள்ள பேரீச்சங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதுமாகும்!

2186 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஸாபனா, முஹாகலா எனும் வியாபாரங்களைத் தடை செய்தார்கள். முஸாபனா என்பது மரங்களின் உச்சிகளிலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பதாகும்.

2187 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஹாகலா, முஸாபனா ஆகிய வியாபாரங்களைத் தடைசெய்தார்கள்!

2188 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை அராயாவில் (மட்டும்) அனுமதித்தார்கள்!

பாடம் : 83

மரத்திலுள்ள கனிகளைத் தங்கம் அல்லது வெள்ளிக்கு விற்பது.

2189 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை விற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள். மேலும், அவற்றில் எதையும் தீனார், திர்ஹம் ஆகியவற்றிற்கே தவிர விற்கக் கூடாது - அராயாவைத் தவிர என்று கூறினார்கள்.

2190 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அராயாவில் ஐந்து வஸக் அல்லது அதைவிடக் குறைந்த அளவிற்கு அனுமதி அளித்தார்கள்.

2191 சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்காக மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள்; அராயாவில் (மட்டும்) அதற்கு அனுமதி வழங்கினார்கள். அராயாக்காரர்கள் (அராயா அடிப்படையில் மரங்களைப் பெற்றவர்கள்) மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்கலாம்! அதை வாங்கியவர்கள் செங்காயாக புசிக்கலாம்!

நபி (ஸல்) அவர்கள் அராயாவில் (மட்டும்) குத்துமதிப்பாக விற்பதற்கு அனுமதி வழங்கினார்கள். அராயாக்காரர்கள் மரத்திலுள்ள கனிகளை விற்கலாம்! வாங்கியவர்கள் அதைச் செங்காயாக உண்ணலாம்! என்று மற்றோர் அறிவிப்பில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த அறிவிப்பு (சொற்கள் வேறுபட்டாலும் பொருளில் முதல் அறிவிப்புக்கு) நிகரானதேயாகும்! என்று அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நான் சிறுவனாக இருக்கும் போது, யஹ்யா பின் சயீத் அல்அன்சாரீ (ரஹ்) அவர்களிடம் மக்காவாசிகள், அராயாவுக்கு நபி (ஸல்) அவர்கள் (எந்த நிபந்தனையுமின்றி) அனுமதி வழங்கியதாகக் கூறுகிறார்களே! என்று கேட்டேன். யஹ்யா (ரஹ்) அவர்கள் மக்காவாசிகளுக்கு என்ன தெரியும்? என்று கேட்டார்கள். மக்காவாசிகள் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் காண்பிக்கிறார்களே! என்று நான் கூறினேன். இதைக் கேட்டு யஹ்யா மௌனமானார். நான் ஜாபிர் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டதற்குக் காரணம், அவர் மதீனாவாசியாவார் என்பதேயாகும்! என்று சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தது இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லையா? என்று சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது; (அது உண்மைதான் என்றாலும் இந்த அறிவிப்பில்) இடம் பெறவில்லை! என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

பாடம் : 84

அராயாவின் விளக்கம்.

ஒரு மனிதர் மற்றொருவருக்குப் பேரீச்ச மரத்தின் ஒருபோக விளைச்சலை (அன்பளிப்பாகக்) கொடுத்து விட்டு, பெற்றவர்கள் பறிக்க வரும் போது சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே உலர்ந்த பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு மரத்திலுள்ள கனிகளை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அராயா என்பது ரொக்கமாக உலர்ந்த பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் கொடுப்பதில் மட்டுமே ஆகும். குத்துமதிப்பாகக் கொடுப்பதில் ஆகாது என்று இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஐந்து வஸக் என்ற சஹ்ல் பின் அபீஹஸ்மாவின் அறிவிப்பு இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்களுடைய கூற்றை உறுதிப்படுத்துகிறது.

அராயா என்பது ஒருவர் மற்றவருக்கு ஒன்று அல்லது இரண்டு மரங்களை அன்பளிப்பாக வழங்குவதாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

அராயா என்பது ஏழைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பேரீச்சம் மரங்களாகும். ஏழைகள் (கனியும் வரை) காத்திருக்க சக்தி பெற மாட்டார்கள். எனவே, அவர்கள் உலர்ந்த கனிகளுக்காகத் தாம் விரும்பியவாறு விற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது என்று சுஃப்யான் பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2192 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அராயாவில் மரத்திலுள்ள கனிகளைக் குத்துமதிப்பாக மதிப்பீடு செய்து உலர்ந்த பழங்களை முகத்தலளவையில் பெற்று விற்பதற்கு அனுமதி அளித்தார்கள்.

அராயா என்பது அனைவருக்கும் தெரிந்த, குறிப்பிட்ட சில பேரீச்ச மரங்களாகும். யாரும் வந்து கனிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 85

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்றல்.

2193 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மரத்திலுள்ள கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம்வந்ததும் வாங்கியவர், இது அழுகிவிட்டது; இது நோயால் தாக்கப்பட்டிருக்கிறது; இது செங்காயாக இருக்கிறது; இன்னும் பல குறைகள் இருக்கின்றன எனக் கூறிச் சச்சரவு செய்வார். நபி(ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் அதிமான போது மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை விற்காதீர்கள்! என்று ஆலோசனைபோல் கூறினார்கள்.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், கிருத்திகா நட்சத்திரக் குழுமம் (-ஸுரய்யா) (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வராதவரை தமது தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்கள்.

அப்பருவத்தில் செங்காய் எது? பழுத்தது எது? என்று அடையாளம் தெரியும் என அவர்களின் புதல்வர் காரிஜா கூறுகிறார்கள்.

2194 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.

2195 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்பதற்கு ஏற்றவாறு சிவக்காதவரை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

2196 சயீத் பின் மீனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று ஜாபிர் (ரலி) கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடம் பக்குவமாகுதல் என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், உண்பதற்கு ஏற்றவாறு சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது என விடையளித்தார்கள்.

பாடம் : 86

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் பேரீச்ச மரத்தை விற்பது.

2197 ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள் என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்களிடம், பக்குவம் அடைவது என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது என்று விடையளித்தார்கள்.

பாடம் : 87

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் பழங்களை விற்று, அதற்கேதும் ஆபத்து ஏற்பட்டால் விற்றவரே அதற்கு பொறுப்பாளி ஆவார்.

2198 & 2199 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாதவரை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் பக்குவமடைவது என்றால் என்ன? என்று கேட்கப்பட்டதற்கு சிவக்கும்வரை என்று விடையளித்து விட்டு, அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்து விட்டால்....? எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும்? எனக் கேட்டார்கள்.

ஒரு மனிதர் மரத்திலுள்ள கனிகளைப் பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் வாங்கி அதற்கேதேனும் தீங்கு ஏற்பட்டால் மரத்தின் உரிமையாளரே அதற்குப் பொறுப்பாளி ஆவார் என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பலன் உறுதிப்படும் நிலை அடையாதவரை மரத்திலுள்ள கனிகளை விற்காதீர்கள்; மரத்திலுள்ள கனிகளை உலர்ந்த கனிகளுக்கு விற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 88

கடனுக்கு உணவுப் பொருள் வாங்குவது.

2200 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தமது கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்.

பாடம் : 89

மட்டமான பேரீச்சம் பழத்தை அதைவிடச் சிறந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பது.

2201 & 2202 அபூசயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபருக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள், கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாஉவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாஉக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉவையும் நாங்கள் வாங்குவோம் எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்த காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக! எனக் கூறினார்கள்.

பாடம் : 90

மகரந்தச்சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தையும் பயிர் செய்யப்பட்ட நிலத்தையும் விற்பதும் வாடகைக்கு விடுவதும்.

2203 நாஃபிஉ (ரஹ்) கூறியதாவது :

மரகந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் (யாருக்குச் சேரும் என்பது) பற்றிப் பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்த(விற்ற)வருக்கே உரியவையாகும்! அடிமையும் பண்படுத்தப்பட்ட நிலமும்கூட இவ்வாறே ஆகும்!

2204 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால் அதன் கனிகள் விற்றவருக்கு சேரும்; வாங்கியவர் (தமக்குச் சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 91

அறுவடை செய்யப்படாத கதிர்களை (முகத்தலளவையில்) அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு விற்பது.

2205 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடைசெய்தார்கள். முஸாபனா என்பது ஒருவரது தோட்டத்திலுள்ள பேரீச்ச மரத்திலுள்ள கனிகளை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் கொடியிலுள்ள திராட்சைகளை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பதும் கதிர்களிலுள்ள தானியங்களை அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்கு (பண்டமாற்று முறையில்) விற்பதுமாகும்! இவை அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!

பாடம் : 92

பேரீச்ச மரத்தை வேரோடு விற்பது.

2206 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, அதை வேரோடு விற்றால் மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே மரத்தின் கனி சேரும். வாங்கியவர் (அதன் கனி தமக்குச் சேர வேண்டும் என்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 93

முகாளரா வியாபாரம்.

(-பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன்பே, கனிகளையும், காய்கறிகளையும் விற்பது).

2207 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாகலா, முகாளரா, முலாமஸா, முனாபதா, முஸாபனா ஆகிய வியாபாரங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

2208 ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பக்குவமடைவதற்கு முன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்! என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், பக்குவமடைதல் என்றால் என்ன? என்று கேட்டோம். அதற்கவர்கள், சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்! என்று பதிலளித்தார்கள். மேலும், அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்து விட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக) கருதுவீர்! என்றும் கேட்டார்கள்.

பாடம் : 94

பேரீச்சம் பாளைக் குருத்தை விற்பதும் உண்பதும்.

2209 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பேரீச்சங் குருத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களின் அருகில் நான் இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், மரங்களில் ஒருமரமிருக்கிறது; அது இறை நம்பிக்கையுடையவனுக்கு(-மூமினுக்கு) உவமையாகும்! என்றார்கள். நான் அது பேரீச்ச மரம்தான்! என்று சொல்ல நினைத்தேன். அப்போது, நான் அங்கிருந்தவர்களிலேயே வயதில் சிறியவனாக இருந்தேன்! (ஆதலால் நான் எதுவும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் அது பேரீச்சமரம்! என்று கூறினார்கள்.

பாடம் : 95

வியாபாரம், வாடகை, அளவை, நிறுவை ஆகியவற்றில் மக்களுடைய வட்டார வழக்கப்படியும் அவர்களின் எண்ணப்படியும் நடைமுறைப்படுத்துதல்.

உங்கள் வழக்கப்படி உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்! என்று நெசவாளர்களிடம் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

பத்துக்கு வாங்கியதை பதினொன்றுக்கு விற்பதில் தவறில்லை; செலவிட்டதற்காக இலாபத்தை அடைந்து கொள்ளலாம்! என்று முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அபூசுஃப்யானின் மனைவி ஹிந்த் (ரலி) அவர்களிடம், உனக்கும் உன் குழந்தைகளுக்கும் போதுமானதை நியாயமான முறையில் உன் கணவரிடமிருந்து எடுத்துக் கொள்! என்று கூறினார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்! (4:6)

ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மிர்தாஸிடமிருந்து, ஒரு கழுதையை வாடகைக்கு வாங்கினார்கள்; கழுதைக்குரிய வாடகை என்ன? என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கேட்ட போது, அப்துல்லாஹ் பின் மிர்தாஸ் ஒரு திர்ஹத்தில் மூன்றில் ஒரு பங்கு! என்றார். ஹஸன் (ரஹ்) அவர்கள் (ஒப்புக் கொண்டு) வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். பிறகு, மற்றொரு முறை ஹஸன் (ரஹ்) அவர்கள் வந்தார்கள் கழுதை வாடகைக்கு வேண்டுமென்று கேட்டு, வாடகை பேசாமல் அதில் ஏறிச் சென்றார்கள். எனவே, அரை திர்ஹத்தை அவருக்கு வாடகையாகக் கொடுத்து அனுப்பினார்கள்.

2210 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாயிருந்த) அபூதைபா (ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு குருதிஉறிஞ்சி எடுத்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மேலும் அவருடைய எஜமானர்களிடம் அவர் செலுத்த வேண்டியுள்ள அன்றாட வரியைக் குறைக்குமாறும் கட்டளையிட்டார்கள்.

2211 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், (என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா&? எனக் கேட்டார்கள். அதற்கு, உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

2212 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அவ்வநாதைகளின் சொத்துகளுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்! என்ற (4:6ஆவது) இறைவசனம், அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தைப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருவளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அநாதைகளின் பொருளை உண்ணலாம்.

பாடம் : 96

இருவருக்குச் சொந்தமான சொத்தை இருவரில் ஒருவர் மற்றவருக்கு விற்றல்.

2213 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலை (-விலைகோள் உரிமை) பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது; எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் குறிக்கப்பட்டிருந்தால் பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலை இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதித்தார்கள்.

பாடம் : 97

பிரிக்கப்படாத நிலம், கட்டடங்கள் மற்றும் உடைமைகளை விற்றல்.

2214 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலை (-விலைகோள் உரிமை) பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது; எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் குறிக்கப்பட்டிருந்தால் பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலை இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதித்தார்கள்.

பாடம் : 98

ஒருவர் மற்றவருக்காக அவரது அனுமதியின்றி ஒரு பொருளை வாங்கும் போது மற்றவர் அதில் திருப்தியுறுவது.

2215 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன் காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றனர்.

அவர்களில் ஒருவர், இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓரிடைவெளியை ஏற்படுத்து எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.

மற்றொருவர், இறைவா! என் தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தராதவரை தன்னை அடைய முடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையே நான் அமர்ந்த போது அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! உரிய (மணபந்த) உரிமையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளை விட்டு நான் எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீஅறிந்தால் இதை நீக்கு எனக் கூறினார். முழுமையாக அது விலகியது.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 99

இணைவைப்போரிடமும் எதிரிகளிடமும் விற்பதும் வாங்குவதும்.

2216 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது உயரமான, தலை பரட்டையான, இணைவைப்பவரான ஒரு மனிதர் தமது ஆடுகளை ஓட்டி வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இது விற்பனைக்கா? அல்லது (யாருக்கேனும்) அன்பளிப்பாக கொடுப்பதற்காகவா? என்று கேட்டார்கள். அவர், விற்பதற்குத் தான் எனக் கூறினார். அவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை வாங்கினார்கள்.

பாடம்: 100

எதிரிகளிடமிருந்து அடிமைகளை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வதும் அந்த அடிமைகளை விடுதலை செய்வதும்.

நபி (ஸல்) அவர்கள் சல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களிடம், உம் எஜமானரிடம் (உமக்குரிய விலையை சம்பாதித்துத்தந்து விடுதலை ஆகிவிடுவதாக எழுதிக் கொடுத்து) முகாதபா செய்து கொள்வீராக! எனக் கூறினார்கள்.

சல்மான் (ரலி) அவர்கள் முன்னர் சுதந்திரமானவராக இருந்தார்கள். அவர்களை அநியாயமாகப் பிடித்து விற்றுவிட்டனர். அம்மார் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரும் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமையானவர்களே!

அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ் உங்களில் சிலரை, வேறு சிலரைவிடச் செல்வத்தில் மேம்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேம்படுத்தப்பட்டவர்கள், தங்களுடைய செல்வத்தை, தம் ஆதிக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்களுடைய செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் மறுக்கின்றனர். (16:71)

2217 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சிபுரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன், இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) என் சகோதரி என்று சொன்னார்கள். பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் (அலை) அவர்கள், நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறைவிசுவாசி (மூமின்) யாரும் இல்லை என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்து தொழுது விட்டு, இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, இறைவா! இவன் செத்து விட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து அங்கசுத்தி செய்து தொழுது விட்டு, இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ளவிடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக் கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, இறைவா! இவன் செத்து விட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான்அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள் என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணிபுரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2218 ஆயிஷா (ரலி அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி, அப்து பின் ஸம்ஆ (ரலி) ஆகிய இருவரும் ஓர் அடிமை வியத்தில் வழக்கு கொண்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரர் உத்பா பின் அபீ வக்காஸின் மகனாவார். என் சகோதரர் (அவரது மரணத்தின் போது) என்னிடம் இதை வலியுறுத்திக் கூறினார். இந்த அடிமை அவரைப் போன்றே இருப்பதை நீங்கள் கவனியுங்கள் என்று சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த அடிமை என் சகோதரனே! என் தந்தைக்குச் சொந்தமான அடிமைப் பெண்ணுக்கு இவன் பிறந்தான்! எனக் கூறினார்கள். அவ்வடிமையிடம் தெளிவாக உத்பாவின் சாயலைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அப்து பின் ஸம்ஆ (ரலி) அவர்களிடம், அப்தே! ஒரு பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! எனக் கூறினார்கள். பிறகு தம் துணைவி சவ்தா (ரலி) அவர்களிடம், சவ்தாவே! இந்த அடிமையிடம் நீ பர்தாவைப் பேணிக் கொள்! என்று கூறினார்கள். அதற்குப் பிறகு சவ்தா (ரலி) அவர்கள் ஒரு போதும் அந்த அடிமையைக் கண்டதில்லை.

2219 இப்ராஹீம் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஸுஹைப் (ரலி) அவர்களிடம், நீர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக! உம் தந்தையல்லாதவரைத் தந்தை எனச் சொல்லாதீர்! எனக் கூறினார்கள். அதற்கு ஸுஹைப் (ரலி) அவர்கள், என் தந்தையல்லாதவரைத் தந்தை என்று நான் சொல்வதற்காக எவ்வளவு பொருட்களைக் கொடுத்தாலும் ஒப்ப மாட்டேன்; என்றாலும், நான் சிறுவனாக இருக்கும் போது திருடப்பட்டுவிட்டேன்! (அதனால் என் தந்தை யார் என்று தெரியவில்லை!) எனக் கூறினார்கள்

2220 உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! அறியாமைக் காலத்தில் என் உறவினருடன் நல்லுறவு, அடிமைகளை விடுதலை செய்தல், தர்மம் செய்தல் ஆகிய நல்லறங்களைச் செய்துவந்தேன்; இவற்றிற்கு எனக்கு நற்பலன் உண்டா? எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீர் செய்த நற்செயல்(களுக்கான நற்பலன்)களுடனேயே நீர் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்! என்றார்கள்.

 

01.11.2009. 21:48

34-வியாபாரம்3

34-வியாபாரம்

பாடம் : 50

கடைத் தெருவில் கத்திப் பேசி சச்சரவு செய்யலாகாது.

2125 அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, தவ்ராத்தில் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்! என்றேன். அவர்கள், இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களுடைய சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியம் அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் எனது அடிமையும் எனது தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்! (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்ய மாட்டார்; மாறாக, மன்னித்து, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்! வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாதவரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும் என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது! என பதிலளித்தார்கள்.

பாடம் : 51

அளந்து கொடுப்ப(தற்கான கூலியைத் தருவ)து விற்பவர் மற்றும் ஒப்படைப்பவர் (அல்லது கடனைச் செலுத்துபவர்) மீதே கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

இவர்கள் மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகிறார்கள்! (83:4).

(நீங்கள் அளந்து வாங்கும் போது உங்கள் விலையை முழுமையாகப் பெற்றுக் கொள்ளும் விதத்தில்) நிறைவாக அளந்து வாங்குங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீர் விற்பனை செய்தால் அளந்து கொடும்! நீர் வாங்கினால் அளந்து வாங்கும்! என்று நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

2126 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக அவரது கைக்கு வந்து சேராமல் அதை அவர் விற்கக் கூடாது!

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2127 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்கள் தம்மீது கடனிருக்கும் நிலையில் இறந்து விட்டார்கள்; அவருக்கு கடன் கொடுத்தவர்கள் அவரது கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்களின் உதவியை நாடினேன். நபி (ஸல்) அவர்கள் (கடனைத் தள்ளுபடி செய்யும்படி) கோரிய போது அவர்கள் அதைச் செய்யவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், நீர் சென்று உமது பேரீச்சம் பழத்தில் அஜ்வா எனும் (உயர்)ரகத்தைத் தனியாகவும் இப்னுஸைத் எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் ஆளனுப்புவீராக! என்றார்கள். அவ்வாறு நான் செய்து நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பினேன். நபி (ஸல்) அவர்கள் வந்து அதன் மேற்புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் (கடன் கொடுத்த) இக்கூட்டத்தினருக்கு அளந்து கொடுப்பீராக! என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். எனது பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாமல் அப்படியே மீதமிருந்தது.

மற்றோர் அறிவிப்பில் பேரீச்சம் குலையை வெட்டிக் கடனை நிறைவேற்று! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.

பாடம் : 52

அளப்பது நல்லதே.

2128 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் உணவுகளை அளந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு அருள்வளம் (-பரக்கத்) செய்யப்படும்.

இதை மிக்தாம் பின் மஅதீ கரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 53

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த (அளவைகளான) ஸாஉ, முத்து ஆகியவற்றில் அருள்வளம் (-பரக்கத்) உள்ளது.

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் வழியாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது.

2129 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகராக்கியது போன்று நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காக பிராத்தித்தது போன்று நான் மதீனாவிற்காக அதன் ஸாஉ, முத்து ஆகியவற்றில் (வளம்ஏற்பட) பிரார்தித்தேன்.

இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2130 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ அருள்வளம் (-பரக்கத்) அளிப்பாயாக! குறிப்பாக அவர்களது ஸாஉ, முத்து ஆகியவற்றில் நீ அருள்வளத்தை அளிப்பாயாக!

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 54

உணவுப் பொருட்களை விற்பதும் பதுக்குவதும்.

2131 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றைத் தமது இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு முன்பு, வழியிலேயே விற்றதற்காக நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அடிக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன்!

2132 தாவூஸ் (ரஹ்) கூறியதாவது:

உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அது எவ்வாறு? என்று நான் கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப்போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்! என்று பதிலளித்தார்கள்.

2133 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஓர் உணவுப் பொருளை வாங்கினால், அது அவரது கைக்கு (முழுமையாக) வந்து சேராத வரை அதை அவர் விற்கக்கூடாது!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2134 ஸுஹ்ரீ (ரஹ்) கூறியதாவது :

 மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள், யாரிடமாவது சில்லறை இருக்கிறதா? என்றுகேட்டார்கள். அப்போது தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம் இருக்கிறது; என்றாலும் ஃகாபாவிலிருந்து கருவூலக் காப்பாளர் வரும்வரை தர முடியாது என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது, உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர!

இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 55

உணவுப் பொருள் கைக்கு வந்து சேருவதற்கு முன் அதை விற்பதும் கைவசம் இல்லாததை விற்பதும்.

2135 இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

 கைக்கு வந்து சேருவதற்கு முன் விற்கக் கூடாது! என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தது, உணவுப் பொருட்களுக்குத் தான்! (ஆயினும்) எல்லாப் பொருட்களுக்கும் இதுபொருந்தும் என்று நான் கருதுகிறேன்!

2136 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் உணவுப் பொருட்களை வாங்கினால், அது முழுமையாக அவரது கைக்கு வந்து சேராத வரை அதை அவர் விற்கக் கூடாது!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 56

குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கியவர், அதைத் தமது இருப்பிடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு முன்பு விற்கக் கூடாது என்பதும் அதற்கு முன்பே விற்பவரை தண்டித்து ஒழுக்கம் கற்பிப்பதும்.

2137 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் காலத்தில், குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்!

பாடம் : 57

ஒரு பொருளையோ அல்லது கால்நடையையோ விலைக்கு வாங்குபவர் விற்றவரிடமே அதை விட்டுவைத்திருந்தா(ர்.அப்போது அது சேதமடைந்து விட்டா)ல் அல்லது கைக்கு வந்து சேருவதற்கு முன் அது இறந்து விட்டால்...?

வியாபார ஒப்பந்தம் ஏற்பட்ட போது உயிருடனும் முழுமையாகவும் இருந்தால் அதன் பிறகு ஏற்படும் சேதத்திற்கு வாங்கியவரே பொறுப்பாளி! என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2138 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்த காலத்தில்) காலையிலோ மாலையிலோ என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல் இருந்த நாட்கள் மிகவும் அரிதாகும்! மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) புறப்பட நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. நபி (ஸல்) அவர்கள் வந்திருக்கும் வியம் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் புதிதாக ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பதால்தான், இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் வந்திருக்கின்றார்கள்! என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்ததும், உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அஸ்மா, ஆயிஷா ஆகிய எனது இரு புதல்வியர் மட்டுமே உள்ளனர்! என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், மதீனாவிற்குப்) புறப்பட(ஹிஜ்ரத் செய்ய) எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் புறப்படும் (ஹிஜ்ரத்தின்) போது நானும் தங்களுடன் வர விரும்புகிறேன்! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன; அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்! எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்! என்றார்கள்.

பாடம் : 58

ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; ஒருவர் விலைபேசிக் கொண்டிருக்கும் போது மற்றொருவர் அதிக விலை பேசக் கூடாது; முன்பு விலை பேசியவர் அனுமதித்தால் அல்லது வியாபாரத்தை முறித்து விட்டால் குறுக்கிடலாம்.

2139 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது!

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2140 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை மணவிலக்கு (தலாக்) செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தனது பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!

பாடம் : 59

ஏலத்தில் விற்பது.

போரில் கிடைத்த படைக்கலன் (-கனீமத்)களை (ஏலம் விட்டு) அதிக விலைக்குக் கேட்பவரிடம் விற்பதை மக்கள் தவறாகக் கருதவில்லை என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2141 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தமக்குச் சொந்தமான அடிமை தமது இறப்புக்குப் பின் விடுதலை (-முதப்பர்) ஆவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்? என்று கேட்டார்கள். அவரை நுஅய்ம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் இன்ன விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்; நபி (ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள்.

பாடம் : 60

வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திவிடுவதற்காக (ஏலம் மற்றும் பிற பேரங்களின் போது) விலை அதிகமாகக் கேட்பது (நஜ்ஷ்).

(மேற்கூறியபடி) மோசடியாக விலையை ஏற்றிவிடுவது செல்லாது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

மோசடியாக விலையை உயர்த்திவிடுபவன் வட்டி உண்பவன் ஆவான்! இது மோசடி ஆகும்! செல்லாததும் அனுமதிக்கப்படாததும் ஆகும்! என்று இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நமது கட்டளையில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2142 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மோசடியாக ஏலம் விடுவதைத் தடை செய்தார்கள்!

பாடம் : 61

தனது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும், தனது உடைமையல்லாதவற்றையும் அளவோ, தரமோ, தன்மையோ தெரியாதவற்றையும் விற்பதும் (பய்உல் ஃகரர்), பிறக்காத உயிரினத்தை விற்பதும்.

2143 இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்துவந்தனர்! இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!) என்று செய்யப்படும் வியாபாரமே இது!

பாடம் : 62

முலாமஸா எனும் வியாபாரம்.

இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2144 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முனாபதா வியாபாரத்தைத் தடை செய்தார்கள்! முனாபதா என்பது, ஒருவர் தமது துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்கு முன் அதை வாங்குபவரை நோக்கி எறிந்து(விட்டால் அதை அவர் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிபந்தனையுடன்) அவரிடம் விற்பதாகும்! மேலும் முலாமஸா எனும் வியாபாரத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்! முலாமஸா என்பது துணியை (விரித்துப் பார்க்காமலேயே அதை) தொட்டவுடன் (வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன்) விற்பனை செய்வதாகும்!

2145 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஆடை அணியும் முறைகள் இரண்டைத் தடைசெய்தார்கள்; அவற்றுள் ஒன்று, ஒரே துணியைப் போர்த்திக் கொண்டு கைகளால் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அமர்வதும் அதையே தோள் புஜத்தில் போட்டுக் கொள்வதுமாகும்! மேலும் முலாமஸா, முனாபதா என்ற வியாபார முறைகளையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

பாடம் : 63

முனாபதா எனும் வியாபாரம்.

இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2146 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முனாபதா, முலாமஸா ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.

2147 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் முலாமஸா, முனாபதா என்ற வியாபார முறைகளையும் தடை செய்தார்கள்.

பாடம் : 64

ஒட்டகம், மாடு, ஆடு மற்றும் கால்நடைகளை விற்பவர், பாலைக் கறக்காமல் (வைத்திருந்து) கனத்த மடியுடன் காட்டி விற்பனை செய்வது கூடாது.

2148 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற்றின் பாலைக் கறக்காமல் விட்டுவைத்திருந்து) மடிகனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணிகளை வாங்கியவர் விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக் கொள்ளலாம்! விரும்பாவிட்டால் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்து விடலாம்! இந்த இரண்டில் எதைச் செய்வதற்கும் அவருக்கு அனுமதி உண்டு!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பில் (விரும்பாவிட்டால்) ஒரு ஸாஉ உணவுப் பொருளுடன் திருப்பிக் கொடுக்கும் இந்த உரிமை (பிராணியை வாங்கிய நாளிலிருந்து) மூன்று நாட்கள் வரையிலும்தான்! என்றும் காணப்படுகிறது.

பேரீச்சம் பழத்தின் ஒரு ஸாஉ என்பதே அதிகமான அறிவிப்புக்களில் காணப்படுகின்றது.

2149 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மடி கனக்கச் செய்யப்பட்ட ஓர் ஆட்டை யாரேனும் வாங்கி, அதைத் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் அத்துடன் ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் சேர்த்துக் கொடுக்கட்டும்! மேலும், (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர் கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!

2150 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(சரக்குகளை ஏற்றிக் கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர் கொண்டு (வழியிலேயே சந்தித்து சரக்குகளை) வாங்காதீர்கள்! ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடாதீர்கள்! வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிட வேண்டும் என்பதற்காகவே விலைகேட்காதீர்கள்! (ஆளமர்த்தி அவ்விதம் விலைகேட்கச் செய்வதும் கூடாது!) கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசிகள் விற்றுக் கொடுக்க வேண்டாம்! ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியை கனக்கச் செய்யாதீர்கள்! இத்தகைய ஆட்டை ஒருவர் வாங்கிப் பால் கறந்து, திருப்தியடைந்தால் வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் அந்த ஆட்டை ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்து விடலாம்! இவ்விரண்டில் ஒன்றைத்தேர்வு செய்யும் உரிமை வாங்கியவருக்குஉண்டு!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 65

மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை வாங்கியவர் விரும்பினால் அதை திருப்பிக் கொடுத்து விடலாம்; ஆனால், (திருப்பித் தரும் போது) கறந்த பாலுக்காக ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்.

2151 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை யாரேனும் வாங்கினால் அதில் பால் கறந்து பார்த்துத் திருப்தியடைந்தால் வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் கறந்த பாலுக்காக ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 66

விபசாரம் செய்யும் அடிமையை விற்பது.

விபசாரம் செய்யும் அடிமையை வாங்கியவர், விரும்பினால் விற்றவரிடமே திருப்பிக் கொடுத்து விடலாம்! என்று ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2152 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்து அது நிரூபணமானால் அவளுக்கு, எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளைதண்டித்து விட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளது எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவது விற்றுவிடட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2153 & 2154 அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

ஓர் அடிமைப் பெண் கற்புடனிருக்காமல் விபச்சாரம் செய்து விட்டால்... (என்ன செய்ய வேண்டும்?) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அவள் விபசாரம் செய்தால் கதையடி கொடுங்கள்; (அதற்குப்) பிறகும் விபசாரம் செய்தால் கசையடி கொடுங்கள்; மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக் கற்றைக்காவது விற்றுவிடுங்கள்! என்றார்கள்.

மூன்றாவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகு அவளை விற்றுவிட வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை! என்று இப்னு ஷிஹாப் அஸ்ýஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 67

ஆண்கள் பெண்களிடம் விற்பதும் வாங்குவதும்.

2155 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது சம்பந்தமான) வியத்தை அவர்களிடம் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்த பின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்! என்று கூறினார்கள். பிறகு, மாலை நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து, அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும், உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்! எனக் கூறினார்கள்.

2156 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (அடிமையாயிருந்த) பரீராவை விலை பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் வந்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள் பரீராவின் எஜமானர்கள், பரீராவுக்கு வாரிசாகும் உரிமையைத் தங்களுக்கு வழங்கினாலே தவிர, அவரை விற்க மாட்டோம் எனக் கூறுகின்றனர்! என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அடிமையின் (மரணத்திற்குப் பின் அவரது) வாரிசாகும் உரிமை (அவரை) விடுதலை செய்தவருக்குத் தான் உரியது! எனக் கூறினார்கள்.

அப்பெண்ணின் கணவர் அடிமையாக இருந்தாரா? அல்லது சுதந்திரமானவராக இருந்தாரா? என்று நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், எனக்குத் தெரியாது! என்று பதிலளித்தார்கள்! என ஹம்மாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 68

கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலியேதும் பெறாமல் விற்றுக் கொடுக்கலாமா? அவருக்குத் துணை செய்யலாமா? அவருக்கு அறிவுரை கூறலாமா?

உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் ஆலோசனை கேட்டால் அவருக்கு அச்சகோதரர் ஆலோசனை வழங்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதற்கு அனுமதி உள்ளது! என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2157 ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் கொடுத்தல், தலைவரின் கட்டளைகளைச் செவியேற்றுக் கட்டுப்படுதல், எல்லா முஸ்லிம்களுக்கும் நல்லதை நாடுதல் ஆகிய விஷயங்களை ஏற்றுச் செயல்படுவதாக நபி (ஸல்) அவர்களிடம் நான் உறுதிமொழி அளித்தேன்!

2158 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்:

(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! என்பதன் பொருள் என்ன? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன்; அதற்கு அவர்கள் இடைத்தரகராக ஆகக் கூடாது! (என்பது தான் அதன் பொருள்!) என பதிலளித்தார்கள் என்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 69

கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது.

2159 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது:

கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

இவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 70

கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி தரகராக நின்று வாங்கிக் கொடுக்கக் கூடாது.

விற்பவர் வாங்குபவர் இருவருக்குமே இடைத் தரகராக இருக்கக் கூடாது என்று இப்னு சீரீன், இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

அரபியர், எனக்கு இந்த ஆடையை வாங்கிக் கொடு! என்று சொல்வதற்கு எனக்கு விற்றுக் கொடு! என்று கூறுவதற்குப் பயன்படுத்தும் சொல்லை (பிஃ லீ ஸவ்பன் எனும் வாக்கியத்தை) கையாள்வார்கள்! என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2160 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! (விலையை உயர்த்துவதற்காக ஆளமர்த்தி அதிக விலை கேட்கச் செய்வதும் கூடாது!) கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2161 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது! என்று எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது!

பாடம் : 71

(சந்தைக்குச் சரக்கு கொண்டுவரும்) வியாபாரிகளை எதிர் கொண்டு வாங்கக் கூடாது! இத்தகைய வியாபாரம் ரத்து செய்யப்படும்; ஏனெனில், இவ்வாறு செய்பவர் அறிந்து கொண்டே செய்தால் அவர் பாவியும் குற்றவாளியுமாவார். இது வியாபாரத்தில் செய்யும் மோசடியாகும். மோசடி கூடாத ஒன்றாகும்.

2162 அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:

வணிகர்களை எதிர் கொண்டு வாங்குவதையும் கிராமத்திலிருந்து சரக்குக் கொண்டு வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

2163 தாவூஹ் (ரஹ்) கூறியதாவது :

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள் என்ன? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவர் அவருக்கு இடைத் தரகராகக் கூடாது என்றார்கள்.

2164 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது:

யாரேனும் மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை வாங்கினால் (திருப்பிக் கொடுப்பதாக இருந்தால்) அத்துடன் ஒரு ஸாஉ (பேரீச்சம்பழகம் அல்லது உணவுப் பொருள்) சேர்த்துக் கொடுக்கட்டும். வியாபாரிகளை எதிர் கொண்டு வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

2165 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக்கூடாது; மேலும் விற்பனைப் பொருட்கள் சந்தைக்கு வந்து இறங்குமுன் வாங்காதீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 72

வியாபாரிகளை எதிர்கொள்வதற்குரிய எல்லை.

2166 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது:

நாங்கள் (சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை எதிர் கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்குவோம். நபி (ஸல்) அவர்கள் அதைக் கடைவீதிக்குக் கொண்டு செல்லாமல் (அதே இடத்தில்) விற்பதைத் தடை செய்தார்கள்.

அபூஅப்தில்லாஹ் (-புகாரீ) கூறுகின்றேன்:

வணிகர்களை எதிர் கொண்டது கடைவீதி துவங்கும் இடத்தில்தான். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

2167 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்கள் உணவுப் பொருட்களைக் கடை வீதி துவங்கம் இடத்தில் வாங்கி அதே இடத்தில் விற்று வந்தனர்; ஆகவே, கடைத் தெருவுக்குள் கொண்டு சொல்லாமல் வாங்கிய இடத்திலேயே விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!

பாடம் : 73

வியாபாரத்தின் போது அனுமதிக்கப்படாத நிபந்தனைகளை விதித்தால்...?

2168 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீரா என்னிடம் வந்து, எனது எஜமானர்கள் வருடத்திற்கு ஒரு ஊக்கியா வீதம் ஒன்பது ஊக்கியாக்கள் செலுத்திய பின் என்னை விடுதலை செய்து விடுவதாக எழுதித் தந்துள்ளனர்; அதற்கு நீங்கள் உதவ வேண்டும்! என்றார். நான் உன் மரணத்திற்குப் பின் உனக்கு வாரிசுதாரராகும் உரிமை எனக்கு இருக்க வேண்டும் என்பதை உன் எஜமானர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்காக அந்தத் தொகையை நான் ஏற்பாடு செய்கிறேன்! எனக் கூறினேன். உடனே, பரீரா தமது எஜமானர்களிடம் சென்றார். அவர்களிடம் அவர் இதைக் கூறிய போது, அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது பரீரா, தம் எஜமானர்களிடமிருந்த திரும்பி வந்து, விஷயத்தை எஜமானர்களிடம் கூறினேன்; அவர்கள் வாரிசுரிமை தமக்கே இருக்க வேண்டும் எனக் கூறி, (நீங்கள் கேட்டதை) நிராகரித்து விட்டனர்! என்று கூறினார். இதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். நானும் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைக் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், பரீராவை நீ வாங்கிக் கொள்! வாரிசுரிமை உனக்கே உரியது! என்று அவர்களிடம் உறுதியாகத் தெரிவித்து விடு! ஏனெனில் (அடிமை இறந்த பின் அவனுக்கு) வாரிசாகும் உரிமை (அவனை) விடுதலை செய்தவருக்கே உரியது! எனக் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். பின்னர், நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத எந்த நிபந்தனையும் வீணானதே; அவை நூறு நிபந்தனைகளானாலும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே நிறைவேற்றத்தக்கது! அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானது! (கட்டுப்படுத்தும் வலிமையுடையது!) நிச்சயமாக, அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்கே உரியது! எனக் கூறினார்கள்.

2169 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அடிமைப் பெண்ணின் எஜமானர்கள், இவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உமக்கு விற்கிறோம்! எனக் கூறினார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறிய போது, அவர்களின் நிபந்தனை உனக்கு தடையாக இராது! ஏனெனில் அடிமைகளுக்கு வாரிசாகும் உரிமை (அவர்களை) விடுதலை செய்தவருக்கே உரியது! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 74

பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழம் விற்பது.

2170 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர!

இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 75

உலர்ந்த திராட்சைக்கு உலந்த திராட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்.

2171 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஸாபனா எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். முஸாபனா என்பது (மரத்திலுள்ள) பேரீச்சம் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் (கொடியிலுள்ள) திராட்சைப் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பதுமாகும்!

2172 & 2173 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஸாபனா எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். முஸாபனா என்பது, மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் (அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு) விற்கும் போது அது அதிகமாக இருந்தால் அது என்னைச் சேர்ந்தது; அது குறைந்தாலும் என்னைச் சேர்ந்தது! என்று கூறி விற்பதாகும்!

நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளை (தோராயமாக) மதிப்பிட்டு, விற்பதற்கு அராயாவில் (மட்டும்தான்) அனுமதி அளித்தார்கள் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். (அராயாவின் விளக்கம் பாடம் 84இல் காண்க).

01.11.2009. 21:46

34-வியாபாரம்2

34-வியாபாரம்

பாடம் : 26

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த அருள்வளமும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும், தான தர்மங்களை (அருள் வளங்களைக் கொண்டு) பெருகச்செய்வான்! (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (எனும் 2:276ஆவது இறைவசனம்)

2087 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்: ஆனால், பரக்கத்(எனும் அருள் வளத்)தை அழித்து விடும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 27

வணிகப் பேரத்தின் போது பொய்சத்தியம் செய்யலாகாது.

2088 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பினார்; அப்போது அவர் (கொள் முதல் செய்யும் போது) கொடுக்காத (பணத்)தைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்: முஸ்லிம்களைக் கவர்(ந்து அவர்களிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது யார் தங்களுடைய உடன்படிக்கை மூலமும் சத்தியங்களின் மூலமும் அற்பக் கிரயத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ.... என்னும் (3:77) இறைவசனம் இறங்கியது!

பாடம் : 28

பொற்கொல்லர்.

ஹரம்-புனித எல்லையிலுள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அப்பாஸ் (ரலி) அவர்கள் இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? அது உலோகத் தொழிலாளர்களுக்குப் பயன்படுகிறதே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இத்கிரைத் தவிர! என்று கூறினார்கள்! என இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்.

2089 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(போரில் எதிரிகளிடமிருந்து கிடைத்த பொருட்கள்-) ஃகனீமத்திலிருந்து கிடைத்த வயதான ஓர் ஒட்டகம் என்னிடம் இருந்தது; நபி (ஸல்) அவர்கள் குமுஸ் நிதியிலிருந்து மற்றோர் ஒட்டகத்தையும் எனக்குக் கொடுத்திருந்தார்கள்! நபி (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமாவுடன் தாம்பத்திய வாழ்க்கையை தொடங்க நான் நாடினேன். (ஆகவே) என்னும் சேர்ந்து இத்கிர் (எனும்) புல்லைக் கொண்டுவருவதற்காக பனூகைனுக்கா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லை பொற்கொல்லர்களுக்கு விற்றுவிட்டு அதன் (வருவாய்) மூலம் என் மணவிருந்தை (-வலிமா) நடத்த நாடினேன்!

2090 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக, அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! (இங்கு போர் செய்வது) எனக்கு முன் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை! எனக்குக்கூட பகலில் சிறிதுநேரம்தான் அனுமதிக்கப்பட்டது! இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக்கூடாது! இங்குள்ள மரங்களை முறிக்கக் கூடாது! இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது! பிறர் தவறவிடும் பொருட்களை அறிவிப்புச் செய்பவர் தவிர, வேறெவரும் எடுக்கக்கூடாது! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்கள் வீடுகளின் கூரைகளுக்கும் பொற்கொல்லர்களுக்கும் பயன்படும் இத்கிரைத் தவிரவா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இத்கிரைத் தவிர! என்றார்கள்.

வேட்டைப் பிராணிகளை விரட்டுவது என்றால் என்னவென்று உமக்குத் தெரியுமா? நிழலில்படுத்திருக்கும் அதை விரட்டிவிட்டு அந்த இடத்தில் நீங்கள் தங்குவதாகும்! என்று இக்ரிமா (ரஹ்) கூறுகிறார்கள்.

மற்றோர் அறிவிப்பில் எங்கள் அடக்கக்குழி (-கப்று)களுக்கும் பொற்கொல்லர்களுக்கும் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

பாடம் : 29

பொற்கொல்லரும் கருமானும்.

2091 கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்)தர மாட்டேன்! என்றான். நான் அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படாத வரை நான் முஹம்மத் அவர்களை நிராகரிக்க மாட்டேன்! எனக் கூறினேன். அதற்கவன் நான் மரணித்து எழுப்பப்படும் வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்! என்றான்.

அப்போது தான் நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு (மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்! என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டுவிட்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்படவேண்டுமென்று) கருணையாளனான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கின்றானா? எனும் (19 :77, 78ஆகிய) இறைவசனங்கள் அருளப்பெற்றன.

பாடம் : 30

தையல்காரன்.

2092 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்த இறைச்சித் துண்டுகளும் சுரைக்காயும் போடப்பட்ட குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்: நபி (ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை நான் பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகிவிட்டேன்!

பாடம் : 31

நெசவுத் தொழிலாளி.

2093 அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் ஒரு பெண்மணி (நபி ளஸல்ன அவர்களிடம்) புர்தா(சால்வை) ஒன்றைக் கொண்டு வந்தார்! எனக் கூறிவிட்டு, புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். ஆம்! அது கரைவைத்து நெய்யப்பட்ட சால்வையாகும்! என்று கூறப்பட்டது. தொடர்ந்து சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப் பெண்மணி, அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு அணிவிப்பதற்காக இதை நான் என் கையால் நெய்தேன்! என்றார். நபி (ஸல்) அவர்கள், தமக்கு அது தேவைப்பட்டதால் அதைப் பெற்றுக் கொண்டார்கள். (அவர்கள் உள்ளே சென்று விட்டு) எங்களிடம் திரும்பி வந்த போது அதை வேட்டியாக அணிந்திருந்தார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இதை நான் அணிவதற்காக எனக்குத் தாருங்கள்! என்றார். நபி (ஸல்) அவர்கள் சரி தருகிறேன்! என்று சொல்லிவிட்டு, சபையில் அமர்ந்திருந்தார்கள். பிறகு(உள்ளே சென்று விட்டுத்) திரும்பி வந்து அதை சுருட்டி (அதைத் தமக்குத் தரும்படி) கேட்ட மனிதருக்கு அதை அனுப்பி வைத்து விட்டார்கள். அப்போது அவரிடம் மக்கள், நீர் செய்தது நன்றன்று; கேட்பவரை வெறுங்கையாக திருப்பியனுப்ப மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களிடம் அதை கேட்டு விட்டீரே! எனக் கூறினர். அதற்கு அம்மனிதர், நான் இறக்கும் நாளில் அது எனக்கு (எனது உடலில் அணிவிக்கப்படும்) கஃபனாக ஆக வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்டேன்! என்றார். அது அவ்வாறே, அவரது கஃபனாக ஆனது!

பாடம் : 32

தச்சர்.

2094 அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சில மனிதர்கள் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் வந்து நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (-மிம்பர்) பற்றிக் கேட்டனர். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் -அப்பெண்மணியின் பெயரை சஹ்ல் (ரலி) கூறினார்கள்- தச்சு வேலை செய்யும் உனது பணியாளரிடம் நான் மக்களுக்கு உரையாற்றும் போது அமர்ந்து கொள்வதற்கேற்ற மேடையைச் செய்து தரச் சொல் என்று சொல்லி அனுப்பினார்கள். அப்பெண் தமது பணியாளரிடம் இதைக் கூறினார். அப்பணியாளர் ஃகாபா எனும் பகுதியில் உள்ள (சவுக்கு)மரத்தில் அதைச் செய்து கொண்டு வந்தார். அப்பெண்மணி அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தனுப்பினார். அதை உரிய இடத்தில் வைக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு, அதன் மேல் அமர்ந்தார்கள் என விடையளித்தார்கள்.

2095 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கிறார்; நீங்கள் அமர்ந்து கொள்வதற்கேற்ப (மேடை) ஒன்றை நான் உங்களுக்குச் செய்து தரட்டுமா? என்று கேட்டார். உன் விருப்பம் என நபி (ஸல்) அவர்கள் கூற, அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவுமேடை (மிம்பர்) தயார் செய்தார். வெள்ளிக்கிழமை வந்ததும், அந்த மேடையில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முன்னர் நின்று உரை நிகழ்த்திய பேரீச்ச மரக்கட்டை இரண்டாகப் பிளந்து விடுமளவிற்குச் சப்தமிட்டது. நபி (ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி அதைத் தொட்டுத் தம்முடன் இணைத்துக் கொண்டார்கள். அமைதிப்படுத்தப்படும் குழந்தை அழுவது போன்று அது அழுது, அழுகையை நிறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் தான் செவிமடுத்துவந்த போதனையினால்தான் (இனி அது தன்மீது நிகழ்த்தப்படாதே என்றெண்ணித் தான்) அது அழுதது என்றார்கள்.

பாடம் : 33

தலைவர் தமக்குத் தேவையானவற்றைத் தாமே நேரடியாக வாங்குவது.

நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்னு உமர் (ரலி) தமக்குத் தேவையானதை நேரடியாக வாங்கியிருக்கிறார்கள்.

இணைவைப்பாளர் ஒருவர் ஆட்டு மந்தையைக் கொண்டு வந்த போது அவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை வாங்கினார்கள் என்று அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.

2096 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் கடனாக உணவுப் பொருளை வாங்கினார்கள்; தமது கவசத்தை அவரிடம் அடைமானமாக வைத்தார்கள்.

பாடம் : 34

கழுதை மற்றும் கால்நடைகளை வாங்குதல்

உரிமையாளர் ஒட்டகத்தின் மீதோ வேறொரு கால்நடையின் மீதோ அமர்ந்திருக்கும் நிலையில் ஒருவர் அதை வாங்கினால், உரிமையாளர் அதிலிருந்து இறங்குவதற்கு முன் அது வாங்கியவரின் கைக்குச் சென்றுவிட்டதாக ஆகுமா?

நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் இந்த முரட்டு ஒட்டகத்தை எனக்கு விலைக்குத்தாரும்! என்றார்கள்.

2097 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். என்ன விஷயம்(ஏன் பின்தங்கிவிட்டீர்)? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்துபோனதால் என்னைப் பின்தங்க வைத்து விட்டது; அதனால் நான் பின்தங்கிவிட்டேன்! என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கிதலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத் தான்! என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமேமே! என்று கூறினார்கள்.

நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்! என்றேன். நபி (ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக! என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா? என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்!) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்த போது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போது தான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச்சென்றுவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனத்திற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள்.

பாடம் : 35

அறியாமைக் காலத்தில் இருந்த கடைவீதிகளில் இஸ்லாம் வந்த பிறகும் மக்கள் வியாபாரம் செய்தனர்.

2098 இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது :

உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அந்த இடங்களில் வியாபாரம் செய்வது பாவம் என்று மக்கள் கருதினர். அப்போது அல்லாஹ், உங்கள் இறைவனின் அருளைத் தேடிக் கொள்வது உங்கள்மீது குற்றமாகாது! எனும் (2:198ஆவது) வசனத்தை அருளினான்.

இவ்வசனத்துடன் ஹஜ்ஜுக் காலங்களில் என்ற வார்த்தையையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சேர்த்து ஓதியிருக்கிறார்கள்! என்று அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 36

அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தையும் சிரங்கு பிடித்த ஒட்டகத்தையும் வாங்குதல்.

அடங்காத் தாகமுள்ளது என்பதில் எல்லாப் பொருட்களிலும் நடுத்தரத்துக்கு மாற்றமானவையும் அடங்கும்.

2099 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத் தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தை நவ்வாஸுடைய கூட்டாளி ஒருவரிடமிருந்து வாங்கினார்கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று அந்த ஒட்டகத்தை நாம் விற்றுவிட்டோம்! என்றார். நவ்வாஸ் யாரிடம் விற்றீர்? என்று கேட்டார். அதற்கு அவர், இன்ன பெரியாரிடம் விற்றேன்! என்றார். அதற்கு நவ்வாஸ் உமக்கு கேடு உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தாம்! என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார். எனது பங்காளி அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தை உங்களிடம் விற்று விட்டார்; அவர் உங்களை யாரென்று அறியவில்லை! என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் அப்படியானால், அதை ஓட்டிச் செல்வீராக! என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்ல முயன்றதும், இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை விட்டுவிடுவீராக! தொற்று நோய் கிடையாது! என்ற நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்! (இந்த நோயுள்ள ஒட்டகத்தினால் எனது ஏனைய ஒட்டகங்களுக்கு பாதிப்பு ஏற்படாது) என்றார்கள்.

பாடம் : 37

கலவரச் சூழ்நிலையிலும் இதர சூழ்நிலையிலும் ஆயுதங்களை விற்பது.

கலவரச் சூழ்நிலையில் ஆயுதங்கள் விற்பனை இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்கள் வெறுத்திருக்கிறார்கள்.

2100 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹுனைன் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நான் (எனது) கவசத்தை விற்று, அதைக் கொண்டு பனூசலிமா குலத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு தோட்டத்தை வாங்கினேன். நான் இஸ்லாத்திற்கு வந்த பின் வாங்கிய முதல் சொத்தாகும் அது!

பாடம் : 38

கஸ்தூரி மற்றும் நறுமணப் பொருள் வியாபாரம்.

2101 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 39

குருதி உறிஞ்சி எடுப்பவர் பற்றிய குறிப்பு.

2102 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதைபா என்பார் நபி (ஸல்) அவர்களுக்கு குருதிஉறிஞ்சி எடுத்தார்; அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்த அபூதைபா (அடிமையாக இருந்தால்) அவரது எஜமானர்களிடம் அவரது நிலவரியைக் குறைக்குமாறு உத்தரவிட்டார்கள்!

2103 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒருவரிடம்) குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். குருதிஉறிஞ்சி எடுத்தவருக்குக் (கூலி) கொடுத்தார்கள். அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் (அவ்வாறு கூலி) கொடுத்திருக்க மாட்டார்கள்!

பாடம் : 40

ஆண்களும் பெண்களும் அணியத் தகாத ஆடைகளை விற்பது.

2104 இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறியதாவது :

கோடு போடப்பட்ட (மேலங்கியும் கீழங்கியும் அடங்கிய) ஒரு ஜோடிப் பட்டாடையை உமர் (ரலி) அவர்கள் அணிந்திருப்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், இதை நீர் அணிவதற்காக நான் உம்மிடம் அனுப்பவில்லை! (மறுமையின்) பாக்கியமற்றவர்கள் தாம் இதை அணிவார்கள்! நீர் இதில் பயன்பெற்றுக் கொள்ள வேண்டும்; அதாவது விற்க வேண்டும் என்பதற்காகவே உமக்குக் கொடுத்தனுப்பினேன்! என்று கூறினார்கள்.

2105 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உருவங்கள் வரையப்பட்ட திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து விட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்? என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் இது என்ன திண்டு? என்று கேட்டார்கள். நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்! என்றேன். நபி (ஸல்) அவர்கள், இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே (அருளைச் சுமந்துவரும்) வானவர்கள் வர மாட்டார்கள்! எனக் கூறினார்கள்.

பாடம் : 41

பொருளின் உரிமையாளரே விலை கூறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்.

2106 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ நஜ்ஜார் குலத்தினரே! உங்கள் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதில் பேரீச்ச மரங்களும் பாழடைந்த கட்டடங்களும் இருந்தன!

பாடம் : 42

வியாபாரத்தை எவ்வளவு நாட்களில் முறித்துக் கொள்ளலாம்?

2107 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (வியாபாரம் பேசிய தலத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமை படைத்தவர்களாவர்! வியாபாரத்தை உத்தரவாத காலத்திற்குள் முறிக்கலாம் என் முன்பே பேசிக் கொண்டால் முறித்துக் கொள்ளலாம்!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு விருப்பமான ஒரு பொருளை வாங்கினால் உடனே விற்றவரைப் பிரிந்து விடுவார்கள் என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2108 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் பிரியாதவரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ள) உரிமை உண்டு.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 43

வியாபாரத்தை முறித்துக் கொள்ள ஒரு காலக்கெடு கூறப்படாவிட்டால் அந்த வியாபாரம் செல்லுமா?

2109 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரிடம் (உறுதிப்படுத்துவதோ முறிப்பதோ) உமது விருப்பம் என்று கூறினாலும் முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.

பாடம் : 44

விற்பவரும் வாங்குபவரும் பிரியாதவரை முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.

இப்னு உமர் (ரலி), ýரைஹ், அபீ, தாவூஸ், அதாஉ, இப்னு அபீமுலைக்கா (ரஹ்...) ஆகியோர் இவ்வாறே கூறுகின்றனர்.

2110 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் பிரியாதவரை (முறித்துக் கொள்ளும்) உரிமை பெற்றிருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அவர்களுக்கு அருள்வளம் (-பரக்கத்) அளிக்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி(க் குறையை) மறைத்தால் அவர்களுக்கு வியாபாரத்தின் அருள்வளம் நீக்கப்படும்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2111 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(எப்போது வேண்டுமானாலும் முறித்துக் கொள்ளலாம் என்று) உரிமை வழங்கப்பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியாபாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் பிரியாத வரை ஒவ்வொருவரும் முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 45

வியாபாரம் முடிந்தபின் ஒருவர் மற்றவருக்கு முறித்துக் கொள்ளும் உரிமை வழங்கினால் (அவர் முறித்துக் கொள்ளாவிட்டால்) வியாபாரம் ஏற்பட்டுவிட்டது.

2112 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு நபர்கள் ஒருவருக் கொருவர் வியாபாரம் செய்தால் அவ்விருவரும் பிரியாமல் சேர்ந்து இருக்கும் வரை முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளார்கள். ஒருவர் மற்றவருக்கு முறித்துக் கொள்ளும் உரிமையை வழங்கி அதை அவர் பயன்படுத்தாமல் இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டால் வியாபாரம் ஏற்பட்டுவிட்டது; இருவரும் ஒப்பந்தத்தை முடித்தபின் வியாபாரத்தை முறிக்காமல் பிரிந்து விட்டால் அப்போதும் வியாபாரம் ஏற்பட்டுவிட்டது.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 46

விற்பவருக்கு மட்டும் முறித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டால் அந்த வியாபாரம் செல்லுமா?

2113 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்கக் கூடியவரும் வாங்கக்கூடியவரும் பிரியாதவரை அவர்களுக்கிடையே வியாபாரம் ஏற்பட்டுவிடுவதில்லை; -முறித்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டு அதைப் பயன்படுத்தாவிட்டால் தவிர!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2114 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் பிரியாதவரை முறித்துக் கொள்ளும் உரிமை உண்டு.விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அருள்வளம் (-பரக்கத்) செய்யப்படும். அவர்கள் பொய் சொல்லி மறைத்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்கலாம். ஆனாலும் வியாபாரத்தின் அருள்வளம் (-பரக்கத்) அழிக்கப்பட்டுவிடும்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நான் பதிவு செய்த ஏட்டில் இவ்வாறு மூன்று முறை உரிமையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளது என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 47

ஒருவர் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, விற்றவர் ஆட்சேபிக்காத நிலையில் இருவரும் பிரிவதற்கு முன்னால் உடனே அன்பளிப்பாக வழங்குவதும், ஓர் அடிமையை வாங்கி உடனேயே விடுதலை செய்வதும்.

ஒருவர் விற்பவரின் திருப்தியுடன் ஒரு பொருளை வாங்கி, பிறகு அவர் அதை விற்றால் அந்த வியாபாரம் செல்லும்; இலாபம் இரண்டாவதாக விற்றவருக்கு உரியது என்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2115 அப்தல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். நான் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகத்தின் மீது (பயணம் செய்து கொண்டு) இருந்தேன். அது என்னை மீறிக் கூட்டத்தினருக்கு முன்னால் சென்றது. உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள்; மீண்டும் அது முன்னே சென்றது. அப்போதும் உமர் (ரலி) அவர்கள் அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், இதை எனக்கு விற்றுவிடுவீராக!என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இது உங்களுக்கு உரியது! என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், எனக்கு இதை விலைக்குத் தருவீராக! என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அதை விற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என்னிடம்), அப்துல்லாஹ் பின் உமரே! இதுஉமக்குரியது! நீர் விரும்பியவாறு இதைப் பயன்படுத்திக் கொள்ளும்! என்றார்கள்.

2116 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (-கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களிடம் வாதில் குரா எனும் இடத்தில் உள்ள எனது சொத்தை கைபரில் அவர்களுக்கு இருந்த ஒரு சொத்திற்குப் பகரமாக விற்றேன். நாங்கள் வியாபாரம் பேசி முடித்ததும் உடனடியாக அவர்களது வீட்டிலிருந்து வெளியேறி, வந்தவழியே திரும்பிவிட்டேன். அவர்கள் வியாபாரத்தை முறித்து விடுவார்களோ என்ற அச்சமே அதற்குக் காரணமாகும். (ஏனெனில் (வியாபாரம் பேசிய தலத்தை விட்டுப்) பிரியாத வரை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் (வியாபாரத்தை) முறித்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்பது நபி வழியாக இருந்தது! வியாபாரம் முடிவானதும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு நான் துரோகம் செய்து விட்டதாக கருதினேன்; ஏனெனில், மதீனாவிலிருந்து மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள ஸமூத் குலத்தார் வசித்த பகுதிக்கு அவர்களை நான் தள்ளினேன். அவர்கள் (அங்கிருந்து) மூன்று இரவுகள் தொலைவுள்ள மதீனாவுக்கு என்னைத் தள்ளினார்கள்!

பாடம் : 48

வியாபாரத்தில் மோசடி கூடாது.

2117 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின் போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் ஏமாற்றுதல் இருக்கக் கூடாது! என்று (முன்பே) கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!) என்றார்கள்.

பாடம் : 49

கடைவீதிகள்.

நாங்கள் மதீனாவுக்கு வந்த போது வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி எதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். கைனுக்கா எனும் கடைவீதி இருக்கிறது! என்று சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் என அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்! என்று அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

கடை வீதியின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இதை நான் அறிந்திட முடியாமல் என் கவனத்தை திசைதிருப்பிவிட்டன! என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2118 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர்முதல், கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர்முதல், கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டுபோவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடைவீதிகளும் இருக்குமே! என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர்களில் முதலாமவர்முதல், கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்! என்றார்கள்.

2119 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ கடைவீதியிலோ தனியாகத் தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்! ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார். தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை. தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை! அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகிறது! மேலும், உங்களில் ஒருவர் தொழக் கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றனர்! அங்கே, அவருக்கு காற்றுப் பிரிந்து, உளூ நீங்கிவிடாமலிருக்கும் வரை, (பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யாமலிருக்கும்வரை, இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக! என்று வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்! உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2120 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அபுல் காசிமே! (காஸிமின் தந்தையே!) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) நான் இவரைத் தான் அழைத்தேன்! (தங்களை அழைக்கவில்லை!) என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! எனது(-அபுல்காசிம் எனும்) குறிப்புப்பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள்! என்றார்கள்.

2121 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு மனிதர் பகீஉ எனுமிடத்தில் அபுல்காசிமே! என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பிய போது உங்களை அழைக்கவில்லை என்றார். நபி (ஸல்) அவர்கள், என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்; எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள்! என்றார்கள்.

2122 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. பனூ கைனுக்கா கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா? இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா? என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார் என்றோ அல்லது மகனைக் நீராட்டிக் கொண்டிருக்கிறார் என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹசன்(ரலி)அவர்கள்) ஓடிவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். இறைவா! இவனை நீ நேசிப்பாயாக! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக! என்று கூறினார்கள்.

2123 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவரும் வியாபாரிகளிடம் வழிமறித்து வாங்கிக் கொண்டிருந்தனர். உணவுப் பொருட்களை, விற்பனை செய்யப்படும் இடத்திற்கு (-சந்தைக்கு) கொண்டுசென்ற பின்புதான் விற்க வேண்டும்; வாங்கிய இடத்திலேயே அவற்றை விற்கக் கூடாது! என்று வியாபாரிகளைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைத்தார்கள்!

2124 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உணவுப் பொருளை வாங்கினால், அது (முழுமையாக) கைக்கு வந்துசேருவதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.


01.11.2009. 21:44

34-வியாபாரம்1