இறை நம்பிக்கை (ஈமான்)

 

அத்தியாயம்: 2

2- இறை நம்பிக்கை (ஈமான்)

பாடம் : 1

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) கூறியது.

நம்பிக்கை (ஈமான்) என்பது, சொல்லும் செயலும் இணைந்ததே ஆகும். அது கூடலாம்; குறையலாம். (இதற்கான ஆதாரங்கள் வருமாறு:)

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:

(1) தமது நம்பிக்கையுடன் அவர்கள் (மேலும்) நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான். (48:4)

(2) நாம் அவர்களுக்கு (அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்) நேர்வழியை அதிகமாக்கினோம். (18:13)

(3) (ஈமான் மூலம்) நேர்வழியைக் கடைப்பிடிப்போருக்கு நேர்வழியை (மேலும்) அல்லாஹ் அதிகமாக்குகின்றனான். (19:76)

(4) யார் (ஈமான் மூலம்) நேர்வழியைக் கடைப்பிடிக்கின்றாரோ அவருக்கு (அல்லாஹ் மேலும்) நேர்வழியை அதிகமாக்குகின்றான். மேலும், அவருக்கு இறையச்சத்தையும் வழங்குகிறான். (47:17)

(5) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (74:31)

(6) ஏதேனும் ஓர் அத்தியாயம் அருளப்பெற்றால் யாருக்கு இது ஈமானை அதிகமாக்கப்போகிறது? என்று (கேலியாகக்) கேட்பவர்களும் (நயவஞ்சகர்களான) அவர்களில் உண்டு. யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அது ஈமானை அதிகமாக்கும். (9:124).

புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:

(7) (உங்கள் பகைவர்களான) அவர்களுக்கு அஞ்சுங்கள் என்று மக்கள் யாரிடம் கூறினார்களோ அவர்களுக்கு ஈமானை அதிகமாக்கியது. (3:173)

(8) இந்நிகழ்ச்சி ஈமானையும் கீழ்ப்படிதலையும் அவர்களுக்கு அதிமாக்கியது (33:22).

அல்லாஹ்வுக்காக (ஒருவரை) நேசிப்பதும் அல்லாஹ்வுக்காக (ஒருவரை) கோபிப்பதும் இறை நம்பிக்கையில் அடங்கும் (என்கிறது ஒரு நபிமொழி).

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (தம் ஆளுநர்) அதீ பின் அதீ (ரஹ்) அவர்களுக்கு (பின்வருமாறு கடிதம்) எழுதினார்கள்:

ஈமானுக்குக் கடமைகள், கொள்கைகள், விலக்குகள், விரும்பத்தக்க (நபி)வழிகள் ஆகியன உள்ளன. எனவே, எவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றுகிறாரோ அவர் (தமது) ஈமானை முழுமைப்படுத்திக் கொண்டவராவார். எவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றவில்லையோ அவர் (தமது) ஈமானை முழுமைப்படுத்திக் கொள்ளவில்லை. நான் (இன்னும் சில காலம் இவ்வுலகில்) வாழ்வேனேயானால் நீங்கள் (அதன்படி) செயல்படுவதற்காக அவற்றை உங்களுக்கு விளக்குவேன். (ஒருவேளை) நான் அதற்குள் இறந்து விட்டால் (காலமெல்லாம்) நான் உங்களுடனேயே இருக்க வேண்டுமென்ற பேராசை பிடித்தவனல்லன்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள் (என அல்லாஹ் கூறுகின்றான்) :

...எனினும், என் நம்பிக்கை அதிகமாகி என் உள்ளம் நிம்மதி பெறுவதற்காகவே (இறந்தவர்களை உயிர்ப்பித்துக்காட்டுமாறு உன்னிடம் வேண்டினேன்). (2:260)

(அஸ்வத் பின் ஹிலால் (ரலி) அவர்களிடம்) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், எம்முடன் நீங்களும் அமருங்கள்; நாம் சிறிது நேரம் இறை நம்பிக்கைகொள்வோம் என்று சொன்னார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், உறுதியான நிலைதான் முழுநம்பிக்கை ஆகும் என்று கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உள்ளத்தில் (இது தவறாக இருக்குமோ என்ற) உறுத்தலைக் கூட கைவிடாத வரை உண்மையான இறையச்சத்தை ஓர் அடியார் அடைய முடியாது.

எந்த மார்க்கத்தை அவன் நூஹுக்கு வகுத்தளித்திருந்தானோ அதே மார்க்கத்தைத் தான் உங்களுக்கும் அவன் நிர்ணயித்திருக்கின்றான் எனும் (42:13ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

முஹம்மதே! உமக்கும் (நூஹ் நபியாகிய) அவருக்கும் நாம் ஒரே மார்க்கத்தையே அறிவுறுத்தியிருக்கின்றோம் என இறைவன் நபி(ஸல்) அவர்களிடம் கூறினான்.

உங்களில் ஒவ்வொருவருக்கும் நாம் ஒரு ஷிர்அத்(ஷரீஅத்)தையும் ஒரு மின்ஹாஜையும் ஏற்படுத்தியிருக்கிறோம் எனும் (5:48அவது) வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியையும் நடைமுறையையும் என்று விளக்கமளித்தார்கள்.

பாடம் : 2

பிரார்த்தனை (துஆ) என்பது இறை நம்பிக்கையே (ஈமான்) ஆகும்.

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! மக்களிடம்) கூறுக: உங்களது பிரார்த்தனை (மட்டும்) இல்லாதிருந்தால், என் இறைவன் உங்களை(ச் சற்றும்) பொருட்படுத்தியிருக்க மாட்டான் (25:77).

(பொதுவாக) அகராதியில் துஆ எனும் சொல்லுக்கு இறை நம்பிக்கை (ஈமான்) என்றே பொருள்.

8. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.

2. தொழுகையை நிலைநிறுத்துவது.

3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.

4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.

5. ரமளானில் நோன்பு நோற்பது.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 3

இறை நம்பிக்கைக்குரிய செயல்கள்.

உயர்வுக்குரிய அல்லாஹ் கூறுகிறான்:

கிழக்கையோ மேற்கையோ நோக்கி உங்களுடைய முகங்களைத் திருப்புவது (மட்டும்) நற்பணி அன்று. ஆயினும், நற்செயல் புரிவோர் (இவர்களே: அவர்கள்) அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் உறுதியாக நம்புவர். (தமக்கு) விருப்பமாக இருப்பினும் பொருளை உறவினர்கள்அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள், யாசகர்கள் ஆகியோருக்கும், (கடன் மற்றும் அடிமை விலங்கில்) சிக்குண்டவர்களி(ன் விஷயத்தி)லும் வழங்குவர். மேலும் அவர்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்துவருவர். இன்னும் வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவர். கடும் வறுமையிலும் பிணியிலும் போர்க்காலத்திலும்கூடப் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள். இத்தகையோரே உண்மையாளர்கள். அவர்கள்தான் இறையச்சமுடையோர். (2:177)

(அல்லாஹ் கூறுகிறான்:)

இறை நம்பிக்கையாளர்கள் வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்; வீணானவற்றிலிருந்து விலகியிருப்பார்கள்... (23:1-11)

9. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையே.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 4

எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவர்தான் முஸ்லிம்.

10. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 5

இஸ்லாத்தில் சிறந்தது எது?

11. அபூமூசா (அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள், இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது) என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 6

உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம்.

12. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 7

ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

13. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 8

இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

14. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது பிள்ளையையும் விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

15. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 9

ஈமானின் சுவை.

16. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 10

அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் அடையாளமாகும்.

17. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 11

18. பத்ருப்போரில் கலந்து கொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்து விட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று சொன்னார்கள்.

உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

பாடம் : 12

(மார்க்கத்தைக் காப்பாற்ற) குழப்பங்களிலிருந்து வெருண்டோடுவது மார்க்கத்தின் ஓரம்சமாகும்.

19. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(விரைவில்) ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தை (குழப்பங்களின் வடிவில் வரும்) சோதனைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மலைகளின் உச்சிக்கும் மழைபொழியும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் தனது ஆடுகளை ஓட்டிக் கொண்டு வெருண்டோடுவார். அப்போது ஒரு முஸ்லிமின் செல்வத்திலேயே சிறந்ததாக (அந்த) ஆடுகள்தான் இருக்கும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 13

நான் உங்கள் அனைவரிலும் இறைவனைப் பற்றி மிக அதிகமாக அறிந்தவன் ஆவேன் எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று.

(இறைவனையும் இறைநெறியையும்) அறிதல் என்பது உள்ளத்தின் செயலே. ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ், உங்களுடைய வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான். ஆனால், நீங்கள் (நன்கு அறிந்து) உளப்பூர்வமாகச் செய்தவற்றுக்காகவே உங்களை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மிக்க நிதானமானவனுமாவான் (2:225) என்று கூறுகின்றான்.

20. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நல்லவற்றை(ச் செய்யுமாறு) மக்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களால் இயன்ற செயல்களையே கட்டளையிடுவார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். (ஆனால்,) எங்கள் நிலையோ உங்கள் நிலையைப் போன்றதன்று (நாங்கள் குறைந்த அளவில் நல்லறங்கள் புரிந்தால் போதாது; அதிகமாகச் செய்யவேண்டிய நிலையிலுள்ளோம்) என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோபத்தின் அறிகுறி அவர்களது முகத்தில் காணப்பட்டது. பிறகு உங்கள் அனைவரைவிடவும் நான் (அல்லாஹ்வை) நன்கு அஞ்சி நடப்பவனும் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவனும் ஆவேன் என்று கூறினார்கள்.

பாடம் : 14

நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பது போன்று ஒருவர் இறைமறுப்பிற்குத் தாம் திரும்புவதை வெறுப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

21. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேரத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின், அந்த இறைமறுப்பிற்கேத் திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் விசப்படுவதைப் போன்று வெறுப்பது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 15

இறை நம்பிக்கையாளர்களிடையே செயல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள்.

22. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில் விசாரணைகள் முடிந்தபின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பிறகு உள்ளத்தில் கடுகளவேனும் இறை நம்பிக்கை (ஈமான்) இருந்தோரை (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் (கருகிக்) கறுத்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். பின்னர் மழை நதியில் (நஹ்ருல் ஹயா) அல்லது ஜீவநதியில் (நஹ்ருல் ஹயாத்) அவர்கள் இடப்படுவார்கள். இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.(அவ்வாறு அவர்கள் அந்த நதியில் போடப்பட்டதும்) ஓடைக்கரையில் விதைப்பயிர் முளைப்பது போல (நிறம்) மாறிவிடுவார்கள். அவை வளைந்து நெளிந்து மஞ்சள் நிறத்தில் (பொலிவுடன்) இருப்பதை நீர் கண்டதில்லையா?

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸை வுஹைப் பின் காலித் (ரலி) அவர்கள் (மழைநதி அல்லது ஜீவநதி என்று சந்தேகத்தோடு அறிவிக்காமல்) ஜீவநதி என்று (உறுதியுடன்) அறவிக்கிறார்கள். ஆயினும் (கடுகளவு இறை நம்பிக்கை என்பதற்குப் பதிலாக) கடுகளவு நன்மை என்று அறிவித்தார்கள்.

23. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் உறங்கிக் கொண்டிருக்கும் போது (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்கு எடுத்துக்காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும், மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் அவர்கள் (தரையில்) இழுபடும் அளவுக்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்கள் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தச் சட்டைகள் அவர்களுடைய) மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 16

வெட்கம் இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்.

24. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கமும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமே என்று கூறினார்கள்.

பாடம் : 17

(இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையையும் நிலைநிறுத்தி, ஸகாத்தையும் வழங்கிவந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் எனும் (9:5ஆவது) இறைவசனம்.

25. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காதவரை (இணைவைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 18

இறை நம்பிக்கை (ஈமான்) என்றாலே அது நற்செயல்தான் என்று சிலர் வாதிடுகின்றனர்.

ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ், இது தான் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்ததற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட சொர்க்கமாகும் (43:72) என்று கூறுகின்றான்.

உம் இறைவன் மீதாணையாக! அவர்கள் அனைவரிடமும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிப்போம் எனும் (15:92ஆவது) இறைவசனத்திற்கு விளக்கமளிக்கையில் (அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி என்பதற்கு) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனும் நம்பிக்கை பற்றி விசாரிப்போம் என்று இப்னு உமர் (ரலி), முஜாஹித் (ரஹ்) போன்ற மார்க்க அறிஞர்களில் பலர் கூறியிருக்கிறார்கள்.

(சொர்க்க வாழ்வு பற்றி பேசிவிட்டு) அல்லாஹ் இது போன்றவற்றுக்காகவே (உலகில்) செயல்படுபவர்கள் செயல்படட்டும் (37:61) என்று கூறுகிறான்.

26. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று கேட்கப்பட்ட போது, இறைவழியில் அறப்போர் புரிவது என்றார்கள். பிறகு எது? என்று கேட்கப்பட்ட போது, ஏற்றுக் கொள்ளப்பட்ட (பாவச்செயல் கலவாத) ஹஜ் என்று சொன்னார்கள்.

பாடம் : 19

மனப்பூர்வமாக அன்றி, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, உயிருக்குப்பயந்தோ இஸ்லாத்தை ஏற்றால் (அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாது).

ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (நபியே!) நாங்களும் ஈமான் கொண்டுவிட்டோம் என்று கிராமவாசிகளில் சிலர் (உம்மிடம்) கூறினார்கள். நீர் கூறும்: நீங்கள் உண்மையில் ஈமான் கொள்ளவில்லை; ஆயினும் நாங்கள் (இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஏற்படும் இழிவிலிருந்து) தப்பித்துக் கொண்டோம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்! என்று (49:14) கூறுகின்றான்.

மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படும். ஏனெனில் புகழோங்கிய அல்லாஹ், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட ஒரே) மார்க்கம் இஸ்லாம் தான்(3:19) என்று கூறுகின்றான்.

27. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை (அவருக்கு கொடுக்காமல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான், அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகின்றேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை முஸ்லிம் (இறைநெறியில் நடப்பவர்) என்று சொல் என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்தபோது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகிறேன் என்றேன். அதற்கு அலலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு, சஅத்! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். (அவருக்கு நான் கொடுக்காதிருந்தால் இல்லாமையால் அவர் குற்றங்கள் எதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான் என்றார்கள்.

பாடம் : 20

சலாமைப் பரப்புவதும் இஸ்லாத்தின் ஓர் அம்சமே.

அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தார்மீக நேர்மையுடன் நடப்பது; உலகெங்கிலும் சலாமைப் பரப்புவது; வறுமை வயப்பட்டிருக்க (நல்வழியில்) செலவளிப்பது ஆகிய முப்பண்புகளை எவர் (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டாரோ அவர் நிச்சயமாக ஈமானையே (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டவராவார்.

28. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் சொல்வதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 21

கணவனின் உதவிகளுக்கு நன்றி செய்யாமையும்; (இறை) நிராகரிப்பு என்பது ஏற்றத் தாழ்வுடையது என்பதும்.

இது குறித்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

29. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (நான் சூரிய கிரகணத் தொழுகையில் இருந்தபோது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம்பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர் என்று கூறினார்கள். அப்போது இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள்? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், கணவனை நிராகரிக்கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டு விட்டாளானால் உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை என்று பேசிவிடுவாள் என்றார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 22

பாவங்கள் (இஸ்லாத்திற்கு முந்தைய) அறியாமைக் காலத்துச் செயல்களாகும்.

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதைத் தவிர, மற்ற பாவங்களைச் செய்தால் ஒருவரை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று சொல்லி விடமுடியாது.

ஏனெனில், அபூதர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அறியாமைக் காலத்து மூடப்பழக்கங்கள் குடிகொண்டிருக்கும் ஒரு மனிதர் நீங்கள் என்று சொன்னார்கள்.

மேலும் உயந்தோன் அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அதைத் தவிர ஏனையவற்றை அவன் நாடியவர்களுக்கு மன்னித்து விடுகின்றான் (4:48) என்று கூறுகின்றான்.

30. மஉரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர்மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எசமானரும் ஒரேபோல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப்பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 23

முஃமின்களில் இரு சாரார் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமரசம் செய்து வையுங்கள் எனும் (49:9ஆவது) இறைவசனம்.

அப்படிச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடியவர்களையும் அல்லாஹ் (இந்த வசனத்தில்) முஃமின்கள் (இறை நம்பிக்கையாளர்கள்) என்றே குறிப்பிட்டிருக்கின்றான்.

31. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஜமல் போரின் போது) இந்த மனிதருக்கு (அலீ (ரலி) அவர்களுக்கு) உதவிசெய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து எங்கே செல்கிறீர்? எனக் கேட்டார். நான் இந்த மனிதருக்கு உதவிசெய்திடச் செல்கிறேன் என்றேன். அதற்கு அபூபக்ரா (ரலி) அவர்கள் நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார் என்று சொன்னார்கள் என்றார்கள்.

பாடம் : 24

அநீதிகளில் ஏற்றத்தாழ்வு உண்டு.

32. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எவர் நம்பிக்கை (ஈமான்) கொண்டு பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே அபயம் உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர் எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள் எங்களில் (தமக்குத்தாமே) அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்தாம் இருக்கிறார்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ், இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும் எனும் (31:13ஆவது) வசனத்தை அருளினான்.

பாடம் : 25

நயவஞ்சகனின் அடையாளங்கள்.

33. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

34. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், பேசும்போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை (நான்கும்).

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 26

லைலத்துல் கத்ர் கண்ணியமிக்க இரவில் நின்றுவணங்குவது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

35. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் இரவில் நின்றுவணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 27

அறப்போர் புரிவதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

36. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவன் மீதும் இறைத்தூதர்கள் மீதும் கொண்ட நம்பிக்கையானது, (இறைவழியில் அறப்போர் புரிய) ஒருவரை புறப்படச் செய்ய, எவர் இறைவழியில் (அறப்போர் புரிய) புறப்பட்டுச் செல்கின்றாரோ அவரை நன்மையைப் பெற்றவராகவோ போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்க அல்லாஹ் முன்வந்து விட்டான். அல்லது அவரைச் சொர்க்கத்தில் நுழைவிக்க அல்லாஹ் முன்வந்து விட்டான்.

என் சமுதாயத்திற்கு சிரமம் ஏற்பட்டுவிடும் எனும் அச்சம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் (நான்) அனுப்பும் எந்தப் படைப்பிரிவிற்குப் பின்னரும் (அதில் கலந்து கொள்ளாமல்) நான் அமர்ந்திருக்க மாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் (போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் (இறைவழியில்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் (அவ்வழியில்) கொல்லப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 28

ரமளான் மாதத்தில் கூடுதல் தொழுகைகளை நின்றுவணங்குவதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

37. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

பாடம் : 29

நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது இறை நம்பிக்கையின் ஓரம்சமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

38. எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 30

இந்த (இஸ்லாமிய) மார்க்கம் எளிதானது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான (இஸ்லாமிய) மார்க்கமே அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான மார்க்கமாகும்.

39. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 31

தொழுகை இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:

உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்குபவன் அல்லன் (2:143).

பொருள்: இறையில்லம் (கஅபாவின்) அருகில் இருந்தபடி (பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலை நோக்கி) நீங்கள் தொழுத தொழுகையை அல்லாஹ் வீணாக்கி விடமாட்டான்.

40. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் தம் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டத்தில் அல்லது அன்சாரிகளிலுள்ள தம் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டத்தில் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலேமிலுள்ள) பைத்துல் மக்திஸ் நோக்கி பதினாறு மாதங்கள் அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தொழுகையில் தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (பிறகு கஅபாவை முன்னோக்கித் தொழும்படி, இறைவனிடமிருந்து உத்தரவு வந்தது). (கஅபாவை முன்னோக்கி) நபி (ஸல்) அவர்கள் தொழுத முதல்தொழுகை அஸ்ர் தொழுகையாகும். (அந்தத் தொழுகையை) நபி (ஸல்) அவர்களுடன் மற்ற சிலரும் தொழுதனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுது கொண்டு) இருந்தவர்களைக் கடந்துசென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்தனர். உடனே அவர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன் என்று சொல்ல, அவர்கள் (அனைவரும்) அப்படியே (ருகூஉவிலிருந்தபடியே சுழன்று) கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுதுவந்தது (கண்டு) யூதர்களுக்கும் மற்ற வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்துவந்தது. (தொழுகையில்) தமது முகத்தை நபி (ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் திருப்பிக் கொண்டுவிட்டபோது அதை அவர்கள் வெறுத்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், (புதிய கிப்லாவான கஅபாவை நோக்கி) கிப்லா மாற்றப்படுவதற்கு முன் (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்து விட்டிருந்தனர்; சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறினர். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை (அதாவது தொழுகையை) வீணாக்குபவன் அல்லன் எனும் (2:143ஆவது) வசனத்தை அருளினான் என்று இடம்பெற்றுள்ளது.

பாடம் : 32

ஒரு மனிதரின் இஸ்லாம் அழகு பெறுவது.

41. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரது இஸ்லாம் (அகத்திலும் புறத்திலும்) அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன்செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்து விடுகின்றான். அ(வருடைய இஸ்லாம் அழகு பெற்றுவிட்ட)தன் பின்னரும் கிஸாஸ் (உலகில் சக மனிதனுக்கு அவர் இழைத்த குற்றங்களுக்குரிய தண்டனை) இருக்கவே செய்யும். (அவர் செய்யும்) ஒவ்வொரு நல்லறத்திற்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நன்மைகள் பதியப்படும். (அவர் புரியும்) ஒவ்வொரு தீமைக்கும் அதைப் போன்று (ஒரேயொரு தண்டனை)தான் உண்டு. அதையும் அல்லாஹ் மன்னித்து விட்டால் (எந்தத் தண்டனையும்) கிடையாது.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

42. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமது இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்) அழகாக்கிக் கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை (நன்மை) பதிவுசெய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே (ஒரு தீமையே) பதிவு செய்யப்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 33

நிரந்தரமாகச் செய்யப்படும் நல்லறங்களே அல்லாஹ்விற்கு விருப்பமானவை.

43. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தார்கள். யார் இவர்? என்று கேட்டார்கள். நான் இவர் இன்னவர்? என்று கூறிவிட்டு அவரது தொழுகை பற்றி (அவர் அதிகம் வணங்குபவர் என்று புகழ்ந்து) கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், போதும் நிறுத்து! (வணக்கவழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படையமாட்டான். மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தான் என்று கூறினார்கள்.

பாடம் : 34

இறை நம்பிக்கை (ஈமான்) கூடுவதும், குறைவதும்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:

அவர்களுக்கு நாம் நேர்வழியை அதிகமாக்கினோம் (18:13).

இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (74:31).

அல்லாஹ் கூறுகிறான்:

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவுபடுத்திவிட்டேன் (5:3).

அதாவது இந்த நிறைவான (மார்க்கத்)தில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவர் (மார்க்கத்தால்) குறைவுடையவராவார்.

44. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாஇலாஹ இல்லல்லாஹ் சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் லாஇலாஹ இல்லல்லாஹ் சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நன்மை என்று கூறியதாக மேற்கண்ட நபிமொழியில் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் இறை நம்பிக்கை (ஈமான்) என்று குறிப்பிட்டதாக அனஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

45. தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (அமீருல் முஃமினீன்!) நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம் என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அது எந்த வசனம்? எனக்கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்கள் மீது எனது அருள்கொடையை முழுமைப்படுத்திவிட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன் (5:3) (என்பதே அந்த வசனமாகும்) என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அரஃபாப் பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாளே பண்டிகைநாள்தான்) என்றார்கள்.

பாடம் : 35

ஸகாத் இஸ்லாத்தின் ஓர் அம்சமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

அசத்திய வழிகளிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தில் சாய்ந்தவர்களாகவும் தமது எண்ணத்தை இறைவனுக்காகத் தூய்மையாக்கியவர்களாகவும் அல்லாஹ்வை வணங்கவேண்டும்; தொழுகையை அவர்கள் நிலைநிறுத்திவரவேண்டும்; ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்று மட்டும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. மேலும் அதுவே நேரான மார்க்கமுமாகும். (98:5).

46. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரிகோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக்கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்(தான் இஸ்லாத்தில் கட்டாயக்கடமையான வணக்கம்) என்றார்கள்.

அவர் இதைத் தவிர வேறு(தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்க, இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்கவேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? எனக் கேட்க, இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத்தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர என்றார்கள்.

அந்த மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச்சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்.

பாடம் : 36

இறந்தவர்களை (அடக்கம் செய்வதற்காகப்) பின்தொடர்ந்து செல்வது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

47. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் ஒருவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமுடைய சடலத்தைப் பின்தொடர்ந்து சென்று அதற்காக(ப் பிரார்த்தனைத்) தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும்வரை அதனுடன் இருந்தாரோ நிச்சயமாக அவர் இரண்டு கீராத் நன்மையுடன் திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹுத் மலை போன்றதாகும். எவர் அதற்காகப் (பிரார்த்தனைத்) தொழுகையை மட்டும் முடித்து விட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பிவிடுகிறாரோ அவர் ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 37

தாம் அறியாத விதத்தில் தமது நல்லறங்கள் பாழ்பட்டுப் போய்விடுமோ என இறை நம்பிக்கையாளர் அஞ்சுவது.

இப்ராஹீம் அத்தய்மீ (ரஹ்) அவர்கள் எனது சொல்லை எனது செயலோடு ஒப்பிட்டபோதெல்லாம், நான் ஒரு பொய்யனாக இருப்பேனோ என்று நான் அஞ்சாமல் இருந்ததில்லை என்றார்கள்.

இப்னு அபீமுலைக்கா (அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அல்குறஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபித்தோழர்களில் முப்பது பேரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் நயவஞ்சகத்தனம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர்களாகவே இருந்தனர். அவர்களில் எவரும் தமக்கு ஜிப்ரீல், மீக்காயீல் (அலை) ஆகியோரின் ஈமான் தமக்கு இருப்பதாகக் கூறியதில்லை.

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் நயவஞ்சகத்தன்மையை அஞ்சுவதில்லை. நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அது விஷயத்தில் அச்சமற்று (அலட்சியமாக) இருப்பதில்லை என்று கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

பாவமன்னிப்புக் கோராமல், நயவஞ்சகத்தனத்திலும் பாவத்திலும் நிலைத்து இருப்பதற்குக் கடும் எச்சரிக்கை.

அல்லாஹ் கூறுகிறான்:

தெரிந்துகொண்டே தாங்கள் செய்த (தீமையான)வற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள். (3:135)

48. ஸுபைத் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூவாயில் (அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் முர்ஜிஆக்கள் (இறை நம்பிக்கையாளர்கள் செய்யும் எந்தப் பாவத்திற்கும் தண்டனை கிடையாது என்று கூறுவது) பற்றிக் கேட்டேன். அப்போது அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக்கொள்வது (கொலை செய்வது) இறை நிராகரிப்பாகும் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

49. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) பற்றி (அது ரமளான் மாதத்தில் எந்த இரவு என்று) அறிவிப்பதற்காக (த் தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், லைலத்துல் கத்ர் இரவு பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம் என் நினைவிலிருந்து) நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமளான் மாதத்தின் இருபத்து) ஏழு, (இருபத்து) ஒன்பது, (இருபத்து) ஐந்து ஆகிய (ஒற்றை எண்ணிக்கையிலான) இரவுகளில் அதனைத் தேடுங்கள் என்றார்கள்.

பாடம் : 38

ஈமான், இஸ்லாம், இஹ்ஸான், மறுமை நாளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைக் குறித்து ஜிப்ரீல் (அலை) கேட்டதும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும்.

பின்னர் உங்களின் மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுத்தருவதற்காக ஜிப்ரீல் வந்திருந்தார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும்.

நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அளித்த பதில் அனைத்தையும் மார்க்கமாகவே கருதியிருக்கிறார்கள் என்பதும்.

அப்துல்கைஸ் தூதுக்குழுவினருக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியவை (யாவும்) இறை நம்பிக்கையின் அம்சங்களேயாம் என்பதும்.

எவர் இஸ்லாம் அல்லாத வேறொரு வழியைத் தமது மார்க்கமாகத் தேடிக்கொண்டாரோ அவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படமாட்டாது எனும் (3:85ஆவது) இறைவசனமும்.

50. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

அடுத்து அவர், இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஸகாத்தைக் கொடுத்துவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும் என்றார்கள்.

அடுத்து இஹ்ஸான் என்றால் என்ன? என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வணங்குவதாகும்) என்றார்கள்.

அடுத்து அவர் மறுமை நாள் எப்போது? என்று கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் இதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்), (அதைப் பற்றிக்) கேட்கின்றவரை (உம்மை விட) மிக அறிந்தவரல்லர். (அது பற்றி எனக்கும் தெரியாது; உமக்கும் தெரியாது. வேண்டுமானால்,) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுத்தல்; மேலும் கறுப்புநிற (அடிமட்ட) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். (மறுமைநாள் எபபோது வரவிருக்கிறது எனும் அறிவு) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும் என்று கூறிவிட்டு, உலக இறுதி பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது... எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள் என்றார்கள். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கேயும் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இ(ப்போது வந்துபோன)வர்தாம் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தர வந்திருந்தார் என்றார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு தாம் அளித்த பதில்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் இறை நம்பிக்கையின் அம்சங்களாகவே கருதினார்கள்.

பாடம் : 39

51. (ரோமப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தம்மிடம் கேட்டதாக அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உம்மிடம் (தம்மை இறைத்தூதர் என்று கூறும்) அவ(ரைப் பின்பற்றுப)வர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா? அல்லது குறைந்து கொண்டே போகின்றார்களா? என்று கேட்டேன். அதற்கு நீர் அவர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள் என்று கூறினீர். இறை நம்பிக்கை அத்தகையதே. அது நிறைவடையும்வரை (வளர்ந்து கொண்டேதான்) இருக்கும்.

நான் உம்மிடம் அவரது மார்க்கத்தில் இணைந்தோரில் எவரேனும் தமது புதிய மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர், இல்லை என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை இத்தகையதே. அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும்போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்.

இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 40

தமது மார்க்கத்தைக் காப்பவரின் சிறப்பு.

52. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம்பேர் அறியமாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 41

(போரில் கிடைத்த செல்வங்களில்) ஐந்தில் ஒரு பங்கை (இறைத்தூதரிடம் நிதியாக) வழங்குதல் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

53. அபூஜம்ரா (நஸ்ர் பின் இம்ரான் அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது கட்டிலில் அமருமாறு கூற, அவ்வாறே நான் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், என்னிடம் நீங்கள் (மொழிபெயர்ப்பாளராக இங்கேயே) தங்கிவிடுங்கள். (அதற்காக) நான் எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உங்களுக்குத் தருகிறேன் என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அவர்களுடன் நான் இரண்டு மாதங்கள் (மக்காவில்) தங்கிவிட்டேன். பின்னர் அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, இம்மக்கள் யார்? அல்லது இத்தூதுக் குழுவினர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ரபீஆ (குடும்பத்தார்) என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், இழிநிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே அல்லது தூதுக்குழுவே வருக! உங்கள் வரவு நல்வரவாகுக! என்று வரவேற்றார்கள்.

அத்தூதுக்குழுவினர், அல்லாஹ்வின் தூதரே! (போர் புரியக் கூடாதெனத் தடைவிதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வரமுடியவில்லை. (காரணம்) எங்களுக்கும் உங்களுக்குமிடையே (எதிரிகளான) முளர் குலத்து இறைமறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தார் (நாம் சந்திக்கமுடியாதபடி தடையாக) உள்ளனர். ஆகவே, தெளிவான ஆணையொன்றைப் பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னணியில் (இங்கே வராமல்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம். அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம் என்றார்கள். அதையொட்டி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சிலவகை குடிபானங்களைப் பற்றியும் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு நான்கை(ச் செய்யுமாறு) கட்டளையிட்டார்கள்; நான்கை அவர்களுக்குத் தடை செய்தார்கள்.

அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்ன(வென்று உங்களுக்குத் தெரியுமா)? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை (உரியமுறையில்) நிலை நிறுத்துவது; ஸகாத் கொடுப்பது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது; போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை நீங்கள் வழங்குவது.

(மது சேகரித்து வைக்கப் பயன்படுத்தப்படும்) நான்கு பாத்திரங்களை (பழரசம் முதலிய பானங்களை ஊற்றிவைக்கப் புழங்க வேண்டாமென) நான் உங்களுக்குத் தடைவிதிக்கிறேன். (அவை:) மண்சாடி, சுரைக்காய் குடுக்கை, (பேரீச்சமரத்தின் அடிபாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப்பீப்பாய்தார் பூசப்பட்ட பாத்திரம். (பின்னர் இத்தடை அகற்றப்பட்டது.) இவற்றை மனதில் பதியவைத்துக் கொண்டு உங்கள் பின்னணியில் (இங்கே வராமல்) இருப்பவர்களுக்கு அறிவித்து விடுங்கள்!

பாடம் : 42

செயல்கள் அனைத்தும் எண்ணத்தையும் நோக்கத்தையும் பொறுத்ததாகும்.

மேலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் எண்ணியதே கிடைக்கும்.

எனவே, இதற்குள் இறை நம்பிக்கை (ஈமான்) அங்கத்தூய்மை (உளூ), தொழுகை, (ஏழைகளின் உரிமையான) ஸகாத், ஹஜ், நோன்பு மற்றும் (ஏனைய கொடுக்கல் வாங்கல்) சட்டங்களும் அடங்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) கூறுக: ஒவ்வொருவரும் தத்தமது எண்ணங்களின்படியே செயல்படுகின்றனர். (17:84).

(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நன்மையை எதிர்பார்த்து ஒருவர் தம் குடும்பத்தினருக்குச் செலவு செய்வதும் தர்மமாகும்.

(மக்கா வெற்றிக்குப் பின்னர் நாடுதுறத்தல் ஹிஜ்ரத் கிடையாது) ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

54. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவரது நாடுதுறத்தல் (ஹிஜ்ரத்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கி அமையுமோ அவருடைய (நோக்கப்படியே) அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே அவரது நாடுதுறத்தல் அமையும். ஒருவருடைய நாடுதறத்தல் உலக(ஆதாய)த்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரது நாடுதுறத்தல் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமைந்துவிடுகிறது.

இதை உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

55. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும்.

இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

56. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக்கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 43

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களில் பொதுமக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் (தீன்) ஆகும் எனும் நபிமொழி.

அல்லாஹ் கூறுகின்றான்:

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நலம் நாடுபவர்களாயிருந்தால் (இயலாதவர்கள், நோயாளிகள் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் இருப்பதில் குற்றமில்லை). (9:91).

57. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவதாகவும், ஸகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

58. ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கூஃபாவின் ஆளுநராக இருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் இறந்த நாளில் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (எழுந்து மேடையில்) நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்து விட்டுக் கூறலானார்கள்:

(அடுத்த) தலைவர் வரும்வரையில் இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும் அடக்கத்தையும் அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். கூடிய சீக்கிரத்தில் உங்கள் (புதிய) தலைவர் வந்துவிடுவார்.

பின்னர் தொடர்ந்து கூறினார்கள்: (இறந்துவிட்ட) உங்கள் தலைவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்! ஏனெனில் அவர் தமது பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார். இறைவாழ்த்துக்குப் பின்! (விஷயம் என்னவென்றால்,) நான் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் சென்று இஸ்லாத்தைத் ஏற்று நடப்பதாகத் தங்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வந்திருக்கிறேன் என்றேன். அப்போது நபியவர்கள், முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாடவேண்டும் என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதிமொழி கொடுத்தேன். (கூஃபா நகர மக்களே!) இந்த இறையில்லத்தின் அதிபதி மீது ஆணையாக! நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்.

பிறகு பாவமன்னிப்புக் கோரிவிட்டு (மேடையிலிருந்து) இறங்கினார்கள்.

October 23, 2009, 6:08 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top