ஜுமுஆத் தொழுகை

 

அத்தியாயம் : 11

11-ஜுமுஆத் தொழுகை

பாடம் : 1

ஜுமுஆத் தொழுகை கட்டாயக் கடமை (ஃபர்ள்) ஆகும்.

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்:

ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்துசெல்லுங்கள்- நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (62:9)

876 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமையில் (அந்தஸ்தால்) முந்தியவர்களாவோம். எனினும், (யூத, கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும் இந்த நாள்தான் அவர்களுக்கும் (வாரவழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இ(ந்த நாளைத் தம் வாரவழிபாட்டு நாளாக ஏற்றுக் கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர் களே ஆவர். (எவ்வாறெனில், வெள்ளிக் கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களும் மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களும் (வார வழிபாடு நடத்தும் தினங்களாகும்).

பாடம் : 2

ஜுமுஆ நாளில் குளிப்பதன் சிறப்பும், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்வது அவர்கள் மீது கடமையா என்பதும்.

877 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்கு வரும் போது அவர் குளித்துக் கொள்ளட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

878 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் (சொற்பொழிவு மேடை- மிம்பர் மீது) நின்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது (இஸ்லாத்தில்) முன்னவ முஹாஜிர்களில் ஒருவரும், நபித்தோழருமான ஒருவர் உள்ளே வந்தார். அவரை உமர் (ரலி) அவர்கள் அழைத்து, இது எந்த நேரம் (தெரியுமா? ஏன் இவ்வளவு தாமதம்)? என்று கேட்டார்கள். அதற்கு அவர், நான் அலுவ-ல் மூழ்கிவிட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்ட பிறகுதான் நான் என் வீட்டிற்கே திரும்பி னேன். ஆகவே, உளூ (அங்கசுத்தி) மட்டும் செய்து விட்டு நான் (விரைந்து)வருகிறேன் என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,(இதில்) வேறு உளூ மட்டும் செய்து விட்டு வருகிறீரா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆ வுக்காக) குளிக்குமாறு கட்டளையிட்டுவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்களே (அவ்வாறிருந்துமா குளிக்காமல் வந்தீர்கள்?) என்று கேட்டார்கள்.

879 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 3

ஜுமுஆவுக்காக நறுமணம் பூசுவது.

880 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறுதியிட்டுச் சொல்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்; மேலும் பல்துலக்குவதும், கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும் என்று கூறினார்கள்.

இதை அறிவிப்பவரான அம்ர் பின் சுலைம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறுதியிட்டுச் சொல்கிறேன். (ஜுமுஆ நாளில்) குளிப்பதோ கடமை (வாஜிப்) என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். ஆனால், பல் துலக்குவதோ நறுமணம் பூசுவதோ கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். அனால், ஹதீஸில் இவ்வாறுதான் உள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) அபூபக்ர் பின் முன்கதிர் அவர்கள் முஹம்மத் பின் முன் கதிர் (ரஹ்) அவர்களுடைய சகோதரர் ஆவார். அபூபக்ர் பின் முன்கதிர் அவர்களிடமிருந்து புகைர் பின் அஷஜ், சயீத் பின் அபீஹிலால் உள்ளிட்ட இன்னும் பலர் (இந்த ஹதீஸை) அறிவித்துள்ளனர். முஹம்மத் பின் முன்கதிர் அவர்களும் அபூபக்ர், அபூஅப்தில்லாஹ் எனும் குறிப்புப் பெயர்களில் அறியப்படுகிறார்.

பாடம் : 4

ஜுமுஆவின் சிறப்பு.

881 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்து விட்டுப் பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 5

882 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் உள்ளே வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ஏன் தொழுகைக்கு தாமதமாக வருகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், அதற்குக் காரணம், பாங்கைக் கேட்ட பிறகுதான் உளூவே செய்தேன் என்றார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்குச் செல்லும் போது அவர் குளித்துக் கொள்ளட்டும் என்று கூறியதை நீங்கள் செவியேற்கவில்லையா? என்று கேட்டார்கள்.

இதே ஹதீஸை இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 6

ஜுமுஆவுக்காக தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்வது.

883 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள் கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள் ளதைத் தொழுகிறார். பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற் கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.

இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

884 தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள், ஜுமுஆ நாளில் நீங்கள் குளித்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளைக் கழுவிக் கொள்ளுங்கள். சிறிது நறுமணம் பயன் படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு பெருந்துடக்கு ஏற்பட்டிராவிட்டாலும் சரியே எனக் கூறியதாக சிலர் கூறுகிறார்களே? என்று வினவினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், குளியலைப் பொறுத்த வரை (நபியவர்கள் கூறினார்கள் என நீங்கள் குறிப்பிட்டது) சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார்கள்.

885 தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாள் குளியல் பற்றிய நபிமொழியை அறிவித்த போது அவர்களிடம் நான், ஒருவர் (தம்மிடம் இல்லாவிட்டால்) தம் வீட்டாரிடம் இருக்கும் எண்ணெயையோ நறுமணத்தையோ பூசிக் கொள்ள வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இது பற்றி எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 7

தம்மிடம் இருப்பதில் அழகான ஆடையை ஜுமுஆவுக்காக அணிந்து கொள்ளவேண்டும்.

886 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் நுழைவாயிலருகே கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்ளலாமே! என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) இதை அணிவார் என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடுபோட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர் களே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை! (அதன் மூலம் வேறு ஏதேனும் வகையில் நீங்கள் பயன்பெற்றுக் கொள்ளவே நான் வழங்கினேன்) என்று கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்து விட்டார்கள்.

பாடம் : 8

ஜுமுஆ நாளில் (ஜுமுஆத் தொழுகைக்காக) பல் துலக்குவது.

(ஜுமுஆத் தொழுகைக்காக) பல்துலக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (காண்க: ஹதீஸ்எண்- 880)

887 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்திற்கு அல்லது மக்களுக்கு நான் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருப்பேன்.

888 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வ-யுறுத்தியுள்ளேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

889 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் இரவில் (தொழுகைக்காக) எழும் போது பல்துலக்கு(ம் குச்சியால் வாயை சுத்தம் செய்)வார்கள்.

பாடம் : 9

பிறரது பல்துலக்கும் குச்சியால் ஒருவர் பல் துலக்குவது.

890 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி ளஸல்ன அவர்கள் இறக்கும் தறுவாயில் என் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருந்த போது என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த பல் துலக்கும் குச்சியால் பல்துலக்கியபடி வந்தார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள், அப்துர் ரஹ்மானே! என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் கடித்து(த் அதன் முனையைத் துப்பி)விட்டு அதை நன்றாக மென்று (மென்மைப்படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடியே அதனால் பல் துலக்கிக் கொண்டார்கள்.

பாடம் : 10

ஜுமுஆ நாள் ஃபஜ்ர் தொழுகையில் ஓத வேண்டியவை.

891 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் ஃபஜ்ர் தொழுகையில் அ-ஃப் லாம் மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் ஹல் அத்தா அலல் இன்ஸான் (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

பாடம் : 11

நகரங்களிலும் கிராமங்களிலும் ஜுமுஆ நடத்துவது.

892 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாச-ல் (வெள்ளிக்கிழமை) தொழுவிக்கப்பட்ட ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு (இஸ்லாமிய வரலாற்றில்) முதன் முதலாக தொழுவிக்கப்பட்ட ஜுமுஆத் தொழுகை, ஜுவாஸா எனுமிடத்தில்-அதாவது பஹ்ரைன் நாட்டிலிருந்த (ஒரு கிராமத்தில்) அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாச-ல் நடைபெற்ற தொழுகையே ஆகும்.

893 யூனுஸ் பின் யஸீத் அல்அய்னீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ருஸைக் பின் ஹுகைம் அவர்கள் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அப்போது ருஸைக் அவர்களுடன் நானும் வாதில்குரா எனும் இடத்தில் இருந்து கொண்டிருந்தேன். அக்கடிதத்தில் ருஸைக் அவர்கள், (என்னுடன் இங்கு இருப்போருக்கு) நான் ஜுமுஆ நடத்துவது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டு எழுதியிருந்தார்கள்.- (அன்றைய நாளில்) ருஸைக் அவர்கள் விளைநில அதிகாரியாக இருந்தார். அந்நிலத்தில் சூடான் நாட்டு மக்கள் சிலரும் இன்னும் பிறரும் இருந்தனர். ருஸைக் அவர்கள்தாம் அப்போது அய்லா நகரின் ஆளுநராகவும் இருந்தார்.- ஆகவே இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் ருஸைக் அவர்களுக்கு ஜுமுஆ நடத்துமாறு கட்டளை பிறப்பித்து பதில் எழுதினார்கள். (அவர்கள் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது.) அதை நானும் செவியேற்றுக் கொண்டிருந்தேன். அந்தக் கடிதத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக (அவர்களுடைய புதல்வர்) சாலிம் (ரஹ்) அவர்கள், தமக்கு அறிவித்த பின்வரும் நபிமொழியை (தம் கட்டளைக்கு ஆதாரமாக)க் குறிப்பிட்டார்கள் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (-மனைவி-), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், ஓர் ஆண்மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவனும் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்றும் கூறியதாக நான் எண்ணுகிறேன்.

பாடம் : 12

ஜுமுஆவுக்கு வராத பெண்கள் சிறுவர்கள் போன்றோர் மீது குளியல் கடமையா?

யாருக்கு ஜுமுஆத் தொழுகை கடமையோ அவர் மீதே குளியலும் கடமை என்று இப்னு உமர் (ரலி) குறிப்பிட்டுள்ளார்கள்.

894 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஜுமுஆத் தொழுகைக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

895 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒள்வொருவர் மீது கடமையாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

896 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமை நாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களாவோம். (எனினும் யூத கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப் பெற்றோம். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்தில்தான் அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டனர். ஆகவே, (அந்த நாளை) அல்லாஹ் நமக்கு அறிவித்துத் தந்தான். (வார வழிபாட்டுதினம் விஷயத்தில் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே அவர்கள் உள்ளனர். வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு தினம் எனில்) நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய (வழிபாட்டு) தினமாகும். மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களுக்குரிய (வழிபாட்டு) தினமாகும். இதைக் கூறிய பின் சிறிது நேரம் நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

897 பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஏழு நாட்களுக்கு ஒரு தடவை தம் தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்-முக்கும் கடமையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

898 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக (பருவமடைந்த) ஒவ்வொரு முஸ்-மும் செய்யவேண்டிய கடமையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 13

899 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி அளியுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

900 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகியத் தொழுகையைப் பள்ளியில் ஜமாஅத்தில் தொழச் செல்வார். அவரிடம், (உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இ(வ்வாறு செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், (என்னைப் பள்ளிக்குச் செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது? என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது என்று பதில் வந்தது.

பாடம் : 14

மழையின் போது ஜுமுஆத் தொழுகைக்குச் செல்லாமலிருக்க அனுமதி.

901 அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மழை நாளில் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள், தம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) இடம், (பாங்கில்) அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், ஸல்லூ ஃபீ புயூத்திக்கும் (உங்கள் இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்) என்று கூறுவீராக! என்று சொன்னார்கள். (இவ்வாறு அவர்கள் கூறியதை) மக்கள் ஆட்சேபிப்பது போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், என்னைவிட மிகவும் சிறந்தவ(ரான நபி (ஸல்) அவர்)கள் ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும்கூட இவ்வாறுதான் செய்தார்கள். களிமண்ணிலும் (வழுக்கும்) சகதியிலும் உங்களை நடக்கவிட்டு உங்களுக்கு சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை (எனவேதான் வீடுகளிலேயே தொழுது கொள்ளச் சொன்னேன்) என்று கூறினார்கள்

பாடம் : 15

எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜுமுஆத் தொழுகைக்கு வரவேண்டும்? யார்மீது (ஜுமுஆத் தொழுகை) கடமையாகும்?

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:

(இறை நம்பிக்கை கொண்டவர்களே!) ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக (நீங்கள்) அழைக் கப்பட்டால், வியாபாரத்தை விட்டு அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்து செல்லுங்கள். (63:9)

ஜுமுஆத் தொழுகை நடைபெறும் ஊரில் நீ இருந்து அந்த ஜுமுஆ நாளில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் அதில் கட்டாயம் நீ கலந்து கொள்ள வேண்டும். பாங்கு சப்தத்தை நீ கேட்டாலும் சரி, அதை நீ கேட்காவிட்டாலும் சரி என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் சில நாட்களில் தமது மாளிகையில் (தங்கி) இருக்கும் போது (தம்முடன் இருப்பவர்களுக்கு) ஜுமுஆத் தொழுவிப்பார்கள். சில நாட்களில் ஜுமுஆத் தொழுவிக்க மாட்டார்கள். ளஅனஸ்

(ரலி) அவர்களதுன அந்த மாளிகை (பஸ்ரா நகரிலிருந்து) இரண்டு பர்ஸக் (சுமார் ஆறு மைல்) தொலைவிலிருந்த ஸாவியா எனும் இடத்தில் இருந்தது.

902 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் ஜுமுஆ நாளில் (மதீனா அருகிலுள்ள) தங்கள் குடியிருப்புகளிலிருந்தும் (சுமார் 3-8 மைல் தொலைவிலுள்ள) மேட்டுப்புற கிராமங்களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆத் தொழுகைக்கு) வந்து கொண்டிருந்தனர். புழுதிகளில் அவர்கள் நடந்துவருவதால் அவர்கள் மீதும் புழுதியும் வியர்வையும் காணப்படும். அவர்களி(ன் உட-)லிருந்து வியர்வை வழியும். (இந்த நிலையில்)- என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்து கொண்டிருக்கும் போது- அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக்கூடாதா? என்று கேட்டார்கள்.

பாடம் : 16

ஜுமுஆத் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததும் (ஆரம்பிக்கிறது).

இவ்வாறுதான் உமர் பின் அல்கத்தாப் (ரலி), அலீ (ரலி), நுஅமான் பின் பஷீர் (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.

903 யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அம்ரா பின்த் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் ஜுமுஆ நாள் குளியல் பற்றிக் கேட்டேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:

(நபி ளஸல்ன காலத்து) மக்கள் உழைப்பாளி களாக இருந்தனர். அவர்கள் (வேலை வெட்டி களில் ஈடுபட்டுவிட்டு) உச்சி சாயும் போது ஜுமுஆத் தொழுகைக்காக வரும் போது அதே கோலத்துடனே வந்து விடுவார்கள். இதனால்தான் அவர்களிடம் நீங்கள் குளித்திருக்கலாமே! என்று கூறப்பட்டது.

904 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி சாயும் போது ஜுமுஆத் தொழுகை தொழுவிப்பார்கள்.

905 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஜுமுஆத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவோம். ஜுமுஆத் தொழுகைக் குப் பிறகுதான் மதியஓய்வு மேற்கொள்வோம்.

பாடம் 17

ஜுமுஆ நாளில் வெப்பம் கடுமையாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?)

906 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- வெப்பம் தணிந்தபின் தொழுவார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ கல்தா (ரஹ்) அவர்களிடமிருந்து யூனுஸ் பின் புகைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் (ஜுமுஆத் தொழுகை என்ற குறிப்பு இல்லாமல் பொதுவாக) தொழுகை என்றே இடம்பெற்றுள்ளது.

அபூகல்தா (ரஹ்) அவர்களிடமிருந்து பிஷ்ர் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் எங்களுக்கு ஜுமுஆவின் அமீர் ஜுமுஆத் தொழுவித்தார். (வழக்கம் போல நீண்ட சொற்பொழிவும் நெடு நேரத் தொழுகையும் நடந்தது.) பிறகு அவர் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு லுஹ்ர் தொழுகை தொழுவார்கள்? என்று கேட்டார் ளஅதற்குதான் மேற்கண்டவாறு அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்ன என இடம்பெற்றுள்ளது.

பாடம் : 18

ஜுமுஆத் தொழுகைக்காக நடந்துவருவதும், ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் நீங்கள் விரைந்து செல்லுங்கள் எனும் (63:9ஆவது) இறை வசனமும்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) விரைவு (அஸ்ஸஃயு) எனும் சொல்லுக்கு ஜுமுஆவுக்காக தயாராகிச் செல்வது என்று பொருள் என சிலர் (விளக்கம்) கூறுகின்றனர். (இதே கருத்தில்தான்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்த நேரத்தில் (தொழுகைக்காகத் தயாராகிச் செல்லாமல்) வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது விலக்கப்பட்டதாகும் (ஹராம்) என்று கூறினார்கள்.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் (அந்த நேரத்தில்) எல்லாவிதமான தொழில்களும் தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறியுள்ளார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஜுமுஆவுடைய நாளில் ஒருவர் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால் ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச் செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும்.

907 அபாயா பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜுமுஆத் தொழுகைக்காகச் சென்று கொண்டிருந்த போது அபூஅப்ஸ் (அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர்-ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் பாதையில் எவரது பாதங்களில் புழுதி படிகின்றதோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று சொன்னார்கள்.

908 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் ஓடிவராதீர்கள். நடந்தேவாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை (பிறகு எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

909 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 (தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் அவசரப்படாதீர்கள்.) என்னை நீங்கள் காணும் வரை எழாதீர்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 19

ஜுமுஆ நாளில் (பள்ளிக்குள் நுûயுழம் போது சேர்ந்துஅமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்கக் கூடாது.

910 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். பிறகு எண்ணெயோ நறுமணமோ பூசிக் கொள்கிறார். பிறகு அவர் புறப்பட்டு (சேர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் (பள்ளிக்குள் சென்று) தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பின்னர் இமாம் வந்ததும் (அவர் ஆற்றும் உரையைச் செவியேற்க) மௌனம் காக்கிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 20

ஜுமுஆ நாளில் ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமரக் கூடாது.

911 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தம் சகோதரரை அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், ஜுமுஆவின்போதா (இப்படிச் செய்யக்கூடாது)? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஜுமுஆவிலும், ஜுமுஆ அல்லாத மற்ற நேரங்களிலும் (அப்படித்)தான் என்று கூறினார்கள்.

பாடம் : 21

ஜுமுஆவின் பாங்கு.

912 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல்பாங்கு இமாம் சொற்பொழிவுமேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்த போது ஸவ்ரா எனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.

பாடம் 22

ஜுமுஆ நாளில் ஒரேயொரு தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்)தாம் பாங்கு சொல்லவேண்டும்.

913 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜுமுஆ நாளில் மூன்றாம் தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தியவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களே ஆவார்கள்.- மதீனா வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்த சமயத்தில் தான் (இவ்வாறு செய்தார்கள்.)- (ஜுமுஆ நாளில் பாங்கு சொல்ல) நபி (ஸல்) அவர்களிடம் ஒரேயொரு தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) மட்டுமே இருந்தார். (ஆரம்ப காலத்தில்) இமாம் அமரும் போது தான் சொற்பொழிவு மேடையின் மீது அமரும் போது தான் - ஜுமுஆ நாளில் பாங்கு சொல்லப்பட்டுவந்தது.

பாடம் : 23

பாங்கைக் கேட்கும் போது சொற்பொழிவு மேடையில் அமர்ந்துள்ள இமாமும் அதற்கு பதில் கூறவேண்டும்.

914 அபூஉமாமா (அஸ்வத் பின் சஹ்ல் பின் ஹுனைஃப்-ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்து கொண்டிருந்த போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொன்னார். அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறியதும் முஆவியா (ரலி) அவர்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று (பதில்) சொன்னார்கள்.

தொழுகை அறிவிப்பாளர் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்) எனக் கூறியதும், நானும் அவ்வாறே நம்புகிறேன் (வ அன) என்று முஆவியா கூறினார்கள்.

அவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மது ளஸல்னஅவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்) எனக் கூறியதும் முஆவியா

(ரலி) அவர்கள் நானும் அவ்வாறே நம்புகிறேன் (வ அன) என்று (பதில்) சொன்னார்கள். அவர் பாங்கு சொல்லி முடித்ததும், மக்களே! தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்ன போது இதே இடத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னது போன்றே (பாங்கிற்கு பதில்) சொல்லிக் கொண்டிருந்ததை நான் செவியேற்றேன் என்றார்கள்.

பாடம் : 24

பாங்கு சொல்லும் போது இமாம் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்திருப்பது.

915 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜுமுஆ நாளில் இன்னொரு தொழுகை அறிவிப்புச் செய்யும்படி உஸ்மான் (ரலி) அவர்களே கட்டளையிட்டார்கள்.- பள்ளிவாச-ல் மக்கள் அதிகரித்தபோதே (இவ்வாறு செய்தார்கள்). (அதற்கு முன்னர்) இமாம் (சொற்பொழிவு மேடை மீது) அமரும் போது சொல்லும் பாங்கு மட்டுமே (நடைமுறையில்) இருந்தது.

பாடம் : 25

சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தும் போது பாங்கு சொல்வது.

916 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜுமுஆ நாளில் சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர்

(ரலி) உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்கு முன்) சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தின் போது மக்கள் தொகை உயர்ந்து விட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட் டார்கள். ஆகவே, (மதீனாவின் கடைவீதியிலுள்ள) ஸவ்ரா எனுமிடத்தில் தொழுகை அறிவிப்புச் சொல்லப்பட்டது. (தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு ஒரு இகாமத் எனும்) அந்த நிலை நிலைபெற்று விட்டது.

பாடம் : 26

சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று உரை நிகழ்த்துவது.

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்றபடி) உரையாற்றினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

917 அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபி ளஸல்னஅவர்களது) சொற்பொழிவு மேடை (மிம்பர்) எதனால் செய்யப்பட்டது என்று விவாதித்தபடி சிலர் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் வந்து அது குறித்து வினவினர். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அது எதனால் செய்யப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். அது வைக்கப்பட்ட நாளிலேயே நான் அதைப் பார்த்திருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்த முதல் நாளிலேயே (நான் அதைப் பார்த்திருக்கிறேன்). என்று கூறிவிட்டு (அது பற்றி முழுத் தகவலையும் பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்ன பெண்மணியிடம் -அப்பெண்மணியின் பெயரை சஹ்ல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்- ஆளனுப்பி, நான் மக்களிடையே உரையாற்றும் போது அமர்ந்து கொள்வதற்கு (ஏற்றவகையில்) எனக்காக (சொற்பொழிவு மேடைக்குத் தேவையான) மரச்சட்டங்களைச் செய்து தரும்படி தச்சு வேலை தெரிந்த உன் அடிமைக்கு கட்டளையிடுவாயாக! என்று சொல்லியனுப்பினார்கள். அவ்வாறே அப்பெண்மணி அந்த அடிமைக்கு கட்டளையிட அவர் (மதீனா அருகிலுள்ள காட்டிலிருந்து) தர்ஃபாஉல் ஃகாபா எனும் ஒரு வகைச் சவுக்கு மரத்தினால் அதைச் செய்து அப்பெண்மணியிடம் கொண்டு வந்தார். அதை அப்பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட இதோ இந்த இடத்தில் அது வைக்கப்பட்டது.

அதன் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் மீது நின்று தொழு(வித்)ததையும் அதன் மீது நின்று தக்பீர் கூறியதையும் அதன் மீது ருகூஉ செய்ததையும் பிறகு (முதுகைத் திருப்பாமல்) பின்வாட்டில் நகர்ந்து வந்து அந்த சொற்பொழிவு மேடையில் அடிக்கட்டைப் பகுதியில் சஜ்தா செய்ததையும், பிறகு பழையபடி மேடைக்கே சென்றதையும் நான் பார்த்தேன். தொழுது முடித்ததும், மக்களை முன்னோக்கி, மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் எனது தொழுகையை நீங்கள் அறிந்து கொள்ளுவதற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன் என்று குறிப்பிட்டார்கள்.

918 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உரையாற்றும் போது) நின்றுகொள்வதற்காக (ஆரம்பத்தில்) பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்றிருந்தது. நபி (ஸல்) அவர்களுக்காக சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்து வைக்கப்பட்ட போது அந்தக் கட்டையிலிருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் சப்தம் போன்றதை நாங்கள் செவியேற்றோம். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (மிம்பரிலிருந்து) இறங்கி (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தமது கையை வைத்தார்கள். (அதுவரையில் அந்தச் சப்தம் வந்து கொண்டேயிருந்தது.)

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

919 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் நின்றபடி ஜுமுஆத் தொழுகைக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும் என்று கூறுவதை நான் செவியேற்றேன்.

பாடம் : 27

நின்று கொண்டு சொற்பொழிவாற்றுவது.

நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவில்) நின்று கொண்டு உரையாற்றினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். (குறிப்பு: காண்க: பின்வரும் ஹதீஸ்-1013, 1014)

920 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் இப்போது செய்துவருவது போன்றே நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து விட்டு (மீண்டும்) எழுவார்கள்.

பாடம் : 28

இமாம் சொற்பொழிவாற்றும் போது அவர் மக்களையும் மக்கள் அவரையும் முன்னோக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் இமாமை முன்னோக்குபவர்களாக இருந்தனர்.

921 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.

பாடம் : 29

உரை நிகழ்த்தும் போது இறைவனைப் புகழ்ந்தபின் அம்மா பஅத் (இறை வாழ்த்துக்குப் பின்...) என்று கூறுவது.

நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (குறிப்பு: காண்க பின்வரும் ஹதீஸ்-927)

922 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (கிரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்த போது நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, மக்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தலையால் வானை நோக்கி சைகை செய்தார்கள். இது ஏதேனும் அடையாளமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் எனத் தலை அசைத்தார்கள். அப்போது எனக்கு தலைசுற்றல் ஏற்படும் அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள். எனக்குப் பக்கத்தில் தண்ணீர் நிரம்பிய தோல்பை ஒன்றிருந்தது. அதைத் திறந்து (தலை சுற்றல் நிற்க) என் தலைமீது சிறிது தண்ணீரை நான் ஊற்றலானேன். (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்து விட்டபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தார்கள். பிறகு இறைவனை அவனுக்குத் தகுதியானவற்றைக் கூறிப் புகழ்ந்து மக்களிடம் உரையாற்றினார்கள். அப்போது அம்மா பஅத் (இறைவனைவாழ்த்துக்குப் பின்...) என்று சொன்னார்கள்.

அன்சாரிப் பெண்கள் சிலர் ஆரவாரமிட்டனர். அவர்களை அமைதிப்படுத்துவதற்காக நான் அவர்களை நோக்கிச் சென்றேன். பிறகு நான் (திரும்பி வந்து) ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் இதோ இந்த இடத்தில் (தொழுதவாறு) நின்று கொண்டிருந்த போது சொர்க்கம் நரகம் உட்பட இதுவரை எனக்குக் காட்டப்பட்டிராத அனைத்தையும் நான் பார்த்தேன். நீங்கள் (உங்கள்) அடக்கக் குழி(கப்று)களில் மகாக் குழப்பவாதியான தஜ்ஜா-ன் குழப்பத்தைப் போன்ற அல்லது அதற்கு நிகரான குழப்பத்துக்கு உள்ளாக்கப்படு வீர்கள் என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டது. (நீங்கள் கப்றுகளில் இருக்கும் போது) உங்களில் ஒருவரிடம் இம்மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்? என்று வினவப்படும். அதற்கு இறை நம்பிக்கையாளரோ, அல்லது (இறைத் தூதின்மீது) உறுதி கொண்டிருந்தவரோ- (இந்த இடத்தில் அறிவிப்பாளர் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் ஐயத்துடன் அறிவிக்கிறார்கள்)- இவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அன்னார் எங்களிடம் சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார். நாங்கள் (அவரை) நம்பினோம்;அழைப்பேற்றோம்; பின்பற்றினோம்; மெய்மைப்படுத்தினோம் என்று பதிலளிப்பார். அப்போது அவர்களிடம், நலமுடன் உறங்குவீராக! நீர் (உலகில் வாழ்ந்த காலத்தில்) நம்பிக்கை கொண்டிருந்தீர் என்பதை நாங்கள் அறிந்தே இருந்தோம் எனக் கூறப்படும்.. நயவஞ்சகனோ அல்லது சந்தேகத்துடன் இருந்தவனோ இம்மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்? என்று கேட்கப்படும் கேள்விக்கு (இவரை) எனக்குத் தெரியாது; மக்கள் ஒன்றைச் சொல்லக் கேட்டேன். நானும் அதையே சொன்னேன் என்று பதிலளிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஃபாத்திமா பின்த் அல்முன்திர் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்ததை நான் என் இதயப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டேன். ஆயினும் எனக்கு அவர்கள் சிரமமளிக்கும் விஷயத்தையே குறிப்பிட்டார்கள்.

923 அம்ர் பின் தஃக்-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில பெருட்கள் அல்லது கைதிகள் சிலர் கொண்டுவரப்பட்ட போது அவற்றை நபி (ஸல்) அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் சிலருக்குக் கொடுத்துச் சிலருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். யாருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்களோ அவர்கள் பேசியது நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில்) உரையாற்றினார்கள். ஆரம்பமாக) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டு, அம்மா பஅத் (இறைவாழ்த்துக்கப் பின்..) எனக் கூறி அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சிலருக்குக் கொடுக்கிறேன். (சிலருக்குக் கொடுப்பதில்லை) நான் யாருக்குக் கொடுக்காமல் விட்டுவிடுகிறேனோ அவர், நான் யாருக்குக் கொடுக்கிறேனோ அவரைவிட என் அன்புக்கு பாத்திரமானவராய் இருப்பார். எனினும், சிலருடைய உள்ளத்தில் கலக்கத்தையும் கடும் திடுக்கத்தையும் நான் காண்பதால் நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் அமைத்துள்ள தன்னிறைவையும் (பொறுமையும் தன்மானமும் உடைய) ந(ல்ல மனப்பா)ன்மையையும் நம்பி(க் கொடுக்காமல் விட்டு)விடுகிறேன். இத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் அம்ர் பின் தஃக்-பும் ஒருவராவார் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நல்-யல்பும் போதுமென்ற மனமும் உடையவர்களில் ஒருவனாகக் குறிப்பிட்டுப்) புகழ்ந்து பேசிய இந்தச் சொல்லுக்குப் பகரமாக (விலையுயர்ந்த செல்வ மான) சிவப்பு ஒட்டகங்கள் (எனக்குக்) கிடைப்பதாக இருந்தாலும் நான் அதை விரும்ப மாட்டேன்.

924 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) கலையிலும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்த போது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர்.

நான்காம் நாள் இரவு வந்த போது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை. (அன்று இரவு நபி ளஸல்ன அவர்கள் பள்ளிக்கு வரவில்லை.) சுப்ஹுத் தொழுகைக்குத் தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்...) எனக் கூறிவிட்டு, நிங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவேதான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக்காக பள்ளிக்கு வரவில்லை) என்று கூறினார்கள்.

925 அபூஹுமைத் அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மாலையில் தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று ஏகத்துவ உறுதி மொழி கூறி அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்த பின் அம்மா பஅத் (இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்...) என்று கூறினார்கள்.

இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

926 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுவதற்காக) எழுந்து நின்றார்கள். அப்போது அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி அம்மா பஅத் என்று கூறி(உரையைத் துவக்கி)யதை நான் செவியுற்றேன்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

927 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தமது அந்திமக்காலத்தில்) சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீது ஏறி (அமர்ந்து)க் கொண்டார்கள். அதுவே அவர்கள் அமர்ந்த கடைசி அமர்வாக அமைந்தது -அப்போது அவர்கள் தம் தோள்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தார்கள்; தமது தலையில் கறுப்புத் துணியொன்றினால் கட்டுப் போட்டிருந்தார்கள். அவர்கள் அல்லாஹ் வைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, மக்களே! என்னை நெருங்கி வாருங்கள் என்று கூறியதும் மக்கள் அவர்கள் அருகில் நெருங்கினர். பிறகு அம்மா பஅத் (இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின்...) (இதோ) இந்த அன்சாரிக் கூட்டத்தார் குறைந்து விடுவார்கள்; (இஸ்லாத்தில் இணையும்) மக்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். முஹம்மதின் சமுதாயத்தில் ஓர் அதிகாரப் பொறுப்பை ஏற்றவர், (தமது பொறுப்பைப் பயன்படுத்தி) ஒருவருக்கு நன்மை புரியவோ அல்லது யாரேனும் ஒருவருக்கு தீங்கு செய்யவோ சக்தி பெற்றால் அன்சாரிகளில் நன்மை புரிந்தரின் நன்மையை ஏற்றுக் கொள்ளட்டும்; அவர்களில் தவறிழைத்தவரை (பெருந்தன்மையோடு) மன்னித்து விடட்டும் என்று சொன்னார்கள்.

பாடம் : 30

ஜுமுஆ நாளில் இரண்டு சொற்பொழிவுகளுக்கிடையே அமர்வது.

928 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆ நாளில்) இரண்டு சொற்பொழிவு(குத்பாக்)கள் நிகழ்த்துவார்கள். அவ்விரண்டுக்குமிடையே அமருவார்கள்.

பாடம் : 31

சொற்பொழிவைச் செவிதாழ்த்திக் கேட்பது.

929 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை நடக்கும்) பள்ளி வாச-ன் நுழைவாயி-ல் நின்று கொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நேரத்தோடு (ஜுமுஆ வுக்கு) வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றாவார்கள். இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்து விட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து) விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 32

இமாம் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது யாரேனும் ஒருவர் (பள்ளிக்குள்) வரக் கண்டால் அவரை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு பணிக்க வேண்டும்.

930 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இன்னாரே! தொழுது விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்றார். எழுந்து, தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

பாடம் : 33

இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டி ருக்கும் போது (உள்ளே) வருபவர் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும்.

931 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார் உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), நீர் தொழுது விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்றார். (எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 34

சொற்பொழிவின் போது (இமாம் தமது) கைகளை ஏந்துவது.

932 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு (நாட்டுப்புற) மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்து விட்டன; ஆடுகளும் அழிந்து விட்டன. ஆகவே, எங்களுக்கு மழை பொழிய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை ஏந்திப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

பாடம் : 35

ஜுமுஆ சொற்பொழிவின் இடையில் மழை வேண்டிப் பிரார்த்திப்பது.

933 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டது. ஒரு ஜுமுஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு கிராமவாசி எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்ற னர். எனவே, எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிரார்த்திக்க) தம் கைகளை ஏந்தினார்கள்.- அப்போது எந்த மழைமேகத்தையும் நாங்கள் வானத்தில் காணவில்லை- என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் தமது கையை கீழே விடுவதற்கு முன்பாக மலைகளைப் போன்ற மேகங்கள் பரவத் தொடங்கின. நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவு மேடையை விட்டும் இறங்கியி ருக்கவில்லை. மழை பெய்து அவர்களது தாடியில் வழிந்ததை நான் பார்த்தேன். எங்களுக்கு அன்றைய தினமும் மறுதினமும் அதற்கடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த ஜுமுஆ வரையிலும் மழை கிடைத்தது.

(அந்த ஜுமுஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்து கொண்டிருக்கின்றன; செல்வங்கள் வெள்ளநீரில் மூழ்குகின்றன. எனவே, எங்களுக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, இறைவா! எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழிவாயாக! எங்களுக்கெதிராக (எங்களுக்கு கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே! என்று பிரார்த்தித்தார்கள். மேகத்தின் எந்த பகுதியை நோக்கி நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா(வைச் சூழ்ந்திருந்த மேகம் விலகியதால் அது) பாதாளம் போன்று மாறிவிட்டிருந்தது. கனாத் ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியிலிருந்து யார் வந்தாலும் இந்த அடை மழை பற்றிப் பேசாமால் இருக்கவில்லை.

பாடம் : 36

ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது மௌனமாக இருப்பது.

ஒருவர் தம் பக்கத்திலிருப்பவரிடம் மௌனமாக இரு என்று கூறினாலும் அவர் வீண்பேச்சே பேசுகிறார்.

இமாம் உரையாற்றும் போது வாய்மூடி மௌனமாக இருக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

934 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிப்பவரிடம் நீ மௌனமாக இரு! என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 37

ஜுமுஆ நாளில் உள்ள சிறப்பான நேரம்.

935 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், ஜுமுஆ நாளில் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்ப தில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்.

பாடம் : 38

ஜுமுஆத் தொழுகை நடந்து கொண்டி ருக்கும் போது மக்கள் சிலர் இமாமை விட்டு விலகிப் போனால் இமாமுடைய தொழுகையும் எஞ்சிய மக்களின் தொழுகையும் நிறைவேறும்.

936 ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) கூறியதாவது:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்த போது உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரெண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். (62:11) என்ற வசனம் இறங்கியது.

பாடம் : 39

ஜுமுஆத் தொழுகைக்குப் பின்பும் முன்பும் உள்ள (சுன்னத்தான) தொழுகை.

937 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின்பு இரண்டு ரக்அத்களும், மஃக்ரிப் தொழுகைக்குப் பின்பு தமது இல்லத்தில் இரண்டு ரக்அத்களும் தொழுவார்கள். இஷாத் தொழுகைக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஜுமுஆத் தொழுகைக்குப் பின் தம் இல்லத்திற்குத் திரும்பிச் செல்லாத வரை தொழ மாட்டார்கள். (இல்லத்திற்குச் சென்றதும்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

பாடம் :40

ஜுமுஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள் எனும் (62:1ஆவது) இறைவசனம்.

938 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்து விட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டு களைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடு வார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுது விட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

939 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் காலைச் சிற்றுண்டி அருந்துவோம்; மதிய ஓய்வு மேற்கொள்வோம்.

பாடம் : 41

ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு மதிய ஓய்வு மேற்கொள்வது.

940 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஜுமுஆத் தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்திலேயே சென்றுவிடுவோம். அதற்குப் பிறகுதான் மதிய ஓய்வே மேற்கொள்வோம்.

941 சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுகை தொழுவோம். அதன் பிறகே மதிய ஓய்பு நிகழும்.

October 23, 2009, 7:52 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top