293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு
293. இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு
திருக்குர்ஆன் 22:47, 32:5 ஆகிய வசனங்களில் இறைவனின் ஒரு நாள் உங்கள் நாட்களில் ஆயிரம் வருடங்கள் அளவுடையது எனவும், திருக்குர்ஆன் 70:4 வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனவும் கூறப்படுகிறது.
ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வரை வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது.
நாட்கள் என்பது ஒருவரின் பயண வேகத்தைப் பொருத்து மாறுபடும் என்பதை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்துக் கூறுவதற்கு முன் நாட்கள் என்பது மாறவே மாறாது என்பது தான் உலக மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
உதாரணமாக இந்தப் பூமியிலிருந்து 25 வயதுடைய ஒருவன் ஒளி வேகத்தில் மேல்நோக்கிப் பயணம் செய்து கொண்டே இருக்கிறான். (ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் 3,00,000 கி.மீ). பூமியில் ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகு அவன் திரும்பி வந்தால், அவனுடைய வயதுடையவர்கள் பலர் இறந்திருப்பார்கள். எஞ்சியிருப்பவர்கள் 75 வயதுடையவர்களாக இருப்பார்கள்.
ஆனால் ஒளி வேகத்தில் பயணம் செய்து கொண்டே இருந்தவன் 25 வயது வாலிபனாகவே திரும்பி வருவான். இது இன்றைய நவீன உலகில் வாழும் மேதைகளில் பலருக்கே புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண்மை இது தான்.
ரிலேட்டிவிட்டி எனும் சார்பியல் கோட்பாட்டை 1905ஆம் ஆண்டு தான் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார். எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இதைக் கூறி இருக்கிறார்கள் என்றால் அன்றைக்கு இருந்த அறிவைக் கொண்டு இதைக் கூறியிருக்க முடியாது.
இந்த உண்மை அன்று எந்த மனிதனுக்கும் தெரிந்திருக்கவில்லை. அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் தெரிந்திருந்தது. எனவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து தான் முஹம்மது நபி இந்தச் செய்தியைப் பெற்றார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
இங்கே மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
32:5 வசனத்தில் ஒரு நாளை ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது எனக் கூறும் திருக்குர்ஆன் 70:4 வசனத்தில் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது எனக் கூறுவது ஏன்? இரண்டும் முரண்படுகிறதே என்பது தான் அந்தச் சந்தேகம்.
ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இரண்டும் வேறு வேறு செய்திகளைக் கூறும் வசனங்கள் என்பதை விளங்கிக் கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இருக்காது.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. இவ்விரு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனிக்கும் எவருமே இரண்டும் தனித்தனியான இரண்டு விஷயங்கள் என்பதை விளங்கிக் கொள்வர்.
70:4 வசனத்தை எடுத்துக் கொண்டால் பூமிக்கு வருகின்ற வானவர்கள் மேலேறிச் செல்வது பற்றிக் கூறப்படுகிறது. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் பூமியிலிருந்து இறைவனிடம் மேலேறிச் செல்லும் வேகம் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு நிகரான ஒரு நாளின் வேகம் எனக் கூறப்படுகிறது.
அதாவது ஒருநாளில் அவர்கள் சென்றடைந்த தூரத்தை நீங்கள் அடைவது என்றால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். (அதாவது 1,82,50,000 நாட்கள்)
அவர்கள் ஒரு விநாடியில் சென்றடையும் தூரத்தை நாம் அடைவது என்றால் 211 நாட்கள் தேவைப்படும். அவ்வளவு வேகமாக அவர்களின் பயணம் அமைந்திருக்கும்.
வானவர்களின் பயண வேகத்தை 70:4 வசனம் கூறுகிறது.
32:5 வசனம் வானவர்களின் வேகத்தைக் கூறவில்லை. இறைவன் பிறப்பிக்கும் கட்டளை பூமியை அடைந்து மீண்டும் திரும்பிச் செல்வதற்கான வேகத்தைக் கூறுகிறது. இறைவன் ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான கட்டளைகளைப் பிறப்பிக்கின்றான்.
உலகில் நடக்கும் எந்தக் காரியமானாலும் அவனது கட்டளைப்படியே நடக்கின்றன.
இவ்வாறு பிறப்பிக்கப்படும் கட்டளைகள் பூமியை அடைந்து மீண்டும் இறைவனைச் சென்றடையும் வேகம் பற்றி இவ்வசனம் கூறுகிறது.
இறைவனின் ஒரு கட்டளை ஒரு நாளில் சென்றடையும் தூரத்தை மனிதன் அடைய 1000 ஆண்டுகள் (3,65,000 நாட்கள்) தேவைப்படும்.
இறைவனின் கட்டளை ஒரு விநாடியில் செல்லும் தூரத்தை நாம் அடைய நான்கு நாட்களுக்கு மேல் தேவைப்படும்.
ஒளியின் வேகம் தான் மனிதன் கண்டுபிடித்த வேகங்களிலேயே அதிவேகமுடையது. எனவே தான் ஒளியால் படைக்கப்பட்ட வானவர்களின் வேகம், கட்டளைகளின் வேகத்தை விட 50 மடங்கு அதிகமாகவுள்ளது.
இது போல் 22:47 வசனமும் இறைவனின் கட்டளைகளின் வேகத்தையே குறிப்பிடுகின்றது.
அவசரமாக வேதனையைத் தேடுகின்றனர். அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான். சொன்னபடி வேதனை வந்து சேரும் என்று கூறிவிட்டுத் தான் உங்கள் இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணிக்கின்ற ஆயிரம் வருடங்களைப் போன்றது எனக் கூறுகிறான்.
அதாவது இறைவன் கட்டளை பிறப்பித்து விட்டால் ஆயிரம் ஆண்டுக்கு நிகரான வேகத்தில் அக்கட்டளை வந்து சேரும் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
எனவே ஆயிரம் ஆண்டுகள் என்பதும் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பதும் வெவ்வேறு விஷயங்களுக்கான கணக்கு என்பதைப் புரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.
To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: 11.07.2009. 09:44 Views: 547

