117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும

117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும்

தொழுகைக்கு முன் கை, கால், முகங்களைக் கழுவி தூய்மையாவது அவசியம். (பார்க்க: திருக்குர்ஆன் 5:6)

உடலுறவு கொண்டிருந்தால் அப் போது கை, கால், முகங்களைக் கழுவுவது போதாது. மாறாகக் குளிக்க வேண்டும்.

இவ்வாறு தூய்மை செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு மாற்றுப் பரிகாரமே இங்கே கூறப்படுகிறது.

அதாவது இரு உள்ளங்கைகளாலும் மண்ணைத் தொட்டு முகத்திலும், இரு கைகளிலும் தடவிக் கொண்டு தொழலாம். இவ்வாறு தடவிக் கொள்வது மேற்கண்ட இரண்டு தூய்மைகளுக்கும் பரிகாரமாகும்.

இங்கே சிலருக்கு முக்கியமான ஒரு சந்தேகம் ஏற்படலாம். தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியது. ஆனால் மண் ஏற்கனவே இருந்த தூய்மையையும் நீக்கக் கூடியது. "தண்ணீர் கிடைக்கா விட்டால் தூய்மையில்லாமல் தொழலாம்'' எனக் கூறியிருக்கலாமே? அல்லது "தொழுகையை விட்டு விடலாம்'' எனக் கூறியிருக்கலாமே என்பது தான் அந்தச் சந்தேகம்.

அல்லாஹ் கூறுவதால் இதில் ஏதோ ஒரு தத்துவம் உள்ளடங்கி இருக்கும். மறுமை நாளில் அல்லாஹ் அதை நமக்கு வெளிப்படுத்தலாம். அல்லது தூய மண்ணைத் தடவிக் கொள்வதால் ஏற்படும் பயன்கள் எதிர்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம்.

ஆயினும் இதனால் ஏற்படும் ஒரு நன்மையை நாம் இப்போது கூற முடியும். தொடராகச் செய்து வர வேண்டிய காரியங்கள் ஒரு நாள் விடுபட்டு விட்டால் பிறகு தொடர்ந்து அக்காரியங்களை விட்டு விடுவது மனிதனின் இயல்பாக உள்ளது.

எனவே தண்ணீர் கிடைக்காவிட்டால் தொழ வேண்டாம் எனக் கூறினால் தொழுகையையே மனிதன் விட்டு விடுவான்.

தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய்மை செய்யாமல் தொழலாம் என்று கூறினால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்னாலும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு மறந்து போய் விடும்.

மனிதனைப் படைத்த இறைவனுக்கு மனிதனின் மன நிலை நன்றாகத் தெரியும். எனவே தான் மிகப் பெரிய மனோதத்துவத்தின் அடிப்படையில் இந்த மாற்றுப் பரிகாரத்தை இறைவன் அமைத்துள்ளான். மண் தூய்மைப்படுத்துகிறதோ, இல்லையோ, தொழுகைக்கு முன் தூய்மைப்படுத்துவது அவசியம் என்பது எப்போதும் நினைவில் நிற்கும். தண்ணீரைத் தேட மனிதன் முயற்சிப்பான். கிடைக்காத போது இந்த மாற்று வழியைப் பயன்படுத்திக் கொள்வான்.

எனவே தான் முஸ்லிம்கள் எவ்விதத் திட்டமிடுதலும் இல்லாமலேயே தொழுகைக்கு முன் இயல்பாகவே தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம்.

"அதைச் செய்யாவிட்டால் இதை யாவது செய்'' எனக் கூறுவதால் அந்த நடைமுறை தொடர்ந்து அமுலில் இருக்கும். அந்த மாற்று வழியும் சர்வ சாதாரணமாகக் கிடைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

மண் கிடைக்காத நிலை ஏற்படுவது மிக மிக அபூர்வமாகும். இப்போதைக்கு இந்த மனோ தத்துவத்தைப் புரிந்து கொள்வோம். இதை விடச் சிறந்த காரணமும் இதற்கு இருக்கலாம்.

உடலில் மண்ணை அள்ளிப் பூசிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து விடக் கூடாது. மாறாக இரு உள்ளங்கைகளால் மண்ணைத் தொட்டு வாயால் ஊதி விட்டு வெறும் கையால் முகத்தையும், மணிக்கட்டு வரை இரு கைகளையும் தடவிக் கொள்ள வேண்டும். முழங்கை வரை தடவத் தேவையில்லை. மேலும் முகத்தில் தடவுவதற்காக ஒரு தடவையும், கையில் தடவுவதற்காக ஒரு தடவையும் மண்ணைத் தொட வேண்டியதில்லை. ஒரு தடவை தொட்டு முகத்திலும் இரு கைகளின் மணிக்கட்டு வரையிலும் தடவிக் கொள்ளலாம்.

குளிப்பு கடமையாகிவிட்டால் முழு உடம்பிலும் மண்ணை அள்ளிப் பூசிக் கொள்ளக் கூடாது. இந்த நிலையிலும் மேற்கண்டவாறு செய்வதே போதுமாகும். இது தான் நபிவழியாகும். (பார்க்க: புகாரி 326, 327, 329, 330, 335).

இதிலிருந்து மண்ணைத் தொடுவது ஓர் அடையாளமாகத் தான் ஆக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

10.07.2009. 11:45




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
89 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி